உள்ளடக்கத்துக்குச் செல்

பாதுகாப்புக் கல்வி/ஆடுகளத்தில் பாதுகாப்பு

விக்கிமூலம் இலிருந்து

6. ஆடுகளத்தில் பாதுகாப்பு

1.ஆடுகளத்தின் பெருமை

உடற்கல்வித் துறையிலே, உன்னதமான இடத்தை பெறுவது ஒட்டப் பந்தயங்களும், விளையாட்டுப் போட்டிகளுமேயாகும்.

உற்சாகம் தருகிற விளையாட்டு, உணர்வுகளைத் தூண்டுகிறது. மனதிற்கு இன்பமும், இதமும் அளிக்கிறது. சக்தியையும், சாமர்த்தியத்தையும் அளிக்க வல்லது. போராடும் நினைவும், புலிபோலும் செயலும் ஒன்றுக்கொன்று மீறிட, உடலை இயக்கி, ஆளுமை (Peronality) பண்பை வளர்க்க வல்லது.

வாழ்வின் வன்முறையிலிருந்தும், வன்மங்களிலிருந்தும் விடுபடவும், ஒருவருக்கொருவர் உரையாடி மகிழவும், சிறந்த குணாதிசயங்களைப் பெறவும், வாழ்வுக்குப் பயன்படும் அனுபவங்களை அடையவும், வேற்றுமையை மறந்து ஒற்றுமையை வளர்க்கவும், தலைமை ஏற்று நடத்தவும், பிறர் தலைமைக்குத் தலை வணங்கித் தொடரவும், எதையும் தாங்கும் இதயம் பெறவும், சகலவிதமான சூழ்நிலைகளுக்குரிய சந்தர்ப்பங்களை அளிப்பதும் விளையாடும் இடமான ஆடுகளங்களே.

இத்தகைய வீறுமிகுந்த ஆடுகளங்களிலே விளையாடுவோர் கீழே விழவும், அதனால் விபத்து நிகழவும் வாய்ப்புக்கள் உண்டு. அவற்றிலிருந்து விடுபடவும் விலகிக் கொள்ளவும் முடியும். அத்தகைய அரிய முறைகளை அறிந்து கொள்வதற்கு முன்னர், ஆடுகளத்தில் விபத்து நிகழக்கூடிய காரணங்களை முதலில் புரிந்து கொள்வோம்.


2. விபத்துக்குரிய காரணங்கள்

1. பயிற்றுவிப்பாளர்களின் பற்றாக்குறை, அதாவது இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவு, தேவையான அளவு ஆசிரியர்கள் இல்லாமை.

2. சரியாக அமையாத விளையாட்டுக் கருவிகள், குறையுடைய பொருட்களால், குந்தகம் விளைவது இயற்கைதானே!

3. விளையாடுவதற்குரிய வசதிக் குறைவுகள்.

4. முரட்டுத்தனம் நிறைந்த சில மாணவர்களின் ஒழுங்கீனமான நடத்தைகள்.

5. அரைகுறை திறமையும், அலட்டிக்கொள்ளும் செயல் முறையும்.

6. மாணவர்களின் பலம் இல்லாத (பலஹீனமான) உடல் அமைப்பு.

7. செயல்படுகின்ற அந்தந்த விளையாட்டுக் களிலேயே இருக்கின்ற விபத்துக்கான வாய்ப்புக்கள். (கோலூன்றித் தாண்டுதல், உயரத்தாண்டுதல், போன்ற நிகழ்ச்சிகள்).

மேலே கூறிய காரணங்களுக்கேற்ப, முறையான மாற்றுக் காரியங்களைச் செய்தால், விபத்துக்கள் நிகழாமல், முடிந்தவரை தவிர்த்து விடலாம்.

3. விபத்து நிகழாமல் தடுக்கும் வழிமுறைகள்

1. ஆர்வத்தாலும், அளவிலா சக்தி நிறைந்திருப்பதாலும், மாணவர்கள் விளையாடும்போது, விழுந்து விபத்திற்குள்ளாவது இயல்பாக நடப்பதுதான்.

போதிய கண்காணிப்பாளர்கள், பயிற்சியாளர்கள் பக்கத்தில் இருந்தால் அவ்வப்போது அவற்றினைச் சுட்டிக்காட்டலாம். மீறினால் தேவையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் தடுக்கலாம். தண்டிக்கலாம்.

2. தேவையான விளையாட்டு பொருட்களையும், கருவிகளையும், நல்ல தரமுள்ளதாக வாங்கி, அவற்றைத் தக்க முறையில் பராமரித்து வரவேண்டும்.

3. குறிப்பிட்ட விளையாட்டை விளையாடுவதற்கு முன்னர், இன்னின்ன முறையில் ஆடினால் இன்பமாக இருக்கும், இந்த முறையில் ஆடக்கூடாது என்றவாறு குறிப்புக்களை கொடுத்துவிடவேண்டும்.

இந்த விளையாட்டுப் பற்றிய அறிவினை, மாணவர்கள் வளர வளர பயிற்சியாலும் பழக்கத்தாலும் அதிகமாக வளர்த்துக் கொள்வார்கள்.

4. பங்கு பெறுகின்ற மாணவர்கள், அந்தந்த விளையாட்டுக்கேற்ற பாதுகாப்புக் கருவிகளை அணிந்துகொண்டுதான் ஆடவேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பழக்கவேண்டும். (உம்) கிரிக்கெட் ஆடும் முன்னர், அதற்குரிய கையுறை, காலுறை, காலணி, அடிவயிற்றுக்காப்பான் (Abdomon Guard) முதலியவற்றை அணிவது போல.

5. விளையாட்டுக்குரிய முக்கியமான வழிகள் விளக்கப்படவேண்டும். அதனால், தவறாக ஆடும் முறைகளும், வீணான தகராறுகளையும் தவிர்க்கின்ற நல்ல சூழ்நிலை அமையும்.

6. பெரியவர்கள் விளையாடுகின்ற ஆட்டங்களை, இளையவர்கள் ஆடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.

7. முடிந்தவரை (மூக்குக்) கண்ணாடி அணிந்து கொண்டு, மாணவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

8. விளையாடும் மைதானம் அன்றாடம் சுத்தப்படுத்தப்பட வேண்டும். கண்ணாடித் துண்டுகள், கூரிய கட்டைகள், கற்கள், முட்கள் மற்றும் துன்பம் தரக் கூடிய அளவுக்குள்ள பொருட்களை, மைதானத்திலிருந்து அகற்றிவிட வேண்டும். தாண்டிக் குதிக்கும் மணற் பரப்பில், மேற்கூறிய பொருட்கள் உள்ளனவா என்பதை அடிக்கடி சோதித்துப் பார்த்து வைப்பது நல்லது.

ஏனெனில், மணற்பரப்பில் கூரிய சிறுசிறு கல், பரிசல், முள் போன்றவைகள் நிறையக் கிடக்க வாய்ப்புண்டு.

9. விளையாடப் பயன்படும் பொருட்கள் பழுதாகி iருக்க வாய்ப்புக்கள் உண்டு. அவற்றை உடனுக்குடன் பார்த்து விடுவது சிறந்த பாதுகாப்பு முறையாகும்.

10. விளையாடும் மைதானம் முழுவதும் மேடு பள்ளங்கள் இல்லாமல் சமன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

11. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு விதிகள் பற்றிய ஞானத்தை வளர்த்து விடவேண்டும். அவர்கள் புரிந்து கொண்டுவிட்டால், பாதுகாப்பு முயற்சியில் பாதி அளவு எளிதான வெற்றிதானே!

12. விளையாடும் நேரம் எல்லாம் மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் விளையாடுமாறு தூண்ட வேண்டும்.

இவற்றினைக் கண்காணிக்க, பயிற்சியாளர்களுக்குத் துணையாக, அணித் தலைவர், குழுத் தலைவர், வகுப்புத் தலைவர் மற்றும் மாணவர் தலைவர் இவர்களின் பணியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாணவர்களை, விளையாடும். ஆடுகளப் பகுதியிலே, ஆட வைப்பது பெரிதல்ல. அவர்களை ஆட்டத்தில் நிதானம் இழக்காமல் விளையாடச் செய்வதுதான் மிகவும் பெருமுயற்சிக்குரிய காரியமாகும்.