இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வந்தவர் முன் வரிசையிலும் பிந்தி வந்தவர் பின் வரிசையிலும் நின்று தொழுவர். முந்தி வந்து வரிசையில் நிற்பவர் ஏழையாயிருப்பின் தொழும்போது பிந்தி வந்து பின் வரிசையில் நிற்பவர் மன்னரேயாயினும் முன்வரிசை ஏழையின் பின்னங்கால்களுக்கு அருகே தலை வைத்து சஜ்தா செய்து தொழ வேண்டும். இஃது முன்பு உலகம் என்றுமே கண்டறியாத உவகப் பெரும் சமத்துவமாகும். ஜனநாயகத்தின் ஆணிவேர் இங்கு அழுத்தமாக அமைகிறது எனலாம். இதை,

‘தொழுகையின்போது எவ்வித வேற்றுமை உணர்வுமின்றி ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து தொழும்போது, அவர்களிடையே ஒன்றுபடும் உணர்வு ஒப்பற்ற சகோதரத்துவ உணர்வாக முகிழ்த்தெழுகிறது’ எனக் கவிதை வடிவில் பாராட்டியுள்ளார் இந்தியாவின் கவிக்குயிலாக விளங்கிய கவியரசி சரோஜினி நாயுடு அவர்கள்.

சமயம் கடந்த தொண்டே இறை வணக்கம்

மனிதர்களில் எவன் சிறந்தவன் என்ற கேள்விக்கு மிக அருமையாக விடையளிக்கிறார் பெருமானார் (சல்) அவர்கள்.

“யாரிடமிருந்து மனித குலத்துக்கு நன்மை கிடைத்துக் கொண்டிருக்கிறதோ அவன்தான் மனிதர்களில் சிறந்தவன்.” எனச் சிந்தைகொள் மொழியில் செப்புகிறார்.

இவ்வாறு, இறைவனின் பிரதிநிதியாக, இறைக் குடும்பமாகிய மனித குலத்தின் அங்கமான மனிதன் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவி தொண்டு, அவர் முஸ்லிமாக இருந்தாலும் அல்லது மற்ற சமயத்தவராக இருந்தாலும் அப்பணியை - தொண்டை ‘இறை வணக்கம்’ என இஸ்லாம் சிறப்பித்துக் கூறுகிறது.இறைக் கூலி எல்லா சமயத்தவர்கட்கும் உண்டு

இறைவனால் படைக்கப்பட்ட மனிதனின் தலையாய நோக்கம் எல்லா வகையிலும் இறையருளைப் பெறுதலேயாகும். இஃது இறை நம்பிக்கையாளர்களின் நற்செயலைப் பொறுத்தமைவதாகும்.

எந்தச் சமயத்தைக் சார்ந்தவர்களாயினும் அவர்கள் நிகழ்த்துகின்ற வினைகளுக்கேற்ற பயனை, அவர்கள் நம்பி வணங்கும் அவ்வச் சமய இறைவனின் பேரருளை, நற்கூலியை அவ்வச் சமயத்தவர் பெறுவர் என்பதை இறை மறையாகிய திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 62-வது வசனம் மிகத் தெளிவாக எடுத்தியம்புகிறது.

“நம்பிக்கையாளர்களாயினும் யூதர்களாயினும் கிறிஸ்தவர்களாயினும் ஸாபியின்களாயினும்-எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உண்மையாகவே விசுவாசித்து, நற்கருமத்தைச் செய்தார்களோ அவர்களுக்கு அவர்களுடைய கூலி, அவர்களுடைய இறைவனிடத்தில் நிச்சயமாக உண்டு. மேலும், அவர்கட்கு எவ்விதப் பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்” என விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது.

மார்க்கத்தில் கட்டாயத்திற்கு இடமே இல்லை

இறையருள் பெற விழைவோர் இஸ்லாமியராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் எச்சமயத்தைச் சார்ந்தோராகவும் இருக்கலாம். அவர்கள் சமயத்தை அவரவர் வழியில் பேண இஸ்லாம் எடுத்துக் கூறுகிறது. இதைப் பற்றி திருக்குர்ஆன்,

“உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் மார்க்கம்” என இயம்புகிறது.இஸ்லாத்தில் இணையுமாறு மக்களை வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ மார்க்கத்தில் அறவே இடமில்லை. இத்தகைய செயலை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பும் ஒருவர் இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கேட்டு, இஸ்லாமிய மார்க்க ஞானத்தை அறிந்து, தெளிந்து அதன் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டு, யாருடைய கட்டாயமுமின்றி தானாகவே இஸ்லாத்தில் இணைய முற்பட வேண்டும். அவ்வாறு தான் பலரும் இஸ்லாத்தில் இணைந்து கொண்டார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு காட்டும் உண்மை. யாரும் இஸ்லாத்தின்பால் இழுக்கப்படவில்லை என்பதுதான் பெருமானார் வரலாறு தரும் செய்தி. ஏனெனில், அவ்வாறு யாரும் கட்டாயச் சூழ்நிலையில் இஸ்லாத்தில் இணைவதை இஸ்லாம் ஏற்க விரும்பவில்லை. மாறாக அத்தகு செயலை எதிர்க்கவும் செய்கிறது. ஏனெனில் அஃது இஸ்லாமியக் கொள்கைக்கு நேர்மாறானதுமாகும். இதுவே திருமறையின் தீர்ப்புமாகும்.

“இஸ்லாத்தில் நிர்ப்பந்தமே இல்லை” (திருக்குர்ஆன் 2:256) என்பது மறைதரும் இறைவாக்காகும்.

“நபியே! நீர் கூறும்: (முற்றிலும் உண்மையான) இவ் வேதமானது உம் இறைவனால் அருளப்பெற்றது. விரும்பியவர் (இதை) விசுவாசிக்கலாம், விரும்பாதவர் (இதை) நிராகரித்து விடலாம்”. (திருக்குர்ஆன் 18:29)

எனக் கூறுவதன் மூலம் இஸ்லாமிய நெறியை ஏற்பதும் ஏற்காது விடுவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்ததாகும். இதற்கான எத்தகு போக்கும் செயலும் இஸ்லாமிய நெறிக்கும் அண்ணலார் வாக்குக்கும் வழி காட்டுதலுக்கும் நேர்மாறானதாகும் என்பது தெளிவு.

இதை மிகத் தெளிவாக விளக்கும் எத்தனையோ எடுத்துக் காட்டுகளை வரலாறு நெடுகக் காணலாமாயினும் குறிப்பிடத்தக்க சம்பவமொன்றைப் பெருமானார் பெரு வாழ்விலிருந்து எடுத்துக் காட்ட விழைகிறேன்.

பிறக்குமுன் தந்தையை இழந்த பெருமானார் ஆறு வயதில் தாயையும் இழந்தார். பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தன. அதன்பின் தன் பெரிய தந்தை அபூத்தாலிபின் அன்பிலும் அரவணைப்பிலுமே வளர்ந்தார்.

இறைக் கட்டளைக்கிணங்க இஸ்லாமிய நெறியைப் பிறருக்குணர்த்தி இஸ்லாமிய நெறியின்பால் இணையத் தூண்டிய பெருமானார் தன் குடும்பத்தைச் சேர்ந்த யாரையுமே கட்டாயப்படுத்தியோ அல்லது அத்தகு சூழலை உருவாக்கியோ இஸ்லாமிய நெறியை ஏற்கச் செய்ததாக வரலாறு இல்லை.

ஹிரா குகையில் முதன் முதல் பெருமானார் பெற்ற இறைச் செய்தியைக் கேட்ட, அவர் வாழ்க்கைத் துணைவி கதீஜா பெருமாட்டியார், அவர் கூறியதில் தானாக நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லிம் ஆனாரேயன்றி, பெருமானார் அவர்கள் ‘கணவன்’ என்ற தன் செல்வாக்கையோ பிற தன்மைகளையோ கையாண்டு இஸ்லாத்தை ஏற்கச் செய்யவில்லை.

இவ்வாறே இஸ்லாமிய நெறியின் மேன்மையையும் உயர்மிகு சிறப்பையும் உணர்ந்து தெளிந்து, தாங்களாகவே முன்வந்து இஸ்லாத்தை ஏற்று, முஸ்லிம்கள் ஆனார்களே அன்றி ஆக்கப்படவில்லை.

ஒரு சொட்டு இரத்தமும் சிந்தாமல் மக்கமா நகரை வெற்றி கொண்டபோதும், மக்காவாசிகள் அனைவரும் தாங்களாக முன்வந்து இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகிய போதும்கூட, பெருமானாரை வளர்த்து ஆளாக்கிய அவரது பெரிய தந்தையார் அபூத்தாலிப் இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டாரில்லை. என்றும்போல் முந்தைய சிலை வணக்கச் சமயத்திலேயே இருந்து வந்தார்.

எண்பது வயதை எட்டிய அவரை இறப்பு நெருங்கி விட்ட நிலையில், படுத்தபடுக்கையாகக் கிடக்கும் தன் பெரிய தந்தை அபூத்தாலிபின் அருகே அமர்ந்திருக்கும் அண்ணலார் விரும்பியிருந்தால் சிறிது வற்புறுத்தி இறுதி நேரத்திலேனும் இஸ்லாத்தில் இணையச் செய்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்வது இறைநெறிக்கு - இஸ்லாமிய மார்க்கத்துக்கு - இறை வாக்குக்கு நேர்மாறான செயலாக அமைந்து விடும் எனக் கருதிய பெருமானார் தன் பெரிய தந்தை அபூத்தாலிபை கடுகளவும் வற்புறுத்த அல்லது அத்தகு சூழலை உருவாக்க சிறிதும் முயன்றாரில்லை. அபூத்தாலிப் இறுதிவரை இஸ்லாத்தை ஏற்காமல், முஸ்லிம் ஆகாமல் முந்தைய சிலை வணக்கச் சமயத்தவராகவே உயிர் நீத்தார் என்பது வரலாறு.

இவ்வாறு, தன் நெருங்கிய உறவினர்களை அணுக்கமாக இருந்தவர்களையே வற்புறுத்தாத, எக்காரணம் கொண்டும் நிர்ப்பந்திக்காத மார்க்கம்தான் இஸ்லாம் என்பதைச் சொல்லால் அல்லாமல் செயலாலும் உலகுக் குணர்த்தியவர் பெருமானார் (சல்) அவர்கள்.

அவரவர் சமயம் அவரவர்க்கு

எந்தவொரு சமயத்தைச் சார்ந்தவர்களும் அவரவர் சமயங்களைப் பேணி ஒழுக வேண்டுமே தவிர, ஒரு சமயத்தைச் சார்ந்தவர் மற்றவர் சமய வழியில் குறுக்கிடு வதை இஸ்லாம் அறவே வெறுக்கிறது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப அவரவர் சமய நெறிப்படி வாழ, சடங்கு சம்பிரதாயங்களைப் பேணி ஒழுகப் பணிக்கிறது.

“உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் சமயம்”

என்ற திருமறை வாசகம் தெளிவாக உணர்த்துவதை முன்பே கண்டோம்.

இதை உலக மக்களுக்கு முழுமையாக உணர்த்தும் வகையில் பெருமானார் (சல்) அவர்கள் தன் வாழ்க்கையில் எடுத்துக்காட்டாகக் கடைப்பிடித்தொழுகிய நிகழ்ச்சி யொன்றைக் காணலாம்.

மதீனாவில் வாழ்ந்து வந்த பெருமானார் அவர்களின் வாழ்வும் வாக்கும் மக்களின் மனதிலே மாபெரும் மாற்றங்களை விரைந்து ஏற்படுத்தி வந்தன. மக்கள் தாங்களாகவே இறை நெறியாகிய இஸ்லாத்தின் மேன்மையை உணர்ந்து, முஸ்லிம்களாகி வந்தனர். முஸ்லிம்கள் மட்டுமல்லாது மற்ற சமயத்தவர்களும் தங்களுக்கு ஏற்பட்டு வந்த ஐயப்பாடு களையெல்லாம் பெருமானாரிடமே கேட்டுத் தெளிவு பெற்று வந்தனர்.

பள்ளி வளாகத்தில் கிருஸ்தவப் பிரார்த்தனை

மதினாவில் நபிகள் நாயகத்தை நேரில் கண்டு பல்வேறு விஷயங்களைப் பேசி விவாதிக்கப் பல்வேறு சமயத் தூதுக் குழுக்கள் வந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்க கிருஸ்தவப் பாதிரியார்கள் குழு நஜ்ரான் எனுமிடத்திலிருந்து வந்திருந்த 70 பேரங்கிய குழுவாகும். இதற்கு முன் வந்த சிறு சிறு குழுக்கள் மதீனாவில் ஆங்காங்குள்ள தனிப்பட்டவர்களின் இல்லங்களிலே தங்கி நாயகத் திருமேனியைக் கண்டு உரையாடி, ஐயந்தெளிந்து செல்வது வழக்கம். ஆனால், பெரும் எண்ணிக்கையில் நஜ்ரானிலிருந்து வந்த இந்தக் கிருஸ்தவப் பாதிரியார் குழு நேரிடையாகப் பெருமானார் (சல்) அவர்கள் இருந்த பள்ளிவாசலுக்கே வந்து விட்டனர். நீண்டநேரம் அண்ணாலாரோடு உரையாடியபோதிலும் பேச்சு வார்த்தை முற்றுப் பெறவில்லை. மேலும், பல விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து பேசி தெளிவுபெற வேண்டியிருந்தது. இதற்கிடையே பாதிரிமார்கள் பிரார்த்தனை செய்வதற்கான நேரம் நெருங்கியது. அவர்கள் வெளியே சென்று பிரார்த்தனை செய்து விட்டு மீண்டும் திரும்பிவர விரும்பினர்.

இதையறிந்த பெருமானார் அவர்கள் “இரண்டு கடவுள்கள் இல்லை; ஒரே இறைவன்தான். அவனை எங்கிருந்தும் வணங்கலாம். நீங்கள் விரும்பினால் இப்பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியிலேயே உங்கள் கிருஸ்தவ சமயச் சடங்கு முறைகளோடு, நீங்கள் பிரார்த்தனை செய்து இறை வணக்கம் புரியலாம்.” எனக் கூறினார். அண்ணலார் மனப் பூர்வமாக அளித்த பிரார்த்தனை அனுமதி பாதிரிமார்களுக்குப் பேருவகை அளித்தது. அண்ணலார் அனுமதித்ததற்கிணங்க பாதிரிமார்கள் பள்ளிவாசல் வளாகத்தின் ஒரு பகுதியில் குழுமி, தங்கள் கிருஸ்தவ மதச் சம்பிரதாயப்படி, சடங்கு முறைகளோடு தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி மகிழ்ந்தனர்.

நஜ்ரானிலிருந்து வந்திருந்த கிருஸ்தவப் பாதிரியார் குழுவினர் மாற்றுச் சமயத்தவர் எனத் தெளிவாகத் தெரிந்திருந்தும் பள்ளிவாசல் வளாகத்திற்குள்ளாகவே இறை வணக்கப் பிரார்த்தனை புரிய அனுமதித்த பெருமானாரின் பெருந்தன்மையும் பிற சமயச் சகிப்புணர்வும் வந்திருந்த கிருஸ்தவப் பாதிரிமார்களுக்கு அண்ணலார் மீது அளவிலா மதிப்புக் கொள்ளச் செய்துவிட்டது. இச்செயல் மூலமே இஸ்லாத்தின் பிற சமயக் கண்ணோட்டம் எத்தகையது என்பதை எளிதாகப் புரிய வைத்துவிட்டார் நாயகத் திருமேனி அவர்கள்.

இஸ்லாம் பிற பிற சமயங்களை வெறுத்து ஒதுக்காத தோடு அவற்றை மதிக்கக் கூடியது என்பதை மாற்றுச் சமயவாதிகளாகிய பாதிரியார்களையே உணர்ந்து தெளிய வைத்து விட்டது.

         “இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும்
          எதிரானது அன்று”

என்பது நாயகத் திருமேனியின் வாக்கமுதாகும்.

ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பி ஏற்ற சமயக் கொள்கைகளைப் பேணி வாழ முழு உரிமை உண்டு என்பதை இஸ்லாமும் அண்ணலாரின் அழகிய முன்மாதிரியான வாழ்க்கையும் வாக்கும் எல்லா வகையிலும் உறுதி செய்கின்றன. இதனைக் கடந்தகால இஸ்லாமிய ஆட்சி வரலாறும் உறுதி செய்கிறது.

இந்தியாவில் ஐந்நூறு ஆண்டுக் காலத்திற்கு மேல் இஸ்லாமிய ஆட்சி நடத்திய முஸ்லிம் மன்னர்கள், மாற்றுச் சமயத்தவர்களின் வாழ்க்கை முறையிலோ சமயச் சார்பான சடங்கு, சம்பிரதாயங்களிலோ தலையிட்டதாக வரலாறே இல்லை. இதற்கான சிறு சம்பவத்தைக்கூட வரலாற்று ஏடுகளில் காண முடியவில்லை. பிற சமயத்தவர்களின் வழக்குகள் அந்தந்தச் சமயத்தைச் சார்ந்த நீதிபதிகளை, சமய ஞானமிக்க வல்லுநர்களைத் துணையாகக் கொண்டே விசாரிக்கப்பட்டன. அந்தந்த மத அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டன என்பதுதான் வரலாறு. பிற சமயத்தவரின் மதப் பிரச்சினைகளில் முஸ்லிம்கள் தலையிடக் கூடாது என்பது நாயக வழிமுறையும் இஸ்லாமிய நெறியுமாகும்.

உமர் (ரலி) வின் ஒப்பற்ற சமயப் பொறை

அண்ணலெம் பெருமானார் மதீனா பள்ளிவாசல் வளாகத்தில் கிருஸ்தவப் பாதிரிமார்களைப் பிரார்த்தனை செய்து கொள்ள அனுமதித்தது போன்றே ஜெரூசலம் நகர கிருஸ்தவ மாதா கோயிலினுள் உமர்(ரலி) அவர்களைத் தொழுகை நடத்த கிருஸ்தவ பாதிரிமார்கள் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்ட அரிய நிகழ்ச்சி வரலாறாகத் தடம் பதித்து, சமய சகிப்புணர்வுக்கு, நல்லிணக்கத்துக்குக் கட்டியங்கூற நிற்பதைக் காணமுடிகிறது.

பெருமானார் (சல்) அவர்கட்குப் பின் இரண்டாவது கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் (ரலி) அவர்கள் அண்ணலாரைப் போன்றே பிற சமயச் சகிப்புணர்வுக்கோர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாக விளங்கி வந்தார் என்பதை வரலாறு வழிமொழிந்து கொண்டுள்ளது.

ஒரு சமயம் ஜெரூசலம் நகரிலுள்ள யூத, கிருஸ்தவ சமயத் தலைவர்களின் அன்பான அழைப்பை ஏற்று அங்கு சென்றார். மூன்று பெரும் சமயத்தவர்கட்கு மிக முக்கிய மான நகராகும் ஜெரூசலம், “பைத்துல் முகத்தஸ் (தூய்மை மிக்க பரிசுத்த நகர்) என முஸ்லிம்களால் போற்றப்படும் ஜெரூசலம் நகருக்கு உமர் (ரலி) வருகை புரிந்தார்.

மிகப் புராதனமான அப் பண்டை நகரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வரும்போது தொழுகைக்கான நேரம் நெருங்கி விட்டது. அப்போது உமர் (ரலி) அவர்களும் கிருஸ்தவ குருமார்கள் சிலரும் ‘சர்ச் ஆஃப் ரிசரக்ஷன்’ எனும் மாதா கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். தொழுகை நேரம் நெருங்கி விட்டதை குறிப்பாக கலீஃபா உணர்த்திய போது உடனிருந்த கிருஸ்தவ குருமார்கள் புகழ்மிகு புராதனமான அத்தேவாலயத்துள்ளேயே தொழுகை நடத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டனர். இதனினும் வசதிமிக்கதான அருகிலுள்ள மற்றொரு மாதாகோயிலான கான்ஸ்டன்டைன் தேவாலயத்தில் தொழுகைப் பாய் விரிக்கப்பட்டிருக்கிறது. விரும்பினால் அங்கு வசதியாகத் தொழுகை நடத்தலாம் எனவும் கூறி வேண்டினர்.

ஆனால், கலீஃபா உமர் (ரலி) அவர்கள் மாதாகோவில்களின் உட்புறத்தே தொழுகை நடத்தாமல் அருகே இருந்த திறந்த வெளியில் தொழுகை நடத்தினார். தொழுது முடித்தபின், தான் ஏன் தேவாலயங்களுள் தொழவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கினார்.

‘நான் உங்கள் அன்பு வேண்டுகோளுக்கிணங்க தேவாலயத்தினுள் தொழுதிருக்கலாம். அவ்வாறு நான் தொழுகை நடத்தியிருந்தால் இன்றில்லாவிட்டாலும் நாளை ஒரு காலத்தில் நான் தொழுத இடம் என்ற காரணம் காட்டி, முஸ்லிம்கள் உரிமை பாராட்டி, அவ்விடத்தில் மசூதி நிர்மாணிக்க முயலலாம். திருக்குர் ஆன் திருமறையின் 22வது அத்தியாயத்தின் 40வது வசனம் “மடாலயங்களையும் மாதா கோயில்களையும் யூதர்களுடைய ஜெபாலயங்களையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு முஸ்லிம்களுக்கு உள்ளது” எனக் கூறி,

“அல்லாஹ் மக்களில் சிலரைக் கொண்டு சிலரைத் தடுத்துக் கொண்டிராவிடில் மடங்கள், கிருஸ்தவ ஆலயங்கள், யூத, ஜெபாலயங்கள், அல்லாஹ்வின் பெயர் அதிக அளவில் கூறப்படும் மஸ்ஜித்கள் ஆகியவை தகர்க்கப்பட்டிருக்கும். திண்ணமாகத் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான்.”

(திருக்குர்ஆன் 22:40)என்ற திருமறை வசனங்களை திருக்குர்ஆனிலிருந்து அப்படியே அவர்களிடம் ஓதிக் காட்டினார். பிற சமயங்களை மதிப்பதோடு அச்சமய ஆலயங்களையும் பாதுகாக்கவும் பணித்த திருமறை வாசகங்களும் அவற்றிற்கேற்ப செயல்பட்ட கலீஃபா உமர் (ரலி) அவர்களின் சமயப் பொறையுணர்வும் இன்றும் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகின்ற பான்மை என்றும் நினைந்தின் புறத்தக்கதாகும்.

இங்கு ஆழ்ந்து கவனிக்க வேண்டிய மிக நுட்பமான மற்றொரு பயன்மிகு செய்தியும் உள்ளது. கிருஸ்தவ குருமார்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இரு மாதா கோயில்களில் ஏதாவதொன்றில் உமர் (ரலி) தொழுகை நடத்தினால், அதைக் காரணம்காட்டி, பின்னால் வரும் முஸ்லிம்கள் ‘உமர் (ரலி) தொழுத தொழுகைத் தலம்’ என உரிமை பாராட்டி மசூதி கட்ட முனைந்தால் மாதா கோயில் பாதிக்கப்பட்டு விடலாம். அதற்கு எக்காரணம் கொண்டும் இடம் தந்து விடலாகாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வோடும், எதற்காகவும் பிற சமயத்தினர் பாதிப்புக்கு ஆளாவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்ற முன்னுணர்வும் இங்கு அரகோச்சுவதைக் காண முடிகிறது.

பிற சமய எதிரிகளை எதிர்கொண்ட பெருமானார்

நபிகள் நாயகம் (சல்) அவர்கள், இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய முனைந்தபோது தன்னைப் பெரும் எதிரியாக எண்ணி மிகக் கேவலமாக நடத்திய பிற சமயத்தவர்களை பெருமானார் மக்காவை வெற்றி கொண்ட பின்னர், மாற்று மதத்தவரை எவ்வாறு நடத்தினார் என்பதை, அண்ணலாரின் வாழ்க்கை வழி அறிவதன்மூலம் ‘அழகிய முன்மாதிரி’ யான அவர்தம் வாழ்வும் வாக்கும் மாற்றுச் சமயத்தவரிடம், ஒரு முஸ்லிம் எம்முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இணையற்ற எடுத்துக் காட்டாக அமைந்துள்ளதை அறியலாம்.

மக்காவில் இறைச் செய்தி பெற்ற பெருமானார் (சல்) அவர்கள் அச்செய்தியைத் தனக்கு மிக அணுக்கமாக இருந்தவர்களிடம் மட்டும் கூறினார். அதைக்கேட்ட அவர்கள் அதை முழுமையாக ஏற்று முஸ்லிமாயினர். அத்தகையவர்களின் தொகையும் விரல்விட்டு எண்ணத் தக்கனவேயாகும். இறைச் செய்தியை-இஸ்லாமிய போதனையை மக்களிடையே உரக்கக் கூறிப் பிரச்சாரம் செய்தவரில்லை பெருமானார் அவர்கள். இரகசியமான கருத்துப் பரிமாற்ற அளவிலேயே அமைந்திருந்தது. இதையறிந்த சிலை வணக்கச் சமயத்தவர்களான மக்கா குறைஷிகள் அண்ணலாரை வெறுப்போடு நோக்கினர். ‘அல்லாஹ் ஒருவன்; அவன் உருவமற்றவன்; இணை, துணை இல்லாதவன்; முஹம்மது அவன் திருத்தூதர்’ என்ற கலிமா எனும் இறைநம்பிக்கைக் கோட்பாட்டை விட்டொழித்து, சிலை வணக்க முறையைக் கைக்கொள்ளுமாறு அண்ணலாரைப் பணித்தனர். தன் இறைக் கொள்கையிலிருந்து கடுகளவும் மாற பெருமானார் மறுத்தபோது ஆசை காட்டினர்; அச்சுறுத்தி எச்சரித்தனர். எதற்குமே இணங்காமல் இஸ்லாமிய நெறி பேணிய பெருமானாரைத் தங்கள் உருவ வழிப்பாட்டுச் சமயத்தை ஒழிக்க வந்த கொடிய விரோதியாகக் கருதி, கொடுமைகள் பல புரிந்தனர். இறுதியில் அவரையும் அவரைச் சேர்ந்த முஸ்லிம்களையும் மக்கத்தை விட்டே வெளியேறும்படியான நிலையை ஏற்படுத்தினர். இஸ்லாத்தைப் பேணி நடக்க இயலா மக்கா முஸ்லிம்கள் தாங்கள் பிறந்த மண்ணைத் துறந்து, சொந்த பந்தம், குடும்பம், சொத்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஓடி தம் விருப்பம்போல் இஸ்லாமிய நெறிப்படி வாழலாயினர்.மக்காவைவிட்டு அண்ணலார் வெளியேறிய எட்டாண்டுகளுக்குப் பின்னர் மக்கா நகரை ஒரு சொட்டு ரத்தமும் சிந்தாமல் பெரும் வெற்றி கொண்டார். மதினா செல்லுமுன் மக்காவில், சிலை வணக்கக் குறைஷிகளால் கொடுக்கப்பட்ட பெருங்கஷ்டமான பதின்மூன்று ஆண்டுகள் உட்பட இருபத்தொராண்டுகளுக்கு மேலாக பெருந் துன்பம் அனுபவித்த பெருமானாரும் பிற முஸ்லிம் தோழர்களும் வெற்றி வீரர்களாக மக்காவிலுள்ள இறையில்லமான ‘காபா’ முன்பாக மாற்றுச் சமயத்தவர்களான மக்காவாசிகள் அனைவரும் குழுமுமாறும் அவர்களோடு பெருமானார் பேச விரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இருபதாண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய நெறியைப் பரப்ப இயலாதவாறு பெருமானாரோடு அடிக்கடி போரிட்டும், பல்வேறு வகைகளில் தாக்குதல் தொடுத்தும், சொத்துகளைச் சேதப்படுத்தியும் அபகரித்தும் பெருங் கொடுமைகளைச் செய்த மக்காவாசிகள் படுமோசமான தோல்வியைத் தழுவிய நிலையில், ஆயிரக்கணக்கான முஸ்லிமல்லாதவர்கள் ‘காபா’ இறையில்லம் முன்பாக கவலையோடும் அச்சத்தோடு குழுமியிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் இஸ்லாமியப் போர் வீரர்களைக் கொண்ட இராணுவம் சூழ்ந்து நின்றது.

அப்போது மதியத் தொழுகை நேரமான ‘லுஹர்’ நேரம், அப்போது பெருமானார் ‘காபா’ இறையில்லம் மீதேறி தொழுகை அழைப்புக்கான அதான் கூறுமாறு கறுப்பு இனத்தவரான பிலால் (ரலி) அவர்களைப் பணித்தார். அவ ரும் உடனடியாகக் ‘காபா’ இறையில்லம் மீதேறி தொழுகை அழைப்பு விடுக்கலானார்.

“அல்லாஹ் பெரியவன்; அல்லாஹ் பெரியவன்; அல்லாஹ்வைத் தவிர வணங்குதற்குரியவர் வேறு யாருமில்லை,” எனத் தொடங்கும் தொழுகை அழைப்பை இனிய உரத்த குரலில் விடுக்கிறார். அப்போது முஸ்லிமல்லாத குறிப்பிட்ட பெருந் தலைவர்களும் அங்கே குழுமி நிற்கின்றனர். அவர்களில் அத்தாப் இப்னு ஆசீத் என்பவர் குறிப்பிடத்தக்க தலைவர். பிலால் (ரலி) அவர்களின் தொழுகை அழைப்பைக் கேட்ட மாத்திரத்தில், தன் அருகே நின்று கொண்டிருந்த தன் நண்பரின் காதுகளில் “நல்லவேளை என் தந்தையார் மறைந்து விட்டார். அவர் உயிரோடு இன்று இருந்திருந்தால், இந்தக் கருங்குரங்கு (பிலால்) ‘காபா’ இறையில்லக் கூரை மீது நின்று தொழுகை அழைப்பு விடுப்பதைக் காணச் சகித்திருக்க மாட்டார்.” என்று கிசுகிசுத்தார்.

அண்ணலார் இமாமாக இருந்து ‘லுஹர்’ தொழுகையை நிறைவேற்றினார். அதன்பின், அங்கே குழுமி நின்று கொண்டிருந்த முஸ்லிமல்லாத சிலை வணக்கச் சமயத்தைச் சார்ந்த மக்காக் குறைஷியர்களை நோக்கி,

‘என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ எனக் கேட்டார்.

இதைக் கேட்டபோது குறைஷிகள் நாணத்தால் வெட்கித் தலை குனிந்தனர். தாங்கள் எதையும் வாய் திறந்து கேட்க தகுதியற்றவர்கள் என்ற எண்ணத்தில் மெளனமாக நின்றனர். அந்த நிலையில் பெருமானார் (சல்) விரும்பியிருந்தால் இருபதாண்டுகளுக்கு மேலாக தனக்குத் துன்பமும் துயரமும் இடையறாது தந்து, வருத்தி வாட்டிய வேற்றுச் சமய விரோதிகள் அனைவரையும் சிரச்சேதம் செய்ய ஆணையிட்டிருக்க முடியும். மக்காவாசிகளாகிய அம் மாற்றுச் சமயத்தினரின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்திருக்க முடியும். தன் அதிகாரத்தின் மூலம் அவர்கள் அனைவரையும் அடிமைகளாக ஆக்கியிருக்க முடியும். இவை எதையுமே அவர் செய்யவில்லை. அவர், மக்கா வாசிகளை ஏறிட்டுப் பார்த்தபோது, வெட்க உணர்வால் குறுகி நிற்கும் அவர்களிடம்,

“எந்தக் குற்றப் பொறுப்பும் உங்கள் மீது சுமத்தாது, உங்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை, வழங்கப்படுகிறது; நீங்கள் செல்லலாம்.”

எனக் கூறி அத்தனை முஸ்லிமல்லாத வேற்றுச் சமய குறைஷிகளை விடுதலை செய்து அனுப்பினார் அண்ணலார்.

இந்தச் சூழலை மனதிற் கொண்டு ஒரு நிமிடம் நாம் சிந்தித்துப் பார்த்தால் பல உண்மைகள் நமக்குத் தெளிவாகப் புலப்படும்.

சற்று நேரத்துக்கு முன்புவரை முஸ்லிமான பிலால் (ரலி) அவர்களின் தொழுகை அழைப்பொலியைக் கூடக் கேட்கப் பொறுக்காமல்-அந்த அழைப்பும்கூட மக்கத்தவர்களைப் பற்றி இல்லாமல் இறைவனைப் புகழும் வாசகங்களை மட்டும் கொண்ட அழைப்பொலியைக் கேட்கப் பிடிக்காத முஸ்லிமல்லாத அத்தாப் இப்னு ஆசீத் எனும் பெரும் தலைவர் ஒரு முஸ்லிமை ‘கருங்குரங்கு’ எனப் பழித்த நிலைமாறி, அண்ணார் கடுகளவுகூடத் தீங்கிழைக்காது, அனைவருக்கும் அளித்த விடுதலை, அத்தலைவரின், அடிமனத்தைத் தொட்டது. ஒரு முஸ்லிமின் உன்னதத்தை அண்ணலார் வழி உணர்ந்த அவர், துள்ளிக் குதித்தவராகப் பெருமானார் முன்வந்து, தன்னையே பெருமானாரிடம் ஒப்படைத்துக் கொண்டவராக, “முஹம்மத்! நான்தான் அத்தாப் இப்னு ஆசீத். இஸ்லாத்தின் மாபெரும் எதிரியாக இருந்தவன். வணங்குதற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் இறைவனின் திருத்தூதர் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்!” எனக் கூறி இஸ்லாத்தில் இணைந்தார். அவர் மட்டுமல்ல, இந் நிகழ்வுக்குப் பின் உள்ளார்ந்த நிலையில் மக்கா நகர மக்கள் அனைவரும் ஓர் இரவுக்குள் இஸ்லாமாயினர் என்பது வரலாறு.

அண்ணலார் அங்கு முஸ்லிமல்லாத மாற்றுச் சமயத்தவரிடம் நடந்து கொண்ட முறையைவிட, அத்தாப் இப்னு ஆசீத் அக்கணமே மனம் மாறி இஸ்லாத்தைத் தழுவியதை விட, நம் கவனத்தை ஈர்க்கும் செயல் அடுத்து நடை பெற்றது. அப்போது அண்ணலார் சிறிதும் தயங்காமல் அத்தாபை நோக்கி,

‘உங்களை மக்காவின் ஆளுநராக நியமித்துள்ளேன்’, என்ற பெருமானாரின் அறிவிப்பே அது. சிறிது நேரத்துக்கு முன்னர்வரை இஸ்லாத்தின் பரம விரோதியாக, நாயகத்தின் பெரும் பகையாளியாகத் திகழ்ந்த அத்தாப் இப்னு ஆசீத் மக்காவின் ஆளுநராக்கப்படுகிறார். அதுவும் இஸ்லாமிய ஆட்சியின் ஏகப் பிரதிநிதியாக புதிய ஆளுநர் நியமித்தபின் மதீனா போர் வீரர் யாருமே வெற்றி பெற்ற மக்காவில் தங்காமல் அனைவரும் மதீனா திரும்பினர்.

இதிலிருந்து பெருமானார் (சல்) அவர்கள் வெளி நாட்டினரிடம், பிற சமயத்தவரிடம் தன் மார்க்கத்தையோ அல்லது தனது இறைக் கொள்கைகளையோ அறவே ஏற்காதவர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதை மேற்கண்ட சம்பவம் மிகத் தெளிவாக எடுத்துக்கூறி விளக்குவதாக உள்ளது.

மனித நேயத்திற்கோர் மாநபி

இஸ்லாத்தின் இறைநெறிக்கிணங்க அண்ணலார் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அரசோச்சி நிற்கும் அரும் பெரும் குணப்பண்பு சமயங்கடந்த சகிப்புணர்வும் மனித நேயமுமாகும்.

மனித குலம் முழுமையும் ஆதாமின் வழி வந்த சந்ததி யினரே என்ற எண்ணத்தில் நாடு, மொழி, மத வேறுபாடின்றி அனைவரையும் நேசிக்கும் இனிய மனம் படைத்தவராக விளங்கினார் மாநபி (சல்) அவர்கள்.

ஒரு சமயம் மதீனா நகருக்கு வெளியிலிருந்து நபிகள் நாயகம் (சல்) அவர்களைக் காணச் சிலர் ஒரு குழுவாக வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் வேற்றுச் சமயங்களைச் சார்ந்தவர்கள். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்தின்பால் கடும் வெறுப்பும் பகையுணர்வும் கொண்டவர்கள். எனினும், மதீனமா நகரின் மாபெரும் சக்தியாக உருமாறிவரும் நாயகத் திருமேனியை நேரில் சந்தித்து, பல்வேறு விஷயங்களைப் பேசி முடிவு காண வந்திருந்தனர்.

வந்திருந்தவர்கள் பெருமானாரோடு நீண்டநேரம் விவாதிக்கவே நேரம் கடந்துவிட்டது. இரவு நேரமாகி விட்டதால் வந்திருந்த மாற்றுச் சமயத்தவர்களை முஸ்லிம்கள் வீட்டிற்கொருவராக அழைத்துச் சென்று விருந்தளிப்பதென முடிவாயிற்று.

குழுவில் வந்திருந்த மாற்றுச் சமயத்தவர்களில் மிகவும் முரடனாகவும் துஷ்டனாவும் தோற்றமளித்த ஒருவன் இருந்தான். அவன் பார்வையையும் முகபாவனையையும் அங்கசேஷ்டைகளையும் கண்ட முஸ்லிம்கள் யாரும் அவனை விருந்துக்கழைத்துச் செல்ல விரும்பவில்லை. இதையறிந்த பெருமானார் (சல்) அவர்கள் அத்துவிட விருந்தாளியைத் தன் வீட்டிற்கு வந்து விருந்துண்ணுமாறு கூறி அழைத்துச் சென்றார்.

அண்ணலாரின் வீட்டார் தங்கள் குடும்பத்துக்கு வேண்டிய உணவை மட்டும் அன்று தயாரித்திருந்தனர். பெருமானார் விருந்துக்காக அழைத்து வந்த விருந்தாளிக்கு அவ்வுணவு வகைகளையெல்லாம் அன்போடு எடுத்துப் பரிமாறினார். அண்ணல் வீட்டைச் சேர்ந்தவர்களும் உண்ண வேண்டுமே என்ற எண்ணமேயில்லாது அனைத்து உணவு வகைகளையும் வயிறு முட்ட உண்டு தீர்த்தான். அவ்வாறு தின்று தீர்ப்பதன் மூலம் அவ்விரவு அவ்வீட்டார் அனைவரையும் பட்டினி போட வேண்டும் என்பது அத் துஷ்ட விருந்தாளியின் நோக்கமாக இருந்தது. அந்த அளவுக்கு மாற்றுச் சமயத்தைச்சார்ந்த அத்துவுடன் முஸ்லிம்கள் மீதும் பெருமானார் மீதும் வெறுப்பும் துவேஷ உணர்வும் கொண்டிருந்தான்.

விருந்து முடிந்தவுடன் ‘உண்ட களைப்புத் தீர’ உயர்தர படுக்கைகளை விரித்த பெருமானார் அதில் சுகமாக உரங்கி காலையில் செல்லுமாறு வேண்டினார். அவனும் அவ்வாறே அங்கே தங்கி உறங்கச் சென்றான்.

அளவுக்கதிகமாக இரவு உணவை உட்கொண்டதால் செரிமானக் கோளாறு ஏற்பட்டு, நள்ளிரவில் வாந்தியும், பேதியும் ஏற்பட்டது. இதனால் அவன் படுத்திருந்த விலையுயர்ந்த படுக்கை விரிப்புகளெல்லாம் அசுத்தமாகி விட்டது. இதனால் விடிவதற்கு முன்பாகவே எழுந்து யார் கண்ணிலும் படாமல் ஓட்டம் பிடித்தான்.

காலை விடிந்தவுடன் விருந்தாளியைக் காணவந்த பெருமானார் அவன் தங்கியிருந்த அறையும் படுக்கை விரிப்புகளும் அசுத்தமாகியிருப்பதைக் கண்டு, நிலையைப் புரிந்து கொண்டு, அறையைச் சுத்தப்படுத்தியதுடன் படுக்கை விரிப்புகளையும் தம் கைப்படத் துவைத்துச் சுத்தப்படுத்தலானார். அச்சமயம் தான் இரவு அவ்வறையில் மறந்து வைத்து விட்டுப் போன விளையுயர்ந்த வாளை எடுத்துச் செல்ல மீண்டும் அத் துஷ்ட விருந்தாளி அங்கு வந்து சேர்ந்தான். அப்போது அவன் அசுத்தப்படுத்திய படுக்கை விரிப்பை நாயகத் திருமேனி தன் கைப்படத் துவைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். வேற்றுச் சமயத்தைச் சார்ந்த, மாறுபட்ட கொள்கை, கோட்பாடு களையுடைய அவ்வேற்று விருந்தாளியின் உள்ளம் நெக்குருகியது.

திரும்பிவந்த விருந்தாளியைக் கண்ட பெருமானார் ஆவலோடு ஒடிச் சென்று, அன்பு மொழி கூறி வரவேற்று அவன் மறந்து வைத்துவிட்டுப் போன வாளை எடுத்து வந்து கொடுத்ததுடன், அவன் உடல் நலனைப் பற்றி மிகவும் அன்போடும் பரிவோடும் கேட்டார். செரிமானக் கோளாறுக்கு மருந்தளிக்கவும் முனைந்தார். தான் நினைத்த தீங்குணர்வுக்கு நேர்மாறாக அன்பும் பரிவும் அரவணைப்பும் காட்டும் நாயகத் திருமேனியின் மனித நேயப் பண்பு, அந்த மாற்றுச் சமயத் துஷ்ட விருந்தாளியைக் கண்ணீர்விடச் செய்தது.

மதீனத்தவரிடையே ஐக்கிய ஒற்றுமை

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் பல்வேறு சமயங்களிடையே காட்டப்பட வேண்டிய சகிப்புணர்வின் மொத்த வடிவமாக வாழ்ந்து வழிகாட்டிச் சென்ற மனிதப் புனிதர் என்பதை அவரது வாழ்க்கை வரலாறு முழுமையும் விளக்குகிறது.

அவரது சமய சகிப்புணர்வின் ஒட்டுமொத்த முழு வெளிப்பாடாக அவரது மதீனா வாழ்க்கை அமைந்தது.

நாயகத் திருமேனி அவர்கள் மதீனமாநகர் வந்து சேர்ந்தபோது, அங்கே பல்வேறு வகைப்பட்ட இன, சமய சமூகத்தவர்கள் வாழ்ந்து வந்தனர். அங்கே ஒளஸ், கஸ்ரஜ் என்ற இரு அரபி இனத்தவர்களும் யூத இனத்தைச் சேர்ந்த பனீ நளீர்கள், பனூ குறைளாக்கல், பனீ கைனூக்சு என்ற பிரிவினர்களும் வாழ்ந்தனர். இவர்களோடு கிருஸ்தவர்கள், சிலை வழிபாடு செய்துவந்த சிறு சிறு சமயப் பிரிவினர்களும் மதீனாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களிடையே ஒற்றுமையோ ஒருங்கிணைந்த உணர்வோ இல்லாதிருந்தது. இனப் பிரிவும் மதப் பிரிவும் அவர்களிடையே பிணக்கையும் பிளவையும் ஏற்படுத்திக் கொண்டேயிருந்ததெனலாம்.

எப்போதாவது ஏதாவது காரணத்தால் இரு சமயத்தவர்களிடையே குழப்பம், சமயச் சச்சரவு, அதன் காரணமாகச் சண்டை ஏற்பட்டால் பெரும் பொருள் இழப்பும் உயிர்ச் சேதமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமைந்து விடும். அப்போதெல்லாம் மற்ற சமயத்தவர்கள் ஒதுங்கி நடுநிலையாளர்களாக இருப்பர். இவ்வாறு ஒவ்வொரு சமயத்தவரும் மற்ற சமயத்தவரின் நலத்தைப் பற்றிக் கடுகளவும் கவலை கொள்ளாதிருப்பர். எல்லோரும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பதில் அக்கறையோ ஆர்வமோ இருந்ததில்லை. இவ்வாறு கொட்டிய நெல்லிக் காய்களாகப் பிரிந்து வாழும் மதீனத்தவர் போக்கு படையெடுக்கும் வெளியாருக்கு நல் வாய்ப்பாக அமைய, அவர்கள் அடிக்கடி மதீனாமீது தாக்குதல் தொடுப்பர். அப்போது கொள்ளையிடுவதும் கொலை செய்வதும் வாடிக்கையான நிகழ்வுகளாக நடந்து வந்தன.

அன்றிருந்த சூழ்நிலையில் அராபிய இனச் சமூகத்தவர்களும் சிலை வணக்கச் சிறுசிறு சமயத்தவர்களும் இஸ்லாத்தை ஏற்றனரேயன்றி, யூத இனத்தவர் அன்றையச் சூழலில் இஸ்லாத்தைத் தழுவ விரும்பினாரில்லை.

இதற்கு ஒரு அடிப்படைக் காரணமும் இருந்தது. தங்கள் யூதத் திருமறை முன்னறிவிப்புச் செய்திருந்த ஒரு புதிய நபியை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். நபிகள்நாயகம் முஹம்மது (சல்) அவர்களே அந்நபி என யூத அறிஞர்களும் வேத விற்பன்னர்களும் கருதினும், புதிய நபி யூதர்களின் நலத்தை மட்டும் கருத்திற் கொண்டு செயல்படாது, பிற சமூகத்தவர் அனைவரையும் சகோதரராகக் கொண்டு செயல்படும் முறை அவர்கட்கு ஒருவித மனக்கிலேசத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியிருந்தது. ஆயினும், அவ்வுணர்வை வெளிக்காட்டிக் கொள்ளாது நாயகத் திருமேனியின் போக்குக்கு இயைபவர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டார்கள். அண்ணலார் இவ்வுணர்வுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக அங்குள்ள அனைத்து இனத்தவர்கட்கும் சமயத்தவர்கட்குமிடையே இணைப்பையும் பிணைப்பையும் ஏற்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.

நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இந்நிலையை முற்றாக மாற்றியமைக்க முற்பட்டார் பெருமானார் அவர்கள். ஒரு தலைமையின்கீழ் அனைத்து இன, சமய, சமூக மக்களை ஒருங்கிணைக்கவும் சமய சகிப்புணர்வோடு ஒன்றுபட்ட நிலையில் செயல்படவுமான சூழலை உருவாக்க விழைந்தார். அதற்கான செயல்திட்டம் வகுத்துச் செயல்படுத்த முனைந்தார்.

உலகின் முதல் சர்வ சமய மாநாடு

மதீனாவிலுள்ள அனைத்து இனத் தலைவர்களையும் சமயக் குரவர்களையும் சமூகத் தலைவர்களையும் அழைத்து, கூட்டம் நடத்தினார். மதீனா நகரிலுள்ள பல்வேறு இன மக்களும் சமய மக்களும் பிளவுபட்டு, பிரிந்து நிற்பதால் விளையும் உள், வெளி பாதிப்புகளை எடுத்து விளக்கினார். வெளியார்கள் எளிதாகத் தாக்குதல் தொடுக்க ஒற்றுமையின்மை எவ்வாறு வாய்ப்பாக அமைகிறது என்பதை எடுத்து விளக்கினார்! இன சமய வேறுபாடு கடந்த நிலையில் நகர மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக அமைவதன் மூலம் சிதறிக் கிடக்கும் மதீனத்தவர் சக்தி ஒருங்கு திரளவும், ஒன்றுபட்ட நிலையில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவுமான சிறப்புமிகு நிலை உருவாகும். அப்போது வெளியார் நம்மைத் தாக்க அஞ்சுவர்; நமக்கு நாமே பாதுகாப்பு சக்தியாகவும் உருவாக முடியும்’, என்றெல்லாம் அறிவுரை கூறினார்.

எப்போதும் சண்டை, சச்சரவுகளால் மிகவும் துவண்டு போயிருந்த பல்வேறு இனத் தலைவர்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் இந்த யோசனை மிகச் சிறந்த ஒன்றாகப் பட்டது. உடனடியாக அண்ணலாரின் ஆலோசனைக் கிணங்க நகர அரசு ஒன்றை அமைக்க ஒப்புதலளித்தனர். ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி எல்லோரையும் ஒன்றுபடுத்த விழையும் பெருமானாரே தலைமை தாங்கி நகர அரசை அமைத்து இயக்குமாறு வேண்டினர். மதீனா நகர அரசுத் தலைவராக அண்ணாலரையே ஒரு மனதாக எல்லோரும் தேர்ந்தெடுத்தனர்.

இவ்வாறு மனிதகுல வரலாற்றிலேயே முதன் முதலாக சர்வ சமய சமரச மாநாட்டைக் கூட்டிய பெருமைக்குரியவராக அண்ணலார் அவர்கள் அமைகிறார். மாறுபட்ட இன, மத கோட்பாட்டாளர்களை ஒருங்கு திரட்டி அவர்கள் அனைவருக்கும் பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நிலையான நலனுக்கு வழி வகுத்த பெருமை பெருமானாரையே சாரும்.

மதீனா நகரின் வரலாற்றிலேயே முதன் முறையாக நகர ஆட்சி அமைப்பும் அதற்கு மக்களின் பிரதிநிதிகளால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையும் அப்போது அமைவதாயிற்று: அதுவும் சமயங் கடந்த நிலையில்.

சமய சகிப்புணர்வை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நகர ஆட்சி அமைப்பு செவ்வனே நடைபெற அண்ணலாரின் தலைமையின்கீழ் எழுத்து பூர்வமான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டன. எழுதப் படிக்கக் கற்காத ஏந்தல் நபியின் முனைப்பால் உருவாக்கப் பட்ட மதீன அரசமைப்புச் சட்டமே உலகில் எழுத்துருவில் உருவாக்கப்பட்ட முதல் சட்டம் என்று இன்றும் சட்ட வரலாறு சான்று கூறிக் கொண்டுள்ளது. இச்சட்டத் தொகுப்பு ஐம்பத்திரண்டு ஷரத்துகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இஸ்லாத்துக்கு முன்னதாக இருந்ததாகக் கூறப்படும் ரோமானிய, கிரேக்க, ஹிந்து, சீனச் சட்டங்கள் எதிலும் காண முடியாத, யாருடைய சிந்தனையிலும் முளைவிடாத அற்புதமான ஷரத்துக்களைக் கொண்ட சட்டத் தொகுப்பாக அது அமைந்துள்ளது.

அனைத்துச் சமயங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையில் நகர நலத்தையும் மக்களின் மேம்பாட்டையும் பற்றிய உணர்வுகள் மட்டும் அரசோச்சும் வகையில் அச்சட்டம் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் பேணி நடக்க இஸ்லாமிய நெறி; யூதர்கள் பின்பற்ற யூத சமயம்; கிருஸ்தவர்களை வழி நடத்த கிருஸ்தவ மதம்; அதேபோன்று அங்கிருந்த சிறு சிறு சமயத்தவர்கட்கும் சிலை வணக்கத்தவர்கட்கும் அவரவர் சமய நெறிமுறைகள் உண்டு. ஆனால், அச் சமயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, மனிதர்கள் என்ற முறையில் அனைவருக்கும் பொதுவான நலன்களை முன்னிலைப்படுத்திச் செயல்பட எவ்வித ஏற்பாடும் இருந்திருக்கவில்லை. இந்நிலையை அடியோடு மாற்ற மதீனா சட்டம் வழியமைத்தது. தங்கள் தங்கள் சமயங்களைப் பின்பற்றி வாழும் அதே சமயம் ஒட்டுமொத்த சமுதாய நலனுக்காக, சமய சகிப்புணர்வுடன் மக்கள் நலத்தை நாடிச் செயல்பட பெருமானாரின் மதீன நகர்ச் சட்டம் வழிவகுத்தது.

அச்சட்டத் தொகுப்பின் பிழிவைக் கீழ்க்கண்டவாறு கூறலாம்:

1. முஸ்லிம்களும் யூதர்களும் கிருஸ்தவர்களும் பிற சமயத்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களைப் போன்று ஒருங்கியைந்து வாழ வேண்டும்.

2. யார் யார் எந்தச் சமயத்தைச் சார்ந்தவரோ அவரவர் சமயத்தைப் பின்பற்றியொழுக முழு உரிமையுள்ளவராவார். ஒருவர் சமய விவகாரங்களில் மற்றவர்கள் அறவே தலையிடக் கூடாது

3. ஏதாவது ஒரு மூன்றாவது கட்சியுடன் போர் ஏற்பட்டால், ஒருவர் மற்றவர் உதவிக்குச் செல்ல வேண்டும். இவ்வுதவி பெறுவதற்கு ஒரு நிபந்தனையும் உண்டு. அதாவது, யார் உதவி கோறுகிறாரோ அவர் மூன்றாவது கட்சியினரால் தாக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும். உதவி கோறுபவர் ஆக்கிரமிப்பாளராக இருக்கக் கூடாது.

4. வெளியாரால் மதீனா நகரம் தாக்கப்பட்டால் அப்போது, சமயம், இனம் பாராது அனைத்து மக்களும் ஒன்றுபட்டு மதீனா நகர் காப்புப் பணியில் ஈடுபடுதல் வேண்டும்.

5. போராயினும் அமைதிக் காப்பாயினும் எந்த ஒரு முக்கிய நடவடிக்கையின்போதும் ஒருவரையொருவர் கலந்தா லோசித்த பின்னரே முடிவுகள் மேற்கொண்டு செயல்பட வேண்டும்.

6. அனைத்துத் தரப்பினரும் மதீனா நகரை புனித மிகு நகராகக் கருதிச் செயல்பட வேண்டும்.

7. அனைவருக்கும் பொதுவான செயற்பாடுகளில் ஈடுபடும் போது எழும் ஐயப்பாடுகளையும் நடவடிக்கைகளில் எதிர்ப்படும் சங்கடங்களையும் நபிகள் நாயகம் (சல்) அவர்களிடம் எடுத்துக்கூறி, அதற்கு அவர் தரும் தீர்ப்பை அப்படியே ஏற்று ஒழுக வேண்டும்.

பல்வேறு சிறப்பம்சங்களைத் தன்னுட் கொண்ட அச் சட்டத்தின்படி அங்குள்ள ஒவ்வொரு சமய, சமுதாயத்தினரும் தங்கள் மனச்சாட்சிப்படி நடக்க முழுச் சுதந்திரம் உண்டு என உத்திரவாதம் அளித்தது. அவரவர் தத்தமது உசிதப்படி சமய சகிப்புணர்வைக் கைக்கொண்டு வாழ முழு உரிமை உண்டு. முஸ்லிம்கள் தங்கள் மார்க்க நெறிப்படி வாழ உரிமை இருப்பது போன்றே யூத சமயத்தவர்களும் கிருஸ்தவ மதத்தவரும் பிற சமயங்களைச் சார்ந்தவர்களும் தத்தமது சமய, ஆச்சார அனுஷ்டானத்தின்படி வாழ முழு உரிமை படைத்தவர்களாவர் என்பதை இச் சட்டம் எல்லா வகையிலும் உறுதிப்படுத்தியது. அதே போன்று தங்கள் தங்கள் சமயச் சூழலுக்குள் ஏற்படும் எத்தகைய விவகாரமாயினும், அதை அவரவர் சமயச் சூழலுக்குள்ளாகவே, தங்கள் சமய அடிப்படையில் தீர்த்துக் கொள்ள வேண்டும் யூத சமய விவகாரங்கள் யூத சமய நெறிமுறைகள் அச்சமயச் சட்டங்களின் அடிப்படையிலேயே தீர்வுகாண வேண்டும். கிருஸ்தவ சமயச் சச்சரவுக்கான தீர்வை கிருஸ்தவ மதச் சட்டங்களின் கீழும், அவ்வாறே பிற சமயத்தவர்களும் தத்தமது சமய நியதிப்படியும் சட்ட அடிப்படையிலும் சமயத் தலைவர்கள் வழங்கும் தீர்ப்பை ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (சல்) அவர்கள் எழுத்து வடிவில் உருவாக்கிய மதீனா நகர்ச் சட்டம் உரிமையும் உத்திரவாதமும் அளித்தது.

சுருங்கக் கூறின் இஸ்லாத்தின் உயிர் மூச்சான சகிப்புத் தன்மையின் அடிப்படையில், பிற சமயக் கண்ணோட்டத்தோடு மதீனா நகர்ச் சட்டம் பெருமானாரால் வடிவமைக்கப் பட்டது. இதனால் சமயக் கண்ணோட்டமும் சமுதாய வாழ்வியல் சிந்தனையும் புறத்தோற்றம் பெற்றன என்றே கூற வேண்டும்.

இச்சட்டத்தின்படியே அன்றையச் செயற்பாடுகள் அனைத்தும் அமைந்திருந்தன என்பதற்குப் பலப்பல எடுத்துக்காட்டுகள் வரலாறு நெடுகிலும் காணக் கிடக்கின்றன.

அவரவர் வேத நெறிப்படி தண்டனை

சர்வ சமயத்தவர்களும் ஏற்றுக் கொண்ட மதீனா நகர்ச் சட்டப்படியே நடப்பதுபோல பாவனை செய்து வந்த யூதர்களில் சிலர் முஸ்லிம்களுக்கும் அண்ணலாருக்கும் மாறுபாடாக நடந்து வந்தனர். அத்தகையவர்களுள் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். இவர் மதீனா முஸ்லிம்களுக்கு எதிராக, மக்காக் குறைஷிகளுக்கு உளவு சொல்லி வந்தவர். இவரைப் பொது நியமப்படி நாயகத் திருமேனி அவர்கள் நாடு கடத்தினார்.

பின்னர், அகழிப் போரின்போது சுமார் 300 யூதர்கள் மதீன மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலில் வெளிப்படையாக ஈடுபட்டு வந்தனர்.

அகழிப் போர் இறுதியில் மாபெரும் வெற்றியாக முஸ்லிம்களுக்கு அமைந்தது. அப்போது ஊரையே காட்டிக் கொடுக்கும் சதிச் செயலில் ஈடுபட்ட யூதர்கள் ஒரு கோட்டையினுள் சிறிதுகாலம் ஒளிந்திருந்து இறுதியில் நாயகம் (சல்) அவர்களிடம் சரணடைந்தனர்.

இவர்களது துரோகச் செயலுக்குண்டான தண்டனையை நாயகத் திருமேனி தானே வழங்காது, யூதச் சமயத் தலைவரிடம் ஒப்படைத்து, யூத வேதாகமப்படி தண்டனை வழங்குமாறு கூறினார். அந்தந்த சமய வேதாகமப்படி அவரவர் சமயத்தவர்கட்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது அண்ணலார் நெறி முறையும் மதீனா நகர்ச் சட்ட நியதியுமாகும்.

பெருமானார் பணித்ததற்கொப்ப மதீனத்தவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்த விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட தேசத் துரோகக் குற்றமிழைத்த 300 பேர் களுக்கும் யூத சமய வேதாகமப்படி, யூத சமயத் தலைவர்கள் மரண தண்டனை விதிக்க, அது அவர்களாலேயே நிறைவேற்றப்பட்டது.

சமயச் சகிப்புத் தன்மையைத் தன் உயிரோட்டமாகக் கொண்ட மதீனா சட்டங்கள் பல்வேறு சமயப் பிரிவினருக்குமான பொதுச் சட்டங்கள் என்ற சிறப்பைப் பெற்றன. இதில் ஒவ்வொரு இனத்துக்கும், தாங்கள் சார்ந்த சமயத்துக்கும் பூரண சுதந்திரம் இருந்தது. எந்தக் கட்டுப்பாட்டையும் எந்த முஸ்லிமல்லாதவர் மீதும் சிறிதும் திணிக்கவில்லை; ஆதிக்க உணர்வையும் காட்டவில்லை. இதையே திருக்குர் ஆன்:

“இன்ஜில் வேதத்தையுடையவர்கள், அதில் அல்லாஹ் அறிவித்திருக்கும் (கட்டளைகளின்) பிரகாரமே தீர்ப்பளிக்கவும்” (5:47) எனத் தெளிவாகக் கூறுகிறது.

இதைப் போன்றே யூதர்களும் பிற சமயத்தவர்களும் தங்கள் வேதமுறைப்படி தீர்ப்பு வழங்க முழு உரிமை பெற்றனர்.

இவ்வாறு, மதீனத் தலைவராக நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இருந்தபோதிலும் அவரவர் சமய வேத நெறிப்படி காரியமாற்ற அவ்வச் சமயத்தினர் முழு உரிமை பெற்றிருந்தனர் என்பதை மேற்கண்ட சம்பவங்கள் தெளிவாக உணர்த்திக் கொண்டுள்ளன.

இஸ்லாத்தின் உட்கிடக்கையை உணர்த்திய சட்டம்

மாற்றுச் சமயங்களை எல்லா வகையிலும் மதிக்கப் பணித்தல், சமயச் சகிப்புத்தன்மை, முழுமையான மதச் சுதந்திரம் ஆகிய சிறப்பம்சங்கள் வாயிலாக பிற சமயங்களை சகோதரச் சமயங்களாக மதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மை நிலையை உட்கிடக்கையை உரத்த குரலில் பறைசாற்றுவதாயமைந்திருந்தது.

சமய ஆதிக்கமின்றி
அனைவருக்கும் சம உரிமை

மதீனா நகர் அரசமைப்புச் சட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ஒரு முஸ்லிமாக, மார்க்கத்தின் ஈடு இணையற்ற தலைவராக இருந்தும் அவரது வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் முஸ்லிம்களுக்கென தனி உரிமைகளோ அன்றி சிறப்புரிமைகளோ எதுவும் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். கடுகளவும் பாரபட்சமின்றி அனைத்துச் சமயத்தவர்களுக்கும் சம உரிமை வழங்கப் பட்டிருந்தது.

மதீனாவின் சாதாரண குடிமகன் வெளியூரைச் சேர்ந்த தன் இனத்தவர் யாருக்கும் அடைக்கலம் அளிக்கலாம். அந்த உரிமை அவருக்கு முழுக்க உண்டு. அவ்வாறு அடைக்கலம் அளிக்கப்பட்டவருக்கு, தான் விரும்பினால் மதீனா நகரில் மற்றவர்களைப் போல வாழ குடியுரிமையும் வழங்கலாம். இதேபோல வெளியூர்க்காரருக்குக் குடியுரிமை வழங்கும் தகுதிப்பாடும் உரிமையும் யூத, கிருஸ்தவ இஸ்லாமிய இனமக்கள் அனைவருக்கும் உண்டு என்பது இச்சட்டத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

அனைத்துச் சமயத்தாருக்கும்
குடியுரிமை தரும் அதிகாரம்

வேற்று நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சகல உரிமைகளோடு கூடிய குடியுரிமை வழங்கும் அதிகாரம் அன்றும் சரி, இன்றும் சரி நாட்டின் மையமான அரசுக்கே சொந்தமான அதிகார உரிமையாகும். ஆனால், அண்ணலார் வழி காட்டுதலில் உருவாக்கப்பட்ட மதீனா நகர அரசமைப்புச் சட்டத்தில் மதீனாவுக்கு அப்பால் இருந்து எப்பகுதியைச் சேர்ந்தவர் வந்தாலும் அவரது இனச் சார்புடையவர்களோ அல்லது சமயச் சார்புடையவர்களோ அடைக்கலம் தந்து அவர்களை மதீனா நகரின் குடிமகன் எனும் உரிமையை அவர்களுக்கு வழங்கலாம். ஒரு யூத இனத்தையும் சமயத்தையும் சார்ந்த மதீனா நகர யூதர் ஒருவர் வேற்று நாட்டு யூதனுக்கு மதீனாவில் அடைகலம் தருவதன் மூலம் மதீனாவில் வாழும் குடியுரிமையை வழங்கலாம். இவ்வாறே ஒரு முஸ்லிமுக்கு ஒரு முஸ்லிமும் ஒரு கிருஸ்தவனுக்கு ஒரு கிருஸ்தவனும் அடைக்கலம் அளிப்பதன் மூலம் குடியுரிமை வழங்க இயலும் என்பது மதீனா நகர் சட்டவிதியாகும். இன்னும் சொல்லப்போனால் அடிமை நிலையிலிருந்து முஸ்லிமானவருக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்கியதென்றால் மதீனா நகர் ஆட்சி, அண்ணலார் தலைமையில் இயங்கி, சமயங்களுக் கிடையே எத்தகைய ஒருங்கிணைவை, சமத்துவத்தை, ஒற்றுமையை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளது என்பது வியப்பூட்டும் செய்தியாக உள்ளது. இப்பெருஞ் சிறப்புக்கு அடித்தளமாக அனைத்துச் சமயங்களும் இறைவனால் அளிக்கப்பட்டவைகளே என்ற திருக்குர்ஆன் கோட்பாடும் அதனைச் செயலளவில் நிலை நிறுத்திய பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டமுமே காரணமாகும்.

இதில் மேலும் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு சிறப்பம்சம் குறிப்பிட்ட சமயத்தின் ஆதிக்கம் என்ற பேச்சுக்கு அறவே இடமில்லாமற் போய்விட்டதுதான். அத்துடன் தனிப்பட்ட மனிதருக்கோ அல்லது மக்கள் குழுமத்துக்கோ அல்லது குறிப்பிட்ட சமூகத்துக்கோ சிறிதளவுகூட ஆதிக்கமோ அல்லது பிறரைத் தன் நலங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் தன்னல வேட்கைக்கோ அறவே இடமில்லை. மனித இனத்துக்கு அமைதிச் சூழ்நிலை உருவாக இதனினும் சிறந்த வழி வேறேதேனும் உண்டோ? இதனை நூற்றாண்டுகளாகியும் கூட இன்னும் நாம் அந்த உயரிய நிலையைப் பெற முடியாது தட்டுத் தடுமாறிக் கொண்டுள்ளோம் என்பதுதான் உண்மை.

மேலும், மனித இனம் என்ற அளவில் அனைத்துச் சமயச் சார்புள்ளவர்களும் தத்தமது இன அல்லது சமயச் சார்பாளர்களை ஏற்றுப் புரக்கவும் அவர்கள் தாம் சார்ந்த சமய உணர்வோடு மற்ற சமயத்தவர்களோடு ஒருங்கிணைந்து அமைதியோடு வாழவும் வழிகாட்டியது மதீனா நகர அரசமைப்புச் சட்டம் என்று கூறலாம்.

சமயத் தேர்வுக்கு முழு உரிமை

மதீனா நகர அரசமைப்புச் சட்டத்தின்படி யாரும் எந்தச் சமயத்தையும் தங்கள் மனச் சாட்சிப்படி தேர்ந்தெடுத்து அதில் இணையலாம். அவ்வாறு இணைவதை எதிர்க்கவோ தடுக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. அதே சமயத்தில் யாரையும் எந்தச் சமயத்தில் சேர வற்புறத்தவோ, கட்டாயச் சூழ்நிலையை உருவாக்கி சமயச் சூழலுக்குள் வலிய இழுக்கவோ கூடாது. தாங்களாகவே முன்வந்து எந்தச் சமயத்தையும் ஏற்கலாம். அதன் அடிப்படையில் சடங்குமுறைகளைப் பேணவும் சமயங்கள் கூறும் நியதிப்படி வாழவும் முழு உரிமை உண்டு.

முழுமையான மதச் சுதந்திரம்

மதீனாவில் பெருமானாரால் உருவாக்கப்பட்ட எழுத்துப் பூர்வமான அரசமைப்புச் சட்டம் பல வகைகளில் இன்றைய உலகுக்கு ஒர் உன்னத முன்னோடிச் சட்டமாக விளங்குகிறதெனலாம்.

முதலாவது முழுமையான மதச் சுதந்திரத்துக்கு முழுமையான உத்திரவாதமளித்தது. அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் குவியுமாறு மையப்படுத்தப்படாமல் சமுதாயம் முழுமைக்குமாக பரவலாக அமையுமாறு பார்த்துக் கொண்டார் பெருமானார் (சல்) அவர்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள் மீது எக்காரணம் கொண்டும் இச்சட்டங்கள் தனி ஆதிக்கம் அல்லது அதிகாரம் செலுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் ஆகும்.

இறுதி வேதமாக இஸ்லாமியத் திருமறையாம் திருக்குர்ஆன் அமைந்திருந்த போதிலும் அஃது கடுகளவும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் திணிக்கப்படவோ அன்றி ஆதிக்கம் செலுத்தவோ அனுமதிக்கப்படவில்லை. அவரவர் சமயச் சூழலுக்குள், தங்கள் வேதவாக்கின்படி கொள்கை கோட்பாடுகளுக்கிணங்க இயங்க முழுமையாக அனுமதிக்கப்பட்டார்கள். கிருஸ்தவர்களோ அல்லது யூதர்களோ அல்லது வேறு சிலை வணக்கச் சமயத்தவர்களோ சமயக் குழுமமாக ஒன்றிணைந்து வாழ அனுமதிக்கப்பட்டனர். தங்களுக்குள் ஏற்படும் சண்டை, சச்சரவுகள், கொள்கை கோட்பாட்டு வேறுபாட்டுப் பிரச்சினைகள் எதுவாயினும் அந்தந்தச் சமயத்தைச் சேர்ந்த நீதிபதிகளைக் கொண்ட வழக்கு மன்றங்கள் மூலம் தங்கள் வேத அடிப்படையிலான சமயச் சட்ட விதிகளின் அடிப்படையில் தீர்வுகாண முழு அளவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உரிய தீர்வு கிடைக்காதவர்கள் இஸ்லாமிய நீதி மன்றத்தை அணுகக் கட்டாயப்படுத்தப் படவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

அவரவர் மதச் சட்ட அடிப்படையில் தீர்வு

இதே முறையைத்தான் இந்தியாவை அறுநூறு ஆண்டுகளுக்குமேல் அரசாண்ட முஸ்லிம் மன்னர்கள், மத அடிப்படையில் எழுந்த எந்தப் பிரச்சினையானாலும் அவற்றை அந்தந்த மதப் பெரியவர்கள்-நீதிபதிகளைக் கொண்டு, அந்தந்த வேதங்களின் அடிப்படையில் தீர்ப்புச் சொல்லித் தீர்வு கண்டு வந்தார்கள் என்பது வரலாறு. ஏனெனில், எந்தச் சமய மக்கள் மீதும் இஸ்லாம் எவ்வித ஆதிக்கத்தையும் செலுத்த அனுமதியில்லை என்பதுதான் உண்மையாகும். இந்த நிலை இந்த இருபதாம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில்கூட செயல்வடிவு பெறவில்லை என்பது எல்லா வகையிலும் வருந்துதற்குரிய தொன்றாகும்.

வணக்கத் தலங்களைக் காப்பதில்
அனைத்துச் சமயத்தவர்க்கும் சமபங்கு

மதீன நகர அரசமைப்புச் சட்டப்படி அவ்வச் சமய சார்புள்ளவர்கள் தங்களது வணக்கத் தளங்களையும் சமயப் புனிதவிடங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒரு சமயத்தவர் மற்ற சமயத்தவர்களின் வணக்கத்தலங்களையும் புனித இடங்களையும் கண்ணியப்படுத்த வேண்டும். பழிக்கவோ இழிவாகப் பேசவோ அறவே கூடாது. இயன்ற வரை மாற்றார் வழிபாட்டுத் தலங்களையும் புனித இடங்களையும் காப்பதில் அனைத்துச் சமயத்தவர்கட்கும் பொறுப்பு உண்டு என்பதையும் அச்சட்டம் வலியுறுத்தத் தவறவில்லை.

இதைவிடச் சமயப் பொறைக்கு, சமரச உணர்வுக்கு எடுத்துக்காட்டான செயலை எங்காவது காண முடியுமா?

மனித குலத்துக்கு இறைநெறி புகட்டி வழிகாட்ட வந்த அழகிய முன்மாதிரியான அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மதீனா நகர அரசமைப்புச் சட்டம் மூலம் சமய சகிப்புத்தன்மைக்கு இணையற்ற எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

இக்கால மக்கள் ஏற்றிப் போற்றத்தக்கவகையில் அன்றே பல்வேறு சமயச் சார்புள்ளவர்கள் சகிப்புணர்வையும் ஒற்றுமையையும் ஒருங்குணர்வையும் வெறும் சொல்லால் அல்ல, எழுத்து வடிவிலான சட்டம் மூலம் நிலை நாட்டிய பெருமைக்குரியவராகத் திகழ்கிறார்.

சமயப் பாதுகாப்பு மட்டுமல்ல
சமூகப் பாதுகாப்பும்

மதீனா நகர அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சம் அங்குள்ள பல்வேறு சமய சமூகத்தவரிடையே சமூகப் பாதுகாப்பை உருவாக்கியதாகும்.

ஏதேனும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் பொருளாதார பாதிப்புக்கு ஆளானால் அச்சமயத்தை அல்லது சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் பாதிக்கப்பட்ட வரை பொருளாதார முட்டுப்பாட்டினின்றும் காப்பாற்றுவது கடமையாகும் எனச் சட்டவிதி கூறியது. இதற்கிணங்க ஒவ்வொரு சமயச் சார்புள்ள சமூகத்தவரும் பாதிப்புக்கு ஆளான மற்றவர்க்கு உதவலாயினர். இதனால் யாரும் பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப்பட்டு. வேதனையுறும் நிலை இல்லாதாக்கப்பட்டது. ஏனெனில், ஒருவருக்கு ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினையை தொடர்புடைய அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையாகக் கருதி ஒருங்கிணைந்து உதவ முன் வந்தனர்.

இன்று ஐரோப்பிய நாடுகளில் உருவாகி செயல்பட்டு வரும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் அன்றைய மதீனா அரசமைப்புச் சட்டத்தின் எதிரொலியாக உருவாக்கப்பட்ட திட்டமே எனக் கூறினும் பொருந்தும். வேலையில்லாத அல்லது வேலை செய்து சம்பாதிக்க இயலாத யாரேனும் ஒருவர் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு, முட்டுப்பாட்டுக்கு ஆளானால் அவருக்கு அரசே உதவித் தொகையாக நிதியுதவி வழங்கிக் காப்பாற்றுகிறது. இதன் மூலம் சமூக அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்கட்கு உதவி துயர் துடைக்கப்படுகிறது.

எண்ணிக்கை பேதமில்லை

மதீனா நகர அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற எண்ணிக்கை பேதம் கடந்த ஒன்றாக, ஆழ்ந்த சமய சகிப்புணர்வுடன், சமூக விழிப்புணர்வோடு மக்களுக்கு எல்லா வகையிலும் உதவியும் ஒத்துழைப்பும் நல்கி நல்லதோர் நகரச் சமுதாயமாக மலர்ந்திருந்தது.

ஒவ்வொரு சமயத்தவரும் மாறுபாடு அல்லது வேறுபாட்டுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் சமயச் சகிப்புணர்வுடன், தங்கள் தங்கள் சமய அடிப்படையில் முழுச் சுதந்திரத்துடன் வாழ்ந்தனர். தங்கள் மத நம்பிக்கையின்படி வாழவும் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வழியேற்பட்டது.

இவ்வாறு, உலகம் என்றென்றும் பின்பற்றி ஒழுகத் தக்க ஓர் உன்னத அரசமைப்புச் சட்டத்தை, முன் மாதிரி சட்ட வரைவைத் தந்து வரலாறு படைத்த பெருமை பெருமானார் அவர்களையே சாரும்.

முஸ்லிம், முஸ்லிமல்லாதாரின்
மனத்தை வருத்தக் கூடாது

ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதாரின் மனத்தை எக்காரணம் கொண்டும் வருத்திவிடக் கூடாது என்பது இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகள் மட்டுமின்றி பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் நமக்கு உணர்த்தி வழிகாட்டும் ஒளிவிளக்காக அமைந்துள்ள ஹதீஸ்கள், இன்றும் இதை நமக்கு எடுத்துக்கூறி விளக்கி வருகின்றன.

அலி(ரலி) அவர்கள் எப்போதுமே இஸ்லாமிய உணர்ச்சி மிக்கவர்; துடிப்புமிக்க முஸ்லிமாவார். ஒரு சமயம் சாலை வழியே நடந்து சென்றார். சிறிது தொலைவில் இவருக்கு முன்னதாக யூத சமயத்தைச் சேர்ந்த யூதர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு யூதருக்குப் பின்னால் அவரைப் பின்தொடர்ந்து செல்பவராக சாலையில் பின்னால் நடக்க விரும்பாமல் விரைந்து நடந்து, அவரை முந்திச் செல்ல முனைந்து தன் நடையை விரைவுபடுத்தினார். தான் விரும்பியவாறே யூதரைக் கடந்து அவருக்கு முன்னால் செல்பவராக முந்திச் சென்றார். வேகமாக நடந்து வந்ததால் மூச்சு இரைக்க பெருமானார் முன்வந்து நின்றார், தன்முன் அலியார் மூச்சு இரைக்க வந்து நின்ற காரணத்தை அலியார் மூலமே கேட்டறிந்த அண்ணலார் மிகவும் மன வருத்தமடைந்தார். அலியாரின் செயல் பெருமானாருக்கு வேதனையளித்தது. மாற்றுச் சமயமான யூத சமயத்தவர் என்ற வெறுப்புணர்வால் அவரைப் பின்னுக்குத் தள்ளி முன்னேவர முனைந்த செயல் தவறானது. இதனால் அந்த யூதர் மனம் வேதனைப்பட்டிருக்கலாம். எனவே, அவரிடம் உடனே அலி (ரலி) சென்று, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுவர வேண்டும் எனப் பணித்தார். அண்ணலாரின் கட்டளைக் கிணங்க அலி (ரலி) அவர்களும் அந்த யூதரிடம் சென்று மன்னிப்புக் கோரி மீண்டார். (ஆதாரம்: நிகாதே ஸர்மதி பக். 46)

இவ்வாறு பிற சமயத்தவர்களிடம் நேரடியாகவோ மறை முகமாகவோ அவர்கள் மனம் புண்படும்படி அல்லது வருந்தும்படி நடந்து கொள்ள முயலக் கூடாது என்பதை அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களும் அவர்கள் போதித்த சத்திய மார்க்கமான இஸ்லாமும் உத்தமமான உயர் பண்பை இன்னும் போதித்து வருவதை அறிய உள்ளம் இரும்பூதெய்துகிறது.

இஸ்லாமிய ஆட்சியில் பிற சமயத்தவர்

பரந்த அரபுப் பகுதி பெருமானாரின் தலைமையின் கீழ் வந்த பின்னரும் இதே அடிப்படையிலேயே இஸ்லாமிய ஆட்சியும் சமுதாயப் போக்கும் வலுவுடன் அமைவ தாயிற்று என்பதை இன்றும் இஸ்லாமிய வரலாறு உணர்த்திக் கொண்டுள்ளது.

நபிகள் நாயகம் (சல்) அவர்களின் காலத்திலும் அவருக்குப் பிறகும் இஸ்லாமிய ஆட்சி வெகு வேகமாகப் பரவியது. அண்ணலாரின் மறைவுக்குப் பிறகு பதினைந்து ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய ஆட்சி ஆசியா, ஐரோப்பா, ஆஃப்ரிக்கா ஆகிய மூன்று கண்டங்களிலும் பரந்து விரிந்து நிலைபெற்றது. இஸ்லாமிய ஆட்சி விரிவாக்கத்தின்போது மக்களிடையே பெரும் எதிர்ப்போ கலகமோ இல்லை என்பது வியப்பளிக்கும் செய்தியாகும். இதைப்பற்றி பெல்ஜியப் பேராசிரியர் லாமென்ஸ் கூறும்போது, “அபூபக்ரின் படை சிரியாவை ஆக்கிரமித்தபோது மக்களிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் ஏற்படவில்லை. எதிர்ப்பில்லா வெற்றியாகவே அமைந்தது. அது மட்டுமல்ல, அபூபக்ரும் அவரது படையினரும் நாட்டின்மீது படையெடுத்து வந்தபோது அந்நாட்டின் குடிமக்களான கிருஸ்தவர்கள் படையெடுப்பாளர்களை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்ற தாக டச்சு வரலாற்றுப் பேராசிரியர் தெ கொயெஜி குறிப்பிடுகிறார்.

கிருஸ்தவ ஆட்சியில் இல்லா
மதச் சுதந்திரம் இஸ்லாமிய ஆட்சியில்

நான்காவது கலீஃபாவான அலி (ரலி) அவர்களின் ஆட்சியின்போது பைஸாந்தியப் பகுதி முழுமையும் வெற்றி கொள்ளப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்த முஸ்லிம்களிடையே உள்நாட்டுப் போர்ச் சூழல் உருவாகியது. இந்த அரிய வாய்பைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு இழந்த பகுதியை மீண்டும் பெற்றுவிட விரும்பிய கிருஸ்தவப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்ட் இஸ்லாமியப் பகுதியிலிருந்த கிருஸ்தவர்களுக்கு ஒரு இரகசியச் செய்தியை அனுப்பினார். அதில் “இப்போது ஒரு அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. உங்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுங்கள். அதே சமயத்தில் நானும் என்னுடைய படையை உங்களுக்குத் துணையாக அனுப்பி வைப்பேன். நாம் நம்முடைய பொது எதிரியாகிய முஸ்லிம்களை விரட்டியடித்து நாட்டைவிட்டே வெளியேற்றி விடலாம்” எனப் பேரரசர் கூறியிருந்தார். இக் கடிதத்தை பெற்ற பைஸாந்திய கிருஸ்தவர்கள் “உங்களுக்கு வேண்டுமானால் அவர்கள் (முஸ்லிம்கள்) நம் சமய விரோதிகளாகப் படலாம் ஆனால், முஸ்லிம்களின் ஆட்சியின்கீழ் வாழும் கிருஸ்தவர்களாகிய நாங்கள் ஒரு கிருஸ்தவ ஆட்சியின்கீழ் பெற முடியாத முழுமையான மதச் சுதந்திரத்தோடு வாழ்கிறோம். முஸ்லிம்களுக்கிடையே மோதல் இருந்தபோதிலும், அதனால், கிருஸ்தவர்களின் மதச் சுதந்திரம், மகிழ்ச்சியான வாழ்வு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. எனவே, உங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் கிருஸ்தவ சமயச் சுதந்திரத்தையோ எங்களது நிம்மதியையோ கெடுத்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை,” எனப் பதிலளித்தனர் என்பது வரலாற்றுச் செய்தி.

மாலிக் கபூர் படைக்கெதிராக
தமிழ் முஸ்லிம்கள்

இதே போன்ற ஒரு நிகழ்ச்சி நம் தமிழகத்திலும் நடை பெற்ற வரலாற்றுச் சான்று இன்றும் கட்டியங்கூறிக் கொண்டுள்ளது.

தமிழகம் வந்த முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கை நெறியாலும் வாழும் முறையாலும் மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல நாடாளும் மன்னர்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் விளங்கினர். இதன் விளைவாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் போர்ப் படையில் அங்கம் பெற்றிருந்தனர். மைசூரை ஆண்டுவந்த ஹொய்சாள மன்னன் வீர வல்லாளனிடம் அறுபதினாயிரம் முஸ்லிம் வீரர்கள் அவன் போர்ப்படையில் போர்வீரர்களாகப் பணியாற்றி வந்தனர் என இப்னு பதூதா குறிப்பிட்டுள்ளார்.

போர்ப் படையில் மட்டுமல்ல, நாட்டு நிர்வாகத்திலும் முக்கியப் பொறுப்புகளில் முஸ்லிம்கள் அங்கம் பெற்றிருந்தனர். பாண்டிய நாட்டை ஆண்டு வந்த ஜாதவர்மன் சுந்தர பாண்டியனின் தலைமையமைச்சராக சையத் தகிய்யுத்தீன் என்பவர் பணியாற்றி வந்தார். போர்ப்படையின் தலைமைப் பொறுப்பும் அவரிடமே இருந்து வந்தது. இவருடைய சகோதரர் சையித் ஜமாலுத்தீன் என்பவர் போர்த் தளபதியாக இலங்கை மன்னன் பராக்கிரமபாகு மீது படையெடுத்துச் சென்ற படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற பெருமைக்குரியவர். சீனமன்னன் குப்ளாய் கானின் அரசவையின் பாண்டிய நாட்டின் தூதுவராக அமர்ந்து பணியாற்றியுள்ளார்.

இக் காலகட்டத்தில் அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தான்.

பாண்டிய நாட்டைப் பொறுத்தவரை தலைமையமைச்சர் ஒரு முஸ்லிம் படைத் தளபதி மட்டுமல்ல, படை வீரர்களில் பல்லாயிரவர் முஸ்லிம்கள் என்ற நப்பாசையில் இப்படையெடுப்பை மேற்கொள்ள விழைந்தான்.

இவ்வுணர்வின் அடிப்படையில் சையித் தகிய்யுத் தீனுக்கு ஒரு இரகசியக் கடிதம் அனுப்பினான் மாலிக்கபூர். அதில், தாம் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையைத் தாக்கப் போவதாகவும் அதில் முஸ்லிம் என்ற முறையில் போரிடாமல் முஸ்லிம் வீரர்களோடு ஒதுங்கியிருக்கு மாறும் வேண்டி கடிதம் அனுப்பியிருந்தான். இதைப் பெற்று, கடுங்கோபம் கொண்ட சையித் தகிய்யுத்தீன் உடனே மறுமொழியாக, “நாங்கள் பாண்டிய நாட்டின் குடிமக்கள். இந்நாட்டு உப்பைத் தின்று வளர்ந்த நாங்கள் எக்காரணம் கொண்டும் இம்மண்ணுக்குக் கடுகளவும் துரோகமிழைக்க மாட்டோம். நாங்கள் உங்கள் படையைப் போர்க் களத்தில் சந்திக்கத் தயாராக உள்ளோம்” என்று சூளுரைத்துக் கடிதம் எழுதியதோடு படையெடுத்து வந்த மாலிக்கபூரின் படையை எதிர்த்து உக்கிரமாகப் போர்புரிந்தனர் முஸ்லிம்கள் என்பது வரலாறு.

இவ்வாறு முஸ்லிம்கள் எந்த மண்ணில் வாழ்கிறார்களோ அந்த மண்ணுக்கு நன்றியுள்ளவர்களாக, அங்கு ஏற்படும் வெற்றி தோல்விகளைத் தங்கள் வெற்றி தோல்விகளாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பது தான் வரலாற்றுச் செய்தி.

அழிக்கத் தூண்டிய உட்குழுப் பூசல்

பைஸாந்தியப் பேரரசு ஆட்சியானது கிருஸ்தவ ஆட்சியாயினும் சமய உட்குழுப் பற்றுடையவர்களின் ஆட்சியாகவே நடந்து வந்தது. ஆகவே ஆளும் பேரரசர் கிருஸ்தவ சமயத்தின் எப்பிரிவைச் சார்ந்துள்ளாரோ அதைத் தவிர அதே கிருஸ்தவ மதத்தின் பிற பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு எதிரான முறையிலேயே செயல்பட்டு வந்தனர். தங்கட்கு மாறுபட்ட, மாற்றுப் பிரிவைச் சார்ந்த கிருஸ்தவர்களை அழித்தொழிக்கவும் தயங்கவில்லை என்றால் மாற்றுச் சமயத்தவர்களின் நிலை எத்தகையது என்பதைப் பற்றிக் கூற வேண்டியதில்லை.

இதற்கு அன்றையச் சூழ்நிலையில் கிருஸ்தவ ஆட்சியாளர்களிடையே மாறி மாறி ஏற்பட்டு வந்த கிருஸ்தவ சிலை வணக்கப் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாகும். இதற்கான பின்னணியை வரலாற்று அடிப்படையில் அறிவது அவசியம்.

உருவ வழிபாடு கற்பித்த கிரேக்கர்

உலகிலேயே உருவ வழிபாட்டிற்கு ஊற்றுக்கண்களாக விளங்கியவர்கள் கிரேக்கர்கள் என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே தங்கள் நாட்டின் மாமேதைகளுக்கும் வீரர்களுக்கும் தியாகிகளுக்கும் உருவம் அமைத்து அவர்களின் நினைவை என்றென்றும் போற்றிக் காக்க முனைந்தார்கள். நாளடைவில் இவ்வறிஞர், வீரர் சிலைகளை வணக்கத்திற்குரியவைகளாக மாற்றி வணங்கத் தொடங்கினர். இம்முறையை அவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் பரப்பினர் எனக் கூறப்படுகிறது.

கிரேக்கர் என்றைக்கு இந்தியாவின் சிந்துச் சமவெளி யில் கால் பதித்தார்களோ அப்போதே அப்பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்த ஆரியர்கட்கு உருவ வழிபாட்டு முறையைக் கற்றுக் கொடுக்கலாயினர். பின்னர் ஆரியர்கள் எங்கெல்லாம் பரவினார்களோ அங்கெல்லாம் உருவ வழிபாடும் பரவலாயிற்று. இதுதான் இந்தியாவில் உருவ வழிபாடு தோன்றிய வரலாறு என சில வரலாற்றாசிரியர்கள் ஆராய்து கூறியுள்ளனர்.

கிருஸ்தவ சமயமும் உருவ வழிபாடும்

யூத சமயம் இறைவனுக்கு உருவம் அமைப்பது அறவே கூடாது எனக் கூறியது. உருவ வழிபாட்டுப் பழக்கமுள்ள கிரேக்கர்கள் யூத சமயத்தில் புதிதாக இணைத்தாலும் மற்ற யூதர்கள் அவர்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளாது எண்ணெயும் தண்ணீரும் போலவே பட்டும் படாமலும் வைத்திருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் கிரேக்க யூதர்களை மற்ற யூதர்கள் ஒருவகையில் வெறுத்து வந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

கிருஸ்தவ சமயம் தோன்றிய பின்னர் கிரேக்கர்கள் பெருமளவில் கிருஸ்தவத்தில் இணைந்தனர். கிரேக்க யூதர்களும் கிருஸ்தவத்தில் சேர்ந்தனர். புதிய கிரேக்க கிருஸ்தவர் தங்கள் கிரேக்கப் பண்பாட்டிற்கொப்ப கிருஸ்த சமயத்திலும் உருவ வழிபாட்டை நுழைக்கலாயினர். தங்கள் முன்னோர்களை சிலை வடிவில் வணங்கி வந்த கிரேக்கர்கள் கிருஸ்தவத்தில் இணைந்த பிறகு இயேசு கிருஸ்துவுக்கும் அவர் தாயார் மரியத்திற்கும் சிலை வடித்து வணங்கத் தொடங்கினர். புதிதாகத் தங்கள் சமயத்திற்கு வந்து இயேசுவையும் மரியாவையும் சிலை வடிவில் வணங்கிக் கெளரவிப்பதாகக் கருதிய பாதிரிகளும் வாளாவிருந்து விட்டனர். இதனால் காலப்போக்கில் கிருஸ்தவ சிலை வணக்கமுறை அழுத்தமடையலாயிற்று. கி.பி.3ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டன்டைன் மன்னர் சர்ச்சுகளில் சிலை வணக்க முறையை ஆதரித்து ஆணை பிறப்பித்தார். கி.பி 754இல் 3வது லியோ மன்னன் சிலை வணக்க முறையை கடுமையாகத் தடை செய்தார். கி.பி 787இல் 6வது கான்ஸ்டன்டைனின் தாயாரான கிரேக்க,