இராணி மங்கம்மாள்/அபவாதமும் ஆக்கிரமிப்பும்
கணவனை இழந்து பல நாட்கள் வரை தன்மேல் படராமலிருந்த ஓர் அபவாதம் இப்போது படரத்தொடங்கி விட்டதை எண்ணி ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். ஊர் வாயை மூட முடியாது. மூடுவதற்குச் சரியான உலை மூடியும் இல்லை என்பதை அவள் இப்போதுதான் நன்றாகப் புரிந்து கொண்டாள்.
மிகவும் அழகாகவும், ஆஜானுபாகுவாகவும் கம்பீரமாகவும் இருந்தது இராயசம் அச்சையாவின் தவறும் இல்லை. அவள் கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்ணாக இருந்தாள். பரந்த மார்பும், திரண்ட தோள்களும் அழகிய முகமண்டலமும் உடைய சுந்தர புருஷனாக இருந்தார் அவர்.
மதுரையில் போய்த் தங்கியிருந்த நாட்களில் தவிர்க்க முடியாத அரசியல் யோசனைகளுக்காக அவர் உடனிருக்க நேரிடும் என்று கருதி அவரையும் அழைத்துச் சென்றிருந்தாள் அவள்.
மதுரையிலிருந்து திரிசிரபுரம் திரும்பிய பின்பும் திருவாங்கூர் மன்னன் ரவிவர்மன் செய்த நம்பிக்கைத் துரோகத்தை முறியடிப்பதற்காக அவள் இரண்டொரு நள்ளிரவுகளில் இராயசத்தை அரண்மனைக்கு வரவழைக்க நேரிட்டது. அதில் ஒரு நள்ளிரவில் பல்லக்கில் கூடத் திரும்பிச் செல்ல முடியாத அளவு புயலும் அடை மழையும் பிடித்துக் கொண்டுவிட்ட காரணத்தால் இராயசம் அரண்மனையிலேயே தங்கி விடிகாலையில் சென்றார்.
ரங்ககிருஷ்ணனும், சின்ன முத்தம்மாளும் உயிரோடிருந்த காலத்தில்கூட இப்படிச் சில தவிர்க்க முடியாத இரவுகள் இராயசம் அரண்மனையில் தங்க நேரிட்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் இப்படி ஓர் அபவாதமும் வம்பும் கிளம்பியதில்லை.
இப்போது ராணி மங்கம்மாள் அரண்மனையில் தனியாயிருந்தாள். மகனும் இல்லை. மருமகளும் இல்லை. அபவாதம் உண்டாக வசதியகாப் போயிற்று. நரசப்பய்யாவும் படைகளும், தெற்கே திருவாங்கூரை நோக்கிப் புறப்பட்டுப் போன மறுநாள் காலை ராணி மங்கம்மாள் அரண்மனை நந்தவனத்தில் தன் செவிகளாலேயே அதைக் கேட்டாள். வைகறையில் எழுந்து நீராடி நந்தவனத்தில் திருத்துழாயும் பூக்களும் கொய்யச் சென்ற ராணி மங்கம்மாள் தான் அங்கு வரப்போவது தெரியாமல் தனக்காகப் பூக்கொய்ய வந்திருந்த பணிப்பெண்கள் அங்கு ஏதோ பேசிக்கொண்டு நிற்கவே செடி மறைவில் நின்று அதைக் கேட்கத் தொடங்கினாள். பேச்சு தன்னைப் பற்றியதாகத் தோன்றவே அவள் ஆவல் மேலும் அதிகமாயிற்று.
"இவ்வளவு அவசரமாகப் பூக்கொய்ய வந்திருக்க வேண்டாமடீ! இராயசம் இப்போதுதான் அரண்மனையை விட்டுப்போகிறார்..."
கூறி முடித்துவிட்டுச் சிரித்தாள் முதல் பெண்.
"இந்த இராயசம் அடிக்கொருதரம் எதற்கு இப்படி வந்து வந்து போகிறார்? இங்கேயே தங்கிவிடவேண்டியது தானே. அலர்மேலம்மாள் ராணிக்குக் கட்டுப்பட்டவள். அவளால் எந்த இடையூறும் வரப்போவதில்லை."
மறைந்து நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளுக்குத் தீயை மிதித்தது போலாகிவிட்டது. தான் இவ்வளவு அதிகாலையில் எழுந்து நீராடி நந்தவனத்துக்கு வரக்கூடும் என்று ஒரு சிறிதும் எதிர்பாராதபடி அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் போக்கில் பேசிக்கொண்டிருப்பதாகப் பட்டது அவளுக்கு அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டு அவள் மனம் பதறியது.
பெரும்பாலான மனிதர்கள் சரியான அல்லது தவறான அனுமானங்களிலேயே வாழ்கிறார்கள் என்பது புரிந்தது. பலர் திரும்பத் திரும்பப் பேசி வதந்தியைப் பரப்புவதாலேயே சில தவறான அனுமானங்கள் கூட மெய்போலப் பரவ முடிகிறது. யாரும் பரப்பாத காரணத்தால் சரியான அனுமானங்கள் பரவாமலே போய்விடமுடிகிறது.
அப்போது தன் மனச்சாட்சிக்கு துரோகம் செய்யாமல் தனக்குத் தானே அந்தப் பணிப்பெண்கள் பேசியதைப் பற்றி நினைத்துப் பார்த்தாள் ராணி மங்கம்மாள். இராயசம் அச்சையாவின் ஆஜானுபாகுவான நெடிதுயர்ந்த பொன்னிறத் திருமேனியையும், காம்பீர்யமும் அறிவு ஒளியும் தேஜஸும் நிறைந்த திருமுக மண்டலத்தையும் கண்டு அவள் தன் மனத்திற்குள் அவ்வப்போது மயங்கியதுண்டு. மனத்தளவில் ஈடுபட்டது உண்டு. மனத்தளவில் ஈடுபடுவது என்பது எத்தகைய கட்டுப்பாடுள்ள பெண்ணாலும் தவிர்க்க முடியாததுதான். வெளி உலகில் வீரதீரப் பிரதாபங்கள் மிகுந்த ராஜதந்திரி-சாதுரியக்காரி என்றெல்லாம் பேர் வாங்கி இருந்தாலும் முடிவாக அவள் ஒரு பெண்தான். பெண் மனத்திற்கு இயல்பான சலனங்களும் சபலங்களும் அவளிடமும் இருக்கத்தான் செய்தன. பெண்ணும் தனிமையும் சேருவது என்பது பஞ்சும் நெருப்பும் சேருவதைப் போன்றது. வதந்தி என்ற நெருப்புப் பற்றிக் கொள்வது அப்போது பெரும்பாலும் நேர்ந்துவிடுகிறது.
பேசிக் கொண்டிருந்த பணிப் பெண்கள் மேல் கோபப்படுவதோ, அவர்களைத் தண்டிப்பதோ சரியில்லை என்று அவள் மனத்தில் பட்டது. அப்படி ஆத்திரப்பட்டுச் செயலில் இறங்குவதனாலே அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்களோ அதைத்தானே தன் ஆத்திரத்தின் மூலம் மெய்ப்பிப்பதாய் ஆகிவிடும்!
நந்தவனத்தில் கேட்டது மனத்தைப் பாதித்தாலும் அவள் பொறுமையாக இருக்க முயன்றாள். மனித இயல்பை எண்ணி வியப்பதைத் தவிர அவளால் அப்போது வேறெதுவும் செய்ய இயலவில்லை.
உலகில் மிக உன்னதமான கற்பனை உணர்ச்சியுள்ளவர்கள் மகாகவிகளாகிறார்கள். மிகக் கொச்சையான கற்பனை உணர்ச்சியுள்ளவர்கள் தங்களைத் தவிர மற்றவர்களைப் பற்றியே வம்பு களையும் வதந்திகளையும் கற்பித்து மகிழ்கிறார்கள்.
மிக உயர்ந்த கற்பனை கவிதையாகிறது. அரைவேக்காட்டுக் கற்பனை வதந்தியாகிறது. அறிவும் காரணமும் அழகும் அமைப்பும் கலவாத தான்தோன்றிக் கற்பனைதான் வதந்தி, அறிவின் அழகும் அடக்கத்தின் மெருகும் கலந்த வதந்திதான் கற்பனையாகிறது. பணிப் பெண்களின் நிலைமைக்கு அவர்கள் இந்தப் போக்கில் இப்படித்தான் கற்பனை செய்ய முடியும் என்று ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. அப்போது அவர்களுடைய பரபரப்பையும் பதற்றத்தையும் அதிகப்படுத்தும் என்றெண்ணி ஓசைப்படாமல் திருத்துழாய் மட்டுமே பறித்துக் கொண்டு மெல்லத் திரும்பிவிட்டாள் அவள்.
"அரங்கேசா! இதுவும் உன் சோதனையா? வெளியே எல்லைகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் விரோதங்களும் ஆக்கிரமிப்பு எண்ணங்களும் போதாதென்று இப்படி மனத்திற்குள்ளேயே குழம்பித் தவிக்கவும் ஓர் அபவாதத்தைத் தந்துவிட்டாயே!" என்று வைகறை வழிபாட்டை முடித்துவிட்டு இறைவனுக்கு அர்ச்சித்த திருத்துழாயைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும்போது தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் அவள். மனம் சிறிது கலக்கமுற்றாலும் தேற்றிக்கொண்டாள். கூரிய முள்ளிலிருந்து ஆடையை எடுப்பது போல் ஆடையும் கிழியாமல், முள்ளும் குத்தாமல் அந்த அபவாதத்தைப் பொறுத்தவரையில் நடந்துகொள்ள முயன்றாள். சில சிறிய அபவாதங்களைத் தடுத்துக் களைகிற முயற்சிகளின் மூலமாகவே அவை பெரிய அபவாதங்களாக உரு எடுத்துவிடும். சில அபவாதங்களை அவற்றின் வெளியே தெரியாத அடிமண் வேரை அறுத்து மேற்கிளைகள் வாடி அழியச் செய்யவேண்டும். வேறு சில அபவாதங்களை நாமாக அழிக்கவே முயலாமல் அது தானே ஓடியாடி அலுத்துப் போய் இயல்பாகச் சாகும்படி விட்டுவிட வேண்டும். தானே சாகிற அபவாதங்களை உயிர்ப்பிக்கும் முயற்சியிலோ உடனே கொன்றுவிட வேண்டிய அபவாதங்களைத் தொடரவிடுகிற முயற்சியிலோ இறங்கிவிடக்கூடாது என்ற ராணி மங்கம்மாள் வழக்கமான ராஜதந்திர உணர்வு அவளை எச்சரித்தது.
எதிர்பாராமல் இப்போது தன்மேல் ஏற்பட்டிருக்கும் இந்த அபவாதத்தை அவள் பெரிதுபடுத்த விரும்பவில்லை. இயல்பாக மூத்துப்போய் தானே அழியட்டும் என்று விட்டு விடவிரும்பினாள். அச்சையாவிடமும் வித்தியாசம் காண்பிக்காமல் எப்போதும் போலப் பழகினாள். குழந்தை விஜயரங்கன் பெரியவனானால் தனக்கு ஒரு நல்ல துணையும் பாதுகாப்பும் கிடைத்துவிடும். இத்தகைய வீண் அபவாதங்களெல்லாம் வராது என்று நம்பிக்கையோடு இருந்தாள். அரசியல் காரியங்களில் கவனம் செலுத்தினாள்.
நாட்கள் சென்றன. ரவிவர்மனின் நம்பிக்கைத் துரோகத்திற்குப் பதிலடி கொடுக்கச் சென்ற படைகளின் நிலையைப் பற்றித் தகவல் அறிய ஆவலாயிருந்தாள் மங்கம்மாள்.
மிகச் சில நாட்களில் நல்ல செய்தி கிடைத்தது. நம்பிக்கைத் துரோகம் செய்த இரவிவர்மனுக்குப் பாடம் கற்பிக்கத் தளபதி நரசப்பய்யாவின் தலைமையில் சென்ற படைகள் வெற்றி மேல் வெற்றி பெற்று கற்குளம் கோட்டையையே நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இறுதியில் கற்குளம் கோட்டையைப் பிடித்துத் திருவாங்கூர் மன்னனை வென்று அவன் அதுவரை செலுத்தாதிருந்த திறைப்பணம் முழுவதையும் பெற்று வெற்றி வாகைசூடிய புகழுடன் திரும்புவதாகத் தளவாய் நரசப்பய்யாவின் தூதன் வந்து தெரிவித்தபோது ராணி மங்கம்மாளுக்கு நிம்மதியாயிருந்தது. அவள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். நரசப்பய்யாவின் திறமையை வியந்தாள்.
ஆனால் அவளது மகிழ்ச்சி இரண்டு முழு நாட்கள் கூட நீடிக்கவில்லை. படைகளும் படைத் தலைவர்களும் தளபதி நரசப்பய்யாவும் ஊரில் இல்லாத நிலையை அறிந்து தஞ்சையை ஆண்டுவந்த ஷாஜி மதுரைப் பெருநாட்டுக்குச் சொந்தமான நகரங்களையும், சில ஊர்களையும் தனது சிறுபடைகளை ஏவிக் கைப்பற்றிவிட்டான். எதிர்பாராதபடி திடீரென்று அந்த ஆக்கிரமிப்பு நடந்துவிட்டது.
கவனக் குறைவாக அயர்ந்திருந்த சமயம் பார்த்து அவன் செய்த ஆக்கிரமிப்பு மங்கம்மாளுக்கு ஆத்திரமூட்டியது. முன்பெல்லாம் இப்படிப்பட்ட அண்டை வீட்டார் ஆக்கிரமிப்புகளைச் சமாளிக்கப் பாதுஷாவின் படையுதவியையும், படைத் தலைவர்களின் உதவியையும் நாடுவது அவள் வழக்கமாயிருந்தது. இப்போது அந்த வழக்கத்தையும் அவள் கைவிட்டிருந்தாள். பக்கத்து வீட்டுப் பகைமைகளை ஒழிக்கத் தொலைதூரத்து அந்நியர்களின் படையுதவியை நாடுவது ஏளனமாகப் பார்க்கப்பட்டது. சொந்தத்தில் எதுவும் செய்யத் திராணியற்ற கையாலாகாதவள் என்ற அபிப்பிராயம் தன்னைப்பற்றி மற்றவர்களிடம் ஏற்பட்டுவிட அது காரணமாகிவிடுமோ என்று அவளே அதை மறுபரிசீலனை செய்திருந்தாள். தஞ்சைநாட்டை ஆண்ட செங்கமலதாசனை வென்று அடித்துத் துரத்திய பின் மராத்திய மன்னனான ஏகோஜி சிறிது காலத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போய்விட்டான். ஏகோஜியின் புதல்வனான ஷாஜி பட்டத்துக்கு வந்திருந்தான். இந்த ஷாஜி பட்டத்துக்கு வந்த புதிதில் மங்கம்மாளுடைய நாட்டின் சில பகுதிகளை ஆக்கிரமித்தபோது பாதுஷாவின் படைத்தலைவன் சுல்பீர்கானின் உதவியால் தான் அந்த ஆக்கிரமிப்பை முறியடித்திருந்தாள் அவள். அப்போது அப்படித்தான் செய்ய முடிந்திருந்தது.
இப்போது அதே ஷாஜி மறுபடியும் வாலாட்டினான். இம்முறை பாதுஷாவின் ஆட்களையோ, பிறர் உதவியையோ நாடாமல் தன் படைகளையும் தளபதி நரசப்பய்யாவையும் வைத்தே அவனை அடக்க விரும்பினாள் ராணி மங்கம்மாள். தளபதி நரசப்பய்யா திருவாங்கூரில் வென்று திறைப்பணத்தோடு திரும்பிக் கொண்டிருக்கும் செய்தி தெரிந்திருந்தது.
தஞ்சை மன்னன் ஷாஜியைக் கொஞ்ச நாட்கள் அயரவிட்டு விட்டு அப்புறம் நரசப்பய்யாவை விட்டு விரட்டச்செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் ராணி மங்கம்மாள். தான் திடீரென்று ஆக்கிரமித்த மதுரை நாட்டுப் பகுதிகள் தனக்கே உரிமையாகி விட்டாற்போன்ற அயர்ச்சியிலும் மிதப்பிலும் ஷாஜி ஆழ்ந்திருக்க அவகாசம் கொடுத்துவிட்டுப் பின்னர் அவற்றை அவனே எதிர்பாராத சமயத்தில் திடீரென்று மீட்க வேண்டுமென்று மங்கம்மாள் தன் மனத்திற்குள் முடிவு செய்துகொண்டிருந்தாள். ஆனால் அந்த முடிவை யாரிடமும் அவள் தெரிவிக்கவில்லை.
தெற்கே திருவிதாங்கூர் மன்னனை வெற்றி கொண்டு நரசப்பய்யா கோலாகலமாகத் திரிசிரபுரத்திற்குத் திரும்பி வந்தார். ராணியும் இராயசமும், அமைச்சர் பிரதானிகளும், திரிசிரபுரம் நகரமக்களும் நரசப்பய்யாவையும் படை வீரர்களையும் ஆரவாரமாக வரவேற்றனர். நரசப்பய்யா திரும்பி வந்து, ராணி மங்கம்மாள் அவரிடம் தஞ்சை மன்னன் ஷாஜியின் அடாத செயலைக்கூறிப் படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பே ஷாஜி மங்கம்மாளின் பொறுமையையும் அடக்கத்தையும் கையாலாகாத்தனமாகப் புரிந்து கொண்டு காவிரிக்கரையைக் கடந்து திருச்சி நகருக்குள் புகுந்து இரவு நேரங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.
கரையோரத்து ஊர்கள் ஷாஜி படைவீரர்களால் அலைக்கழிப்புக்கு ஆளாயின. பீதியும், நடுக்கமும் பரவின. பாதுகாப்பற்ற நிலை உருவாயிற்று.
எப்படியும் இந்தக் கொள்ளையை முதலில் தடுத்தாக வேண்டுமென்று கொள்ளிடத்தின் வடக்குக்கரை நெடுகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து பாசறை அமைத்துப் படைகளுடன் தங்கினார் தளபதி நரசப்பய்யா.
பாசறை அமைத்த பிறகு ஷாஜியின் கொள்ளை, கொலைகள் தொடர்ந்தன. நரித்தனமாகவும், நயவஞ்சகமாகவும் உள்ளே ஊடுருவி நுழைந்து கொள்ளையடிப்பதில் தேர்ந்த தஞ்சைக் குதிரைப்படை வீரர்கள் திரிசிரபுரம் வடபகுதியில் காவிரிக்கரை ஊர்களைக் கொள்ளையடித்துத் தொல்லை கொடுப்பதைத் தொடர்ந்தனர்.
ராணி மங்கம்மாளிடம் காவிரிக்கரை ஊர்களின் மக்கள் முறையிட்டனர். தேர்ந்த தளபதி நரசப்பய்யாவினாலேயே இந்தத் தஞ்சைக் கொள்ளைக்காரர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாது போகவே ராணி கவலையில் மூழ்கினாள். நரசப்பய்யாவைக் கூப்பிட்டு மறுபடி ஆலோசனை செய்தாள். அவர் கூறினார்:
"நம் ஊர்களைக் கொள்ளையிடும் ஆசையில் தங்கள் தலைநகரான தஞ்சையைக்கூடப் பாதுகாப்பு இல்லாமல் விட்டுவிட்டு இங்கே வந்து தொல்லை கொடுக்கிறார்கள் ஷாஜியின் ஆட்கள். அவர்களைத் தந்திரத்தால்தான் முறியடிக்க வேண்டும். நம் படைவீரர்களில் சிலரை அவர்கள் தலைநகராகிய தஞ்சைக்கு அனுப்பி அங்கே பதிலுக்குக் கொள்ளையிடச் செய்தால்தான் வழிக்கு வருவார்கள்."
"கொள்ளிடத்தைக் கடந்து படை தஞ்சைக்குப் போக முடியுமா தளபதி?"
"சில நாட்களில் கொள்ளிடத்தில் நீர் ஆழம்க குறைகிற ஒருநேரம் பார்த்து நாம் கரையைக் கடந்து தஞ்சைக்குள் நுழைந்துவிடலாம்."
"எப்படியோ இது ஒரு மானப்பிரச்னை நம்மை விடச் சிறிய மன்னன் ஒருவன் நமக்குத் தலைவலியாயிருக்கிறான்; இதை நாம் இப்படியே அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது."
"கவலைப்படாதீர்கள் மகாராணி! அவர்கள் நம் காவிரிக்கரை ஊர்களில் கொள்ளையிட்டதற்குப் பதில் வட்டியும் முதலுமாகத் திருப்பிப் பெற்றுத்தருகிறேன்.இது என் சபதம்" என்றான் வீரத்தளபதி நரசப்பய்யா.
"ரவிவர்மனுக்குப் புத்தி புகட்டியதுபோல், ஷாஜிக்குப் புத்தி புகட்டியாக வேண்டிய காலம் வந்து விட்டது! வெற்றியோடு திரும்பி வருக!" என்று நரசப்பய்யாவை வாழ்த்தி வீரவிடை கொடுத்தாள் ராணி மங்கம்மாள்.