தென்னைமரத் தீவினிலே/உயிர் காத்த உத்தமன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
14
உயிர்காத்த உத்தமன்

ந்த மகிழ்ச்சியான விஷயத்தை முதலில் யாரிடம் சொல்லுவது? அம்மாவிடமா? கல்யாணியிடமா? ஆனால், நிச்சயமாக வள்ளியம்மையிடம் இந்த இனிப்பான செய்தியைச் சொல்லுகிற முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.

“மாமா! சாப்பிடக் கூப்பிடறாங்க!” என்று அருணகிரியின் குரலைக் கேட்டுத் திரும்பினார் பரமகுரு. அவனுடைய குரலில் பணிவோடு அன்பும் கலந்திருப்பதை அவர் ஒரு போதும் கவனிக்கத் தவறியது இல்லை.

அருணகிரியைத் தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்ட பரமகுரு, “நீ சாப்பிட்டாயா?” என்று கேட்டார்.

“இல்லை! உங்களுக்காகத்தான்” எல்லோரும் காத்திருக்கிறார்கள்!” என்றான்

சற்றுமுன் சமையற்காரரிடம் கூறியது நினைவிற்கு வந்தது. உண்மையிலேயே அவர் வெளியே சாப்பிட்டு விட்டாலும், என்னமோ அருணகிரியோடு சேர்ந்து மறுபடியும் சாப்பிட வேண்டும் போல் ஆசை எழுந்தது.

அருணகிரியோடு போனார். எல்லோரும் ஒன்றாய் சாப்பாட்டு மேஜையில் இருக்கும்போது பரமகுரு ஒரு தடவை எண்ணினார்; போன் விஷயத்தைச் சொல்லி விடலாமா என்று.

“ஏண்டா பரமு, சாப்பிடாமல் அப்படி உட்கார்ந்திருக்கிறாய்? பசி இல்லையா?” லட்சுமி அம்மாள் கவலையோடு கேட்டாள் அதன் பிறகு பெயருக்கு சாப்பிட்டுக் கொண்டே பரமகுரு, கல்யாணியைப் பார்த்து, “ஏன் மாமி எல்லா இடங்களையும் நன்றாகச் சுற்றிப் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.

உடனே கல்யாணி, “ஏண்டா பரமு, உன் பொண்டாட்டியைக் கேட்பதற்கு பதில், இப்படிச் சுற்றி வளைத்து என்னைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறாயா?” என்று கேட்டபோது எல்லோரும் சேர்ந்து சிரித்தார்கள்

அப்போது தங்கமணி குறுக்கிட்டு, “மாமா! இன்னிக்கு நான் செத்துப் போயிடத் தெரிஞ்சேன்! அருணகிரி இல்லேன்னா என்னை நீங்க இப்போ உயிரோட பார்த்திருக்கவே முடியாது!” என்று இன்னும் தன்னுள் இருக்கும் பயத்திலிருந்து விடுபடாதவளைப் போல் படபடப்பாகக் கூறினாள்.

இதைக் கேட்ட பரமகுரு திடுக்கிட்டார். “என்ன நடந்தது?” என்று எல்லோருக்கும் பொதுவாகக் கேட்டார்.

கல்யாணி நடந்த விஷயம் எல்லாவற்றையும் விவரமாக சொன்னாள்.

“அருணகிரி தன் உயிரையும் மதிக்காமல் குளத்திலே குதித்து தங்கமணியை காப்பாற்றினான்,” என்றாள்

பரமகுரு எண்ணிக் கொண்டார் ‘எத்தனை பெரிய விஷயம் நடந்திருக்கிறது; இதைப்பற்றி பெரிதாகச் சொல்லவேண்டுமென்று மாமிக்கு தோணவில்லை. அம்மா கூடச்சொல்லவில்லையே!’ என்று நினைத்துக் கொண்டார்.

தங்கமணி சொன்ன பிறகுதானே அருணகிரியைப் பற்றி மாமி சொன்னாள். இந்த அலட்சியம் ஏன்? வள்ளியம்மை மகன் ஏழை அருணகிரிதானே என்கிற நினைப்பா!

அருணகிரியின் வீரச்செயல் ஒரு மனிதாபிமான அடிப்படையில் எழுந்ததுதான். என்றாலும் அதனால் பயன் பெற்றவர்களுக்கு அவனை பலர் முன்னிலையில் பாராட்டக் கூட மனம் வரவில்லை.

ஓ! இதுவே நாளையானால்? அருணகிரியின் மதிப்பு ஐம்பது லட்சத்திற்கு மேல் என்று அறிந்தவுடன், பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துக் கூட தங்கள் அன்பையும், நன்றியையும் இவர்கள் வெளிப்படுத்துவார்கள்.

பரமகுருவிற்கு அதற்குமேல் எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை. “அருணகிரி! என்னோடு வா!” என்று அழைத்தபடி கை கழுவ எழுந்து, சென்று விட்டார்.

“மாமிக்கு ‘ஒரு குட் நியூஸ்’ சொல்லிவிடப் போகிறேன்!” என்று பேச்சைத் துவக்கினார் பரமகுரு!

“என்ன” என்கிற பாவனையில கல்யாணி தலைநிமிர்ந்தபோது, “கையைக் கொடுங்கள்,” என்று பரமகுரு மாமியின் கையைக் குலுக்கினார்

“மாமா சிங்கப்பூர் பிசினசை ரொம்ப லாபத்துக்கு முடித்து விட்டார்!”

“அப்படியா? போன் பண்ணினாரா?” என்றாள் கல்யாணி மகிழ்ச்சி பொங்க.

“ஆமாம்!”

“எப்போ? மத்தியானமே பண்ணிவிட்டாரா?”

“இல்லை! நீங்கள் எல்லாம் வந்த பிறகுதான். சிங்கப்பூரில் ஞானம் பெரியம்மாவுக்கு உடம்பு. ரொம்ப மோசமாக இருக்கிறதாம்,” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே பாபு, ராதா, தங்கமணி எல்லோரும் சேர்ந்து வந்து, “அப்பா எங்களுத் தூக்கம் வருகிறது நாங்கள் மாடிக்கு படுக்க போகிறோம்!” என்று கூறியபடி, வா அருணகிரி போகலாம்!” என்றான் பாபு.

“பாபு நீங்கள் எல்லாம் முதலில் போய் படுத்துக் கொள்ளுங்கள்; அருணகிரி பின்னால் வருவான்,” என்று அவர்களை அனுப்பிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்:

எல்லாரையும் பார்த்தபடி, அருணகிரிக்கும் புரியும் வண்ணம் சிங்கப்பூரில் பெரியம்மாவை மாமா சந்தித்ததிலிருந்து, வள்ளியம்மை மேலும், அருணகிரி பேரிலும் உயில் எழுதி வைத்திருக்கிற அத்தனை விஷயத்தையும் விளக்கமாகக் கூறி முடித்தார்.

இதைக் கேட்டதும், “உண்மையாகவா ஞானம் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறாள்?” என்று லட்சுமி அம்மாள் தன்னை மீறிய ஆச்சரியத்துடன் கேட்டாள்.

எல்லாருடைய கண்களும் அருணகிரியை மேயத் துவங்கின.

“பொன்னம்பலம் வீட்டிற்கு வந்ததும் இப்படி ஒரு அதிர்ஷ்டம் வரணும்னு கடவுள் உன் தலையில் எழுதியிருக்கிறார் போலிருக்கு அருணகிரி,” என்று லட்சுமி அம்மாள் அவனை இழுத்து அனைத்துக் கொண்டாள்.

“எப்படியோ வள்ளி இத்தனை காலம் பட்ட துன்பங்களுக்குக் கடவுள் இப்போதாவது கண்ணைத்திறந்து பார்த்து, ஒரு விடிவு காலம் ஏற்பட்டதே!” என்றாள்.

அருணகிரி எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு படுக்கச் சென்று விட்டான்.

இரவு சரியாக மணி 11 இருக்கும், அரைத் தூக்கத்திலிருந்த பரமகுருவின் காதில் காலிங் பெல் மணி ஒலித்தது.

விளக்கைப் போட்டுக் கொண்டு கதவைத் திறந்தபோது, எதிரே கூர்க்கா நின்று கொண்டிருந் தான். பரமகுருவைப் பார்க்க வேண்டுமென்று யாரோ வந்திருப்பதாகச் சொன்னான், உள்ளே அனுப்புமாறு கூறிவிட்டு பரமகுரு காத்திருந்தார்.