திருவிளையாடற் புராணம்/25

விக்கிமூலம் இலிருந்து




25. பழியஞ்சின படலம்

இராசசேகரனுக்குப்பின் அவன் மகன் குலோத்துங்க பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சி செய்யும் நாளில் இந்த அற்புத நிகழ்ச்சி நடந்தது. திருப்புத்தூரிலிருந்து ஒரு பார்ப்பனன் தன் மனைவியோடு மதுரையை நோக்கிக் காட்டு வழியே வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் நீர் வேட்கையால் வருந்தும் தன் மனைவியையும் கைக்குழந்தையையும் ஆலமரத்தின் நிழலில் உட்கார வைத்து விட்டுத் தண்ணீர் கொண்டு வரச் சென்றான்.

அந்த ஆலமரத்தினின்று ஓர் அம்பு கீழே விழுந்து அவள் வயிற்றில் பாய்ந்து உதிரம் ஒழுகச் செய்து அவள் இன்னுயிரைப் பிரித்து விட்டது. தண்ணீர் எடுக்கச் சென்றவன் திரும்பி வந்து பார்க்கும் போது இந்தக் கோர மரணத்தைக் கண்டு அதிர்ச்சியும் அவலமும் அடைந்தான்.

அதே ஆலமரத்தில் பறவை வேட்டையாடும் வேடுவன் ஒருவன் அலுத்துக் களைத்து நிழலுக்கு ஒதுங்கினான். அவன் கையில் வில்லும் அம்பும் இருக்கக் கண்டு வேறு ஓர் சொல்லும் சொல்லாமல் அவனை இழுத்துக் கொண்டு அரண்மனை வாயிலில் நிறுத்தினான்; அழுகின்ற குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு செத்துக் கிடந்த பார்ப்பினியை முதுகில் சுமந்து கொண்டு வேடுவனோடு அரண்மனை வந்து சேர்ந்தான்.

"கொலை, கொலை" என்று கத்தி அரண்மனையில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தினான். ஒரு பாவமும் அறியாத தன் மனைவியைக் காரணம் இல்லாமல் அந்த வேடுவன் அம்பு எய்து அழித்துவிட்டான் என்றும், தானும் சேயும் அனாதைகள் ஆக்கப்பட்டு விட்டனர் என்றும் முறையிட்டான்.

வேடுவனைப்பிடித்துக் கட்டி அடித்து உண்மையைக் கக்கச் சாட்டையால் அடித்தனர். "சோமசுந்தரன் சாட்சியாகத் தான் தவறு செய்யவில்லை" என்று வற்புறுத்திக் கூறினான். அதற்கு மேல் அவனைத் துன்புறுத்துவதை நிறுத்தினர். அவன் கையிலோ வில்லுண்டு; கொலையுண்டு கிடப்பதைப் பார்ப்பனன் கண்டு வந்து சொல்கிறான்; எது உண்மை என்று அறிய முடியாத நிலையில் அரசன் நீதி வழங்க முடியாமல் வேதனை அடைந்தான்.

ஈமச்சடங்கு செய்து விட்டு மறுபடியும் வரச் சொல்வி அப்பார்ப்பனனை அனுப்பிவைத்தான். வேடனை விடுவித்துப் பின் நேரே சோமசுந்தரர் திருக்கோயில் அடைந்து இறைவனிடம் விண்ணப்பித்து விடை காண விழைந்தான்.

"யார் இந்தக் கொலை செய்தது என்று தெரியாமல் கவலையுறுகின்றேன்; மதுரை எல்லையிலே இந்தத் தொல்லை வந்து சேர்ந்திருக்கிறது; உன் அருள் இருக்கும் போது இந்த மருட்சி எப்படி நிகழ்ந்தது? தெரிய வில்லையே; உண்மை காண விழைகின்றேன்; ஒண்மை வடிவான பொருளே! வழிகாட்டி எனக்கு நன்மை செய்து அருள்வாய் என்று கேட்டுக் கொண்டான். அப்பொழுது ஆகாயத்திலிருந்து ஓர் அசரீரி தோன்றி, "தென்னவனே நீ இந்நகர்ப் புறத்து உள்ள செட்டித் தெருவில் இன்றிரவு ஒரு திருமணம் நடக்கிறது. அந்தப் பார்ப்பனனோடு அங்கு வந்து சேர்க, உனக்கு உண்மை உணர்த்துகிறேன்" என்று கூறியது; அத்திருவாக்கைக் கேட்டு அவ்வாறே தானும் பார்ப்பனனும் அம்மண வீட்டிற்குச் சென்று ஒரு புறம் ஒதுங்கி நின்றனர்; மன்னன் மாறு வேடத்தில் அங்கு வந்ததால் அவனை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை.

இவர்கள் இருவர் கண்ணுக்கு மட்டும் காலபாசத் தோடு எம தூதர் அங்கு வந்து காத்திருப்பது தெரிந்தது. அடே இந்த மணமகன் உயிரை எப்படிப் பிடிப்பது? அங்கலக்ஷணத்தோடு தங்க நிறமுடைய இவ் தெரிந்தது. எப்படி உயிர் கவ்வுவது? நோய் நொடி இல்லாதவனைப் பிடி என்றால் எப்படி முடியும்?' என்று கேட்டான்.

"ஆள் அழகனா இளைஞனா என்பதை நாம் ஆராய வேண்டியது இல்லை. கணவனையும் கதறவிட்டுப் பார்ப்பணியின் உயிரைக் கவர்ந்தோமே நாம் அப்பொழுது இரக்கப்பட்டோமா! கணக்கு முடிந்தது; பிணக்குக் கொள்ள முடியாது; நம் கடமையைச் செய்துதான் தீர வேண்டும்; வழிதானா இல்லை; என்றோ தொத்திக் கொண்டிருந்த பழைய அம்பினைக் காற்றில் அசைத்து அவள் வயிற்றில் பாய்ச்சவில்லையா! நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். மரணம் என்பது பேதம் பார்ப்பதில்லை. இளைஞனா முதியனா என்றோ நல்லவனா கெட்டவனா என்றோ ஆண்டியா அரசனா என்றோ பேதம் பார்ப்பதில்லை. உயிரைப் போக்க எவ்வளவோ வியாதிகளை உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறோம். வயித்தியர்களுக்கு அகப்படாத புதிய நோய்களைப் படைப்பது நாம் தானே; துரிதமாகச் செல்லும் ஊர்திகளை படைத்ததும் நாம் தானே; விதி என்று வந்து விட்டால் எந்தச் சதி செய்தாவது உயிரைப் போக்கி விட முடியும். அதோ கட்டி வைத்த பசுமாட்டைப் பார்; அதனை முட்டி வைக்கத் தூண்டினால் அதன் அருகில் ஒருவரும் நெருங்க முடியாது. நாம் உயிரைப் பிடித்துக் கொள்ளலாம். பழி நம் மீது வராது; அநியாயமாகச் செத்துவிட்டானே என்று கதறுவார்கள். "விதி முடிந்தது" என்று இந்த உலகம் பேசும்; அவ்வளவுதான்" என்று பேசினர்.

பார்ப்பனனும் பார்த்திபனும் பார்ப்பனியின் பரிதாபகரமான சாவு நிகழ்ந்ததன் காரணத்தை அறிந்து கொண்டனர். என்னதான் நடக்கிறது என்று இருந்து கவனித்தனர்.

தாலி கட்டும் நேரம்; 'கெட்டி மேளம்' 'கெட்டி மேளம்' என்று உரக்கக் கூவினார்கள். கொட்டிய மேளமும் ஏனைய வாத்திய முழக்கமும் கலியாணக் கூச்சலும் சேர்ந்து அந்தப் பசுவை மருளச்செய்தது. அது திமிரிக் கொண்டு நேரே பந்தலில் மணத்தவிசில் தாலியைக் கையில் வைத்திருந்த மணமகனைக் குத்திக் கொன்றது. அதன் கூரிய கொம்புகள் அவன் வயிற்றைக் கிழித்து அவனைத் தூக்கி வாரிப் போட்டது. மணமகன் பிணமகன் ஆனான்; வாழ்த்தொலி பறையொலியாகியது. சிரித்துப் பேசி மகிழ்ந்தவர்கள் அழுது அவலித்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டனர்; பசுந்தோகை போன்ற மணப்பெண் மகிழவேண்டியவள் மனம் குன்றி குமைந்து நின்றாள். அவர்கள் அடைந்த துன்பம் தான் அடைந்த துன்பத்தைவிட மிகுதி என்று பார்ப்பனன் அறிந்தான். அந்த அவலச் சூழ்நிலையில் இருந்து விடுபட்டுப் பாண்டியனோடு அரண்மனை சேர்ந்தான்.

பார்ப்பனனின் முறையீடு தவறு என்று முடிவு செய்யப்பட்டது. அவனுக்கு நிறையப் பொருள் தந்து "மற்றொருத்தியை மணந்து நீ அக்குழந்தைக்குப் பாதுகாப்புத் தருக" என்று சொல்லி விடை தந்தான். மதுரைக்கு வந்த பார்ப்பனன் இழப்பை ஈடு செய்யும் வகையில் பத்தினிப் பெண் மற்றொருத்தியைத் தேடி மணம் செய்து கொண்டான்.

பாண்டியன் குலோத்துங்கன் ஈசுவரன் திருச்சந்நிதியை அடைந்து, "கருணாநிதியே! பழி அஞ்சும் பரம்பொருளே! என் விழி திறந்து உண்மை காணச் செய்தாய்" என்று கூறிப் போற்றி வணங்கித் தம் அரண்மனை நோக்கிச் சென்றான். பின் தன் ஆட்சியைச் செம்மையுற நடத்திச் செங்கோலுக்குச் சிறப்புச் சேர்த்தான். 

26. மாபாதகம் தீர்த்த படலம்

குலோத்துங்கன் ஆட்சி செய்த காலத்தில் பாண்டிய நாட்டில் அவந்தி என்னும் நகரில் பார்ப்பனன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தும் அவன் தாழ்ந்த ஒழுக்கத்தை உடையவனாக இருந்தான்; காமம், களவு, கொலை இவற்றுக்கு அஞ்சாதவனாக இருந்தான்.

அவன் தவறான ஒழுக்கத்தை அவன் தந்தை கடிந்து வந்தார். அப்பொழுதும் அவன் திருந்தியபாடு இல்லை. தன் தந்தை தன்னைக் கண்டிப்பதை அவன்விரும்பவில்லை. தாய் தடுத்தும் அவன் தன் தந்தையைக் கொலை செய்து விட்டான்; அவர் உடலை வீட்டுத் தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்து விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/25&oldid=1111440" இலிருந்து மீள்விக்கப்பட்டது