உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்/‘அழகின் சிரிப்பு’ நூலுக்கு

விக்கிமூலம் இலிருந்து

‘அழகின் சிரிப்பு’ நூலுக்கு புதுமைப்பித்தன் எழுதிய மதிப்புரை

‘ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில் அந்நியர் வந்துபுகல் என்ன நீதி’ என்று அதட்டிக் கேட்ட குரல் ஒடுங்கி சுமார் இருபது வருடங்கள் கழித்த பிறகு, பாரதீய பரம்பரை ஒன்று இருப்பதாகத் தெரிவித்துக் கொள்ளப்பட்டது. பாரதீய பரம்பரை என்று காவியத்துறையில் இருப்பதை ஒப்புக் கொள்வது. அவசியமாயின், அதன் ஏகப்பிரதிநிதி பாரதிதாசனே என்பதற்கு முல்லைப் பதிப்பக வெளியீடான ‘அழகின் சிரிப்பு’ ஓர் அத்தாட்சி.

ஆற்றொழுக்குப் போன்ற நடை, சிற்றோடையின் ஆழமும், வேகமும், தெளிவும் பெற்ற கற்பனை. யாரையும் சட்டை செய்யா, எவருக்கும் பணியாத கருத்தமைதி-இவைதான் பாரதிதாசன்.

திருவிளக்கிற் சிரிக்கின்றாள்
நா ரெடுத்து
நறுமலரைத் தொடுப்பவளின்
விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்;
அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப் பையுடன்
உழவன் செல்லும்
புது நடையில் பூரிக்கின்றாள்.

என வர்ணிக்கப்படும் அழகுத் தெய்வத்தின் பாதாதி கேசம் இப்பாடல் தொகுதி என்று சொன்னால் முழுதும் பொருந்தும்...

இந்தத் தொகுதியில் ‘தாசன்’ ஒரு புதிய சம்பிரதாயத்தைப் புகுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இதுவரை பாடல்களில், பெண்கள் அல்லது அரசர்கள் ஆகியோருக்கே உலகின் அழகுச் சுமைகளையெல்லாம் காணிக்கையாக வைத்து வழுத்துவது மரபு. இங்கு இவர் தம் கற்றுச் சொல்லியிடம் உலகின் அழகுகளை எடுத்துக்காட்டி வருவது போலவே பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத புது சம்பிரதாயம் இது.

‘தினசரி’ இதழ்