நாடக மேடை நினைவுகள்/இரண்டாம் பாகம்
நாடக மேடை
நினைவுகள்
இரண்டாம் பாகம்
மேற்சொன்ன ராஜகணபதி முதலியாருடைய தோழனான ஜே.பி.ஷண்முகம் பிள்ளை என்பவர், அன்று விகடனாக நடித்தார். இவர்கள் இருவரும் கிறிஸ்துவக் கலாசாலையில் ஒன்றாய்ப் படித்துக் கொண்டிருந்தவர்கள். ஷண்முகம் பிள்ளை என்னைப் போல் கொஞ்சம் குறும்பு குணமுடையவர்; எந்நேரமும் ராஜகணபதி முதலியாரை ஏளனம் செய்து கொண்டிருப்பது அவருடைய வழக்கம். ராஜகணபதி முதலியாருக்குக் கொஞ்சம் கருடப்பார்வை; அதைப்பற்றி அவர் ஏளனமாகச் செய்த இரண்டு பாட்டுகளை இங்கு எழுதுகிறேன்:
“குண்டனாம் கணபதி Crooked faced creature, அண்டங்கள்திர அடிவைப்பவனாம் - முண்டம், எதிலும் பயனில்லை எண்ணிப் பார்த்தால், ஒதியிலும் Worthless tree"; “மூடனாம் கணபதி, மூன்றில் பாதி கண்ணனாம் - நாட என்றால் நம்மாலு மாகாதே-கூட-படி அரிசி தன்னைப் பரிவுடன் சமைத்து வைத்தால், நொடியில் நுகர்ந்து விட்டு Not sufficient என்பானே.”
இப்பாட்டுகள், தமிழும் ஆங்கிலமும் கலந்த மணிப்பிரவாள நடையிலெழுதப்பட்ட வெண்பாக்கள் என்பார் ஷண்முகம் பிள்ளை! இவ்வாறு வெளியில் வேடிக்கை பண்ணுவதுபோல், நாடக மேடையிலும் ராஜகணபதி முதலியாரை ஏளனம் செய்வது சுலபமாயிருக்குமென்று எண்ணி, வசந்தனாகிய ராஜகணபதி முதலியாருக்கு வேடிக்கைத்தோழனாக விகடனாகிய ஷண்முகம் பிள்ளையை நியமித்தேன். வெங்கடகிருஷ்ண பிள்ளை என்பவர் தொழிலிலே வைத்தியராக இருந்தபடியால், அவருக்கு அமிர்தகேசரி வேஷம் கொடுக்கப்பட்டது. இம்மனோஹரன் நாடகத்தில் ஒரு காட்சியில் இந்த வைத்தியருடைய பூரணாதி லேகியத்தைச் சாப்பிட்டுவிட்டு விகடன் மயங்கிக்கிடக்கிறான். இது எழுதியதற்கு ஒரு வேடிக்கையான காரணம் உண்டு. நானும் என் நேர் சகோதரன் ஆறுமுக முதலியாரும் சிறுவர்களாயிருந்த பொழுது, எங்கள் வீட்டில் வைத்தியர் ஒருவர், ஒரு நாள் தன் கடைக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டி சித்தம் செய்த பூரணாதி லேகியத்தைக் கொஞ்சநேரம் வைத்துவிட்டு வேறு வேலையாகப் போயிருந்தார். அவர் வைத்துவிட்டுப் போனது பூரணாதி லேகியம் என்றும் அதன் குணம் இப்படிப்பட்டதென்றும் எங்களிருவருக்கும் தெரியாது; எங்கள் தாயார் எங்களுக்கு எப்பொழுதுதாவது சுக்கு லேகியம், மிளகு லேகியம் ஜீரண சக்திக்காகக் கொடுப்பதுண்டு. அதுபோல இது ஒன்று என்றெண்ணி, அப் பூரணாதி லேகியத்தில், நாங்கள் இருவரும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டோம்! பிறகு மூன்று நான்கு மணி சாவகாசம் வரையில் வெறி பிடித்தவர்கள் போல் நாங்கள் குழப்பஞ் செய்ததாக எங்கள் வீட்டிலுள்ளவர்கள் சொல்லக் கேட்டோம்; எங்களுக்கு நாங்கள் இன்னது செய்தோம், இன்னது பேசினோம் என்பது தெரியாது! பலதரம் இதைக்குறித்து எங்கள் அண்ணன்மார்கள் எங்களை ஏளனம் செய்ததுண்டு; இந்த அனுபவத்தைக் கொண்டுதான், பூரணாதி லேகியக் காட்சி எழுதினேன். இதை வெங்கட கிருஷ்ண பிள்ளையும் ஷண்முகம் பிள்ளையும் மிகவும் வேடிக்கையாக நடித்தார்கள். இம் மனோஹரன் என்னும் நாடகத்தில் புருஷோத்தமனுடைய குருவின் பாகம் ஒன்றுண்டு; அது சிறிதானதே; ஆயினும் முக்கியமானது. இதை ஒத்திகைகள் நடத்தும் பொழுது ஒருவருக்குக் கொடுத்திருந்தேன். அவர் ஒத்திகைகள் செய்யும் பொழுது கூட நடித்து வந்தார். கடைசியில், நாடகத்திற்காக விக்டோரியா பப்ளிக்ஹாலுக்குப் பணம் கட்டின பிறகு, யாதோ ஒரு காரணத்தால் அப் பாத்திரத்தை நடிக்க முடியாது என்று கை விட்டார். அச்சமயத்தில் நான் இதற்கென்ன செய்வது. என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, என்தமயனார் ஆறுமுக முதலியார், “நீ கலவரப்படவேண்டாம், நான் அதை எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறி, அதை எடுத்துக்கொண்டார். தனக்கு ஞாபக சக்தி குறைவாக இருந்த போதிலும், இரண்டு மூன்று தினங்களுக்குள் கஷ்டப்பட்டு அப்பாகத்தைக் குருட்டுப்பாடம் செய்து, அன்றைத்தினம் நாடகத்தில் நடித்தார். இவர் சாதாரணமாக நாடக மேடையில் நடிப்பதுமில்லை; நடிக்க வேண்டும் என்னும் இச்சையுடையவருமன்று. ஆயினும் ஏதாவது சமயத்திற்கு உதவ வேண்டுமென்றால் கைகொடுப்பார். இத்தகைய நற்குணத்தினாலே, எங்கள் சபையின் அங்கத்தினரையெல்லாம் சந்தோஷிக்கச் செய்து ஏறக்குறைய இருபது வருடங்களுக்குமேல் எங்கள் சபையின் காரியதரிசியாக வருடாவருடம் நியமிக்கப்பட்டார்.
பௌத்தாயனன் வேடம், மர்க்கன்டைல் பாங்கில் காஷியராக இருந்த, தமிழில் பல நாடகங்களை இயற்றிய, எனது நண்பராகிய ம. முருகேச முதலியார் எடுத்துக்கொண்டார். இவர் இதற்குப் பிறகு எனது அனேக நாடகங்களுக்கு, பாட்டுகளை எழுதிக் கொடுத்திருக்கிறார்; ஏதாவது தமிழ் நாடகத்திற்கு மெட்டுகளும் பாட்டுகளும் வேண்டுமென்றால் எங்கள் சபையின் தமிழ் ஆக்டர்களெல்லாம் இவரை நாடுவது வழக்கம்; இவரும் கஷ்டம் ஒன்றும் பாராமல் கேட்பவர்களுக்கெல்லாம் பாட்டுகளைக் கட்டிக்கொடுத்துக் கொண்டு வந்தார். இதற்காக இதன் மூலமாக, என் வந்தனத்தை இவருக்கு நான் செலுத்துகிறேன்.
நீலவேணியாக அன்றைத்தினம் செங்கல்வராய ஐயர் நடித்ததாக முன்பே கூறியுள்ளேன். இந்நாடகப் பாத்திரமானது ஒரு சிறுபாகமே. அக்காரணம்பற்றி, இந்நாடகம் எத்தனை முறை எங்கள் சபையில் நடிக்கப்பட்டிருக்கிறதோ, அத்தனை முறை வேறு வேறு ஆக்டர்கள் நடித்தார்கள் என்றே ஒருவாறு சொல்லலாம். யாராவது புதிதாக எங்கள் சபையில் ஸ்திரீபாகம் எடுத்துக்கொள்ளத் தக்கவர்கள் வந்தால், அவர்களுக்கு முதல் முதல் இந்த வேஷம்தான் கொடுப்பது வழக்கமாயிருந்தது; இப்பொழுதும் இந்த வழக்கம் முற்றிலும் அற்றுப்போகவில்லை. இந்த நீலவேணியின் பாகத்தைப் பற்றிய சிறு நகைப்புக்கிடமான கதையொன்றுண்டு. இம் மனோஹரன் எனும் நாடகத்தை ஒரு நாள் நான் ஒத்திகை நடத்திக்கொண்டிருந்தபொழுது புராம்டராக (Prompter), அதாவது, ஒரு பக்கமாக புஸ்தகத்தை வைத்துகொண்டு நாடகப் பாத்திரங்கள் ஏதாவது மறந்துபோனால் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டியவராக வேறொருவரும் அன்று கிடைக்காதபடியால், எனது பழைய நண்பராகிய வெங்கடகிருஷ்ண நாயுடுவை அத் தொழிலைப் பார்க்கும்படிக் கேட்டுக் கொண்டேன். அவர் அதற்கு முகவாட்டத்துடன் இசைந்தார். இதற்குக் காரணம் அவருக்குத் தமிழ் நன்றாய்ப் படிக்க வராது என்பதே. வீட்டில் அவர் பேசுவது தெலுங்கு பாஷையே. ஒரு சந்தர்ப்பத்தில், “பிறகு யார் பேச வேண்டும்?” என்று நான் கேட்க, அவர் புஸ்தகத்தைப் பார்த்து ‘கோழி’ என்று பதிலளித்தார்! இதென்னடா, கோழி என்கிற நாடகப் பாத்திரம் ஒன்று இதில் எழுதினோமா என்னவென்று நான் ஆச்சரியப்பட்டு, புஸ்தகத்தை வாங்கிப்பார்த்த பொழுது “தோழி” என்றிருந்தது. ‘தோ’ என்கிற எழுத்தின் கால் கொஞ்சம் குட்டையாக எழுதியிருந்தபடியால் அவர் தோழியைக் கோழியாக்கினார்! இதைக் கேட்டதும் எங்களுக்கெல்லாம் பெரும் நகைப்பு உண்டாயிற்று. அது முதல் பல வருடங்கள் வரை, தோழியாக நடிக்கும் ஆக்டர்களை எல்லாம் ‘கோழி கோழி’ என்று நாங்கள் ஏளனம் செய்வது வழக்கமாயிருந்தது.
இனி நான் மனோஹரனாக நடித்ததைப்பற்றிக் கொஞ்சம் எழுத விரும்புகிறேன். நான் இதுவரையில் நாடக மேடையில், என்னிடம் இருக்கும் குறிப்பின்படி சுமார் 75 வேடங்களைத் தரித்திருக்கிறேன். அவற்றுளெல்லாம் எனக்கு அதிக தேக சிரமத்தைக்கொடுப்பது இந்த மனோஹரன் பாகமே. இதைவிட, அமலாதித்யன், பௌத்தர் முதலிய நான் ஆடிய நாடகப் பாத்திரங்கள், நடிப்பதற்குக் கஷ்டமானவைகளே; ஆயினும் கேவலம் தேக சிரமத்தை மாத்திரம் கருதுமிடத்து மனோஹரன் தான் மிகவும் கஷ்டத்தைத் தருவது. நான் குழந்தைப் பருவமுதல் மிகவும் பலஹீனமுடையவனாயிருந்தேன் என்று என் தாய் தந்தையர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் வாலிபனான பிறகு, “இவன் முப்பது வயதுக்குமேல் உயிருடன் இருக்க மாட்டான்” என்று ஒருவர் கூறினார். எப்பொழுதும் நான் தேக புஷ்டியுடையவனாயிருந்ததில்லை; சாதாரணமான ஆயுர்வேதிகள் என்னை “ஒற்றை நாடி” உடையவன் என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணம், என் இருதயம் பலமுள்ளதாயிராமையே என்று எண்ணுகிறேன். என்னுடைய 17ஆம் வயதில், என் ஹிருதயத்தைப் பரிசோதித்து, அக்காலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற வைத்தியராகிய டாக்டர் வரதப்ப நாயுடு என்பவர், “நீ கிரிக்கெட், (Cricket) முதலிய கஷ்டமான தேகப்பயிற்சி எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று கூறினார்; கிரிக்கெட் ஆடுவதை விட்டு, டெனிஸ் (Tennis) ஆட ஆரம்பித்தேன்; கொஞ்ச காலம் பொறுத்து அதையும் விடவேண்டுமென்று சொன்னார். அதை விட்டு சைக்கில் (Cycle) ஏறப் பழகி வந்தேன். இன்னொரு வைத்தியர் அதையும் விடவேண்டுமென்றார். அதைவிட்டு அன்று முதல் இன்று வரை காலால் நடப்பதையே தேகப்பயிற்சியாகக் கொண்டுவருகிறேன்; இதனுடன் நிற்கவில்லை; என்னுடைய இருபத்தைந்தாம் வயதில் டாக்டர் கோமன் (Koman) என் ஹிருதயத்தைப் பரிசோதித்து, “நீ நாடக மேடையில் ஆடக்கூடாது” என்று தெரிவித்தார்! மற்றெல்லாவற்றையும் விடும்படி வைத்தியர்கள் கூறியபொழுது, எனக்கு அவ்வளவாகத் துக்கமில்லை நாடகமாடுவதை விடு என்று டாக்டர் கோமன் சொன்னபொழுது, இடி விழுந்தவன் போல் ஆனேன்! இன்னும் சில வைத்தியர்களைப் பார்த்த பொழுது, அவர்கள், “நாடகமாடுவதில் உன்னை அதிகமாக அலட்டிக் கொள்ளக்கூடாது” என்று கூறினார்கள். நான் என்ன செய்வது? நாடகமாடுவதில் எனக்குள்ள ஆசையானது அதை விடுவதற்கு எனக்கு மனோதிடம் கொடுக்கவில்லை. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்னும் பழமொழியையே உறுதியாகக் கொண்டு “ஈசனே! நாடகமாடுவதில் பாபமொன்று மில்லை. நீர் படைத்த சில மனிதர்களுக்காவது சிறிது காலம் கொஞ்சம் சந்தோஷத்தை உண்டுபண்ணுகிறேன் என்று உறுதியாய் நம்புகிறேன். ஆகவே, அடியேனைக் காப்பது உமது பாரம்!” என்று அவர்மீது பாரத்தைச் சுமத்தி, நாளது வரையில் நாடகமாடி வருகிறேன். இதுவரையில், என் குறிப்பின்படி ஐந்நூறு முறைக்குமேல் நாடக மேடையில் நடிக்கும்படி செய்தது அவரது கருணையே என்று நிச்சயமாய் நம்புகிறேன்.
அன்றியும் இச்சந்தர்ப்பத்தில் இன்னொரு விஷயமும் கூற விரும்புகிறேன். இதைக் கூறுவதற்காக இதை வாசிக்கும் எனது நண்பர்கள் மன்னிப்பார்களாக. நாடக மேடையில் என் அனுபவங்களையெல்லாம் ஒன்றும் விடாது கூற வேண்டும் என்று நான் நிச்சயித்திருக்கிறபடியால் இதை இங்கு எழுதலானேன். எனது பதினெட்டாவது வயது முதல் எனக்குக் குடல் வாதம் (Hernia) வியாதியுண்டு. அதற்காக வைத்தியர்கள் கட்டளைப்படி ஒரு டிரஸ் (Truss) இடுப்பில் அணிந்து வருகிறேன். இதனால் இம்மனோஹரனாக நடிக்கும் பொழுது “சங்கிலி அறுக்கும் காட்சி” என்னும் காட்சியில், என் உயிரை ஹானிக்குட்படுத்தியே நடிக்கிறேன் என ஒருவாறு நான் கூறவேண்டும்; அச்சமயத்தில் என் டிரஸ் உடையுமாயின், என் உயிருக்கே ஹானிதான் என்பதை இதை வாசிக்கும் வைத்திய சாஸ்திரம் உணர்ந்தவர்கள் நன்கு அறிவார்கள். இவ்வளவுமிருந்தும் இதுவரையில் இம்மனோஹரன் வேடம் பூண்டு, ஏறக்குறைய நாற்பது முறைக்குமேல் ஒரு அபாயமுமின்றி நடிக்கச் செய்தது கடவுளின் கருணையே என்று உறுதியாய் நம்புகிறேன். 1895ஆம் வருடம் முதல் 1928ஆம் வருடம் வரையில் எங்கள் சபையில் இந்நாடகத்தில், நான் ஒருவனே மனோஹரன் வேடம் பூண்டு நடித்து வந்தேன். அதன் பிறகு என் இளைய நண்பர், வி.சி.கோபாலரத்னம் ஐயங்கார், எங்கள் சபையில் இவ்வேடம் பூண்டார். அவருக்குப்பின் எஸ். சத்யமூர்த்தி ஐயர் இவ்வேடத்தில் நடித்திருக்கிறார். அன்றைத் தினம் நான் மனோஹரனாக நடித்தது நன்றாயிருந்ததென எல்லோரும் புகழ்ந்தார்கள் என்றே நான் கூற வேண்டும். அவையடக்கத்தைச் சற்று அகற்றி, உண்மையை உரைக்குமிடத்து, இப்பாத்திரம்தான் எனக்கு நாடக மேடையில் பெரும் பெயரைக் கொண்டு வந்ததெனக் கூற வேண்டும்.
நான் அன்றிரவு நாடகம் ஆடியபொழுது நேரிட்ட ஒரு சந்தர்ப்பத்தை மாத்திரம் இங்கு வரைகிறேன். “சங்கிலி அறுக்கும் காட்சி” மேலே விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடந்தபோது, கீழே உறங்கிக்கொண்டிருந்த விக்டோரியா பப்ளிக் ஹால் சூபரின்டென்டென்டாகிய எல்லிஸ் (Ellis) துரை, மேலே ஏதோ கலகம் நடக்கிறதென்று பயந்து, தன் வயோதிகத்தையும் பாராமல் மேல்மாடிக்கு ஓடிவந்தார்! மறு நாள் என்னைச் சந்தித்தபொழுது, “என்ன மிஸ்டர் சம்பந்தம்! நேற்றிரவு அவ்வளவு காபுரா பண்ணிவிட்டாயே!” என்று நகைத்துக்கொண்டு கேட்டார்.
இந்த நாடகம் நான் எழுதிய நாடகங்களிலெல்லாம், எங்கள் சபைக்குப் பெரும்பெயரைக் கொண்டு வந்ததெனக் கூற வேண்டும். இவ்வொரு நாடகத்தினால் எங்கள் சபைக்குச் சுமார் 16,000 ரூபாய் வசூலாகியிருக்கிறது. அன்றியும் தென் இந்தியாவிலுள்ள எல்லாத் தமிழ் நாடகச் சபைகளும், நாடகக் கம்பெனிகளும், (ஸ்திரீகள் கம்பெனிகள் பாலர் கம்பெனிகள் உட்பட) இதை நடத்தியிருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.
இந்த மனோஹரன் வேடத்தை எப்படி நன்றாய் நடிப்பது என்று என்னை அநேகர் கேட்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்தப் பதிலைத்தான் நான் கூறுவேன். இந்த இடத்தில் இப்படி நிற்க வேண்டும், இந்த இடத்தில் இப்படி உட்கார வேண்டும், இந்தச் சந்தர்ப்பத்தில் நகைக்க வேண்டும், இந்தச் சந்தர்ப்பத்தில் கோபாவேசங்கொள்ள வேண்டும் என்பது முதலானவைகள் எல்லாம் எளிதில் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். இதில் கற்பது கடினமானது என்னவென்றால், மனோஹரன் தன் தாய் தந்தையர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதே. இது ஒருவன் சொல்லிக் கொடுத்து வருவதல்ல. சுயானுபவம் இருந்தால்தான் வரும். “என்னைப் பெற்ற தாய் தந்தையரன்றி எனக்குப் பிறிதொரு தெய்வமில்லை” என்று மனோஹரன் கூறியவாறு, அக்கோட்பாட்டை உறுதியாய்க் கொண்டு உலகில் ஒழுகுபவர்கள் மாத்திரம்தான், இந்த வேடத்தை நன்றாய் நடிக்கச் சக்தியுள்ளவர்கள் என்பது என் தீர்மானமான எண்ணம். அக்கொள்கையில்லாதவர்கள் எவ்வளவு நன்றாய் நடிக்க முயன்றாலும், பார்ப்பவர்களுக்கு முழு திருப்தியை விளைக்க முடியாதென்பது என் அனுபவம்.
இனி இந்நாடகத்தில் மனோஹரனாக நடிக்க விரும்புவோர்கள், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஒரு விஷயம் கூற வேண்டியவனாயிருக்கிறேன். நான் முதல் முதல் அன்றையத் தினம் இவ்வேடத்தில் நடித்தபொழுது “பிள்ளையார் குட்டாக” ஒன்று நேர்ந்தது; சங்கிலியறுக்கும் காட்சியில், மேடையின்மீது அரச சபையிலுள்ளவர்களாகிய உத்தியோகஸ்தர்களையெல்லாம் விலக்கிக் கொண்டு புருஷோத்தம மகாராஜாவின்மீது கையில் வாள் கொண்டு பாய யத்தனிக்கும் பொழுது, அக்கோபாவேசத்தில் அருகிலிருந்த மந்திரி சத்யசீலராக வேடம் தரித்த எனது நண்பர் எம். வை. ரங்கசாமி ஐயங்காரை அகஸ்மாத்தாய்க் காயப்படுத்தினேன். அது முதல் பன்முறை இக்காட்சியில் அநேகம் பெயருக்குக் காயப்படுத்தியிருக்கிறேன். அதன் பேரில் நிஜமான வாளைக் கையிலெடுத்தால் அக்காட்சியில் அரண்மனை உத்யோகஸ்தர்களாக வர யாவரும் அஞ்சத் தலைப்பட்டனர். பிறகு அவர்கள் ஆட்சேபிப்பது நியாயம்தான் என்று ஒப்புக் கொண்டு, சிலசமயங்களில், மரத்தினால் செய்த கத்தியை உபயோகப்படுத்திப் பார்த்தேன். அதைக் கொண்டும் ஒரு முறை என்னைத் தடுக்க வந்தவர் ஒருவருக்கு ‘ஊமை வடு’ உண்டாக்கினேன்! ஒவ்வொரு முறையும் நான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்று தீர்மானித்தும், எனது நண்பர்கள் இக்காட்சி ஆரம்பிக்குமுன் ஜாக்கிரதையாக இருக்கும்படி எவ்வளவோ எச்சரிக்கை செய்தும், சில சமயங்களில் என்னையும் மறந்து யாருக்காவது காயப்படுத்தியதுண்டு. ஒரு முறை சத்யசீலராக வந்த எனது நண்பர் ஷண்முக முதலியாருக்கு என் கைவாளினால் காயமுண்டாக்க, மேடையின்மீது ரத்தம் சொரிய ஆரம்பித்து விட்டது; என்ன செய்வார் பாபம்! அக்காட்சியைக் கெடுக்க மனமில்லாதவராய் காட்சி முடிந்தவுடன் அரங்கத்தைவிட்டு விலகிப் போய் சிகிச்சை செய்து கொண்டார். நான் அதைக் கண்டு மிகவும் மனவருத்தப்பட்டு, அவருடைய மன்னிப்பைக் கேட்டேன். நான் எவ்வளவு மன்னிப்பைக் கேட்டும் காயம் பட்டது பட்டதே! ஆகவே இந்நாடகத்தில் மனோஹரனாக நடிக்க விரும்பும் ஒவ்வொரு வருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், இக்காட்சி யில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே. இக்காட்சி, எனக்கும் மற்றவர்களுக்கும், ஒரு கெடுதியுமின்றி முடிவு பெறும்போதெல்லாம் ஈசனுக்கு என் வந்தனத்தைச் செலுத்துகிறேன்.
இந்நாடகம் அன்றைத் தினம் முடிவு பெறுவதற்கு 5½ மணி சாவகாசம் பிடித்தது; சில சமயங்களில் வெளியூர்களில் இதை நாங்கள் ஆடியபொழுது 6 மணி நேரமும் பிடித்திருக்கிறது. இது மிகவும் பெரியதாயிருக்கிறதெனத் தீர்மானித்து, அவசியமாக இல்லாத சில பாகங்களைக் குறுக்கி கடைசியாகப் பதிப்பித்த இரண்டு மூன்று பதிப்புகளில், நான்கு மணிநேரத்தில் முடியும்படியானதாகச் செய்து அச்சிட்டிருக்கிறேன். இதை ஏன் இப்படிக் குறைத்து விட்டாய் என்று எனது நண்பர்கள் சிலர் என் மீது குற்றஞ் சாட்டியிருக்கின்றனர். ஆயினும் அவ்வாறு இந்நாடகத்தைக் குறுக்கியதன் முக்கியக் காரணம் எங்கள் சபையார், இரவில் நாடகங்கள் ஆடுவதை விட்டு, சாயங்காலங்களில் நாடகங்களை நடத்துவதேயாம் என்று அறிவார்களாக; சாயங்காலங்களில் நாடகங்களாடும் பொழுது சுமார் 9 மணிக்குமேல், நாடகம் முடிவது நலமென்றெண்ணி, இப் புஸ்தகத்தில் ஏறக்குறைய 45 பக்கங்களுக்குமேல் குறைத்து விட்டேன்.
எங்கள் சபையானது வெளியூர்களுக்குப் போய் நாடகங்கள் நடத்திய பொழுதுதெல்லாம் லீலாவதி சுலோசனாவும், இம் மனோஹரனும் எப்பொழுதும் ஆடப்பட்டு வந்திருக்கின்றன. பெரும்பாலும் இவ்விரண்டிலொன்றையே ஆரம்ப நாடகமாக வைத்துக் கொள்வது எங்கள் வாடிக்கை. “லீலாவதி-சுலோசனா” வைப்போலவே, இந்நாடகமும் சில கலாசாலைகளில் பாடப் புஸ்தகமாக வைக்கப்பட்டிருக்கிறது. இனி இம் மனோஹரன் நாடகமானது இதர சபையோர்களாலும் நாடகக் கம்பெனிகளாலும் ஆடப்பட்டதைப்பற்றிச் சிறிது எழுதுகிறேன்.
நான் பார்த்ததற்குள் நாடகக் கம்பெனிகளில் வேலு நாயர் என்பவரே இம் மனோஹரன் வேடத்தை என் மனத்திற்குத் திருப்தியாகப் பூண்டிருக்கிறார். ஆயினும் இவர் இவ் வேஷம் தரிப்பதில் ஒரு முக்கியமான குறையை மாத்திரம், தமிழ் நாடக மேடையின் அபிவிருத்தியின்பொருட்டுக் கூற வேண்டியவனாயிருக்கிறேன். இவர் உடுக்கும் உடை மாத்திரம் இந்தப் பாத்திரத்திற்கு ஏற்றதன்று. ஸ்காட்லாண்டு தேசத்திலிருப்பவர்கள் உடுக்கும் ஹைலாண்டு ஸ்கர்ட் (Highlander's skirt) மாதிரியாக முழங்காலளவு ஓர் ஆடையை உடுத்தி நடிக்கிறார். இது என்ன காரணம் பற்றியோ அறிகிலேன். இதை இந்த வேஷத்தில் அணிவது உசிதமல்லவென்றே எனக்குத் தோன்றுகிறது. இம்மாதிரியான உடைகள் நமது பூர்வீகர்கள் உடுத்ததாக எங்கும் சொல்லப்படவில்லை. காலுக்கு ஜல்லடம் போன்ற உடையே உடுத்தல் நியாயமாகும். ஜல்லடம் மாத்திரம் அக்காலத்தில் இருந்ததோ என்று இதைப் படிப்பவர்கள் சந்தேகப்பட வேண்டாம்; பூர்வகாலத்தில் இடுப்பு முதல் கால் வரைக்கும் அணியும் உடைகளிருந்திருக்கின்றன. சங்க காலத்தில் அதற்கு ‘வட்டுடை’ என்று ஒரு பெயர் உண்டு. சில பாட்டுகளை மாத்திரம் அதிகமாய்ச் சேர்த்த போதிலும், வசனத்தில் ஒன்றும் மாற்றாமலும், அதிகமாய்ச் சேர்க்காமலும் என் அபிப்பிராயப்படி, இப்பாத்திரத்தை சற்றேறக்குறைய நன்றாய் நடிப்பவர் இவரே என்று சொல்ல வேண்டும்.
தற்காலத்திய தென் இந்தியத் தமிழ் நாடக மேடையில் ஸ்திரீகள் ஆண் வேடம் தரிப்பது மிகவும் கொஞ்சமேயாம். அதில் மனோஹரன் வேடம் ஒன்றாகும். சில நாடகக் கம்பெனிகளில் ஸ்திரிகள் இம் மனோகரன் வேடம் பூண்டு நடித்ததை நான் பார்த்திருக்கிறேன். அவர்களிலெல்லாம் காலஞ்சென்ற பாலாம்பாள் என்னும் மாதே மிகவும் நன்றாக நடித்ததாக என் அபிப்பிராயம். ஆடவர்கள் ஸ்திரி வேஷம் பூணுவதைவிட ஸ்திரிகள் ஆண் மக்கள் வேஷம் பூணுவது மிகவும் கடினம் என்பது என் எண்ணம். அப்படியிருந்தும் இந்தப் பாலாம்பாள் (இம் மாது சில வருஷங்களுக்கு முன் காலகதியடைந்து விட்டனள்) மனோஹரனாக நடித்தது எனக்குத் திருப்தியைத் தந்தது. என்ன இருந்த போதிலும் பெண்பாலாதலால் “சங்கிலி அறுக்கும் காட்சி”யில் மாத்திரம் அவ்வளவு திருப்திகரமாயில்லை.
பாய்ஸ் கம்பெனிகளில் (Boy's Company) அநேக கம்பெனிகள் இந்நாடகத்தை நடத்தி வருகின்றனர். ஏறக்குறைய எல்லா பாய்ஸ் கம்பெனிகளும், என் அனுமதியைப் பெற்று, நடத்தி வருகிறார்கள் என்றே நான் கூறவேண்டும். அவைகளில் இம் மனோஹரன் வேஷம் பூண்டவர்களுக்குள் ஜகன்னாத ஐயர் கம்பெனியில், காலஞ்சென்ற மதனகோபால் என்னும் சிறுவன்தான் மிகவும் நன்றாக நடித்ததாக என் அபிப்பிராயம். இச்சிறுவன் சிறு வயதிலேயே சில வருஷங்களுக்கு முன்பாக இறந்ததாகக் கேள்விப்பட்டு நான் துக்கப்பட்டேன்.
ஆமெடூர் சபையில் (Ameteur Dramatists) அநேகம் பெயர் இவ்வேஷம் தரித்திருக்கின்றனர்; அவர்களிலெல்லாம், கூடிய வரையில் என் மனத்திற்குத் திருப்திகரமாயிருந்தது; சில வருஷங்களுக்கு முன் எக்செல்சியர் கிளப்பில் (Excelsior Club), சுப்பிரமணிய முதலியார் என்பவர் நடித்ததேயாம். இச்சந்தர்ப்பத்தில் என் நண்பர் ம.கிருஷ்ணய்யர் சில மனோஹரன் வேடம் பூண்டவர்களுக்கு வேடிக்கையாய்ப் பெயர் வைத்தது எனக்கு நினைவிற்கு வருகிறது; அவர்களுள் ஒருவருக்குக் காட்டு ராஜா மனோஹரன் என்று பெயரிட்டார்; மற்றொருவருக்குப் பஞ்சாங்கம் மனோஹரன் என்று பெயரிட்டார்; மற்றும் ஒருவருக்கு தாசரி மனோஹரன் என்று நாமமிட்டார்!
இவ்வேடம் பூண்டு நடிப்பதில் அநேகர் ஒரு முக்கியமான தவறிழைக்கிறார்கள் என்றே நான் கூறவேண்டும். இங்ஙனம் நான் எடுத்துக்காட்டுவது அவர்கள் மீது குற்றம் கூறுவதற்கன்று. இக் குற்றத்தைத் திருத்தி இன்னும் செம்மையாக அவர்கள் நடத்த வேண்டுமெனக் கோரியே இதை எழுதுகிறேன். இந்நாடகத்தில் இரண்டாவது அங்கம் முதற்காட்சியில் மனோஹரன் தான் தன் தாயாருக்காகப் பகைவரிடமிருந்து ஜெயித்துக் கொணர்ந்த சிம்மாசனத்தின்மீது, தன் தந்தையும் அவரது வைப்பாட்டியாகிய வசந்தசேனையும் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, கோபாவேசங்கொண்டு, வாளை உருவியும் சத்தியசீலர் பத்மாவதி தேவிக்கு மனோஹரன் அளித்த வாக்குத் தத்தத்தை ஞாபகப்படுத்த, தன் வாக்கால் கட்டுப்பட்டவனாய், கண்களில் நீர் ததும்ப சபையைவிட்டு விலகுகிறான்; இச் சந்தர்ப்பத்தில் நான் நடிக்கும் பொழுதெல்லாம், ஒரு முறை சரேலென்று திரும்பிக் கோபத்துடன் வசந்தசேனையைப் பார்த்து விட்டுப் பெருமூச்செறிந்து, உடனே அரங்கத்தினின்றும் வெளியிற்போவது என் வழக்கம். இது நாடகம் பார்க்க வந்திருப்பவர்களுக்கெல்லாம் திருப்தியைக் கொடுக்கிறதென நான் சொல்ல வேண்டும். இப்படிச் செய்வது நன்றாயிருக்கிறதெனச் சபையோர் மெச்சுகிறார்களே என்று, இதை ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறை திருப்பித் திருப்பிச் செய்கிறார்கள் மற்றவர்கள். இது தவறென்பது என் கொள்கை. ஒன்றை ஒரு முறை செய்தால் நன்றாயிருந்தால், அதைப் பன்முறை செய்தால் அதிக நன்றாயிருக்கும் என்று எண்ணுவது நாடகச்சுவைக்கு உவப்பானதன்று. இச்சந்தர்ப்பத்தில் எனக்கு இரண்டு தமிழ்ப் பழமொழிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒன்று “அளவுக்கு மேல் உண்டால் அமுதமும் விஷமாகும்” என்பது; மற்றொன்று, “கரும்பு தித்திக்குமென்று வேருடன் உண்ணலாமா?” என்பதாகும். நான் மேற்சொன்னதைக் கருதி, இனியாவது இம் மனோஹரன் வேடம் பூணுபவர்கள், மேற்சொன்ன சந்தர்ப்பத்தில், ஒரு முறையே அவ்வாறு திரும்பிப் பார்த்துப் போவார்களாக.
இனி விஜயாளாக மற்றவர்கள் நடித்ததைப்பற்றிச் சிறிது எழுதுகிறேன். இப்பாத்திரத்தைப் பற்றி எனது நண்பர்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்பாத்திரம் பத்மாவதியைப் போல் நாடகத்திற்கு அவ்வளவு முக்கியமானதல்லவென்பதே. விஜயாள் பாத்திரமல்லாமல் மனோஹரன் நாடகத்தை நடத்தி முடிக்கலாம். ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறே நடத்தி முடிக்க யத்தனம் செய்தேன் (அதைப்பற்றிப் பிறகு எழுதுகிறேன்). மனோஹரனைக் கதாநாயகனாகக் கொண்ட போதிலும், மனோஹரன் மனைவி கதாநாயகி என்று கொள்ளலாகாது. ஷேக்ஸ்பியர் மஹா நாடகக்கவி எழுதிய ஜுலியஸ் சீசரின் மனைவி கதாநாயகியாவளோ? மனோஹரன் நாடகத்தில் பிரதான ஸ்திரீ பாகம் பத்மாவதியே என்று அதை ஒரு முறை வாசித்தவர்களும் ஒப்புக்கொள்வார்கள். அப்படியிருக்க, இந்நாடகத்தை ஆடுவதற்கு எடுத்துக்கொள்ளும் எல்லாச் சபையாரும் பெரும்பாலும், விஜயாள் பாத்திரத்தை அதன் ஸ்திரீ வேடம் தரிக்கும் ஆக்டருக்கே கொடுப்பது வழக்கமாய் விட்டது.
முக்கியமாக நாடகக் கம்பெனிகளில் இது மாமூலாய் விட்டது. இதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர்களெல்லாம் இந்நாடகத்திற்கு மனோஹரன் கதாநாயகன், ஆகவே மனோஹரன் மனைவி கதாநாயகியாக வேண்டுமென்று எண்ணுவதே என்று நினைக்கிறேன். முதலில் மனோஹரன் இந்நாடகத்திற்குக் கதாநாயகன்தானா என்பதே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. அது எப்படியிருந்த போதிலும் மனோஹரன் மனைவி கதாநாயகியல்ல வென்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. இச் சந்தர்ப்பத்தில் கதாநாயகி என்கிற பதத்தைக் கதையின் முக்கியமான பாத்திரம் என்னும் அர்த்தத்தில் உபயோகிக்கின்றேன் என இதை வாசிப்பவர்கள் அறிவார்களாக. இன்னொரு காரணம், காலஞ்சென்ற என் ஆருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு இப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நடித்ததே என்று தோற்றுகிறது. இப்பாத்திரம் நான் முன்பே குறித்தபடி முக்தாநாயகி பிரிவினைச் சார்ந்தது. அப்படியிருக்க, மனோஹரன் தாயாராக இருக்கக்கூடிய ரூபமுடையவர்கள் இப்பாத்திரத்தை எடுத்துக் கொள்வது ரச ஆபாசமாம். அன்றியும் ஸ்திரீ நாடகக் கம்பெனிகளில், ஸ்திரீகள் இப் பாத்திரத்தைப் ப்ரௌடா நாயகியாக நடிக்கிறார்கள், பெரும்பாலும்; இது முற்றிலும் தவறெனவே நான் எடுத்துக் காட்ட வேண்டியவனாயிருக்கிறேன்.
இனி பத்மாவதியாக நடித்தவர்களைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்வோம். இதை எங்கள் சபையில் முதல் முதல் மேலே கூறியபடி அ. கிருஷ்ணசாமி ஐயர் மிகவும் நன்றாய் நடித்தபோதிலும், இப்பாத்திரத்தில், மிகச்சிறந்த பெயர் பெற்றவர் எனது நண்பராகிய எஸ். பத்மநாபராவ் பி.ஏ. என்பவரே. இவருக்குப் பாடத் தெரியாது. நாடகமேடையில் இவர் வாயெடுத்துப் பாடியதில்லை யென்றே நான் சொல்லவேண்டும். ஆயினும் கேவலம் வசனத்தில் மாத்திரம், இந்த வேஷத்தில் இவருக்கு நிகரில்லை என்று இவர் பெயர் பெற்றது மிகவும் மெச்சத்தக்கதே. இவருடைய ரூபம் பத்மாவதியின் வேடத்திற்கே சிருஷ்டிக்கப்பட்டது போலும் என்று பலர் புகழ நான் கேட்டிருக்கிறேன். அவ்வாறே நானும் எண்ணுகிறேன். பத்மாவதியின் கம்பீரியத்தையும், ஆழ்ந்த அறிவையும் திடச்சித்தத்தையும், இப்பெண்மணியே ஸ்திரீகளுக்கெல்லாம் ஓர் உதாரணமாயிருப்பவள் என்னும் அருங்குணங்களையும், ஒரு விதத்தில் தனக்குத் துரோகம் செய்தவராயினும் தன் புருஷனான புருஷோத்தமனிடமுள்ள பதிவிரதையின் வாஞ்சையையும், தன் குமாரனான மனோஹரனிடம் உள்ள அளவிலா - அழிவிலா அன்பும், தன் மருமகளாகிய விஜயாளிடம் பிரியமும், எப்படிப்பட்ட சோகத்திலும் உத்தம க்ஷத்திரிய குலத்துதித்த ஸ்திரீகளுக்குரிய மனோதிடமும், இன்னும் இந்த ஸ்திரீ ரத்னத்தின் இதர அரிய குணங்களையும், நாடக மேடைமேல் இவரைப்போல் நடித்துக் காட்டவல்லவர்கள் இந்த நாற்பது வருடங்களாக வேறொரு வரை நான் கண்டதில்லை யென்றே கூறவேண்டும். “கண்ணிற் சொலிச் செவியிநோக்கும் இறைமாட்சி” என்று கவி வர்ணித்ததை இவர் நாடக மேடையின்மீது நடித்துக் காட்டியுள்ளவர் என்றே நான் உறுதியாய்க் கூறவேண்டும். இவர் தற்காலம், (என்னைப்போல) வயோதிகனாகி, நாடகமாடுவதை விட்டு விலகிப் பல வருஷங்களாயின. இவரை நான் பார்த்தும் பல வருஷங்களாயின; ஆகவே இதை வாசிப்பவர்கள் இவரைப் பற்றி ஏதோ முகஸ்துதியாய்க் கூறுகிறேன் என்று எண்ணலாகாது. இவரைப்பற்றி இவ்வாறு உண்மையை எழுதவேண்டியது என் கடமை என எண்ணி எழுதியதாகவே கொள்ளும்படி நான் எனது நண்பர்களை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வேடம் தரிப்பதில் இவருக்குள்ள பாண்டித்தியத்தைப் பற்றி. இன்னொருவிதமாக மதிப்பிட வேண்டியவனாயிருக்கிறேன். என்னுடன் நாடக மேடையில் நடிப்பவர்களுடைய பாண்டித்தியத்தைப்பற்றி அளவிட என்னிடம் ஒரு கருவியுண்டு - அதாவது அவர்கள் என்னுடன் நடிக்கும் பொழுது, எனக்கு மனமகிழ்ச்சி கொடுக்கின்றார்களா என்பதே. இது சரியோ தவறோ நான் அறிகிலேன். இது தவறன்று என நான் கூறவேண்டும். ஏனெனில், அருகில் உடன் நடிக்கும் ஆக்டர் எனக்குத் திருப்தியைத் தராவிட்டால், அரங்கத்திற்கு வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் ஜனங்களுக்கு எப்படி திருப்திகரமாயிருக்கக் கூடும்? இதைக் கொண்டு நான் அளவிடுவதானால், என்னுடன் பத்மாவதியாக நடித்த ஆக்டர்களுக்குள் எல்லாம், பத்மநாபரே மிகவும் மேம்பட்டவர் என்று நான் சங்கையின்றிக் கூறவேண்டும். இவர் எனது அன்னையாக நடித்தபொழுது எனக்குண்டான மகிழ்ச்சியில், மற்றவர்கள் நடித்தபொழுது ஒரு பாதியும் நான் பெற்றேனில்லை என்பது திண்ணம். இவர், சென்னையில் மாத்திரமன்று; எங்கள் சபை, கொழும்பு திருச்சினாப்பள்ளி, கும்பகோணம், திருநெல்வேலி, மதுரை முதலிய பல வெளி ஜில்லாக்களுக்குப் போய் வந்த பொழுதெல்லாம், இந்நாடகத்தில் பத்மாவதியாக நடித்து, அழியாப் பிரசித்தியை பெற்றார். இவர் பத்மாவதியாக இரும்புச் சங்கிலிகளை அறுக்கும் காட்சியில், அரங்கத்தில் தோன்றியது முதல், சபையோரின் கண்களையெல்லாம் இவரே கவர்வார்; மனோஹரனைக் கவனிப்பதும் இவருக்கு இரண்டாவதாகத் தான் என்றே நான் கூறவேண்டும். இவர் அரங்கத்தை விட்டு நீங்குமளவும் எல்லோரும் இவரையே பார்த்துக் கொண்டிருக்கும்படியாக, அவ்வளவு அற்புதமாக நடிப்பார்! சில வருஷங்களுக்கு முன் இவர் பத்மாவதியாக நடித்தபொழுது இப்பொழுது வந்திருக்கும் சினிமா (Cinema) கம்பெனிகள் அக்காலத்தில் இருந்திருந்தால் அப்படியே சினிமாவில் இந் நாடகத்தைப் படமெடுத்திருந்தால், பத்மாவதியின் வேஷம் இப்படித்தான் நடிக்கப்பட வேண்டுமென்று, நாடக உலகமானது அறிந்திருக்கும். அப்பேறு கிடைக்காமற் போனது தென் இந்திய நாடக மேடையானது செய்த தௌர்ப்பாக்கியமே என்று எண்ணுகிறேன்.
நான் மேலே குறித்தபடி அவ்வளவு முக்கியமான பாத்திரமாகிய இப்பத்மாவதி. பாத்திரத்தை, நாடகக் கம்பெனிகளில் பெரும்பாலும் இருப்பவர்களுக்குள் முக்கியமான ஆக்டருக்குக் கொடுப்பதை விட்டு, இரண்டாவது மூன்றாவது தரமான ஆக்டர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள். அப்படிச் செய்வது அவர்கள் இந்நாடகத்தின் முக்கிய சாராம்சத்தைக் கிரகிக்காததனால் என்பதற்குச் சந்தேகமில்லை. இனியாவது இந்நாடகத்தில் இப்பாத்திரத்தின் மகிமையை நன்கு உணர்ந்து, முக்கியமான ஸ்திரீ வேஷம் தரிப்பவர்களுக்கே இதைக் கொடுப்பார்களாக.
இந்தப் பத்மாவதி பாத்திரத்தை விட்டு அகலுமுன் ஒரு விஷயத்தைக் குறிக்க விரும்புகிறேன். பத்மாவதி வேஷம் தரிப்பவர்கள் பாடுவதில் தவறில்லை; சில சந்தர்ப்பங்களில் பாடுவது மிகவும் பொருத்தமாயுமிருக்கும்; ஆயினும் தக்க சந்தர்ப்பங்களில்லாத இடங்களில் பாடுவது மிகவும் தவறாகும். நான் சில சபைகளிலும் கம்பெனிகளிலும் பார்த்தபடி, “சங்கிலியறுக்கும் காட்சியில்” பத்மாவதி பாடுவது மிகவும் தவறாகும். மனோஹரன் அடங்காக் கோபாவேசங் கொண்டவனாய்த் தன் தளைகளை அறுத்துக் கொண்டு தன் தந்தையின் சிரத்தையே சேதிக்கப்போகும் தருவாயில், பத்மாவதி அச்சபையில் தோன்றி அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “வேண்டாம்” என்று தடுக்கிற சந்தர்ப்பத்தில், பத்மாவதி பாட ஆரம்பிக்கிறாள்! அதற்குப் பதிலாக மனோஹரனும் பாட ஆரம்பிக்கிறான்! இது மிகவும் ரசாபாசமாம்! இக்காட்சியானது வெகு விரைவில் முடிக்கவேண்டியதாயிருக்க, இச்சமயத்தில் இவ்விருவரும் பாடிக்கொண்டிருப்பது மிகவும் அனுசிதமாம். உபாத்தியாயர் வீட்டில் தீப்பற்றிக்கொண்டது என்கிற விஷயத்தை அவருக்குத் தெரிவிக்க வேண்டிய மாணாக்கன், சங்கராபரண ராகத்தில் சவுக்கமாக ஆதிதாளத்தில் அதைப் பாடி அறிவிப்பதற்குச் சமானமாகும்! இக் குற்றத்தை இனியாவது இந்நாடகத்தை ஆடுபவர்கள் விலக்குவார்களாக. பத்மாவதி பாடவேண்டு மென்றிருந்தால், இதைவிடத் தக்க இடங்கள் இந்நாடகத்தில் அநேகம் இருக்கின்றன.
இதர நாடக சபைகளும் கம்பெனிகளும் இந்நாடகத்தை ஆடும்பொழுது, என் கண்ணுக்குப் புலப்பட்ட இன்னொரு குறையை எடுத்துக் கூறுகிறேன். அது, வசந்தசேனையின் பாகத்தை மிகவும் அற்புதமாகப்பாவித்து நன்கு தேர்ச்சியடையாத ஆக்டர்களுக்கே கொடுப்பதேயாம். இந்தப் பாகத்தை நடிப்பது மிகவும் கடினம் என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். இப்பாத்திரம் சரியாக நடிக்கப்படா விட்டால் இந்நாடகமே நன்றாயிராது என்பது என் நம்பிக்கை. இதையும் தக்கபடி தேர்ச்சி பெற்ற ஆக்டருக்கே கொடுத்தாலொழிய நாடகம் சரியாயிராது.
மேற்சொன்னபடியே ‘வசந்தன்’ பாத்திரமும் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமானதே. சாதாரணமாக, நாடகக் கம்பெனிகளில் இவனைக் ‘கோமாளி’யைப்போல் வேஷம் தரிக்கச் செய்து ரசாபாசமாக்குகிறார்கள். பைத்தியக்காரனுக்கும் கோமாளிக்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு என்பதை அறியாமல் இவ்வாறு நடத்துவது பெரும் தவறாகும். அன்றியும், வசந்தன் பைத்தியக்காரன்தானே, அவன் என்ன செய்தாலும் பெரிதல்ல என்று நினைக்கிறார்கள். அதுவும் தவறாகும். வசந்தன் பைத்தியக்காரன்தான். ஆயினும் அவனது பைத்தியத்திற்கேற்றபடி என்ன பேசவேண்டுமோ, எப்படி நடிக்க வேண்டுமோ அதை விட்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் எதை வேண்டுமென்றாலும் பேசலாம் என்று எண்ணுவது பெருங்குற்றமாகும். தப்போ, ஒப்போ நாடகாசிரியன் இந்தப் பாத்திரம் இவ்வளவுதான் பேசவேண்டுமென்று எழுதியிருக்க, அதற்குமேல், சாதாரண ஜனங்கள் சிரிக்கிறார்களேயென்று, அதிகமாக ரசாபாசமான வார்த்தைகளைப் பேசுவது தவறு என்று நான் உறுதியாய்க் கண்டிக்க வேண்டும். இதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். இந் நாடகத்தில் ‘சங்கிலியறுக்கும்’ காட்சி மிகுந்த வீர ரசமும் சோகரசமும் அமைந்தது. இக்காட்சியில், ஹாஸ்ய ரசத்திற்கு இடமில்லை. அப்படியிருக்க பத்மாவதிதேவி தன் சொந்த மகனை மரிக்கும்படியாகக் கட்டளையிட்டபின், மனோஹரன் மூர்ச்சையாகிக் கீழே விழுந்தவுடன், எல்லோர் கண்களிலும் நீர்ததும்பிக் கொண்டிருக்கும் சமயத்தில், சில ‘வசந்தர்’கள் சபையோரை நகைக்கச் செய்யவேண்டி, ஏதாவது நாடகத்தில் எழுதியிராத வார்த்தைகளைப் பேசி, அல்லது கோமாளிக்கூத்தாய் ஏதாவது சேஷ்டைகள் செய்து ரசாபாசம் விளைத்ததை, நான் என் கண்ணாற் கண்டிருக்கிறேன். அச் சமயங்களிலெல்லாம் எனக்கு உண்டான கோபம் கொஞ்சமல்ல; இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை அறியச் சக்தியற்றவர்களுக்கு இந்நாடகத்தை ஆட ஏன் உத்தரவு கொடுத்தோம் என்றே என்னைப் பழித்துக் கொண்டிருக்கிறேன். இனிமேலாவது, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் வசந்தன் வேஷம் பூணுபவர்கள் இக்காட்சியில் ஜாக்கிரதையாக நடித்து, சபையிலுள்ள ரசிகர்களின் மனதைப் புண்படுத்தாதிருப்பார்களெனக் கோருகிறேன். அன்றியும் வசந்தன் வேடம் பூணுபவன் கறுப்பாயிருக்கவேண்டும்; பிறப்பிலேயே கறுப்பாயிருக்கும் ஆடவன் இவ்வேடம் பூண்டால் முகத்திற்கு வர்ணமே பூசலாகாது; ஒருக்கால் சிவப்பாயிருக்கும் ஆடவன் இவ்வேடம் பூண்டால் முகத்தையும், கை கால்களையும் கறுப்பாக்க வேண்டும்; இந்நாடகத்திலேயே இவன் கறுப்பு நிறமுடையவனாயிருக்கிறான் என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனிப்பார்களாக.
இந்நாடகத்தை ஆடுவதில் ஒரு முக்கியமான கஷ்டம் என்ன வென்றால் இதில் வரும் குலகுரு பௌத்தாயனர், அமிர்த கேசரி, கேசரிவர்மன், பிசாசு முதலிய பாத்திரங்கள் சிறியவைகளாயிருந்த போதிலும், ஒவ்வொன்றும் சரியாக நடிப்பது கடினமே; அப்படிச்சரியாக நடித்தாலொழிய, நாடகம் சோபிக்காது. ஆகவே இதை நடிக்க விரும்பும் நாடக சபைகளும், கம்பெனிகளும் எல்லாப் பாத்திரங்களுக்கும் சரியான ஆக்டர்கள் இருந்தாலொழிய இந்நாடகத்தை எடுத்துக்கொள்வது உசிதமல்லவென்பது என் துணிபு.