திருவிளையாடற் புராணம்/20
வேறுவழி இன்றிச் சிவனிடம்வந்து சரண் அடைந்தான். தன் ஆணவத்தால் அறிவு கெட்டு இந்த அவல நிலைக்கு ஆளானதை வருணன் உணர்ந்து வானத்து வீதியில் சென்று ஈசனைத் தரிசித்து மன்னிக்கும்படி வேண்டினான்.
இரக்கமே உருவான இறைவன் அவனை மன்னித்து "உனக்கு என்ன வேண்டும்?" என்று வினவினார். தான் மிரட்டித் தன் வயிற்று நோயைத் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கருதி அதனால் ஏழு மேகங்களை விரட்டி இங்கு அனுப்பியதாக உரைத்தான். சூலை நோய் தந்து நாவுக்கரசரை ஆட்கொண்ட சிவபெருமான் வருணனின் வயிற்று நோயைத் தீர்த்துக் கொடுத்தார். ஆணவம் நீங்கி அடக்கம் மேற்கொண்டு இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு ஏனைய மேகங்களை விடுவித்துக்கொண்டு தன் கடலை இருப்பிடமாக அடைந்தான்.
அபிடேக பாண்டியனுக்கும் அவன் நாட்டு மக்களுக்கும் வேண்டிய பொருளைத் தருவதற்காக இறைவன் எல்லாம் வல்ல சித்தராக உருக்கொண்டு வந்தார். வட்டமாகிய மயிர்ச் சடையும், நீறு பூசிய நெற்றியும் குண்டலம் தரித்த செவியும், புலித் தோல் ஆடையும், காலில் சிலம்பும் பாதுகையும் கொண்டு புன்முறுவல் பூத்த முகத்தினராய் அங்காடித் தெருக்களும் மாளிகைச் சந்திப்புகளும் தேர் வீதிகளும் செல்வாராயினர். ஓர் இடத்திலேயும் தங்க இருப்புச் கொள்ளாமல் விருப்பப்படியே திரிந்து சென்றார்.
முதியவரை இளைஞர் ஆக்கினார். ஆடவரை மகளிர் ஆக்கினார்; மலடியைக் கருஉயிர்க்கச் செய்தார்; ஊமை, குருடு, செவிடு, முடம் இப்பிணிகளைத் தீர்த்து வைத்தார்; வெள்ளி செப்பு ஈயம் பித்தளை இவற்றைச் செம்போன் ஆக்கினார். செல்வரை ஏழையாக்கினார்; ஏழையர் செல்வர் ஆயினர். எட்டி மரம் இனிய காய்களைத் தரச் செய்தார். கல்லாதவரைக் கற்றவர் ஆக்கினார்; இல்லாதவரை வள்ளல்கள் ஆக்கினார். எல்லாம் தலைகீழாகச் செய்து காட்டினார்.
பாண்டிய நாட்டு மக்கள் இப்புதுமைகளை விழித்த கண் மூடாமல் பார்த்துத் திகைப்படைத்தனர். அவரவர் தாம் விரும்பிய பொருளைச் சித்தர்பால் கேட்டுப் பெற்றனர். கிழவர்கள் வாலிபர்கள் ஆயினர்; கிழவிகள் குமரிகள் ஆயினர்; மூப்பை ஒழித்துவிட்டு இளமையாக்கினார்; பேசாத குழந்தைகளைப் பேசவைத்தார். நோயாளிகள் நலம் பெற்று நல்வாழ்வு பெற்றனர்.
இந்த அதிசயத்தை அரசனுக்கு அறிவித்தனர்; அரசன் ஒற்றர்களை அனுப்பிச் சித்தரை அழைத்து வரும்படி ஏவினான். சென்றவர்கள் திரும்பவே இல்லை; அதே போல அமைச்சர்களை அனுப்பி வைத்தான்; அவர்களும் ஒரு சிலர் திரும்பவில்லை; கற்றவரை அனுப்பி அரசன் அழைப்பதாகச் சொல்லி அனுப்பினான்.
"நாமார்க்கும் குடியல்லோம்" என்று சொல்லி, வர இயலாது என்று சொல்லி அனுப்பினார். சென்ற அமைச்சர் சிலர் திரும்பி வந்து அரசனிடம் சித்தரின் விசித்திரமான போக்குகளை எடுத்துக் கூறினர் ஆற்றல்மிகு அறிஞராகிய சித்தரைத் தாம் ஒன்றும் செய்ய மூடியாது என்று அரசன் அடக்கத்தை மேற்கொண்டான். சித்தரின் வருகையால் மக்கள் நன்மை பெற்றதை அவனால் உணர முடிந்தது.