நாடக மேடை நினைவுகள்/ஒன்பதாம் அத்தியாயம்
இனி எனது ஆறாவது நாடகமாகிய “மனோஹரன்” என்னும் நாடகத்தைப் பற்றி எழுதுகிறேன். இதைப்பற்றி, மற்ற நாடகங்களைக் குறித்து எழுதியதைவிட அதிக விவரமாய் எழுத வேண்டியது அவசியமெனத் தோற்றுகிறது. ஏனெனில், எனது இளைய நண்பர்களுக்குள் பலர் அறிந்தபடி இதுதான் என் நாடகங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும், எனக்குப் புகழைக் கொணர்ந்தது; அன்றியும் எனது மற்ற நாடகங்களைவிட, எல்லோராலும் அதிகமாய் ஆடப்பட்டது; என்னிடமிருக்கும் குறிப்பின்படி இந்நாடம் என் அனுமதியின் மீது 859 முறை இதுவரையில் ஆடப்பட்டிருக்கிறது; நேரில் அறியாத ஒரு விஷயத்தைப்பற்றி, ஒருவன் ஊகையினால் கூறக்கூடுமானால், ஏறக்குறைய அத்தனைமுறை என் அனுமதியின்றி ஆடியிருக்கவேண்டுமென்றும் நான் கூறலாம். இப்பொழுது சில வருஷங்களாகத்தான், என் உத்தரவின்றி மற்றவர்கள் எனது நாடகங்களை ஆடக்கூடாதென்று கண்டிப்பாயிருக்கிறேன். அதற்குமுன் அவ்வளவு கண்டிப்பாயில்லை. ஆகவே அநேக சபையார் முன்பு என் உத்திரவில்லாமலே இதை நடித்திருகின்றனர் என்பதை நான் அறிவேன். சென்னை ராஜதானியிலுள்ள எல்லாத் தமிழ் நாடகச் சபைகளும் இந் நாடகத்தை நடத்தியிருக்கின்றனர் என்றே நான் கூறவேண்டும். அன்றியும் நாடகமாடுதலையே ஜீவனோபாயமாகக் கொண்ட பல நாடகக் கம்பெனிகள் இதை நடத்தியிருக்கின்றன. அவையடக்கத்தை விடுத்து வெளிப்படையாய்ச் சொல்லுமிடத்து, இதைப் படிக்காத தமிழ் நாடகாபிமானி ஒருவரும் இல்லையென்றே கூறுவேன். என் சொந்த அபிப்பிராயத்தை உரைக்குமிடத்து, இதற்குப் பிறகு, இதைவிடச்சிறந்த நாடகங்கள் பல எழுதியிருக்கிறேன் என்று நான் உறுதியாய் எண்ணியபோதிலும், இந்நாடகமே எனக்கு மிகவும் கீர்த்தியைக் கொடுத்ததென்று உரைத்திடல் வேண்டும். சில வருடங்களுக்கு முன் என் நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார், அதுவரையில் நான் எழுதிய நாடகங்களுக்குள் “லீலாவதி - சுலோசனையே” மிகச் சிறந்ததெனக் கூறியுள்ளார். மற்றெல்லா விஷயங்களிலும், அநேகமாக அவர் அபிப் பிராயத்தை நான் ஒப்புக்கொள்வது என் வழக்கமாயினும், இதில் மாத்திரம் அவரது அபிப்பிராயத்தை நான் ஒப்புக் கொள்ளவில்லை . “லீலாவதி-சுலோசனா” வைவிட, “மனோஹரன்” நாடகமே மேம்பட்டது என்பது என் கொள்கை. இந்நாடகமானது ஆறாம் பதிப்பை அடைந்திருக்கிறது. ஆகவே என் நாடகங்களை வாங்கி வாசிப்பவர்களுடைய அபிப்பிராயமும் என் அபிப்பிராயத்தை ஒத்திருக்கிறதென ஊகிக்க வேண்டியவனாயிருக்கிறேன்.
இந்நாடகத்தை நான் எழுதி முடிப்பதற்குமுன் எனக்கு இவ்வுலகில் நேரிட்ட தௌர்ப்பாக்கியங்களுக்குள், இரண்டாவது நேரிட்டது-என் அருமைத் தந்தையார் இவ்வுலகை நீத்து, என் அன்னையிடம் போய்ச் சேர்ந்தார். இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமே யொழிய, என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளலாகாதெனும் கோட்பாடுடையவனாதலின், என் தந்தை இறந்ததனால் எனக்குண்டான துயரத்தைப்பற்றி இங்கு எழுதாது விடுக்கின்றேன்.
“மனோஹரன்” நாடகத்தின் கதையானது என் அருமைத் தந்தை உயிருடனிருக்கும் பொழுதே, என்னால் கற்பனை செய்யப்பட்டது. இந்நாடகத்தை வாசித்த அல்லது ஆடப்பட்டபொழுது பார்த்த என் நண்பர்களில் அநேகர் இக் கதையை எங்கிருந்து எடுத்தாய் என்று கேட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் உன்னுடைய சுய அனுபவத்தைக் கொண்டு இதை எழுதினையோ? என்று கேட்டிருக்கின்றனர். அநேகம் கிரந்த கர்த்தர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை, தாங்கள் எழுதும் நவீனங்களிலாவது அல்லது நாடகங்களிலாவது புனைந்து எழுதியிருக்கிறார்கள் என்பது உலகப் பிரசித்தமே. நானும் எனது நாடகங்களில் சிற்சில இடங்களில் என் சொந்த அனுபவத்தையாவது அல்லது எனது நண்பர்களின் அனுபவத்தையாவது புனைந்து எழுதியிருக்கிறேன் என்று ஒப்புக்கொள்ள வேண்டியதே. அதற்கு உதாரணமாக “லீலாவதி-சுலோசனை” யில் ரோஜாப்பூக் காட்சியை உதாரணமாக முன்பே கூறியிருக்கிறேன். அம்மாதிரியாகவே இந்த மனோஹரன் நாடகத்திலும் இரண்டொரு விஷயங்கள் இருக்கலாம். அவற்றைப் பிறகு எடுத்துக் கூறுகிறேன். இச்சந்தர்ப்பத்தில் நான் எடுத்துக்கூற வந்ததென்னவென்றால், மனோஹரன் நாடகமானது என் மனத்தினால் நிர்மாணம் செய்யப்பட்ட கட்டுரைக் கதையேயாம் என்பதே. என் சொந்த அனுபவங்களையே என் நாடகத்தில் எழுதுகிறேன் என்பது முற்றிலும் தவறான எண்ணமாகும். அவ்வாறு எண்ணுவது வாஸ்தவமாயின், நான் ஸ்ரீதத்தனாகவும், மனோஹரனாகவும், சுந்தராதித்யனாகவும், ஜெயபாலனாகவும், விஜயரங்கப் பிள்ளையாகவும், ராமச்சந்திர ஐயராகவும், ராஜசிம்மனாகவும், ரகுவீரனாவும், சத்ருஜித்தாகவும், ஜெயசிங்காகவும், சபாபதி முதலியாராகவும், சுப்பிரமணிய ஐயராகவும், இன்னும் நான் எழுதியுள்ள மற்ற நாடகங்களின் கதாநாயகர்கள் எத்தனைப் பெயர் உண்டோ , அத்தனைப் பெயர்களாகவும் நானிருக்க வேண்டும்-இவ்வாறு எண்ணுவது தவறென இதை வாசிப்பவர் கொஞ்சம் தீர்க்காலோசனை செய்வார்களாயின் ஸ்பஷ்டமாய் விளங்கும்.
ஒரு கிரந்த கர்த்தா தன் அனுபவங்களையே எழுதுகிறார் என்று எண்ணுபவர்கள், அக்கிரந்தகர்த்தா எழுதிய முக்கியமான பாத்திரங்களுடைய அனுபவம் மாத்திரமன்றி, அவர் எழுதும் எல்லாப் பாத்திரங்களின் அனுபவத்தையும் (ஸ்திரீ பாத்திரங்கள் உட்பட) அடைந்திருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்!
இந்தச் சந்தர்ப்பத்தில் இரண்டு வருஷங்களுக்கு முன்பாக “தாசிப் பெண்” என்னும் எனது நூதன நாடகமொன்றை அச்சிட்டபொழுது நடந்த ஒரு விருத்தாந்தத்தை இங்கு எழுதுகிறேன்.
அந்நாடகமானது அச்சிடப்பட்டபின் அதை வாசித்த எனது நண்பர்களுள் ஒருவர் “முதலியார் அவர்களுக்கு தாசிகள் விஷயமெல்லாம் நன்றாய்த் தெரியும் போலிருக்கிறது. அவ்விஷயங்களை எல்லாம் மிகவும் நுட்பமாய் அறிந்து எழுதியிருக்கிறார்” என்று ஏளனம் செய்தார். நான் உடனே “அப்படியாயின் உங்கள் நியாயப் பிரகாரம் நான் எழுதியது சரியென்று கூற உங்களுக்கும் அவர்கள் விஷயங்களெல்லாம் நன்றாய்த் தெரிந்திருக்க வேண்டுமே” என்று பதில் உரைத்திருக்கக்கூடும். ஆயினும், அவ்வாறு கூறியவர் என்னிலும் அதிக வயதுடையவராதல் பற்றி, அவ்வாறு எனக்குக் கூற இஷ்மில்லாது, பின் வரும் கதையைக் கூறினேன். “ஓர் ஊரில் ஓர் அரசன் இருந்தானாம். அந்த அரசனுக்கு ஆப்தரான ஒரு சன்யாசியும் அமைச்சனும் இருந்தார்களாம். அந்த மந்திரிக்கு அந்தச் சன்யாசியிடம் அவ்வளவு மனப்பொருத்தம் இல்லையாம். ஒரு நாள் அந்தச் சன்யாசி சிற்றின்ப விஷயத்தைப் பற்றி உதாரணம் எடுத்துக் கூற, அம்மந்திரி, ‘சன்யாசி அவர்களுக்குச் சிற்றின்பத்தில் அதிகப் பரீட்சையிருக்கிறாற் போலிருக்கிறது அந்த ருசி அறிந்திருக்க வேண்டும்!’ என்று ஏளனம் செய்ய, சன்யாசி அதைக் கவனியாதவர் போலிருந்து, சில தினங்கள் சென்ற பிறகு அரசன் எதிரில், துருப்பிடித்த ஒரு வெண்கலப் பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதை ஒரு குழியில் மலத்தினால் புதைத்து வைக்கச் சொன்னாராம். பிறகு சில தினங்கள் கழித்து, மூடிய அக்குழியைத் தோண்டி வெண்கலப் பாத்திரத்தை எடுக்கச் செய்து, அதுகளிம்பு நீங்கிப்பிரகாசமாயிருப்பதைக் காட்ட, மந்திரியானவன், இதென்ன ஒரு புதுமையா? மலத்திலுள்ள புளிப்பு வெண்கலப் பாத்திரத்தின் களிம்பை நீக்கி விட்டது என்று கூற, உடனே சன்யாசி ‘மந்திரி அவர்களுக்கு மலத்தில் அதிகப் பரீட்சையிருக்கிறாற் போலிருக்கிறது. அந்த ருசி அறிந்திருக்க வேண்டும்’ என்று பதில் உரைத்தாராம் என்று கதையைக் கூறி முடித்தேன். ஆகவே ஒரு விஷயத்தைப்பற்றி அறிவதென்றால் சொந்த அனுபவத்தினால்தான் அறியக் கூடும் என்று நாம் கருதலாகாது. சுயானுபவம், அநேக மார்க்கங்களில் ஒன்றேயாம். புத்தி நுட்பமுடையவர்கள் மற்றவர்களுடைய அனுபவத்தைப் பற்றிப் பார்த்தும், கேட்டும் பல விஷயங்கள் அறியக் கூடுமன்றோ? அன்றியும் நமது அறிவைக் கொண்டு ஆராய்ந்து அநேக விஷயங்களை அறியலாமன்றோ? ஆகவே இச்சந்தர்ப்பத்தில், இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களுக்கு வற்புறுத்தும் சங்கதி என்னவென்றால், கிரந்த கர்த்தாக்கள் எழுதுவதெல்லாம் அவர்கள் சுயானுபவத்தைக் கொண்டே என்று என்ணுவது பெரும் தவறாகும் என்பதேயாம்.
மேற்கண்ட மனோஹரன் நாடகமானது என் சொந்தக் கற்பனைக் கதையடங்கியது என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். இக்கதை என் மனத்தில் எவ்வாறு முதல் முதல் உதித்தது என்பதை என் நண்பர்கள் அறிய விரும்புவார்களென நம்புகிறேன். அக்காலத்தில் நான் அடிக்கடி எனது நண்பராகிய ஸ்ரீனிவாச-ஐயங்காருடன் காலட்சேபங்களுக்குப் போவது வழக்கம். ஒரு நாள் மேற்சொன்னபடி ஒரு காலட்சேபத்துக்குப் போயிருந்தேன்; பாகவதர் (அந்தக பாகவதர், என்பது அவர் பெயரென நினைக்கிறேன். ஆயினும் இதை நான் நிச்சயமாய்ச் சொல்ல முடியாது) துருவ சரித்திரத்தை வெகு அழகாய்ச் சொன்னார். அக்கதையைச் சொல்லிக்கொண்டு வரும்பொழுது துருவன் தனது சிற்றன்னையால் அவமதிக்கப்பட்டபொழுது தன் தாயாரிடம் போய் முறையிட, அத் தாயார் துக்கப்பட்டதைக் கண்டு, தன் அவமானத்தையும் கருதாமல், தன் தாயார் துக்கப்பட்டதைப்பற்றி மிகவும் வருந்தி வெகுண்டெழுந்ததாக மிகவும் சாதுர்யமாகவும் அழகாகவும் கூறினார். அக்கதையில் இந்தப் பாகம் என் மனத்தை மிகவும் உருக்கியது. உடனே அக்கதையை நாடகமாக எழுதலாமா என்று அன்றிரவு யோசிக்க ஆரம்பித்தேன். அக்காலத்தில் ஏதாவது நல்ல பாட்டைக் கேட்டால்; இதை நமது சபையில் எந்த நாடகத்தில் உபயோகிக்கலாம்? ஏதாவது அழகிய பொருளைப் பார்த்தால், இதை நமது நாடக மேடையில் எந்தக் காட்சியில் உபயோகிக்கலாம்? யாராவது அழகிய சிறுவனைப் பார்த்தால் இவனை எப்படி நமது சபையில் அங்கத்தினனாகச் சேர்த்துக் கொள்ளலாம்? இவன் எந்த நாடகப் பாத்திரத்திற்கு உபயோகப் படுவான்? என்று இம்மாதிரியே எண்ணிக் கொண்டிருந்ததால், (இந்தப் பழக்கம் இன்னும் என்னைவிட்டு அகலவில்லையென்றே நான் கூறவேண்டும்) துருவ சரித்திரத்தை நாடகமாக எழுத வேண்டுமென்று என் மனத்தில் உதித்தது ஓர் ஆச்சரியமன்று. இப்படி நான் யோசித்துக் கொண்டிருக்கையில் அச்சரித்திரம் நாடகமாடுவதற்கு மிகவும் சிறியதாயிருக்கிறதென அந்த எண்ணத்தை விட்டேன்.
ஆயினும் அவன் தன் தாயாருக்கு நேரிட்ட வருத்தத்தைக் குறித்து வெகுண்டெழுந்த காட்சி, என் மனத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. திடீரென்று, இவ்வாறு அவமானம் செய்தவள், சிற்றன்னையாயிராது கேவலம் ஒரு வேசியாய் இருந்தால் அவனுக்கு இன்னும் எவ்வளவு கோபம் வரும் என்று தோன்றியது. உடனே ஒரு ராஜகுமாரனை அவன் தந்தை முன்னிலையில், அந்த அரசனது வைப்பாட்டி, வேசி மகனென வைதால் எப்படியிருக்குமென என் மனத்திற் பட்டது. அந்த ராஜகுமாரன் எவ்வாறு வெகுண்டெழுவான் என்று அக்காட்சியை என் மனத்தில் எண்ணிப் பார்த்தேன். இதுதான் ‘மனோஹரன்’ நாடகத்தின் கதை என் மனத்தில் உற்பவித்த தற்குக் காரணம். இனி படிப்படியாக இந் நாடகக் கதை விரிந்ததைச் சற்று விவரமாகக் கூறுகிறேன்.
அக கூறுகிறேன. மனோஹரன் தாயாரை, மிகுந்த உத்தம ஸ்திரீயாக்கினால் அவளை வேசியென ஒருத்தி வைவது, கேட்பவர்கள் மனத்திலெல்லாம் ஆத்திரத்தை உண்டுபண்ணுமென எண்ணி, நான் எழுதிய ஸ்திரீரத்னங்களுக்குள் எல்லாம் சிறந்தவர்களாக, ‘பத்மாவதி தேவி’யைக் கற்பனை செய்தேன். இவர்களுடைய குணாதிசயங்களைப்பற்றி வரைவதில், என் அருமைத் தாயாரின் குணங்கள் எனக்கு மிகவும் உபயோகப்பட்டன. மனோஹரன் தந்தை அரண்மனைத் தாசி ஒருத்தியின் வலையிலகப்பட்டது தவிர, மற்ற துர்க்குணங்கள் ஒன்றுமில்லாதவனாய், உத்தம புருஷனாயிருக்க வேண்டுமெனத் தீர்மானித்து, அவனுக்குப் புருஷோத்தமன் என்கிற பெயரையிட்டு சிருஷ்டித்தேன். வசந்தனைச் சிருஷ்டித்ததற்கு வேடிக்கையான காரணம் ஒன்று உண்டு. எனது நண்பனாகிய ச. ராஜகணபதி முதலியாரைப்பற்றி, இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு முன்னமே தெரிவித்திருக்கிறேன். அவர் என்னை அடிக்கடி “என்ன சம்பந்தம்? எப்பொழுது பார்த்தாலும் எனக்கு நல்ல வேஷம் கொடுப்பதில்லை. நல்ல ராஜா வேஷமாக ஒரு முறையாவது எனக்கு ஒன்றைக் கொடு” என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவர் மேடையின் மீது வந்தாலே எல்லோருக்கும் நகைப்பை விளைப்பார் என்று தெரிவித்திருக்கிறேன். இப்படிப்பட்டவருக்கு எப்படி ராஜா வேஷம் கொடுப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, வசந்தசேனையின் மகனை ஒரு பைத்தியக் காரனாக்கி அவ்வேஷம் இவருக்குக் கொடுத்தால் நலமாயிருக்குமெனத் தோன்றியது. இதுதான் வசந்தன் உற்பவித்ததற்குக் காரணம். மனோஹரன் நாடகத்தை வாசித்த நண்பர்கள், இவ்வசந்தன், வசந்தசேனைக்குக் கேசரிவர்மனால் பிறந்த பிள்ளை என்பதை நன்கு அறிவார்கள்.
ஆகவே, வாஸ்தவத்தில் வசந்தன் வேசி மகனாயிருக்க வசந்தசேனை மனோஹரனை வேசி மகன் என வைதது நாடக அலங்காரத்திற்கு மிகவும் பொருந்தியதாகும் என்பதைக் கவனிப்பார்களாக.
இனி விஜயாள் என்னும் நாடகப் பாத்திரத்தைப்பற்றி ஒரு விசேஷமுண்டு. அதாவது முதல் முதலில் மனோஹரன் கதையை நான் நிரூபணம் செய்தபொழுது, “விஜயாள்” என்னும் பாத்திரமே-இக்கதையில் கிடையாது! இந்நாடகக் கதையை எப்படி ஆரம்பித்து எப்படி முடிப்பது என்று முதல் முதல் நான் என் மனத்தில் திருப்பிக் கொண்டிருந்த பொழுது, என் தந்தையுடன் புதுக்கோட்டையில் ஒரு ஜமீன்தாருடைய
கலியாணத்துக்காகப் போயிருந்தேன். அங்கு, இக் கதையை, இப்பொழுது அச்சிட்டிருக்கும் இரண்டாவது அங்கம் முதற் காட்சியில் ஆரம்பித்து, ஒருவாறாக முடிக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். அச்சமயம் நான் புருஷோத்தமனுடைய வேடம் தரிக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டேன். அதற்குத் தக்கபடி கதையின் அம்சங்களை யெல்லாம் யோசித்து வைத்தேன். ஒரு நாள் இரவு ஏதோ காரணத்தினால் எனக்கு நன்றாய்த் தூக்கம் வராமலிருந்த பொழுது, என் வழக்கப்படி, கதையின் காட்சிகளைப் பற்றி நான் பன்முறை யோசித்துக் கொண்டிருந்த பொழுது, திடீரென்று, புருஷோத் தமன் குமாரனாகிய மனோஹரன் வேடம்தான் நமக்கு நன்றாயிருக்குமென்று என் புத்தியிற்பட்டது. உடனே கதையின் போக்கை மாற்றி, இப்பொழுது அச்சிட்டிருக்கும் நான்கு காட்சிகள் அடங்கிய முதல் அங்கத்தைச் சேர்த்து, அதற்குத் தக்கபடி கதையின் போக்கை யெல்லாம் மாற்றினேன்! அன்றிரவு சற்றேறக்குறைய மூன்று மணிவரையில் இதனால் விழித்திருந்தேன் என்றே நான் கூற வேண்டும். எனக்குத் திருப்திகரமாய்க் கதையை விவரித்து முடிவு பெறச் செய்த பிறகுதான் தூங்கினேன்! இவ்வாறு மாற்றியதில் மனோஹரனுக்கு ஒரு மனையாளாக ஒரு பெண்மணியைச் சிருஷ்டித்தேன் அன்றிரவு.
மறுநாள் காலை நான் எழுந்தவுடன், இம் மனைவிக்கு என்ன பெயர் கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது, என் அருமைத் தந்தையார், அக்காலத்தில் புதுக்கோட்டையில் வழங்கி வந்த வட்டமான சில காசுகளை என் கையில் கொடுத்து, இதைப் பார்த்திருக்கிறாயா என்று கேட்டார். இல்லை என்று அவருக்குப் பதில் சொல்லிவிட்டு, அக்காசுகளின் பேரில் செதுக்கியிருந்த எழுத்துகளை நோக்கினேன். “விஜய” என்று இருந்தது. உடனே அப்பெயர் சிறிதாயும் அழகாயும் இருக்கிறதென்று தீர்மானித்து அப்பெயரை மனோஹரன் மனைவிக்குக் கொடுக்கத் தீர்மானித்தேன். விஜயாள் பிறந்தது இவ்விதமாம்.
நான் எழுதும் நாடகங்களின் நாடகப் பாத்திரங்களுக்குச் சாதாரணமாக அவர்கள் குணத்திற்கேற்றபடி பெயர் வைப்பது வழக்கம். மனோஹரன் என்கிற பெயர் காலஞ்சென்ற ஆந்திர நாடகப் பிதாமகனான கிருஷ்ணமாச்சார்லு அவர்களுடைய நாடகத்தில் ஒரு விட புருஷனுக்குப் பெயராக இருந்தது. அப்பெயரை நான் கேட்டவுடன் இது நல்ல பெயராக இருக்கின்றது, இப் பெயரை விடபுருஷனுக்கு வைத்ததைவிட, ஒரு நல்ல உத்தம ராஜகுமாரனுக்கு வைத்தால் நலமாயிருக்கு மெனத் தோன்றியது. அப்பெயரையே இந்நாடத்திற்கும், இந்நாடகத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாயிருக்கும் ராஜகுமாரனுக்கும் வைத்தேன். ‘புருஷோத்தமன்’ ‘பத்மாவதி’ இப்பெயர்களைப் பற்றி முன்பே வரைந்துள்ளேன். விஜயாள் என்கிற பெயரைப்பற்றியும் எழுதியிருக்கிறேன். இந்த விஜயாள் என்ற பெயரைப்பற்றி இன்னொன்று எழுத விரும்புகிறேன்; சாதாரணமாக நான் நாடகங்கள் எழுதும் பொழுது, அதில் வரும் பாத்திரங்களின் பெயர்களை யெல்லாம் உரக்க உச்சரித்துப் பார்ப்பது வழக்கம். செவிக்கு எப்படி அவைகள் படுகின்றன என்று பரிசோதித்துப் பார்ப்பது என் வழக்கம். ஒரு கதா புருஷன் தன் நாயகியை ‘அலர்மேல் மங்கைத்தாயே’ அல்லது ‘கனகவல்லித் தாயாரம்மாளே!’ என்று கூப்பிடுவதென்றால், நாடகம் நடிக்கப்படும்போது நகைப்பையே உண்டாக்குமென்பது என் அபிப்பிராம். ஆகவே நாடகப் பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பதிலும் அழகிய பெயர்களை வைக்க வேண்டுமென்பது என் கொள்கை; ஆகவே விஜயாள் என்று அழைப்பது செவிக்கு இனிப்பா யிருப்பதனாலும், அந்நாடகப் பாத்திரம் ஒரு சிறு வயதுடைய பெண்மணியாயிருப்பதனாலும் அப் பெயரையிட்டேன். வசந்தசேனை என்கிற பெயர் ரவிவர்மா வரைந்த ஒரு தாசியின் படத்திலிருந்து எடுக்கப்பட்டது. வசந்தசேனையின் மைந்தன் ‘வசந்தன்’ என்று வரலாயிற்று.
ஒவ்வொரு நாடகத்திலும் ஏதாவது ஹாஸ்ய ரசம் இருக்க வேண்டுமென்று, சம்ஸ்கிருத நாடகங்களிலிருப்பதுபோல், ஒரு விதூஷக பாத்திரத்தை எழுதுவது அக்காலத்தில் எனக்கு வழக்கம். அவ்வழக்கப்படி ‘விகடன்’ என்னும் விதூஷகனை மனோஹரா நாடகத்தில் எழுதினேன். ‘வசந்தன்’ பைத்தியம் பிடித்தவனானபடியால் அவனுக்கு வைத்தியனாக அமிர்தகேசரியை நியமித்தேன். ரண வீரகேது எனும் சேனாதிபதியும், சத்யசீலன் எனும் மந்திரியும் வந்ததற்குக் காரணம், அவர்களுடைய பெயர்களின் அர்த்தத்தை நோக்கினாலே தெரியும்.
இனி, என் வழக்கப்படி இந்நாடகத்தில் முக்கிய நாடகப் பாத்திரங்கள் எனது நண்பர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த விதத்தைப் பற்றி எழுதுகிறேன். புருஷோத்தமனுடைய வேடம், அதுவரையில் இதர நாடகங்களில் நன்றாய் நடித்துப் பெயர் பெற்ற ராஜரத்தின முதலியார் என்பவருக்குக் கொடுத்தேன்; சத்தியசீலரின் வேடம், எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்குக் கொடுத்தேன்; அ. கிருஷ்ணசாமி ஐயருக்குப் பத்மாவதியும், சி. ரங்கவடிவேலுக்கு விஜயாளும் கொடுக்கப்பட்டது; எம். துரைசாமி ஐய்யங்காருக்காக ராஜப்பிரியன் நாடகப் பாத்திரம் எழுதினேன்; ஆகவே அது அவருக்குக் கொடுக்கப்பட்டது. வசந்தசேனை வேடம், எம். கந்தசாமி முதலியாருக்குக் கொடுக்கப்பட்டது; வசந்தன் வேடம் எஸ். ராஜகணபதி முதலியார் பூண்டனர். நீலவேணி வேடம், பிறகு ஹைகோர்ட்டில், அபிஷல் ரெபரியாக (Official Referee) இருந்து அகஸ்மாத்தாய்க் குற்றால அருவியில் உயிரை இழந்த கே.செங்கல்வராயருக்குக் கொடுக்கப்பட்டது. காலஞ்சென்ற என் தமயனாகிய ஆறுமுக முதலியார் குருவேடம் புனைந்தனர்; ஜே.பி. ஷண்முகம் பிள்ளை விகடனாக நடிக்க ஒப்புக் கொண்டார். கேசரிவர்மன் பிசாசு என்னும் நாடகப் பாத்திரத்தை மற்றெவரும் எடுத்துக் கொள்ள ஆட்சேபணை செய்தபடியால், சாரங்கபாணி முதலியார் என்னும் ரங்கவடி வேலுவின் பள்ளிக்கூடத் தோழனை எடுத்துக்கொள்ளும்படி செய்தேன். அமிர்தகேசரி என்னும் வைத்தியன் வேஷம், வாஸ்தவத்தல் வைத்தியராக இருந்த வெங்கடகிருஷ்ணப் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டது.
இந்நாடகத்தை நான் காட்சிகாட்சியாக எழுதி முடிக்கும் பொழுதே, அவரவர்கள் அவர்களுடைய பாகத்தை எழுதிக் கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். இந்நாடகத்தை எழுதிய பொழுது நேர்ந்த ஒரு சம்பவத்தை இதை வாசிக்கும் என் நண்பர்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.
என் தந்தை உயிருடன் இருக்கும் பொழுதே இந்நாடகத்தை எழுத ஆரம்பித்தேன் என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். முதல் ஐந்து காட்சிகள் எழுதி முடிந்ததும் அவர் தேகவியோகமானார்; தகனக்கிரியை முடித்து மறுநாள் சஞ்சயனம் ஆனவுடன் மற்றக் காட்சிகளை எழுதத் தொடங்கினேன். இதற்கு முக்கியமான காரணம் என் துக்கத்தை யடைந்த மனத்தை இவ்விஷயத்தில் செலுத்துவதனால், அத்துக்கத்தை மறந்திருக்கும் பொருட்டே. அச்சமயம், காலஞ் சென்ற, என் பழைய நண்பராகிய ரகுநாத சாஸ்திரியார் என்பவர் என்னிடம் துக்கம் விசாரிக்க வந்தார். வந்தவர் நான் நாடகம் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “என்ன சம்பந்தம் நீ துக்கத்தில் மூழ்கியிருப்பாயென்று எண்ணினேன். என்ன, நாடகம் எழுதிக்கொண்டிருக்கிறாயே!” என்று கேட்டார். “என் துக்கத்தை மறந்திருப்பதற்கு இதுதான் நான் கைகண்ட மார்க்கம். அன்றியும் நடந்ததைப்பற்றித் துக்கப்படுவதில் என்ன பிரயோஜனம்?” என்று கூறி, நான் எழுதிக்கொண்டிருந்த காட்சியை அவருக்கு வாசித்துக் காட்டினேன்; அக்காட்சி, இந்நாடகத்தில் இரண்டாம் அங்கம் இரண்டாம் காட்சியாம். அதற்குச் சாதாரணமாக “ஙப்போல் வளை” காட்சி என்று எங்கள் சபையின் அங்கத்தினர் வேடிக்கையாகப் பேர் வைத்திருக்கின்றனர். இந்த விஷயத்தை சற்று விவரமாய் இப்படி எழுதினதற்கு ஒரு காரணம் உண்டு; நான் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாகயிருந்தபொழுது, சில வருஷங்களுக்கு முன், என் மனைவி, என் தௌர்பாக்கியத்தால் மடிந்த பொழுது, தகனக்கிரியை ஆனவுடன், கோர்ட்டுக்குப் போய் கோர்ட் கேசுகளை நடத்தினேன். அச்சமயம், எனது நண்பர்களில் பலர், இவன் என்ன கல் மனதுடையவனா யிருக்கிறான்; பெண்சாதி இறந்த தினம்கூடக் கோர்ட்டுக்கு வந்து கோர்ட்டில் விவஹாரம் நடத்துகிறானே! என்று என்னைப் பழித்ததாகக் கேள்விப்பட்டேன். இவ்வாறு நான் செய்ததற்கு நியாயம், இதற்கு முன் நான் குறிப்பிட்டதுதான்; உயிர் உள்ளவரையில், நம்மால் எவ்வளவு கஷ்டம் எடுத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவும் எடுத்துகொள்ள வேண்டியதுதான். உயிர் நீங்கினபின், பேதை மனிதனால் என்ன செய்ய முடியும்? நான் செய்தது தப்போ ஒப்போ என்று யோசிப்பவர்கள், மஹா பாரதத்தில், சுவர்க்காரோஹண பர்வத்தில் “புத்திமான்கள் இறந்தவர்களுக்காகத் துக்கப்பட மாட்டார்கள்” என்று தர்மராஜன் கூறிய வார்த்தையைக் கவனிப்பார்களாக.
இனி இம் மனோஹரன் நாடகத்தில் சில காட்சிகள் என் மனத்தில் உதித்ததற்குக் காரணத்தைக் கூறுகிறேன். இந்த நாடகத்தின் முதற் காட்சியானது விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடக மேடையொன்று பல வருஷங்களுக்கு முன், முதல் முதல் கட்டப்பட்ட பொழுது, அதில் டிராப்படுதாவில் எழுதப்பட்டிருந்த ஒரு காட்சியே. இது அநேக வருஷங்களுக்கு முன்னமே பழசாகப்போய்க் கிழிந்து போய்விட்டது. ஆயினும் முதல் முதல் அதை நான் பார்த்தபோது அக்காட்சி என் மனத்தை உருக்கியது. ஓர் ஏரியின் கரையில் ஒரு வாலிபனும் பெண்மணியும் நெருங்கி உட்கார்ந்திருந்தது போல் வரையப்பட்டிருந்தது.
அதை வரைந்த சித்திரக்காரர் என்ன எண்ணத்துடன் வரைந்தாரோ அறிகிலேன். ஆயினும் என் மனத்திற்கு அப்பெண்மணி ஏதோ துக்கப்படுவது போல் தோற்றியது. என்ன காரணம் பற்றியிருக்கலாமென்று நானாக யோசித்து, அருகிலிருக்கும் அவள் காதலன் ஐரோப்பா தேசத்தில் குரூசேட் (crusade) சண்டைக்குப் போகப் போகிறவன் புறப்படு முன், தன் காதலியிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு புறப்படுகிறான். அதற்காகக்தான் அப்பெண்மணிதன் காதலனை மறுபடியும் காண்போமோ என்னவோ என்னும் சங்கையினால் துக்கப்படுகிறாள், என்று என் மனத்தில் யோசித்துக் கொண்டேன். அப்படுதாவைப் பிறகு நான் பன்முறை பார்க்கும் பொழுதெல்லாம் இதே ஞாபகம்தான் எனக்கு வந்தது. மனோஹரன் நாடகத்தில் முதல் அங்கத்தில் முதற் காட்சியில் மனோஹரன் தன் தாயாரிடமும் மனைவியிடமும் யுத்தத்திற்குப் போகுமுன் விடை பெற்றுக் கொண்டு போகும் காட்சி, இதனின்றும் என் மனத்தில் உண்டாயதென்றே நான் சொல்லவேண்டும்.
மற்றொரு காட்சிக்குக் காரணம் சற்று நகைப்பை உண்டாக்குவதாயிருக்கும். சி. ரங்கவடிவேலு எனக்கு சிநேகிதனான பிறகு சைதாப்பேட்டையில் ஒரு நாள் எங்கள் சபையார் வனபோஜனத்துக்காகப் போயிருந்தபொழுது, நாங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த சமயம், ரங்கவடிவேலுவை, தான் கையில் வைத்துக்கொண்டிருந்த வெற்றிலைச் சுருள் ஒன்றை எனக்குக் கொடுக்கும்படி கேட்டேன். தனக்கு இயல்பாயுள்ள வெட்கத்தினால் அத்தனை பெயர் எதிரில் கொடுப்பதா என்று எண்ணி மறுத்தனர். ஆகட்டும், இதற்கா வெட்கப்படுகிறாய்? ஆயிரக்கணக்கான ஜனங்கள் எதிரில், உன்னை அங்ஙனம் செய்யும்படி செய்கிறேன் பார்! என்று மனத்தில் தீர்மானித்து, மனோஹரன் நாடகத்தில் மூன்றாவது அங்கத்தில் இரண்டாவது காட்சியில் (இதற்கு ஊஞ்சல் காட்சி என்று சாதாரணப்பெயர் உண்டு) விஜயாள் மனோஹரனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பதாக எழுதினேன்! இது மேற்கண்ட வேடிக்கையான காரணத்தில் ஆரம்பமுடையதாயிருந்த போதிலும், நாடகத் திற்கு மிகவும் பொருந்தியதாய் ஜனங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைத் தரும்படியான ஒரு காட்சியாய் முடிந்தது.
நான் அக்காலத்தில் படித்த ஓர் ஆங்கில நாவலில் ஒரு ஸ்திரீ, தான் விரும்பும் காதலனுக்கு ஒரு கடிதமும், தான் வெறுக்கும் ஒரு புருஷனுக்கு ஒரு கடிதமும், ஏக காலத்தில் எழுதியபொழுது, அவைகளை அகஸ்மாத்தாய், மாறான கவர்களில் (Covers) போட்டனுப்பிவிட, பிறகு அதனால் பெருங்கஷ்டமனுபவித்ததாகப் படித்திருந்தேன்; இது அகஸ்மாத்தாய் நடந்திருக்க, ஒரு கெட்ட எண்ணமுடைய ஸ்திரீ, வேண்டுமென்று இரண்டு நிருபங்களை மாற்றிவிட்டால் அதனால் எவ்வளவு தீமை உண்டாக இடங்கொடுக்கும் என்று யோசித்து, வசந்தசேனை இம் மனோகரன் நாடகத்தில் பத்மாவதி தன் கணவனுக்கும் மந்திரிக்கும் எழுதிய நிருபங்களை, வேண்டுமென்று மாற்றச் செய்தேன். இக்காட்சியைப் பற்றி அநேக நண்பர்கள் அக்காலத்தில் காகிதங்களும் கவர்களும் ஏது? என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அதற்கு பதில் என்ன வென்றால், காகிதங்களும் கவர்களும் அப்பொழுதில்லை; வாஸ்தவம் தான். ஆயினும் ஓலைச்சுருள்கள் அனுப்புவது புராதன வழக்கமாம். இவைகளைச் சுருட்டி, மேல் விலாசம் எழுதி ‘லகோடா’ என்கிற ஒரு சுருளில் அடக்குவது வழக்கமுண்டு என்பதேயாம்: இந்நாடகத்தை நடத்தும் எனது நண்பர்கள் இக்காட்சிகளில், காகிதத்திற்குப் பதிலாக ஓலைச் சுருள்களை உபயோகித்து அவைகளை ‘லகோடா’ என்னும் சுருள்களுக்குள் வைத்து, உபயோகிப்பார்களாக.
ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் நாடகங்களைப் படித்த எனது நண்பர்கள், அவர், ஹாம்லெட், ஜுலியஸ் சீசர் முதலிய நாடகங்களில் உபயோகப்படுத்தியிருக்கும் அருவங்களினின்றும், இம்மனோஹரன் நாடகத்தில் ‘கேசரிவர்மன்’ அருவன் உதித்ததென எளிதில் அறியக்கூடும். அன்றியும் கொலை செய்யப்பட்டவர்கள் பிசாசாகத் தோன்றி தங்களைக் கொன்றவர்களை வருத்துகிறார்கள் என்பது நம்முடைய நாட்டில் சாதாரணமாக வழங்கும் அபிப்பிராயம்.
பத்மாவதிதேவி, புருஷோத்தமன் யுத்தத்திற்குச் செல்லும் பொழுதும் நேராகப் பாரேன் என்று, திரையிட்டு அத்திரைக்கு வெளியில் நின்று பார்க்கும்படியாகச் செய்த காட்சி, தேசிங்கு ராஜன் கதையில், தேசிங்கு யுத்தத்திற்குச் செல்லுமுன், தன் சொந்த மனைவியாயிருந்தபோதிலும், அவளது முகத்தைப் பார்ப்பதற்கில்லாமல், திரையை நடுவில் இட்டு அவளைப் பார்க்கும்படி நேர்ந்த சந்தர்ப்பத்திலிருந்து, என் மனத்தில் உதித்ததாகும்.
இம் மனோஹரன் நாடகத்திற்கு, உடையுடன் முழு இரவு ஒத்திகையானது எனது நண்பர் ஜெயராம் நாயகருடைய வீட்டில் நடந்தது. அதில் முக்கியமாக எனக்கு ஞாபகம் இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்நாடகத்தில் தற்காலத்தில் “இரும்புச் சங்கிலிக் காட்சி” என வழங்கி வரும் முக்கியமான காட்சியில், என் முழு தேக வலிவுடன் மிகுந்த உரத்த சப்தத்துடன் ஆக்டு செய்ததனால், அக்காட்சியின் முடிவில் சற்றேறக்குறைய வாஸ்தவத்திலேயே மூர்ச்சையாயினேன் என்பதே. அவ்வளவு நான் தேக சிரமப்பட்டது அனாவசியம் என்றே இப்பொழுது யோசிக்குமிடத்து எனக்குத் தோன்றுகிறது. அப்பொழுது அது தோன்றாமற் போயிற்று. அன்றியும் அச்சமயம் ஷேக்ஸ்பியர் மஹாகவி, ஹாம்லெட் வாயிலாக நாடகப் பாத்திரங்களுக்குச் செய்திருக்கும் உபதேசத்தை அறிந்தவனல்ல. அறிந்திருப்பேனாயின் அவ்வாறு என்னைக் கஷ்டத்திற்குள்ளாக்கிக் கொண்டிருக்க மாட்டேன் என்பது திண்ணம். இந்நாடகத்தை ஆட விரும்பும் அனைவர்க்கும், முக்கியமாக மனோஹரன் பாத்திரத்தை எடுத்துக் கொள்பவர்க்கெல்லாம், ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள அடியிற்கண்ட வார்த்தைகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவைகள்:- “நான் வகுத்த வண்ணம் உமது வசனங்களை நாவினால் நயம்பட வழங்கும்படி உம்மை வேண்டுகிறேன். உங்களுள் அநேகர் உரைப்பதுபோல அவ்வசனங்களை வாய்விட்டுக் கத்துவீராயின், அதைவிடப் பட்டணங்களில் பறை சாற்றும் வெட்டியானைக் கொண்டு, நான் வரைந்ததைப் பகர்ந்திடச் செய்ய நான் விரும்புவேன்..... இடிபோல் முழங்கி, சண்டமாருதமெனவரும் உமது ரௌத்திரம் முதலிய ஆவேசங்களிலும் ஒருவித அடக்கத்தை வகித்தவராய், அத்து மீறாது ஒழுங்கினை உடையவரா யிருத்தல் வேண்டும். அர்த்தமில்லா அபிநயங்களையும் ஆரவாரக் கூச்சல்களையுமே அதிகமாய் விரும்பும் அற்ப ஜனங்களின் காதுகள் பிளந்து போகும்படி கத்துவதைக் காணுங்கால், என் மனமெல்லாம் புண்படுகின்றது. இராட்சதர் களைத் தோற்கடிக்கச் செய்யும் அப்படிப்பட்ட ஒருவனைத் துடைப்பத்தால் அடித்துத் துரத்த விரும்புவேன் நான். .......உம்மை வேண்டுகிறேன், இதை விட்டொழியும்.... அத்துமீறிப் போவது நாடகமாடுவதன் தாத்பர்யத்துக்கு முற்றிலும் விருத்தமாகும்” என்பனவேயாம். இவ்வார்த்தை களைச் சற்று நான் விவர்மாய் வரைந்ததற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. இம் மனோஹரன் பாத்திரத்தை ஆடும் ஆக்டர்கள் பெரும்பாலும் ஷேகஸ்பியர் மகா நாடகக் கவி, எக்குற்றங்களை யெல்லாம் களைய வேண்டுமென்று போதித்திருக்கின்றாரோ, அக்குற்றங்களையெல்லாம் உடையவர்களாயிருப்பதே. அக்குற்றங்களை யெல்லாம் நீக்கி ஆடாமையே, அவர்கள் இப் பாத்திரத்தில் பெயர் பெறாமைக்குக் காரணம் என்று உறுதியாய் நம்பி, சரியான வழியில் இதை ஆடுவார்களென்று விரும்பியே இதை எழுதலானேன். முக்கியமான இக்காட்சியில் மனோஹரனாக நடிக்கும் பாத்திரம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இதைப் பார்க்கும் ஜனங்கள், மனோஹரனுடைய முழு தேக பலத்தையும் நாம் கண்டு விட்டோம் என்னும் யோசனையை அடையச் செய்யலாகாது என்பதேயாம். மனோஹரனுடைய முழு வல்லமையையும், நாம் கண்டோமில்லை; ஒரு கூற்றினைத்தான் நாம் பார்க்கிறோம் இதற்கே இப்படி இருக்கிறதே, இன்னும் அவனது முழு சக்தியையும் நாம் காண்போமாயின் எப்படி இருக்கும் என்று ஆச்சரியத்தை யுண்டுபண்ண வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இப் புத்திமதியை இப் பாத்திரத்தை ஆட விரும்பும் என் இளைய நண்பர்களெல்லாம் சற்றுக் கவனிப்பார்களாக. நான் வாஸ்தவத்தில் மிகுந்த பலஹீனமுடையவன். என் யௌவனத்திலும், அவ்வயதுள்ள சிறுவர்களுடைய தேக பலத்திற்குக் குறைவான சக்தி யுடையவனாயிருந்தேன். ஆயினும் இக்காட்சியில் நான் நடிக்கும் பொழுது ஏதோ மிகுந்த பலமுடையவனாகத் தோற்றப்பட்டேன் என்று என் பால்ய நண்பர் ஸ்ரீனிவாச ஐயங்கார் பன்முறை கூறியுள்ளார். இல்லாத ஒன்றை இருப்பதுபோல் நடித்துக் காட்டுவதே நாடகத்திற்கு முக்கியமான ஒரு பெருமையும் அழகும் என்று அறிஞர் கூறுகின்றனர்.
இந் நாடகம் முக்கியமாக அநேகம் சபைகளாலும் நாடகக் கம்பெனியார்களாலும் நடிக்கப்பட்டிருப்பதால், அவற்றைப் பற்றி பிறகு எழுதலாமென்றிருக்கிறேன்.
இந்நாடகமானது எங்கள் சபையோரால் 1895ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடப்பட்டது. இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, ஐந்துமணி நேரத்திற்குமேல் பிடித்தது என்பது என் ஞாபகம். டிக்கட்டு வசூலில் இருநூறு ரூபாய்தான் வந்தபோதிலும், வந்திருந்தவர்கள் அனைவரும் நன்றாயிருந்ததென மெச்சினர். நான் அறிந்த வரையில் ஆக்டர்களாகிய நாங்கள் நன்றாய் நடித்தோமென்பதே எங்கள் துணிவு. புருஷோத்தமனாக நடித்த ராஜரத்தின முதலியார் அந்நாடகப் பாத்திரத்திற்கு மிகுந்த அமைந்தபடி நடித்தார். இவர் எங்கள் சபையில் பூண்ட வேஷங்களிலெல்லாம் இதுதான் மிகவும் மேம்பட்டதென்பது என் அபிப்பிராயம். பிறகு வந்த அநேகம் புருஷோத்தமர்கள் பாடியிருக்கின்றனர்; இவர் இந்த வேடத்தில் ஒரு பாட்டும் பாடாமல், தன் வசனத்தினால் மாத்திரம் சபையோரைச் சந்தோஷிக்கச் செய்தது மெச்சத் தகுந்ததே. பத்மாவதியாக நடித்த அ. கிருஷ்ணசாமி ஐயர்; நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான அப்பாத்திரத்தை மிகவும் நன்றாக நடித்தார் என்று எல்லோரும் ஒப்புக்கொண்டனர். இவரது சங்கீதமும் வசனமும் மிகவும் பொருத்தமானதாயிருந்ததென்பது என் தீர்மானம். முதல் அங்கம் நான்காம் காட்சியில், இறந்ததாகக் கருதிய மனோஹரனை, உயிருடன் மறுபடி காணப்பெற்ற பொழுது “காணக் கிடைத்ததேதோ மைந்தா” என்னும் பாட்டை கமாஸ் ராகத்தில் இவர் முப்பத்தேழு வருடங்களுக்கு முன் பாடியது இன்னும் என் மனத்தை விட்டகலவில்லை. அநேகம் பேர்கள் என்னுடன் பத்மாவதியாக நடித்திருக் கின்றனர்; ஆயினும், கேவலம் சங்கீதத்தை மாத்திரம் கருதுங்கால் இவரது பத்மாவதியே என் மனத்தை மிகவும் திருப்தி செய்தது என்று நான் சொல்ல வேண்டும். நான் ஒரு நாடகத்தில் மேடை மீது நடிக்கும் பொழுது, என்னுடன் நடிக்கும் ஆக்டர் எப்படி நடிக்கிறார்களென்று அறிவதற்கு, என்னிடம் ஓர் அளவைக் கருவியுண்டு. அதாவது, எனக்கு அவர்களுடன் நடிப்பதனால் உண்டாகும் சந்தோஷமே. இக்கருவியைக் கொண்டு அளந்திடுங்கால் கிருஷ்ணசாமி ஐயர் அன்று பத்மாவியாக நடித்தது மிகவும் சிறப்பினை வாய்ந்ததென்றே நான் கூறல் வேண்டும். எனது பழைய நண்பனாகிய இவர் அநேக ஸ்திரீ வேடங்களில் பெயர் பெற்றிருக்கின்றனர். அவற்றுளெல்லாம் இவரது பத்மாவதி மிகவும் சிறந்ததென்றே நான் சொல்ல வேண்டும்.
முன்பே கூறியபடி இந்நாடகத்தில்தான் எனது ஆருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு முதல் முதல் என் மனைவியாகிய விஜயாளாக நடித்தனர். இவர் வந்திருந்த சபையோரு டைய மனத்தை எளிதில் கவர்ந்தனர் என்பதற்கு ஐயமில்லை.
இந்த விஜயாள் பாத்திரம் நடிப்பதற்கு அவ்வளவு கஷ்ட மானதல்ல; இருந்த போதிலும் அதைச் சரியாக நடிப்பது சுலபமல்ல. இந்தப் பாத்திரம் சம்ஸ்கிருத நாடகத்தில் ‘முக்தா’ நாயகி வகுப்பைச் சார்ந்தது. இதை ‘ப்ரௌடை’ நாயகியாகக் கொஞ்சம் நடித்தாலும் ரசாபாசமாகும். வேண்டிய அளவிற்கு மிஞ்சாது நடிப்பதுதான் இதில் கஷ்டம். பாத்திரத்திற்கேற்றபடி, உலக வழக்கம் ஒன்றும் அறியாத பேதையைப்போல் எனது நண்பர் இதை மிகவும் சாதுர்யமாக நடித்தார். அன்றைத்தினம் இவர் நான்கே நான்கு பாட்டுகள்தான் பாடினார் என்பது என் ஞாபகம். அவைகளை மிகவும் ஒழுங்காய்ப் பாடிச் சபையை பிரமிக்கச் செய்தார். இவரது பாட்டைவிட இவரது வசனங்களே மிக்க நன்றாயிருந்ததென்பது என் துணிவு. சுருக்கிச் சொல்லுமிடத்து, இதன் பிறகு இம்மனோஹரன் நாடகத்தில் விஜயாள் வேடம் பூண்ட அனைவரும் இவர் ஆக்டு செய்ததையே ஓர் உதாரணமாகக்கொண்டு அதன்படி நடக்க முயன்றனர் என்றே இயம்பவேண்டும். இப்பொழுதும் இந்த நாடகப் பாத்திரம் ஆடும் பொழுது, ஏதாவது ஒரு காட்சியில் எப்படி நடிப்பது என்று சந்தேகம் வந்தால், “ரங்கவடிவேலு இதில் எப்படி நடித்தது?” என்றே கேட்பார்கள். எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் மற்றுமுள்ள நாடகக் கம்பெனிகளிலும், அநேகம் பெயர் (ஸ்திரீகள் உட்பட) இந்த விஜயாள் பாத்திரத்தை ஆடப் பார்த்திருக்கிறேன்; ஆயினும் உண்மையாய்ப் பட்சபாதமின்றி உரைத்திடுவதானால், இவருக்கு மேலாகவாவது இவருக்குச் சமானமாகவாவது ஒருவரும் நடித்ததில்லை என்றே நான் கூறவேண்டும். ஏதோ எனது நண்பனைப் பற்றி வெறும் புகழ்ச்சியாகக் கூறுகிறேன் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கருதாதிருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். இவரைவிட ரூபலாவண்யமுடைய ஆக்டர்களை நான் தென்னிந்திய நாடக மேடையில் கண்டிருக்கிறேன்; இவரைவிடப் பதின்மடங்கு நன்றாய்ப் பாடும்படியான அநேக ஆக்டர்களது சங்கீதத்தைக் கேட்டிருக்கிறேன்; அன்றியும் இவர் ஆக்ட் செய்த இன்னும் சில பாத்திரங்களைவிட நன்றாய் ஆக்டு செய்தவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் இந்த விஜயாள் பாத்திரத்தில் இவருக்கு இணையாக நடித்தவர்கள் இல்லை யென்பதே என் முடிவான தீர்மானம். இவர் ஒவ்வொரு காட்சியிலும் என்னுடன் நடித்த பொழுது இப்படி இப்படி நடித்தார் என்பது என் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது. ஒன்றை மாத்திரம் உதாரணமாகக் கூறகிறேன். இந்நாடகத்தில் முதல் அங்கம் நான்காவது காட்சியில் ராஜப்பிரியன் பாண்டிய நாட்டிற்குச் சென்று வெற்றி பெற்றபொழுது, மனோஹரன் அங்கு ஒரு ஸ்திரீயை மணந்ததாக ஏளனம் செய்தக்கால், அதை ஏளனம் என்று அறியாத விஜயாள் ‘என்னபிராண நாதா?’ என்று கேட்கிறாள். சி. ரங்கவடிவேலு, நாடக மேடையில் அந்த இரண்டு சிறு பதங்களைச்சொல்லும் பொழுது, விஜயாளின்பேதைமையையும் கணவன் மீதுள்ள காதலையும், சிறு கோபத்தையும் என்ன அழகாகத் தெரியப்படுத்தினார் என்பது அவர் அவ்வார்த்தைகளைக் கூறக் கேட்டவர்களுக்குத்தான் தெரியும். அவருக்குப் பின் விஜயாளாக நடித்த (ஏறக்குறைய ஒருவர் தவிர) மற்றெல்லா ஆக்டர்களும் அதிக கோபத்தையோ, அதிக ஊடலையோ, அதிக அவநம்பிக்கையையோ அல்லது மேற்சொன்ன பாகங்களையெல்லாம் குறைவாகவோ காண்பித்தார்களே யொழிய, பாத்திரத்திற்குத் தக்கபடியான பக்குவத்துடன் பகர்ந்திலர் என்பது என் துணிபு. இந்தக் கட்டத்தில் சாதாரண ஆக்டர்கள் இழைக்கும் பிழையாவது, கோபத்தை அதிகப்படுத்தி அபிநயிப்பதேயாம். இதற்கு ஆங்கிலத்தில் ஓவர் ஆக்டிங் (Over acting) என்று சொல்லுவார்கள்.
இவர் அன்று விஜயாளாக நடித்ததில் என் மனத்தில் முக்கியமாகப்பட்ட மற்றொரு விஷயத்தை எழுத விரும்புகிறேன். இந்நாடகத்தில் நான்காவது அங்கத்தில் புருஷோத்தமன், நடந்த உண்மையையறிந்து பத்மாவதியிடம் சென்று மன்னிப்புக் கேட்கும் சந்தர்ப்பத்தில் திரைக்கு வெளியில் வந்து, தன்னுடன் பேசிய தன் மருமகளாகிய விஜயாளைப் பார்த்து, தான் அவளது கணவனுக்கு இழைத்த பெரும் தீங்கையெல்லாம் மன்னிக்கும்படியாகக் கேட்கும் பொழுது, விஜயாள், “சரிதான் மாமா” என்று பதில் சொல்லுகிறாள்; இவ்வார்த்தைகளை நான் எழுதியபொழுது, விஜயாள் தன் மாமனாரை எளிதில் மன்னித்திருக்க வேண்டும் என்று கருதி எழுதினேன்; அவ்வளவுதான். அந்த இரண்டு பதங்களை என் நண்பர் சி. ரங்கவடிவேலு அற்றைத் தினம் இந்நாடகம் முதன் முறை நடந்தபொழுது, தக்கபடி உச்சரிக்கக் கேட்ட பிறகுதான், அந்த இரண்டு பதங்களில் எவ்வளவு அர்த்தம் அடங்கியிருக்கிறதெனும் உண்மையை, நூலாசிரியனாகிய நானே உணர்ந்தேன்! நான் பல வடருஷங்களுக்குமுன் படித்த ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் எனக்கு இச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது. அதன் தாத்பர்யம் என்னவென்றால். ஒரு குளத்தை வெட்டினவன், அதன் சுகத்தை அறிந்திலன்; வெயிலிலடிபட்டு வேட்கையுடன் வந்து, அக்குளத்திலிறங்கி, கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு, அதன் தெள்ளிய நீரை உண்பவனே அதன் சுகத்தை உண்மையில் அறிகிறான்; அங்ஙனமே ஒரு பெண்ணைப் பெற்ற தந்தை அவள் மேன்மையையறியான்; அவளது ரூபலாவண்யத்தையும் குணாதிசயங்களையும் அனுபவிக்கும் அவளது புருஷனே, அவற்றை உண்மையில் அறிகிறான்! அங்ஙனமே, ஒரு கிரந்த கர்த்தா, தான் எழுதுவதன் மகிமையை அறிவதில்லை; அதை ஆராய்ந்தறியும் அப்புஸ்தகத்தை வாசிப்பவனே, அதன் நுட்பங்ளை யெல்லாம் நன்றாயறிகிறான், என்பதே! மேற்சொன்னபடி நாடகங்களை எழுதும் நாங்கள் “ஏதோ எங்கள் மனத்திற்குத் தோன்றியபடி எழுதி விடுகிறோம். சில சமயங்களில் நாங்கள் உப்யோகிக்கும் பதங்களின் நுட்பங்களை நாங்களே அறிகிறதில்லை. புத்திசாலிகளான நடர்கள் அவற்றை அரங்கத்தில் நடிக்கும் பொழுதுதான், அவ்வார்த்தைகளில் அடங்கியிருக்கும் அனேக விஷயங்களை அறிகிறோம். இந்த “சரிதான் மாமா” என்னும் வார்த்தைகள் சொல்லப்படும் பொழுதெல்லாம் சபையிலுள்ளவர்கள் அன்று முதல் இன்றுவரை கரகோஷம் செய்யாத நாளில்லை: அப்படி அவர்கள் செய்யாவிட்டால், அது விஜயன் வேடம் பூணும் ஆக்டருடைய குற்றம் என்பதற்கு எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த விசேஷத்தை அவ்வார்த்தைகளுக்கு உண்டாக்கியவர் எனது நண்பராகிய சி.ரங்கவடிவேலுவே. அவருக்குப்பின் இந்த விஜயாள் பாத்திரத்தை நடிக்கும் ஆக்டர்களெல்லாம் அவர் காட்டிய வழி பற்றியே இதை நடத்தி வருகின்றனர் என்பதற்கு ஐயமில்லை.
இனி அன்றிரவு நடித்த வசந்தசேனைப் பாத்திரத்தைப் பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். இந்நாடகத்தில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான பாத்திரங்களில் இது ஒன்று. பத்மாவதி, விஜயாள் முதலிய உத்தம குணமுடைய ஸ்திரீவேஷங்களைப் பூணுபவர்கள், சபையோர்களைச் சந்தோஷிக்கச் செய்வது சுலபம். இப்படிப்பட்ட ஸ்திரீரத்னங்கள் இன்னலுக்குட்படுகிறார்களே யென்று நாடகம் பார்ப்பவர்களெல்லாம், அவர்கள் மீது பச்சாதாபம் கொள்கிறார்கள். வசந்தசேனை முதலிய துஷ்ட சாரிதமுடைய ஸ்திரீகள் நாடக மேடையின்மீது தோன்றும் பொழுதெல்லாம், இத்துஷ்டையா! என்று எல்லோரும் வெறுக்கிறார்கள். ஆகவே இப்படிப்பட்ட வேஷங்களில் பெயரெடுப்பது கடினமே. அன்றியும் வசந்தசேனை நாடகப் பாத்திரத்தைத் தக்கபடி நடிப்பது சுலபமல்ல. பத்மாவதியின் தோழியாயிருந்து புருஷோத்தம மகாராஜாவைத் தன் மோகவலைக்குள் சிக்கச் செய்து, அதனால் பத்மாவதியின் வைரியாகி, கேசரிவர்மன் என்னும் தன் சோரநாயகனுக்குதித்த வசந்தனை, மகாராஜாவின் மைந்தன் என்று எல்லோரும் நம்பும்படிச் செய்து, எங்கு தன் சூது வெளியாகி விடுகிறதோ என்னும் பயமொரு பக்கமும், மகாராஜா எங்கு பத்மாவதியிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறாரோ என்னும் பயம் இன்னொரு பக்கமும் உடையவளாய், சூழ்ச்சியின்மேல் சூழ்ச்சி செய்து கொண்டு, தன் நிலையைக் காப்பாற்றப் பார்க்கும் ஒரு ஸ்திரீ வேடம் பூண்டு தக்கபடி நடிப்பது, மிகவும் கடினமென்றே நான் கூற வேண்டும். இப்படிப்பட்ட, எவரும் விரும்பாத வேடத்தை முதல் முதல் எங்கள் சபையில் அன்று பூண்டவர், ம. கந்தசாமி முதலியார் என்பவர். இவர் அக்காலத்தில் என் தமயனார் ஆறுமுக முதலியாருடன், சென்னை கவர்ன்மென்ட் கலாசாலையில் படித்தவர். அதன் மூலமாக எனக்கு இவரைத் தெரிய வந்தது. எனக்கு ஞாபகம் இருக்கிறவரையில் இவர் எங்கள் சபையில் மிகவும் சில நாடகங்களில்தான் நடித்தார். பிறகு எங்கள் சபையைவிட்டு நீங்கிவிட்டார். அதன் பிறகு சில நாடகக் கம்பெனிகளிற் சேர்ந்து என்னுடைய முக்கியமான சில நாடகங்களை அவர்சளுக்குக் கற்பித்தார்; இங்ஙனமே சில பால நாடகக் கம்பெனளிலும் சிறுவர்களுக்கு அவைகளைக் கற்பித்தனர். தற்காலம் சிங்கப்பூர், மலேயா பிரதேசங்களுக்கும் போயிருந்து இப்பொழுது மதுரைக்கு வந்திருக்கிறார்.
இவர் வசந்தசேனையாக ஒத்திகைகள் நடத்தும் பொழுது நேரிட்ட சிறு நகைப்புக்கிடமான சமாச்சாரம் ஒன்று கூற விரும்புகிறேன். இவருக்கு சாதாரணமாகப் பேசும் பொழுது இடது தோளைச் சற்று அடிக்கடி தூக்குகிற வழக்கம் உண்டு. இவ்வழக்கம் நாடகமாடும் பொழுதும் வந்தால் நலமாயிராதென்று, அதை அகற்றும்படி எவ்வளவு சொல்லிப் பார்த்தும், அவரால் அதை விடமுடியவில்லை . அதன்மீது ஒரு யுக்தி செய்தேன். இவர் அனுமதியின்மீது இவர் ஒத்திகை செய்யும் பொழுதெல்லாம், இவருக்குப் பின்பக்கமாக அங்கத்தினரை நிற்கச்செய்து இவர் தன்னையுமறியாதபடி இடது தோளை உயர்த்தும் பொழுதெல்லாம், மெல்ல அத்தோள் மீது ஒரு குட்டு குட்டச் செய்தேன்! பல ஒத்திகைகளில் இவ்வாறு செய்து வந்தபடியால், இவ்வழக்கத்தைப் பெரும்பாலும் விட்டனர்! ஆயினும் முற்றிலும் விடாதபடியால் நாடக தினத்தில், மேற்சொன்னபடி செய்வதற்கில்லாமையால், பக்கப்படுதாவண்டையில் (side wing) ஒருவரை நிறுத்தி, எப்பொழுதாவது இடது தோள் உயர்த்தும்படி நேரிட்டால், ஊம்காரம் செய்து அதைத் தடுக்க ஏற்பாடு செய்தேன். இதை இவ்வளவு விவரமாக இங்கு நான் கூறியதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. சில ஆக்டர்கள், மேடையின்மீது, கையை முன்னால் கட்டிக்கொள்வது, கண்களை எந்நேரமும் உயர்த்திப் பார்த்துக் கொண்டிருப்பது, வேஷ்டியை அல்லது ஆடையை எந்நேரமும் பற்றிக்கொண்டிருப்பது முதலிய வழக்கங்கள் உடையவளர்களாயிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவைகளெல்லாம் நாடகத்தின் அழகிற்குப் பொருத்தமானவைகள் அல்லவென்றும், அவைகளை எளிதில் மேற்சொல்லியபடி நிவர்த்திக்கலாம் என்றும் என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டேயாம். மொத்தத்தில் அன்றிரவு கந்தசாமி முதலியார் வசந்தசேனையாக நடித்தது நன்றாயிருந்ததெனவே சொன்னார்கள். ஆயினும், பிறகு அநேகம் ஆக்டர்கள் இந்த வசந்தசேனைப் பாத்திரத்தை ஆடிய போதிலும், இந்தப் பாத்திரத்தில் மிகவும் நன்றாய் நடித்து, நற்பெயர் எடுத்தவர், இதற்குச் சில வருஷங்கள் பிறகு எங்கள் சபையைச் சேர்ந்த டி.சி.வடிவேலு நாயகரே. இவரைப்பற்றிப் பிறகு நான் எழுதவேண்டிவரும். வசந்தன் வேடம் பூண்ட ச. ராஜகணபதி முதலியாரைப்பற்றி நான் அதிகமாய் எழுத வேண்டியதில்லை. எப்படி விஜயாள் பாத்திரம் சி. ரங்கவடிவேலு முதலியாருக்காக எழுதினேனோ, அப்படியே இவருக்கென்றே இப்பாத்திரம் எழுதப்பட்டதால், இதை அவர் எளிதில் நன்றாய் நடித்தார் என்று சொல்லலாம். இவர் பைத்தியக்காரனைப்போல் நடிப்பதற்கு அவ்வளவாகப் பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லாதிருந்தது. தற்காலத்தில் இந்த வேஷம் பூணுபவர்கள் பல பாட்டுகளைப் பாடுகிற வழக்கமாயினும், அச்சமயம் இவர் ஒரு பாட்டும் பாடவில்லை . அப்படியிருந்தும், பிறகு வந்த வசந்தர்களெல்லாம் இவருக்கு இணையாகமாட்டார்கள் என்றே நான் கூற வேண்டும். இவரிடம் ஒரு முக்கியமான நற்குணமுண்டு. அதாவது எழுதியிருப்பதற்குமேல், ஒரு வார்த்தை அதிகமாகவும் பேச மாட்டார், குறைவாகவும் பேச மாட்டார்; அன்றியும் இவருக்கேற்ற பாத்திரத்தை மாத்திரம் பொறுக்கி இவருக்குக் கொடுத்துவிட்டால், ஒரு முறை இப்படி நடிக்க வேண்டுமென்று காண்பித்தபின், மறுபடி ஒன்றும் சொல்ல வேண்டியதில்ல; அப்படியே கிரஹித்துக்கொள்வார். சில ஆக்டர்களுக்குப் பத்து முறை ஒரே விஷயத்தைத் திருப்பித் திருப்பிக் கற்பித்த போதிலும், நாடக தினத்தில் நாடக மேடை ஏறுமுன், “வாத்தியார், இந்த வரியை எப்படிச் சொல்வது, இன்னொரு முறை சொல்லிக் காட்டுங்கள்” என்று கேட்பவர்களுமிருக்கிறார்கள்; அப்படிப்பட்டவர்களில் இவர் ஒருவரன்று.