இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

“அவர்கள் தங்கள் வேத வசனங்களைச் சரியான இடங்களிலிருந்து மாற்றுகிறார்கள்.....!” (5:13)

எனத் திருமறையாம் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறியுள்ளது.

திருத்தப்படா திருவேதம்

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு அளிக்கப் பட்ட இறைவேதம் அன்று முதல் இன்றுவரை காற்புள்ளி, அரைப்புள்ளிகூடத் திருத்தப்படாத, கடுகளவு மாற்றமும் செய்யப்படாத திருமறையாக, செம்மையான முறையில் இருந்து வருகிறது. இதற்கு மனிதக் காப்பல்ல, இறை காப்பே காரணமாகும்.

“நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே (அதன் பாதுகாவலனாகவும்) அதனை இரட்சித்துக் கொள்வோம்.” (திருக்குர்ஆன் 15:9)

எனத் திருமறையிலே இறைவன் கூறுகிறான். மாற்றம், திருத்தம், கூட்டல், குறைத்தல் ஏதுமில்லாது இவ்வுலகுள்ளளவும் இத்திருமறை இறைவனால் பாதுகாக்கப்படும் என்பதும் உறுதி.

முந்தைய வேதங்களை உண்மையாக்கும் திருக்குர்ஆன்

பெருமானார்க்கு முன்னதாக இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களைப் பற்றியும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள வேதங்களைப் பற்றியும் இஸ்லாமியத் திருமறை,

“(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாம்தான் உம்மீது அருளினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி, அவற்றைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது.” (திருக்குர்ஆன் 5:48)

எனத் தெளிவாகக் கூறுவதன் மூலம் ஆதாம் (அலை) தொடங்கி அண்ணல் நபிகள்நாதர்வரை வந்த இறைத் தூதர்களையும் அவர்கள் வாயிலாக மக்களுக்கு இறைவன் வழங்கிய வேதங்களையும் உண்மையாக்குகிறது திருக்குர் ஆன். அதுமட்டுமல்லாது உலகத்து மூல வேதங்களைப் பாதுகாத்து மக்களுக்கு இனங்காட்டும் ஒன்றாகவும் திகழ்கிறது.

திருத்தமாக முந்தைய
சமயக் கோட்பாடு

பல்வேறு உலகப் பெரும் சமயங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் திருத்தமான முறையில் திருக்குர் ஆனில் இடம் பெற்றிருப்பதை எளிதாகக் காண முடிகிறது.

இதை நபிமார்களின் வரலாற்றுப் போக்கிலேயே நன்கு உணர்ந்து தெளியலாம். மோசஸாகிய மூஸா (அலை) அவர்கள் போதித்த இறை நெறிக் கோட்பாடுகளும் வாழ்வியல் நெறிகளும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. காலம் தன் போக்கில் எத்தனையோ மாற்ற திருத்தங்களை, மேடு பள்ளங்களை சமுதாய வாழ்வில் உருவாக்கவே செய்தன. ஈஸா நபி வந்த பின்னர் முந்தைய மூஸா நபியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஈஸா நபியால் செம்மைப் படுத்தப்பட்டு, சரியான வடிவில் மக்களுக்கு வழங்கப்பட்டன. பின்னர் அது கிருஸ்தவ சமயமாகப் பிற்காலத்தில் துலக்கமடையலாயிற்று. காலப் போக்கில் மாற்ற திருத்தங்கட்கு ஆட்பட்ட நிலையில் மக்களிடையே வழங்கிய இறை நெறிக் கோட்பாடுகளும் சமய வாழ்வியல் போக்குகளும் மீண்டும் சரியான வழித்தடத்தில் மீட்டமைக்கப்பட்டன. இத்தகைய மீட்டாக்க முயற்சியில் முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்டி, இறைநெறியை நிலை நிறுத்தியதில் அழகிய முன்மாதிரியாக பெருமானார் (சல்) அவர்களும் அவர்களின் வாழ்வும் வாக்கும் இறைமறையாகிய திருக்குர்ஆனும் அடித்தளமாக அமையலாயின.

இவ்வாறு இஸ்லாம் பழங்காலம் முதலே உருவான பல்வேறு சமயங்களின் தொடர்ச்சியாகவே இன்றும் விளங்கி வருகிறது எனலாம். இத்தொடர்ச்சி முதல் மனிதர் ஆதாம் (அலை) தொடங்கி இன்றைய முஸ்லிம் வரையிலான தொடர்ச்சியாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல ஆதாம் (அலை) வாழ்ந்த காலத்தையும் இன்றைக்கு நாம் வாழும் காலத்தையும் இணைக்கும் இணைப்புப் பாலமாகவும் பெருமானார் வாழ்வும் வாக்கும் இஸ்லாமிய நெறி முறையும் அமைந்துள்ளன என்பது தெளிவு. உலகின் அனைத்துப் பகுதிகளும் மக்களினமும்கூட ஒருங்கிணைக்கப்படும் நிலை இதனால் உருவாகிறதெனலாம்.

அனைத்தும் மனிதனுக்காக
மனிதன் இறைவனுக்காக

இறைவன் மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் மண்ணிலும் விண்ணிலும் கடலாழத்திலும் படைத்தளித்துள்ளான். மறை பொருளான பலவற்றை அறிந்துணர நுண்மான் நுழைபுலத்தையும் மனிதனுக்களித்துள்ளான். பகுத்தறிவின் துணை கொண்டு ஆய்ந்து அவற்றையெல்லாம் நுகர்ந்தின்புற அவனால் இயலும். ஆனால், மனிதனை இறைவன் படைத்ததன் நோக்கம் அவன் தன்னை வணங்க என்பதே இஸ்லாமியக் கோட்பாடு

‘மண்ணையும் விண்ணையும் மனுவுக்காகப் படைத்தான்
மனுவைப் படைத்தான் தனை வணங்க’

என இறை நாட்டத்தை பீர் முஹம்மது அப்பா கூறுகிறார்.

அனைத்துச் சமய அடிப்படை
இறை வணக்கமே

உலகிலுள்ள அனைத்துச் சமயங்களும் இறை வணக்கத்தையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ளன. மனிதர்கள் உணர்வாலும் செயலாலும் தன்னைப்படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இறை வணக்கம் புரிய வற்புறுத்துகின்றன. இறை வணக்கத்தை வலியுறுத்தாத சமயம் உலகில் எதுவுமில்லை.

இறை வணக்கம், உணர்வையும்
உயிரையும் பொறுத்தது

இறை வணக்க முறைகள் பல்வேறு வகைகளில் முறைகளில் அமையலாம். இறை வணக்க முறைகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், வணங்கப்படும் சக்தி இறைவனே. இறைவணக்கம் என்பது உடலைவிட உணர்வைப் பொறுத்த விஷயமாகும். எனவே இறை வழிபாட்டில் வணக்க முறைகளைவிட வணங்கும் தன்மைக்கே முதலிடம்.

ஆறு பலவாயினும்
சங்கமிக்குமிடம் கடலே

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள், யூதர்கள், பெளத்தர்கள் சமணர்கள், ஜொராஸ்டிரர்கள் என ஒவ்வொரு சமயத்தவரும் பல்வேறு வகையான வணக்க வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி இறை வணக்கம் புரிகின்றனர். இறைவனைப் போற்றி வணங்கும் வழிபாட்டு முறைகள் வெவ்வேறாயினும் வணங்குவது இறைவனாகவே இருப்பது கவனித்தற்குரிய தாகும். இதையே அறிஞர்களும் கவிஞர்களும் ஆறுகள் பலவாயினும் அவை இறுதியில் ஒன்று சேரும் இடம் கடலாகவே அமைகிறது எனக் கூறிச் சென்றுள்ளனர், நுணுகிப் பார்த்தால் அனைத்துச் சமயங்களின் வழிபாட்டு முறைகள் அனைத்துமே இறைவணக்கத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதை அறிந்தின் புறலாம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் அனைத்துச் சமயச் சடங்குகளின் உள்ளீடான உணர்வும் கருத்தும் இறை வணக்கமாகவே இருப்பதைத் தெளிந்துணரலாம்.

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகள்
அனைத்துச் சமய அடிப்படைகளே

அண்ணலாருக்கு முன்னர் வந்த இறைதூதர்களுக்கு வழங்கப்பட்ட இறைச் செய்திகளும் பெருமானார் (சல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இறைச் செய்தியும் ஒரே மாதிரியான அடித்தளத்தைக் கொண்டவை என்பது நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு வழங்கப்பட்ட இறைச் செய்தி மூலம் எல்லா வகையிலும் உறுதிப்படுகிறது.

“(நபியே!) உமக்கு முன்வந்த தூதுவர்களுக்குக் கூறப் பட்டது எதுவோ, அதனையேயன்றி (வேறொன்றும்) உமக்குக் கூறப்படவில்லை” (திருக்குர் ஆன் 41:43)

என்பது திருமறை தரும் செய்தியாகும்.

இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள இஸ்லாத்தின் அடித்தளமான ஐம்பெரும் கடமைகளை இன்னும் நுணுக்கமாக ஆயும்போது அவ்வுண்மை தெள்ளதின் புலனாகும்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் என்னனென்ன?

1. ஈமான் எனும் இறை நம்பிக்கை

2. தொழுகை எனும் இறை வணக்கம்

3. நோன்பு எனும் விரதம்

4. ஜகாத் எனும் தான தருமங்கள்

5. ஹஜ் எனும் புனிதப் பயணம்

இந்த ஐம்பெரும் கடமைகளான கோட்பாடுகள் உலகத்துச் சமயங்கள் அனைத்தினுடைய அடித்தளமாகவும் அமைந்திருப்பதிலிருந்து, அகிலத்துச் சமயங்கள் அனைத்துமே இறைவனால் அருளப்பட்டவை. ஒரே விதமான போக்குடையவை என்பது தெளிவாகிறது. அவற்றை இனி ஆராய்வோம்.

இறை நம்பிக்கை

இறை நம்பிக்கை இஸ்லாத்தில் ஈமான் எனக் குறிப்பிடப்படுகிறது. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஈமான் எனும் இறை நம்பிக்கை தலையாயதாக அமைந்துள்ளது.

இறை நம்பிக்கையை வலியுறுத்தாத சமயம் எதுவுமே மண்ணுலகில் இல்லையெனலாம். உலகத்துச் சமயங்கள் அனைத்தும் இறைவன் மீது மனிதன் ஆழமான, அழுத்தமான நம்பிக்கை கொண்டு இறை வழிபாடு செய்யச் சொல்கின்றன. இஸ்லாமிய இறைவழிபாட்டிற்கும் பிற சமய இறை வழிபாட்டிற்குமிடையே சிறு வேறுபாடு உண்டு. மற்ற சமயங்கள் வலிவுறுத்துவது போன்று இஸ்லாமும் இறையருட்திறத்தினை உணர்த்தி, இறைவன் மீது நீங்கொணா நம்பிக்கை கொள்ள வற்புறுத்தினாலும் அவ்விறை நம்பிக்கை ஒரே இறைவன் என்ற அழுத்தமான ஆழமான கோட்பாட்டின் மீது அமைந்துள்ளது.

“இறைவன் ஒருவனே; அவன் உருவமற்றவன்; அவன் இணையற்றவன்; துணையற்றவன்; அவன் ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; அலியும் அல்லன்; அவன் யாராலும் பெறப்படவும் இல்லை; யாரையும் பெற்றெடுக்கவும் இல்லை என்ற இறைக் கோட்பாடு மீது அசைக்க முடியாத அடித்தளத்தில் உறுதிமிகு இறை நம்பிக்கையானது அமைந்துள்ளது.

இறைவன் ஒருவன், பெயர்கள் பல

ஒரே இறைவன் என்ற உணர்வையும் கருத்தையும் பழம்பெரும் வேதங்களும் வேத விற்பன்னர்களும் எடுத்துக் கூறி விளக்கி வந்துள்ளார்கள். இதைப் பற்றி காஞ்சி மாமுனிவர் காமகோடி பீடம் ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர்கள் 1958 மே மாதத்தில் சென்னையில் நிகழ்த்திய உபதேசப் பேருரையில்,

“கடவுள் ஒருவரே, பல உருவங்களைப் பல பெயர்களில் தாங்கி இருக்கிறார். நாம் நம்முடைய மனத்தைப் பண்படுத்தி, அதை எந்தப் பெயரையுடைய எந்த உருவத்தையாவது தெளிவான பக்தியோடு ‘நினைத்து’ வணங்கி அர்ப்பணம் செய்தால் மோட்சம் கிடைக்கும். காளிதாசர் (குமாரசம்பவக் காவியத்தில்) ‘ஒரே மூர்த்தி முக்குணங்களை ஒட்டி, மூன்று ரூபமானார்’ என்று கூறுகின்றார். (‘இங்கு ரூபம்’ என்பது ஜடரூபம் அல்ல. ‘ஜோதி ரூபம்’) இந்த உண்மையை ரிக்வேதம், ‘தெய்வம் ஒன்று’ ஞானிகள் அதைப் பல பெயர்களால் வழிபடுகின்றனர் என்பதால் உணரக் கிடக்கின்றது. கீதையிலும் இந்த உண்மை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது,” எனக் கூறியுள்ளார்.

இங்கு ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர்கள் ‘எந்தப் பெயரையாவது, “எந்த உருவத்தையாவது ‘நினைத்து’ அர்ப்பணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று கூறுவதன் மூலம் தெய்வத்தின் பெயரை மனத்தளவில் நினைத்து வழிபடுவதன் வாயிலாக ஒரே இறைவனை மனத்தளவில் எண்ணி அருவ வழிபாடு செய்யப் பணிக்கிறார். அதோடு ‘தெய்வம்’ ஒன்று, அதை ஞானிகள் பல பெயர்களால் வழிபடுகிறார்கள் என்று ரிக்வேதம் கூறுவதாகச் சொல்வதன் மூலம் ஒரிறைக் கொள்கையை ஹிந்து சமய பழம்பெரும் வேதங்களும் போற்றுவதாக உறுதி செய்துள்ளது அறிந்தின்புறத் தக்க தாகும்.

‘இறைவன் பிறப்பு, இறப்பு அற்றவன்’
பகவத்கீதை புலப்படுத்தும் உண்மை

பகவத் கீதை மிகச் சிறந்த ஹிந்து சமய வேத நூலாகப் போற்றப்படுகிறது. போர்க்களத்தில் தளர்ச்சியுற்ற அர்ச்சுனனுக்கு வீரத்தையும் விவேகத்தையும் வளமான வாழ்க்கை நெறியையும் புகட்டும் வகையிலான கண்ணனின் உபதேசத் திரட்டே இவ்வேத நூல். இந்நூலின் 4-6வது வசனம் “கடவுள் பிறப்பு அற்றவர்” என அறுதியிட்டு உறுதிப்படக் கூறுவது இறைவனின் தன்மையை முழுமையாக உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் இறைத்தன்மையை இறையருட் திறத்தை புலப்படுத்தும் இறைத் தீர்க்கதரிசியாகவே கண்ணன் இங்கு காணப்படுகிறார்.

அனைத்து வேதங்களும் மதங்களும் ஒரே
பரம்பொருளையே போதிக்கின்றன

கெளதம மகரிஷி வேதங்களின் சாரத்தையும் நுட்பங்களையும் நன்கு உணர்ந்து தெளிந்தவர். அவர் தன் சீடர்களுக்கு மனிதப் பிறப்பின் மகத்துவத்தைப் பற்றி உபதேசிக் கும்போது,

“ ‘ஸ்ருதி’ என்னும் தரும சாஸ்திரம் நான்கு மறைகள் (வேதங்கள்), உபநிஷதங்கள் எல்லாமே ஒரே பரம் பொருளையே குறிக்கின்றன. இதிலிருந்து எல்லா வேதங்களும் மதங்களும் உலகம் தோன்றியது முதல் அழிவுவரை ஒரே பரம் பொருளைப் போதிப்பதையே நியதியாகக் கொள்ள வேண்டும்” என்று போதித்துள்ளார். அத்துடன் “பல பரம்பொருள் உண்டென்று ஒரு மதம் கூறுமானால் அது மதமல்ல” என்றும் தீர்மானமாகக் கூறியுள்ளார். பிரஹ்மாவின் ஏகத்துவக் கொள்கை

ஹிந்து சமயம் “பிரஹ்மா” என அழைக்கும் இறைதூதர் தன் சந்ததிகளுக்கு உபதேசமாகக் கூறுவனவற்றுள் குறிப்பிடத்தக்க உபதேசமாக கீழ்க்காணும் போதனை அமைந்துள்ளது.

“இறைவன் உங்களுக்காக ஒரு பரிசுத்தமான மார்க்கத்தை குறிப்பிட்டிருக்கிறான். ஆகவே, நீங்கள் அம்மார்க்கத்திலேயே ஸ்திரமாக இருந்து மரணமடையும் போது ஏக தெய்வ வழிபாட்டிலேயே மரிக்க வேண்டும்; இறைவனுக்கு எதையும் ஒப்பாக்கி வணங்காதீர்கள்” என்பதாகும்.

(ஹிந்து தர்மம் பக். 112)

இறைவனை அறிவதே ‘பிரம்ம வித்தை’

மேலும், தன் சீடர்களுக்கு உபதேசிக்கும் கெளத மகரிஷி, அவர்களை நோக்கி, “இப்பொழுது உங்களுக்கு மிகப் பெரிய வித்தையொன்று கற்றுக் கொடுக்கப் போகிறேன். அதுதான் மனிதன் பிறவாமல் இருப்பதற்கு வழிகாட்டும் கல்வியாகும். ‘பிரம்ம வித்தை’ என்று அதற்கு பெயர். அதாவது, நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள். நமது தந்தை அவரே; தாயும் அவரே; அவரே அம்மையப்பரும் ஆவார். அவரை அறிந்து கொள்வதே-அவரைப் பற்றிய அறிவைப் பெறுவதே பிரம்ம வித்தையாகும்” எனக் கூறியுள்ளார்.இன்ஜில் எனும் விவிலியம் கூறும் ஏகத்துவம்

இயேசு என அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பற்றிக் கூறிய கருத்துகள் விவிலிய நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன.

பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செயல்படுகிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பவனேயல்லாமல், என்னை (இயேசுவை) நோக்கி, “கர்த்தரே கர்த்தரே! என்று சொல்கின்றவன் அதில் பிரவேசிப்பதில்லை." (மத்தேயு 7:21)

இதிலிருந்து ஏகப் பரம்பொருளைத் தவிர வேறு யாரையும் ‘இறைவன்’ எனக் குறிப்பிடுவதை இறைதூதரான ஈஸா (அலை) அவர்கள் அறவே விரும்பவில்லை என்பதை அறிந்துணர முடிகிறது. மேலும்,

“பூமியிலே ஒருவரையும் உங்கள் பிதா என்று சொல்லா திருங்கள்; பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக (இறைவனாக) இருக்கிறார்”.

(மத்தேயு 23:9)

இயேசுவை நோக்கி, மறைநூல் வல்லார் ஒருவர், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு,

“நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனதோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவு ளிடம் அன்பு கூர்வாயாக” என்பதுதான் முதல் கட்டளை என்றார். அதற்கு மறைவல்லார்,

"கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று நீர் கூறியது உண்மையே”.

(மாற்கு 12:29, 30.32)

இதிலிருந்து ஒரே இறைவன் என்ற கோட்பாட்டையே ஈஸா (அலை) அவர்கள் வலியுறுத்தியதாக இன்ஜில் வேதத்திலிருந்து தெளிவாக அறிகிறோம்.

இறை வணக்கம்

உலகத்துச் சமயங்கள் அனைத்துமே இறை வணக்கத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப் பணிக்கின்றன. இறைவனை வணங்குவதற்காக மேற்கொள்ளும் சமயச் சடங்கு முறைகள், அதற்காகப் பயன்படுத்தும் பூசனைப் பொருட்கள் அநேகம் இருக்கலாம். இவற்றில் மாறுபாடும் வேறுபாடும் இருக்கலாம். ஆனால், இஸ்லாமிய இறை வணக்க முறையைப் பொறுத்தவரை இத்தகைய மாறுபாடு, வேறுபாடு போன்றவற்றிற்கெல்லாம் அறவே இடமில்லை. இஸ்லாமிய இறை வணக்கக் கோட்பாடு திட்ப, நுட்பமுடையதாகும். இறை வணக்கத்திற்கு உள்ளமும் உணர்வுமே அடித்தளமாக அமைகின்றன. வல்ல அல்லாஹ்வை மனத்தால் மட்டுமே நினைக்க முடியும். இறைவனை சாதாரண நிலையில் ஒரு நாளைக்கு ஐவேளையும் நள்ளிரவுத் தொழுகையான தஹஜ்ஜத் எனும் சிறப்புத் தொழுகை உட்பட ஆறு வேளையும் இறை வணக்கம் புரிய இஸ்லாம் பணிக்கிறது.

இறை வழிபாட்டின் அடித்தளம் ஒன்றே

இறைவனை வழிபடும் ஒரு ஹிந்து தன் இதயம் முழுவதிலும் இறையுணர்வை நிரப்பிய நிலையில் சரீர வணக்கத்தில் ஈடுபடவேண்டும். சரீர வணக்கம் என்பது முகவாய், செவிகள் இரண்டு, தலை, புயங்கள் இரண்டு, கைகள் இரண்டு எனும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் படிய இறை வணக்கம் புரியவேண்டும் எனப் பணிக்கிறது. இந்தியச் சமயங்கள் பலவும் இவ்வணக்க முறையையே வலியுறுத்துகின்றன.

இதையே இஸ்லாமிய மார்க்கமும் இறை வணக்கத் தொழுகையின்போது நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங் கை விரல்கள் உட்பட இரு பாதங்களின் விரல்களை பூமியின் மேல் நட்டு, இரு முழங்கால்கள் ஆக எட்டு உடல் உறுப்புகள் தரையில்பட தொழுகை நடத்த வேண்டும் எனப் பணிக்கிறது.

கிருஸ்தவ சமயமும் இதே முறையில் சிறிது வித்தியாசத்துடன். இறை வணக்க முறை ஒரே மாதிரியான முறையையும் போக்கையும் கொண்டிருப்பது, இவை ஒரே மூலத்திலிருந்து கிளைத்தவைகள் என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றன.

இந்தியாவின் மிகப் பெரிய சமயமான ‘ஹிந்து’ சமயம் உட்பட உலகத்துப் பெரும் சமயங்கள் அனைத்தும் சாதாரண நிலையில் ஒரு நாளைக்கு ஐவேளை பூஜையையும், அத்துடன் சிறப்புப் பூஜையான நள்ளிரவுப் (நடு ஜாமம்) பூஜையையும் இறை வணக்க நேரங்களகக் கொண்டுள்ளன.

எனினும், இஸ்லாத்தில் இப்படித்தான் இறை வணக்கம் அமைய வேண்டுமென வரன்முறையான, கட்டுக்கோப்போடு கூடிய முறை உண்டு. ஆனால், பிற சமயங்களின் வணக்க, வழிபாட்டு முறைகளில் ஒருபோக்கான முறை இருந்தபோதிலும் அதைக் கடைப்பிடிக்க கடுமையான கட்டுப்பாடு ஏதும் இல்லை என்பதை நடைமுறை வணக்க வழிபாடுகளிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அதிலும், ஒரு முஸ்லிம் இறைவனை ஒரு நாளைக்கு ஐந்துமுறை குறிப்பிட்ட இடைவெளிகளில், குறித்த நேரங்களில் கட்டாயம் தொழ வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கு ஆன்மீக அடிப்படையில் மட்டுமல்லாது உளவியல் போக்கிலும் நோக்கிலும் ஒரு மனிதன் இருபத்தி நான்கு மணிநேரமும் இறைச் சிந்தனையோடும் இறை அச்சத்தோடும் வாழ இஸ்லாமிய ஐவேளைத் தொழுகை முறை வழி வகுக்கிறது எனலாம்.

நோன்பு எனும் விரதம்

நோன்பாகிய விரதத்தைப் பற்றிப் பேசாத, வலியுறுத்தாத சமயம் எதுவுமே மண்ணுலகில் இருப்பதாகக் கூற முடியாது. அனைத்துச் சமயங்களுமே விரதம் இருக்கப் பணிக்கின்றன. விரதத்தை மேற்கொள்ளும் முறைகளில் வேறுபாடு இருக்கலாம். சில மதங்கள் ஆண்டில் குறிப்பிட்ட மாதங்களில் விரதம் இருக்கப் பணிக்கின்றன. சில சமயங்கள் சில வாரங்களோ அல்லது சில நாட்களோ உண்ணா நோன்பு மேற்கொள்ளும்படி கூறுகின்றன. இன்னும், ஹிந்துமதம் போன்ற சில சமயங்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளோ அல்லது சில நாட்களோ அல்லது ஒரு சில மணி நேரங்களோ உண்ணாமல் விரதம் இருக்கப் பணிக்கின்றன. அதிலும், விரதத்தின்போது சோறு போன்றவற்றை விலக்கி விரதம் இருக்குமாறு அறிவுறுத்துகின்றன. ஆனால், எந்த மதமும் விரதத்தின்போது நீர் பருகக்கூடாது எனத் தடை விதிப்பதில்லை.

ஆனால், இஸ்லாமிய நோன்பாகிய விரதம் இவற்றினின்றும் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆண்டில் ரமளான் மாதம் முழுமையும் பகல் முழுவதும் எந்தவொரு உணவையும் அறவே உண்ணாது, ஒரு சொட்டு நீரும் பருகாது, புகைக்கவோ நுகரவோ செய்யாது நோன்பு நோற்க வேண்டுமெனக் கட்டளையிடுகிறது. இஃதன்னியில் ஒரு முஸ்லிம் விரும்பினால் ஒரு குறிப்பிட்ட புனித நாட்களில் நோன்பு நோற்கலாம்.

ஜகாத் எனும் தான தருமங்கள்

உலகத்திலுள்ள அனைத்துச் சமயங்களுமே மனிதன் வேண்டிய அளவு தான தருமங்கள் செய்து இறையருள் பெற விழைய வேண்டும் என்றே போதிக்கின்றன.

தானம் அளிக்கவோ தருமம் செய்யவோ வேண்டாம் எனக் கூறும் சமயம் எதுவுமே இவ்வுலகில் இல்லை என்றே கூறலாம்.

ஏழை எளியவர்கட்கு ஒரளவு வசதியுள்ளவர்களாயினும் கூட ஒவ்வொருவரும் அவர்களால் இயன்ற அளவு தான தருமங்கள் செய்ய வேண்டும் எனப் பணிக்கின்றன. ஏழை எளியோர்மாட்டு இத்தகைய தான, தருமம் செய்யும் இரக்கச் சிந்தனை உள்ளவர்களே இறைவனின் பேரருளை எளிதாகப் பெற முடியும் என்பதை எல்லாவகையிலும் எடுத்தோதுகின்றன.

இதே போன்று இஸ்லாமும் தான தருமம் மூலம் இறைவனின் இன்னருளைப் பெற வழிகாட்டுகின்றது. இஸ்லாம் மூன்று வகையான தான தருமங்களைச் செய்ய பணிக்கின்றது. இதில் ‘சதக்கா’ என்பது ஒன்று. ஒரு முஸ்லிம் தன் வாழ்நாள் முழுவதும் இயன்ற வழிகளிலெல்லாம் ஏழை எளிய மக்களுக்கு அவ்வப்போது தான தருமங்களைச் செய்ய வேண்டும் என்பதே சதக்கா வாகும்.

அடுத்து, இஸ்லாமிய தானம் ‘ஃபித்ரா’ என்பதாகும். இஃது எல்லா நாளிலும் வழங்கப்படும் தானம் அன்று. ஈதுல் ஃபித்ர், அன்று (ரமளான்) தொழுகைக்காகப் பள்ளி வாசல் நோக்கிச் செல்லும் ஒவ்வொரு முஸ்லிம் தொழுகையாளியும் ஒரு குறிப்பிட்ட அளவு தானியத்தையோ அல்லது அதன் பெருமானத்திற்குப் பணத்தையோ ஏழை எளியவர்கட்குத் தானமாக வழங்கிவிட்டே ஈத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும்.மூன்றாவதான ‘ஜகாத்’ எனும் தானதருமம் இஸ்லாத்தின் ஐம்பெரும் கட்டாயக் கடமைகளில் ஒன்றாகும். சுய சம்பாத்தியமுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தன் சம்பாத்தியத்தில் இரண்டரை சதவிகிதம் அதாவது நாற்பதில் ஒரு பங்கு ஏழை, எளியவர்களுக்குக் கட்டாய தானமாக வழங்க வேண்டும் எனக் கட்டளையிடுகிறது.

‘ஹஜ்’ எனும் புனிதப் பயணம்

உலக மதங்கள் ஒவ்வொன்றும் தத்தம் சமயச் சார்புள்ள புனிதத் தலங்களை நோக்கி புனித யாத்திரை செல்ல வேண்டுமெனக் கூறுகிறது. புனிதப் பயணம் செல்லத் தூண்டாத, வற்புறுத்தாத சமயம் எதுவுமே பூமியில் இருப்பதாகத் தெரியவில்லை.

அதே முறையில் மற்ற சமயங்களைப் போன்றே இஸ்லாமிய மார்க்கமும் தன் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாக ‘ஹஜ்’ எனும் புனிதப் பயணம் செல்லுவதைக் கட்டாயக் கடமையாக்கியுள்ளது.

மற்ற சமயங்களின் புனிதப் பயணத்திற்கும் இஸ்லாமின் ஹஜ் கடமைக்குமிடையே மிக முக்கியமான வேறுபாடு உண்டு. பிற மதப் புனிதப் பயண நிறைவேற்றலில் நீக்குப் போக்கும் நெகிழ்வும் உண்டு. ஆனால் ஹஜ் புனிதப் பயணம் வசதியுள்ள, உடல் திறமுள்ள முஸ்லிமின் வாழ்நாள் கடமையாக இருந்தபோதிலும் அக்கடமையை செயல்படுத்த ஒரு குறிப்பிட்ட கால வரையறை உண்டு. ஒரு ஆண்டின் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் அக் கடமையை குறிப்பிட்ட முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு.

அது மட்டும் அன்று, ஹஜ் புனிதப் பயணம் செல்வோர் தம் சொந்தச் சம்பாத்தியத்தைச் செலவிட்டே செல்ல வேண்டும். அவர் நல்ல உடல் நலமும் வலிமையும் உடையவராக இருக்க வேண்டும். அத்தகையவர் தம் வாழ்நாளில் ஒரு முறை சவுதி அரேபியாவில் உள்ள மக்கமா நகரில் அமைந்துள்ள ‘காபா’ புனித இறையில்லத்திற்குப் புனிதப் பயணமாகச் சென்று மினாவில் தங்கி குறிப்பிட்ட நாளில், நேரத்தில் ‘அரஃபா’ பெருவெளியில் தங்கி மீள வேண்டும். இதுவே ‘ஹஜ்’ புனிதப் பயணம் ஆகும்.

இவ்வாறு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் உலகெங்கும் உள்ள அனைத்து முக்கிய சமயங்களின் இன்றியமையா அடிப்படைக் கட்டுப்பாடுகளாகக் குறிக்கப்படுவதிலிருந்து இவையனைத்தும் ஒரே அடிப்படையிலிருந்து முகிழ்த்தவைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால், இக்கடமைகளை நிறைவேற்றும் முறைகளில் வேறுபாடுகள் உள்ளன. இவை காலந்தோறும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சமயவாதிகளால் மாற்ற திருத்தங்கட்கு உட்படுத்தப் பட்டமையால் விளைந்தவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

திருத்தமிலா திருமறை, மாற்றமிலா மார்க்கம்

இஸ்லாம் முந்தைய சமயங்களின் அடித்தளத்தின்மீது அமைந்ததெனினும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (சல்) அவர்களின் மூலம் முழுமைப்படுத்தப்பட்ட இறுதி மார்க்கமாதலின் முந்தையன போன்று மனிதர்களின் மாற்ற திருத்தங்கட்குக் கடுகளவும் உட்படா வண்ணம் மாற்றமிலா மார்க்கமாக-திருத்தப்படா திருமறையாக-இறைவன் எவ் வடிவில் இறை தூதர்க்கு வழங்கினானோ அதே மூல வடிவில் இன்றும் இருந்து வருகிறது.

முந்தைய இறைதூதர்களின் வாழ்வும் வாக்கும் பிந்தையோரின் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப  திருத்தப்பட்டது போன்று இறுதித் தூதர் அண்ணலாரின் வாழ்வும் வாக்கும் அணுவளவும் மாற்ற திருத்தங்கட்கு ஆளாகவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் முந்தைய நபிமார்களின் வாழ்வும் வாக்கும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் உரியவர்களால் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் மறைவுக்குப்பின் வந்தவர்களால் செவி வழிச் செய்தியாகச் சேகரம் செய்து தொகுக்கப்பட்டவைகளாகும். இதில் உண்மையும், உண்மைபோல் தோற்றமளிக்கும் பொய்மையும் புனைந்துரைகளும் தொகுப்பாளனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் அத்தொகுப்பில் இடம் பெறுவது தவிர்க்கவியலாத ஒன்றாகும்.

மறு உருவெடுத்த தெளராத் வேதம்

புக்தநஸர் எனும் மன்னர் ஜெரூசலம் (பைத்துல் முகத்தஸ்) மீது மேற்கொண்ட போரின்போது மோசஸ் எனும் மூஸா (அலை) அவர்கட்கு இறைவன் வழங்கிய ‘தெளராத்’ எனும் வேதத்தின் பிரதிகள் யாவும் எரிந்து போயின. அப்போது யூதர்கள் அனைவரும் பாபல் நகரச் சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுக் கிடந்தனர். சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தபோது அவர்களிடம் தெளராத் வேதப் பிரதிகள் எதுவும் இல்லாத நிலை.

தெளராத் வேதம் இருந்த இப்ரானி மொழியை அன்றிருந்த யூத சந்ததியினர் அறிந்திருக்கவில்லை. இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு இஜ்ரா எனும் பெரியார் இப்ரானி மொழி கலந்திருந்த கில்தானி எழுத்துகளைக் கொண்டு புதிதாகத் தெளராத் வேதத்தை வரையலானார். இதுவே பிற்காலத்தில் தெளராத் வேதத்தின் நகலாகக் கருதப்படலாயிற்று. இதில் பல செய்திகள் புதிதாக இணைக்கப்பட்டன. சுருங்கக் கூறின் தெளராத் வேதத்தின் சாயலில் பெரியார் இஜ்ராவினால் ஒரு புதிய மதமே உருவாக்கப்பட்ட தெனலாம். அப்புதிய தெளராதில் ‘மூஸா (அலை) 120 வயதில் மரணித்தார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்து இது மனிதர்களால் வரையப்பட்ட வேதம் என்பது தெளிவாகிறது. மூஸா (அலை) அவர்கட்கு இறைவனால் வழங்கப்பட்ட வேதத்தில் அவரின் இறப்பும் வயதும் இடம்பெற இயலாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். பெரியார் இஜ்ராவை மூஸா (அலை) அவர்களால் அறிமுகம் செய்த யூத சமயத்தைப் புனர் நிர்மாணம் செய்தவர் என்ற முறையில் இரண்டாம் ஸ்தாபகராக யூத சமய மக்களால் போற்றப்படுகிறார்.

புனிதர் பவுல் தொகுத்த விவிலிய புதிய ஏற்பாடு

இறை மார்க்க நெறி பிறழ்ந்த பனி இஸ்ரவேலர்களைத் தடுத்தாட்கொண்டு இறைவழி திருப்ப, இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதரே ஈஸா (அலை) எனும் இயேசு கிருஸ்து. இதை அவரே கூறியதாக,

“நான் திருச்சட்டத்தையோ இறைவாக்கையோ அழிக்க வந்துள்ளேன் என எண்ண வேண்டாம். தெளராத் எனும் வேதத்தை மட்டும் நிலைநிறுத்துவதற்காகவே தோன்றியிருக்கிறேன்.” (மத்தேயு 5:17)

என விவிலியம் தெளிவாக்குகிறது.

இறைவன் ஈஸா (அலை) மூலம் மனித குலத்துக்கு வழங்கிய நற்செய்திகளான வேத வசனங்களில் பலவற்றையும் சில ஆண்டுகட்குப் பின்னர் ஈசா (அலை) அவர்களின் சீடர்கள் மொழிந்ததைத் துணைக் கொண்டு புதிய ஏற்பாட்டை தொகுத்தளித்தவர் புனித பவுல் அவர்களாவர். ஈஸா (அலை) அவர்களின் வாழ்வும் வாக்கும் அவர்கள் வாழ்ந்தபோதே குறித்து வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனினும், இறுதி இறைத் தூதரான நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் இறைச் செய்தியும் அவரது தோழர்களால் அவ்வப்போதே பதிவு செய்யப்பட்டன. உறுதி செய்யப்பட்டன. இறைவனால் நபிகள் நாதர் மூலம் வெளிப்படுத்தப்பட்ட திருமறைச் செய்திகள் உடனுக்குடன் பலராலும் மனனம் செய்யப்பட்டதோடு ஓடுகள், ஈச்சமரப் பட்டைகள், எலும்புகளின் மீதும் தெளிவாக எழுதி வைக்கப்பட்டன. அண்ணலார் காலத்திலேயே இறைச் செய்திகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டன.

பெருமானார் அவர்கள் தனக்கு முன்னர் வந்த இறைத் தூதர்களின் வாழ்வும் வாக்கும் மாற்ற திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டதுபோல் தனக்கும் நேரிட்டுவிடக் கூடாது எனக் கருதினார்களோ என்னவோ, அதைப்பற்றி மிக அழுத்தமாக,

“எனக்குப் பின்னர் என் மீது உள்ள அன்பாலும் ஆர்வத்தாலும் நான் கூறாததைக் கூறியதாகவோ செய்யாததைச் செய்ததாகவோ யாரேனும் கூறினாலோ எழுதினாலோ அவர்கள் என்னைச் சார்ந்தவராக மாட்டார்கள். அத்தகையவர்கள் இறைவனின் கொடுந்தண்டனையிலிருந்து தப்பவும் முடியாது.” எனக் கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். எனவே, அன்பு மிகுதியினாலோ வேறு காரணங்களாலோ மாநபி வாழ்வும் வாக்கும் இன்றும் உள்ளது உள்ளவாறே அமைந்து உலக மக்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்கி வருகிறதெனலாம்.

அத்துடன் இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் திருமறையும் நாயகம் (சல்) அவர்களின் காலத்திலேயே முழுமைப்படுத்தப்பட்டு, முறையாகத் தொகுக்கப்பட்டு விட்டது. மூன்றாவது கலீஃபா உதுமான் (ரலி) காலத்தில் திருத்தப் பதிப்பாகச் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், முந்தைய வேதங்கள் பலவற்றில் செய்யப்பட்டதுபோல் மாற்ற, திருத்தங்களுக்கு இடமேயில்லாமற் போய்விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை யாராலும் திருத்தபடா திருமறையாகவே திருக்குர்ஆன் விளங்கி வருகிறது.

அனைத்து வேதங்களுக்கும் மூலவேர் ஒன்றே!

இதுவரை நாம் கண்ட இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளின் அடித்தளம் உலகச் சமயங்கள் அனைத்தின் அடித்தளமாக அமைந்திருப்பதிலிருந்து உலகத்துச் சமயங்கள் அனைத்தும், அவற்றின் வேதங்கள் அத்தனையும் இறை தூதர்கள் மூலம் காலந்தொறும் மக்களுக்கு வழங்கப் பட்டுள்ளன என்பது போதரும். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளின் வரன்முறையான கோட்பாடுகள் மட்டுமே பிற சமயங்களிலிருந்து இஸ்லாத்தைச் சற்றே வேறுபடுத்திக் காட்டுகின்றன என்பது தெளிவு.

பரம்பொருள் ‘அல்லாஹ்’ அனைவர்க்கும் இறைவனே

‘அல்லாஹ்’ எனும் அரபிச் சொல் பன்னெடுங்காலமாக அரபி மொழியில் ஏக இறைவனைக் குறிக்கும் சொல்லாக வழங்கி வருகிறது. ஹிந்து மதத்தில் கடவுள்களாக கருதப்படும் ஒவ்வொரு விக்ரத்துக்கும் ஒரு தனிப்பெயர் வழங்கி னும் எல்லாக் கடவுளர்க்கும் மேலான பெயராக ‘ஏகப் பரம் பொருள்’ என்ற சொல் வழங்கி வருகிறது. அதேபோன்று கிருஸ்தவ சமயத்தில் ஏசு, மேரி எனப் பல பெயர்கள் கடவுளர்களைக் குறிக்க வழங்கினும் அவற்றிற்கெல்லாம் மேலானதாக கர்த்தர் என்ற சொல்லாலேயே பரம்பொருள் அழைக்கப்படுகிறது. அதேபோன்று பெருமானார் நபியாக முகிழ்ப்பதற்கு முன்னர் 365 விக்ரகங்களை, ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரிட்டழைத்து வழங்கினாலும் பொதுவாக இறைவனை ‘அல்லாஹ்’ என்ற பொதுப் பெயரால் அழைத்து வணங்கி வந்தனர். தமிழில் கடவுள், இறைவன், ஆண்டவன் என்றெல்லாம் குறிப்பிடும் பரம்பொருளையே ‘அல்லாஹ்’ என்ற பெயரும் சுட்டுகிறது.

‘அல்லாஹ்’ என்ற சொல்லுக்கு ஆண்பால்-பெண்பால் என்பதெல்லாம் இல்லை ஒருமை-பன்மை இல்லை.

இறப்பு-பிறப்பு எதுவுமில்லை. உருவமிலா அல்லாஹ்வுக்குத் துணை, இணை இல்லை. அல்லாஹ் யாராலும் பெறப்படவுமில்லை, யாரையும் பெறவும் இல்லை. தேவை என்பது எதுவுமே இல்லை. இத்தகைய தன்மைகளைக் கொண்ட ஒரே இறைவனாகிய அல்லாஹ் இஸ்லாமியர்களாகிய முஸ்லிம்களுக்கு மட்டும் இறைவனில்லை. உலகிலுள்ள அனைத்துச் சமயங்களுக்கும்-மனித குலம் முழுமைக்குமான ஏகப் பரம்பொருளாகிய அல்லாஹ்வே ஏக இறைவனாவான்.

இஸ்லாம் வளர்ந்த வரலாறு

‘இஸ்லாம்’ இறைவனால் உருவாக்கப்பட்டு, மனிதர்களுக்கு வழங்கப்பட்ட இறை மார்க்கமாகும். முதல் மனிதரும் முதல் இறைதூதருமான ஆதாம் (அலை) அவர்கட்கு வழங்கப்பட்டது. இப்றாஹீம் (அலை) அவர்களால் ‘இஸ்லாம்’ எனும் பெயரிடப்பட்டது. அதன்பின் வந்த இறைதூதர்களாகிய நபிமார்களால் வளர்க்கப்பட்டு, இறுதி நபியாகிய அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களால் முழுமைப்படுத்தப்பட்டது. இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுவோர் முஸ்லிம்களாவர்.இறைவனே குருவான விந்தை

முந்தைய இறை தூதர்களிலிருந்து இறுதித் தூதரான நபிகள் நாயகம் (சல்) அவர்களை வேறுபடுத்திக் காட்டும் தனித் தன்மைகள் பல உள. அவற்றுள் ஒன்ற இறைவனே அண்ணலாருக்குக் குருவாயமைந்த பான்மையாகும்.

பெருமானார் தம் வாழ்வின் இறுதிவரை எழுதப் படிக்கத் தெரியாதவராகவே இருந்தார். தம் பெயரைக் கூட எழுத்தால் எழுதக் கற்றாரில்லை. இவரைப் பற்றி திருக்குர் ஆன் குறிப்பிடும்போது ‘உம்மீ’ (எழுதப் படிக்கக் கற்காதவர்) என்றே குறிப்பிடுகிறது.

நாயகத் திருமேனிக்கு இளமைப் பருவத்தில் அடுத்தடுத்து தாய், தந்தையரை இழந்ததனாலும் வறுமைச் சூழலில் ஒட்டகம் மேய்ப்பவராக இருந்ததனாலும் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் வசதியும் இவருக்கு இல்லாமற் போய்விட்டது.

இதற்கெல்லாம் மேலாக இவர் எழுதப் படிக்கக் கற்காததற்கு இறை நாட்டம் வேறு விதமாக இருந்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

சாதாரணமாக ஒருவர் எழுதவும் படிக்கவும் கற்க விரும்பினால் அவற்றை அவருக்குக் கற்பிக்க ஒரு ஆசிரியர்-குரு- கட்டாயமாக இருக்க வேண்டும். குரு இல்லாமல் எழுதப் படிக்கக் கற்பது என்பது இயலாததொன்றாகும்.

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் பிற் காலத்தில் மனிதகுலம் முழுமைக்குமே மாநபியாக, மாபெரும் வழி காட்டியாக-குருவாக-விளங்கப் போவதால் அம் மாபெரும் இறைஞானப் பெருஞ்சுடருக்கு அறிவுறுத்திக் கல்வி கற்பிக்கும் அருகதை வேறு எந்த மனிதருக்கும் இல்லை; எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே அத்தகு தகுதிப்பாடு உண்டு என்பதனால் சாதாரண மனிதரை மாநபிக்கு குருவாக அமர்த்தாமல் இறைவனே திருநபிக்கு குருவாக விளங்கும் வாய்ப்பளித்தான் போலும்.

இறைவனின் பிரதிநிதியே மனிதன்

இஸ்லாத்தைப் பொறுத்தவரை மனிதனைப் பற்றிய கணிப்பு மிக உன்னதமானதாகும். இஸ்லாமிய மரர்க்கம் மனிதனை மிக உயர்வாக மதிக்கிறது. மாபெரும் சிறப்புக் குரியவனாகக் கருதுகிறது. இன்னும் சொல்லப்போனால் இறையம்சம் பொருந்தியவனாக இஸ்லாம் மனிதனைப் போற்றுகிறது. ஆதி மனிதர் ஆதாமை இறைவன் ‘ரூஹூ’ ஊதி உருவாக்கியதால் மண்ணுலகில் மனிதன் இறைவனின் அம்சங்கொண்ட இறைப் பிரதிநிதியாகவே கருதப்படுகிறான். ஆதித் தாயார் ஹவ்வாவை ஆதாமின் விலாவிலிருந்து இறைவன் உருவாக்கினான்.

இன்று பல்கிப் பெருகியிருக்கும் மனிதகுலம் முழுமை யின் தோற்றுவாயாகத் திகழ்பவர்கள் ஆதிப் பிதாவாகிய ஆதாம் (அலை) அவர்களும் ஆதி மாதாவாகிய ஹவ்வா (ஏவாள்) தாயாரும் ஆவார்கள். இவர்கள் இருவரின் வாயிலாகவே மனுக்குலம் முழுமையும் தழைத்து வளர்ந்துள்ளதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

ஒரே ஆத்மா

ஒரே ஆத்மாவிலிருந்தே மனிதகுலம் முழுமையும் பல்கிப் பெருகியுள்ளது. இதன் மூலம் மனிதகுலம் முழுமையும் ஒன்றே என்ற அடிப்படையை இஸ்லாமியத் திருமறையும் உறுதிபடப் போதிக்கிறது.

“மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்தி செய்தான் (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து), அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு, அவ்விருவரிலிருந்து அநேக ஆண், பெண்களை (வெளிப்படுத்தி) பரவச் செய்தான். ஆகவே, அந்த அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே (நீங்கள் உங்களுக்குள்) ஒருவருக்கொருவர் (வேண்டியவற்றை) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும், (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு பந்துவத்திற்கும் (மதிப்பளியுங்கள்) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்” (திருக்குர்ஆன் 4:1).

இந்த இறைவாக்கின் அடிப்படையிலேயே யுனெஸ்கோவின் இனவாதக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்பது இங்குக் கவனிக்கத்தக்கதாகும்.

உலகெங்கும் ஒரே மூலத்திலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியிருக்கும் மனிதகுலம் பல்வேறு இனங்களாக, நிறத்தவர்களாக, மொழியினராக, பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களாக இருப்பது அழகிய மலர்த் தோட்டத்தில் காணும் பல்வேறு வகையான நிறப் பூச்செடிகளையும் அவற்றின் பன்னிற மலர்களிலிருந்து வெளிப்படும் வெவ்வேறு வகையான மணங்களைப் போன்றதாகும். இத்தோட்ட மலர்கள் ஒவ்வொரு வகையில் ஒவ்வொன்றும் சிறந்ததேயன்றி, அவற்றில் எந்த வண்ண மலரும் நறுமணப் பூக்களும் ஒன்றைவிட மற்றொன்று சிறந்ததெனக் கூறுவதற் கில்லை. மாலைக்கு வனப்பூட்டும் வண்ண மலர்களே மனித இனங்கள். இதையே திருமறை.

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால் உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேல் என்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை எனினும்) உங்களில் எவன் மிகவும் பயபக்தியுடையவனாக இருக்கிறானோ, அவன் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்கக் கண்ணியவான். நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) நன்கறிந்தோனும் தெளிந்தோனுமாக இருக்கிறான்” (திருக்குர்ஆன் 49:13) எனத் தெளிவாகக் கூறுகிறது.

அவ்வகையில் இதுவரை உலகில் பிறந்தவர்களில் இறந்தோர் போக எஞ்சியிருப்பவர்கள் அறுநூறு கோடிப் பேர்களாவர். இவர்கள் அனைவருமே ஒரே மூலத் தாய் தந்தையர் வழிப்பிறந்த சகோதரர்கள்; உடன் பிறப்புகள் என்பதுதான் இறுதித் திருத்துதர் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் போதித்த கோட்பாடு, அதுவே இஸ்லாமியத் திருமறை திருக்குர்ஆன் தரும் மறைச் செய்தி.

அனைவரும் சோதரரே!

ஆதாம் (அலை) ஹவ்வா தொடங்கிப் பெருகிய மனித சமுதாயம் எண்ணிக்கையில் பெருக்கமடையவே, அவர்களிடையே சுயநல வேட்கையும் சுரண்டல் உணர்வும் தலை தூக்கத் தொடங்கியது. இதனால் தன்னலமுடையவர்களாயினர். அதுவரை இறை நெறிக்கொப்ப வாழ்ந்த மக்கள் இறைவழி பிறழ்ந்து வாழத் தலைப்பட்டனர். இதற்கிணங்க அவர்தம் சமுதாய அமைப்புமுறையும் மாறுபட்ட போக்கில் அமைவதாயிற்று.

தொடக்கத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயக் கூட்டமாக இருந்தவர்கள் பின்னர் தன்னல வேட்கையோடு தனித்தனிக் குழுக்களாகப் பிரிய நேர்ந்ததைப் பற்றி திருக்குர்ஆன்.

“(தொடக்கத்தில்) மனிதர் எல்லோரும் (ஒரே வழியிற் பட்ட) ஒரு சமுதாயத்தவராகவே விளங்கினர். (பின்னர்) இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே பிணக்குகள் தோன்றவே (நேர் வழியில் செல்வோருக்கு நற்செய்தி அறிவிப்போரும் (தீய வழியில் செல்வோருக்கு) அச்சமூட்டி எச்சரிப்போருமாகிய இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். மேலும், சத்தியத்தைக் குறித்து அவர்களிடையே தோன்றிய வேற்றுமைகள் பற்றித் தீர்ப்பு வழங்கும் பொருட்டு, அந்த இறைத் தூதர்களுடன் சத்திய வேதங்களையும் இறக்கினான். ஆனால், (இவ் வேற்றுமைகள் தோன்றிய ஆரம்பத்தில் மக்களுக்குச் சத்தியம் இன்னதென்று தெளிவு படுத்தப்பட்டதனால் அல்ல-மாறாக) சத்தியத்தின் ஞானம் கொடுக்கப்பட்ட மக்களே வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர். ஒளிமிக்க, தெளிவான அத்தாட்சிகளும் போதனைகளும் வந்தபின்னர் ஒருவர் மீது அக்கிரமம் செய்யும் பொருட்டு அதிலே அவர்கள் வேற்றுமையைத் தோற்றுவித்தார்கள். எனவே, சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில் (தூதர்கள் மீது) ஈமான் கொண்டோருக்குத் தன் உத்திரவினால் தான் விரும்பியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.” (திருக்குர்ஆன் 2:213).

இவ்வாறு மனிதன் நழுவவிட்ட நேர்வழியை மீண்டும் மனிதர்களுக்கு நினைவுபடுத்தவும் எடுத்துக்கூறி விளக்கவும் பல்வேறு நாடுகளில், பல்வேறு கால கட்டங்களில் இறைவன் தன் தூதுவர்களை அனுப்பிய வண்ணம் இருந்தான் என்பதுதான் இத் திருமறை தரும் செய்தி.

இப்படி காலந்தொறும் அனுப்பப்பட்ட இறைதூதர்களும் மக்களுக்கு முந்தைய நபிமார்கள் உரைத்த உண்மைகளை, ஏகத்துவக் கொள்கைகளை, மறுமை வாழ்வின் மாட்சியைப் பற்றியே பெரிதும் போதித்தனர்.

எச்சமயத்தவராயினும் அவர் நம் சகோதரரே

உலகெங்கும் உள்ள மக்கள் நாடு, இன, மொழி, சமயம் கடந்த நிலையில் அனைவரையும் ஒரே குலத்தவராகக் காணப் பணிக்கிறது. இஸ்லாம். அனைவருமே ஆதிப் பெற்றோர் ஆதாம்-ஹவ்வா வழி வந்தோர் என்பது அடிப்படை நியதியாகும்.

இந்த அடிப்படையில் ஒருவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரை வேற்றுமை பாராட்டாது தன் சகோதரனாகப் பாவித்து மதிக்க வேண்டும் என்பதை இஸ்லாம் எல்லா வகையிலும் வலியுறுத்துகிறது. இதனைச் சிறப்பாக எண்பிக்கும் அரிய நிகழ்ச்சியொன்று பெருமானாரின் பெருவாழ்வில் நடைபெற்றதாக ஹதீஸில் காணப்படுகிறது.

ஒரு சமயம் நாயகத் திருமேனி தன் தோழர்களோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இறந்த யூதர் ஒருவரது சடலத்தைச் சிலர் தூக்கி வந்தனர். அவ்விறுதி ஊர்வலக் காட்சி அண்ணலாரின் கண்ணில் பட்டவுடனே பெருமானார் அவர்கள் தோழர்களோடு மேற்கொண்டிருந்த உரையாடலை உடன் நிறுத்திய தோடு சட்டென்று எழுந்து அமைதியாக நின்றார்கள். பெருமானார் ஏன் எழுந்து நிற்கிறார் என்பதற்கான காரணத்தை அறியாத அவரது தோழர்களும் அண்ணலாரோடு எழுந்து நின்றனர். இறந்த யூதரின் சவ ஊர்வலம் பார்வையிலிருந்து மறைந்த பின்னர் பெருமானார் கீழே அமர்ந்து உரையாடலைத் தொடர்ந்தார். பெருமானார் எழுந்து நின்றதற்கான காரணத்தை அறிய விரும்பிய அவர்தம் தோழர்கள் அண்ணலாரை நோக்கி,

“இவ்வாறு தாங்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தியதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா என்பதை அறிய விரும்புகிறோம்” எனக் கூறினர். இதைச் செவிமடுத்த பெருமானார் (சல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி,

“இறைவனால் படைக்கப்பட்டு, இறப்பின் மூலம் மீண்டும் இறைவனிடமே திரும்பச் செல்லும் மறைந்த அந்த யூதரும் நம் சகோதரரே. ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்குச் செய்யும் மரியாதையையே செய்தேன். அது நம் கடமையும் கூட” எனக் கூறி தன் தோழர்களின் ஐயம் போக்கினார் அண்ணலெம் பெருமானார் அவர்கள்.

இறந்தவர் இஸ்லாத்துக்கு நேர் எதிரான போக்குடைய மாற்றுச் சமயத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெளிவாகத் தெரிந்திருந்தும், அவரும் ஆதிப்பிதா ஆதாம் (அலை) வழி வந்த நம் சகோதரரே எனக் கொண்டு, அவரது இறுதிப் பயணத்தின்போது எழுந்து நின்று மரியாதை செய்த மாநபியின் செயல் மனித குலம் முழுவதும் கடைப்பிடித் தொழுகத்தக்க வழிமுறையாகும் என்பதில் ஐயமில்லை.

இஸ்லாம் மீண்டும் மீண்டும் மக்களுக்கு வலியுறுத்தும் விஷயம் உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்தை, ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதுதான். அது மட்டுமல்ல நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தம் வாழ்நாள் முழுமையும் இதே கருத்தையே எல்லா வகையிலும் போதித்து வந்தார்கள். சமத்துவமாகவும் சமரசமாகவும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை அனைத்து வகைகளிலுமே வலியுறுத்தி வந்தார்கள்.

எண்ணத் தொலையா உட்பிரிவுகள்

தொடக்கக் காலத்தில் பல்கிப் பெருகிய மனிதர்கள் தேவையின் பொருட்டு கூட்டங் கூட்டமாகப் பல்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்று வாழலானார்கள். இவ்வாறு பிரிந்தவர்கள் பல்வேறு குலத்தினராகவும் கோத்திரத்தினராகவும் அமைந்தனர்.

காலப் போக்கில் நாடு, இன, மொழி, சமயப் பிரிவுகளோடு எண்ணற்ற உட்பிரிவுகளும் சேர மண்ணை எண்ணினும் சாதி போன்ற மனித உட்பிரிவுகள் எண்ணத் தொலையா அளவுக்குப் பல்கிப் பெருகி, தடம்புரண்ட மனித வாழ்வு ஆற்றொணா அல்லல்கட்கு ஆட்படுவதாயிற்று.

எது பெருமைக்குரியது?

மக்களில் பெரும்பாலோர் எதைப் பெருமையாகக் கருதுகிறார்கள் என்பதைச் சற்று ஆழ்ந்து நோக்கினால் தம் அறிவு, ஆற்றல் ஆகியவைகளால் பெருமைப்படுபவர்களை விட தான் சார்ந்த இனத்தைக் காட்டிப் பெருமைப்படுபவர்களே அதிகம். தம் குலப் பெருமையைப் பறை சாற்றிக் கொள்பவர்கள் அநேகர் உண்டு. தான் ஒரு குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சார்ந்த குலத்தில் பிறந்ததனாலேயே தான் எல்லா வகையிலும் சிறப்புக்குரியவன் எனப் பெருமைப்படுவோரையே எங்கும் காணமுடிகிறது.

இன்னும் சிலர் தாங்கள் பேசும் மொழியின் அடிப்படையில் தம் தகுதிப்பாட்டையும் பெருமையையும் வெளிப்படுத்திச் சிறப்படைய முயல்வர்.

மேலும் ஒரு சாரார் தாங்கள் பிறந்த நாட்டின் காரணமாகவே தங்கட்குப் பெரும் சிறப்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வதும் உண்டு. இன்னும் சிலர் தாங்கள் பெற்ற கல்வியைக் காட்டி மற்றவர்களினின்றும் மிகவும் மேம்பட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்ற முறையில் நடந்து கொள்வதும் உண்டு. கற்றவர்கள் என்ற கர்வத்தால் மற்றவர்களிடையே பேதம் பாராட்டுவதும் உண்டு. இத்தகைய போக்குகள் இறையம்சமான மனிதனின் செயல்களாக அமைதல் அறவே கூடாது என்கிறார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.

“தான் பிறந்த குலத்தின் காரணமாகவோ, தான் சார்ந்த இனத்தின் பேராலோ, தான் பேசும் மொழியின் காரணமாகவோ, பிறந்த நாட்டினாலோ, தான் பெற்ற கல்வியினாலோ ஒருவன் உயர்வு பாராட்டினால் அல்லது பேதம் காட்டினால் அது சாத்தானின் செயலாக இருக்குமே தவிற இறையம்சமான மனிதனின் செயலாக இருக்க முடியாது.” என்பது பெருமானாரின் உள்ளக் கிடக்கையாகும்.

ஆனால், மனிதனுக்கு உண்மையிலேயே பெருமைதரக் கூடிய பெரும் பண்பு ஒன்று உண்டு. அது என்ன என்பதை நாயகத் திருமேனி அவர்கள் விளக்கும்போது,

“ஒரு மனிதன் எந்த அளவுக்குத் தன்னையொத்த மனிதர்களை நடத்துகிறான்; ஒழுக்க நியதிகளைப் பேணி நடக்கிறான்; மனிதர் என்ற அளவில் மற்றவருடைய உயிர், பொருள்களைக் கண்ணியப்படுத்துகிறான்; அவர் பின்பற்றும் சமயத்தை மதிக்கிறான்; எந்த அளவுக்கு இறையாக்கமுடையவனாக இறைவன் வகுத்தளித்த வழியில் வாழ்கிறான் என்ற அளவுகோல்களின் அடிப்படையில் அவன் உயர்வும் தாழ்வும் கணிக்கப்படுமே தவிர வேறு எவ்வகையிலும் அல்ல” என்பது நபிகள் நாதரின் நல்லுபதேசத் திரட்டாகும்.

குலமும் கோத்திரமும் அடையாளமே

குலமும் கோத்திரமும் நிச்சயமாக மனிதனின் பெருமைக்கோ சிறுமைக்கோ கடுகளவும் காரணமில்லை. இவை மனிதர்களிடையே அடையாளங்காட்ட அமைந்தனவே தவிர பேதங்காட்ட உருவானவை அன்று என்பதை திருக்குர்ஆன்,

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் ஒர் பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். ஆனால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் எனப் பாராட்டிக் கொள்வதற்கு இல்லை”

(திருக்குர்ஆன் 49:13)

எனத் தெளிவுபட இறைவனே தன் திருமறையில் கூறியிருக்கிறான். எனவே, மனிதர்களிடையே இனங்காட்ட எழுந்த குலப்பிரிவும் கோத்திரக் கிளையும் மனித இனத்தைப் பிளவுபடுத்தவோ பேதம் கற்பித்து ஏற்றத் தாழ்வு பாராட்டவோ எழுந்தவை அல்ல என்பதை மனிதர்கள் நன்கு உணர்ந்து தெளிய வேண்டும்.

மனித குலம் முழுமையும் இறைவனின் குடும்பம்

இஸ்லாத்தைப் பொறுத்தவரை மனிதகுலம் முழுவதையுமே இறைவனின் குடும்பமாகவே வர்ணிக்கிறது. ஜாதி, குல, இன, மொழி, மத, நாடு காரணமாக எழும் எத்தகைய பெருமையையும் இஸ்லாம் அறவே ஏற்கவில்லை. மனித குலம் முழுவதையும் ஒரே இனமாக, ஒரே குலமாகவே காண்கிறது; மற்றவர்களையும் அவ்வாறே காணப் பணிக்கிறது.

இறைவணக்கத்தில் இணையிலா சமத்துவம்

இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை எல்லா வகையிலும் நிலை நிறுத்திய பெருமை இஸ்லாத்தையே சாரும். நாடாளும் மன்னராக இருந்தாலும் அல்லது மாபெரும் தலைவராக இருந்தாலும் அல்லது அன்றைய உணவுக்கு வழியில்லாத பரம ஏழையாக இருந்தாலும் தொழுகைத் தலத்தில் வேறுபாடு சிறிதுமின்றி அடுத்தடுத்து அமர்ந்து தொழுவர். இன்னும் சொல்லப் போனால் முந்தி