நாடக மேடை நினைவுகள்/எட்டாம் அத்தியாயம்

விக்கிமூலம் இலிருந்து

எட்டாம் அத்தியாயம்

ள்வர் தலைவன்’ என்பது நான் பிறகு எழுதிய நாடகமாகும். அது சோகரசமமைந்தது. ஆங்கிலேய பாஷையில், நாடக வகுப்பில் டிராஜடி (Tragedy) என்று சொல்லும் வகுப்பைச் சார்ந்தது. கதாநாயகன் முதலியோர் மரிக்க, கடைசியில் துக்ககரமாய் முடியும் நாடகத்திற்கு டிராஜடி என்று பெயர். சம்ஸ்கிருத பாஷையில் இப்படிப்பட்ட நாடகங்கள் கிடையா. அதற்கு முக்கியக் காரணம், நாடகமானது இடையில் எவ்வளவு சோகரசம் கலந்ததாயிருப் பினும், முடிவில் சந்தோஷமாய் முடிய வேண்டுமென்பது சம்ஸ்கிருத நாடக லட்சணங்களில் முக்கியமான தொன்றாம். தமிழ் பாஷையிலும் அதுவரையில் இவ்வாறு சோகமாய் முடியும் நாடகங்கள் இல்லையென்றே கூற வேண்டும். தமிழ் பாஷையில் நான் அறிந்தவரை, சோகமாய் முடியும் நாடகங்களில் இதுதான் முதலாம். இவ்வாறு இந்நாடகத்தை துக்ககரமான முடிவுடன் முடித்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அது கீழ்வருமாறு:- முன்பு கூறிய ‘லீலாவதிசுலோசனா’ என்னும் நாடகம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடப்பட்ட பொழுது, அதுவரையில் எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேராத என் பால்ய சிநேகிதராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றவர்களைப் போல் அதைப் பார்க்க வந்தாராம். அது அப்பொழுது எனக்குத் தெரியாது. பிறகுதான் அறிந்தேன். அந் நாடகத்தைப் பார்த்த பிறகு எனது நண்பர் ஒரு பத்திரிகையில் (ஹிந்துப் பத்திரிகையில் என்று எனக்கு ஞாபகம்) அதைப்பற்றி ஒரு விமரிசை எழுதினார். அன்றியும் பிறகு ஒருநாள் அவர் என்னைச் சந்தித்த பொழுது, அவரது அபிப்பிராயத்தை எனக்கு நேராகவும் அறிவித்தார். அதன் தாத்பர்யம் என்னவென்றால், “நாடகம் நன்றாகத் தானிருந்தது; நன்றாகத்தான் நடிக்கப்பட்டது; ஆயினும் நாடகாசிரியன் அதைக் கலியாணமாகிய சந்தோஷத்துடன் முடித்திருக்கக் கூடாது; துக்ககரமான மரணங்களுடன் முடித்திருக்க வேண்டும். எங்ஙனமெனில், சுலோசனையைக் கமலாகரன் ஸ்ரீதத்தன் உத்தரவின்படி கொன்றிருக்கவேண்டும்; உடனே ஸ்ரீதத்தன் ஓடிவந்து, சுலோசனை நிரபராதியாகக் கொல்லப் பட்டதைக் கண்டு தன்னைத்தானே வெறுத்துக்கொண்டு தற்கொலை புரிந்திருக்க வேண்டும்; இதைவிட்டு, இந் நாடகாசிரியன், சுலோசனையும் ஸ்ரீதத்தனும் மணம் புரியும்படி விட்டது, தற்கால நாடகவியலுக்குப் பொருத்தமானதன்று” என்று தெரிவித்தார். நாடகத்தை சோகரசத்துடன் முடிக்க இந் நாடக ஆசிரியனுக்குத் தைரியம் இல்லை என்று ஏளனம் செய்தார். இதைக் கேட்டவுடன், எனக்குள் ஓர் வீம்பு உண்டாயிற்று. ‘ஆகட்டும்! அப்படியா சமாச்சாரம்! நான் இனி எழுதுகிற ஒரு நாடகத்தில், ஒரு நாடகப் பாத்திரம் பாக்கியில்லாமல் எல்லோரையும் கொன்று, முடிவில் உனக்கு எவ்வளவு சோக ரசம் வேண்டுமோ, அதை வட்டியுடன் தருகிறேன்!” என்று தீர்மானித்தேன். அந்தத் தீர்மானத்துடன் எழுதிய நாடகம் “கள்வர் தலைவன்.

இக் “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தைப் பெரும்பாலும் எங்கள் எழும்பூர் பங்களாவாகிய “பம்மல் அவுஸ்” என்னும் இடத்தில் எழுதி முடித்தேன். அச்சமயம் யாதோ ஒருகாரணத்தினால் என் மனம் சஞ்சலமடைந்திருந்தது. அதனால் ஒரு நாடகத்தில் எவ்வளவு சோகரசமமைக்கக் கூடுமோ அவ்வளவையும் நிரப்பி இந்த நாடகத்தை எழுதினேன். இந்நாடகத்தை எனது நண்பர்கள் வாசித்துப் பார்ப்பார்களாயின் இதன் உண்மை அவர்களுக்குத் தெரியும். புத்திக் கூர்மையுடைய ஒருவன் ஈசன் தனக்கருளிய புத்தியை நல்வழியில் உபயோகியாது, தீய வழியில் உபயோகித்தால், அதனால் என்னென்ன தீமைகள் நேர்கின்றன என்பதே இந் நாடகத்தின் முக்கிய கருத்தாம்.

முன்பு நான் எனது நண்பர்களுக்குத் தெரிவித்தபடி, என் வழக்கத்தின்படி, எங்கள் சபையிலிருந்த இன்னின்ன அங்கத்தினர்க்கு இன்னின்ன நாடகப் பாத்திரம் என்று தீர்மானித்து, அந் நாடகத்தை எழுதி முடித்தேன். என் பழைய நண்பராகிய அ. வெங்கடகிருஷ்ணப் பிள்ளை , ஏதாவது ஒரு நாடகத்தில் தான் நாடகத் தலைவனாக நடிக்க வேண்டுமென்று என்னைக் கேட்டுக்கொள்ள, அவர் படிக்கும் சக்தியைக் கருதி அவருக்காக “ஹேமாங்கதன்” என்னும் நாடகப் பாத்திரத்தை எழுதினேன். சோகரசத்தில் நன்றாய் நடிப்பாரெனக் கருதி கிருஷ்ணசாமி ஐயருக்காக “சௌமாலினி” என்னும் நாடகப் பாத்திரத்தை எழுதினேன். தன் பாடல்களினால் சபையோரை மிகவும் ரமிக்கச் செய்வாரெனக் கருதியும் எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்கு “பால சூரியன்” பாத்திரத்தை ஏற்படுத்தினேன். ஸ்வாமி கொடுத்த புத்தியை நல்வழியில் உபயோகிக்காமல், கெட்ட வழியில் உபயோகித்து, விஷப்பரீட்சகனாகி, அதனால் பல துயரங்களை அனுபவித்து, முடிவில் தன் உயிரையே இழந்த ஜெயபாலன் என்னும் பாத்திரத்தை நான் எடுத்துக்கொண்டேன். “லீலாவதி - சுலோசனா” நாடகத்தில் பிரதாபசீலனாக நன்றாக நடித்த ராஜரத்தின முதலியாருக்கு “சௌரிய குமாரன்” என்னும் பாத்திரத்தைக் கொடுத்தேன். வாஸ்தவத்தில் வயிறு கொஞ்சம் பெருத்தவராயிருந்த ராஜகணபதி முதலியாருக்காக, “வயத்தான்” என்னும் கள்வன் பாத்திரம் எழுதி வைத்தேன்.

அக்காலத்தில் எங்கள் ஆக்டர்களெல்லாம் ஒத்திகைகளை வெகு குதூஹலத்துடனும் சுறுசுறுப்புடனும் நடாத்துவது வழக்கம். இப்போதிருப்பதுபோல் பெரும்பாலும் அக்காலம் அச்சிட்ட நாடகங்கள் கிடையாது. ஒவ்வொரு ஆக்டரும் தனது பாகத்தை எழுதிக்கொண்டுதான் படித்தாகவேண்டும். நான் காட்சி காட்சியாக எழுதி முடித்தவுடன், அவரவர்கள் தங்கள் தங்கள் பாகத்தை அவ்வப்பொழுதே எழுதிக்கொண்டார்கள். இப்படித் தாங்களாக எழுதிக் கொள்வதனால் ஒரு பெரும் நன்மையுண்டு. ஒரு ஆக்டருக்குப் பாடம் நன்றாய் வர வேண்டுமென்றால், தன் பாகத்தைப் பத்து முறை படிப்பதை விட, ஒரு முறை எழுதுதல், அதிகப் பிரயோஜனத்தைத் தரும்.

நாடகத்தைச் சீக்கிரம் கொடுக்க வேண்டுமென்று எண்ணி, ஒத்திகைகள் இரவு பகலாக நடத்தினோம். அச்சமயம், என் தகப்பனார், அண்ணன்மார் முதலிய பந்துக்கள், என் மனைவி உட்பட, காசி யாத்திரைக்குப் போயிருந்தார்கள். நான் மாத்திரம் லா (Law) பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தபடியால், அவர்களுடன் போவதற்கில்லை. நான் தனியாக “பம்மல் ஹவுஸ்” என்னும் எங்கள் பங்களாவில் இருந்தேன். என் தகப்பனார் வண்டி, எங்கள் வண்டி இரண்டும் என் சுவாதீனத்தில் இருந்தன. காலை எழுந்தவுடன் ஒரு வண்டியைப் போட்டுக்கொண்டு எழும்பூரிலிருந்து பட்டணம் வந்து, சில ஆக்டர்களை அழைத்துக்கொண்டு, எங்கள் பங்களாவுக்குப் போய், அவர்களுக்கு ஒன்பது மணிவரை ஒத்திகை நடத்துவேன். பிறகு அவர்களை மறுபடி பட்டணத்துக்குக் கொண்டுவந்து விடுவேன். மத்யானம் என் லா பரீட்ச்சைக்காகப் படிப்பேன். சாயங்காலம் இன்னொரு வண்டியிலேறி, மற்ற ஆக்டர்களையெல்லாம் அவரவர்கள் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு, எங்கள் சபைக்குப்போய் அவர்களுடைய பாடங்களை ஒத்திகை செய்து, அவரவர்கள் வீட்டிற்குக் கொண்போய் விட்டுவிட்டு, இரவு ஒன்பது மணிக்கு நான் எழும்பூர் போய்ச் சேர்வேன். இம்மாதிரியாக ஒத்திகைகள் வெகு மும்முரமாக நடத்தி நாடகத்தைச் சித்தம் செய்தோம். ஓர் இரவு உடையுடன் ஒத்திகை போட்டுப் பார்த்த பிறகே, விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகமாடத் தினம் குறித்துக்கொண்டோம்.

நோட்டீசுகளையெல்லாம் முன்போலவே ஏராளமாய்ப் பிரச்சாரம் செய்து, விக்டோரியா ஹாலில் 1894 ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 31ஆம் தேதி நாடகத்தை நடத்தினோம். இந்நாடகத்திற்கு வேண்டிய பாட்டுகளையெல்லாம், முன்பு கோபித்துக் கொண்டு போன தாயுமானசாமி முதலியார், மறுபடியும் எங்களிடம் வந்து சேர்ந்து, தக்கபடி எழுதிக் கொடுத்தார். அப்பாட்டுகளையெல்லாம் கீதமஞ்சரி என்னும் பெயருடன் அச்சிட்டிருக்கும் பாட்டு புஸ்தகத்தில் காணலாம்.

இனி அன்றையத் தினம் நடந்த நாடகத்தைப்பற்றி விவரமாக எழுதுகிறேன்.

“கள்வர் தலைவன்” என்னும் இந் நாடகத்தைச் சரியாக ஒன்பது மணிக்கு ஆரம்பித்தோம். முடிவதற்குச் சற்றேறக் குறைய 2 மணி ஆயிற்று. “லீலாவதி-சுலோசனா"வைப் போல் அத்துணைப் பெரிய நாடகமாயில்லாவிட்டாலும், ஐந்து மணி நேரம் பிடித்தது. இப்பொழுது இந்நாடகத்தை எங்கள் சபையோர் ஆடுவதென்றால் ஏறக்குறைய நான்கு மணிக்குள் முடித்துவிடலாம் என்று தோன்றுகிறது. அப்பொழுது அத்துணை நாழிகை பிடித்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அக் காலம் ஒவ்வொரு காட்சி முடிந்தவுடன், இன்னொரு காட்சி ஆரம்பிப்பதற்கு முன் டிராப் படுதாவை விட்டு பின் நடக்க வேண்டிய காட்சிக்காக நாடக மேடையில் ஏற்பாடு செய்வது வழக்கம். இப்பொழுதும் சில சமயங்களில் சில காட்சிகளுக்கிடையில் அவ்வாறு செய்தபோதிலும் பெரும்பாலும் அவ்வழக்கத்தை விட்டோமென்றே சொல்லலாம். பார்சி நாடகக் கம்பெனியார் முதல் முதல் சென்னைக்கு வந்து, ஒரு நாடகத்தில், இரண்டு மூன்று முறை டிராப் படுதாவை விட்டு அவகாசம் கொடுக்கும் வழக்கத்தை சென்னையிலுள்ள நாடகக் கம்பெனிகளுக்குக் கற்பித்தனர் என்றே சொல்ல வேண்டும். இவ் வழக்கத்தை அனுசரித்தால் நலமாயிருக்குமென்று தோற்றுகிறதெனக்கு. நாடகங்கள் எழுதும் பொழுதே, இதற்குத் தக்கபடி நாடக ஆசிரியர்கள் எழுதி வந்தார்களானால் மிகவும் நலமாயிருக்கும். மேடையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய இரண்டு பெரிய காட்சிகளுக் கிடையில், ஏற்பாடுகளில்லாத-திரை மாத்திரம் விட வேண்டிய ஒரு சிறிய காட்சியை அமைத்து, எழுதி வருவார்களானால், நாடகமாடும் பொழுது, காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் அதிக அவகாசம் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல், நாடகமானது விரைவில் நடந்தேறி, சீக்கிரம் முடிவு பெறும் நான் பிற்காலத்தில் எழுதிய நாடகங்களில் பெரும்பாலும் இம் முறையை அனுசரித்திருக்கிறேன்.

இக் “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தில் காட்சிகளில் செய்ய வேண்டிய “சீனிக் அரேன்ஜ்மென்ட்ஸ் ” (Scenic arrangements) என்று சொல்லப்பட்ட நாடக மேடை ஏற்பாடு களை எல்லாம், எனது நண்பர்களாகிய ஸ்ரீனிவாச ஐயங்காரும், ஸ்ரீனிவாசபாய் என்பவரும் தலைமேற்கொண்டு வெகு விமரிசையாய்ச் செய்தனர். அவ்விருவரும் இன்னும் எனது இதர நண்பர்களுடன் “லீலாவதி- சுலோசனா” நாடகத்தைப் பார்த்த பிறகு, எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தனர். இது ஒன்றே அந்த “லீலாவதி- சுலோசனா” என்னும் நாடகம் நன்றாகயிருந்ததென்பதற்குப் போதுமான அத்தாட்சியாம். இந்த நாகடத்தில்தான் நாடகத்தின் காலத்திற்குத் தக்கபடி, மேற்சொன்ன ஏற்பாடுகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து நாங்கள் செய்ய ஆரம்பித்தது. இதற்கு முக்கியக் காரணபூதராயிருந்தது எனது நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்காரே. அதற்கு முன்பாகச் சாதாரணமாக நாடக மேடைகளில் நடந்து வந்த ஆபாசத்தைச் சற்று விவரமாகக் குறித்தால்தான், எனது நண்பர்களுக்கு இவ்விஷயம் வெளியாகும்.

அக்காலத்தில் சில முக்கியமான காட்சிகளுக்குத் தவிர, மற்றக் காட்சிகளுக்கெல்லாம் இன்னின்ன திரையை விட வேண்டுமென்னும் நியமமே கிடையாதென்றே சொல்ல வேண்டும். நான் எனது கண்ணாரக்கண்ட ஒரு உதாரணத்தைக் கொடுக்கிறேன். “திரௌபதி வஸ்திராபஹரணம்” என்னும் நாடகத்தில் துரியோதன மகாராஜன் தன் மாமனாகிய சகுனியிடம் தான் பாண்டவர் சபையில் பட்ட அவமானத்தைச் சொல்லும் காட்சிக்கு ஒரு தெருப்படுதா விடப்பட்டிருந்தது! அத்தெருப் படுதாவில் சென்னை போஸ்ட் ஆபீசும் மின்சார வண்டிகள் போவதற்காக வேண்டிய இரும்புக் கம்பங்களும், தந்திகளும் வரையப்பட்டிருந்தது! நாடகம் நடந்த காலம் துவாபர யுக முடிவு; அன்றியும் வணங்காமுடி மன்னனும் அவன் மாமனாகிய சகுனிராஜனும் உட்கார்ந்து பேச, அந்த வீதியின் மத்தியிலிருந்ததுபோல், ஆஸ்டிரேலியா தேசத்தில் செய்யப்பட்ட இரண்டு பென்ட்வுட் (Bent Wood) நாற்காலிகள் போடப்பட்டிருந்தன! என்னடா, இப்படி துவாபர யுகத்தில் நடந்திருக்குமா? ராஜாதி ராஜனெனப் பெயர் பூண்ட துரியோதனன், சகுனியுடன் மந்திராலோசனை செய்யும் பொழுது, ஒரு வீதியில்தான் செய்வானா? அதுவும் சென்னப் பட்டணம் போஸ்ட் ஆபீசுக்கெதிராகவா? அவர்களுக்கு பென்ட் பிவுட் நாற்காலிகள் தவிர, உட்கார வேறு ஆசனங்க ளில்லையா? என்று இம்மாதிரியான கேள்விகளைக் கேட்பார், அக்காலம் அதிகமாக இலர். இப்படிப்பட்ட ஆபாசங்களையெல்லாம் தவிர்க்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு, நாடகத்தின் காலத்திற்கும் காட்சிகளுக்கும் தக்கபடி அரங்க பூமியில் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று மன்றாடி, எனது நண்பர், இக் ‘கள்வர் தலைவன்’ எனும் நாடகத்திற்கு மிகுந்த சிரத்தையுடன் கஷ்டப்பட்டு ஏற்பாடுகள் செய்தார். அதற்கு முன் எங்கள் சபையிலும் மேற்சொன்ன படியான ஆபாசங்கள் பல இருந்தன; இப்பொழுதும், இக்குற்றமானது முற்றிலும் அற்றுப் போய் விட்டது என்று நான் சொல்லவில்லை. ஆயினும் தற்காலம் கூடிய மட்டும் இப்படிப்பட்ட ஆபாசமான விஷயங்கள் இராவண்ணம் பார்த்துக் கொள்கிறோம். நம் நாட்டிலுள்ள நாடகக் கம்பெனிகளிலும், இதர சபைகளிலும், இக்குற்றமானது முற்றிலும் களையப்பட்டால் மிகவும் நலமெனவெண்ணி, இவ்விஷயத்தைப்பற்றி, சற்று விவரமாய் எழுதலானேன். நாடக நிகழ்காலத்தை உணர்ந்து, அக்காலத்திற்கேற்றபடியும், காட்சிக்கு ஏற்றபடியும் ஏற்பாடுகள் செய்வது எக்காரணத் திலாவது கடின மாயிருந்தால், மேல் நாட்டாரும் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் செய்கிறபடி, வெறும் திரையொன்றை விடுவதே மேலாகும்.

இந்நாடகத்திற்காக ஸ்ரீனிவாச ஐயங்காரும், ஸ்ரீனிவாச பாய் என்பவரும் செய்த ஏற்பாடுகளைப்பற்றி இன்னொரு விஷயம் எடுத்துரைக்க விரும்புகிறேன். இந் நாடகத்திற்குச் செய்த மேற்கண்ட ஏற்பாடுகளெல்லாம் மிகவும் பொருத்த மானவையாயும், அழகாயும் இருந்தபோதிலும், அதற்காக அவர்கள் சபையின் பணத்தைச் செலவழித்த ரொக்கமெல்லாம் சுமார் ஏழரை ரூபாய் என்று எனக்குக் கவனமிருக்கிறது! ஆகவே நாடகங்களை நடத்த வேண்டுமென்று விரும்பும் எனது நண்பர்கள், இவ்வாறு செய்வதில் அதிக செலவு பிடிக்குமென்று பயப்பட வேண்டியதில்லை. நூற்றுக் கணக்காகக் செலவழித்துக் காட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டிய நிமித்தமில்லை. காலத்திற்குத் தக்கபடி ஏற்பாடு செய்ய வேண்டுமென்பதுதான் முக்கியம் என்று அறிவார்களாக.

இக் “கள்வர் தலைவன்” நாடகம் அன்று நடித்தபொழுது முக்கியமாகப் பெயர் பெற்றவர்கள், சௌமாலினியாக நடித்த அ. கிருஷ்ணசாமி ஐயரும், பாலசூர்யனாக நடித்த எம். வை. ரங்கசாமி ஐயங்காருமே; இவர்களுடைய பாடல்களும் வசனமும் மிகவும் நன்றாக இருந்ததென்று எல்லோரும் புகழ்ந்தனர். முக்கியமாகப் பாலசூர்யன், தன் தாயாகிய சௌமாலினியை விட்டுச் சிறைச்சாலையிலிருந்து பிரிக்கப்பட்ட காட்சி, எல்லோருடைய மனத்தையும் உருக்கியது. சௌமாலினி தன் கைக் குழந்தையுடன் மரணமடைந்த காட்சி அநேகம் ஸ்திரீ புருஷர்கள் கண்ணீர்விடச் செய்ததெனக் கேள்விப்பட்டேன். நானும் ஜெயபாலனாக நடித்தது நன்றாயிருந்ததெனச் சொன்னார்கள்.

நான் அன்று ஜெயபாலன் வேடம் பூண்டதில் ஒரு சிறு சமாச்சாரம் ஞாபகமிருக்கிறது. அப்பொழுது எனக்கு வயது 21. நல்ல யௌவனம். என் தாடைகளெல்லாம் நல்ல ரக்த புஷ்டியுடையவைகளாயிருந்தன. விஷத்தினால் பீடிக்கப்பட்ட ஜெயபாலன் வேடத்திற்கு அப்படி யிருக்காதென்றெண்ணித் தாடைகள் வற்றினவைகளாய்த் தோற்றுமாறு, நாடக தினத்திற்குச் சற்றேறக் குறைய ஒரு மாச காலத்துக்கு முன்பாக, ஒரே வேளை உணவு உட்கொண்டு வந்தேன்! தற்காலம் எப்படிப்பட்ட ரக்த புஷ்டியுடையவனையும், மெலிந்த வனாகத் தோற்றும்படி செய்யவல்ல-முகத்தில் பூசும்படியான வண்ணங்களின் குணத்தை அப்போது அறிந்திலன். அறிந்திருந்தேனாயின் நான் அவ்வாறு கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லை.

இந்நாடகத்தைப்பற்றி இன்னொரு சமாச்சாரம் முக்கியமாக எனக்கு ஞாபகம் வருகிறது. நாடகத்தின் இடை இடையில் ஆக்டர்கள் நன்றாய் நடிக்கும்பொழுதெல்லாம் சபையோர்கள் கரகோஷம் செய்து வந்த போதிலும், நாடகம் பூரணமாகி முடிந்தவுடன், எல்லோரும் மௌனமாயிருந்தனர்! ஒரு பத்து விநாடி செயலற்றிருந்தே பிறகு மெல்ல எழுந்து அவரவர்கள் விட்டிற்குச் சென்றனர்; இதற்கு முக்கியமான காரணம் கடைசி காட்சியில், கள்வர்கள் தவிர மற்றெல்லா நாடகப் பாத்திரங்களும் அரங்கத்தில் மடிந்ததே என்பதற்குச் சந்தேகமில்லை. மிகவும் துக்ககரமாய் முடிந்தது ஜனங்களைப் பிரமிக்கச் செய்தது; திருப்தியைக் கொடுக்கவில்லை; இதுவரையில் பாராதபடி, என்னடா இப்படி நாடகம் முடிந்ததே என்கிற ஆச்சரியத்துடனும் விசனத்துடனும் சென்றனர் என்றே சொல்ல வேண்டும். இதைப்பற்றி, இக் ‘கள்வர் தலைவன்’ நாடகத்தை நான் அச்சிட்ட பொழுது, பாயிரத்தில் எனது நண்பராகிய ஸ்ரீனிவாஸ ஐயங்கார் வெகு விமரிசையாய் எழுதியிருக்கிறார். இதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பும் நண்பர்கள் இந்நாடகத்தின் முதற் பதிப்பில், ஆங்கிலத்தில் இதைக் காணலாம். இப் புஸ்தகம் இரண்டு பதிப்பும் ஆகிவிட்டது. மூன்றாம் பதிப்பு சீக்கிரத்தில் வெளிவரும்.

இந்நாடகத்தைப்பற்றிக் கடைசியாக என் நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்நாடகமானது சோகரசமமைந்ததாய், மரணங்களுடன் முடிவு பெறுகின்றமையால், கடைசியில் எங்கள் சபை வழக்கம்போல், “கல்லார்க்கும் கற்றவர்க்கும்” என்னும் ஸ்தோத்திரப் பாடலையாவது அல்லது மங்களப் பாட்டையாவது, பஹிரங்கமாய்ப் பாடாது நிறுத்தியதேயாம். அதுமுதல் சோகத்துடன் முடியும் நாடகங்களிலெல்லாம் இந்த வழக்கத்தை அனுசரித்து வருகிறோம்; ஆயினும் பழைய வழக்கத்தை முற்றிலும் விடக்கூடாதென்று திரைக்குப் பின்னால், மெல்ல, மேற்சொன்ன பாட்டுகளைப் பாடுகிறோம். தற்காலத்தில் இந்தக் “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தை முதல் முதல் என் நண்பர்களுக்கெல்லாம் படித்துக் காட்டிய பொழுதே, எனது பழைய நண்பராகிய ஜெயராம் நாயகர், “என்னப்பா இது? மிக்க துக்ககரமாயிருக்கிறதே! கடைசியில் எல்லோரும் இறந்து போய்விடுகிறார்களே ! அசுபமாய் முடிகிறதே! இதை ஆடுவது நமது சபைக்கு விருத்திகரமல்ல” என்று ஆக்ஷேபித்தார். அவர் சொன்னதற்குத் தகுந்தாற்போல், எங்கள் சபையார் இந்த நாடகத்தை நடித்த பிறகு பலவிதக் காரணங்களால் ஒரு வருஷம் வரையில் ஒரு நாடகமும் ஆடவில்லை! அங்கத்தினர்க்குள் குட்டிக் கலகங்கள் பிறந்து சபை செயலற்றிருந்தது. அன்றியும், இது என் சொந்த நாடகமாயிருந்த போதிலும் இதன்மீது நான் அவ்வளவு பிரீதி கொள்ளாததற்கு இன்னொரு முக்கியமான காரணம் நேர்ந்தது. இந்நாடகத்தை நடித்தபொழுது, என் அருமைத் தந்தை காசி யாத்திரையாகப் போயிருந்தார் என்று முன்பே தெரிவித்தேனல்லவா? அவர் காசியிலிருந்த பொழுது இந்நாடகத்தை நேரிற்பார்த்த, அவரது அந்தரங்க சிநேகிதர்களில் ஒருவராகிய சப் ஜட்ஜ் வேலை செய்து பென்ஷன் வாங்கிக்கொண்ட, கனகசபை முதலியார் என்பவர், என் தகப்பனாருக்கு இந்த நாடகத்தையும், நான் அதில் நடித்த விதத்தையும் புகழ்ந்து நான்கு ஐந்து பக்கங்கள் எழுதியனுப்பினார். இந்தக் கடிதம் இன்னும் என்னிடம் பாதுகாத்து வரப்பட்டிருக்கிறது. காசி யாத்திரையிலிருந்து திரும்பி வந்த என் தகப்பனார் அதை என்னிடம் கொடுத்து, அந்த நாடகத்தை நான் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார். ஒரு முறை ஆடிய நாடகத்தை மறுமுறை ஆடுவதா என்று என் அறியாமையால் மறுத்தேன். அவ்வளவுதான் அக்காலத்தில் நாடகங்களைப் பற்றி எனக்கிருந்த அறிவு; நல்ல நாடகமாயிருந்தால் பலர் பார்க்கும்படியாக அதைத் திருப்பித் திருப்பி ஆடவேண்டு மென்று என் தந்தையார் எவ்வளவு சொல்லியும் என் செவிக்கேறவில்லை. ஒரு நாடகமானது அடிக்கடி ஆடப்படுவதே அதற்குப் பெருமையென்பதை அப்பொழுது சற்றும் அறிந்திலன். இவ்வாறு என் மூடத்தனத்தினால் நான் பிடிவாத மாய் மறுக்கவே, என் தகப்பனார், அதைப்பற்றிப் பேசுவதை விட்டனர். பிறகு சில மாதங்களுக்குள், என் பூர்வ பாபவசத் தால், என் தந்தை ‘கான்சர்’ என்னும் தீராத நோயால் பீடிக்கப்பட்டார். வைத்தியர்கள் இது தீராத நோய், அவர் பிழைப்பது அரிது என்று எங்களுக்கு இரகசியமாகத் தெரிவித்தனர்; அவருக்கும் இவ்வியாதி நீங்கி நாம் பிழைப்பது கடினம் என்று தோன்றிவிட்டது. இப்படியிருக்கும் சமயத்தில், ஒருநாள் என் அருமைத் தந்தை “சம்பந்தம், நான் இறப்பதற்குள், உனது நாடகம் ஒன்றைப் பார்த்துவிட்டுத்தான் இறக்கவேண்டும்” என்று வற்புறுத்தினார். அப்பொழுது எனக்கு வந்த துக்கம் கொஞ்சம் அல்ல. நான் என் செய்வது? அவர் இருந்த இருப்பில், துக்ககரமான, அக் “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தை அவர் முன் ஆட எனக்கு மனம் ஒப்பவில்லை! ஆயினும் எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு நாடகத்தை அவர் பார்க்கும்படி செய்யவேண்டுமென்று தீர்மானித்தவனாய் ஒரு சனிக்கிழமை, மியூஜியம் (Museum) புஸ்தக சாலைக்குப் போனேன். அங்கு ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் “தி ஐ ஆப் லவ்” என்கிற (The Eye of Love) பெயர் கொண்ட, ஒரு சிறு நாடிகையைப் பார்த்தேன். இதைத் தமிழில் எழுதலாமாவென்று யோசித்துக்கொண்டே வீட்டிற்குத் திரும்பினேன். பிறகு இது மிகவும் சிறிதாயிருக்கிறது என்று அந்த எண்ணத்தை விட்டேன். (இதைப் பெரிதாக்கிக் காதலர் கண்கள் என்னும் நாடகமாகப் பல வருஷங்கள் கழித்து எழுதி முடித்தேன். அக்கதையை அப்புறம் எனது நண்பர்களுக்கு உரைக்கிறேன்.) வீட்டிற்குப் போனதும், மஹாபாரதம் ஒன்று என் மேஜையின் மீதிருந்தது. அதைத் திறந்து படித்து, பயாதியின் கதையை நாடகமாக எழுதலாமென்று தீர்மானித்தேன். இதை ஒரு வாரத்திற்குள் எழுதி, ஒத்திகைபோட்டு, நாடகமாக முடித்ததை வரிசைக்கிரமத்தில் பிறகு எழுதுகிறேன். இவ்விடம் இதைப்பற்றி எழுத வேண்டி வந்ததென்னவென்றால், மேற்கூறிய காரணங்களால் என் தந்தையார் அக் ‘கள்வர் தலைவன்’ என்னும் நாடகத்தைப் பார்க்க முடியாமற் போனதென்பதாம். இந்நாடகமானது பிறகு ஒருமுறை 1898ஆம் வருஷம் டிசம்பர் மாதத்தில் எங்கள் சபையாரால் ஆடப்பட்டது.

நான் முக்கியமாக இந்நாடகத்தை மறுபடியும் அடிக்கடி மற்ற நாடகங்ளைப் போல் நடத்தாததற்குக் காரணம், இதைப்பற்றி நான் நினைக்கும்போதெல்லாம், என் தந்தை இதைப் பார்ப்பதற்கு இல்லாமற் போச்சுதே என்று எனக்கு மன வருத்தம் உண்டாவதேயாம். 1898ஆம் வருஷத்திற்குப் பிறகு முப்பத்திரண்டு வருடங்கள் கழித்து 1930ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி, மறுபடியும் எங்கள் சபையார் இதை நடத்தினர். சோககரமாக முடியும் இரண்டு நண்பர்கள், சாரங்கதரன், அமலாதித்யன் முதலிய அநேக நாடகங்களை நான் நடத்தியிருக்கிறேன். ஆகவே இக் “கள்வர் தலைவன்” நாடகத்தைப் பன்முறை நடத்தாதது சோககரமாய் முடியும் நாடகங்களை ஆடக் கூடாது என்னும் காரணத்தினாலன்று.

இந் நாடகத்தை வேலுநாயர் பன்முறை நடத்தியிருக்கிறார். அன்றியும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ்கம்பெனியாரும் பலதரம் நடத்தியிருக்கின்றனர். இரண்டு மூன்று ஆமெட்டூர் (Ameteur) சபைகளும் இதை நடத்தி இருக்கின்றன. ஆயினும் இந் நாடகம் எனது மற்ற நாடகங்ளைப்போல் அவ்வளவு அதிகமாக ஆடப் படவில்லையென்றே சொல்லவேண்டும். என் குறிப்பின்படி, இது வரையில் என் அனுமதியின் மீது 80 தரம்தான் ஆடப் பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் முக்கியமாக, அது சோககரமாய் முடிவு பெறுவதுவேயாம் என்பதற்கு ஐயமில்லை. நமது தேசத்தார் நாடகங்களைப் பார்க்கப் போகும்பொழுது, அவைகள் க்ஷேமமாய், சந்தோஷமாய் முடிய வேண்டுமென விரும்புகிறார்கள் என்பது திண்ணம்.

‘யயாதி’ என்னும் நாடகத்தை வெகு விரைவில் எழுதி முடித்ததாக முன்பே கூறியுள்ளேன். எழுதுவதற்குச் சரியாக இரண்டு தினங்கள்தான் பிடித்தன; சாப்பிடும் வேளை தூங்கும் வேளை தவிர மற்ற வேளைகளிலெல்லாம் ஒரே மூச்சாய் உட்கார்ந்து எழுதினேன் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியாக நான் எழுதி முடித்ததும், கீழே அறையில் நோயாய்ப் படுத்திருந்த என் தந்தையிடம் அனுப்புவேன். அவ்வறையில் என் கடைசித் தங்கை, அதை அவருக்குப் படித்துக் காட்டுவாள். அதில் முக்கியமாக பப்பரன் என்னும் விதூஷகனுடைய பாகம், படிக்கும் என் தங்கைக்கும் கேட்கும் என் தந்தைக்கும் அதிக நகைப்பை விளைத்தது. என் அருமைத் தந்தையின் அந்திமகாலத்தில் இம்மாதிரியாக வாவது அவருக்குச் சந்தோஷத்தை விளைவித்தேனே என்று இப்பொழுதும் நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். ஒவ்வொரு தினமும் சாயங்காலம் சபைக்குச் சென்று என்னுடைய நண்பர்களிடம் நான் எழுதிய காட்சிகளைக் கொடுப்பேன். அவர்களும் அதி விரைவில் தங்கள் தங்கள் பாகங்ளை எழுதிப் படித்து விட்டார்கள். அதே வாரம் வியாழக்கிழமை இரவு முழு ஒத்திகை வைத்துக் கொண்டோம். அடுத்த சனிக்கிழமை விக்டோரியா ஹாலில் நாடகத்தை நடத்தினோம். என் தந்தையார் படியேறிச் செல்ல தேகபலமில்லாதவரா யிருந்தபடியால், ஏழு ஏழரை மணிக்கெல்லாம் ஸ்திரீகள் வருவதற்கு முன்பாக, ஸ்திரீகள் வருவதற்காகப் பிரத்யேகமாய் ஏற்படுத்தியிருக்கும் படி வழியாக அவரை ஒரு சாய்வு நாற்காலியில் உட்காரவைத்து, மேல்மாடிக்கு நாடகம் பார்க்க எடுத்துச் சென்றோம். இதுதான் அவர் நான் எழுதிய நாடகங்களில் கடைசியாகப் பார்த்த நாடகம்.

இந்த யயாதி நாடகத்திற்கு ஆங்கிலத்தில் “விதியும் காதலும்” என்று பெயர் வைத்தேன். நாடகம் கொஞ்சம் சிறிதாயிருந்தபடியால் கடைசியில், ஒரு பிரஹசனத்தைச் சேர்த்து ஆடினோம்; அப்படியாடியும் ஒரு மணிக்கெல்லாம் முடிந்து விட்டது. நாங்கள் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே யென்று கொஞ்சம் பயப்பட்டபோதிலும் நாடகம் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலர், அவர்கள் தூக்கம் அதிகமாய்க் கெடாமல் சீக்கிரம் முடிந்ததற்காகச் சந்தோஷப்பட்டனர். இந்த நாடகத்தைப் போட்ட பிறகுதான் சாதாரணமாக நாடகங்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் கொள்ளக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தோம்.

இந்த நாடகத்தில் ஜெயராம் நாயகர், கதாநாயகியாகிய சர்மிஷ்டை வேஷம் தரித்தனர். ஒரு பாட்டும் பாடாவிட்டாலும் அவரது வசனங்கள் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்டனவென்று எல்லோரும் கொண்டாடினர். பிறகு போஸ்ட் ஆபீசில் உத்தியோகஞ் செய்த, பி.எ. துரைசாமி ஐயர் என்பவர் தெய்வயானையாக மிகவும் விமரிசையாய் நடித்தனர். எம். வை. ரங்கசாமி ஐயங்கார், என் தோழனான காஞ்சேயனாக வேடம் பூண்டு தனது சங்கீதத்தினால் சபையோரை மிகவும் ரமிக்கச் செய்தார். ஆயினும் எல்லோரையும் விட இந்நாடகத்தில் சபையோரைச் சந்தோஷிக்கச் செய்தவர், ‘பப்பரன்’ வேடம் பூண்ட எம். துரைசாமி ஐயங்காரே! அவர் அரங்கத்தில் தோன்றும் பொழுதெல்லாம் விடாத நகைப்பை உண்டாக்கினர்.

இந்த நாடகத்தில்தான் என் ஆருயிர் நண்பராயிருந்த சி. ரங்கவடிவேலு முதலியார் முதல் முதல் எங்கள் சபையில் வேடம் பூண்டனர். அன்று முதல், தன் மரணபர்யந்தம், உடலும் நிழலும்போல் என்னைப் பிரியாதிருந்து, என்னுடன் ஏறக்குறைய எல்லா நாடகங்களிலும் என் மனைவியாக நடித்த இவரைப்பற்றிச் சற்று விரிவாக எழுத வேண்டியது என் முக்கியக் கடமையாகக் கொண்டு, அவரைப்பற்றி இனி எழுதுகிறேன்.

மேலே வரைந்துள்ள வாக்கியத்தை எழுதி இன்று நான்கு நாட்களாயின; இந்த நான்கு தினங்களாக, எனது நண்பரைப் பற்றி நான் எழுத வேண்டியதைப் பன்முறை எழுதப் பிரயத் தனப்பட்டும், என் மனமும், கண்களும், கையும் சோர்ந்தவனாய், அங்ஙனம் செய்ய அசக்தனாயிருந்தேன். இன்றே திருவருளை முன்னிட்டு, என் மனத்தை ஒருவாறு திடம் செய்து கொண்டு எழுத ஆரம்பித்தேன். எல்லாம்வல்ல கடவுள், வான் இழந்த என்னுயிர் நேயனுக்குச் செய்ய வேண்டிய கடமையைப் பத்திலொரு பங்காவது செய்து முடிக்க எனக்கு மனோதிடமளிப்பாராக!

இந்த ஜன்மத்தில் ஈசன் தன் கருணையினால் எனக்களித்த பெரும் பேறுகள் மூன்றைச் சொல்லும்படியாக யாராவது என்னைக் கேட்பார்களாயின், க்ஷணமும் தாமதியாமல், என் தாய், என் தந்தை, எனது நண்பன் இம் மூன்றுதான் என்று பதில் உரைப்பேன். இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களுள் சிலர், நாங்களிருவரும் எவ்வளவு அன்யோன்யமாய் ஏறக்குறைய இருபத்தெட்டு வருஷம் வாழ்ந்து வந்தோம் என்பதை அறிந்திருக்கலாம். அதை அறியாத மற்றவர்களுக்கு, ஷேக்ஸ்பியர் மஹாகவி, ‘ஆஸ் யு லைக் இட்’ (‘As you Like it’) என்னும் நாடகத்தில் இணைபிரியாத் தாயாதிகளாகிய, ராசலிண்ட, சிலியா என்பவர்களைப்பற்றி எழுதியதை இங்கு எழுத விரும்புகிறேன். அந்நாடகத்தில் முதல் அங்கம் மூன்றாவது காட்சியில் சிலியா, தங்களிரு வருடைய நட்பைப்பற்றிக் கூறும் பொழுது “ஒரே காலத்தில் நாங்கள் எப்பொழுதும் உறங்கினோம்; ஒரே காலத்தில் எழுந்திருந்தோம்; ஒரே காலத்தில் விளையாடினோம்; ஒரே காலத்தில் படித்தோம்; நாங்கள் எங்கு சென்ற போதிலும், ஒன்றை விட்டொன்று பிரியாத கின்னர மிதுனங்களைப்போல் ஜோடியாய்ப் பிரியாது சென்றோம்” என்று உரைத்தது எங்கள் நட்பை ஒருவாறு குறிக்கிறதெனக் கூறுவேன். இப்படிப்பட்ட நண்பனை இழந்த துக்கம், இப்போதைக்கு ஒன்பது வருஷங்களாகியும் மாறவில்லை . ஒரு சமயம் வந்தால்தான் அது மாறும்.

நாடக மேடை நினைவுகளைப்பற்றி எழுதுபவன், என் நண்பனைப்பற்றி இவ்வளவு அதிகமாக நான் எழுதுவானேன் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நான் கொடுக்க வேண்டிய விடை என்னவென்றால், என் தாய் தந்தையருக்குப் பிறகு, நான் நாடக ஆசிரியனானதற்கும், ஏதோ நாடக மேடையில் கொஞ்சம் பெயர் பெற்றதற்கும், என் நண்பனே முக்கியக் காரணமென உறுதியாய் நம்புகிறேன் என்பதே.

இனி இத்தகைய நண்பனை எப்படி நான் முதல் முதல் சந்திக்கும்படி நேர்ந்தது என்கிற விஷயங்கள் எல்லாம் இனி விவரித்து எழுதுகிறேன்.

நான் நாடக ஆசிரியனாகிச் சிறிது பெயர் பெற்றதற்கு என் தாய் தந்தையர்களே முக்கியக் காரண பூதர்களென்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். 1895ஆம் வருஷம் முதல் 1923ஆம் வருஷம் வரையில் நாடக மேடையில் எனது மனைவியாக நடித்த, என் ஆருயிர் நண்பனாகிய சி. ரங்கவடிவேலு முதலியாரை நான் பெற்றதற்கும், என் தந்தையே ஒருவிதக் காரணமாயிருந்தார் என்று நான் கூற வேண்டும். “லீலாவதி-சுலோசனா” நாடகம் முடிந்ததும் எங்கள் சபையார் வழக்கம்போல் ஒரு வனபோஜன பார்ட்டி வைத்துக் கொண்டார்கள். அன்றிரவு என் தந்தையார், “கிருஸ்தவ கலாசாலை மாணாக்கர்கள் சமஸ்கிருதத்தில் சாகுந்தலம் என்னும் மஹாகவி காளிதாசர் இயற்றிய நாடகத்தை நடத்தப்போகிறார்கள். எனக்கு இரண்டு டிக்கட்டுகள் அனுப்பியிருக்கிறார்கள், நீ வருகிறாயா?” என்று கேட்டார். நான் வரமுடியா தென்று சொல்லிவிட்டேன். பிறகு மறுநாள் என்னைப் பார்த்பொழுது “நேற்றிரவு நீ என்னுடன் வராமற் போயினையே. நாடகம் நன்றாக யிருந்தது; முக்கியமாக ஒரு சிறுபிள்ளை ‘அனசூயா’ வேஷம் தரித்தது மிகவும் நன்றாயிருந்தது” என்று தெரிவித்தார். அவர் இவ்வளவு சிலாகித்துச் சொல்லும்படியான பிள்ளை யாண்டான் யாராயிருக்கலாம் என்று யோசித்தவனாய், அக்கலாசாலையில் அப்பொழுது படித்துக்கொண்டிருந்த, என் நண்பனாகிய எம்.வை. ரங்கசாமி ஐயங்காரை “அனசூயை பாத்திரம் ஆடியது யார்?” என்று கேட்டேன். அவர் “அனசூயையாக நடித்தது சி. ரங்கவடிவேலு என்னும் ஒரு முதலியார் பிள்ளை . எனக்கு நன்றாய்த் தெரியும். மிகவும் அழகாயிருப்பான்” என்று பதில் உரைத்தார். அதன்பேரில் “ஒருநாள் சபைக்கு உன்னுடன் அழைத்துக் கொண்டு வா பாப்போம்” என்று சொன்னேன். அதன் மீது ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம், சபைக்கு சி. ரங்கவடி வேலுவை அழைத்துக்கொண்டு வந்தார். இவ்வகையாக, ஏறக்குறைய 28 வருஷங்கள் அன்று முதல் இணைபிரியா திருந்த எனது ஆருயிர் நண்பனைச் சந்திக்க நேர்ந்தது தெய்வக்கடாக்ஷத்தினால்.

நான் அன்றைத்தினம் அவரைப் பார்த்தபொழுது, அவருக்குச் சுமார் 16 வயதிருக்கும். என்னைப்போலவே, அவ்வளவாக உயரமில்லை; மிகவும் சிறப்பாகவுமில்லை; மாநிறம் என்றே சொல்ல வேண்டும்; முதல் முதல் அவரது உருவத்தை நோக்கினபொழுது மிகவும் அழகாயிருப்பார் என்று புகழ்ந்தார்களே, இவ்வளவுதானா? என்று என் மனத்திற்பட்டது. பிறகு அவரது கண்களை நோக்கினேன்; அக்கண்கள் அச்சமயம் என் ஆவியைக் கவர்ந்தவர் இதை வாசிக்கும் எனது நண்பர்கள், ஏதோ இவன் தன் உயிர் நண்பனை வெறும் புகழ்ச்சியாகக் கூறுகிறான் என்று எண்ணாதிருக்கும்படியாகக் கேட்டுக் கொள்கிறேன். அவரது பதினாறாம் வயதில் அவருக்கிருந்த கண்களைப் போல, இவ்வுலகில் எந்த ஆடவனுடைய கண்களையும் நான் பார்த்ததில்லை; அவரை அந்த வயதில் பார்த்தவர்கள் நான் கூறியதன் உண்மையை ஒப்புக்கொள்வார்களென்று உறுதியாய் நம்புகிறேன். ஸ்ரீதத்தனுடைய கண்கள் முதலில் சுலோசனாவின் கண்களைச் சந்தித்த பொழுது, அவைகளுக்கு க்ஷணத்தில் ஈடுபட்டதாக நான் எழுதிய “லீலாவதிசுலோசனா” என்னும் நாடகத்தில் எழுதியுள்ளேன். அவ்வாறு நான் எழுதியது என் இயற்கை அறிவைக்கொண்டு, இப்படியிருக்கலாம் என்று ஊகித்து எழுதியதாகும். அவ்வுண்மையை நான் வாஸ்தவத்தில் அனுபவித்தது, எனது கண்கள் அன்று அவரது கண்களைச் சந்தித்த பொழுமேயாம். பிறகு நான் மெல்ல அவர் பக்கத்தில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தேன். நான் பத்து வார்த்தைகள் பேசினால், ஒரு வார்த்தை பதில் சொல்லுவார்; அவ்வளவு சங்கோசமுள்ள வராயிருந்தார். அச்சமயம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது சங்கோசத்தையெல்லாம் போக்கி, எங்கள் சபையில் அங்கத்தினராக அவரைச் சேரும்படி வற்புறுத்தினேன். அவரும் இசைந்தார். அன்று முதல் இறந்துபோன என் அன்னை வீற்றிருந்த என் ஹிருதய ஸ்தானத்தில், அவர் வீற்றிருக்க ஆரம்பித்தார் என்றே நான் கூற வேண்டும். இவர் மேற்கூறியவாறு எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்ந்த பிறகு இவருக்கு முதல் முதல் வேஷம் கொடுத்தது நான் மேற்கூறிய “யயாதி"என்னும் நாடகத்தில்தான். அந்நாடகத் தில் முக்கியமான ஸ்திரீவேஷங்கள் இரண்டே. சர்மிஷ்டையும், தெய்வயானையும்; அவ்விரண்டு பாத்திரங்களும் ஜெயராம் நாயகருக்கும், துரைசாமி ஐயருக்கும் கொடுக்கப்பட்டன. ஆகவே சி. ரங்கவடிவேலுவுக்கு (இனி ரங்கவடிவேலு முதலியார் என்று எழுதாமல், நான் அவர் உயிருடன் இருந்த பொழுது அழைத்தபடி ரங்கவடிவேலு என்றே எழுதுவேன்) பாங்கியாகிய நீலலோசனி எனும் பாத்திரத்தைக் கொடுத்தேன். இதற்கு முக்கியக் காரணம், ஸ்திரீ வேஷம் பூண்டால் எப்படி யிருக்கிறதென நான் நேரிற் காண வேண்டும் என்னும் இச்சையேயாம். அன்றியும் அக்காலத்தில், யார் வந்து எங்கள் சபையில் அங்கத்தினராய்ச் சேர்ந்த போதிலும், முதல் முதல், ஒரு சிறிய பாகமே கொடுப்பது வழக்கமாயிருந்தது; சிறு பாகங்களில் எப்படி நடிக்கிறார்களென்று பார்த்தே, பிறகு அதில் திருப்திகரமாயிருந்தால் பெரிய பாகங்கள் கொடுத்து, கடைசியில் முக்கியப் பாத்திரங்களைக் கொடுப்பது எனத் தீர்மானித்து அதன்படி நடந்து வந்தோம். இப்படித்தான் பிறகு, கதாநாயகர்களாகவும் கதாநாயகிகளாகவும் எங்கள் சபையில் நடித்த அங்கத்தினரெல்லாம் முதல் முதல் சிறு பாகங்களையே பெற்று நடித்தனர். தற்காலத்தில் ஒரு சபையைச் சேர்ந்தவுடன், எனக்கு ஹீரோ (Hero) வேஷம் அல்லது ஹீரேயின் (Heroine) வேஷம் வேண்டுமென்று சச்சரவிடும் எனது இளைய நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக. படிப்படியாகத்தான் மெத்தையின் மீது ஏற வேண்டும்; ஒரேமுட்டாய் எகிறிக் குதிக்கப் பார்த்தால், பெரும்பாலும் கால் ஒடிந்து போவதுதான் கை கண்ட பலனாகும் என்பது உலகத்தில் நாம் எல்லோரும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு பெரிய உண்மையாம்.

இந்த “யயாதி” நாடகத்தில், என் நண்பர் நீலலோசனியாக நடித்தார். இவர் நடித்த பாத்திரத்திற்கு அப்பெயர் நான் கொடுத்த காரணம் அவர் அதை நடிக்கப் போகிறார் என்பதே. நாடகம் முழுவதிலும் இரண்டு காட்சிகளில்தான் நீலலோசனி வரவேண்டியதிருக்கிறது; அவரது பாகம் முழுவதும் சேர்த்தாலும் சுமார் முப்பது வரிகளிருக்கலாம். அந்தப் பாகத்திற்கு ஒரு பாட்டும் கிடையாது. இருந்தபோதிலும், நாடகத்தைப் பார்க்க வந்தவர்களும், எங்கள் சபையின் அங்கத்தினரும், இவரது பாகம் சிறியதாயிருந்த போதிலும் நன்றாய் நடித்தார், ரூபமும் மிகவும் அழகாயிருந்தது என்று மெச்சினார்கள். ஸ்திரீயின் உடையில் அவரை நாடக மேடையில் கண்டபின், நானும் அவ்வாறே எண்ணினேன். இந்த ‘யயாதி’ நாடகத்தைப்பற்றி எனக்கு வேறொன்றும் அவ்வளவாக ஞாபகமில்லை .

இந்நாடகம் பிற்காலம் எங்கள் சபையோராலும் இதர சபையோர்களாலும் பன்முறை ஆடப்பட்டது. புதிதாய் ஆரம்பிக்கும் நாடக சபைகள், “சுந்தரி” “புஷ்பவல்ல” என்னும் முன்னே நான் கூறியிருக்கும் இரண்டு நாடகங்களுக்குப் பிறகு, இந்த நாடகத்தைச் சுலபமாய் எடுத்துக்கொண்டு ஆடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.