இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/6

விக்கிமூலம் இலிருந்து

இதைக் கேட்டு ஆர்வத் தூண்டலால் உந்தப்பட்ட நான் பொறுமை இழந்தவனாக, ‘விவரமாகக் கூறினால் தானே தெரியும்’ எனக் கூறி முடிக்குமுன் அவர் கூறினார்.

“அப்போது உமர் (ரலி) ஆட்சி அரபகத்தில் நடந்து வந்தது. உலகெங்கும் இஸ்லாத்தைப் பரப்பவும் அண்டை நாடுகளின் நட்பை, நல்லெண்ணத்தைப் பெறவும் அவரது தூதுவர்கள் எங்கும் சென்றனர். “தாங்கள் யாருக்கும் எச்சமயத்தவர்கட்கும் எதிரானவர்கள் அல்ல; எங்கள் மார்க்கமான இஸ்லாம் எந்த ஒரு சமயத்துக்கும் எதிராக உருவானதல்ல என்பதை உணர்த்தும் வகையில் இம்மாதா கோயிலின் மண்டபத் தூண்கள் பன்னிரண்டும் உருவாக உதவியவர் உமர் (ரலி) என்பது வரலாற்றுச் செய்தி” எனப் பாதிரியார் உருக்கமாக விளக்கியபோது என் கண்கள் பனித்துவிட்டன. எவ்வளவு பரந்த மனப்பான்மையோடும் சகிப்புணர்வோடும் பிற சமயங்களை அணுகியிருக்கிறார்கள். பிற சமயங்களை சகோதர சமயமாகக் கருதும் சமயப் பொறையும் கண்ணோட்டமும் அண்ணலாரின் வழிமுறையாகவும் திருமறை புகட்டும் வாழ்வியல் நெறியாகவும் அமைத்து வழிகாட்டும் தகைமையை நெஞ்சார நினைத்துப் போற்றினேன்.

இந்தியச் சமயங்களில் இஸ்லாமியத் தாக்கம் எத்தகையது என்பதை அறியுமுன் இந்தியக் கலாச்சாரத்தின் தனித் தன்மை எத்தகையது என்பதை அறிவது அவசியமாகும். அப்போது தான் இந்தியப் பண்பாட்டின் சகிப்புத் தன்மையையும் இஸ்லாத்தின் சமயநல்லிணக்கப் பண்பையும் நாம் உய்த்துணர முடியும்.


என்றும் உயிர்ப்புடன் விளங்கும்
இந்தியக் கலாச்சாரம்

உலகிலுள்ள மிகப் பழமையான கலாச்சாரப் பண்பாடுகளிலேயே உயிர்ப்புடன் இன்றும் வாழ்ந்து வருவது இந்தியப் பண்பாடேயாகும் என்பது வரலாறு தரும் பேருண்மையாகும். இந்தியாவைப் போல பழைமையான பண்பாடுகள் பல உண்டு. கிரேக்கக் கலாச்சாரமும் ரோமப் பண்பாடும் எகிப்து நாகரிகமும் இன்றும் நம்மை வியக்க வைப்பவைகளாகவே உள்ளன. ஆனால், அதனை வரலாற்று ஏடுகளிலும் ஆங்காங்குள்ள பழஞ்சின்னங்களிலும் சிதைவுகளிலும் மட்டுமே காணமுடிகிறதே தவிர ஆங்காங்குள்ள மக்களின் வாழ்விலோ சமுதாயப் போக்கிலோ அதன் சாயல்களைக் கூட இன்று காண இயலவில்லை. இவையெல்லாம் சில நூறு ஆண்டுகட்கு முன்பு உருவான புதிய கலாச்சார, நாகரிகப் போக்குகளை ஏற்று முந்திய கலாச்சாரப் போக்குகளை முழுமையாகக் கைவிட்டு விட்டன. இன்றையப் போக்குக்கும் அன்றையப் போக்குக்கும் தொடர்பே இல்லாத நிலை உருவாகியுள்ளதை வரலாறாக மட்டுமே அறிய முடிகிறது.

இந்தியாவை அடுத்துள்ள எல்லா வகையிலும் பழம் பெருமைக்குரிய பெருநாடாக அமைந்திருப்பது சீனாவாகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கலாச்சார, நாகரிகத்தை அண்மைக் காலம்வரை இடையறாது பெற்றிருந்த நாடும் கூட. ஆனால் அண்மைக்கால அரசியல், பொருளாதார, கலாச்சார மாறுதல்களின் விளைவாகப் பழையவற்றை ‘கலாச்சாரப் புரட்சி’ என்ற பெயரால் அறவே விலக்கி, புதிய போக்கை உருவாக்கிக் கொண்டு விட்டது. அங்கும் பழைமைக்கும் புதுமைக்குமிடையே விரைவாக விரிந்த இடைவெளி ஏற்பட்டு வருகிறது. அவ்வகையில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தன் பழமைச் சிறப்பை இழக்காமல் புதுமைப் போக்குகளையும் இணைத்துக் கொண்டு தன் தனித் தன்மையை இழக்காமல் சிறப்போடு விளங்கி வருவது இந்தியக் கலாச்சாரம் மட்டுமே என்பது மாபெரும் வரலாற்று உண்மையாகும். இதற்குக் காரணம் என்ன?

‘யார்’ என்பதை விட ‘என்ன’ என்பதே
இந்திய பண்பாட்டின் தனித்தன்மை

இந்தியப் பண்பாட்டின் தனிப்பெரும் சிறப்பு அஃது ‘யார்’ என்று பார்ப்பதைவிட ‘என்ன’ என்பதில் மட்டுமே அதிகம் கருத்தூன்றுவதைத் தன் இயல்பாகக் கொண்டிருப்பதுதான். உலகத்துப் பண்பாடுகள் அனைத்துமே இங்கே வந்து சங்கமித்திருக்கின்றன. உலகிலுள்ள சமயங்கள், அவற்றின் தத்துவச் சிந்தனைகள், கொள்கை கோட்பாடுகள் அனைத்துமே இங்கே வந்து தடம் பதிக்கத் தவறவில்லை. அப்போதெல்லாம் அவற்றிலுள்ள நல்லன சிலவற்றை தன் போக்கில் உருமாற்றித் தனதாக்கிக் கொள்ள இந்தியக் கலாச்சாரம் தயங்கியதே இல்லை. இதன் மூலம் காலந்தோறும் மாறி வரும் புதிய போக்குகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் புதுப்பித்துக் கொண்டே வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதனால்தான் உலகத்துப் பண்பாட்டுச் சிறப்புக் கூறுகளின் சாயலை, உலகத்துச் சமயங்களின் அடிப்படைத் தனித்தன்கைகளை யெல்லாம் இந்தியத் தத்துவ, கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளில் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருவதைக் காணமுடிகிறது என வரலாற்று ஆய்வாளர்கள் பெருமையோடு குறிப்பிடுகிறார்கள்.

சகிப்புத்தன்மை எனும் தனிப் பெரும் தகைமை

இவ்வாறு காலந்தோறும் புதுப்புதுச் சிந்தனைகளைத் தன்னுட் கொண்டு புத்துயிர் பெற்றுவரும் பாரதப் பண்பாட்டின் அடித்தளப் பண்பாட்டு கூறாக அமைந்திருப்பது ‘சகிப்புத்தன்மை’ எனும் தனிப்பெரும் சக்திமிகு பண்பாடாகும். இந்தியப் பண்பாட்டின் வளர்ச்சி வரலாறு பல்வேறு தத்துவ, கலை, பண்பாடுகளின் கலப்பு-இணைப்பு-பிணைப்பு என்பதாகவே உள்ளது. இதனாலேயே பிற நாடுகளின் பழம்பெரும் பண்பாடுகள் தத்துவச் சிந்தனைகள் எல்லாமே இறப்பைத் தன்னுட்கொண்டு மறைந்துவிட்ட போதிலும் இந்தியப் பண்பாடு, கலை, கலாச்சாரம், தத்துவச் சிந்தனைகள் கால வெள்ளத்தை எதிர்த்து இன்றும் ஆற்ற லோடு விளங்கி, உலகுமுன் உயிர்ப்புடன் இருந்து வருகின் றன என்றால் அதற்குரிய ஆணிவேறாக அமைந்திருப்பது ‘சகிப்புத் தன்மை’ எனும் தனிப்பெரும் பண்பாடாகும்.

ஹிந்து மதத்தை மேலை உலகுக்குணர்த்திய அல்புரூனி

அசோகர் தன் தூதர்கள்மூலம் கிழக்காசிய நாடுகளில் புத்த சமயத்தை மட்டும் பரப்பவில்லை; அத் தூதுவர்கள் மூலம் இந்தியத் தத்துவங்களும், கலாச்சார, பண்பாடுகளும் பரப்பப்பட்டன. ஆனால், மேலை நாடுகளில் இந்தியச் சமயங்களை தத்துவ சித்தாந்தங்களை, கலை, கலாச்சார, பண்பாட்டுச் சிறப்புகளை உலகறியச் செய்யும் மூலவராக ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு அமைந்திருந்தவர் அல்புரூனி எனும் முஸ்லிமாவார். “ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு உலகப் பேரறிஞர்களாக விளங்கியவர்கள் இருவர். அவர்கள் அல்புரூனியும் அவிசென்னாவும் ஆவர்” என யுனெஸ்கோ போற்றியுள்ளது. புகழ்பெற்ற வரலாற்று தத்துவ மேதையான அல்புரூனி ஒருமுறையல்ல, பலமுறை இந்தியா வந்து, வேதம் உட்பட இந்தியத் தத்துவச் சிந்தனைகளை மிக நன்றாக உணர்ந்து தெளிந்து, கலை, பண்பாட்டுத் தனித் தன்மைகளை நுணுகி ஆய்ந்து, அவற்றின் சிறப்புகளை யெல்லாம் அரபு மொழியில் பெருநூலாக எழுதினார். இவற்றை முஸ்லிம்கள் அறிந்ததோடு நில்லாது இந்நூல் லத்தீன், கிரேக்க மொழிகளில் பெயர்க்கப்பட்டது. பின்னாளில் இவை ஸ்பெயின் நாட்டில் டோலடோ நகரில் மொழிபெயர்ப்புக்கென்றே உருவாக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் முதலான ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவ்வாறு பல நூறு ஆண்டுகட்கு முன்பே முதன் முதலாக இந்தியத் தத்துவங்களை, ஹிந்து சமயம், கலை, கலாச்சாரத்தை, பாரதப் பண்பாட்டு மேன்மைகளை மேலை உலகு தெளிவாக அறிந்து கொள்ள கதவு திறந்துவிட்ட பெருமை இஸ்லாமியரான அல்புரூனி அவர்களையே சாரும் என வரலாற்றறிஞர்கள் இன்றும் புகழ்ந்து எழுதி வருகிறார்கள்.

இந்தியா வந்த பல்வேறு இனத்தவர்

இந்தியாவிற்கு உலகெங்கணுமிருந்து பல்வேறு இனத்தவர்கள் அடுத்தடுத்து வந்து இந்தியப் பண்பாட்டில் தங்கள் செல்வாக்கையும் தாக்கத்தையும் ஏற்படுத்தினர்.

வேற்று இனப் படையெடுப்பாளர்களாக முதலில் வந்தவர்கள் ஆசிய இனத்தவர் (கி.மு.2500). தொடர்ந்து பாரசீகர்கள், கிரேக்கர்கள், பார்திகன்ஸ், இஸ்கெதியன்ஸ், ஹுணர்கள், அராபியர்கள், பட்டாணியர்கள், முகலாயர்கள், அஹோம்ஸ், போர்த்துக்கீசியர், ஆங்கிலேயர்கள் ஆகிய பல்வேறு இனத்தவர்களின் வருகையின் மூலம் அவர்தம் சமய, வாழ்வியல், கலை, இலக்கிய, பண்பாட்டு முறைகள் இந்திய வாழ்வியல் துறைகள் அனைத்திலும் அழுத்தமாகப் படிந்தன.

கலை, இலக்கிய வளர்ச்சியில் திருப்புமுனை

ஆட்சி மொழியாக இருந்த பார்சி, அரபி இவைகளோடு, சமஸ்கிருதமும் கலந்த கலப்பு மொழியாக உருது அமைந்தது. பார்சி, அரபி மொழிகளுக்கு மிகுந்த ஆதரவு அரசால் அளிக்கப்பட்டது. இவ்விரு மொழிகளிலும் சமஸ்கிருத நூல்கள் பலவும், உபநிஷத், பகவத் கீதை போன்றவை பாரசீக மொழியில் பெயர்க்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டன.

கட்டடக் கலையும் இசை, ஓவியக் கலைகளும் இஸ்லாமியப் பண்பாட்டின் அடிப்படையில் அமையலாயின. அராபிய மருத்துவ முறையான யுனானி இந்திய மருத்துவத்துறையில் செல்வாக்குப் பெற்றது. அதே போன்று எழுத்துக்கலை (Calliography)யும் கைத்தறித் தொழில் துறையும் தனி முத்திரை பதித்து இந்தியத் தொழில்துறை வளர்ச்சிக்கு வளமூட்டின.

இந்திய மன்னர்களான முஸ்லிம் அரசர்கள்

இந்தியாவின்மீது வெளிநாட்டாரின் படையெடுப்புகள் பல்வேறு வடிவங்களில், வகைகளில் அமைந்தன. வைதீக சமயத்தவர்களான ஆரியர்கள் படையெடுப்பாளர்களாக வந்தபோதிலும் இங்கேயே நிரந்தரக் குடிகளாக ஆனார்கள். பின்னர் இஸ்லாமியர்கள் வந்தார்கள். அவர்கள் முதலில் வணிகர்களாகவும் மாலுமிகளாகவும் வந்தார்களேயன்றி நாடாளும் நோக்கில் வரவில்லை. சிந்துவை ஆண்ட மன்னன் அங்கு வாணிகம் செய்துவந்த அரபு வணிகர்களுக்குப் போதிய பாதுகாப்புத் தரத் தவறியதால்தான் முஹம்மது பின் காஸிம் என்பவர் முதன்முதலாக சிந்துவின் மீது படையெடுப்பு நடத்த நேர்ந்தது என்பது வரலாற்று உண்மை. அதன்பின் முஹம்மது கோரி இந்தியப் படையெடுப்பை நடத்திய போதிலும் ஆட்சி செலுத்தவில்லை. இந்தியாவின் முதல் முஸ்லிம் மன்னர் என வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கும் குதுப்உத்தீன் முற்றிலும் இந்தியராக மாறி இந்திய மன்னராகவே ஆட்சி செலுத்தினார். இந்தியாவுக்கு வெளியே அவருக்கு நாட்டமில்லாதது மட்டுமல்ல, எந்த ஒட்டும் உறவும் அறவே இல்லாதவராக, இந்திய மன்னராகவே ஆட்சி செய்து வந்தார். அவருக்குப் பின் ஆட்சிக் கட்டில் ஏறிய முஸ்லிம் மன்னர்கள் அனைவரும் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து அரசுரிமை பெற்றவர்கள்.

இதே போன்று மாமன்னர் பாபர் இந்தியாவைக் கைப்பற்றியவுடன் தன் இருப்பிடத்தை காபூலிலிருந்து டில்லிக்கு மாற்றிக் கொண்டார். அவருக்குப் பின் அரியணையேறிய மொகலாய மன்னர்கள் அனைவரும் இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்த இந்திய மன்னர்களாகவே விளங்கினர். இந்தியாவுக்கு வெளியே அவர்கட்கு எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் கடமையை அரபு நாட்டிலுள்ள மக்கா நகர் சென்று நிறைவேற்ற வேண்டும். வெளிநாடு சென்று நிறைவேற்ற வேண்டிய இன்றியமையாக் கடமையைக்கூட இந்தியாவுக்கு வெளியே சென்று டில்லியை ஆண்ட எந்த முஸ்லிம் மன்னரும் நிறைவேற்ற விழையவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். அந்த அளவுக்கு அந்நிய நாடு எதையும் காணாது இந்திய மண்ணோடு ஒன்றி, இந்திய மன்னர்களாகவே விளங்கியுள்ளனர். இந்திய வரலாற்றிலேயே ஆட்சியதிகாரம் செலுத்தியவர்களில் இந்திய நாட்டுக்கு வெளியே தங்கள் அடிப்படையை வைத்துக் கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள் ஆங்கிலேயர், ஃபிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்களே ஆவர். இந்த அடிப்படையிலேயே மறைந்த நேருஜி, அன்னை இந்திரா, அமரர் ராஜீவ் ஆகியோர் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் பாரம்பரிய மிக்க இந்திய மண்ணின் மைந்தர்கள்-பாரதப் புதல்வர்கள் என்றும், அவர்களால் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் இஸ்லாமிய மார்க்கம் இந்தியச் சமயமே ஆகும் எனவும் அடிக்கடி முழங்கி வந்தனர்.

இஸ்லாம் இந்திய நாட்டின்
சொந்த மார்க்கமே!

“இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் பெரும் எண்ணிக்கையைவிட, பல நூற்றாண்டுகளாக இந்திய வாழ்க்கை நெறிக்கு அவர்கள் செய்திருக்கும் தொண்டுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இஸ்லாமிய மாண்புகள் (Values) இந்த நாட்டின் கலாச்சாரம், சிந்தனை, செயல் முறைகளின் மீது ஆழ்ந்த செல்வாக்கைப் பதித்திருக்கின்றன. வாழ்வின் எந்தத் துறையும் அவ்வாறு பயன் பெறாமல் இருக்கவில்லை. தத்துவம், ஆன்மீகம், அரசு நடத்தும் முறைகள் (State crafts), சமூக அமைப்புகள், கலை, கட்டிடக்கலை, இசை, இலக்கியம், கணிதம், மருத்துவம் இன்னும் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இந்தப் பயன்களை நாம் பார்க்கலாம். நம் உணவுப் பழக்க வழக்கமும், உடல் அமைப்புகளும், ஏன் நாம் பேசும் வார்த்தைகள் கூட அந்தப் பயன்களின் நற்பாதிப்புகளைப் பெற்றுத்தான் இருக்கின்றன.”

ஹிஜ்ரி 15ஆம் நூற்றாண்டையொட்டி டெல்லியில் 1981 ஜனவரி 28, 29, 30இல் நடைபெற்ற மாநாட்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கண்டவாறு பேசி இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இம்மண்ணின் மைந்தர்களே என்பதை ஆணித்தரமாக உறுதிப்படுத்தினார்கள். மேலும் அவர்கள் இதை விளக்கிப் பேசும்போது “இஸ்லாத்தை நாம் எப்போதும் நம் சொந்த மார்க்கமாக அங்கீகரித்து வந்திருக்கின்றோம். இஸ்லாம் இந்தியாவில் தடையின்றி, தொடர்ந்து வாழும் பல கலாச்சாரங்கள், பல தத்துவங்கள் கொண்ட நம்முடைய இந்தியா ஒர் உடல் என்றால் அந்தப் பல்வேறு தத்துவங்களும் கலாச்சாரங்களும் அதன் அங்கங்களாக அமைந்துள்ளன. இந்திய உடலின் ஒவ்வோர் அங்கமும் அதனுடைய தனிச் சிறப்பையும் சிறப்பம்சத்தையும் பாதுகாத்துக்கொள்ளவும் வளர்த்துக் கொள்ளவும் நாம் அனுமதியளிக்கிறோம். இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் நம் தேசிய வாழ்வில் முழுமையான சம பங்கினை வகிக்கக் கூடியவர்களாகத் திகழ்கின்றனர்.” என முத்தாய்ப்பாகக் கூறினார் முன்னாள் இந்தியப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்கள்.

ஒருங்கிணைந்த இந்தியாவை
உருவாக்கிய முஸ்லிம் மன்னர்கள்

இன்றைக்கு நாம் ஏக இந்தியாவைக் காண்கிறோம். இதற்கு அடித்தளம் அமைத்து ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கி நம்மையெல்லாம் ஒரே நாட்டவர் என்ற உயர் நிலைக்கு உயர்த்தியவர்கள் முஸ்லிம் மன்னர்களே ஆவார்கள்.

பல்வேறு மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளாகச் சிதருண்டு கிடந்த இந்தியாவை, எண்ணற்ற குறுநில மன்னர் ஆட்சிகளை அகற்றி, ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய பெருமை முஸ்லிம்களை, குறிப்பாக மாமன்னர் அவ்ரங்கஸீப் ஆலம்கீர் அவர்களையே சாரும். நாடு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனியே நிர்வாக அதிகாரிகள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். வரிமுறைகள் சீரமைக்கப்பட்டதால் அரசு வருமானத்துக்கு நிரந்தரவழி காணப்பட்டது. உலோக நாணயங்கள் அச்சிடப்பட்டன. மைய அரசு உருவாக்கப்பட்டு அனைத்து நிர்வாகப் பகுதிகளும் கண்காணிக்கப் பட்டன. இதன்மூலம் வரலாற்றில் முதன்முறையாக ‘இந்தியா ஒரே நாடு’ என்ற உணர்வு மக்களிடையே உருவாகி நிலை பெற்றது.

அவ்ரங்கஸீபும் வரலாற்று அவதூறும்

இச்சந்தர்ப்பத்தில் மாமன்னர் அவ்ரங்களிப் பற்றிய உண்மைகளை அறிவது அவசியம். இந்திய முஸ்லிம் மன்னர்களிலேயே ஹிந்து சமயத்தின், ஹிந்துக்களின் விரோதியாக வர்ணிக்கப்பட்டு வருபவர் அவ்ரங்கஸீப் ஆலம்கீர். அவரது செயற்பாடுகளை வைத்து நோக்கும் போது இக்குற்றச்சாட்டுகள் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது மட்டுமல்ல, திட்டமிட்ட சதிச் செயலாகவும் காணப்படுகிறது.

ஹிந்து சமய விவகாரங்களில் அவர் தலையிட்டதாக ஒரு சிறு சம்பவத்தைக்கூட காணமுடியவில்லை. மாறாக, ஹிந்து சமய வளர்ச்சிக்கு அவர் துணையாக இருந்த எத்தனையோ சம்பவங்கள் அவர் வாழ்க்கை வரலாற்றில் நெடுகக் காணக் கிடக்கின்றன. இந்திய வரலாற்றிலேயே ஹிந்து மதக் கோயில்களுக்கு மிக அதிகமான மானியங்களை அளித்த பெருமை மாமன்னர் அவ்ரங்கஸீப் அவர்களையே சாரும். தன் அரசவைக்கு வந்து சைவ சமயப் பெருமைகளைக் கூறிய தமிழ்கூறு நல்லுலகின் குமர குருபரரைப் பாராட்டி பரிசளித்ததுடன் காசியில் சைவ சமய மடம் கட்டிக் கொள்ள நிலமும் பணமும் கொடுத்தார். தென்னாட்டில் திருப்பனந்தாள் ஆதீனத்துக்குப் பெரும் நிலப்பகுதியை மானியமாக அளித்ததாக கர்ணபரம்பரைச் செய்தி கூறுகிறது. இதுபோல எத்தனையெத்தனையோ.

இதற்குக் காரணம், இஸ்லாமிய நெறி தவறாத ஓர் உண்மை முஸ்லிமாக வாழ்ந்து வந்த அவர், எல்லாச் சமயங்களும் சமய வேதங்களும் இறைவன் அளித்தவையே என நம்புவதோடு பிறசமய வளர்ச்சிக்கு உதவுவதையும் தன் இன்றியமையாக் கடமையாகக் கொண்டு செயல்பட்டவராவார்.

அரசியல் காரணமாக ஹிந்து மன்னர்களோடு போரிட்டிருக்கலாம். எதிரி மன்னர்களை வெற்றி கொண்டிருக்கலாம். அவர்களை அடக்கி, ஒடுக்கி, ஏன் அழித்தும் இருக்கலாம். அது அரசியல் நெறி. ஆனால், ஒரு ஹிந்து மன்னனாக இருந்தாலும் சாதாரண குடிமகனாக இருந்தாலும் அவர்தம் சமய நம்பிக்கைகளை அவ்ரங்கஸீப் பெரிதும் மதித்தார். அவர்தம் நம்பிக்கை நிறைவேற்றத்துக்கு இயன்ற வகைகளிலெல்லாம் துணை நின்றார் என்பதற்கு அவர் வாழ்க்கை நெடுகிலும் எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் காண முடிகிறது. அவற்றுள் ஒரு சம்பவத்தை இங்கு சான்றாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

ஹிந்து சமய நம்பிக்கையும் மாமன்னர் அவ்ரங்கஸீபும்

வீர சிவாஜி அரசியல் காரணங்களுக்காக அவ்ரங்கஸீப் ஆலம்கீரால் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டிருந்த நேரம். சிறையில் திடீரென சிவாஜியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. சிறையிலேயே தக்கமுறையில் தேர்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நோயின் கடுமை குறையவில்லை. அப்போது மாமன்னரிடம் சிவாஜி வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

“மதுராபுரியிலுள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு இரு குதிரைகளைத் தானமாக வழங்க வேண்டும். மதுராபுரி கிருஷ்ணன் கோயில் பிராமணர்கள் தனக்காகப் பிரார்த்தனை செய்தால் தன் நோய் குணமாகி விடும்” என்று வேண்டினார். கோயிலுக்குக் குதிரைகளைத் தானம் செய்வதன் மூலமும் பிராமணர்கள் தனக்காகப் பிரார்த்தனை செய்வதன் மூலமும், தன் நோய் தீரும் என்ற சிவாஜியின் மத நம்பிக்கையை மாமன்னர் அவ்ரங்களிப் மதித்து, அவ்வாறு செய்ய அனுமதி வழங்கியதாக வரலாறு கூறுகிறது. மாமன்னருக்கு இஸ்லாமிய அடிப்படையில் இத்தகு செயலில் நம்பிக்கையில்லை என்றாலும், தன் விரோதியான சிவாஜி சிறைப்பட்டிருந்த வேளையிலும் அவரது ஹிந்து சமய நம்பிக்கையை மதித்து அனுமதி வழங்கினார் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் இஸ்லாம் பிற சமய நம்பிக்கைகளை மதிக்கப் பணித்திருப்பதுதான்.

தவ்ஹீது எனும் ஏகத்துவ நறுமணம் வீசும் இந்தியா

இஸ்லாமிய நெறிக்கும் இந்திய மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இறையருள் பெற்ற திருநாடாகவே பெருமானார் இந்திய நாட்டைக் கருதி பாராட்டி வந்தார். ஆதி மனிதரும் நபியுமான ஆதம் (அலை) பிறந்த பெருமைமிகு பூமி. ஏகத்துவக் கொள்கை முளைவிட்ட புனித மண். இங்கிருந்தே தவ்ஹீது நறுமணம் உலகெங்கும் பரவியது. இதை மெய்ப்பிக்கும் நிகழ்ச்சி ஒன்று அண்ணலார் வாழ்வில் நடைபெற்றது.

காபா இறையில்லத்தில் ஹஜ்ருல் அஸ்வத் (கருநிறக் கல்) பதிக்கப்பட்டுள்ள மூலைப்பகுதி ‘ருக்னுல் ஹிந்த்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது ‘ருக்னுல் ஹிந்த்’ என்றால் ‘இந்தியாவை நோக்கும் மூலை’ என்று பொருள்.

இந்த மூலைப் பகுதியில் தொழுகைக்குப் பிறகு, இந்தியாவை நோக்கியவண்ணம் திறந்த மார்போடு அண்ணலார் அவர்கள் நிற்பது வழக்கம். அப்போது அத் திக்கிலிருந்து வீசும் தென்றல் காற்று அவர் மார்பில் படும்போது அவருக்கு மிகவும் இதமாக இருக்கும். அதை நாயகத் திருமேனி வெகுவாக ரசித்து மகிழ்வதுண்டு. பலப்போதும் பெருமானார் இவ்வாறு செய்வதைக் கண்ட நபித் தோழர்கள், ‘பெருமானார் இவ்வாறு செய்வதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா?’ என அண்ணலாரை வினவலாயினர். அதற்கு விடையாகப் பெருமானார் அவர்கள்.

“ஹிந்த் (இந்தியா)விலிருந்து தென்றலாக வீசிக் கொண்டிருக்கிற தவ்ஹீது (ஏக தெய்வ வணக்கம்)னுடைய சுகந்தத்தை, சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறினார்களாம்.

இதிலிருந்து இந்திய நாடு பண்டுதொட்டே ஏக இறை வணக்கக் கோட்பாட்டின் நிலைக்களனாக விளங்கிவந்த, இறையருள் பொழியும் புனித பூமி என்பது தெளிவாகிறது. இந்தியாவில் பொங்கிப் பொழியும் ஆன்மீக மாண்பு பெருமானாரிடம் அளப்பரிய மதிப்பை ஏற்படுத்தியிருப்பதையும் நம்மால் நன்கு உணர முடிகிறது. எனவே, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ‘ஹிந்த்’ (இந்திய) நாட்டைப் புகழத் தவறியதே இல்லை.

பிற்காலத்தில் பல தெய்வ வணக்கமுறை இந்தியாவில் உருவான போதிலும் முற்கால இந்தியாவில் ஏக தெய்வக் கொள்கையே நிலவி வந்ததை, முந்தைய இந்திய வேதங்களின் அடிநாதக் கொள்கையாக ஏகத்துவ இறைக் கோட்பாடு விளங்கி வந்தது என்பதை வேத விற்பின்னர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதையே இந்திய ஆதி வேதமான ரிக் வேதம் ‘ஏகேஸ்வர மார்க் (கம்)’ எனக் கூறுகிறது. இதையே ரிக் வேத சுலோகமான ‘ஏகம் ஸத்விப்ராபஹாதா வதந்தி’ என்பது தெளிவாக்குகிறது. இதிலிருந்து இந்தியாவின் ஆதி வேதக் கொள்கை ஏக தெய்வ வணக்கமே என்பது உறுதியாகிறது. எனவே, இந்தியாவை ஏகத்துவ மணம் கமழும் புனித பூமியாக அண்ணலார் புகழ்ந்ததில் வியப்பேதுமில்லை.

அதுமட்டுமல்ல, ஆதிவேதமான ரிக் வேதம் உட்பட இந்திய வேதங்கள் பலவும் இறுதித் தூதராக முஹம்மது நபி (சல்) அவர்கள் இறைவனால் அனுப்பப்படுவார் என்பதை முன்னறிவிப்பு செய்துள்ளன என்பது எண்ணத்தக்க செய்தியாகும். ரிக் வேதம் ‘மாமஹே’ (முஹம்மது) இறுதி இறைத்தூதராக வருவார் என இரண்டு இடங்களில் குறிப்பிட்டுள்ளது. சாம வேதம், ‘அஹ்மத்’ என்றும் அதர்வண வேதம் ‘மஹாமத்’ (முஹம்மது) எனவும் இறுதித் தூதரின் பெயரைக் குறிப்பிடுகின்றன.

நான்கு ஹிந்து மத வேதங்களும் ரிஷிகளும்

ஹிந்து மதத்தின் பெரும் வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நான்கும் மற்ற வேதங்களும் ரிஷிகளாலோ மற்ற மனிதர்களாலோ இயற்றப்பட்டவைகள் அல்ல. அவைகளும் மற்ற சில வேதங்களும்கூட இறைவனால், இறைச் செய்திகளாக வழங்கப்பட்டவைகளே என்பதுதான் ஹிந்து மத ஆச்சாரியர்களின் கருத்து.

ஹிந்து மதத்தை நிறுவியவர் யார் என்பது இன்று வரை கண்டறியவியலா ஒரு புதிராகும். பிரம்ம சூத்திரம் செய்த வியாசரும் கீதை வழங்கிய கண்ணனும் தங்களுக்கும் முன்னதாக வேதங்கள் இருந்ததாகக் குறிப்பிடுவதிலிருந்து இவர்களுக்கும் முன்னரே வேதங்கள் வழக்கில் இருந்து வந்துள்ளன என்பது தெளிவாகிறது.

இவ்வேதங்கள் ரிஷிகளோடு நெருங்கிய தொடர்புடையவையாயினும் இவற்றை இயற்றியவர்கள் ரிஷிகள் அல்ல. இதை எண்பிக்கும் வகையில் காஞ்சிப் பெரியவர் ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் அவர்கள்,

“இந்த வேத மந்திரங்களைச் செய்த ரிஷிகளை இவற்றின் ஸ்தாபகர்கள் என்று சொல்லலாமா என்று பார்த்தால், அவர்களோ இந்த வேதங்களை தாங்கள் செய்ய (இயற்ற)வில்லை என்கிறார்கள். எங்கள் மூலம்தான் இந்த மந்திரங்கள் லோகத்துக்கு வந்தன என்பது வாஸ்தவம். அதனால் தான் எங்களை மந்திர ரிஷிகளாகச் சொல்லியிருக்கிறது. எங்கள் மூலம் வந்ததேயொழிய, நாங்களே அவற்றைச் சொல்ல (இயற்ற)வில்லை. நாங்கள் அப்படியே மன மடங்கித் தியான நிஷ்டையில் இருக்கிறபோது இந்த மந்திரங்கள் ஆகாயத்தில் எங்கள் முன்னே தெரிந்தன. நாங்கள் அவற்றைக் கண்டறிந்தவர்கள்தான் (மந்த்ர த்ரஷ்டா); செய்தவர்கள் (மந்த்ர கர்த்தா) அல்ல என்கிறார்கள்” என எடுத்துக் கூறுவதன்மூலம் இந்திய வேதங்கள் ஏக இறைவனால் ஒருவகை வஹீ மூலம் வழங்கப்பட்டவைகளேயன்றி அவை மனிதர்கள் யாராலும் இயற்றப்பட்டவை கள் அல்ல என்பதைத் தெளிவாக்குகிறார்.

இவ்வாறு முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) தோன்றிய இந்தியப் பகுதியில் பல்வேறு வேதங்கள் பல்வேறு இறைத் தூதர்கள் மூலம் ஏக இறைவனால் வழங்கப்பட்டுள்ளன என்பதை காஞ்சிப் பெரியவர் போன்றவர்களின் ஆய்வுக் கருத்துகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வகையில் இறை தூதரான நபிகள் நாயகம் (சல்) மூலம் இறுதி வேதமாக அமைந்திருப்பதே இறைமறையாகிய திருக்குர்ஆன்

இஸ்லாமியர் உறவால் பிறந்த
ஆதி சங்கரரின் ‘அத்வைத’க் கொள்கை

ஹிந்து சமயத்தின் மாபெரும் எழுச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் காரணமாயமைந்தவர் ஆதி சங்கரர் ஆவார். தனியொரு மனிதராக தென்முனை கேரளத்தின் காலடியிலிருந்து வட இமயம்வரை சென்று ஹிந்து சமயத்தை புனர் நிர்மாணம் செய்தவர்; அதற்கு மாபெரும் உந்து விசையாக அமைந்தது அவரது ‘அத்வைத’க் கொள்கை.

ஆதி சங்கரரின் மூலத் தத்துவம் ‘அத்வைதம்’ ஆகும். அத்வைதம் என்பது வேதாந்த மதங்களுள் ஒன்றாகும். பிரம்மம் இரண்டற்ற மூலப்பொருளாகும். ‘அத்வைதம்’ என்ற சொல்லுக்கு இரண்டற்றது என்பது பொருளாகும்.

ஆதி சங்கரர் இக்கொள்கையை இஸ்லாத்திலிருந்து தான் பெற்றார் என்பதை தத்துவ அறிஞர்கள் பலரும் ஒரு முகமாகக் கூறி வருகின்றனர். இதைப் பற்றி இஸ்லாமிய கலைக் களஞ்சியம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது: “எட்டாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் மலையாளத்திலுள்ள காலடியில் பிறந்த சங்கரர் அங்கு வந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த முஸ்லிம்களின் உருவமற்ற ஒரே இறைவன் என்ற இறை வணக்கப் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, அத்வைத கொள்கையை ஹிந்து மதத்தில் நுழைத்தார் என்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

இதிலிருந்து ஏகத்துவக் கொள்கையான தவ்ஹீது ஆதி சங்கரரிடம் ஏற்படுத்திய தாக்கமே அத்வைதக் கொள்கையாக உருவெடுத்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்தியச் சமயங்களின் மறுமலர்ச்சிக்கு
உந்து சக்தியான இஸ்லாமிய நெறி

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவக் கொள்கையும் (ஓரிறைக் கோட்பாடு) இறை ஞானமும் (தஸவ்வுப்) ஹிந்து சமய ஆர்வலர்களிடையே ஒரு புதுவித உத்வேகத்தை ஊட்டி வளர்க்கலாயின. சர்வ வல்லமையுள்ள ஒரே இறைவனின், படைப்புகளே உலகிலுள்ள அனைத்தும். மனிதப் படைப்பில் எவ்வித வேற்றுமையும் இல்லை. இறை வேதம் எல்லோருக்கும் பொது. நற்பணி செய்யும் நற் சிந்தனையாளரே மனிதருள் சிறந்தவர் என்பன போன்ற கோட்பாடுகள் இந்துக்களைப் பெரிதும் ஈர்த்தன. ஏகத்துவ அடிப்படையில் பக்தி இயக்கங்கள் ஆங்காங்கே உருவாயின. சங்கரர், இராமானுஜர், பஸ்வர், இராமானந்தர், வல்லபாச்சாரியார், சைதன்யர், கபீர்தாஸ் போன்றவர்கள் பக்தி இயக்கங்களைத் தோற்றுவித்து ஜாதி வேற்றுமைகளைக் களைய முற்பட்டனர். தமிழ்நாட்டில் சித்தர்களும் சூஃபிகளும் தோன்றி ஏகத்துவ இறைக் கோட்பாட்டை நிலை நிறுத்தவும் சாதி சமய வேறுபாடுகளைக் களைந்து, ஆன்மநேய ஒருமைப்பாட்டை நிலைநாட்டவும் உழைக்கலாயினர். இதன் விளைவாக இந்திய நாட்டின் மதச் சார்பற்ற தன்மை உருவாக வழிபிறந்தது.

இந்திய சமயப் பிரிவுகளும்
இஸ்லாமியச் செல்வாக்கும்

இந்திய நாட்டிற்குள் கால்பதித்த இஸ்லாம் இந்தியச் சமயங்களைச் செம்மைப்படுத்த எல்லா வகையிலும் உதவியுள்ளது என்பதை டாக்டர் தாரா சந்த் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் நூல்களில் விரிவாகவும் தெளிவாகவும் ஆய்ந்து கூறியுள்ளார்கள். டாக்டர் தாரா சந்த் அவர்களின் “இந்தியப் பண்பாட்டில் இஸ்லாத்தின் செல்வாக்கு” என்ற நூல் இதற்கான பல ஆதாரங்களை அடுக்கடுக்காகக் கூறி விவாதிக்கிறது.

தென்னகத்தில் அரபு வணிகர்கள் வாயிலாகப் பரப்பப்பட்ட இஸ்லாமிய நெறி, கொள்கை, கோட்பாடு, தத்துவங்கள் புதிய வடிவிலும் கோணத்திலும் பல்வேறு சமயப் பிரிவுகள் உருவாகத் தூண்டுகோலாயமைந்தது என்பது சரித்திர, சமய ஆய்வாளர்களின் கருத்தாகும். இதைப் பற்றி “இந்தியாவின் சமயங்கள்” என்ற தமது நூலில் பர்த் (BARTH) என்பவர் கீழ்க்கண்டவாறு விவரித்துள்ளார்:

“ஆஃப்கானியர்கள், துருக்கியர்கள், மங்கோலியர்கள் அவர்களுடைய மதத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் இந்த நாட்டைக் கைப்பற்றுபவர்களாக வருவதற்கு வெகு காலத்திற்கு முன்னாலேயே கலீஃபாக்களுடைய காலத்து அராபியர்கள் இந்தியக் கடற்கரைப் பிரதேசங்களில் வணிகர்களாக வந்து, இந்த நாட்டு மக்களோடு வியாபாரத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு விட்டார்கள். 9-வது நூற்றாண்டிலிருந்து 12-வது நூற்றாண்டு வரையில் இந்தப் பிரதேசத்தில் தான் சங்கரர், ராமானுஜர், ஆனந்த் தீர்த்தர் (மத்வர்), பஸ்வர் ஆகியவர்களுடைய பெயர்களோடு இணைக்கப்பட்டிருக்கின்ற சமய இயக்கங்கள் தோன்றின. அவற்றிலிருந்துதான் சரித்திரபூர்வமாக இந்தியாவில் காணப்படும் சமயப் பிரிவுகள் பிறந்தன. வெகுகாலத்துக்குப் பின்னால் வரையில் இதற்குச் சமமாக ஹிந்துஸ்தானத்தில் வேறு எதுவும் காணப்படவில்லை.”

மேலும், ‘தத்துவ, பக்தி இயக்கங்களுக்கு இஸ்லாமிய அடிப்படையும் செல்வாக்கும் உண்டா?’ என்ற கேள்விக்கு விடை தரும் வகையில் மேலும் விவரிக்கிறார்.

‘தென்னிந்தியாவில் தோன்றிய தத்துவ பக்தி இயக்கங்கள் ஆகியவற்றில் காணப்படும் தன்மை ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்தால் அவை ஆதிகாலத்தில் சமயக் கோட்பாடுகளிலிருந்து பிறந்தவை தாம் என்று சொல்ல முடியும். ஆனால், அந்தத் தன்மைகள் அனைத்தையும் மொத்தமாகப் பார்க்கும்போதும், அவைகளுடைய குறிப்பிட்ட அழுத்தத்தை நோக்கும் போதும் யாரும் காணத் தவறாத அளவுக்கு அவை இஸ்லாமியக் கோட்பாடுகளை ஒத்திருக்கின்றன. ஆகையினால் இஸ்லாத்தினுடைய செல்வாக்கினாலேயே அவை அப்படி தோன்றின என்ற வாதத்தை ஒத்துக் கொள்ளக்கூடியதாக ஆக்குகின்றன. முன்னர் விவரிக்கப்பட்ட சமய இயக்கங்கள் அனைத்திலும் இந்த முடிவுக்கான சாட்சியம் நேரடியாகக் கடன் வாங்கியதாகச் சொல்ல முடியாமலும் சூழ்நிலையையும் சந்தர்ப்பத்தையும் கொண்டு முடிவு செய்யக்கூடியதாகவுமே இருக்கிறது. என்றாலும், அல்புரூனி எழுதியது போல ‘ஹிந்துக்கள் மட்டுமீறிய தன்மதிப்புடைய வர்க்கமாவார்கள். அவர்கள் பிற கருத்துகளை தங்களுடையதாக ஆக்கிக் கொள்வதில் தலைசிறந்த கலைஞர்களாக இருந்தார்கள். வெகு சுலபமாகக் கண்டுபிடித்துவிடக் கூடிய, கலை நயமற்ற ‘காப்பி’ யடித்தலின் மூலம் தங்களுடைய கெளரவம் குறைந்து போவதற்கு அவர்கள் இடங்கொடுக்கவில்லை. இந்தியாவினுடைய கலாச்சாரத்தின் பழங்காலச் சரித்திரம் முழுவதும் இக்கூற்றுகளின் உண்மைக்குச் சான்று பகர்வதாகவே இருக்கிறது.” (பக்-107.108)

இந்த அடிப்படையில் பலவருடைய போதனைகளும் வீர சைவர்களுடைய கோட்பாடுகளும் இஸ்லாமியத்தோடு மிக நெருக்கமாக இருப்பதைப் பற்றி கூறும்போது, “பஸவருடைய போதனைகள் ஆதியில் அன்று நிலவியிருந்த ஹிந்து கோட்பாடுகள், சடங்குகள், சமூக வழக்காறுகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கே மறுப்பதாக அமைந்திருந்தது. வீர சைவர்கள் பரமசிவம் என்ற பெயரில் ஒரே கடவுளை வணங்குபவர்களாக ஆனார்கள். அந்த ஒரே கடவுள் உருவமற்றவன்; தனித்தவன்; யாரையும் சார்ந்தவன் அல்லன்; ஆனந்த வடிவானவன்; எந்த மாற்றமும் இல்லாதவன்; யாவற்றுக்கும் மேலானவன்; அவன் தனிமனிதனுடைய ஆன்மாவுக்கு வழிகாட்டுவதற்காக ‘அல்லமா பிரபு’ என்ற பெயருடன் உலக ஆசானாக வெளிப்படுகிறான். அவர்களுடைய கொள்கையின்படி ஆன்மாவுடைய பிரயாணத்தில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. முதற் கட்டத்தில் இறைவனிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையும் விரதங்கள் அனுஷ்டிப்பதும் பக்தி செயல்களில் ஈடுபடுவதுமாகும். இரண்டாவது கட்டத்தில் இறைவனைப் பரிபூரணமாக சார்ந்து, அகந்தையை ஒழித்து அவனிடம் தன்னையே ஒப்புவித்து விடுவது; மூன்றாவது கட்டத்தில் இறைமையோடு கலந்து ஆனந்த மயமாய் ஆகிவிடுவது.

“இவை எல்லாவற்றையும்விட வீர சைவர்களுடைய நடைமுறைதான் இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கவை. பெண்ணின் சம்மதமின்றித் திருமணம் இல்லை. விவாகரத்து அனுமதிக்கப்பட்டது. விதவைகள் எந்தவிதமான அபசகுனத்தினுடையவும் அறிகுறியாய் இல்லாமல் மரியாதையுடன் நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கு மறுமணம் செய்து கொள்ள உரிமை உண்டு. பிரேதங்கள் எரிக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டன. சிரார்த்தம் போன்ற சடங்குகள் இல்லை. மறு பிறப்பில் நம்பிக்கை இல்லை.

“இவற்றின் காரணமாகத்தான் லிங்காயதம் பிரிவு இந்தப் பிராந்தியங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் செல்வாக்கினால் தோன்றியது என்ற முடிவு மறுக்க முடியாததாக ஆகிறது. அதனுடைய புரட்சிகரமான கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் வேறு எந்த அடிப்படையிலும் விளக்க முடியாமலிருக்கிறது. ஹிந்துக்களிடம் ஊறிப்போன புனர் ஜென்ம நம்பிக்கை, பிணத்தை எரித்தல், சாவின்போது தீட்டை ஒழிக்கச் செய்யும் சடங்குகள், ஜாதி, ஆண்-பெண் அடிப்படையில் உண்டான ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஒழித்தல், விவாக சீர்திருத்தம், புனிதமான குருவின் தலைமையில் பணியாற்றும் வீர சிஷ்யர்களுடைய கூட்டம், “அல்லமா பிரபு” என்ற பெயரில் (அல்லாஹ் என்பதன் சாயலில்) கடவுளைக் குறிப்பிடுதல் ஆகிய அனைத்தும் எந்த மறுப்புக்கும் இடமின்றி இஸ்லாத்திலிருந்தே பிறந்தன என்பதை உணர்த்தும்” என்று டாக்டர் தாரா சந்த் கூறுகிறார். (பக். 119-120)

ஶ்ரீ ராமானுஜர் சமத்துவப் போதனையும்
இஸ்லாமியச் செல்வாக்கும்

இஸ்லாமிய நெறி இங்கு வாழும் மக்களை மிக எளிதில் ஈர்த்ததற்கான காரணங்களைப் பற்றி ஆராய்ந்து கூறுகிறார் ஆய்வறிஞர் புகழ்மிகு நீதிபதி எம்.எம்.இஸ்மாயீல் அவர்கள். “பிறப்பின் அடிப்படையில் வர்ண பேதம், ஜாதி வேற்றுமை கற்பிப்பதும் அதன் காரணமாக ஏற்றத்தாழ்வு கற்பிப்பதையும் போல தனிமனிதனுடைய தன்மான உணர்ச்சியைப் புண்படுத்துவது வேறு எதுவும் இருக்க முடியாது.

“எங்கு பிறந்தவனாயினும், எந்நிறத்தவனாயினும், எவ்வினத்தவனாயினும், எத்தரத்தவனாயினும், ஆணாயினும் பெண்ணாயினும் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியவுடன் பரிபூரண சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பெற்று விடுகிறார்கள் என்பது இஸ்லாத்தினுடைய சக்தி வாய்ந்த தாரக மந்திரமாகும். இது முஸ்லிம்களிடையே கொள்கையளவில் நின்றுவிடாமல் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில், தொழுகை போன்ற வழிபாட்டு முறைகளிலும் திருமணம் போன்ற சமுதாய நிகழ்ச்சிகளிலும் முழுமையாக இடம் பெற்றுள்ளது. ஆகவேதான், தனிமனிதனுடைய தன்மான உணர்ச்சிக்கு இது ஒரு பெரிய ஆகர்ஷண சக்தியாகும். இந் நாட்டில் வாழ்ந்திருந்த பெரும் பான்மையான மக்களை இஸ்லாம் கவர்ந்ததற்கு இதுவே பிரதான காரணமாக ஆயிற்று”.

(நீதிபதி எம்.எம் இஸ்மாயீல் “இஸ்லாமும் இந்திய சமயங்களும் பக். 7, 8)

இந்த அடிப்படையில் ஶ்ரீ ராமானுஜரின் சமத்துவ போதனையை அணுகும்போது ஆய்வாளர்களுக்குப் புதிய உணர்வுகளும் தகவல்களும் புலனாகின்றன. இஸ்லாத்தின் சமத்துவ உணர்வுச் சிந்தனை ஶ்ரீ ராமானுஜரின் சமத்துவப் போதனைகளுக்குத் தூண்டுகோலாயமைந்ததை அன்றையக் காலச் சூழலும் நிகழ்வுகளும் சான்றளிப்பவையாயுள்ளன.

ஶ்ரீராமானுஜர் காலத்தில் இஸ்லாமிய நெறி சோழ மண்டலத்தில் முனைப்போடு பரவி வந்தது. சோழ நாட்டுக் கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்துவந்த முஸ்லிம்களின் வாழ்க்கை முறையும் சிந்தனைப் போக்கும் பிற சமய மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்ப்பனவாக அமைந்தன. அதற்குத் திருச்சியில் அடக்கமாகியுள்ள நத்ஹர் ஒலி போன்ற இஸ்லாமிய மார்க்க ஞான மேதைகள் இடையறாது மக்களிடையே இஸ்லாமிய நெறியை எளிமையாக விளக்கிப் பிரச்சாரம் செய்து வந்ததும் ஒரு காரணமாகும். இதனால் இஸ்லாமிய நெறியின்பால் பொது மக்கள் மட்டுமல்லாது நாட்டை ஆண்டு வந்த மன்னர்களும் அரசு அதிகாரிகளும்கூட மதிப்பும் மரியாதையும் காட்டி வந்தனர். முஸ்லிம்களுக்கு மார்க்க அடிப்படையில் உதவுவதில் பேரார்வம் காட்டினர். கூன்பாண்டியன் போன்ற ஹிந்து மன்னர்கள் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கான பள்ளிவாசல்களைக் கட்டிக் கொள்வதற்கான நிலங்களை வழங்குவதிலே மகிழச்சி கொண்டார்கள். ஏக இறைவனை இடையாள் இல்லாது நேரடியாக வணங்கலாம். ஓரிறைக் கொள்கையை ஏற்ற யாரும், வர்ணபேதம், ஜாதி வேற்றுமை இல்லாது யாரும் இறை வேதத்தை அவரவர் தாய் மொழியிலேயே நேரடியாகக் கற்றுத் தெளியலாம். இவ்வாறு மக்களிடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அழுத்தமாக உருவாக்கும் இஸ்லாமிய நெறியின்பால் மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். இதன் விளைவாக மக்கள் வேகமாக இஸ்லாத்தின்பால் இணைந்து வந்தனர். இதனையறிந்த ஶ்ரீராமானுஜர் இஸ்லாம் போன்று வர்ணபேதம், ஜாதி பேதம் பாராட்டாது மனிதர்களுக்காக இறைவன் அளித்த ஹிந்து வேதங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று போதிக்க முனைந்தார். அது வரையிலும் வேத மந்திரங்களை யாரெல்லாம் கற்றுக் கொள்ளக் கூடாது. யாரெல்லாம் கேட்கக் கூடாது, யாரெல்லாம் கோயிலுக்குள் நுழையக்கூடாது என ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தார்களோ அவர்களிடம் இறை வேதத்தைக் கொண்டு சென்று அவற்றை அறியச் செய்து, அதன்மூலம் தெய்வத்திடம் மக்களை அழைத்துச் செல்லும் போக்கையும் போதனைகளையும் மேற்கொண்டு இறைவன்- இறை வேதம்-மக்களுக்கிடையே இருந்த பெரும் இடைவெளி நீங்க இஸ்லாமியச் செல்வாக்கும் பெருந்துணையாயமைந்ததை அன்றையச் சூழலின் அடிப்படையில் டாக்டர் தாரா சந்த் போன்றவர்கள் ஆய்ந்து கூறித் தெளிவேற்படுத்தியுள்ளார்கள்.

வட இந்தியாவில் பக்தி இயக்கம் தோன்றப் பெரிதும் காரணமாயமைந்தவர் ராமானந்தர் என்பவராவார். காசிமா நகரைச் சேர்ந்த இவர் நீண்ட காலம் முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இஸ்லாமிய நெறியை மார்க்க அறிஞர்களிடமிருந்து கேட்டும் விவாதித்தும் தெளிவு பெற்றிருந்தார். இஸ்லாத்தின் உயிர் மூச்சுக் கொள்கையான தவ்ஹீது-ஏகத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் ஹிந்து மதப் பிரச்சாரத்தைச் செய்யலானார்.

இவரைத் தொடர்ந்து இவர் மாணவர் கபீர்தாஸ் இன்னும் வீறுகொண்ட முறையில் எழுச்சியோடு ஹிந்து மத பக்திப் பிரச்சாரம் வலுவானதொரு இயக்கமாகவே நடைபெற்றது. இவர் ஒரு பிராமண விதவையால் பெற்றெடுக்கப்பட்டு, ஒரு முஸ்லிம் குடும்பத்தவர்களால் வளர்க்கப்பட்டவர். எனவே, இரு சமயச் சார்பும் அவருக்கு அழுத்தமாக இருந்தபடியால் இவரது பக்தி மார்க்கப் பிரச்சாரம் இவரது குருவான ராமானந்தரையும் விஞ்சும் வகையில் அமைந்ததில் வியப்பேதும் இல்லை.

இவரது பக்திப் பிரச்சாரத்தின் மையப் பொருள் ஏகத்துவக் கடவுட் கொள்கையாகவே அமைந்திருந்தது. ‘ராமும் ரஹீமும் ஒன்றே’ என்பதை மிக அழுந்தத்திருத்தமாகப் பிரச்சாரம் செய்து வந்தார். இரு சமய உணர்வுகளுக்கிடையே இருந்த இடைவெளியை குறுக்கி அவற்றிற்கிடையே ஒருவகை இணைப்பையும் பிணைப்பையும் உருவாக்க முயன்றார். இவரது பாடல்களில் மெய்ஞ்ஞான உணர்வுகளாகிய சூஃபித்துவத் தத்துவங்கள் விரவியிருந்தன. இதற்கு வளமூட்டும் வகையில் அரபி, பார்சி மொழிச் செல்வாக்கும் சற்றுத் தூக்கலாக இருக்கவே செய்தது. இவரைப் போன்றே தாது தயாள் என்பவர் பக்திமார்க்கப் பிரச்சாரத்தில் “உருவமற்ற ஒரே இலாஹி நீயாகவே இருக்கிறாய். ராமும் ரஹீமும் நீயாகவே உள்ளாய். கேசவா என்பதுவும் கரீம் என்பதுவும் உன் பெயரேயாகும்” என்று பிரச்சாரம் செய்தார். மகாராஷ்ரத்தில் தோன்றிய ராமதேவர் உருவமற்ற ஒரே இறைவனை வணங்கப் பணித்த இவர், சிலை வணக்க முறையை வன்மையாகக் கண்டித்துத் தன் பக்தி மார்க்கப் பிரச்சாரத்தைச் செய்து வந்தார்.

இவரைத் தொடர்ந்து துக்காரம் என்பவர் பக்தி மார்க்கப் பிரச்சாரத்தை ஒரு இஸ்லாமியனைப் போன்றே செய்து வந்தார். இவரது பக்திப்பாடல்களில் இஸ்லாமிய உணர்வும் சிந்தனையும் நெறியும் பெரிதும் இழையோடின. சான்றாக அவர்,

“பெரிய திருப்பெயர்களில் முதலாவதாக இருப்பது ‘அல் லாஹ்’ என்பதேயாகும். அதனை ஜெபிக்க மறந்து விடாதே! அல்லாஹ் ஒருவனே. அவனுடைய நபியும் ஒருவரே. அங்கே நீ ஒருவனே. இங்கே நீ ஒருவனே! நண்பனே! நானுமில்லை, நீயுமில்லை!” என்பது அவரது பாடலின் கருத்து. தொடர்ந்து லால்தாஸ், பாபாலால் பிரான்நாத், ராம்சரண், ஜகஜீவன் தாஸ், புல்லா சாஹிப், சந்திரதாஸ், கேசவதாஸ், கரீம்தாஸ், தூலந்தாஸ் போன்ற பலரும் பக்தி இயக்கப் பிரச்சாரத்தை வடபுலமெங்கும் செய்து வந்தனர். இவர்தம் பக்திப் பிரச்சாரத்தின் மையப் பொருள் “இறைவன் ஒருவனே” அவன் உருவமற்றவன் என்பதேயாகும். இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இவர் தம் சொல்லும் செயலும் அமைந்திருந்தன.

இதே போன்ற பணியைத் தென்னகத்தில் குறிப்பாக, தமிழகத்தில் சித்தர்களும் சூஃபிகளாகிய மெய்ஞ்ஞானப் புலவர்களும் மிகத் திறம்பட சமய சமரச சன்மார்க்கப் பணியைத் தமிழ் ஞானப்பாடல் மூலமாகத் திறம்பட பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

ஞான இலக்கிய சமய சமரசம்

மெய்யறிவாளன் தன்னை ஆராய்வதன்மூலம் இறைவனைப் பற்றியும் ஆராய்கிறான். இப்போக்கே சித்தர்களிடமும் இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகளாகிய சூஃபிகளிடமும் மிகுந்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சித்தர்களுக்கும் சூஃபிகளாகிய இஸ்லாமிய மெய்ஞ்ஞானக் கவிஞர்களுக்குமிடையே எத்தகைய வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. சித்தர்கள் ஆடம்பர ஆராவாரப் போக்குகளை வெறுத்தார்கள். சாதி, மத, சம்பிரதாயங்களைக் கடந்த நிலையில் அனைவரையும் ஒருசேர நேசித்தார்கள். மனித நல் வாழ்வுக்காக அல்லும் பகலும் உழைத்தார்கள். இதே போக்கை முழுமையாகக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள் இஸ்லாமிய சூஃபிகள். இதனாலேயே பதினெண் சித்தர்கள் பட்டியலில் மச்சரேகை சித்தர் எனப்படும் ஜதுரூஸ், குணங்குடி மஸ்தான் என அவழக்கப்படும் சுல்தான் அப்துல் காதிர், தக்கலை மெய்ஞ்ஞானி பீர் முஹம்மது அப்பா ஆகிய மூன்று முஸ்லிம் சூஃபிகள் இடம் பெற்றுள்ளார்கள். இதுவே இவர்களுக்கிடையே எண்ணத்திலும் சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் போக்குகளிலும் ஒரே விதத் தன்மை இருந்ததற்குச் சான்றாகும்.

கருத்தொற்றுமை மட்டுமல்ல
சொல் ஒற்றுமையும் உண்டு

தாயுமானவரும் குணங்குடி மஸ்தானும் வெவ்வேறு சமயச் சார்புடையவர்களாயினும் அவர்தம் சிந்தனையும் அதன் வெளிப்பாடான கருத்துகளும் வேறுபாடு காண, இயலா வண்ணம் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. அவர்கள் தங்கள் பாடல்களில் கையாண்டுள்ள சொல்லாட்சி யும் கூட ஒரே மாதிரி அமைந்து, உணர்வு ஒற்றுமைக்குக் கட்டியங் கூறுகின்றன.

        “அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்
        ஆனந்த பூர்த்தியாகி”

எனப் பாடுகிறார் தாயுமானவர்

        “அங்கும் இங்கும் என ஒண்ணா அகண்ட பரிபூரணமாய்
        எங்கு நிறைந்த இறையே நிராமயமே”

என முழங்குகிறார் குணங்குடி மஸ்தான்.

        “பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற
         நிறைகின்ற பரிபூரண ஆனந்தமே!”

என்கிறார் தாயுமானவர்.

        
        “பார்க்கும் இடம் எல்லாம் பரிபூரணமாக
        ஏற்கையுடன் நின்ற இயல்பே நிராமயமே!”

என்பது குணங்குடியார் பாடல்

இவ்வாறு சித்தர்களும் சூஃபிகளும் ஒரேவித உணர்வோடும் சிந்தனையோடும் ஏக தெய்வக் கொள்கையையும் சாதி, மதம் கடந்த சகோதரத்துவத்தையும் நிலைநாட்ட பெரிதும் முயன்றிருக்கிறார்கள்.

ஆன்ம நேய ஒருமைப்பாடு காணும் வள்ளலார்

சித்தர்களும் சூஃபிகளும் காண விரும்பிய ஓரிறை உணர்வடிப்படையிலான உலக சகோதரத்துவம் நிலைபெற, புகழ்மிகு சித்தரான திருவருட் பிரகாச வள்ளலார் சிதறுண்டு கிடக்கும் மக்கள் குலம் ஒன்றுபட, ஆன்மநேய ஒருமைப்பாடு பெறத் தூண்டுகிறார்.

இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப் பயணத்தின்போது அணியும் துறவுணர்வூட்டும் இஹ்ராம் வெள்ளுடையான தைக்கப்படாத ஒரு துண்டை இடுப்பிலும் மற்றொரு துண்டை மேலே போர்த்தியும் எப்போதும் காட்சி தரும் வள்ளலார் உருவ வழிபாட்டை விடுத்து ஜோதி வடிவாக இறைவனைக் கண்டு வணங்கிப் போற்றி வந்தார். இவரது இறையுணர்வையே திருமறையாகிய திருக்குர்ஆன்,

“அல்லாஹ் மண் விண் இவ்விரண்டில் ஒளியாய் இருக்கிறான்” (திருக்குர்ஆன் 24:35)

எனத் தெளிவுபடக் கூறுகிறது.

இத்தகு போக்குடைய ‘திருவருட்பா’வை சைவ சமயத்தைச் சார்ந்த சிலர் ஏற்காததோடு அதை மருட்பா எனக் கூறி விலக்க முற்பட்டபோது, இறையுணர்வு பூத்துக் குலுங்கும் சமரச சன்மார்க்க நெறி காட்டும் வள்ளலார் பாடல்கள் ‘மருட்பா’ அன்று, அருட்பாவே யாகும் என்பதை எதிர்ப்பாளர்களிடையே திறம்பட விளக்கி நிலை நாட்டிய சதாவதானி செய்குத்தம்பி பாவலர் சமய ஒற்றுமைக்கும் சமய சமரசத்துக்கு ஏற்ற எடுத்துக்காட்டாக வரலாற்றில் திகழ்கிறார்.

சொல் கடந்த ஞான உணர்வு

குணங்குடி மஸ்தான் போன்ற இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகள் தங்கள் சமய சமரச உணர்வுகளை வெளிப் படுத்த இஸ்லாமியச் சொற்களான அரபுச் சொற்களை எந்த அளவுக்குப் பயன்படுத்தினார்களோ அதே அளவுக்கு இந்து சமயத் தத்துவச் சொற்களான நந்தீஸ்வரன், விட்டுணு, உருத்திரன், சிவன், அம்பலம், சக்தி, தட்சிணா மூர்த்தி போன்ற சொற்களைத் தாராளமாகக் கையாண்டு தன் ஞானப் பாக்களை இயற்றியுள்ளார். இச்சொற்கள் ஹிந்துக் கடவுள்களின் பெயராகவும் ஹிந்துத் தத்துவ நுட்பங்களைப் புலப்படுத்தும் சொற்களாகவும் அமைந்துள்ளதே, இவற்றை இஸ்லாமிய நெறிபேணும் முஸ்லிமாகிய தான் பயன்படுத்துவதா என அவர் எண்ணவில்லை.

தத்துவவியல் சார்ந்த ஞானத் துறையின் ‘பரிபாஷை’ சொற்களான இவை தத்துவக் கலைச் சொற்களாகும். இவை ஞானத் துறையில் தனிப்பொருள் கொண்ட சொற்களாகும்.

நந்தி-குரு: விட்டுணு - வாங்கிய மூச்சை உள் நிறுத்தும் கும்பகம்; உருத்திரன் - வெளியிடும் மூச்சாகிய இரேசகம்; சிவன், சக்தி-வெளியே வாயு சிவம்; உள்ளே புகும் வாயு சக்தி; சிவம் உயிர், சக்தி உடல்; அம்பலம்-புருவ நடு; தட்சிணா மூர்த்தி-குரு எனத் தத்துவத் துறையில் தனிப் பொருள் தந்தபோதிலும் தாங்கள் புலப்படுத்த விழையும் ஞானக் கருத்துகள் சமயங்கடந்தவை என்பதை உணர்த்தவே குணங்குடி மஸ்தான் போன்ற இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் செல்வர்களாகிய சூஃபிகள், ஹிந்துக்கள் சமய அடிப்படையில் பயன்படுத்தும் சொற்களைத் தாராளமாகக் கையாண்டு தங்கள் சிந்தனைகளையும் மார்க்க உணர்வுகளை-ஞானக் கருத்துகளை சமய சமரச எண்ணத்திற்கு வண்ணமூட்டும் வகையிலும் சமய நல்லிணக்க உணர்வுக்கு வலுவூட்டும் வகையிலும் செயல்பட்டுள்ளனர் என்பது எண்ணி இன்புறத்தக்கதாகும். குணங்குடியார் போன்ற மெய்ஞ்ஞானிகளின் பொதுமை உள்ளம் வழிகாட்டும் ஒளி விளக்காகும்.

இஸ்லாமிய சூஃபிகளும்
ஹிந்து சமயச் சீடர்களும்

சித்தர்களைப் போன்றே இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகளாகிய சூஃபிகளின் சீடர்களாக அமைந்தவர்களில் பெரும்பான்மையினர் ஹிந்து சமயத்தையும் பிற சமயங்களையும் சேர்ந்தவர்களே ஆவர்.

குணங்குடி மஸ்தான், தக்கலை பீர் முஹம்மது அப்பா, பெண்பாற் சூஃபிகளில் தென்காசி ரசூல் பீவி, இளையான் குடி கச்சிப்பிள்ளையம்மாள் போன்றோர் பெற்றிருந்த சீடர்களில் ஒரு சிலர் தவிர மற்றவர்களெல்லாம் பிற சமயத்தவர்களே ஆவர். காரணம், சூஃபிகளின் சிந்தனைகளும் கருத்துகளும் இஸ்லாத்தின் அடிப்படையில் சமயங் கடந்த கண்ணோட்டத்தோடு இருந்ததேயாகும்.

சூஃபியிசத்தின் அடித்தளப் பண்புகளாக அமைந்திருப்பவை மூன்று என்பார் இந்தியச் சூஃபி ஞானி காஜா நஸ்ருத்தீன் என்பார். அவையாவன 1.காய சுத்தி (தஸ்கிய நப்ஸ்) 2. இதய சுத்தி (திஸ்பியா கல்பு), 3 ஆத்ம சுத்தி (தஜ்லியா ரூஹ்) என்ற இம்மூன்று கோட்பாடுகளும் சமயங் கடந்த தன்மை கொண்டவை என்பதில் ஐயமில்லை. இறைநாட்டமும் கடைத்தேற்ற ஆர்வமும் கொண்ட அனைவருக்கும் பொதுவானவை. எனவே, சித்தர்கள், சூஃபிகள் போன்றவர்கள் சமய சமரசத்தைத் தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்டதோடு மக்களும் அவற்றைக் கைக்கொண்டு பேணி பெரு நிலைபெற வழிகாட்டி உழைத்தனர்.

மதபேதம் ஓதி மதிகெட்டவர்க்கு
எட்டாத வான் கருணை வெள்ளம்

குணங்குடி மஸ்தான் போன்ற இஸ்லாமிய மெய்ஞ்ஞானக் கவிஞர்கள் சாதி, சமய வேறுபாடுகட்கு அப்பாற் பட்ட நிலையில், ஏக இறையுணர்வோடு, மனித குலம் முழுமைக்குமான ‘இலங்கு மெய்ஞ்ஞான’ உணர்வுகளை ஊட்டி, ஒவ்வொருவரையும் இறை நெறி வழி வாழும் மனிதப் புனிதர்களாக மாற்றும் அருந்தொண்டை ஆற்றியவர்கள். ஆகவேதான், அவர்தம் சமயங்கடந்த அருந் தொண்டை, சமரச சன்மார்க்கப் பணியைப் போற்றிப் புகழ வந்த குணங்குடியாரின் சீடர் மகாவித்துவான் சரவணப் பெருமாளையரவர்கள் தன் நான்மணி மாலையில்

கடல் சூழ் புவியில் உளத்து இருளைக்
கருணை ஒளியினால் களைந்து
விடல் சூழ் பவரிற் குணங்குடியான்
மிக்கோன் எனற்கோர் தடையுளதோ

எனப் புகழ்ந்துரைக்கலானார்.

குணங்குடியார் தன் குருபரனை ஒருபரனாகக் கொண்டாடிடும் சமநோக்கோடு “மதபேதம் ஒதி மதி கெட்டவர்க்கு எட்டாத வான் கருணை வெள்ளம்” எனக் கொண்டாடுவதற்கொப்ப அவர் தம் மாற்றுச் சமயச் சீடர்கள் மதபேதமின்றி அவரைப் போற்றிக் கொண்டாடலாயினர். மத பேதமற்ற சமரச உணர்வு முழுமையாக மக்களிடம் முகிழ்த்தெழ வேண்டும். அத்தகைய பெரு நிலை என்று ஏற்படுமோ என ஏங்கி,

“தீது மத பேதங்கள் அற்றுமே எங்குமிது
செல்வதுவும் எக்காலமோ”

எனப் பாடுகிறார்.

இறைவனின் இன்னருளைப் பெற அழைப்பு விடுக்கும்

போதுகூட ‘முஸ்லிம்கள்’ என்று குணங்குடியார் அழைக்க வில்லை. மத, இன, மொழி உணர்வுகட்கு அப்பாற்பட்ட முறையில் அனைவரையும் சமரச உணர்வோடு அழைக்கிறார்.

“போவோம் குணங்குடிக்கு எல்லோரும்
புறப்படுங்கள்
போவோம் குணங்குடிக்கு எல்லோரும்”

அவர் கூறும் குணங்குடி என்பது ஊரல்ல; அனைத்து நல்லுணர்வுகளுக்கும் நற்குணங்களுக்கும் மூலமான, அவை குடியிருக்கும் மூலப் பொருளான பரம் பொருளையே. இறைவனையே குறிக்கிறது.

இறைவனின் பேரருட் திறம் அணுவிலும் அண்ட கோடிகளிலும் இரகசியமாய் விளங்குவதன் காரணத்தை அறிய விழையாமல் உன் தெய்வம், என் தெய்வம் எனப் பிதற்றித் திரிவதைக் கண்டு,

“அண்ட கோடிகளையும் தன்னுள் வைத் தணுவினுக்
கணுவான காரணத்தை அறியாமல்
என்தெய்வம் உன்தெய்வம் என்பார்க்கு
அவ்வகைக் காரணத்தை
எண்டிசை விளைக்கின்ற வித்தாயிருந்துமோ
நிடமற்ற காரணத்தை
எய்திக் களிக்கவடி யேனுமுமை நம்பினேன்
எதிர் காட்டி ஆளுதற்கே”

எனத் தன் குரு பிரானாகிய ஹஜ்ரத் முஹையித்தீனை நோக்கிப் பாடுகின்றார்.

இதைப் போலவே விஷ்ணு சுவாமி, மத்வாச்சாரியார், நிம்பார்க்கர் (பாஸ்கராச்சாரியார்) போன்ற ஹிந்து சமயாச் சாரியர்களின்-போதனைகளின் செழுமைக்கும் இஸ்லாமியத் தத்துவச் சிந்தனைகள் உரமாயமைந்துள்ளன என்பதைத் தத்துவ ஆய்வுலகம் நன்கறிந்துள்ளது.

இவ்வாறு ஹிந்து சமய நெறியினுடைய செழிப்பான வளர்ச்சிக்கும் வளமூட்டும் மாறுதல்களுக்கும் இஸ்லாமிய நெறியும் அதன் கட்டுக்கோப்பான நடைமுறைகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருங் காரணமாயமைந்துள்ளதை, அமைந்து வருவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இத்தகு பங்களிப்பு மூலம் முஸ்லிம்களும் பிற சமய மக்களும் இதயத்தால் நெருங்கி வர இயல்கின்றது. அவர்களிடையே உருவாகும் இணைப்பும் பிணைப்பும் மேலும் வளர, வலுப்பட இன்னும் அதிக அளவில் சமயத்தவர்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். இது காலக் கட்டாயமும் கூட.

பிற மத உணர்வுகளுக்குப் பாதுகாப்பு

ஒவ்வொருவரும் தத்தமது சமயக் கோட்பாட்டைப் பின்பற்றுவதற்கும் தங்கள் மனச்சாட்சிப்படி நடப்பதற்கும் இஸ்லாம் முழு உரிமை வழங்குகிறது. அது மட்டுமல்ல மற்றுமொரு தனிமனித உரிமையையும் உறுதி செய்கிறது. அதுதான் ஒரு சமயத்தவரின் மத நம்பிக்கையை, சமயச் சடங்கை மற்ற சமயத்தவர்கள் மதித்து நடக்க வேண்டும் என்பதே அது. இந்த உணர்வுக்குப் புறம்பாக நம்பிக்கை, செயல்பாடுகளுக்கு மாறுபாடாக நடப்பதை இஸ்லாம் அறவே ஏற்கவில்லை. இதைத் திருக்குர்ஆன் திருமறை,

“(நம்பிக்கையாளர்களே) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (ஆண்டவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் பழிக்காதீர்கள்.” (6:108)

இவ்வாறு பணிப்பது சிலைகளையும் கடவுளர் உருவங்களையும் வணங்குவதை மட்டுமன்று, தாங்கள் பெரிதும் மதித்துப் போற்றும் தலைவர்களின் உருவங்களை சிலை வடிவிலும் படவடிவிலும் வணங்கிப் போற்றுவதற்கும் பொருந்தும். ஒரு முஸ்லிமின் மார்க்க அடிப்படையில் இத்தகைய உருவ வணக்கமுறை தவறானதாக இருந்த போதிலும், பிற சமயத்தவர்களின் கண்ணோட்டத்தில் இச்செயல் மதிப்பும் மரியாதையும் உடைய செயலாகக் கருதப்படலாம். இதனால், இச்செயலை இழித்து பழித்து பேசுவதால் அச்சமயத்தவர்களின் அல்லது