உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்/வேடிக்கை மனிதர்

விக்கிமூலம் இலிருந்து

வேடிக்கை மனிதர்

‘கலைமகள்’ அதிபர் திரு. நாராயணசாமி ஐயர் அவர்கள் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கு அடுத்தபடியாக புதுமைப்பித்தனை மதித்தார்! அலுவலகத்தில் புதுமைப்பித்தனிடம் சிலருக்கு வெறுப்பு இருந்தபோதிலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை.

புதுமைப்பித்தன் எழுதிய “கடவுளும் கந்தசாமி பிள்ளையும் என்ற கதை ‘கலைமகளில்’ வெளிவந்த சமயம் தி. ஜ. ர அவர்கள் படித்து ரசித்துவிட்டு, அடுத்த பகுதி எப்போது வரும்” என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தி. ஜ. ர. ‘சக்தி’ ஆசிரியராக இருந்தார். என்னை வழியில் பார்த்து அடுத்த பகுதி வருவதற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமே என்று வருத்தப்பட்டார். அப்போதுதான் புதுமைப்பித்தனை அறிந்தேன்.

அடுத்த சில நாட்களில் புதுமைப்பித்தனே 'முல்லை' பதிப்பகத்துக்கு வந்துவிட்டார்! அவருடைய வருகையே உற்சாகமாக இருக்கும். வரும்போது சிரித்துக்கொண்டே வேலை எல்லாம் தடைப்பட்டுவிட்டதோ? என்று கூறுவார். இதுவே முதல் அறிமுகம். பிறகு அடிக்கடி சிரிப்பொலியுடன் வருவார்.

அப்போது 'வேலன், வேடன், விருத்தன் என்று என்னைக் குறிப்பிடுவோர், அதாவது பிரிண்டர், பப்ளிஷர் ஆசிரியர் என்பதை அப்படி நகைச்சுவையோடு குறிப்பிடுவார். இப்படியாக தொடர்ந்தது எங்களது தொடர்பு.

அவர், பல சமயங்களில் பணம் கேட்கும்போது தயங்காமல் கொடுத்து இருக்கிறேன். அதற்கு அவராகவே சில கதைகளை உரிமை எழுதி நீங்கள் அச்சிட்டு வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

மேற்படி கதைகளை ‘விபரீத ஆசை’ என்ற பெயரில் வெளியிட்டேன்.

வேடிக்கை மனிதர் புதுமைப்பித்தனோடு உரையாடும் போது கூறிய சுவையான முத்துக்களை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளேன்.

323/10, கதிரவன் காலனி
அண்ணா நகர், மேற்கு
சென்னை- 600 040

முல்லை பிஎல் முத்தையா