கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/02

விக்கிமூலம் இலிருந்து



2. பாரதி கண்ட புதுமைப்பெண் பிறந்தார்!

தொட்டிலை ஆட்டும் கை; தொல்லுலகை ஆளும் கை என்று பாரதியார், புதுமைப் பெண்ணை வாழ்த்தி வரவேற்றார்! அதற்கேற்ப, கவிக்குயில் சரோஜினி தேவி கி.பி. 1879ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் நாள் வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிராமணர் அகோரநாத் சட்டோபாத்தியாயர் என்ற அறிஞருக்குப் பெண்ணாக ஐதராபாத் நகரில் பிறந்தார்.

அகோரநாத் வேதம் ஓதி இறைவனை வழிபடும் குலத்தில் தோன்றியவர்! "சட்டோபாத்தியாய" என்பது அவரது குடும்பப் பட்டப் பெயர். இவரது மரபுப்படி வேதமும், மற்ற கலைகளையும் ஒழுக்கத்துடனும், ஆசாரத்துடனும் கற்று நடந்து வந்தார்.

ஆங்கிலக் கல்விக்கு அப்போதிருந்த உயர்வையும், மதிப்பையும், மரியாதையையும் கண்டு ஆங்கிலம் படித்து வல்லுநரானார். இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார்; படித்தார்; அங்கு சிறப்பானக் கல்வியாளராய் விளங்கியதால் "டாக்டர்" பட்டமும் பெற்றார்.

இந்தியா திரும்பி வந்த அகோரிநாத், வங்காளத்தை விட்டு ஐதராபாத் நகருக்கு குடும்பத்தோடு வந்து குடியேறினார் அங்கே ஓர் பணியில் சேர்ந்தார். அந்தப் பணிக்கும் அவருக்கும் பொருந்தி வரவில்லை. அதனால், ஐதராபாத் நகரிலே ஒரு கல்விக் கோட்டத்தை நிறுவி, அவரே அக்கல்விச் சாலையில் ஆசிரியராகவும் பணியாற்றி, தனது கல்விச் சாலையை உயர்த்தினார்.

ஆசிரியரான அகோர நாத்துக்கு ஏழு குழந்தைகள் ஐதராபாத் நகரிலே பிறந்தன. அக்குழந்தைகளுள் சரோஜினி, மிருணாளினி, நளினி, சுகாசினி என்ற நால்வரும் பெண்களாவர்.

பூபேந்திரநாத் சட்டோ பாத்தியாயர், இரவீந்திரநாத் சட்டோபாத்தியாயர், ஹரீந்திரநாத் சட்டோ பாத்தியாயர் என்ற மற்ற மூவரும் ஆண்மக்களாவர். இந்த ஏழு பேருமே தந்தையின் அறிவாற்றலுக்கு அடையாளமாகப் பிற்காலத்தில் திகழ்ந்தார்கள்.

மூத்தப் பெண்ணான சரோஜினி மிகுந்த அறிவரசியாகக் காணப்பட்டார். பெற்ற தந்தையே ஓர் ஆசிரியரானதால், அதன் முழு எதிரொலியும் சரோஜினியிடம் தவழ்ந்தது. அதனால், நல்ல மாணவி என்ற நற்பெயரைப் பிற ஆசான்களிடமும் பெற்றார்.

வெந்தணலால் வேகாது; வெள்ளத்தாலும் அழியாது: கள்ளர்களாலும் களவாட முடியாது; கொடுக்கக் கொடுக்க கல்வி நிறைவுறுமே தவிர குறையாது என்ற நல்லுரைக்கு ஏற்றவாறு, சரோஜினியுடன் கல்வி கற்கும் மாணவிகளும் நற்கல்வியும், நற்புகழும் பெற்று மகிழ்ந்து தேர்ந்தனர்!

ஆரம்பக் கல்வி ஐதராபாத்தில் முடிந்ததும், அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்ற பழமொழிக்கு சரோஜினியை ஆளாக்காமல், பொது அறிவு பெறத்தக்க வேறுபல கல்வி விஷயங்களையும் தந்தையே மகனுக்குக் கற்பித்து கல்வியாளியாக்கினார்.

‘விளையும் பயிர் முளையிலே' என்பதற்கேற்ப சரோஜினி இளமையிலேயே இயற்கையை ஊடுருவிப் பார்க்கும் நுண்ணறிவை இயற்கையாகப் பெற்றிருந்தார்! அவருடைய அந்த நுண்மான் நுழைபுல நோக்கு; அவருக்கு ஒரு கவிஞனாவதற்குரிய கற்பனையையும், காட்சியையும் வழங்கியது.

தனது, செல்வியின் அறிவாழத்தைக் கண்டு வியந்த அகோரநாத் சட்டோடாத்தியாயர், அவரைத் தக்க, மேல் கல்வி கற்றிட சென்னை மாநகருக்கு அனுப்பி வைத்தார். அக் காலத்தில் ஒரு பெண்ணைத் தனியாக வெளியூருக்கு அனுப்பி கல்வி கற்கச் செய்த இவரது துணிச்சலான நெஞ்சத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது அல்லவா?

எனவே, சரோஜினி சென்னை நகர் வந்தார்; கற்க வேண்டிய கல்வியைத் தந்தையின் எண்ணங்களுக்கேற்பக் கற்றார்: சென்னை மாநிலத்திலேயே அப்போது நடைப்பெற்ற மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் பெண்ணாக தேர்வு பெற்றார்.

ஏறக்குறைய பனிரெண்டு வயதுடைய ஒரு பெண், மெட்ரிகுலேஷன் தேர்வில், ஆங்கிலத்தில், பிற பாடங்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்வானதைக் கண்டு பள்ளி ஆசிரியர்களும், உடன்படிக்கும் மாணவிகளும் ஆச்சரியமுற்றார்கள்.

சரோஜினி தேர்வு வெற்றியால், பள்ளிக்கு நற் பெயரைத் தேடித் தந்ததுடன், அவருடன் கல்வி கற்ற மாணவிகளும் அவருக்கு அடுத்தபடியாகத் தேர்வாகி நற் புகழைப் பெற்றார்கள்.

சென்னை படிப்பை முடித்துக்கொன்டு, சரோஜினி மேற்கொண்ட பட்டப்படிப்புக்கு லண்டன் மாநகரம் சென்றார். அவரது தந்தையார் லண்டனிலே தாம் பட்டம் பெற்ற கல்லூரிக்கே, சகல ஏற்பாடுகளுடன் இவரை அனுப்பி வைத்தார்.