உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் செய்திகள்/9

விக்கிமூலம் இலிருந்து

9. விருந்தோம்பல்

வீடு என்ற ஒன்றும், அதற்கு ஒரு முகவரி என்றும் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துவது எல்லாம் விருந்தினரை உபசரித்து, அவர்களை உணவு அருந்தவைத்து அன்பு காட்டுவதற்கே; திண்ணைக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு வெண்ணெய் கலந்த வெண்சோறு ஆயினும் தின்று சுவை கண்டால் பன்றிக்கும் அவனுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? அமுதமேயாயினும் விருந்தினரை வெளியே இருக்கச் சொல்லிவிட்டுத் தனியே உண்ண நினைப்பது அநாகரிகம்; அற்பத்தனமும் ஆகும.

நம்பினார் கெடுவதில்லை; இது மறைகளின் தீர்ப்பு: விருந்தினரை ஒம்பியவரும் கெடுவது என்றுமே இல்லை; அவன் செல்வம் வற்றாத ஊற்றாகப் பெருகக்கொண்டே இருக்கும்; விருந்தினர் வருவதும் போவதுமாக இருக்க “இங்கு என்ன சிறப்பு?” என்று அதனைக் காண வெளியே செல்வமகளாகிய திருமகள் காத்துக் கிடப்பாள்; அவள் அழைப்பு இன்றியே உறவுகொண்டு அங்கேயே தங்கி விடுவாள்; அவள் களிநடம் புரிந்து அந்த வீட்டைப் பொலிவு பெறச் செய்வாள்.

பூமகள் புகுந்துவிட்ட வீட்டில் அவ் வீட்டுக்கு உரியவனுக்கு என்ன குறை? அவன் செல்வம் கொழிக்க வீட்டில் அவன் பிழைக்க வழிதேட வேண்டியது இல்லை; உழைக்க அவன் நிலம் தேடிச் செல்ல வேண்டியது இல்லை; வந்தவருக்கு உண்ணத் தந்துவிட்டு மிச்சத்தை மிசைவான். அவன் நிலபுலத்தை அவனே சென்று கவனிக்க வேண்டும் என்பது இல்லை; தொட்ட இடம் எல்லாம் பொன் துலங்கும்; மற்றவர்கள் அவனுக்காக உழைக்க முன் வருவார்கள்.

அந்திக் காலத்தில் அவனைச் சந்திக்க வானவரும் வருவர்; அருவிருந்தாக வரவேற்றுச் சிறப்புச் செய்வர்; அவன் வாழ்க்கை வடுவந்து பாழ்படுவது இல்லை.

வருகின்ற விருந்தினரை மிக்க வகையில் உபசரிக்க வேண்டும் என்பதைவிடத் தக்க வகையில் கவனிக்க வேண்டும். தேவை அறிந்து அவர்களுக்கு உணவும் உறையுளும் தந்து களைப்பைப் போக்கி மனம் மகிழ வைக்க வேண்டும். நீ எவ்வளவு செய்கிறாய் என்பதைவிட யாருக்குச் செய்கிறாய் என்பது அடிப்படை தகுதி அறிந்து உபசரித்தால் மிகுதியான நன்மைகள் வரும்.

விருந்து அவர்களுக்கு இட்டு அருந்துக; அது தனி இன்பம்; அந்த வாய்ப்பு அனைவர்க்கும் வாய்க்கும் என்று கூற இயலாது. இல்வாழ்க்கை நடத்தும் நல்வாழ்க்கை உடையவனால் அஃது இயலும்; இந்த இணையற்ற வாய்ப்பும், அதனால் அமையும் உயர்வும் அடைய முடியாதவரே வாழ்க்கையைவிட்டு ஓடுவர்; விரக்திகொண்டு விடுதலை பெற நாடுவர்; இல்வாழ்வில் இந்த நல்வாய்ப்பு இருக்கிறது என்பதனை அறிய முடியாதவரே காவி உடை ஏந்திக் கமண்டலத்தைக் கைபிடிப்பர்.

விருந்தினரை ஒம்புவது ஏழைகளால் இயலாது; வறியவருக்கு முடியாது; செல்வர்களே செய்ய முடியும். செல்வத்தின் பயன் இதுதான். பணம் படைத்தும் விருந்தினரைப் போற்றும் குணம் படைக்காவிட்டால் அவர்கள் வாழ்க்கை மணக்காது. செல்வர்கள்தாம்; ஆனால் விருந்தினரை ஓம்ப மனம் இல்லாததால் அவர்கள் ஏழைகளே; மடமை மிக்கவர்கள் என்றுதான் கூற முடியும்.

விருந்தினரை உபசரிப்பது நுட்பமான கலை. அதன் விலை இன்முகம். தூரத்தில் இருந்தே நம் அன்பின் ஈரத்தை அவர்களால் உணர முடியும். அனிச்சப்பூ முகர்ந்தால் தான் குழையும்; விருந்தினர் முகம் திரிந்து நோக்கினாலேயே மனம் மாறுபடுவர். நீ எவ்வளவு செய்தாய் என்று பேசமாட்டார்கள்; நீ எப்படி நடந்துகொண்டாய் என்பதைப் பற்றித்தான் கூறி ஏசுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/9&oldid=1106245" இலிருந்து மீள்விக்கப்பட்டது