பாதுகாப்புக் கல்வி/உள்ளாடும் அரங்கத்தில் பாதுகாப்பு
உள்ளாடும் அரங்கம் அல்லது விளையாட்டு மண்டபம் (Gymnasium) என்று அழைக்கப்படும் இவ்விடத்தில், பனி, மழை, குளிர் போன்ற இயற்கையின் எதிர்ப்பையும் சமாளித்து, விளையாடுதற்கேற்ற வழி ஏற்படுத்தித் தந்து ஊக்குவிக்கும் உயர் பண்பைக் காணலாம்.
விளையாட்டுக்களில் நேர்கின்ற விபத்துக்களைவிட, இடம் குறுகியதாக, நான்குபுற சுவர்களுக்கு மத்தியில் பலர் கூடி விளையாடும்போது, எதிர்பாராத இடர்கள், நேர்வது இயல்புதான். அதை முன்னரே எதிர்பார்த்து, அதற்கேற்ப நடந்து கொள்வதில்தான் புத்திசாலித்தனம் அடங்கியிருக்கிறது.
ஆகவே, உள்ளாடும் அரங்கத்தில் விபத்து நேராமல் தடுத்துக் கொள்ளும் தக்க நடவடிக்கைகளும், தற்காப்பு முறைகளும் என்னவென்று இனி தெரிந்துகொள்வோம்.
1. உள்ளாடும் அரங்கத்தின் தரைப்பகுதிகள் வழுக்காமல் இருப்பதுபோல் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும்.
2. இடம் குறுகியதாக இருப்பதால், விளையாட்டுக் கருவிகளை ஆங்காங்கே சுவற்றிலும் தரையிலும் பதித்து வைத்திருக்க வேண்டிய அமைப்பு இருக்கும். அதனால், ஏதாவது கம்புகளோ அல்லது சாதனங்களோ துருத்திக்கொண்டு வெளியே வைக்கப் பட்டிருந்தால்,(அதாவது இரும்புக் குழாய், மின்கலக் கருவிகள் போன்றவை) அவைகளை மூடி, மெத்தை போன்றவற்றால் கட்டி, இடித்தாலும் மெத்தென்று இருக்கும் வகையில் ஏற்பாடு செய்து வைக்க வேண்டும்.
3. கண்ட கண்ட இடங்களில் விளையாட்டுக் கருவிகளைப் போட்டு வைக்காமல், தேவையான விளையாட்டுக் கருவிகளை வேண்டும்போது எடுத்துப் பயன்படுத்திவிட்டு, தேவை முடிந்ததும் பாயாக இருந்தால் உடனே சுருட்டிவைத்து, மற்ற ஏதாவது பொருளாக இருந்தால், அதற்கென்று உரிய இடங்களில் ஒதுக்கி வைத்து விடுவது நல்லது.
4. வருவோருக்கும் போவோருக்கும் போகவர வழி இருக்குமாறு, அரங்க அமைப்பு விளையாட்டு முறைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
5. விளையாடும் பகுதிகளில் எல்லாம், நன்றாக வெளிச்சம் வரும்படி சுற்றிலும் விளக்குகள் பொருத்தியிருக்க வேண்டும்.
6. குளியல் அறை, சாமான்கள் அறை, மண்டப அறைகள் எல்லாம் தூய்மையுடன் விளங்குமாறு கண்காணித்து வரவேண்டும்.
7. குழப்பம் நேராமல், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு இடம் என்ற ஓர் உணர்வை ஊட்டுவதுபோல தொடர்ந்து அவற்றைக் காக்கின்ற தன்மையும் கண்காணிப்பும் வேண்டும்.
8. இடம் அளவில் சிறுத்து, வரும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால், எல்லோரையும் ஒரேசமயத்தில் விளையாடவிடாமல், இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழு ஆடும்போது, மறு குழுவை வேடிக்கைப் பார்க்க வைத்து, பிறகு அவர்களுக்கும் அடுத்து வாய்ப்பு வருவது போன்று தந்தால், நெருக்கடியும், அதன் காரணமாக விளையும் இன்னலையும் தடுத்தாட் கொள்ளலாம்.
9. முறையான கண்காணிப்பு முறையுடன், பயிற்சியாளர்களின் ஆழ்ந்த ஒத்துழைப்பும் அவசியம் இருக்க வேண்டும்.
10. உள்ளாடும் அரங்கத்தில் நடந்து கொள்ளும் முறையினை எல்லாம், விதிமுறைகளாகத் தொகுத்து, அறிவிப்புப் பலகையில் குறித்து வைத்திருக்க வேண்டும்.
அதில் செய்யத் தகுந்தன, செய்யத் தகாதன என்பவற்றையும் குறித்துக் காட்டலாம்.
11. அரங்கத்திற்குள் வரும் மாணவர்களுக்கு விளையாடி வெற்றிபெறுவது ஒன்றுதான் நோக்கமல்ல என்பதையும் ,விளையாட்டு என்பது மகிழ்வு பெறத்தான். விளையாட்டு என்பது சிறந்த பண்பாட்டை வளர்க்கத்தான். விளையாட்டு மூலம் சிறந்த பாதுகாப்பு உணர்வைப் பெறத்தான் வருகிறோம் என்கிற நல்உணர்வை ஊட்டுவது மிகமிக அவசியமாகும்.