பிள்ளையார் சிரித்தார்/ஓடிப்போன ராஜா

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பிள்ளையார் சிரித்தார்-சிறுகதைகள்.pdf
2
ஓடிப்போன ராஜா

பள்ளிக்கூடத்தின் ஆரம்ப மணியடித்துங் கூடப் பைத்தியம் பிடித்தவனைப் போல், சுவரில் ஒட்டியிருந்த விளம்பரத்தையே வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜா. குறைந்தபட்சம் ஒரு ரூபாய்க்கு அந்தக் கம்பெனியார் அளிக்கும் ஒரு லட்சம் ரூபாய்ப் பரிசை எண்ணிக்கூட அவன் மனம் வியக்கவில்லை. அதைவிடப் போட்டியில் கடைசிப் பரிசை அடைபவருக்குக்கூட, 'கைலாசம் காம்படிஷன்ஸ்' கம்பெனியார் இனமாக அளிக்கப்போகும் விலை உயர்ந்த பேனாவை நினைக்கும் போதுதான் ராஜாவின் பிஞ்சு உள்ளத்தில் ஆசைத்தீ கொழுந்துவிட்டெரிந்தது.

வறுமையால் வாடும் ஏழைக் குமாஸ்தாவிற்கு மகனாய்ப் பிறந்த அவனால் பெயரளவில்தான் ராஜாவாக இருக்க முடிந்ததே தவிர, அவன் வாழ்வைச் சுற்றிலும் ஏழைமைதான் இரும்புவேலி இட்டு ஆட்சி செய்து கொண்டிருந்தது. ஆடம்பரத்தின் அடிச்சுவட்டைக்கூட அவன் அறிந்தவனல்ல.

தகப்பனார் சம்பாதித்துக் கொண்டுவரும் நாற்பது ருபாயில், அன்றாடம் செத்துப் பிழைக்கும் அவனது அருமைத் தாய் ஒருத்தி, கையில் பொருள் இல்லாத காரணத்தால் கல்யாணமாகாமல் காத்து நிற்கும் சகோதரி பிரேமா, அருமைத் தம்பி ரவி-இத்தனை உயிர்களும் ஜீவித்தாக வேண்டும். இதுதான் அவனது குடும்ப ஜாதகம்.

நான்காவது படிவம் படிக்கும் அவன், முதல் படிவத்திலிருந்தே தனக்கு எழுத ஒரு நல்ல பேனா வாங்கித் தர வேண்டுமென்று தன் தந்தையைப் பல முறை கெஞ்சியிருக்கிறான். ஆனால், அவனது ஆசை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிள்ளையின் ஆசையைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே என மனமுடைந்து, தந்தை வடிக்கும் சோகக் கண்ணிர்தான் அவன் கண்ட பலன்.

சர்க்கார் தயவில் இலவசக் கல்வி கற்கும் ராஜாவுக்கு ஆழ்ந்த அறிவை மட்டும் அளித்திருந்தார் கடவுள். 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற தன் வகுப்புத் தமிழ் வாத்தியாரின் வார்த்தைகளை அடிக்கடி தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு ஆறுதல் அடைவது அவன் வழக்கம். ஆனால் இன்று, அத்தனை நாள் அவன் உள்ளத்தில் புதைந்து கிடந்த பேனாப் பைத்தியத்தை, பள்ளிச் சுவரில், நேற்றிரவு எவனோ ஒருவன் ஒட்டிவிட்டுச் சென்ற விளம்பரம், பலமாகக் கிளப்பி விட்டுவிட்டது.

அன்று முழுவதும் வகுப்பில் அவனுக்குப் புத்தியே செல்லவில்லை. அவன் சிந்தனை முழுவதும் சுவரொட்டியிலே காணும் அழகிய பேனாவையே சுற்றியவண்ணம் இருந்தது. பள்ளி விட்டதும் நடைப்பிணம் போல் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான். வெள்ளி நிறத்திலும் தங்க நிறத்திலுமாகத் தன் சகமாணவர்கள் அழகாகப் பைகளில் செருகிக்கொண்டிருக்கும் பேனாக்கள் தன் ஏழைமையைக் கண்டு பரிகசிப்பனபோல் இருந்தது அவனுக்கு. தளும்பிக்கொண்டிருந்த கண்ணிர் அவனது பார்வைக்குத் திரை போட்டுத் தடுத்தது.

மெளனமாக வீட்டை யடைந்த ராஜா, ஒருவரிடமும் பேசாமல் அறையில்வந்து படுத்துவிட்டான். துள்ளித்திரிய வேண்டிய இளம் உடம்பில் சோர்வு குடி புகுந்து விட்டது. உள்ளத்திலே உற்சாகம் இல்லை. அது முகத்திலும் பிரதிபலித்தது. இந்தக் கவலைக்குக் காரணம் கேட்ட பிரேமாவைக் கசப்புடன் நோக்கினன். அவள் பதில் ஏதும் கூறாமல், கொண்டு வந்த காபியை ராஜாவின் எதிரில் வைத்துவிட்டுத் தன் தாயாரிடம் சென்று, முகத்தைத் தூக்கிக்கொண்டிருக்கும் ராஜாவைப்பற்றிக் கூறிக்கொண்டிருந்தாள்.

அப்பொழுதுதான் வெளியில் ஒடியாடி விளையாடிவிட்டுத் துள்ளிக்கொண்டே, தன் அண்ணன் அருகில் வந்த ரவி, சில்லிட்டுப் போயிருந்த ராஜாவின் காபியைச் சரிவரக் கவனிக்காமல் காலால் தட்டிவிட்டான். உள்ளே எதற்காகவோ வந்தவன், மறுகணம் அங்கே நிற்கவே இல்லை. கையில் அகப்பட்டால், ராஜா என்ன செய்வான் என்பது அவனுக்கா தெரியாது? தன் முதுகைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி மின்னல் வேகத்தில் அந்த அறையினின்றும் ஒடி மறைந்துவிட்டான் ரவி.

வெறுப்புடன் தன் இடத்தை விட்டெழுந்த ராஜாவின் பார்வை, தற்செயலாய் எதிரிலிருந்த தன் தந்தையின் கோட்டின் மீது விழுந்தது. ஏதோ ஒருவித உணர்வு அவனை உந்தித்தள்ளியது. மின்சாரத்தினால் இயக்கப்பட்டவன் போல் கோட்டுப் பைகளில் ஒவ்வொன்றாகத் தன் கைகளை விட்டுத் துழாவினான். கடைசியில் கோட்டின் உள் பையில் இருந்த நான்கு ஒற்றை ருபாய் நோட்டுகள் அவன் கையில் சிக்கின. அதைத்தொடர்ந்து அவன் நினைவும் அதிர்ஷ்டப் பரிசு விளம்பரத்தைச் சுற்ற ஆரம்பித்தது. அவன் மனம் ஒரு முடிவுக்கு வந்து நின்றது.

ஒரு ரூபாயை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு நேராகச் செட்டியார் கடைக்குச் சென்றான். ஒரு ரூபாயைக் கொடுத்து, கைலாசம் காம்படிஷன்ஸ் கம்பெனியின் பரிசு டிக்கெட் ஒன்று வாங்கிக் கொண்டு வீடு வந்துவிட்டான். ஆனால், அன்று இரவு முழுவதும் ராஜாவுக்குத் தூக்கமே வரவில்லை. குற்றமுள்ள அவன் நெஞ்சு உறுத்திக் கொண்டேயிருந்தது. தன் திருட்டு வெளியாகிவிட்டால்...? என்ற ஒரு பயம் அவன் உள்ளத்தைக் கெளவிக்கொண்டது.

மறுநாள் பொழுது புலர்ந்தது. ஆபீசுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த ராஜாவின் தந்தை, பையில் வைத்திருந்த பணத்தில் ஒரு ரூபாய் குறைவதைக் கண்டு இரைந்துகொண்டிருந்தார். ராஜாவின் உடல் பயத்தால் வெடவெடத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் தந்தைக்குச் சந்தேகம் முழுவதும் ரவியின் பேரில்தான். ஏனெனில், அவன்தான் இதற்கு முன்பு சில தடவைகளில் தன் தாயாரின் காசுகளைத் திருட்டுத்தனமாக எடுத்து, மிட்டாய், முறுக்கு முதலியவை வாங்கித் தின்றிருக்கிறான். ஆகவே, வழக்கம் போல், ரூபாய் காணாத பழியும் ரவியின் தலையில் விழுந்தது.

அவன் தந்தை பலம் கொண்ட மட்டும், அவனது திருட்டுச் செய்கைக்காக அடித்துக்கொண்டிருந்தார். நிரபராதியான ரவி, "அப்பா! அப்பா! நான் அந்த ரூபாயைக் கண்ணால்கூடப் பார்க்கவில்லை!" என்று எவ்வளவோ கதறியும் அவன் தந்தை நம்பவிலலை. தன் மனைவி தடுப்பதையும் அவர் லட்சியம் செய்யவில்லை.

"இனிமேல் இந்தத் திருட்டுப் புத்தியை விடுவாயா? மருந்துக் கடைக்குப் பணம் கொடுக்க வேண்டுமே! பாக்கிப் பணத்திற்கு இப்போது எங்கே போவேன்? என்றார் அவர். அவருடைய கைகள்தாம் வலித்தன. பயன் ?

இத்தனையையும் மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ராஜாவுக்கு அதற்கு மேலும் மனம் கேட்கவில்லை. தான் செய்த குற்றத்திற்கு, ஒன்றுமறியாத தன் தம்பி அநுபவிக்கும் தண்டனை அவன் இதயத்தை உலுக்கி விட்டது.

ஒடிச் சென்று, தந்தையிடம் தம் செய்கையைப் பற்றிக் கூறி, குற்றத்தை ஒப்புக்கொண்டான் ராஜா. ஆனால், அவர் அப்போதிருந்த மனநிலையில், பிள்ளையின் நேர்மையைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றவில்லை. அவரது ஏமாற்றமும் கோபமும் திசை மாறிக் கடுமையாகச் சுழன்றது. வீட்டைவிட்டே ராஜாவைத் துரத்திவிட்டார். அன்று இரவு முழுவதுமே ராஜா வீட்டிற்கு வரவில்லை. தாயாரின் கவலை வரம்பு மீறியதாகிவிட்டது.

பெற்ற மனம் எதையெல்லாமோ எண்ணிப் பதைபதைத்தது. தன் கணவரின் ஆத்திரத்திற்காகவும், அவசர புத்திக்காகவும் அவளது மனம் அளவில்லாத கவலைகொண்டு தவித்தது. ராஜாவின் தந்தை அவனை எங்கெல்லாமோ ஒரு வாரம் வரை தேடி அலைந்துவிட்டு, உடைந்த உள்ளத்துடன் வீடு திரும்பினர்.

புத்திசாலியான பிள்ளை, தன்னைவிட்டுப் போனதிலிருந்தே தாயார் படுத்த படுக்கையாகிவிட்டாள். தாங்க முடியாத புத்திரபாசம் அவள் மனத்தை வாட்டிப் பிழிந்தது. பிரேமாவும் ரவியும் ஆறுதல் இன்றித் தவித்தனர். பிடிவாதமான பிள்ளையின் செய்கை குடும்பத்தையே ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.

மாதம் ஒன்று வாடி உதிர்ந்தது. கால்கள் சென்றவிடமெல்லாம், கஷடத்தையே சுமையாகக்கொண்டு, பட்டணத்தை அடைந்தான் ராஜா. ஆனால், அங்கே அடியெடுத்து வைத்ததுமே, அதிர்ஷ்ட தேவதை அவனை வாரியணைத்துக் கொண்டுவிட்டாள். பல நாள் பட்டினியும் சில நாள் அரைவயிற்றுக்குமாக, வேளைக்கு ஓர் இடமாய் அலைந்து, சோர்வடைந்து போயிருந்த அவன் செவிகளில், ஒரு விளம்பர மோட்டாரிலிருந்து ஒலி பெருக்கி வந்த ஓசை பளிச்சென்று கேட்டது.

"கைலாசம் காம்ப்டிஷன் கம்பெனியாரின் புத்தாண்டு பரிசுப் போட்டியின் முடிவு இன்று வெளியாகிவிட்டது. முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சத்தயும் அடையப் போகும் அதிர்ஷ்டசாலி, '1330-ஆம் நம்பருக்கு உடையவர்". விளம்பர் லாரி மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

ராஜா பரபரப்புடன் தன் டிராயர் பைக்குள் கையை விட்டுக் கசங்கிப் போயிருந்த சிறிய கடிதத் துண்டை எல்லைமீறிய ஆவலுடன் பிரித்துப் பார்த்தான். அவ்வளவுதான்! அடுத்த நிமிஷமே, தாங்க முடியாத சந்தோஷத்துடன் அந்த விளம்பர வண்டியை நோக்கி ஓடினான்.

அவனது வரலாற்றைக் கேட்டு மனமிரங்கிய அந்த அதிகாரி ராஜாவை உற்சாகப்ப்டுத்தினார். போட்டியிலே முதலாவதாக வெற்றி பெற்ற அவனுடைய அதிர்ஷ்டத்தைப் புகழ்ந்தார். நேராக அவனையும் அழத்துக் கொண்டு காரியாலயத்திற்குச் சென்றார்.

திடீரென்று தன் வீட்டு வாசலில் அழகிய நீல நிறக் கார் ஒன்று வந்து நிற்கவுமே, உள்ளே இருந்த ரவியும் பிரேமாவும் ஓடோடியும் வெளியில் வந்து நின்றனர். அவர்களைத் தொட்ர்ந்து ராஜாவின் தந்தையும் வந்தார். ஆனால், அடுத்த கணம் புத்தம் புதிய, பளபளப்பான் சில்க் நிஜார், சொக்காய்-இவைகளை அணிந்த வண்ணம் காரி லிருந்து ராஜா இறங்கியதைப் பார்த்ததும் எல்லோருக்கும் ஒன்றுமே புரியாமல் ஒரே வியப்பாக இருந்தது.

'ஒடிப்போன ராஜாவுக்கு ஒன்பதாம் இடத்தில் வியாழன், இருந்திருக்கிறார்’ என்பதை அவர்கள் எப்படி அறியமுடியும்! "அதிர்ஷ்டசாலியான பிள்ளையைப் பெற்றிருக்கிறீர்கள், ஸார்!" என்று கூறிக்கொண்டே போட்டிக் கம்பெனி மானேஜர், ராஜாவுக்குச் சேர வேண்டிய முதற்பரிசுத் தொகை முழுவதற்கும் ஒரு செக் எழுதி, பலர் முன்னிலையில் ராஜாவின் தந்தையிடம் நீட்டினர். ஆனால், அத்துடன் அந்த மானேஜர் நிறுத்திவிடவில்லை. ராஜாவைப் போட்டியில் சேரத் தூண்டிய ஆசைப் பொருளை அவர் மறப்பாரா? மூன்று அழகிய பேனாக்களை எடுத்து, ரவி, பிரேமா, ராஜா ஆகிய மூவருக்கும் ஆளுக்கொன்றாய் அளித்துவிட்டுத்தான் விடைபெற்றுச் சென்றார்.

ராஜாவின் திடீர் அதிர்ஷ்டத்தைக் கண்டு ஊரே வியந்தது. பெற்ற வயிறு குளிரத் தாய் அவனை ஓடிவந்து அனைத்துக்கொண்டாள், வறுமை என்னும் குட்டையில் தெப்பமாக மிதந்துகொண்டிருந்த தங்கள் குடும்பத்தை உயர்த்த, தெய்வமாக வந்த பிள்ளையைப் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது அந்தத் தாயுள்ளம்.