இராணி மங்கம்மாள்/சித்திரா பெளர்ணமியன்று கிடைத்த செய்தி
மீனாட்சி கல்யாணம் முடிந்து தேர் நிலைக்கு வந்து மகிழ்ச்சி நிறைவடையு முன்னே ஆற்றில் அழகர் வந்து இறங்குகிறார். தென்னாடு முழுவதும் குழந்தை குட்டிகளோடும் மனைவி மக்களோடும் தத்தம் சொந்த ஊர்களிலிருந்து ஒழித்துக்கொண்டு மதுரையிலே கூடிவிட்டாற்போல் நகரம் முழுவதும், சுற்றுப்புறங்களிலும் எள் விழ இடமின்றி மக்கள் கூடிவிட்டார்கள். நிறைய விருந்தனர் வந்திருக்கும் வீட்டில் எப்படி அதிகக் கலகலப்பும், பரபரப்பும், மகிழ்ச்சியும், உபசரணைகளும், உல்லாசமும் நிரம்பியிருக்குமோ அப்படி நகருக்கே உல்லாசம் வந்துவிட்டது போலிருந்தது; நகருக்கே விருந்து வந்தது போலிருந்தது.
பூக்கள் தீபதூப வாசனைகளின் நறுமணமும் வாத்தியங்களின் இன்னொலியும், ஆரவாரங்களின் அழகும், அலங்காரப் பந்தல்கள், அழகுத் தோரணங்களின் காட்சியும் நகரையே இந்திரலோகமாக்கியிருந்தன. சித்திரா பெளர்ணமி நகரையே சிங்கார புரியாக்கியிருந்தது. எங்கும் ஆரவாரம், எங்கும் மகிழ்ச்சி, எங்கும் விழாக்கோலம்.
இப்போது இந்த விழாவுக்காகவே ராணி மங்கம்மாளும், இளவரசர் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பரும் திரிசிரபுரத்திலிருந்த்து தமுக்கம் அரண்மையிலே வந்து தங்கியிருக்கிறார்கள். தமுக்கம் ராஜகிருஹத்திற்கு இப்போது புதுமணப் பெண்ணின் பொலிவு வந்திருக்கிறதென்றால் மகாராணியும் இளவரசரும் வந்து தங்கியிருப்பது தான் அதற்குக் காரணமாக இருந்தது.
நேற்று மீனாட்சி கல்யாணத்தைத் தரிசித்தாயிற்று. ஆற்றில் அழகர் இறங்குவதைக் கண்டு வணங்கிவிட்டு மகாராணியும், இளவரசரும் திரிசிரபுரத்திற்குத் திரும்பிவிடக் கூடுமென்று தெரிகிறது.
ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி ஆற்றின் கரைக்கு வந்ததும் குதிரை வாகனத்திற்கு மாறித் தரிசனமளித்தார் கள்ளழகர். காலை இளங்கதிரவனின் செம் பொன்னொளி பட்டு அழகரின் குதிரை வாகனம் மின்னுகிறது. இது வையை ஆறா அல்லது மக்கள் நதியா என்று மாற்றி நினைக்கும்படி நதிப்பரப்பே கண்ணுக்குத் தெரியாதபடி அவ்வளவு மக்கள் கூட்டம். அரண்மனைச் சேவகர்கள் வழிவிலக்கி இடம் செய்து கொடுத்தும் அந்தப் பெருங்கூட்டத்தினரிடையே ராணி மங்கம்மாளும் இளவரசர் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பரும் அமர்ந்திருந்த சித்திரப் பல்லக்கு, கீழிறங்க முடியாமல் இருந்தது. பல்லக்குத் தூக்கிகள் எப்படியோ சிரமப்பட்டுப் பல்லக்கை மணற்பரப்பில் இறக்கினர்.
மகாராணியும் இளவரசரும் பல்லக்கிலிருந்து இறங்கினர். அரசியையும், இளவரசரையும் கண்ட மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நெருக்கியடித்துக் கொண்டு காண முந்தினர். மகிழ்ச்சி ஆரவாரமும் வாழ்த்தொலிகளும் விண்ணை எட்டினாற்போல் முழங்கின. அனைவர் முகமும் பயபக்தியோடு கூடிய மகிழ்ச்சியை அடைந்தன.
இன்னும் இளமை வாடா வனப்பும், காம்பீர்யமும், கட்டழகுமாக ராணி மங்கம்மாள் இறங்கி நின்ற போது அந்த எடுப்பான எழில் தோற்றமே சுற்றி நின்றவர்களிடையே ஒரு பயபக்தியை உண்டாக்கிற்று. கறைதுடைத்த முழுமதி போன்ற ராணியின் அழகும், காம்பீர்யமும் இவள் கணவனை இழந்தவள் என்ற அனுதாப உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதில் தனது சாதுர்யத்தால் பாலப் பருவத்தைக் கடந்து இப்போதுதான் இளைஞனாகியிருக்கும் ரங்ககிருஷ்ண முத்து வீரப்பனுக்காக நாட்டைக் கட்டிக் காத்து வருகிற தைரியசாலி என்ற பெருமித உணர்வையே உண்டாக்கின.
மிக இளம் வயதாயிருந்தும் அரும்பு மீசையும், எடுத்து அள்ளி முடிந்த குடுமிக் கொண்டையும் ஆஜானுபாகுவான உயரமுமாயிருந்தான் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன். அழகில் தாய் மங்கம்மாளையும், உயரத்திலும் ஆஜானுபாகுவான உடலமைப்பிலும், தந்தை சொக்கநாத நாயக்கரையும் கொண்டு விளங்கினான் அவன். தெய்வ தரிசனத்தோடு ராஜ குடும்பத்தின் தரிசனமும் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தது மக்கள் கூட்டம்.
அழகர் ஆற்றில் இறங்கினார். ராணி மங்கம்மாளும், ரங்க கிருஷ்ண முத்துவீரப்பனும் கள்ளழகரின் திருவடிகளைச் சேவித்த அருள் உவகையோடு தமுக்கம் அரண்மனைத் திரும்பினர். நேரம் நண்பகலாயிருந்தது. தமுக்கம் அரண்மனையின் முகப்புத் தோட்டம் அமைதியாயிருந்தது.
அவர்கள் பல்லக்கு தமுக்கம் அரண்மனையில் நுழைந்த போதே அரண்மனை முகப்பிலுள்ள புல்வெளியில் புதிய குதிரைகள் இரண்டு மூன்று நின்று கொண்டிருந்தன. யாரோ தேடி வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. வந்திருக்கும் புதியவர்கள் யாராயிருக்கக் கூடும் என்கிற யோசனையுடனே ராணி மங்கம்மாளும், ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும் பல்லக்கிலிருந்து இறங்கினர்.
அவர்களுடைய சந்தேகத்தை அதிக நேரம் நீடிக்க விடாமல் அரண்மனைக் காவலாளி ஒருவன் வந்து தெரிவித்தான். அவன் எதிர்கொண்டு வந்து தெரிவித்த விதமே செய்தியின் அவசரத்தையும், அவசியத்தையும் உணர்த்துவதாயிருந்தது.
“திண்டுக்கல்லிலிருந்தும் அம்மையநாயக்கனூரிலிருந்தும் நம் படைத் தலைவர்களும், ஒற்றர்களும் அவசரமாகத் தங்களைக் காண வந்திருக்கிறார்கள் மகாராணீ!”
ராணி மங்கம்மாளோ, இளவரசனோ காவலாளிக்கு மறுமொழி எதுவும் கூறாமல், அவன் உரைத்த விவரத்தைக் கேட்டுக் கொண்டதை முகஜாடையால் ஏற்றுக்கொண்ட பின் உள்ளே விரைந்தனர். தெரிவதற்கிருந்த செய்தியில் அந்த இருவர் மனமுமே மிக விரைந்த நாட்டமும் பரபரப்பும் அடைந்திருந்தன. இளவரசன் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனை விட ராணி மங்கம்மாளின் மனம் தான் அதிகக் கலக்கமும் பரபரப்பும் அடைந்திருந்ததென்று சொல்லவேண்டும். மகாவீரனும், பேரழகனுமாகிய தன் கணவன் சொக்கநாத நாயக்கன் எந்தச் சூழ்நிலையில் காலமானான் என்பதை அவள் எண்ணினாள். நாட்டையும், தன்னையும், இளங்குருத்தான ரங்ககிருஷ்ணனையும் எந்த நிலையில் விட்டுச் சென்றார் என்பதையும் எண்ணினாள். நாட்டைச் சுற்றிலும் பகைவர்களும், ஆதிக்க வெறியர்களும், மதுரைச் சீமையைக் கைப்பற்றி ஆள இரகசிய ஆசை வைத்திருக்கும் அந்நியர்களுமாகச் சூழ்ந்திருக்கும் கவலைக்கிடமான காலத்தில் கணவனை இழந்து பால் மணம் மாறாத சிறுவன் ரங்ககிருஷ்ணனை இடுப்பில் ஏந்திச் சீராட்டி வளர்த்தது போலவே தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டையும் மற்றொரு குழந்தையாக எண்ணிப் பாதுகாக்க வேண்டி நேர்ந்த தன் மனச் சுமையின் கனத்தை எண்ணினாள். அனுபவங்களாலும், அவசியத்தாலும், அவசரத்தாலும், சந்தர்பங்களின் நிர்ப்பந்தங்களாலும், தான் மெல்ல அரசியல் சிக்கல்களில் சிக்கியதையும், சிக்கல்களிலிருந்து தன்னையும் நாட்டையும், ஆட்சியையும் விடுவிக்கக் கற்றுக் கொண்டதையும் நினைத்தாள்.
“அறிவு ஒருவனை வெறும் விவரந் தெரிந்தவனாக மட்டுமே ஆக்குகிறது. அனுபவம்தான் உலகிலேயே மிகப்பெரிய ஆசிரியன். அனுபவம் தான் திறமையைக் கற்றுக் கொடுக்கிறது. அனுபவம் தான் மனத்தையும், வாக்கையும் புத்தியையும் பளிச்சென்று இலட்சணமாகத் தெரியும்படி மெருகிடுகிறது” என்று பாவாடை அணியும் சிறுமியாக சந்திரகிரியில் தன் தந்தை லிங்கம நாயக்கரோடு வாழ்ந்த போது அவர் தனக்குக் கூறிக்கொண்டிருந்த புத்திமதி இப்போது கணவனின் மரணத்துக்குப்பின் இப்படித் தன் வாழ்விலேயே பலித்து விடும் என்று மங்கம்மாள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.
சிறு பருவத்தில் தந்தையிடம் கேட்டுக் கேட்டு ரசித்த இராமாயணம், பாரதம், முதலிய வீரதீரக் கதைகள் நினைவு வந்தன. பயம் தயக்கம் என்பதெல்லாம் என்னவென்றே அறியாமல் சந்திரகிரிக் காடுகளிலும் மலைகளிலும் தோழிகளோடும் தனியேயும் சுற்றிய நாட்கள் ஞாபகத்தில் மேலெழுந்து மிதந்தன. அப்படி அடங்காப்பிடாரியாகச் சுற்றிய நாட்களில் ஒரு நாள் தன் வளர்ப்புத் தாதியரும் செவிலித்தாயும் தந்தையிடம் போய், தன்னைப் பற்றிக் குறை கூறிய போது "உன்னை நான் சிறிதும் அடக்கவோ, ஒடுக்கவோ, கட்டுப்படுத்தவோ விரும்பவில்லை மகளே! நீ சுதந்திரமாகக் காட்டு மல்லிகை போல இஷ்டப்படி வளரலாம். சுதந்திரமாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகுந்த நல்ல கட்டுப்பாடுள்ளவர்களாக மாறுவதும், கட்டுப்பாடாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகாதபடி தாறுமாறாகத் திரிவதும் சகஜம். காடு மலைகளில் அலைகின்ற தண்ணீர் ஒரு நாள் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாக மாறிப் பேரும் புகழும் பெற்றுக் கடலை அடையும் தகுதியைப் பெறும் என்பது தான் நியதி. உன் தாதியாரும் செவிலியும் உன்னைப் பற்றிக் கூறும் குறைகளை நான் இலட்சியம் செய்யப் போவதில்லை. கவலைப் படாமல் உன் விருப்பப்படி இரு குழந்தாய்!” என்று தன்னைக் கூப்பிட்டு அன்போடு அரவணைத்துப் பிரியத்தோடு அவர் கூறிய நல்லுரைகளை எண்ணினாள். மனம் அந்நினைவில் இளகி நெகிழ்ந்தது.
காடு மலைகளில் அலைகின்ற தண்ணீரெல்லாம் கீழே இறங்கியதும் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாவது போல் தன் வாழ்வும் இப்போது ஆகியிருப்பதனை மங்கம்மாள் உணர்ந்தாள்.
“அம்மா!... என்ன யோசனை... இப்படி ஒரேயடியாக...? ஒற்றர்களும் படைவீரர்களும் இங்கே ஆலோசனை மண்டபத்து முகப்பில் காத்திருக்கிறார்கள். நீங்கள் பாட்டுக்கு ஏதோ யோசித்தபடியே அந்தப்புரத்தை நோக்கி நடக்கிறீர்களே?” என்று ரங்ககிருஷ்ணன் குறுக்கிட்ட பின்புதான் மங்கம்மாள் நிகழ்காலத்துக்கே வந்தாள்.
புகழ்பெற்ற திருமலை நாயக்கரின் பேரரும் தன் கணவருமான காலஞ்சென்ற சொக்கநாத நாயக்கரின் கம்பீரத் திருவுருவை மனக்கண்ணில் உருவகப்படுத்திப் பார்த்துவிட்டு அந்த நினைவு மாறுவதற்குள்ளே அதே ஞாபகத்தோடு அருகே உடன் வந்து கொண்டிருந்த மகன் ரங்ககிருஷ்ணமுத்து வீரப்பனையும் புறக்கண்களால் பார்த்து உள்ளூற ஒப்பிட்டுக் கொண்டாள் ராணி மங்கம்மாள்.
தஞ்சை மன்னர்களின் விரோதப் போக்கு, சேதுபதிகளின் மறவர் சீமை மனஸ்தாபங்கள், ரஸ்டம்கான் என்ற படைத் தளபதி தன் கணவரை ‘அரசரே இல்லை’ என்று கூறி அவமானப்படுத்த முயன்ற சம்பவம், கணவரின் சிரமங்கள், ஆட்சிக்கால வேதனைகள்... எல்லாம் ஞாபகம் வந்து அந்த ஞாபகத்தோடு மகனின் முகத்தை நம்பிக்கை பொங்கப் பார்த்தாள் அவள். அவன் சொன்னான் :
“ஏதோ கஷ்டம் வரப்போகிறது என்று இப்போது மனசில் படுகிறது அம்மா!”
மகனின் குரலிலே கவலை தோய்ந்திருப்பது தெரிந்திருந்தது.
“கவலைப்ப்டாதே! ஒவ்வொரு கஷ்டமும் நம்மை வளர்ப்பதற்குத்தான் வரும்! சுகங்கள் நம்மை ஒரேயடியாக அயர்ந்து தூங்கச் செய்துவிடாதபடி அடிக்கடி நம்மை விழிப்பூட்டுவதற்கு வருபவை எவையோ அவற்றிற்குத்தான் ஜனங்களின் பாமர மொழியில் கஷ்டங்கள் என்று பெயர் அப்பா!”
“கள்ளழகர் கருணையாலும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளாலும் உங்கள் அரிய ஆலோசனையின் உதவியாலும் எந்தக் கஷ்டத்தையும் வென்று விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது அம்மா!”
“மகனே! நம்பிக்கை தான் அரசியலில் தவம்! நம்பிக்கை தான் வெற்றி! நம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் ஒன்றைத் தொடங்கு முன்னேயே தோற்றுப் போகிறார்கள். நம்பிக்கை உள்ளவர்களோ தோற்றுப்போன பின்னும் வெற்றி கொள்ளத் தொடங்குகிறார்கள். இந்த தாரக மந்திரம் உன் இதயத்தில் இடைவிடாமல் ஞாபகம் இருக்க வேண்டும். இந்த ஒரே மந்திரத்தால் தானே பெண் பிள்ளையாகிய நானே இத்தனை காலம் இத்தனை துன்பங்களுக்கும் விரோதங்களுக்கும் நடுவே இந்த நாட்டையும் உன்னையும் பாதுகாத்து வளர்க்க முடிந்தது?”
இவ்வாறு கூறியபடியே மகனுடன் தமுக்கம் அரண்மனைக்குள்ளே இருந்த விசாலமான ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்தாள் ராணி மங்கம்மாள்.
அங்கே காத்திருந்த படைத் தலைவர்களும் ஒற்றர் தலைவர்களும் முன் வந்து ஏழடி விலகி நின்று பயபக்தியோடு ராணி மங்கம்மாளையும், இளவரசரையும் வணங்கினார்கள். மங்கம்மாள் தான் முதலில் அவர்களை வினவினாள்:“என்ன விஷயம்? நீங்கள் எல்லோரும் இத்தனை அவசரமாகப் புறப்பட்டு வந்திருப்பதிலிருந்து ஏதோ அவசரமான காரியம் என்று நான் அநுமானித்துக் கொண்டது சரியாக இருக்குமா?”
“உங்கள் அநுமானம் முற்றிலும் சரிதான் மகாராணீ! டில்லி பாதுஷா ஒளரங்கசீப்பின் படை வீரர்களும், செருப்பு ஊர்வலமும் திண்டுக்கல்லைக் கடந்து வேகமாக மதுரையை நோக்கி வந்து கொண்டிருப்பதைத் தெரிவிக்கவே நாங்கள் விரைந்து வந்தோம்”.
“இது படையெடுப்பா? அல்லது பயமுறுத்தலா?”
“இரண்டும்தான் மகாராணீ!”
“அது சரி; என்னவோ செருப்பு ஊர்வலம் என்கிறீர்களே...? அது என்ன கூத்து?”
“வருஷா வருஷம் தென்னாட்டு அரசர்களிடமும், சிற்றரசர்களிடமும் கப்பமும், வரியும் வாங்குவதற்குப் பாதுஷாவின் படைவீரர்கள் புறப்பட்டு வருவதுண்டல்லவா? இந்த வருஷம் ஒரு புது ஏற்பாடாக ஒளரங்கசீப்பின் கால் செருப்பு ஒன்றை யானை மேல் அலங்கார அம்பாரியில் ஜோடித்து வைத்து அனுப்பியிருக்கிறாரகள். கப்பம் கட்டுகிற நாட்டு அரசர்களும், மக்களும் அந்தச் செருப்பை வணங்கி வழிபட வேண்டுமாம்”.
“வணங்கி வழிபட மறுத்தால்?”
“அப்படி மறுப்பவர்களோடு அவர்கள் போர் தொடுப்பதாகப் பயமுறுத்துகிறார்கள்; அந்த பயமுறுத்தலுக்கு நடுங்கி எல்லா இடங்களிலும் அந்தப் பழைய செருப்புக்கு வணக்கமும், வழிபாடும் நடக்கிறது மகாராணீ!”
“இது, அக்கிரமம்... அநியாயம்...”
“அதிகாரத் திமிரில் இருப்பவர்கள் தங்கள் அக்கிரங்களையும், அநியாயங்களையும் கூடச் சட்ட ரீதியானவை என்று பிரகடனம் செய்து விட முடிகிறது அம்மா! அதை மீறினால் தண்டனை என்று அறிவித்து விடவும் முடிகிறது. அறியாது மக்கள் செய்யும் சில குற்றங்கள் சட்டப்படி தவறாகின்றன என்றால் இப்படி மன்னர்கள் செய்யும் சட்டங்களே தவறுகளாக இருக்கின்றன!”
“நம் நிலை என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம் என்றறிந்து செல்லவே மகாராணியையும், இளவரசரையும் காண வந்தோம்.”
“அம்மா! அழகரையும், ஆலவாயண்ணலையும் வணங்கிய தலையால் அந்நிய அரசனின் அடிமைச் சின்னமாகிய செருப்பை வணங்குவதற்கு ஒருபோதும் நாம் சம்மதிக்கக் கூடாது” என்று ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் அன்னையை முந்திக்கொண்டு கொதிப்படைந்து சீறினான்.
படைவீரர்கள் ராணி மங்கம்மாளின் முகத்தை உத்தரவுக்காகப் பார்த்தனர். அது பதற்றமோ, பரபரப்போ, சலனமோ அற்று நிதானமாகவும், சிந்தனை லயிப்போடும் இருந்தது. ஒவ்வொரு வார்த்தையாகத் தேர்ந்தெடுத்து அளந்து பதறாத குரலில் மங்கம்மாள் பேசலானாள்:
“நீ சொல்வதை நான் மறுக்கவில்லை முத்து வீரப்பா! ஆனால் இதை ஆத்திரத்தோடு சமாளிப்பதைவிட மிகவும் அடக்கமாகவும் இராஜ தந்திரத்தோடும் சமாளிக்க வேண்டும். முன் கோபமும், ஆத்திரமும் அரசியல் காரியங்களில் ஒரு போதும் வெற்றியைத் தராது. நமது எதிரியைச் சந்திக்கத்தக்க விதத்தில் நம்மைப் பலப்படுத்தி ஆயத்த நிலையில் வைத்துக் கொண்டு தான் செயலில் இறங்க வேண்டும். அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை.
‘பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்’
என்று வள்ளுவர் சொல்லியிருப்பதை நினைத்துப் பார்! எதிரியைக் கண்டு உடனே வியர்க்க விறுவிறுக்க முன் கோபப்பட்டுப் பயனில்லை. கோபம் முதலில் உள்ளத்தில் எழுதல் வேண்டும். பின் சமயம் பார்த்து அது வெளிப்படவும் வேண்டும்.”
“தங்கள் உத்தரவு எப்படியோ அப்படியே நடக்கும் மகாராணீ!”“எங்கள் இளவரசர் ரங்ககிருஷ்ண முத்து வீரப்பர் சித்ரா பௌர்ணமிக்காகத் தரிசனத்துக்கு வந்த இடத்தில் நோய்வாய்ப்பட்டு மறுபடி திரிசிரபுரத்துக்கே திரும்பிவிட்டார். ஆகையால் நீங்கள் மதுரையில் சென்று அவரைச் சந்திக்க இயலாத நிலை“ என்று கோபப்படாமல் பதறாமல் அடக்கமாகச் சென்று பாதுஷாவின் படைத் தலைவனிடம் தெரிவியுங்கள்...”
“பாதுஷாவின் படைத்தலைவன் தங்களைப்பற்றி விசாரித்தால்...?”
“என்னை இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம். அரசியல் காரியங்களை இளவரசரே நேரில் கவனிப்பதாகச் சொல்லிக் கொள்! நான் செய்ய வேண்டியதைப் பின்னால் திரை மறைவிலிருந்து செய்து கொள்ள முடியும்“.
“பாதுஷாவின் படைகளும் செருப்பு ஊர்வலமும் நம் ராஜ தானியாகிய திரிசிரபுரத்துக்கே தேடிக் கொண்டு வந்தால்...?”
“அப்படி வந்தால் அவர்களையும் அந்த பழைய செருப்பையும் எப்படிச் சந்திக்க வேண்டுமோ அப்படிச் சந்திக்க எல்லாம் ஆயத்தமாயிருக்கும், கவலை வேண்டாம். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. வீரர்களே! நாம் கடவுளுக்குப் பக்தர்களாக இருக்க முடியுமே ஒழிய மனிதர்களுக்கு அடிமைகளாக இருக்க முடியாது.”
இதைக் கூறும் போது ராணியின் குரலில் அழுத்தமும் காம்பீர்யமும் ஓர் உத்தரவின் உறுதியும் தொனித்தன.
இப்படி உத்தரவு கிடைத்தபின் ராணியையும் இளவரசரையும் வணங்கிவிட்டுப் புறப்பட ஆயத்தமான படை வீரர்களின் தலைவனை மீண்டும் அருகே அழைத்துத் தணிந்த குரலில் அவனிடம் சில இரகசிய உத்தரவுகளையும் பிறப்பித்த பின், “நினைவிருக்கட்டும்! நான் கூறியதை எல்லாம் உடனே நிறைவேற்று. நானும் இளவரசரும் இன்று மாலையிலேயே திரிசிரபுரம் புறப்பட்டுப் போய்விடுவோம்” என்றாள் அவள்.வடக்கே அம்மைய நாயக்கனூரிலிருந்தும், திண்டுக்கல்லிலிருந்தும் வந்திருந்த படை வீரர்கள், ஒற்றர்களின் குதிரைகள் உடனே அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டதைத் தமுக்கம் மாளிகையின் உப்பரிகையிலிருந்து ராணியும் இளவரசரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.