உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் செய்திகள்/7

விக்கிமூலம் இலிருந்து

7. மக்கட்பேறு

மக்கள் மதிக்கத்தக்க செல்வமாவர்; இதனைவிட அரிய செல்வம் வேறு ஒன்றும் இருக்க முடியாது என்று திட்பமாகக் கூறமுடியும். பிறக்கும் மக்கள் அறிவு உடைய மக்களாக வளர வேண்டும்; இல்லை என்றால் மக்களைப் பெற்றும் மிக்க பயன் இல்லை. எனவே பெறுவதைவிட அவர்களை வளர்ப்பது பொறுப்புமிக்க செயலாகும்.

மக்கள் பெற்றோர்த்ம் சுமையைக் குறைப்பவர்களாகப் பயன்பட வேண்டும். அவர்கள் சுமைகளாகப் பெற்றோர்களுக்கு ஆகக்கூடாது; பணிவுமிக்கவர்களாகவும், பழிகளைக் கூட்டும் வழிகளைத் தேடாதவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும். அத்தகைய நன்மக்களைப் பெற்றால் அது பெற்றோர்களுக்குப் பெருமை அளிப்பதாகும்; வலிமை சேர்ப்பதும் ஆகும்; அவர்கள் கவலை நீங்கி வாழ முடியும்; ஏழு பிறப்புக்கும் அவர்களை எந்தத் துன்பமும் வந்து தாக்காது; அவர்களைத் தம் உடைமையாக மதித்துப் போற்றலாம். மதிக்கத்தக்க நன்மக்களைப் பெறுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; அஃது அவரவர் செய்த நல்வினையின் பயனே என்றும் கூறலாம். ஒருசிலருக்கே இந்த நல்வாய்ப்புக் கூடி வருகிறது. அவர்களை அதிர்ஷ்ட சாலிகள் என்றுதான் கூற முடியும்.

குழந்தைகள் மாபெருஞ் செல்வம் என்பதனை மறுக்க முடியாது. அவர்களால் நன்மையும், சிறப்பும், உயர்வும் கிடைக்கின்றன. அவர்கள் தாம் அள்ளித் தின்னும் சோற்றைச் சிதற வைத்து இருகையாலும் பிசைந்து தின்றது போக விட்டதை உண்ணும் பேறு கிடைப்பது மகிழ்வுக்கு உரியது. அமுதத்தைவிட அது மிக்க இனியதாகும்.

குழந்தையை எடுத்து அணைத்துக் கொள்வதற்கு நிகரான இன்பம் எதுவுமே இருக்க முடியாது. உச்சிதனை மோந்தால் உள்ளம் குளிர்வது உறுதி; மெச்சி ஊரார் அவனைப் புகழ்ந்தால் மேனி சிலிர்த்துவிடும். நச்சி அவன் சில சொற்கள் பேசினால் செவிக்கு அவை இன்ப ஊற்றாக அமைந்துவிடும். மழலைமொழி பேசும் அந்த இனிய சொற்கள் எங்கிருந்துதான் அந்த இனிமையைப் பெற்றனவோ! யாழும் குழலும் அவற்றின்முன் நிற்க முடியாமல் தம் தோல்வியை ஒப்புக்கொள்கின்றன. இசையினும் இனியது தம் குழந்தைகளின் மழலைச்சொல் என்பதனை ஒப்பிட்டுப் பார்ப்பவர் அறிவர்.

அறிவுடைய மக்களைப் படைத்துத் தருவது செறிவுடைய கல்வியால் இயல்வதாகும்; கற்றவர் கூடும் சபையில் பற்பல பேசித் தன் புலமையையும் அறிவையும் காட்டும் மகன் தன் தந்தைக்கு மிகவும் கடமைப்பட்டவன் ஆகிறான். ஒவ்வொரு தந்தையும் தன் மகனைச் சபையில் முந்தி இருக்கச் செய்ய வேண்டும்; அதற்குத் தக்க கல்வியையும் தகுதியையும் உண்டாக்கித் தரவேண்டும். அஃது அவர் கடமையாகிறது.

‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்பர். மகன் தந்தையைவிட அறிவாளி என்று பெயர் எடுப்பதுதான் தந்தைக்குப் பெருமை; உலகத்துக்கும் நன்மை.

பெற்றவள் கற்ற தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் பாராட்டினால் அதனைக் கேட்டு ஈன்ற ஞான்றினும் பேரு வகை கொள்கிறாள். அதே போலத் தந்தை அவன் வளர்ச்சி கண்டு மனக்கிளர்ச்சி பெறுகிறார். “இவனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ?” என்று உலகம் பாராட்டினால் அது போதும்; நற்புகழ் எய்தி நானிலம் மதிக்க மகன் வாழ்ந்தால் அதுவே அவன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு ஆகும். காசு பணத்துக்காக அந்தத் தந்தை தம் மகனிடம் கையேந்தி நிற்கமாட்டார்; மாசில் புகழ் வந்து அடையத் தம் மகன் திகழ்கிறான் என்றால் அவர் அக மகிழ்வு பெறுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/7&oldid=1106240" இலிருந்து மீள்விக்கப்பட்டது