இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/2

விக்கிமூலம் இலிருந்து

அவரவர் தாய் மொழியில் இறைவேதம்

உலகெங்கும் உள்ள ஒவ்வொரு இனத்துக்கும் வகுப்புக்கும் எனத் தோன்றிய இறை தூதர்கட்கு இறை வழிகாட்ட மறைமொழி வழங்கிய இறைவன், அவற்றை அவரவர் தாய்மொழியிலேயே வழங்கினான் என்பதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்தியம்புகிறது.

“(நபியே!) ஒவ்வொரு தூதரும் (தம் மக்களுக்கு) தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம்.” (திருக்குர்ஆன்:14-4)

என இறைவன் தன் திருமறையில் தெளிவாகக் கூறியிருப்பதிலிருந்து மண்ணுலக மக்களுக்கு இறைநெறி உணர்த்தி நேர்வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளுக்கு அவரவர் தாய்மொழியிலேயே இறை வேதங்கள் அருளப்பட்டன என்பது உறுதிப்படுகிறது. இவ் வகையில் பலப்பல இறை தூதர்கள் - தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கலாம். அவர்கட்கு இறை வேதங்களும் அவரவர் மொழியில் அருளப்பட்டிருக்க முடியும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில் பழம்பெரும் மொழியான தமிழிலும் இறை வேதங்கள் வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்டிருக்கலாம் என எண்ணுவதில் தவறிருக்க முடியாதல்லவா?

மனிதர்களிலிருந்தே இறைதூதர்கள்

இறைவனால் மக்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் பற்றி ஹிந்து சமயம் கூறுவது என்ன?

‘இறைவன் தன் தீர்க்கதரிசிகளை மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்துள்ளான். ஏனெனில் இறைவனது சிறப்பையும் அவன் வேதத்தையும் இறைவனின் அருட்கொடையாக நமக்குப் போதிக்க வந்தவர்களாதலால் நம்மைப் போன்றே அவர்களும் மனிதர்களாக இருக்க வேண்டுவது அவசியமாகும். அப்போதுதான் அவர்கள் மனிதப் பண்பையும் மனப் போக்கையும் உணர்ந்து, மனிதர்களோடு பழகி, இறைச் செய்தியைப் போதிக்க முடியும். இவ்வாறு இறைச் செய்தியை மக்களுக்கு உணர்த்தி அவர்களை இறை வழியில் செலுத்த மனு (ஆதாம்) முதல் அனுப்பப்பட்ட இறை தூதர்கள்-தீர்க்கதரிசிகளின் மொத்த எண்ணிக்கை 313 என ஹிந்து சமயக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இஸ்லாம் மார்க்கம் முதல் நபி ஆதாம் (அலை) தொடங்கி இறுதி நபி (சல்) அவர்கள் வரை ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் இறை தூதர்கள் மனித குலத்துக்கு வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்லாமியக் கோட்பாடு கூறுகிறது.

‘ஹிந்து சமய மரபுப்படி இறைவனால் அனுப்பப்பட்ட 313 இறை தூதர்களில் 20வது தீர்க்கதரிசி ‘பிரஹ்மா’ ஆவார். இவரே ‘ஆப்ரஹாம்’ என கிருஸ்தவ பைபிள் கூறுகிறது. ‘இப்றாஹீம் நபி’ எனத் திருக்குர் ஆன் குறிப்பிடுகிறது. இவரே இறைவனின் தீர்க்கதரிசி ‘பிரஹ்மா’ என ‘இந்தியா பிரிக்கப்பட்டால்’ என்ற நூலில் (பக். 36) பாபு ராஜேந்திரப் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து ஹிந்து சமயம் உட்பட அனைத்துச் சமய தீர்க்கதரிசிகளும் ஒரே மூலக் கொள்கையைப் பரப்ப வந்தவர்களே என்பது தெளிவு.

முதல் நபிக்குக் கூறியதே இறுதி நபிக்கும்

இதில் நாம் கவனிக்கத்தக்க சிறப்பம்சம் ஆதி மனிதரும் ஆதி நபியுமாகிய ஆதாம் (அலை) அவர்கட்கு எந்தச் செய்தியை இறைவன் வேத மொழியாக வழங்கினானோ அதே இறைச் செய்தியைத்தான் இறுதி நபியாகிய பெருமானார் (சல்) அவர்கட்கும் வழங்கியதாக இறைவன் தன் திருமறையாம் திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறுகிறான்.

“(நபியே) உமக்கு முன்வந்த இறை தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ அதனையேயன்றி (வேறொன்றும் உமக்குக் கூறப்படவில்லை.” (திருக்குர்ஆன் 41-43)

மேற்கூறிய இறைச் செய்தியிலிருந்து ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதுதான் இறை தூதர்கள் பல நூறாயிரம் பேர்களாக இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த கால கட்டங்கள் வெவ்வேறாக இருந்தாலும், நாடுகள், பேசிய மொழிகள் பலவாக இருந்தாலும் சமுதாயச் சூழலுக்கும் பெருகி வந்த மக்களின் மன வளர்ச்சிக்குமேற்ப அவர்கள் இறை தூதர்கள் மூலம் பெற்றுவந்த இறைச் செய்திகள்-வேத நெறிகளின் அடிப்படை போதனைகளின் சாரம் ஒன்றாகவே இருந்தன என்பது தெளிவு.

மறை கூறும் இறை தூதர்கள்

மனித குலத்துக்கு இறை நெறி புகட்டி வழிகாட்ட வந்த இறை தூதர்கள் ஒரு இலட்சத்து இருபத்தினான்காயிரம் எனக் கூறப்படினும் இருபத்தைந்து பேர்களின் பெயர்கள், வரலாறுகள் மட்டுமே திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றவர்கள் பெயர்கள் இடம் பெறாவிட்டாலும் அவர்களைப் பற்றியும் ஒட்டு மொத்தமாகத் திருக்குர்ஆன் குறிப்பிடத் தவறவில்லை.

“நபியே! நிச்சயமாக உமக்கு முன்னர் தூதுவர்கள் பலரை அனுப்பியிருக்கிறோம். அவர்களில் சிலருடைய சரித்திரத் தைத்தான் நாம் உமக்குக் கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை.” (திருக்குர்ஆன் 40:78) என்பது திருமறை தரும் இறைவாக்காகும்.

ஏன் இத்தனை நபிமார்?
இத்தனை வேதங்கள்?

மனித குலத்துக்கு வழிகாட்ட ஆதாம் (அலை) தொடங்கி நபிகள் நாயகம் (சல்) அவர்கள் வரை இறை தூதர்களாக வந்த ஒரு இலட்சத்து இருபத்திநான்காயிரம் நபிமார்களுக்கு முப்பத்தியாறு வேதங்களை வழங்கியதாக இஸ்லாமிய மரபு வழிச் செய்தி கூறினும், ஒரே விதமான அடித்தளத்தைக் கொண்ட வேதச் செய்தியை ஏன் இறைவன் மீண்டும் மீண்டும் வழங்க வேண்டும்? இவற்றை மக்களிடையே பிச்சாரம் செய்து பரப்பி நிலை நிறுத்த இத்தனை தீர்க்கதரிசிகளை ஏன் மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஆதாம் (அலை) முதல் அண்ணலார் (சல்) அவர்கள் ஈராக வந்த நபிமார்கள் அனைவரும் ஏக இறைவனாகிய ஒரே இறைவனையே வணங்கப் பணித்தனர் என்பதை நபிமார்கள் வரலாறுகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. அவர்கள் வாயிலாக இறைவனால் மக்களுக்கு அருளப்பட்ட இறை வேதங்களும் ஏக இறைவனையே வணங்கப் பணித்தன. இவ்விறை நெறிக்குப் புறம்பாக எந்த ஒரு தீர்க்கதரிசியும் தங்கட்கு இறைத் தன்மையும் அதீத சக்தியும் இருப்பதாகவோ, தங்களையே இறைவனாக மக்கள் வணங்க வேண்டுமென்றோ கூறியதாக எந்தக் குறிப்பும் இல்லை. ஒவ்வொரு இறை தூதரும் பரம் பொருளாகிய ஏக இறைவனையே வணங்கப் பணித்தார்கள்.

ஆனால், இவ்வாறு சரியான நேர்வழியில் இறைநெறி புகட்டி வழிகாட்டிய இறைதூதர்-தீர்க்கதரிசி மறைந்த பின்னர், அவரைப் பின்பற்றி வந்தவர்கள், அவர்மீது கொண்ட அன்பு, பாசம், மரியாதை ஆகியவைகளின் காரணமாக, அவர்மீது கொஞ்சங் கொஞ்சமாக இறைத்தன்மையை ஏற்றுவர். காலப்போக்கில் இறைதூதரான அவர் இறைச் சக்தியின் வடிவமாகவே வாழ்ந்து மறைந்தவர் எனப் புகழாரம் சூட்டி, அவர்மீது இறைத்தன்மையை முற்றாக ஏற்றிப் புகழ்வர். நாளடைவில் அவர் இறைவனாகவே வாழ்ந்து மறைந்தவர் எனத் தம் விருப்பம் போல் இறை தூதரை இறைவனாகவே ஆக்கிவிடுவர். அதற்கேற்ப தம் விருப்பப்படி கற்பனையாகப் பல இறைத் தன்மை கொண்ட சம்பவங்களை உருவாக்கி, இவ்விறை தூதரின் வாழ்க்கை வரலாற்றோடு இணைத்தும் விடுவர். இவ்வாறு செய்வதன் மூலம் அத்தீர்க்கதரிசியை மக்களின் உணர்வில் அழுத்தமாக நிலை நிறுத்த முடியும் என்ற நோக்கில் செயல்பட அவ்விறை தூதர் நாளடைவில் மக்களால் மக்கள் முன் இறைவனாக ஆக்கப்பட, அடுத்தடுத்து வரும் மக்களும் அவரை இறைவனாகவே எண்ணி வழிபடுவர். இவ்வாறு ஏக இறைவனை வணங்கப் பணித்த இறைதூதர்களே இறைவனாக்கப்பட்டனர்,

இந்நிலைமை இறுதித் தூதராகிய தனக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற உணர்வில் பல எச்சரிக்கைகளை மக்களுக்கு விடுத்துச் சென்றுள்ளார் பெருமானார் (சல்) அவர்கள்,

“கிருஸ்தவர்கள் மர்யமின் மகனை (இயேசுவை) அளவு கடந்து உயர்த்தியதைப் போல், என்னை நீங்கள் உயர்த்தாதீர்கள். நானும் அல்லாஹ்வின் அடிமைதான். எனவே, என்னை அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்று மட்டும் அழையுங்கள்”, எனக் கூறியுள்ளது இங்குக் கவனித்தற்குரியதாகும்.

அதே போன்று, அவ்விறை தூதர்கள் மூலம் இறைவனால் அருளப்பட்ட இறை வேதங்களிலும் மாற்ற திருத்தங்கள் செய்யப்பட்டன. வேத மொழிகளுக்கு விளக்கம் செய்ய முற்பட்ட சமய அன்பர்கள் தங்கள் வெறுப்பு, விருப்புகளை வேத வசனங்களில் சேர்க்கவும் நீக்கவும் செய்தனர். இறை தூதருக்குப் பின்னர், அவரது இறைநெறியை, வேத வழியில் பரப்புவதாகக் கூறிக் கொண்டே. வேத வசனங்களை மாற்றியும் திருத்தியும் தீர்க்கதரிசியின் வாழ்வைத் தம் போக்கில் அமைத்து மக்களிடையே பரப்புவர். இத்தகைய போக்கால் இறைதூதர்களின் வாழ்வும் வாக்கும் இறை வேதங்களின் உட்கிடக்கையும் தடம் புரண்ட நிலையில், மாறுபட்ட போக்கில் அமைவது தவிர்க்க முடியாததாகியது. இவ்வாறு வழி மாற்றப்பட்ட தீர்க்கதரிசியின் மாறுபட்ட, அவரால் உணர்த்தப்பட்ட வேதத்தின் மாசுபட்ட போக்கை மாற்றி, மீண்டும் மக்களை நேர் வழிக்குக் கொண்டுவந்து. சரியான தடத்தில் வழி நடத்த மீண்டும் ஒரு இறை தூதர் இறைவனால் அனுப்பப்படுவர். மக்களுக்கு இறைநெறி புகட்ட மீண்டும் அவருக்கு மூலவடிவில் முந்தைய அடித் தளத்திலேயே திரும்பவும் வேதம் அளிக்கப்படும். இதுவே இறை தூதர்களின் வரலாறாகவும் இறை வேதங்களின் போக்காகவும் அண்ணலார் காலம் வரை அமைந்திருந்தது.

இறை தூதர்-இறைவேதங்களில்
வேற்றுமை இல்லை

மனிதர்களில் மட்டுமல்ல அவர்களை இவ்வுலகில் இறை நெறியில் வழி நடத்த வந்த இறை தூதர்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடில்லை. அவர்கட்கு இறைவனால் வழங்கப்பட்ட வேதங்களிலும் சிறந்தது, சிறப்புக் குறைந்தது என்ற தாரதம்மியம் கடுகளவும் இல்லை. அனைத்து இறை தூதர்களும் அவர்கள் பெற்ற அனைத்து இறை வேத வாக்குகளும் ஒரே நிலைப் பாட்டையுடையனவேயாகும்.

நபிமார்களிடையே பேதம் கற்பிப்பதை இஸ்லாம் அறவே தடை செய்கிறது. தீர்க்கதரிசிகளிடையே வேறுபாடு காட்டுபவன் ‘காபிர்’ ஆவான் என இஸ்லாம் கருதுவதாக மார்க்க ஞானிகள் கூறியுள்ளனர்.

உலக மக்களுக்காக முப்பத்தியாறு முறை வேதம் வெளிப்பட்டிருப்பினும் அவற்றுள் வேறுபாடு இருப்பது போல் தோன்றினும் அவற்றுள் முரண்பாட்டைக் காணவே முடியாது

ஆதாம் முதல் அண்ணலார் வரை இஸ்லாம்

வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்ட இறைநெறியாகிய இஸ்லாம் மார்க்கம் அண்ணல் நபி (சல்) அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது அல்ல. முதல் மனிதர் ஆதாம் (அலை) அவர்களால் இறைக் கட்டளைப்படி முதல் நபி என்ற முறையில் உலகுக்கு முன்மொழியப்பட்ட இறை நெறியாகும். ஆதாம் (அலை) தொடங்கிய அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்வரை இறைவனால் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட ஒரு இலட்சத்து இருபத்திநான்காயிரம் நபிமார்கட்கும் அந்நெறியே இறைவனால் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்டது. இவ்விறை தூதர்கள் உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் எல்லா இனங்களிலும் எல்லா மொழிகளிலும் தோன்றியிருக்கிறார்கள் என்பதை முன்பே பார்த்தோம். இதையே திருமறையாம் திருக்குர்ஆன்,

“அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை” (திருக்குர்ஆன் 35:24) மேலும்,

“ஒவ்வொரு வகுப்பினருக்கும் (நம்மால்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் உண்டு” (10:47)

மேற்கண்ட இரு இறைவசனங்களிலிருந்து உலகிலுள்ள மனித இனங்கள் அனைத்திலும் இறை நெறிபுகட்டி மக்களை நல்வழிப்படுத்தும் இறைதூதர்கள், தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கிறார்கள் என்ற பேருண்மை இனிது புலப்படுகிறது. இவர்கள் வாயிலாக அவ்வக் காலப் போக்குக்கும் சூழலுக்கும் மக்களின் அறிவாற்றலுக்கும் புரிந்துணர்வுக்கும் ஏற்ற வகையில் இறை தூதர்களும் இறை வாக்குக்கு விளக்கம் தந்து போதித்திருக்கிறார்கள் என்பதை திருக்குர்ஆன் திருமறையும் பெருமானார் (சல்) அவர்களின் பேருரையும் தெளிவுபடுத்துகின்றன.

வளர்ச்சிக்கேற்ப வழிகாட்டு நெறி

பெருமானாருக்கு முன்னதாக இறைவன் அனுப்பிய இறை தூதர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு மட்டும் என அமைந்தார்கள். அவர்கட்கு இறைவன் அளித்த செய்திகள் அப்பகுதியின் சூழலுக்கும், அப்பகுதி மக்களின் தன்மைக்குமேற்ப அமைந்து அவர்களை வழிநடத்தின. அப்பகுதி மக்களின் தாய்மொழியில் அமைந்த அவ்விறைச் செய்தியும் ஒரு குறிப்பிட்ட கால வரைக்குட்பட்ட அளவிலேயே அமைந்தன

காலத்தின் போக்குக்கும் சூழலுக்கும் தேவைக்கு மேற்ப புதிய இறைச் செய்தியோடு முந்தைய நபியைவிடத் திறம்பட்டவராக மற்றொரு நபி அப்பகுதி மக்களிடையே தோற்றம் வழங்குவார். இதுவே நபிமார் தோற்றம் பெற்ற வரலாறு.

சொன்னதோடு வாழ்ந்து காட்டியவர்

அண்ணலாருக்கும் முன்னதாக, உலக மக்களுக்கு வழிகாட்ட வந்த இறை தூதர்கள் எல்லோருமே சொல்லளவில் இறைநெறியைப் போதிப்பவர்களாகவே இருந்தனர். ஆன்மீக வழியில் உள்ளத்தை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் அவர்கள் தங்கள் சொல்லாற்றலைப் பயன்படுத்தினார்கள். அவர்களின் ஆற்றல்மிகு சொற்பொழிவுகள் மக்களைச் சிந்திக்கத் தூண்டின. ஆயினும், அவ்விறைத் தூதர்கள் தாங்கள் போதித்தவாறே வாழ்ந்து காட்டும் தகைமையைக் கொண்டிருக்கவில்லை.

காரணம், அத் தீர்க்கதரிசிகள் வாழ்க்கையின் அனைத்து வகைகளிலும் முறைகளிலும் வாழும் வாய்ப்பைப் பெற்றவர்கள் அல்லர். ஓரிரு வகையான வாழ்க்கை முறைகளைப் பெற்றவர்களாகவே வாழ்ந்தவர்களாவர். சான்றாக, ஏப்ரஹாம் என அழைக்கப்படும் இபுறாஹீம் (அலை) அவர்கள் அரசு நடத்தியவராகவோ போர்ப்படைத் தளபதியாகவோ வாழ்ந்தவர் அல்லர். அதே போன்று இயேசுநாதர் என்று அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் குடும்பத் தலைவராகவோ ஆட்சியாளராகவோ வாழும் வாய்ப்புப் பெற்றவரல்லர். எனவே, அவர்கள் ஆன்மீக வாழ்வின் அடிப்படையிலான வாழ்க்கை நெறி முறைகளை போதித்தவர்களாக விளங்கினர்.

ஆனால், இறுதித் தூதரான முஹம்மது நபி (சல்) அவர்கள் வெறும் போதனாசிரியராக மட்டுமல்லாது மனித வாழ்வின் அழகிய முன்மாதிரியாகவும் வாழ்ந்துகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டவராவார். மனித வாழ்க்கையில் எத்தனை படித்தரங்கள் உண்டோ அத்தனையிலும் வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதராவார். அவ்வப்போது இறைவனால் அருளப் பெற்ற இறைச் செய்தியை மக்களுக்குத் தெளிவாக விளக்கிக் கூறியதோடு அமையாது அப்போதனைக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் அண்ணலார். அதனாலேயே இறைவன் தன் திருமறையில் பெருமானாரை  ‘ஓர் அழகிய முன்மாதிரி’யாக மனித குலத்துக்கு வழிகாட்ட அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளான்.

“உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரில் அழகான முன் மாதிரி அமைந்திருக்கிறது” (33:21)

என்பது மறைதரும் இறைமொழியாகும்.

பெருமானார் இஸ்லாமிய மார்க்கம் பற்றி எடுத்துக் கூறி விளக்கிய செய்திகளும் அவற்றை செயல் முறையில் உணர்த்தும் வகையில் பெருமானார் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறி முறைகளும் கொண்ட தொகுப்பாக ‘ஹதீஸ்’கள் திரு மறைக்கு அடுத்த நிலையில் மார்க்க விளக்க நூலாக விளங்கி வருகின்றன.

இறவா மறைமொழி!

ஆதாம் (அலை) முதல் அண்ணலார் (சல்) ஈராக வந்த இறைதூதர்கட்கு தவ்ராத், இன்ஜீல், புர்க்கான் உட்பட சுமார் முப்பத்தியாறு வேதங்கள் இறை தூதர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய மரபுச் செய்தி கூறுகிறது. இவற்றில் சில திருமறையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுள் பல வேதங்களும் அவற்றிற்குரிய வேத மொழிகளும் மறைந்து விட்டன. சில மொழிகள் வேதங்களை மட்டும் சுமந்து கொண்டுள்ளனவே தவிற, மக்களின் வாழ்விலிருந்து ஒதுங்கி வழக்கொழிந்து போய்விட்டன. இன்னும் சில மொழிகள் வேத மொழிகள் என்ற பெருமையை மட்டும் உடையனவாக இயங்கா மொழிகளாகிவிட்டன. ஆனால், இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் திருமறை வந்த மொழியாகிய அரபி மொழி ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகியும் கூட, இன்னும் ஆற்றல் மிக்க மொழியாக மக்களிடையே விளங்கி வருகிறது. உயிர்ப்புத்தன்மை மிக்க உலகச் செம்மொழிகளில் (Classical Languages) ஒன்றாகத் திகழ்கிறது. அரபு நாடுகளின் ஆட்சி மொழியாகவும் கல்வி நிலையங்களில் பயிற்சி மொழியாகவும் கோடிக்கணக்கான மக்களின் பேச்சு வழக்கு மொழியாகவும் திகழ்ந்து வருகிறது. மறை மொழி என்ற நிலையில் அரபி மொழி அறிந்த மக்கள் உலகெங்கும் நூறு கோடிக்கு மேல் பரவியுள்ளனர். உலகில் அரபி மொழிக்குக் கிடைத் துள்ள இப்பெருமைமிகு சிறப்பு வேறு எந்தவொரு மொழிக்கும் வாய்க்கவில்லை என்றே கூறலாம்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டங்களில் இறைத்தூதர் மூலம் இறைவன் அளித்த வேதங்களில் பல மறைந்து போயின என்பது வியப்புக்குரிய செய்தியன்று. அப்படியே இருப்பனவாகக் கூறப்படும் வேதங்களும்கூட முழு வடிவில் இல்லை. அரைகுறையாகக் காணப்படும் அவற்றிலும் ஏராளமான இடைச் செருகல்கள். எது இறைவாக்கு, எது இடைச் செருகல் எனக் கண்டறிய வியலாநிலையில் ஏராளமான கலப்படச் சமாச்சாரங்கள்!

போகட்டும், வரலாற்றிற்குப் பிந்திய கால கட்டங்களில் இறைத்தூதர்கள் மூலம் இறைவனால் வழங்கப்பட்ட இறைவேதங்களாவது வழங்கப்பட்ட வடிவிலேயே இருக்கின்றனவா என்றால், அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. வரலாற்றுக்குப் பிந்தி வந்த வேதங்களில் திருக்குர் ஆன் தவிர்த்து அனைத்து வேதங்களும் மாற்ற திருத்தங்கட்கு உட்பட்டனவாகவே உள்ளன. அசல் வடிவில் இல்லாத அவற்றில் வேத விற்பன்னர்கள் தங்கள் விருப்புவெறுப்புகளுக்கேற்ப மாற்ற திருத்தங்களை இவ்வேதங்களில் இடைச் செருகலாக ஏற்படுத்தத் தவறவில்லை. இதனால் இறை வாக்குகளை காலப்போக்கில் மறந்து விட்டனர் என்றே கூற வேண்டும். இதையே திருமறை,