உள்ளடக்கத்துக்குச் செல்

பிள்ளையார் சிரித்தார்/சிதம்பர ரகசியம்

விக்கிமூலம் இலிருந்து

3.

சிதம்பர ரகசியம்


'சாந்தி நிவாஸம்' தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. தலைத் தீபாவளிக்கு வரவேண்டிய மாப்பிள்ளைகளுக்காகவும் தலைத்தீபாவளிக்குச் செல்ல வேண்டிய பிள்ளைகளுக்காகவும் வீட்டில் காரியங்கள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தன.

அதையும் தவிர சாந்தி நிவாஸம் எப்போதுமே கலகலப்பாகத்தான் இருக்கும். பெயருக்கு ஏற்றபடி இருக்காது. காரணம்: அந்தப் பங்களாவில் நிரந்தர உறுப்பினர்களாக (கைக்குழந்தைகளைத் தவிர) சுமார் இருபத்தெட்டுப் பேர்களுக்கு மேல் இருப்பார்கள்.

ராவ்பகதுர் புருஷோத்தமனும் ஸ்ரீமதி புருஷோத்தமனுந்தான் சாந்தி நிவாஸின் அதிபதிகள். அதன் பிறகுதான் அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் பெண்களும் பிள்ளைகளும்; மாப்பிள்ளை, மருமக்களும், பேரன் பேத்திகளும் கொள்ளு வகையருக்களுமாகப் பெருகி, ஆலமரமாக வளர்ந்து, சாந்தி நிவாஸம் முழுவதும் வியாபித்து, உற்றாரும் சுற்றத்தாருமாக, வெளியூர்களிலும் வேர்விட்டிருந்தார்கள்.

சுமார் அறுபத்து மூன்றாவது வயதை எட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஆஜானுபாகுவான புருஷோத்தமன், சாய்வு நாற்காலியில் சாய்ந்தவண்ணம் எதிர்த்தாற்போல் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் 'சன்ன' தையே பார்த்துக்கொண்டிருந்தார். அது, ஸ்ரீமான் புருஷோத்தமனின் ராஜவிசுவாசத்தை மெச்சிப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அளித்த விருது. அதன் பிறகு அவருக்கு, ‘சர்’ பட்டமும் கிடைத்தது. அவரைப் போலவே, லேடி புருஷோத்தமனும் மிக்க இளகிய மனம் படைத்தவர். அன்புச் சங்கிலியால், குடும்பத்தின் உறவைப் பிணைத்துக் காப்பாற்றி வருபவர்.

அவர் பெரிய உத்தியோகங்களுக்கெல்லாம் மத்தியில் முதலாவது உலக மகாயுத்தத்திலும் பங்கு கொண்டு பணியாற்றினார். பிறகு, நாட்டில் சுதந்தர தாகம் பெருக்கெடுத்தோடிய காலத்தில் பட்டம் பதவிகளையெல்லாம் துறந்துவிட்டு நேதாஜியின் இந்திய தேசீய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென்று சிங்கப்பூருக்குப் புறப்பட்டார். ஆனால், அப்போது லேடி புருஷோத்தமன் தான் பெருகிநிற்கும் குடும்பப் பட்டாளத்தைக் காட்டிப் பயமுறுத்தி, கெஞ்சிக் கூத்தாடித் தடுத்து நிறுத்திவிட்டாள்.

இதில் புருஷோத்தமனுக்குப் பெரும் குறை.

'அந்தப் பெரும் குறையைத் தீர்க்கத் தம் குடும்பத்திலிருந்து யாராவது தேச சேவைக்குத் தயாராயிருப்பார்களா, அல்லது உருவாவார்களா? என்பதே அவரது அடங்காக ஆவலாக இருந்தது. அந்த மாதிரி, தம் பரம்பரையில் ஒரு வீரனை உருவாக்கும் வாய்ப்பைத்தான் அவர் நெஞ்சம் சதா தேடி வந்தது.

திடீரென்று, பெருகிக்கொண்டே போன பேரிரைச்சலைக் கேட்டு எழுந்து, கூடத்துப் பக்கம் போனர் புருஷோத்தமன்.

அங்கே—

ஒரே குழந்தைகளின் களேபரம். பெரிதாக ரேடியோவைத் திருப்பி வைத்துவிட்டு, குடும்புத்தின் பால கோஷ்டிகள் அனைவரும் அதைச் சூழ்ந்து உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், சிதம்பரம் அந்தக் கோஷ்டியில் கலக்காமல், ஏதோ சோகமாக ரேடியோவின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தான்.

அதே சமயத்தில் அடுக்களையிலிருந்து ஸ்ரீமதி புருஷோத்தமன், "குழந்தைகளே, ரேடியோவை நிறுத்தி விட்டு எல்லோரும் சாப்பிட வாருங்கள்’’ என்று குரல் கொடுத்தாள்.

மறுநிமிஷம் அத்தனை சிறுவர்களும் அடுக்களையை நோக்கி ஓடினர்கள். சிதம்பரம் மட்டும் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருப்பதைப் புருஷோத்தமன் கவனித்தார். சிதம்பரம், அவரது மூன்றாவது பெண்ணின், நான்காவது பையன். அவனைக் கண்டதும் அவருக்குத் 'திக் 'கென்றது!

அவனது முகமெல்லாம் வீங்கி, கண்ணெல்லாம் சிவந்து நன்றாக அழுது ஒய்ந்தவன் போலிருந்தான். இதைக் கண்ட புருஷோத்தமனின் மனத்திற்கு மிகுந்த துக்கம் ஏற்பட்டது. என்றாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர் குழந்தைகளைக் கூப்பிட்டு, அவர்களுடைய அழுகைக்கோ கோபத்திற்கோ காரணங்களை விசாரிப்பதில்லை. ஏனென்றால், அது சுற்றிச் சுற்றி அவரது குடும்பத்தையேதான் பாதிக்கும்.

ஆனால், சிதம்பரத்தைக் கண்டதும் அவரால் அப்படித் தாண்டிப் போக முடியவில்லை. மிகவும் நல்ல பையன். புருஷோத்தமன் அவன் அருகில் சென்று, "பாட்டி சாப்பிடக் கூப்பிடுகிறாளே, போகவில்லையா சிதம்பரம்?" என்று அன்புடன் கேட்டார்.

சிதம்பரம் ஏதோ யோசனையிலிருந்து, "அதிருக்கட்டும் தாத்தா, எனக்குத் தீபாவளி டிரஸ்ஸெல்லாம் எப்போது வாங்கித் தரப்போகிறீர்கள்?" என்றான்.

இதைக் கேட்டதும், அசடு, இதற்காகவா இப்படிச் சாப்பிடப் போகாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்' என்று மனத்திற்குள் எண்ணிக்கொண்ட வண்ணம், "சிதம்பரம், உனக்கு மட்டும் என்ன; நாளைக்கு விட்டில் எல்லோருக்குமே துணிமணிகள் வந்துவிடும் — ராதாகிருஷ்ணன் போகப் போகிறான்" என்றார்.

"உங்களை ஒன்று கேட்பேன்; ஒப்புக்கொள்வீர்களா?" என்றான்.

அவர் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந் தார்.

"எனக்கு வேண்டிய டிரஸை நானே நேரில் போய் என் இஷ்டம்போல் வாங்கிக்கொள்கிறேன். அந்த ருபாயை என் கையில் கொடுப்பீர்களா?" என்று கேட் டான் சிதம்பரம்.

புருஷோத்தமன் ஒரு சிரிப்புச் சிரித்து, "அசடு, இதற்காகவா இத்தனை கோபம், இத்தனை பீடிகை? யார் வாங்கினல் என்ன? என்ன வேண்டுமோ, என்னைக் கேள், நான் தருகிறேன்! போய் வாங்கிக்கொள்! இப்போது சாப்பிட வா" என்று அழைத்தார். சிதம்பரமும் நிறைந்த மனத்துடன் பின் தொடர்ந்தான்.

மறுநாளே புருஷோத்தமன் சிதம்பரத்தின் டிரஸ்ஸுக்காக ஒதுக்கியிருந்த ஐம்பது ரூபாயை அவனிடம் கொடுத்துவிட்டார். அவர் சொன்னபடி, சிதம்பரம் நீங்கலாக, அத்தனை சிறுவர்களுக்கான துணிமணிகளையும் பெரியவர்களுக்கான ஜவுளியையும் வாங்கிக்கொண்டு ராதாகிருஷ்ணன் வந்து சேர்ந்தான். ரூபாயை வாங்கிக் கொண்டுபோன சிதம்பரம் மட்டும், டிரஸ் வாங்கி வராத தோடு அடுத்தநாள் தன் தாத்தாவிடம் வந்து, "இன்னும் ஒரு நூறு ரூபாய் கடனாகத் தருகிறீர்களா? அடுத்த வருஷம்வரை எனக்கு நீங்கள் பாக்கெட் மணியே தர வேண்டாம்-கழித்துவிடுகிறேன்."

புருஷோத்தமன் மனத்திற்குள்ளேயே சிரித்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தார்.

சிதம்பரம் பொறுப்புள்ள பையன்தான்; அவனிடம் மற்றவரை விட ஏதோ ஒருவிதக் கவர்ச்சி அவருக்கு உண்டு. என்றாலும் அவ்வளவு அதிகமான தொகையை அவனிடம் கொடுக்கலாமா? மேலும் இவனுக்கு மட்டும் நூற்றைம்பது ரூபாய்க்கு ஜவுளி வாங்கினால் மற்றக் குழந்தைகள் நேரடித் தாக்குதல்களிலேயே இறங்கிவிட்டால் என்ன செய்வது? சட்டென்று அவருக்கு ஏதோ தோன்றியது. அவன் கேட்ட தொகையைக் கையில் கொடுத்துவிட்டார்.

ன்றுதான் தீபாவளி. எல்லோரும் கங்காஸ்நானம் செய்தாகிவிட்டது. எல்லோரும் புத்தாடை உடுத்திக்கொண்டும் விட்டனர்.

பலகாரம் சாப்பிடும்போதுதான் சிதம்பரத்தின் உடையைப் புருஷோத்தமன் பார்த்தார்; அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. பட்டும் சில்க்கும். டெரிலி னும் ஷார்க் ஸ்கின்னுமாகப் பளபளக்கும் கும்பலுக்கு மத்தியில் கைத்தறிச் சட்டையும் நிஜாருமாக ஒரு மூலையில் சிதம்பரம் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

புருஷோத்தமனுக்கு அதற்கு மேல் வாயும் கையும் ஓடவில்லை. நூற்றைம்பது ரூபாயை வாங்கிக்கொண்டு போய் என்ன செய்தான்?

எல்லோரும் சாப்பிட்டானதும், சிதம்பரத்தைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் ரகசியமாகக் கேட்கவேண்டும் என்று அவர் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, கை அலம்பினதும் அவன் பாட்டியையும் அழைத்துக்கொண்டு பூஜை அறைக்குள் போனான் சிதம்பரம். என்னவோ ஏதோ என்று, குழந்தைகள் படையும் பெரியவர்கள் கோஷ்டியும் கும்பலாகக் கூடவே பூஜையறையில் வந்து சேர்ந்தன.

சுவாமி படத்திற்கு முன்னால் ஒரு பெரிய பொட்டலம் இருந்தது. சிதம்பரம் அதைப் பிரித்தான்.

மறுகணம் புருஷோத்தமன், அப்படியே அசந்து நின்றுவிட்டார். அத்தனையும் கம்பளித்துணிமணிகள்: தலைக்கும் கழுத்துக்கும் உடம்புக்கும். காலுக்கும் அணிந்து கொள்ளக்கூடிய துணிமணிகள். அததனையும் ராணுவ வீரர்களுக்காக!

புருஷோத்தமனின் உடம்பெல்லாம் மயிர்க்கூச் செறிந்தது. அப்படியே சிதம்பரத்தை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டு முத்தமாரி பொழிந்தார். குடும்பத்தில் வீரன் கிடைத்துவிட்டான்!

ரேடியோவில் எல்லோரும்தான் செய்தி கேட்டார்கள். அதில் சிதம்பரத்தின் செவியில் விழுந்த செய்தி எவ்வளவு வேகத்தோடு எழுந்து, செயல்பட்டு அதன் உரிய பயனை அடைந்துவிட்டது. அந்நிய ஆக்கிரமிப்பை முறியடிக்க, கடும் குளிரிலும், பனியிலும் அல்லல்பட்டு நமக்காக - நம்முடைய தாய் நாட்டிற்காகப் போராடும் ராணுவ வீரர்களின் தியாக வாழ்வு ஒர் இளம் உள்ளத்தை எப்படித் தொட்டு உலுக்கிவிட்டது!

இவன் அல்லவோ வீரன்! தேச பக்தியை உணர்ந்து கொள்ளத் தெரிந்த இவன் அல்லவோ வருங்கால மகா புருஷன்!

போலியாகப் பட்டாசும், மத்தாப்பும் தனக்கென்று வாங்கிக் கொளுத்தி மகிழவேண்டிய வயதில் பயங்கரமான உண்மையான - பீரங்கிகளின் வீரமுழக்கத்துக்கும், எந்த நிமிஷமும் சாவைத் தழுவ வேண்டிய குண்டு வீச்சுகளுக்கும் மத்தியில் உயிரையும் மதியாது போராடும் அந்த வீரர்களை எண்ணி - அவர்களுக்காகவும் - அவர்களுடைய தியாகத்திற்காகவும் வீரத்திற்காகவும் எண்ணிக் கண்ணிர் வடிக்கத் தன் பரம்பரையில் ஒரு வீரன் பிறந்து விட்டான் என்பதை எண்ணிப் பார்க்கையில் புருஷோத்தமனது மனம் பெருமையால் பூரித்தது.

சூழ்ந்திருந்த அமைதியைச் சிதம்பரம்தான் கலைத்தான்.

"ஏன் பாட்டி, அப்படியே நின்னுட்டீங்க? எல்லாத் துணியிலேயும் உங்க கையினலே மஞ்சளும் குங்குமமும் தடவிக் கொடுங்க. இதைப் போட்டுக்கிற ஒவ்வொரு சிப்பாயும் உங்களுடைய ஆசியினாலே நம் எதிரியைப் போரிலே வென்று முரியடிச்சு, நாட்டைக் காப்பாற்றச் சிரஞ்சீவிகளாகப் பணியாற்றட்டும்" என்று கூறிய வண்ணம் துணிகளை எடுத்துப் பாட்டியிடம் கொடுக்கும் போதே அதன் மத்தியிலிருந்து ஒரு பில் விழுந்தது.

அதைப் பிரித்துப் பார்த்த புருஷோத்தமன் அந்த ஆடைகளுக்கான ரூபாய் 350 என்பதைப் புரிந்துகொண் டார். உடனே அவர், "உன்னிடம் ஏது சிதம்பரம் இவ்வளவு பணம்? நான் 150 ரூபாய்தானே கொடுத்தேன்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

சிதம்பரம் சிரித்துக்கொண்டே, "பாக்கி எல்லாம், இதோ, இங்கே நிக்கறாங்களே இவங்ககிட்டே நான் தீபாவளி இனாமாக கேட்டு வாங்கிக்கொண்டது" என்றான். அங்கிருந்த அண்ணா, அத்திம்பேர், அக்கா ஆகிய எல்லோருடைய முகத்திலும், ஒரு மகிழ்ச்சியும் உள்ளத்தில், தாங்களும் - சிதம்ப்ரத்திற்கு இனாம் கொடுத்தன் மூலம் ஒரு பெரிய தியாக வேள்வியில் உதவிய நிறைவும், சுடர் விட்டன.

அப்போது ஸ்ரீமதி புருஷோத்தமன் சிதம்பரத்தைப் பார்த்து, "ஏண்டா, நீ என்னிடம் மட்டும் வந்து இனாம் கேட்கவில்லை? உனக்கு இந்தப் பாட்டியைப் பார்த்தால் அவ்வளவு இளப்பாகப் போய்விட்டதா?" என்று கேட்டுக்கொண்டே, சட்டென்று தன் கழுத்தில் இருந்த கனமான் பழமையான் ஒரு தங்கச் சங்கிலியைக் கழற்றி அந்த மூட்டையில் வைத்துக் கட்டினாள். ஸ்ரீமான் புருஷோத்தமனும் தம் வீரத்தை மெச்சி வெள்ளைக்காரன் அளித்திருந்த இரண்டு பெரிய தங்க மெடல்களையும் அலமாரியிலிருந்து எடுத்து வந்து போட்டார்.