உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னைமரத் தீவினிலே/இதயம் வெடித்தது

விக்கிமூலம் இலிருந்து

16
இதயம் வெடித்தது

விஜயனின் மனைவி வள்ளியம்மைக்கு நேர்ந்த கதியை கேள்விப்பட்டு, அவனது நண்பர்கள் பலரும் அன்றிரவே அவனைப் பார்க்க வீட்டிற்கு வந்து விட்டனர். யாருடைய ஆறுதலான வார்த்தைகளுக்கும் அடங்காமல் விஜயன் வள்ளியம்மையின் உடல் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தான்.

ஒவ்வொரு நிமிஷமும் அவனுடைய மனம் குமரேசனுடைய வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

குமரேசன் வந்து விட்டதாக விஜயனிடம் ஒரு நண்பன் கூறினான்.

அவன் உள்ளே நுழைந்ததுமே, "அண்ணே! நம்ம அருணகிரி உங்க பரமகுரு வீட்டிலேதான் இருக்கிறான்,” என்று கூறி பரமகுரு சொன்ன சொத்து விபரத்தையும் கூறினான். தனியாக விஜயனை அழைத்து, இது னுடைய பணம்! அவள் காரியத்தை ஆரம்பியுங்கள் என்று பரமகுரு பிடிவாதமாகக் கொடுத்து அனுப்பினார்,” என்றான் குமரேசன்.

“அருணகிரி பரமகுருவுடன் இருக்கிறான்.” என்பதற்கு மேல் எந்தச் செய்தியுமே கனக விஜயன் காதில் விழவில்லை.

சரியாக ஆறு மணிக்கு தன் தாயார், மனைவி, கல்யாணி அம்மாள், அருணகிரி ஆகியோருடன் பரமகுரு காரில் வந்து சேர்ந்தார்.

வள்ளியம்மை இறந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டதால் அதற்கு மேலும் கால தாமதமாகாமல் காரியத்தை நடத்திவிட வேண்டுமென்பது தெருவில் உள்ள பெரியவர்களின் கருத்து. அதன்படி வள்ளியம்மையின் இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து கொண்டிருந்தன.

உறங்குவது போல் நீண்டு படுத்திருந்த வள்ளியம்மையை அந்தக் கோலத்தில் கண்டதும், லட்சுமி அம்மாளுக்கும், பரமகுருவிற்கும் துக்கம் தாளவில்லை.

குமுறிக் குமுறி அழுதனர்.

அருணகிரி தாயின் மீது புரண்டு புரண்டு அழுதான். “நான் தான் அம்மா உன்னுடைய மரணத்திற்கே காரணம். நான் அவர்களோடு போக ஆசைப்பட்டது தவறு. உன்னை விட்டு நான் பிரிந்து போயிருக்கவே கூடாது. நீயாவது என்னைப் போக வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியிருந்தால் நான் உன் வார்த்தையை மீறி போயிருக்க மாட்டேன்!” என்று அவன் மனதில் பட்டதையெல்லாம் கூறி அழுதான்.

வள்ளியம்மையின் உடல் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது விஜயனின் ஏராளமான நண்பர்கள் அதில் கலந்து கொண்டனர் பரமகுரு அருணகிரியை அனைத்தபடி அழைத்துச் சென்றார். லட்சுமி அம்மாள், காந்திமதி கல்யாணி எல்லோரும் காரிலேயே தொடர்ந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் தங்கி விட்டனர்.

இடுகாட்டில் வள்ளியின் உடலுக்கு அருணகிரி தீ மூட்டுகிற வேளையில் தூரத்தில் ஒரு போலீஸ் ஜீப் வந்து கொண்டிருந்தது. வெளியே லட்சுமி அம்மாளின் கார் அருகே நின்று கொண்டிருந்த மாரியம்மாள் இதைப் பார்த்து விட்டாள்.

உடனே மாரியம்மாள் ஒரே ஒட்டமாக ஒடிச் சென்று விஜயனிடம் விஷயத்தைக் கூறிவிட்டுத் திரும்பினாள். விஜயன் இதை எதிர்பார்த்துத் தயாராய் வந்திருந்தான்.

அருணகிரி அழுது கொண்டே தீ மூட்டி விட்டு நிமிர்ந்தபோது-

விஜயன், தூரத்தில் போலீஸ் ஜீப் அருகே நிற்பதையும், அதிலிருந்து மூன்று பேர் துப்பாக்கிகளுடன் இறங்குவதையும் கண்டான். அவ்வளவு தான் அரசு விரோத காரியங்களில் ஈடுபட்டதற்காக விஜயனை கைது செய்தனர் போலீசார். அருணகிரியை பரமகுருவின் கையில் ஒப்படைத்தான் விஜயன்.

அழகிய கொழும்பு நகரம் சிலரது கோபத்தினால் அணு, அணுவாக பற்றி எரிந்து கொண்டிருந்தது.

புகழ் பெற்றிருந்த பழைய லங்கா தகனக் காட்சிகளை அப்பாவி இலங்கைத் தமிழர்கள் நிதர்சனமாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

பத்திரிகைகளைப் புரட்டவே பரமகுருவிற்கு பயமாக இருந்தது. வானொலியில் கேட்ட வடிகட்டிய செய்திகளே வயிற்றைக் கலக்கின. யாழ்ப்பாணத்தில் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே வைரம் மூண்டது. தமிழர்களின் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவைகள் கொளுத்தப்பட்டன.

பரமகுருவிற்கு தாம் பெரிய தவறு செய்து விட்டதாக உள் மனது உறுத்தியது. ஆரம்பத்தில் திட்டமிட்டபடி மாநாட்டிற்கு தான் மட்டும் தனியேப் புறப்பட்டு வந்திருந்தால் இந்த தொல்லைகள் எல்லாம் ஏற்பட்டிருக்காது.

அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வந்த இடத்தில் குடும்பத்தோடு வசமாக அகப்பட்டுக் கொண்டு விட்டோமே என்ற கவலைகள் அவரைப் பற்றிக் கொண்டன.

தங்கள் குடும்பத்தோடு இப்போது அருணகிரியைப் பற்றிய புதிய பொறுப்பும் சேர்ந்துள்ளது. இந்த வேளையில், அத்தனைபேரும் பத்திரமாக உயிரோடு ஊர் போய் சேர முடியுமா? என்பதே கேள்வியாக இருந்தது

சரியான பந்தோபஸ்துடன் புறப்படாவிட்டால், எந்தசமயத்திலும் அசம்பாவிதம் நிகழலாம். எதற்கும் யாரும் பொறுப்பாளிகள் அல்ல யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.

அப்போது மாமாவிடம் இருந்து போன் வந்தது.

‘பரமு! இரண்டு நாட்களாக உனக்கு டிரை பண்ணிக் கொண்டிருக்கிறேன். நம்முடைய லைனைத் துண்டித்திருப்பதாக இங்கே எக்ஸ்சேஞ்சில் உள்ள பெண் கூறினாள். அவளிடம் சொல்லிவைத்திருந்தேன் இப்போது லைன் கிடைத்திருப்பதாக அவள் சொன்னதும் உடனே உன்னை கூப்பிட்டேன். நீங்கள் அங்கே எப்படி இருக்கிறீர்கள்? நான் இங்கு இருந்தாலும் அங்கு நடக்கிற கலவரங்களைப் பற்றியெல்லாம் தெளிவாக அவ்வப்போது தெரிந்துக் கொண்டுதான் இருக்கிறேன். தைரியமாக இருங்கள். இம்மாதிரி கலவரங்களைப் பலமுறை நான் சந்தித்திருக்கிறேன் இம்முறை சற்று பயங்கர வடிவில் பெரிதாக உருவெடுத்துள்ளது. அதுதான் சற்று கவலையாக இருக்கிறது.

எனது கம்பெனியிலிருந்தோ, மில்லிருந்தோ உனக்கு தகவல் ஏதாவது கிடைத்ததா? என்னுடைய மாத்தளை பாக்டரி மனோஜருக்கு போன் பண்ணியிருக்கிறேன். அவர் பெயர் குணரத்னா. அவர் உங்களை இன்று அல்லது நாளை வந்து சந்திப்பார். அவர் உதவியுடன் துறைமுகப் பகுதியிலுள்ள நமது ஒட்டல் எலிசபெத்திற்கு எல்லோரும் போய் விடுங்கள். அது மிகவும் பாதுகாப்பான இடம்.

"நிற்க, ஒரு துயரமான செய்தி பரமு! உனக்கு நான் போன் செய்த மறுநாளே ஞானாம்பாள் இறந்து விட்டாள். இறக்கும்போது நான் அவள் அருகில் இருந்தேன். சாவதற்கு முன் நான் செய்த ஒரு நல்ல காரியம் வள்ளியம்மைக்கு உயில் எழுதி வைத்தது ஒன்றுதான் அண்ணா. அவளையும், பேரனையும் நான் பார்க்கக் கொடுத்து வைக்காத பாவியாகி விட்டேன் என்று கூறிக்கொண்டே இருந்து உயிரை விட்டாள்.

"நான் உடனே புறப்பட முடியாமற் போனதற்கு இது ஒரு காரணம். இனி ஞானாம்பாள் நம்பருக்கு என்னை கூப்பிட வேண்டாம். தேவையானால் என் ஓட்டலுக்கு போன் பண்ணு. நான் எப்படியும் புதன் கிழமை அங்கு வந்துவிடுவேன்.

வந்ததும், உங்களை அனுப்பி வைக்கிறேன். வேறு. என்ன விசேஷம்?” என்று எதிர் முனையில் காத்திருந்தார்.

பரமகுரு சுருக்கமாக வள்ளி இறந்தது பற்றி கூறினார்.

அன்று மாலை ஆறு மணிக்கு மாமா சொன்ன குணரத்னா வந்தார். பரமகுரு அவரைப் பார்த்ததில்லை, ஆதலால் கல்யாணிதான் பேசி என்ன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

எல்லாருக்கும் வேண்டிய துணிமணிகளையும் அவசியமான சாமான்களையும் மட்டும் கல்யாணி எடுத்துக் கொண்டாள். முக்கியமான அறைகளை எல்லாம் பூட்டிக்கொண்டு வேலைக்காரர்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு, எல்லாரும் ஒரே காரில் ஓட்டலுக்கு கிளம்பினர்.

ஒட்டல் எலிசபெத்திற்குள் நுழையும்போதே அதன் அதிபர் தேவநாயகா. குணரத்னாவையும், மற்றவர்களையும் அன்புடன் வரவேற்றார். பொன்னம்பலம் போன் பண்ணியதாக பெருமையுடன் கூறியபடி அவர்கள் தங்குவதற்கு வசதியான அறைக்கு ஏற்பாடு செய்தார்.

குணரத்னா பரமகுருவிடமும், மிஸஸ் பொன்னம்பலத்திடமும் விடைபெற்றுச் சென்றார். போகும்போது தனது பாக்டரியின் போன் நம்பரையும், பொன்னம்பலத்தின் மற்ற இரண்டு நிறுவனங்களின் விலாசத்தையும் கொடுத்தார். “தங்களுக்கு எந்த சமயத்தில் உதவி தேவையானாலும், இந்த இடங்களிலிருந்து என்னைப்போல் யாரும் வந்து உதவுவார்கள்,” என்று கூறி எல்லாரிடமும் விடைபெற்றுச் சென்றார்.