உள்ளடக்கத்துக்குச் செல்

இராணி மங்கம்மாள்/பிரக்ஞை நழுவியது!

விக்கிமூலம் இலிருந்து
29. பிரக்ஞை நழுவியது!

சி தாகத்தால் ராணி மங்கம்மாளின் நா வறண்டது. நம்பிக்கையும் வறண்டது. பசியுந் தாகமுமாக இப்படித் தவித்துச் சாக விடுவதற்குப் பேரனுக்குத் தான் எந்தத் தீமையும் செய்யவில்லையே என்று அவள் எண்ணி எண்ணிக்குமைந்தாள். உள்ளம் புழுங்கி வெந்து நைந்தாள்.

கிழவன் சேதுபதியோ, மைசூர் மன்னனோ விரோதம் காரணமாகத் தன்னைச் சிறையில் அடைத்திருந்தால்கூட அவள் இவ்வளவு வேதனைப்பட்டிருக்க மாட்டாள். தான் சொந்த அரண்மனையில் சொந்தப் பேரனாலேயே அவமானப்படுத்தப்பட்டு விட்டோமே என்று மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள் அவள். வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் மானமிழந்து மரியாதை இழந்து இப்படி அங்கே அடைபட்டுக் கிடந்தாள் மங்கம்மாள்.

தன் அருமைக் கணவர் சொக்கநாத நாயக்கர் காலமான பின் அந்த மரணத்தின் சோகத்தையும் ராஜ்ய பாரத்தையும் சேர்த்தே சுமந்து சிரமப்பட்டது எல்லாம் இப்போது இப்படி அவமானப்படவா என்று எண்ணியபோது இதயத்தில் இரத்தம் கொப்பளித்துக் கசிவது போலிருந்தது அவளுக்கு.

தன் அரண்மனையில் உள்ள விசுவாச ஊழியர்கள் யாராவது தன்னைப் பார்க்கவும், பேசவும் விரும்பாமல் இவ்வளவு உதாசீனமாக இருப்பது சாத்தியமே இல்லை என்று அவளுக்குப் பட்டது. கல்நெஞ்சம் படைத்த கிராகதனான தன் பேரன் விஜயரங்கன் தன்னை யாரும் பார்க்கவோ, பேசவோ முயன்றால் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்று உத்தரவு போட்டிருக்கவேண்டும் என்று அநுமானித்தாள் அவள். தன் வம்சத்திலா இப்படி ஒரு கோடரிக்கம்பு என்று சில சமயங்களில் நினைக்கும் போது அவளுக்குத்திகைப்பாகவும் இருந்தது. சினமாகவும் இருந்தது.

இங்கே அவள் நிலைமை இவ்வாறிருக்க விஜயரங்கனோ மமதையிலும், அகங்காரத்திலும் திளைத்திருந்தான். தான் தந்திரமாகப் பாட்டியிடம் இருந்து கைப்பற்றிய ஆட்சியை எப்படியும் கட்டிக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற பேராசையில் எத்தகைய குரூரமான செயலைச் செய்யவும் துணிந்திருந்தான் அவன், முடிசூட்டிக் கொண்டவுடன் தன்னோடு ஒத்துழைத்த படைத் தலைவர்களிடம் "என் பாட்டியாயிற்றே என்று பார்த்து இரக்கம் காட்டவேண்டியதில்லை. ராணிமங்கம்மாள் உயிரோடிருக்கிற வரை என் ஆட்சிக்கு அபாயம் உண்டு" என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்தான் அவன்.

அப்போது ஒரு படைத்தலைவர், "ராஜ்யத்தைத்தான் பிடித்தாயிற்று! இனி நம் விருப்பத்துக்கோ ஆட்சிக்கோ உங்கள் பாட்டி எந்த வகையிலும் தடை செய்ய முடியாது! பாவம், வயதான காலத்தில் பாட்டியை ஏன் சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்த வேண்டும்? தயவு செய்து பாட்டியை விடுதலை செய்து விடுங்கள். தங்களுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது" என்று பயந்து கொண்டே அறிவுரை கூறினார்.

விஜயரங்கன் அந்தக் கருணை உள்ளம் படைத்த தளபதியின் அறிவுரையை ஏற்காததோடு ஆத்திரமாக அவருக்கு மறுமொழியும் கூறி அவரைக் கண்டித்துக் கோபித்துக் கொண்டான்.

"உங்கள் அறிவுரை இது விஷயமாக எனக்குத் தேவை இல்லை! பாட்டி இருக்கிறவரை இந்த நாட்டை நான் நிம்மதியாக ஆள முடியாது. ஆனால் அவளை நானாகக் கொல்லப் போவதில்லை. தொடர்ந்து வாழவிடப் போவதுமில்லை. நான் கொன்றுவிட்டேன் என்ற கெட்டபெயர் வராமல் அவளே செத்தாள் என நாடு நம்பும்படிச் செய்யப் போகிறேன்."

"அரசே! என்னை பெரிய மனத்தோடு, தாங்கள் கருணை கூர்ந்து மன்னிக்க வேண்டும். தங்களை வளர்த்து ஆளாக்கிய பாட்டியாரைத் தாங்கள் இவ்வளவு கொடுமையாக நடத்தக்கூடாது. இன்று உங்களுக்குப் பயப்பட்டாலும் பின்னாளில் ஊர் உலகம் உங்களைப் பழிக்கும்."

"ஊர் உலகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என் பாட்டி என்னைக் கொடுமைப்படுத்தியதற்கு பதிலாக அணு அணுவாய்ச் சித்ரவதை செய்யப்பட்டுச் சாக வேண்டும். இதற்கு எதிராக யார் நின்று தடுத்தாலும் கேட்க மாட்டேன். உங்கள் கீதோபதேசம் எனக்குத் தேவை இல்லை."

இவ்வளவு கடுமையாக அவன் கூறியபின் மெளனம் சாதிப்பதைத் தவிர அந்தப் படைத் தலைவருக்கு வேறு வழியில்லாது போயிற்று. முதல் முதலாக அறிவுரை கூறிய அந்த ஒரு படைத்தலைவருக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பார்த்தபின் வேறு யாரும் அப்புறம் வாய் திறக்கத் துணியவில்லை. அவன் இஷ்டப்பட்டபடி எப்படி வேண்டுமானாலும் செய்து தொலைக்கட்டும் என்று பேசாமல் இருந்து விட்டார்கள்.

விஜயரங்கன் ஈவு இரக்கமற்றுக் குரூரமாகவும், கொடூரமாகவும் நடந்து கொண்டான். நாளாக நாளாக அவனது குரூரம் அதிகமாயிற்றேயன்றி ஒரு சிறிதும் குறையவில்லை. பாட்டியைச் சித்ரவதை செய்தே தொலைத்து விடுவது என்னும் வெறி அவனுள் மூண்டிருந்தது.

பாட்டியைச் சிறை வைத்திருந்த அறைக்குள் உணவு பருகத் தண்ணீர் எதுவும் வழங்கலாகாது என்று முதலில் தடைவிதித்திருந்த விஜயரங்கன் பின்பு அதை விடக் கொடூரமான வேறொரு முறையைக் கையாண்டான். அதைப்பற்றிக் கேள்விப்பட்டவர்கள் கண்டவர்கள் எல்லாரும் மனம் வருந்தினார்கள். அருவருப்பு அடைந்தார்கள்.

ராணி மங்கம்மாள் சிறைப்படுத்தப்பட்டிருந்த அறை வாசலில் அறுசுவை உணவை அவள் பார்வையில் படும்படி வைக்கச்சொல்லி அவளுக்கு உண்ணக்கொடுக்காமல் தவிக்க விடச் செய்தான் விஜயரங்கன்.

பசியையும் தாகத்தையும் விடக் கொடியது பசிக்கும் தாகத்துக்கும் அருமருந்தான உணவையும் நீரையும் எதிரே வைத்துவிட்டு உண்ணவும், பருகவும் விடாமல் தடுப்பது தான். அந்தக் கொடுமையைத் தன் பாட்டிக்குச் செய்து அவள் பசியாலும் தாகத்தாலும் தவித்துத் துடிதுடிப்பதைத் தன் கண்களாலேயே பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான் விஜயரங்கன்.

"அட பாவி! உனக்கு நான் மனத்தாலும் கெடுதல் நினைத்ததில்லையே? என்னை ஏனடா இப்புடிச் சித்ரவதை செய்கிறாய்! தெய்வந்தான் உன்னைக் கேட்க வேண்டும்" என்று அவனை நோக்கிக் கதறினாள் ராணி மங்கம்மாள். அவனோ அவள் கதறலைக் கேட்ட பின்பும் அட்டகாசமாக ஆணவச் சிரிப்புச் சிரித்தான்.

"பட்டால்தான் பாட்டி உனக்குப் புத்தி வரும். நன்றாகப் படு! அப்போதுதான் உன் தவறுகளை நீயே உணரமுடியும்" - என்று ஆத்திரத்தோடு கூறினான்.

மங்கம்மாள் ஈனஸ்வரத்தில் பதில் கூறினாள். "இதற்கெல்லாம் அடுத்த ஜன்மத்தில் நீ அநுபவிப்பாய்! கடவுள் உன்னைச் சும்மா விடமாட்டார்."

"இந்த ஜன்மத்தில் நான் சாந்தேஷப்பட வேண்டும். அதற்கு நீங்கள் இடையூறாக இருந்தீர்கள் அதனால் தான் உங்களைச் சிறையில் அடைத்திருக்கிறேன். அடுத்த ஜென்மத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி இப்போது நான் கவலைப்படவில்லை."

"அன்னமிட்ட கைக்குத் துரோகம் செய்கிற யாரும் உருப்பட்டதில்லை!"

"பிள்ளைக்கும் பேரனுக்கும் கிடைக்க வேண்டிய ஆட்சியைக் கிடைக்க விடாமல் செய்து, தானே ஆட்சியின் சுகத்தை அநுபவிக்க விரும்புகிறவர்களும் உருப்படமாட்டார்கள். இப்போது நீங்கள் அடைந்திருக்கும் இதே கதியைத் தான் அடைவார்கள்..."

"அட துரோகி! என்னைப் பற்றிக் கெட்ட நோக்கம் கற்பித்தால் உன் நாக்கு அழுகிப் போய்விடும். தக்க தருணத்தில் உன்னிடம் ஒப்படைப்பதற்காகத்தான் முள்ளைச் சுமப்பதுபோல் இந்த ஆட்சியைச் சுமந்து வந்தேன். அதற்குள் நீ அவசரப்பட்டுவிட்டாய்!"

அப்போது அவளுடைய எந்தப் பதிலும் அவனைச் சமாதானம் அடையச் செய்ய முடியவில்லை. அவன் ஆத்திரம் தணியாதவனாகவே அவள் முன் நின்றான். அவளை ஒரு சிறிதும் பொருட்படுத்தாமலே புறப்பட்டுச் சென்றான். உணவையும், தண்ணீரையும் கண் முன்னால் காண்பித்துவிட்டுக் கொடுக்காமலே அவளை வதைக்கும் சித்திரவதை தொடர்ந்தது. அடையாளம் அறியமுடியாதபடி எலும்பும் தோலுமாகியிருந்தாள் அவள். அப்படியும் பேரப்பிள்ளையாண்டானுக்கு அவள்மேல் இரக்கம் வரவில்லை. விஜயரங்கன் சென்ற பின் உணவும் தண்ணீரும் கொண்டு வந்து திரும்ப எடுத்துச்செல்லும் காவலாளி மெளனமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடியே எடுத்துச் செல்லுவதைக் கண்டு பேரனுக்கு இல்லாத இரக்கம் அவனுள் இருப்பதைத் தெரிந்து கொண்டாள் ராணி மங்கம்மாள்.

இப்படியே ஒரு திங்கள் காலத்துக்கு மேல் கழிந்து விட்டது. ஒரு மாறுதலும் நிகழவில்லை. ராணி மங்கம்மாள் மெல்ல மெல்லத் தேய்ந்து ஒடுங்கியிருந்தாள். இப்போது விஜயரங்கன் அவளைச் சிறை வைத்திருந்த இடத்துக்கு வந்து பார்ப்பது கூட நின்று போயிருந்தது.

சுயப்பிரக்ஞை தவறி நினைவிழக்குமுன் வரும் மங்கலான ஞாபகம் போலப் பளீரென்று தனது கடந்த காலம் ஒருமுறை நினைவு வந்தது அவளுக்கு பல்லாண்டுகளாகக் கட்டிக் காத்த நாயக்க சாம்ராஜ்யம் இனிச் சீரழியப் போவதற்கு முன்னடையாளம் தான் பேரன் விஜயரங்கனின் ஆணவமோ என்று எண்ணினாள் அவள். கடந்த காலத்தில் தான் கண்ட துர்ச் சொப்பனங்கள், இடக் கையால் தாம்பூலம் தரித்தது எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. கண்களில் நீர் கசிந்து மல்கியது.

அணையப்போகும் விளக்கானது கடைசி கடைசியாகப் பிரகாசமாகச் சுடர்விடுவதுபோல் அவள் மனத்தில் தன் வாழ்வின் கீர்த்தி நிறைந்த கடந்த காலச்சம்பவங்கள் ஞாபகம் வந்தன.

'இனியும் இந்த அவல நிலை நீடிக்காமல் என்னை அழைத்துத் திருவடியில் இடம் அளியுங்கள்' என்று திருவரங்கத்துப் பெருமானையும் மதுராபுரி நாயகி மீனாட்சியன்னையையும் உள்ளமுருகப் பிரார்த்தித்துக் கொண்டாள் அவள்.

ஒவ்வொரு வீர வரலாற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. நாயக்கப் பேரரசின் வீரவரலாற்றுக்கும் முடிவு வந்து விட்டதென்று தோன்றியது. சுயநலமிகளும், அடிவருடிகளும்தான் ஒருவனை அண்டிப் புகழ்ந்து சீரழிப்பவர்களில் முதன்மையானவர்கள். தன் பேரனை அண்டியிருப்பவர்களும் அப்படிப்பட்டவர்கள் தான் என்பதை இந்த நலிந்த நிலையிலும் அவளால் உய்த்துணர முடிந்தது. எதிர் காலத்தில் வரலாறு கூறுகிறவர்கள் பேரன் ஆளும் போது சிறையில் கொடுமைப்படுத்தப்பட்ட பாட்டியாகிய தன்னைப் பற்றி என்ன கூறுவார்கள் எப்படிக் கூறுவார்கள் என்று உள்ளம் உருக எண்ணிப் பார்த்தாள் அவள்.

அப்போது அவளது வலக் கண் துடித்தது. உடலும் உள்ளமும் சோர்ந்து தளர்ந்து போயிருந்தன. மறுபடியும் பேரனைப் பார்க்க நேர்ந்தால் மறந்துவிடாமல் ஞாபகமாக அவனை ஒரு கேள்விகேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.

மெல்ல மெல்ல நினைவு நழுவியது. கிட்டத்தட்ட ஒரு மண்டலம் வரை பட்டினி போடப்பட்ட உடல் நினைவு மங்குவதும், மலர்வதுமாக இருந்தது. தனிமைக் கொடுமை வேறு.

தான் சிறை வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கி யாரோ நடந்து வருகிற காலடி ஓசை கிணற்றுக்குள்ளிருந்து கேட்கிறாற் போல் மங்கலாக ஒலித்தது. பேரனாக இருக்குமோ என்று ஒரு சிறிய சந்தேகத்துடன் பிரக்ஞையை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள் அவள்.

பிரக்ஞை நழுவியது. உடல் தள்ளாடி நடுங்கியது. எழுந்திருக்க முடியவில்லை. அரும்பாடுபட்டுப் பேரனிடம் கேட்க விரும்பிய கேள்வியை வலிந்து முயன்று ஞாபகத்தில் கொண்டு வருவதற்கு மீண்டும் தனக்குத் தானே முயற்சி செய்தாள் அவள்.