திருவிளையாடற் புராணம்/57

விக்கிமூலம் இலிருந்து

57. வலை வீசின படலம்

உத்தர ஆலவாயில் மீனாட்சி அம்மையோடு தனித்து இருந்த போது சுந்தரர் வேதப் பொருளை எடுத்து விளம்பினார். அம்மையாரின்மனம் அதில் ஈடுபாடு பெறாமல் இருந்தது. அன்பு மொழி பேச வேண்டிய தனிமையில் கனமான பொருளைப் பேசியதால் பார்வதி அம்மையார் பராமுகமாக இருந்து விட்டார்.

வேதப் பொருளை உதாசீனம் செய்ததால் மீனவப் பெண்ணாகப் பிறக்க என்று சபித்து விட்டார். விமோசனம் பற்றிய விசனம் எழுந்தது. தாமே வந்து உமையாரை மணப்பதாக உறுதி தந்தார். அப்பொழுது அங்கு மீண்டும் வேதம் கேட்டு ஏதம் நீங்கலாம் என்று விதித்தார்.

இந்தச் சின்ன விஷயத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? முருகனும் விநாயகனும் வேத புத்தகங்களை ஓதம் மிக்க கடலில் தூக்கி வீசி எறிந்தனர்; இந்த அரட்டைகளை யார் உள்ளே விட்டது என்று நந்தியை விரட்டினார். சொந்தப்பிள்ளைகள் ஆயிற்றே என்று எந்தத் தடையும் செய்யவில்லை என்று சொல்லிப் பார்த்தான்."கடலில் கோள்சுறாவாக நீ நாள் கடத்துக" என்று சாபமிட்டார் முருகனை ஊமையனாக மதுரையில் வணிகன் வீட்டில் பிறக்கத் தண்டித்தார். ஏற்கனவே யானைமுகமும் பானைவயிறும் பெற்றவனுக்கு அதைவிட வேறு தண்டனை கொடுக்கமுடியாது என்பதால் அவனை மன்னித்து விட்டு விட்டார்.

இஃது இவ்வாறு இருக்கப் பாண்டிய நாட்டில் கீழைக் கரையில் பரதவர் தலைவன் ஒருவனுக்கு மகப்பேறு இல்லாமல் சோமசுந்தரரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான். புன்னை மரநிழலில் அன்னை உமையாள் சின்னக் குழந்தையாகத் தவழ்ந்து கிடந்தார். அக் குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு தன் மனைவியிடம் தந்து அவள் ஏக்கத்தைப் போக்கினான். மகள் வளர்ந்து கதாநாயகியின் அந்தஸ்தைப் பெற்றாள்.

கடலில் நந்தி சுறாவாகப் பிறந்து மீனவர் வலைக்குத் தப்பித் திரிந்தது. அந்தச் சிறுவர்கள் சிதறிய வேத நூல்களைத் தேடிக்ரை சேர்த்தது. அதை மீனவர்கள் அடக்க முடியாமல் இடக்கு விளைவித்தது. மீனவர் தலைவன் யார் அதைப் பிடித்து அடக்குகிறானோ அவனுக்கே தன் மகள் உரியவள் என்று கூறி ஒரு சனகனாக மாறினான்

இறைவன் மீனவ இளைஞனாக அங்கு வந்தார். "நீ யார்? செய்தி யாது?" என்று மீனவன் கேட்டான். "வலை வீசி இங்குப் பிழைக்க வந்தேன்" என்றார். "அலை வீசும் கடலில் உள்ள முரட்டுச் சுறாவினைப் பிடித்தால் பரிசு தருவேன்" என்றான்.

அதனை அடக்கி மடக்கிக் கரை சேர்த்தான். மீனவர் மகளைக் கொண்டு வந்து முன் நிறுத்தினான்'

"மீன் கண் உடையவளாக இருக்கிறாளே" என்றார்.

"மீனாட்சி" என்றான்.

"அவள் தான் ஆட்சி செய்த இடம் இம் மதுரை யாயிற்றே" என்றார்.

"சுந்தரன் நீ; இவளை ஏற்றுக் கொள்" என்றான்.

கைவலையில் சுறாவும், அவர் கண் வலையில் மீனாட்சியும் சிக்கினர்; அவளை மணம் செய்து கொண்டு விமோசனம் அளித்தார்.

சோமசுந்தரர் அவசரப்பட்டு மதுரைக்குத் திரும்ப வில்லை. திருவுத்தர கோச மங்கை என்னும் தலத்தில் தங்கி உமா தேவியார் வணங்கிக் கேட்க வேதத்தின் மறை பொருளை உரைத்துத் தெளிவு படுத்தினார். அங்கு வந்து வழிபட்ட பக்தர்களுக்கு வேண்டிய வரங்கள் தந்து பின் மதுரை வந்து அடைந்தனர். 

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/57&oldid=1124036" இலிருந்து மீள்விக்கப்பட்டது