திருக்குறள் செய்திகள்/8

விக்கிமூலம் இலிருந்து

8. அன்புடைமை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பு உடையது; பயன்மிக்கது என்பர். இல்வாழ்க்கையில் அன்பு வளர்கிறது; அன்புடைமையே எல்லா உயிர்வாழ்க்கையின் இயக்கமும் ஆகும்.

அன்பை யாரும் பூட்டி வைக்க முடியாது; தாம் நேசிப்பவர்கள் படும் துயரம் கண்டு விடும் கண்ணிர் அவர்தம் உண்மையான அன்பைப் புலப்படுத்திவிடுகிறது.

கண்ணிருக்கும் அன்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கண்ணிர் சோககீதம் பாடும்.

அன்புடையர் வஞ்சகமும் கஞ்சத்தனமும் இல்லாதவராக இருப்பர். கேட்டு இல்லை என்று சொல்லி அவர்கள் நா அடக்கம் பெறாது. அன்பில்லாதவர் வன்புடைய நெஞ்சம் உடையவர். பிறருககு ஈவது என்பது அவர்களுக்கு ஒத்து வாராது; இறுகப் பிடித்து மனத்தை இரும்பாக்கிக் கொள்வர். அன்புடையவர் தம் சதையையும் அறுத்துக் கொடுத்து மற்றவர்க்கு வரும் துன்பத்தைப் போக்குவர்.

எலும்பைப் படைத்தவன் அதில் உயிரையும் இணைத்தான்; அவன் மானிடன் என்று கூறப்படுகிறான்; உயிர் உள்ளவன் என்பதை எடுத்துக் காட்டுவது அன்புதான்; அன்பு உயிரின் இயல்பு.

அன்பு ஒரு காந்த சக்தி; அஃது ஆர்வத்தைத் தூண்டும்; நேயத்தை வளர்க்கும்; நட்பை உண்டாக்கும். நட்புக்கே அடிப்படை அன்பைப் புலப்படுத்துதல் எனக் கூறலாம்.

அன்புற்றார் எய்தும் சிறப்பு யாது? அவர்கள் எதனைச் சாதிக்கிறார்கள்? ஏன் அன்பு காட்ட வேண்டும்? இன்பத்துக்கு அடிகோலுவதே அன்புதான். அன்புடையவரே இன்பமாக வாழ்க்கை நடத்த முடியும்.

அறத்திற்குத் துணையாக இருப்பது அன்பு என்று கூறுவர். அவர்களை முற்றும் அறிந்தவர் என்று கூற முடியாது. வீரத்துக்கும் அன்பே துணை செய்கிறது. தாம் நேசிக்கும் நாட்டு மக்களையும், மக்கள் தலைவனையும் காப்பாற்றுவதற்கே வீரன் ஒருவன் போர்மேற் செல்கிறான். இதற்கு அடிப்படை யாது? நாட்டின்மீது உள்ள அன்பு: மக்கள்மீது காட்டும் நேயம். எனவே உலகத்து நன்மைகளுக்கு எல்லாம் தூண்டுகோலாக உள்ளது அன்புதான்; அதனால்தான் அன்பே கடவுள் என்றும் அறிவிப்பர்.

அறம் உயிர்களை வாழ வைக்கும்; அன்பு உடையவர்களுக்கு அஃது ஆற்றலைத் தரும்; உயர்ந்த செயல்களைச் செய்யத் தூண்டும். அன்பு அற்றவரை அறக்கடவுள் காயும்; அவர்களை அழிக்கும்; அவர்களைத் தழைக்கவிடாது. புழுவுக்கு எலும்பு இல்லை; வெய்யில் அதனைச் சுட்டுப் பொசுக்கிவிடுகிறது. அதுபோலத்தான் அன்பு அற்ற மானிடச் சடங்களை அறம் காயும்; அவர்கள் வாழ்வு சாயும்.

உள்ளத்தில் அன்பு இல்லை என்றால் அவர்கள் பள்ளத்தில் விழ வேண்டியதுதான். அன்பு அகத்து இல்லாத உயிர்வாழ்க்கை தளிர்க்கவே தளிர்க்காது; கொடிய பாலை நிலம் அங்கே மழையைக் காணாமையால் மரம் வற்றி விடும்; பட்டுப் போன அந்த மரம் மறுபடியும் துளிர்விடும் என்று கூறவே முடியாது. நீர் இல்லாத மரம் தளிர்க்காது; அன்பு உள்ளத்தில் இல்லை என்றால் அந்த வாழ்க்கை தலை எடுக்காது. அவனை உயிருள்ள மனிதன் என்றே கூறமுடியாது.

அவனாயினும் சரி, அவளாயினும் சரி, தோற்றம் அழகு உடையது; என்றாலும் அன்பு உள்ளத்தில் இல்லை என்றால் அவர்களுக்கு ஏற்றம் இல்லை; புறத்துறுப்பு வடிவு தரும்; அகத்துறுப்பே இயக்கம் தரும். பொம்மை அழகாகத்தான் இருக்கிறது என்றாலும் அதனை உயிர் உள்ள மனிதன் என்று கூறார்; அதனை அவன் என்றோ, அவள் என்றோ கூற முடியாது. “ஆள் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறான்; ஆனால் அவன் யாருக்கும் உதவமாட்டான். அவனால் எந்தப் பயனும் இல்லை” என்றுதான் உலகம் பேசும்; அவனை ஏசும்.

அன்பின் வழியேதான் உயிர் நிலைத்து இருக்கிறது. அன்பு இல்லை என்றால் அவன் வெறும் சடப்பொருள் தான். எலும்பைத் தோல் போர்த்திக்கொண்டு இருக்கிறது என்றுதான் அத்தகையவனைப் பற்றிக் கூற முடியும்; இரத்தம் சதை உடையவர் என்றுகூட அவனைப்பற்றிக் கூற முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/8&oldid=1106243" இலிருந்து மீள்விக்கப்பட்டது