தென்னைமரத் தீவினிலே/தாயில்லாப் பிள்ளை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
தாயில்லாப் பிள்ளை

வந்தவனுக்கு கிட்டத்தட்ட விஜயனின் வயது இருக்கும். தோற்றத்தில் அவன் மிகவும் சோர்ந்து போய் வந்திருப்பது தெரிந்தது.

"என்ன விஷயம்? யாரைப் பார்க்கவேண்டும்?" என்று கேட்டார் பரமகுரு.

"கனக விஜயன் உங்களிடம் ஒரு முக்கியமான விசயம் சொல்லிவிட்டு வரும்படி அவசரமாக அனுப்பினார்.

நான் அவரது நண்பன். அவருக்குப் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன், பெயர் குமரேசன்!" என்று தன்னைப்பற்றிய குறிப்பைத் தெளிவாக விளக்கினான்.

"உள்ளே வாருங்கள்.” என்று பரமகுரு அவனை அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைத்தார்.

“விஜயன் என்ன சொல்லி அனுப்பினார்?" என்று பரமகுரு கேட்டார்.

அவருடைய அந்த கேள்விக்கு குமரேசனுடைய வாயிலிருத்து எந்தவிதமான பதிலும் உடனடியாக வரவில்லை . சிறிது நேரம் மவுனமாக தலை குனிந்து கொண்டிருந்தவன் சட்டென்று வெடித்தாற்போல் குலுங்கி அழுதான். கனக விஜயனுடைய பெயரைச் சொல்லி வந்தவனுடைய இந்த திடீர் அழுகை பரமகுருவை மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாக்கியது.

“என்ன விஷயம் குமரேசா? ஏன் அழுகிறாய்! விஜயனுக்கோ, வள்ளியம்மைக்கோ ஏதாவது உடம்பு சரியில்லையா?” கவலையுடன் விசாரித்தார் பரமகுரு.

“எப்படிச் சொல்வது என்று தான் ஐயா புரியவில்லை; விஜயன் அண்ணனுடைய குடும்பத்திற்கு கடவுள் பயங்கர கொடுமை இழைத்து விட்டான்!” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே துக்கம் தாளாமல் தடுமாறினான்.

பிறகு அவனே தன்னைத் தேற்றிக் கொண்டு வள்ளி இறந்த கதையை பரமகுருவிடம் கூறினான்

முருகா, முருகா என்று இடிந்து போனாற் போல் கத்தினார் பரமகுரு. அவரது குரலைக் கேட்டு லட்சுமி அம்மாளும், கல்யாணியும் தூக்கம் கலைந்து எழுந்து வந்தார்கள்.

குமரேசன் தொடர்ந்து கூறினான் வள்ளியம்மைக்குத்தான் இந்த கதி என்றால் அவளுடன் சென்ற அருணகிரியைப் பற்றி இதுவரை ஒரு தகவலும் தெரியவில்லை. அவனையும் பாவிகள் கொன்று கொளுத்திப் போட்டிருப்பார்களோ! என்று தெரியவில்லை. ஒரே சமயத்தில் மனைவியையும் மகனையும் இழந்து விட்டேன்; இனி நான் யாருக்காக உயிர் வாழ வேண்டும்” என்று கத்திக் கதறி விஜயன் தற்கொலைக்கே துணிந்துவிட்டார்.

“அவரை எங்களால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. எங்கள் கவலையெல்லாம் அருணகிரியை யாராவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான்” என்று குமரேசன் கூறிக் கொண்டிருக்கும்போதே பரமகுரு இடைமறித்துக் கூறினார். “அருணகிரி எங்களுடன்தான் இருக்கிறான். விமான நிலையத்தில், வள்ளியும், அருணகிரியும் எங்களைப் பார்த்துப் போக வந்தார்கள். வள்ளி அருணகிரியுடன் திரும்பிப் போகப் புறப்பட்ட போது என் மகன் பாபு, அருணகிரி தன்னுடன் தங்க வேண்டும், ஊர் எல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டான், அதேபோல் அருணகிரியும் விரும்பினான். வள்ளிதான் புருஷன் கோபிப்பான் என்று தயங்கினாள். நான்தான் அவளைச் சமாதானம் செய்து அனுப்பினேன்.

புறப்படும்போது, பையில் ஆரஞ்சுப் பழமும், ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்தேன். வாங்கிக் கொள்ள ரொம்ப மறுத்தாள். ரொம்பவும் பிடிவாதமாக அவள் கையில் திணித்து அனுப்பினேன். என்ன செய்வது, எங்களைப் பார்க்க வந்ததற்காக இந்தத் தண்டனையா அவளுக்கு கடவுளே!” என்று கதறினார்.

அனைத்தையும் கனவு போல் கேட்டுக் கொண்டிருந்த லட்சுமி அம்மாளுக்கு, “சற்று முன் படுக்கப் போகும் போது, இனி இந்தப் பெண்ணிற்கு எல்லாம் விடிஞ்சு போச்சு என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே படுத்தேனே, வள்ளி உனக்கு விடிவு இந்த உருவிலா வர வேண்டும்? அதிர்ஷ்டமே இல்லாமல் நீ என்ன வரம் தான் வாங்கிக் கொண்டு வந்தாயோ,” என்று புலம்பினாள்.

இந்த ஐநூறு ரூபாயை விஜயனிடம் கொடு. இது வள்ளியினுடைய பணம்தான். காலையில் அவளது காரியங்களுக்கு அவளது பணமே உதவட்டும். காலையில் நாங்கள் சீக்கிரமாகவே வந்துவிடுவோம் என்றார் பரமகுரு.

“சரி ஐயா! நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்,” என்று புறப்படத்தயாரான குமரேசனை மாமாவின் காரிலேயே ஏற்றி விஜயன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பரமகுரு.

குமரேசனை அனுப்பிவிட்டு அன்று முழுவதும் லட்சுமி அம்மாளும், பரமகுருவும் “இனிமேல் என்ன செய்வது?” என்று யோசித்துக் கொண்டே இருந்தனர்.

“அம்மா, இந்த விசயத்தை மாமா மூலம் பெரியம்மாவுக்குச் சொல்லலாமா? சொன்னால் கேட்ட உடனேயே இருக்கிற குறை உயிரும் போய் விடும்! என்ன செய்வது என்று புரியவில்லை,” என்றார் பரமகுரு.

உடனே லட்சுமி அம்மாள், ஞானாம்பாளைப் பொருத்தவரை வள்ளி என்றோ இறந்து விட்டாள். என்னமோ கடைசி காலத்தில் கண்திறக்கிற போது இந்தப் பெண் கதி இப்படி ஆகி விட்டது. இதைப் போய் சொல்லி என்ன செய்ய? எதற்கும் உன் மாமாவை கேட்டு செய்யலாம் என்றாள்,”

“சரி,” என்றார் பரமகுரு.

உடனே கல்யாணி காந்திமதியிடம் மட்டும் விஷயத்தை இப்பொழுதே சொல்லிவிடு. இந்த அருணகிரியைத்தான் என்ன செய்வது என்று புரியவில்லை! எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறானோ? எதற்கும் தூங்குகிறவனைப் எழுப்பிச் சொல்ல வேண்டாம். காலையில் புறப்படுகிற போது சொல்லிக் கொள்ளலாம்” என்றாள் கல்யாணி.

பரமகுருவிற்கும் அதுவே சரியாகப்பட்டது மனைவியை எழுப்பி செய்தியைச் சொல்ல அவர் மாடியை நோக்கி விரைந்தார்.