புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்/புதுமைப்பித்தன் வாழ்க்கைக் குறிப்பு
தென்னாற்காடு மாவட்டத்தில் நிலப்பதிவு தாசில்தாராக இருந்த திரு. சொக்கலிங்கம் பிள்ளைக்கு, 1906-ம் வருஷம் ஏப்ரல் மாதம் திருமகனாக புதுமைப்பித்தன் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார்.
புதுமைப்பித்தனின் பூர்வீகம் திருநெல்வேலி ஜில்லா.
புதுமைப் பித்தனுக்கு பெற்றோர் இட்ட பெயர் விருத்தாசலம்.
புதுமைப்பித்தன் கல்லூரியில் படித்து பி. ஏ. பட்டம் பெற்றவர்.
தன் தகப்பனாரைப்போல் அரசாங்க உத்தியோகத்தில் ஈடுபட ஆசைகொள்ளாமல் எழுத்தாளராகிவிட்டார்.
1931-ம் வருஷம் திருவனந்தபுரம் திரு. பி.டி. சுப்பிரமணிய பிள்ளையின் குமாரத்தியைப் புதுமைப்பித்தனுக்கு மனம் செய்வித்தனர்.
புதுமைப்பித்தன் ‘மணிக்கொடி’ பத்திரிகைக்கு கதைகள் அனுப்பி, அதன் மூலம் பேராசிரியர் வ. ரா. வின் தொடர்பு கொண்டு, சென்னைக்கு வந்து மறுமலர்ச்சி எழுத்தாளர் குழுவில் ஐக்கியமானார்.
ராய. சொ. நடத்தி வந்த ‘ஊழியனி’ல் சிறிது காலம் உதவி ஆசிரியராக இருந்தார். பின்னர் ‘தினமணி’யில் உதவி ஆசிரியர்; அதன் பிறகு ‘தினசரி’யில் உதவி ஆசிரியராக இருந்து ராஜினாமாச் செய்து வெளியேறினார்.
ஒரே மகள் மட்டும் அவருக்கு உண்டு. பெயர்; ‘தினகரி.’
சொ. வி. என்ற பெயரில் அரசியல் கட்டுரைகளையும், ‘புதுமைப்பித்தன்’ என்ற பெயரில் சிறு கதைகளையும், ‘ரசமட்டம்’ என்ற பெயரில் விமரிசனக் கட்டுரைகளையும், ‘வேளூர். வே. கந்த சாமிக் கவிராயர்’ என்ற பெயரில் கவிதைகளையும் எழுதி வந்தார்.
காமவல்லி, ராஜமுக்தி, அவ்வை ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார்.
1948-ம் வருடம் ஜூன் மாதம் 30-ம் தேதி புதுமைப்பித்தன் தமிழையும்-தமிழ் நாட்டையும் விட்டுப் பிரிந்தார்.