உள்ளடக்கத்துக்குச் செல்

இயல் தமிழ் இன்பம்/ஆசானின் அன்புரை - நன்னூல் நவில்வது

விக்கிமூலம் இலிருந்து

19. ஆசானின் அன்புரை -
நன்னூல் நவில்வது

மாணாக்கர் சிலர் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வரும் இந்தக் காலத்தில், வகுப்பின் கடைசி வரிசையில் சிலர் அமர்ந்து கொண்டு புகை பிடித்துக் கொண்டும் சீட்டாடிக் கொண்டும் பொழுது போக்கும் இந்தக் காலத்தில், சிலர் ஆசிரியரைக் கேலிப் பொருளாக எண்ணி எள்ளி இகழ்ந்து திட்டிப்பேசி நகையாடும் இந்தக் காலத்தில், சிலர் தேர்வு எழுதும் போது பார்த்து எழுதுவதற்கு உரிமை உண்டு என்று உரிமை கொண்டாடுவது - கண்டிக்கும் ஆசிரியர்கட்கு அடி - உதை கொடுப்பதும் வழக்கமாகிக் கொண்டுவரும் இந்தக் காலத்தில், இன்னும் சொல்லொணா முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஆசிரியர்களைப் பற்றியும் மாணாக்கர்களைப் பற்றியும் எண்ணிப்பார்க்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

அந்தக் காலத்தில், ஆசிரியர்களின் கை மேலோங்கியிருந்ததும், மாணாக்கர்கள் அடிமைகள்போல் அடக்கியாளப்பட்டதும் உண்மைதான்! இந்த நிலை பிற்காலத்தில் கண்டிக்கப்பட்டது. குழந்தை உளவியல் (Child Psychology) கல்வி உளவியல் (Educational Psychology) சமூக இயல் (Socialogy) ஆகிய துறைகளும் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில், ஆசிரியர்கள் மாணாக்கர்களை செல்லக் குழந்தைகள் போல நடத்த வேண்டும் என்பதுபோல் ஒருவகைப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதும் உண்மைதான்! கூர்ந்து நோக்குங்கால், அந்தக் காலத்தில் பின்பற்றப்பட்ட அடிமை முறையும் சரியன்று - இந்தக் காலத்தில் தரப்பட வேண்டியதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவு மீறிய செல்லமும் சரியன்று - என்று கூறத் தோன்றுகிறது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி என்பவரால் இயற்றப்பெற்ற நன்னூல் என்னும் நல்ல நூலை அணுகலாம்.

நன்னூலில் அன்புள்ள நல்லாசிரியர்க்கு உரிய இலக்கணமாகக் கூறப்பட்டிருப்பதாவது:-

அருளும், கடவுள் நம்பிக்கையும், உயர்ந்த குறிக்கோளும், மேன்மையும், பல கலைகளையும் தெளிவாகப் பயின்றுள்ள அறிவுத் திறனும் (Subject Knowledge), கருத்துக்களை நன்கு எடுத்து விளக்கும் வல்லமையும் (Teaching Ability) நிலமும் மலையும்போல் தக்க பயனனிக்கும் நிலைத்த மாண்பும், தராசு போன்ற நடுநிலைமையும், மலர் போன்ற இனிய முகமலர்ச்சியும், பரந்த உலகியல் அறிவும், உயர் குணமும் இன்னபிற நற்பண்புகளும் உடையவர்களே நூல் கற்பிப்பதற்குரிய நல்லாசிரியர்கள் ஆவார்கள் என்று நன்னூல் நவில்கிறது; இதனை,

“குலன் அருள்தெய்வம் கொள்கை மேன்மை,
கலைபயில் தெளிவு, கட்டுரை வன்மை,
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்,
உலகியல் அறிவோடு, உயர்குணம், இணையவும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்னே,”

என்னும் நன்னூல் பாவால் அறியலாம்.

மேலும் ஆசிரியர் பணிக்கு அருகர் அல்லாதவர் பற்றியும் நன்னூல் நவில்கிறது; அது வருமாறு:-

“மொழிகுணம் இன்மையும், இழிகுண இயல்பும்,
அழுக்காறு அவாவஞ்சம் அச்ச மாடலும்,
கழற்குடம் மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே.”

என்பது பா.

இனி, ஆசிரியர் பாடம் கற்பிக்க வேண்டிய முறை பற்றி நன்னூல் நவில்வதைக் காண்போம்.

பாடம் கற்பிக்கும் முறை

ஆசிரியர் பயிற்றும் முறையில் (Method of Teaching) வல்லவராய் இருத்தல் வேண்டும். உணவை நன்றாகச் சமைக்கவில்லையெனில், உண்பவர் எவ்வளவு பசியாயிருப்பினும் எவ்வாறு சுவைத்து உண்ண முடியும்? எனவே, ‘கூலிக்கு மாரடித்தல்’ என்றபடியில்லாமல், ஆசிரியர்கள் பொறுப்புடனும் சுவையுடனும் கற்பிக்க வேண்டும். எவ்வெப் பாடத்தை எவ்வெந் நேரத்தில் கற்பிக்க வேண்டுமோ - அவ்வப் பாடத்தை அவ்வந் நேரத்தில் கற்பிக்க வேண்டும். பாடங் கற்பிக்கும் வகுப்பறை நல்ல சூழ்நிலை யுடையதாயிருக்க வேண்டும். ஆசிரியர் தக்க இடத்தில் இருந்து தெய்வம் வாழ்த்திப் பாடம் தொடங்க வேண்டும். கற்பிக்க வேண்டிய பாடத்தை முன்கூட்டித் தயாரித்து உள்ளத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். விரையாமல், மாணாக்கர் அனைவரும் பின்பற்றித் தொடரும் அளவில் கற்பித்தல் நடைபெற வேண்டும். ஆசிரியர் எவர்மேலும் சினங் கொள்ளாமல், விருப்பத்துடன் - அன்புடன் - முகம் மலர்ந்து கற்பிக்க வேண்டும். எவ்வாறு கற்பித்தால், கேட்கும் மாணவர்கள் புரிந்து கொள்வர், என்பதை அறிந்து அவர்களின் உள்ளத்தில் புரிந்து பதியும்படி கற்பித்தல் வேண்டும். மந்தமான மாணாக்கர் சிலர் இருப்பர்; அவர்கள் மேலும் மற்ற எவர்பாலும் மன மாற்றமோ - வெறுப்போ கொள்ளாமல் அன்புடன் நூல் கற்பிக்க வேண்டும். இந்தக் கருத்துக்கள் அடங்கிய நன்னூல் பா வருமாறு:

பாடம் கற்பிக்கும் முறை

“ஈதல் இயல்பே இயம்புங் காலைக்
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பிமுக மலர்ந்து
கொள்வோன் கொள்கை அறிந்துஅவன் உளங்கொளக்
கோட்டமில் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப.”

என்பது நூற்பா. இந்த நூற்பாவிலும் ‘வெகுளான் விரும்பி முகமலர்ந்து’ என்னும் பொருள் பொதிந்த தொடரில், ஆசானின் உரை அன்புரையாக இருக்க வேண்டும் என்னும் கருத்து அடங்கியுள்ளமை காண்க.

எனவே, ஆசிரியர்கள் கடனுக்கு வேலை செய்யாமல் உண்மையாகவே பாடுபட்டு உழைக்க வேண்டும். ஆசிரியர்கள் சிலர் எப்போது மணியடிக்கும் என்றே எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். “மாட்டை மேய்த்தான், கோலைப் போட்டான்” என்பது இன்னோர்க்கேப் பொருந்தும். சில சமயங்களில், தலைமை (அதிகாரி) அலுவலாளர்க்கு அஞ்சி அப்படியும் இப்படியுமாக அசைவதும் உண்டு. இவ்வித ஆசிரியர்களால் மாணவ உலகம் சிறிதும் நன்மை பெறாது. உணவுக் கடையில் பணத்திற்கு உணவு போடும் சிலர்போல் கல்வி கற்பிக்கக் கூடாது; பெற்ற தாய் பிள்ளைக்கு உணவு அளிப்பதுபோல் பரிவுடன் - அன்புடன் கற்பிக்க வேண்டும். இனி மாணவர் பக்கம் சிறிது கவனத்தைத் திருப்புவோம்:

கற்கும் முறை

பிள்ளைகளின் குறும்பு

ஆசிரியரிடம் கல்வி பயிலும் பிள்ளைகள் கற்கும் முறையினையும் நன்குணர வேண்டும். யாருக்கோ வந்த விருந்தென மேலோடு இருந்துவிடக் கூடாது. பிள்ளைகள் சிலர், மாணவரின் நன்மைக்காகப் பள்ளிக்கூடம் நடக்கின்றது என்பதை அறவே மறந்து விடுகின்றனர்; மாணவராலேயே பள்ளிக்கூடத்தினர் பிழைப்பதாக எண்ணுகின்றனர்; எண்ணி இடக்கும் செய்கின்றனர்; சில சமயங்களில் பள்ளிக்கூடத்தை ஒரு நாடகக் கொட்டகையாகவே கருதி விடுகின்றனர்; வகுப்பை நாடக மேடையாகவே கருதி விடுகின்றனர்; ஆசிரியர்களை நடிகர்களாகவும் எண்ணுகின்றனர்; நாடகக் கொட்டகையில் கலவரம் செய்யும் சில குறும்பர்களைப் போல் வகுப்பிலும் கலவரம் செய்யத் தொடங்கிவிடுகின்றனர், என்னே ஆசிரியர் - மாணவர்தம் அன்பு நிலை! ஆனால் ஒரு சில மாணவரிடமே இக்குறை காணப்படுகின்றது. இத்தீய பழக்கம் அறவே கூடாது. பண்டைக் காலத்தில், ஆசிரியரிடத்தில் மாணவர்கள் அகங்கனிந்து அன்பு ததும்ப நடந்து கொண்டது போலவே, இக்காலத்திலும் நடந்துகொள்ள வேண்டும். அதுவே சிறந்த நய நாகரிகமாகும்.

அடக்கமும் வழிபாடும்

மாணவர் சிலர், ஆசிரியர்க்கு அடங்காமல் நடப்பதைப் பெருமையென்றெண்ணிச் சிறுமை உறுகின்றனர். பெரியோர்க்கு அடங்கி நடப்பதே பெருமையாகும். அட்ங்காமையால் வரும் கேடுகள் பல,

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

என்பது குறளன்றோ?

வழிபாடு

ஆசிரியர்க்கு அடங்கி அவரை வழிபட்டுக் கற்க வேண்டும். குளிர் காய்பவன் நெருப்பை மிக நெருங்கின் சுடும்; மிகவும் எட்டிச் சென்றாலும் குளிரும்; ஆதலின் நடுத்தரமான இடத்திலிருந்தே குளிர் காய்வான். அதுபோலவே, மாணவரும் ஆசிரியரும் அளவு மீறி நெருங்கிப் பழகினால் மதிப்புக் கெடும்; அளவு மீறிப் பிரிந்து நின்றாலும் அன்பு கெடும்; ஆதலின் நடுத்தரமாகவே பழக வேண்டும். ஆனால் நிழல்போல் விடாது அவரை அடுத்திருக்க வேண்டும். ஆசிரியர் எவ்வெவ்விதத்தில் மகிழ்வாரோ அவ்வவ்விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இங்ஙனம் நெறி தவறாது நிற்கும் நிலைக்குத்தான் வழிபாடு என்று பெயராகும். இதனை நன்னூலில் உள்ள

“அழலின் நீங்கான், அணுகான், அஞ்சி
நிழலின் நீங்கான், நிறைந்த நெஞ்சமொடு
எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம்
அறத்தின் திரியாப் படர்ச்சி வழிபாடே.”

என்னும் நூற்பாவால் உணரலாம்.

பாடம் கேட்கும் முறை

நன்னூலில் பாடம் கேட்க வேண்டிய முறை அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சில மாணவர்கள் நினைத்த நேரத்தில் பள்ளிக்கூடம் செல்வார்கள்; ஆசிரியர் கட்டளையில்லாமலேயே வாயில் வந்ததை உளறிக் கொட்டத் தொடங்கி விடுவார்கள், ஆசிரியர் கற்பிக்கும் பாடங்கள் அவர் தம் செவித்துளையில் சிறிதும் நுழையா. “எல்லாம் நுழைந்தன. இன்னும் வால் மட்டும்தான் நுழையவில்லை” என்று ஒருவர் கூறியதற்கிணங்க, மனம் வேறு எங்கெங்கேயோ சென்றிருக்கும், தப்பித் தவறிக் காதில் விழுந்த இரண்டொரு கருத்தையும் அங்கேயே மறந்து விடுவார்கள். ஆசிரியர் போகலாம் என விடையளிப்பதற்குள்ளாகவே எழுந்து ஓடி வந்து விடுவார்கள்.

இத்தகைய பிள்ளைகளும் உலகில் இருந்தே தீர்கின்றனர். இங்ஙனம் நடத்தலாகாது. குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும்; சென்றதும் ஆசிரியர்க்கு வணக்கம் செலுத்த வேண்டும்; அவர் சொல்லிய பின் இருக்கையில் அமர வேண்டும்; அவர் கட்டளையிட்ட பிறகே ஏதேனும் ஒப்பிப்பதையோ, படிப்பதையோ செய்ய வேண்டும். வேறெங்கும் மனத்தைச் செலுத்தாது ஓவியம் போன்றிருந்து பாடங்களை ஏற்றுக் கேட்க வேண்டும். கோடைக் காலத்தில் உச்சிவேளையில் மிகுந்த தாகம் கொண்டவன் மிக்க ஆர்வத்தோடு தண்ணீர் பருகுவது போல, ஆசிரியர் சொல்லும் பாடமாகிய உணவைச் செவியேவாயாகவும், நெஞ்சே வயிறாகவும் கொண்டு கேட்டு உண்ண வேண்டும். கேட்ட பாடங்களை மறக்க விடாமல் உள்ளத்தில் பதியவைக்க வேண்டும். ஆசிரியர் ‘போ’ என விடையளித்த பின்பே வீட்டுக்குப் புறப்பட வேண்டும். மாணவர்களின் தேவையறிந்து கல்வியுணவை ஊட்ட வேண்டும். இக்கருத்துக்களை, நன்னூலிலுள்ள,

“கோடல் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று, வழிபடல் முனியான்,
குணத்தொடு பழகி, யவன் குறிப்பிற் சார்ந்து,
இருவென இருந்து, சொல்லெனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்,
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்,
செவிவாய் ஆக நெஞ்சுகளன் ஆகக்
கேட்டவை கேட்டு, அவைவிடாது உளத்தமைத்துப்,
போவெனப் போதல், என்மனார் புலவர்”

என்னும் நூற்பாவால் நன்குணரலாம். இவற்றையெல்லாம் பழங்கால (கர்நாடக) விதிகள் என்று தள்ளிவிட முடியாது. இக்காலத்திலும் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறை விதிகள் பெரும்பாலன இவற்றைப் போன்றே பள்ளிக்கூட அறிக்கைகளில் வெளியிடப்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். ஆதலின் மாணவர்கள் இம்முறையில் பாடங்கேட்டுப் பயன் பெறுவார்களாக, இவ்விதம் கற்கும் கல்வியே விரைவிலும் வேரூன்றிப் பதியும்.

பின்னின்றும் கற்க

பொதுவாக உலகத்தில் மானத்தோடு வாழ விரும்புபவர்கள் ஒருவர்க்குப் பின்னின்று கையேந்த மாட்டார்கள்; அந்நிலைக்குப் பெரிதும் நாணுவார்கள். ஆனால் கல்வியைப் பொறுத்த மட்டிலும் அப்படியிருக்க முடியாது. இருப்பதும் அறிவுடைமையாகாது. ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன் ஒருவன் எல்லாம் உடைய செல்வர் முன்பு குழைந்தும் பணிந்தும் நின்று ஒன்றைக் கேட்டு வாங்குவான். அது போலவே மாணவரும் ஆசிரியர் முன்பு பணிந்து நின்று பாடங்கேட்க வேண்டும். அவரே சிறந்தவராவர். மேலும் ஆசிரியர்க்குப் பொருளும் கொடுத்து உதவலாம். ஆனால், நன்மை ஒன்றும் செய்யாவிடினும் தீமையாவது செய்யாமல் இருப்பது நல்லது. மற்றும், தாம் ஒன்றும் இல்லாத ஏழையாய் இருப்பின் பிச்சையெடுத்தாயினும் கற்க வேண்டும். இங்ஙனமாக ஒருவரின் பின்னிற்கும் நிலைக்குச் சிறிதும் வெட்கப்படக் கூடாது. கல்வியானது அச்சிறுமைகளை யெல்லாம் மறைத்துப் பின்னால் பெரிதும் விளக்கந் தந்து பெருமைப் படுத்தும். இக்கருத்துக்களை,

“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்”

என்னும் திருக்குறளானும்,

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”

என்னும் புறநானூற்றானும்,

“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கைநன்றே”

என்னும் வெற்றிவேட்கையானும் உணரலாம்.

திருக்குறளும் புறநானூறும் வெற்றி வேற்கையும் கூறும் இந்தக் கருத்தினை, பவணந்தியார், மேற்காட்டியுள்ள தமது நன்னூல் பாவில், ‘வழிபடல் முனியான்’ என்னும் தொடரால் வெளிப்படுத்தியுள்ளார். அஃதாவது, ஆசிரியரை வழிபடுவதில் வெறுப்புக் கொள்ளாதவனாய் - ஆசிரியரை வணங்குவதற்கு வெட்கப்படாதவனாய் மாணாக்கன் இருக்க வேண்டும் என்பது இதன் கருத்தாம். மற்றும், நாம் இவரை வழிபடுவதா - இவரை வணங்குவதா - இவருக்கு அடங்கி நடப்பதா - இவரது கட்டளைக்குப் பணிவதா - குலத்தாலும் செல்வத்தாலும் வேறு பிற தகுதிகளாலும் நாம் ஆசிரியரை விட உயர்ந்தவராயிற்றே - என்னும் மான உணர்வாகிய உயர்வு (Superiority Complex) உடைய மாணாக்கனுக்குக் கல்வி கற்பிக்க முடியாது என்னும் கருத்தைப் பவணிந்தியார் நன்னூலில்,

“தளி மடி மானி காமி கள்வன்
படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே”

என்னும் நூற்பாவால் அறிவித்துப் போந்துளார். இந்நூற்பாவிலுள்ள ‘மானி’ என்பது ஈண்டு கருதற்பாற்று. எனவே, மாணாக்கர்கள் மேற்கூறிய ஒமுங்கு நெறியில் நின்று ஆசானின் அன்பைப் பெற்றுக் கல்வி கற்க வேண்டும். இனி, ஒரு நூலில் முழுப் புலமை பெறுவது எப்படி என்பதை நன்னூல் வழி நின்று காண்பாம்.

கல்விக் குழந்தை

இங்குக் கல்வியை ஒரு குழந்தையாகவும் அதனைக் கற்கும் மாணவனைத் தாயாகவும் ஒப்பிட்டுக் கூறினால் அது சாலவும் பொருந்தும். அவ்வாறே, நல்லாற்றுார் சிவப்பிரகாச அடிகளார், தாமியற்றிய பிரபுலிங்கலீலை என்னும் நூலுள் ஓரிடத்தில், மிகவும் தெளிவாக எடுத்து இயம்பிப் போந்துள்ளார். வனவசை மாநகரத்தில், மமகாரன் என்னும் அரசனும் மோகினி என்னும் அரசியும் அரசாண்டிருந்தார்கள். அவர்கட்கு நீண்ட நாளாகப் பிள்ளையே பிறக்கவில்லை. கடிய நோன்பு கிடந்தார்கள். அதன் பயனாய்க் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை யென்றால் அரண்மனைக் குழந்தை அல்லவா? அதிலும் நீண்ட நாளாக இல்லாமல் பின்பு பிறந்த குழந்தை அல்லவா? ஆதலின், அக்குழந்தைக்குச் செய்யப்படும் வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்தாள் தாயாகிய அரசி. அவள் வளர்த்ததற்கு இங்கு உவமையொன்று கொடுக்கப்பட்டுள்ளது. உலகில் கல்வி கற்க விரும்பிய முதல் மாணவன் ஒருவன் எங்ஙனம் தன் பாடங்களைப் போற்றி உண்ர்ந்து கற்பானோ, அங்ஙனமே அரசியும் தன் குழந்தையை அருமை பெருமையுடன் வளர்த்தார் என்னும் கருத்தில்,

“படியில் கல்வி விரும்பினோன் பாடம் போற்றும் அதுபோல”

என அவ்வுவமை அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தாய் ஒருத்தி கண் விழித்தல், மருந்துண்ணல் முதலிய துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு தன் குழந்தையினை வளர்த்துக் காப்பது போலவே, மாணவர்களும் பல விதத்திலும் முயன்று கல்வியாம் குழந்தையை வளர்ச்சி பெறச் செய்யவேண்டும். அதுதான் உணர்ந்து கற்றதாகக் கருதப்பட்டுச் சுவை மிகுதியும் பயக்கும். அங்ஙனம் எவ்வெவ்விதத்தில் கல்விக் குழந்தையை மாணவத் தாய்மார்கள் வளர்க்க வேண்டும் என்பதை நன்னூல் வழி நின்று ஆராய்வோம்:

புலமை பெறுவது எப்படி ?

கற்கத் தொடங்கிய மாணவன் ஒருவன், முற்கூறியுள்ள முறைப்படியே ஆசிரியரிடம் பாடங்கேட்டுக் கொள்ள வேண்டும்; அதனோடு விட்டுவிடக் கூடாது; திரும்பவும் வீட்டில் வந்து படிக்க வேண்டும்; கேட்ட நூல்களின் கருத்தை உலக வழக்கத்தோடு ஒத்திட்டு உண்மை உணர வேண்டும்; போற்ற வேண்டியவைகளைப் போற்றி வைத்துக் கொள்ள வேண்டும் - மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். அவற்றுள் விளங்காமல் இருப்பதையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் ஆசிரியரை அடைந்து அவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். மாணவன் ஒரு நூலை ஒரு முறை பாடங் கேட்டதோடு விடக் கூடாது. எங்ஙனமாயினும் முயன்று மற்றொருமுறை கேட்பது நலம். அங்ஙனம் இருமுறை கேட்டால், அந்நூலில் பெரிதும் பிழை படாமல் புலமை உள்ளவன் ஆவான்; மூன்றாவது முறையும் பாடங் கேட்பானேயாயின், தானே பிறர்க்குப் பாடஞ் சொல்லக்கூடிய முறைமையினையும் உணர்ந்து கொள்வான் என்பது உறுதி.

கால்பங்குப் புலமை

ஆனால், ஆசிரியர் சொல்லும் பாடங்களை எத்துணை முறை ஊக்கத்தோடு கேட்பினும், அந்நூல்களில் கால்பங்குப் புலமைத்திறம் பெற்றவனாகவே கருதப்படுவான்.

அரைபங்குப் புலமை

ஆசிரியரிடம் பன்முறை பாடங் கேட்டதோடு அமைந்து விடக்கூடாது. தன்னைப் போன்ற மற்றைய மாணவர்களோடு சேர்ந்து பழகியும் படிக்க வேண்டும். தனக்குத் தெரியாதனவற்றை அவர்களை வினாவித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தெரியாமல் வினாவுவனவற்றையும்தான் அவர்கட்குத் தெரிவிக்க வேண்டும். இங்ஙனம் ஒருவர்க்கொருவர் ஆராய்ந்து கற்றுப் பரிமாறிக் கொள்ளவேண்டும். இம்முறையில் ஒரு கால் பங்குப் புலமை உண்டாகும். ஆகவே, இதுகாறும் கூறியவற்றால் மாணவன் அரைப் பங்குப் புலமையைப் பெற்றுவிடுவான் என்பது உறுதி.

முழுப் புலமை

பின்பு, தானே ஓர் ஆசிரியனாக அமர்ந்து மாணவர் பலர்க்குப் பன்முறை பாடங் கற்பிக்க வேண்டும். இம் முறையில் எஞ்சியுள்ள அரைப் பங்குப் புலமையும் நிரம்ப, முழுப் புலமையும் நிறைவுறும்.

“நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாகக் கொளினே மடம்நனி இகக்கும்”

“ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின்
பெருக நூலில் பிழைபாடு இலனே”

“முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும்”
 
“ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
கால்கூறு அல்லது பற்றலன் ஆகும்”

“அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால்
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும்”

என்னும் நன்னூற் பாக்களால் நன்குணரலாம்.

எனவே, இம்முறைகளால் வளர்க்கப்படும் கல்விக் குழந்தைதான் மேன்மேலும் வளர்ந்து விளக்கம் பெறும்; முழுப் பயனையும் கொடுப்பதும் ஆகும்.

அன்றும் இன்றும்

இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முன்பே - அஃதாவது - கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே நன்னூல் நவின்றுள்ள பாடம் பயிற்றும் முறைகள் பல, இந்தக் காலத்தில் புதியன போல அருமை பெருமையுடன் கூறப்படும் பயிற்று முறைகள் பலவற்றோடு ஒத்திருப்பதை ஈண்டு ஒரு சிறிது ஆய்வாம்;  ஆசிரியர் கற்பிக்கும் முறை

ஆசிரியர் பாடம் கற்பிக்குமுன் பாடத்தைப் பற்றிய ஆயத்தத்தைச் (தயாரிப்பைச்) சிறப்பாகச் செய்துகொள்ள வேண்டும் என்று பாட முன்னாயத்தத்தின் இன்றியமையாமையை வலியுறுத்துகின்றனர். இதை ஆங்கிலத்தில் ‘Preparation - Lesson Plan’ என்ற பெயர்களால் இன்று வழங்குகின்றனர். முன்பும் இப்படித்தான் பாட ஆயத்தத்திற்குப் பின் பாடம் கற்பிக்கப்பட்டது. எதைக் கற்பிக்க வேண்டுமோ - அதை முன்கூட்டியே உள்ளத்தில் அமைத்து வைத்துக் கொள்ளல் வேண்டும் - என்பதை “உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து” என நன்னூல் நூற்பா நவில்கின்றது.

இந்தக் காலத்தில் “டைம் டேபிள்” (Time Table) என்னும் பெயரில் கால அட்டவணையும், பாட அட்டவணையும் அமைக்கப் படுவதை அறியலாம். முற்பகலில் எந்தப் பாடம் நடத்தலாம் - பிற்பகலில் எந்தப் பாடம் நடத்தலாம் - தொடக்கத்திலும் முடிவிலும் எவ்வெப் பாடம் நடத்தலாம் - எந்தப் பாடத்திற்குப் பின் எந்தப் பாடம் நடத்தலாம் - விடுமுறைக்குப் பின் தொடக்கத்தில் எந்தப் பாடம் நடத்தலாம் - என்று கால அட்டவணை அமைப்பது ஒரு கலைத் திறனாக மதிக்கப்படுகிறது.

மற்றும், பள்ளிக் கட்டடமும், வகுப்பறையும் நல்ல குழ்நிலையில் இருந்தால்தான், பளளிக்கூடம் நடத்த அரசு ஒப்புதல் அளிக்கிறது. எனவே, இடமும் தக்கதாயிருக்க வேண்டும் என இன்று வலியுறுத்தப் படுகின்றது. இந்தக் கருத்துகளை எல்லாம் குறிப்பாய் உள்ளடக்கி,

“காலமும் இடமும் வாலிதின் நோக்கி”

என நன்னூல் அறிவிக்கிறது. மற்றும், இந்தக் காலத்திலும், காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன் ‘பிரேயர்’ (Prayer) என்னும் பெயரில் கடவுள் வழிபாடு நடத்தப்படுகிறது. இதைத்தான், நன்னூல், ‘தெய்வம் வாழ்த்தி’ என்னும் தொடரால் சுட்டுகிறது. மாணவன் உள்ளத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டும்; அவன் நிலைமையறிந்து கற்பிக்க வேண்டும்; திணித்தல் முறை கூடாது என்று இக்காலப் பயிற்றுமுறை கூறுகின்றது. அதையே ‘கொள்வோன் கொள் வகையறிந்து அவன் உளங்கொள நூல் கொடுத்தல்’ என்று நன்னூலும் வற்புறுத்துகின்றது. மேலும் ஆசிரியருக்குத் தான் சொல்லிக் கொடுக்கப் போகும் பாடத்தில் தெளிவும் திறமையும் இருக்க வேண்டும் என்று இக்காலப் பயிற்று முறை வல்லுநர்கள் கூறுவதைக் “கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும்” இருக்க வேண்டும் என்று நன்னூலும் ஏற்றுக் கொள்கின்றது; மேலும் ‘ஆசிரியன் விரையான் வெகுளான், விரும்பி முக மலர்ந்து’ பாடஞ் சொல்ல வேண்டுமென்றும், ‘நிறை கோலைப்போல் நடுவு நிலைமையும், மலரைப்போல் முக மலர்ச்சியும்’ உடையவனாக இருக்க வேண்டும் என்றும் நன்னூல் கூறுகின்றது. இவற்றைக் காட்டிலும் என்ன பயிற்று முறை இன்னும் வேண்டிக் கிடக்கின்றது?

எனவே, இக்காலத்தில் ‘புதியவை’ என்னும் பெயரால் அறிமுகப் படுத்தப்படும் பயிற்று முறைகள் பலவற்றை, அக்காலத்து அன்பு ஆசான்களும் அறிந்திருந்தனர் - நடைமுறையில் கடைப்பிடித்தும் வந்தனர் - என்பது தெளிவு. எந்தக் காலத்திலும் சரி - ஆசான் கற்பிக்கும் உரை, அன்பை அடித்தளமாகக் கொண்டு அதன்மேல் எழுப்பப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.