இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

போக்குடையவர்களின் மனம் புண்படலாம். எனவே இதை ஏற்புடைய செயலாக இஸ்லாம் ஏற்காமல் அதை அடியோடு தவிர்க்க வேண்டும் எனக் கட்டளையிடுகிறது.

அவ்வாறாயின், பிற சமயங்களைப்பற்றி, கொள்கை கோட்பாடுகளைப்பற்றிப் பேசவோ, விவாதிக்கவோ அறவே கூடாதா எனக் கேட்கலாம். பிற சமயங்களைப் பற்றி பேசுவதையோ விவாதிப்பதையோ இஸ்லாம் அறவே தடைசெய்யவில்லை. இத்தகைய கலந்துரையாடல்கள், விவாதங்கள் பிற சமயத்தவர்களின் மனம் எக்காரணம் கொண்டும் புண்பட்டு விடாதபடி மிகவும் கவனத்தோடும் உயர்ந்த பண்பாட்டோடும் நடைபெற வேண்டும் என்பதை இஸ்லாம் மிகவும் அழுத்தமாக வலியுறுத்துகிறது. இதையே திருமறை,

“வேதம் பெற்றுள்ள மக்களோடு பண்பட்ட அழகிய
முறையிலன்றி விவாதம் செய்யாதீர்கள்”

எனப் பணிக்கிறது. இக்கட்டளையானது வேதங்களையுடைய மதத்தவர்ட்கு மட்டுமின்றி பிற சமய நம்பிக்கையாளர்கட்கும் பொருந்தும்.

பிற சமயங்களை மதிக்கப் பணிப்பதோடு அவற்றிற்குப் பாதுகாப்புக் கேடயமாகவும் செயல்படத் தூண்டுகிறது இஸ்லாம்.

இஸ்லாத்தின் பிற சமயப் பரந்த நோக்கு

உலகிலுள்ள ஒவ்வொரு சமயமும் தத்தமது சமயத்தைப் பாதுகாப்பைப் பற்றியே பெரிதும் பேசுகின்றன; வலியுறுத்துகின்றன. ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே இறைவணக்கத் தலமாகிய மஸ்ஜிதுகளைப் பாதுகாப்பது பற்றிப் பேசுவதைவிட பிறசமய வணக்கத் தலங்களாகிய யூத ஜெபாலயங்கள், கிருஸ்தவ மாதா கோயில்கள் போன்ற இறை வணக்கத் தலங்களைப் பாதுகாப்பது பற்றியே அதிக ஆர்வமும் அக்கறையும் காட்டுவதை இறை மறையாகிய திருக்குர்ஆன் மூலம் அறிந்தின்புற முடிகிறது.

“அல்லாஹ் சில மனிதர்களை வேறுசில மனிதர்களைக் கொண்டு தடுத்து விலக்காதிருந்தால் மடாலயங்களும் மாதா கோயில்களும் யூத ஜெபாலயங்களும் அல்லாஹ்வின் திருநாமம் அதிகமதிகம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் தகர்க்கப்பட்டே போயிருக்கும்” (திருக்குர்ஆன் 22-40)

தொடக்கத்தில் முஸ்லிம்கள் உருவ வழிபாட்டை விடுத்து ஒரே இறைவனை மனத்தளவில் எண்ணி வணங்கும் இஸ்லாத்தின் ஏக தெய்வக் கொள்கையை ஏற்காத குறைஷிகள் முஸ்லிம்களைச் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாக்கினார்கள். ஏக தெய்வ இறை நம்பிக்கையிலிருந்து இம்மியும் பிசகாத முஸ்லிம்கள், பிறந்த மண்ணை விட்டு, சொத்து சுகங்களைத் துறந்து செல்ல நேர்ந்த போதும்கூட ஓரிறைக் கொள்கையை நிலை நாட்ட அனைத்துத் தியாகங்களையும் மனமுவந்து ஏற்றவர்கள் முஸ்லிம்கள், சிலை வணக்க உருவ வழிபாட்டாளர்களாகிய குறைஷிகளுக்கு அடுத்த நிலையில் யூத மதத்தவர்களும், கிருஸ்தவ வழிபாட்டாளர்களாக விளங்கியவர்கள் தாம். ஆயினும் கூட அவர்களின் வணக்கத்தலங்களின் பாதுகாப்புக்குக் கட்டியங் கூறுகிறது இஸ்லாமியத் திருமறை என்பது எண்ணத்தக்கதாகும். பல தெய்வ, சிலை வணக்க வழிபாட்டாளர்கள் தாங்களாக உணர்ந்து தெளிந்து ஏக தெய்வக் கொள்கையை ஏற்கும்வரை அவர்களது சமய உணர்வுகளை, வழிபாட்டுச் சமய சம்பிரதாயங்களை அவற்றிற்கு நிலைக்களனான வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என இஸ்லாம் போதிக்கிறது. இஸ்லாம் தவிர வேறு சமயங்கள் எதுவும் இத்தகைய உணர்வை, கட்டளையைப் பிறப்பித்துள்ளதாகத் தெரியவில்லை. பிற சமயச் சகிப்புத் தன்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் இதைவிடச் சிறந்த சான்றை உலக வரலாற்றில் காண முடியுமா?

முதலில் வந்த வேத சமயம் என்பதால் முதலிடத்தை யூத சமயத்திற்கும் இரண்டாவது வேதம் பெற்ற சமயம் என்பதால் கிருஸ்தவ மாதா கோயில்களுக்கும் இறுதியாக வந்த வேத மார்க்கம் என்பதால் இஸ்லாமிய மஸ்ஜிதுகள் மூன்றாவது இடத்தையும் பெறுகின்றன.

இந்த இறைக் கட்டளை பிறப்பிக்கப்பட்டகாலச் சூழலைக் கருத்திற்கொண்டு நோக்கும்போதுதான், இதன் கன பரிமாணம் எத்தகையது என்பதை நம்மால் உணர்ந்து தெளிய முடியும்.

அன்றைய யூத மத ஜெபாலயங்கள் செல்வவளம் மிக்கவைகளாகத் திகழ்ந்தன. பொன்னும் மணியும் குவிந்துள்ள கருவூலங்களாகவே விளங்கின. எனவே, இப்பொருள் வளங்களைக் கவர்வதற்காக இச் ஜெபாலயங்களைத் தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது வரலாறு தரும் தகவல்கள். அதேபோன்று அக்கால மடாலயங்களிலும் மாதா கோயில்களிலும் இளம் பெண்கள் ‘கன்னிகாஸ்திரீ’ களாகத் தங்கி இறைத் தொண்டில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. அத்துடன், செல்வச் செழிப்பும் கொண்ட மடாலயங்களையும் மாதா கோயில்களையும் தாக்கும் முயற்சிகள், தீயவர்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டன. அத்தகைய செயல்கள் முஸ்லிம்களால் முறியடிக்கப்பட்டு, யூத மத ஜெபாலயங்களும் கிருஸ்துவ சமய மடாலயங்களும் மாதா கோயில்களும் காக்கப்பட்டன. 1450 ஆண்டுகட்கு முன்னதாக இஸ்லாத்தினால் கட்டிக் காக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்ட இத்தகைய மதச்சகிப்புணர்வோடு அவற்றைக் காக்கும் சமய தாராளக் கொள்கையின் விளைவாகவே பழம்பெரும் யூத, கிருஸ்துவ வணக்கத் தலங்கள் பலவும் இன்றளவும் நிலை பெற முடிந்தது என்பதுதான் வரலாறு தரும் பேருண்மை.

சமய உணர்விலா ‘நாடாளும் மன்னர்கள்’

முஸ்லிம் மன்னர்களாகட்டும் ஹிந்து மன்னர்களாகட்டும் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் போரிடுவதோடு நாடு பிடிக்கும் வேட்கையுடையவர்களாகவே வரலாற்றில் காணப்படுகிறார்கள். அந்த வகையில் முஸ்லிம் மன்னர்களில் சிலரிடம் இஸ்லாமிய உணர்வை விட ‘நாடாளும் மன்னர்கள்’ என்ற உணர்வே மேலோங்கியிருந்ததை அவர்தம் செயற்பாடுகள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. இதில் ஹிந்து, முஸ்லிம் என்பதெல்லாம் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது என்பதைப் பல வரலாற்று நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. இதற்கேற்பவே அவர்தம் படைத் தளபதிகளும் அமைந்தனர்.

கஜினியின் படைத் தளபதியாக விளங்கியவர் திலக் எனும் ஒரு ஹிந்துவே என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். திலக் கஜினியின் வெற்றியே குறியாகக் கொண்டிருந்தவர். கஜினி ஆட்சிப் பகுதியில் எங்கு என்ன குழப்பம் அல்லது அமைதியின்மை அல்லது புரட்சி ஏற்பட்டாலும் அங்கு சென்று வீர தீரத்துடன் போராடி அடக்கி வெற்றி பெரும் வல்லமை கொண்டவர். ஒரு சமயம் துருக்கிப் பகுதியில் முஸ்லிம்களிடையே மூண்டெழுந்த மாபெரும் சச்சரவை அடக்க கஜினி தளபதி திலக்கையே அனுப்பினார். முஸ்லிம் மக்களை மிகக் கொடுரமான முறையில் அடக்கினார் திலக். இதைப்பற்றி வரலாற்று வல்லுநரான பி.என். பாண்டே என்பவர் கூறுகிறார் :

"கஜினி முகம்மதுவின் சேனைத் தளபதியாக இருந்தவர் ஒரு ஹிந்து. அவர் பெயர் திலக். மத்திய ஆசியாவில் உள்ள துருக்கிஸ்தானில் கஜினி முகம்மது ஆட்சியில் புரட்சி ஏற்பட்டது. அதை அடக்க கஜினி முகம்மது, திலக்கைத் தான் அனுப்பினார். துருக்கிஸ்தான் நூற்றுக்கு நூறு சதவிகிதம் முஸ்லிம்களைக் கொண்ட பிரதேசம். அங்கே நடந்த புரட்சியை அடக்குவதற்கு கஜினியின் தளபதி திலக் செய்த அட்டுழியங்களுக்கும் அதிமதிகளுக்கும் அளவே இல்லை. அந்த நிகழ்ச்சிக்கு ஒப்பாக வரலாற்றில் மற்றொரு கொடிய நிகழ்ச்சியை எடுத்துக் கூறமுடியாது. அத்தகைய அராஜகம் நடந்தது. இதையெல்லாம் மதப்போர் என்பதா? கஜினி முகம்மதுவின் தளபதி திலக் முஸ்லிம் பிரதேசத்தில் செய்த அட்டுழியத்தை என்னவென்று கூறுவது?” (வரலாற்றறிஞர் பி என்.பாண்டே 13-1-1996 ‘தி டைம்ஸ் ஆஃப் இண்டியா’ பேட்டியில்)

மன்னர் செயல்களுக்கு மதச் சாயம்

வரலாறு நெடுகிலும் ஒரு உண்மை பளிச்சிடுகிறது. மன்னர்களின் போர் நடவடிக்கைகளுக்கு மதச் சாயம் பூசும் செயலே அது. தங்கள் தவறான ஆதிக்க நோக்குக்குப் பாதுகாப்புத் தேடும் முயற்சி இது. சிலசமயம் ‘ராஜதந்திரப் போக்கு’ என மகுடம் பெறுவதுமுண்டு. இதைப் பற்றி வரலாற்றறிஞர் பி.என்.பாண்டே கூறுவதைக் கேட்போம்.

“இஸ்லாத்தின் பெயரைக் கூறி முஸ்லிம் மன்னர்கள் போர்களை நடத்தியுள்ளனர். அதேபோல மற்ற மதங்களைச் சேர்ந்த மன்னர்களும் தத்தமது மதங்களின் பேரால் பல போர்களை நிகழ்த்தியுள்ளனர். இத்தகைய போர்களுக்கும் மதங்களுக்கும் சம்பந்தமில்லை. மன்னர்கள் தங்களின் ஆதிக்கப் போக்கிற்கு, மதங்களைப் பகடையாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதே உண்மை”

(தி டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழில் பி.என்.பாண்டே)

ஜிஹாதின் பெயரில் அரசியல் மோசடி

எங்காவது முஸ்லிம் மன்னர்கள் ஒரு நாட்டை ஆக்கிரமிக்கவோ அல்லது ஆளும் பகுதியை விஸ்தரிக்கவோ படையெடுப்பு நிகழ்த்தினால் அதை ‘இஸ்லாமிய ஜிஹாது’ எனக் குறிப்பிடுவது மிக மோசமான மோசடியாகும். முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய பல தவறான கருத்துகள் பரப்பப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ‘ஜிஹாது’ என்பதுமாகும். முஸ்லிம் அல்லாதவர்களிடையே மட்டுமல்ல முஸ்லிம்களிடையிலும் இஸ்லாமிய நெறியின் அடிப்படை உண்மைகளை உணர்ந்து தெளியாநிலை இருந்து வருவதை மறுப்பதற்கில்லை.

சுருங்கச் சொன்னால் இஸ்லாத்தைப் பற்றிய மிகத் தவறான பிரச்சாரத்துக்கு ‘ஜிஹாது’ என்ற சொல் பயன் படுத்தப்பட்டு வருகிறது. எங்காவது முஸ்லிமிகளிடையே தீவிரத் தன்மை தலைதூக்கினால் அதை ‘ஜிஹாது’ என்ற சொல்லால் குறிப்பிடுவது இன்று வழக்கமாகி விட்டது. தீவிரவாதத்துக்கும் சாந்தி சமாதான மார்க்கமான இஸ்லாத்துக்கும் தொடர்பே இல்லை என்பது மிகத் தெளிவான உண்மை.

ஜிஹாதின் உண்மைப் பொருள் என்ன?

ஒரு முஸ்லிம் மேற்கொள்ளும் ஜிஹாதுவினுடைய நோக்கம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை “வ ஜாஹிது ஃபீஸபீலிஹி” என்ற சொற்றொடர் மிகத் தெளிவாகக் கூறுகிறது. இதற்கு ‘அல்லாஹ்வின் வழியில் ஜிஹாது செய்யுங்கள்’ என்பது பொருளாகும்.

இரு வகைகளில் ‘ஜிஹாது’

திருக்குர்ஆன் அடிப்படையில் ஜிஹாது இருவகைப் பட்டதாக அமைந்துள்ளது. ஒன்று ‘ஜிஹாதுல் அஸ்கர்’ மற்றொன்று ‘ஜிஹாதுல் அக்பர்’.

ஒரு முஸ்லிம் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ ஆபத்து வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து என்று வரும் போது அதை உடனடியாக எதிர்த்துப் போராடுவது அவன் செய்யும் ‘ஜிஹாதுல் அஸ்கர்’. தன்னைப் பாதுகாத்துக் கொள்வது வன்முறையும் அல்ல, தீவிரவாதமும் அல்ல! சுருக்கமாக இதை வெளிப்பகையை அல்லது பகைவர்களை எதிர்த்துப் போராடுதல் எனக் கூறலாம்.

மற்றொன்று ‘ஜிஹாதுல் அக்பர்’ ஆகும். இதற்கு ‘மாபெரும் போராட்டம்’ என்பது பொருளாகும்.

ஒவ்வொரு மனிதனிடத்திலும் கண், காது, மூக்கு, வாய், மெய் (உடம்பு) என்னும் ஐம்பொறிகள் உண்டு. இவற்றோடு தொடர்புடையவை ஐம்புலன்கள் ஆகும். இதை ஹிந்து மதத் தத்துவத்தில் ஐந்திரியங்கள் எனக் கூறுவா.

இத்தகைய ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆற்றலைப் பெறுவதற்குப் பெரும் முயற்சி செய்து போராடி, ஆன்றவிந்தடங்கிய சான்றோர் ஆவதற்கு முயற்சிப்பதே மாபெரும் ஜிஹாது ஆகும். இதையே வள்ளுவரும்,

உரனெனும் தோட்டியான் ஒரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

எனக் கூறினார்.

அதாவது அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி ஆள்பவன் அறிவுக்கு வித்துப் போன்றவனாவான் என்பது அவர்தம் கருத்தாகும்.

வேட்டை நாயும் வெறி நாயும்

இதே கருத்தை இன்னும் அழகான உவமான, உவமேயங்களுடன் சிந்தைகொள் மொழியில் எடுத்தியம்புகிறார் குணங்குடியார் அவர்கள்.

மாசற்ற மனமே தெளிவான சிந்தனைகளும் ஆன்மீக உணர்வுகளும் பூத்துக் குலுங்கும் தோட்டம். மனதைப் புனிதப்படுத்துபவன்தான் இறையருள் நாட்டத்தை எளிதாகப் பெறமுடியும். வேட்டை மேற் செல்பவன் வேட்டைப் பொருளை எளிதாகப் பெற வேட்டை நாய்களைத் துணைக்குக் கொண்டு செல்வான். அவன் கண்ணில் படும் வேட்டைப் பொருளை எசமானனின் குறிப்பிற்கேற்ப விரைந்து சென்று பிடித்து வந்து சேர்க்கும். வேட்டை நாய்களுக்குப் பதிலாக வெறி நாயைத் துணைக் கொண்டு வேட்டைக்குச் சென்றால், அது வேட்டைப் பொருளைப் பாய்ந்து சென்று பற்றி வராததோடு, தன்னைக் கொண்டு சென்ற வேட்டைக்காரன்மீதே பாய்ந்து கடித்துக் குதறி காயமேற்படுத்திவிடும் இதேபோன்று, இறையருள் பெற விரும்புபவன் அன்பு, அருள் ஆகிய இனிய பண்புகளைக் கைக் கொண்டால், அவற்றின் துணை கொண்டு இறையன்பை அருளை எளிதாகப் பெறலாம். மாறாக வேட்டை நாய் போன்று அவா, வெகுளி, ஆசை, அகங்காரம், இன்னாச் சொல் போன்றவற்றைக் கைக்கொண்டு இறையருள் பெற விழைந்தால், இறையன்பை - அருளைப் பெற முடியாமற் போவதோடு, இத்தீய குணங்களே அவன் அழிவுக்கும் காரணமாக அமைந்து விடும் என்பதை,

“வேட்டை பெரிதென்றே வெறி நாயைக் கைப்பிடித்து காட்டிற் புகலாமோ கண்ணே றகுமானே”

என்ற பாடல் மூலம் தெளிவுபடுத்துகிறார் குணங்குடி மஸ்தான்.

பிறருக்குத் தீயன எண்ண அல்லது செய்ய உள்ளத்தளவில் உருக்கொண்டெழும் தீய உணர்வுகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுதலே சிறப்புமிகு செயலாகும். அதுவே ‘ஜிஹாதுல் அக்பர்’ ஆகும்.

இவ்விரண்டையும் இன்னும் சிறிது ஆழ ஆராய்ந்தால் இவற்றின் உன்னதச் சிறப்புகள் தெற்றன விளங்கும்.

சாந்தி - சமாதான மார்க்கமாக இறைவனால் அறிவிக்கப் பட்டுள்ள இஸ்லாத்தில் ஆக்கிரமிப்புக்கு இடமே இல்லை. ஒரு முஸ்லிம் முதலில் யார் மீதும் தாக்குதல் நடத்தவோ, போர் தொடங்கவோ, அன்றி எதிரியின் நிலத்தையோ பொருளையோ ஆக்கிரமிப்புச் செய்யவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால், அதே சமயம் பிறரால் முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகும்போதோ அல்லது பிறர் படையெடுத்து வரும்போதோ அல்லது ஆக்கிரமிப்புச் செய்யும் போதோ தற்காப்புக்காக போரிடுவதையும் அதன்மூலம் வெற்றி பெறுவதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் வாணிபம் செய்யும் பொருட்டு சிந்துவெளிப் பகுதிக்கு வந்து தங்கியிருந்த அரபு வணிகர்கள் அப்பகுதியை ஆண்ட ஹிந்து மன்னர்களாலும் மற்றவர்களாலும் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். பாதுகாப்பற்ற நிலையில் சிந்து வெளிப் பகுதியில் வணிகத் தொழில் புரிவது பெரும்பாடாக இருந்தது. இதையறிந்த அரபக ஆட்சித் தலைவர்கள் சிந்து வெளிப் பகுதி அரபு வணிகர்களுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலேயே அப்பகுதிக்கு முகம்மத் பின் காசிம் என்பவர் படையுடன் அனுப்பி வைக்கப்பட்டாரேயன்றி, அப்பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு படை கொண்டு இந்திய மண்ணில் கால் பதிக்க வரவில்லை என்பதுதான் வரலாறு.

தற்காப்புக்கே போர்

இஸ்லாம் யாரோடும் சண்டையிடுவதை அறவே விரும்பவில்லை. வம்புச் சண்டைக்கு வருவோரை எதிர்க்க நேரிடும் போதுகூட தற்காப்புக்காகச் சண்டையிடுவதையே அனுமதிக்கிறது. நியாயமற்ற எதிரியின் தாக்குதலை எதிர்த்துப் போரிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதும் கூட, போர் என்பது கடைசி ஆயுதமாகத்தான் இருக்க வேண்டுமெனப் பணிக்கிறது. போரைப் பகைமையின் கருவி என இஸ்லாம் கடிந்துரைக்கிறது.

“உன்னை எதிர்த்துப் போரிடுவோரை எதிர்த்து அல்லாஹ்வுக்காகப் போரிடு ; ஆனால், அவர்களை முதலில் நீ தாக்கி விடாதே. ஆக்கரமிப்பாளர்களை அல்லாஹ் விரும்புவதில்லை” எனத் திருக்குர்ஆன் எடுத்தியம்புகிறது.

இதற்குக் கட்டியங் கூறும் மற்றொரு சான்றாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பிரிவான படைப்போர் இலக்கியங்கள் விளங்குகின்றன. தமிழில் புதுவகை இலக்கியங்களாக உருவாக்கப்பட்ட படைப்போர் இலக்கியங்கள் 18 உண்டு. இவ்விலக்கியங்களின் தலைப்புகள் அனைத்தும் கதாநாயகர், அல்லது நாயகிகளின் பெயரில் அமையாது, எதிரிகளின் பெயரிலேயே அமைந்துள்ளன. சாதாரணமாக யார் படையெடுத்து செல்கின்றாரோ அல்லது போருக்குக் காரணமாக அமைகின்றாரோ அவர் பெயரால் இலக்கியப் படைப்பின் தலைப்பு அமைவதுதான் மரபு. ஆனால், முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் உருவாக்கிய படைப்போர் இலக்கியங்கள் அனைத்துமே முஸ்லிம் அல்லாதவர்களின் எதிரிகளின் பெயராலேயே அமைந்துள்ளன. இவ்வாறு முஸ்லிம்களின் மீது ஆக்கிரமிப்பாகப் படையெடுத்து வந்த முஸ்லிம் அல்லாத எதிரிகளின் பெயராலேயே ‘இரவுசுல் கூல் படைப்போர்’, ‘செய்யிதத்துப் படைப்போர்’, ‘இபுனியன் படைப்போர்', ‘வடோச்சிப் படைப்போர்’, ‘உச்சிப் படைப்போர் என அழைக்கப்படுவது எண்ணத்தக்கதாகும்.

இரண்டாவது பொருளான ‘தீயன செய்யத் தூண்டும் உள்ளத்து விலங்குணர்வை எதிர்த்துப் போரிடுதல்’ என்பதையே திருக்குர்ஆன் திருமறையும் பெருமானாரின் வாழ்வும் வாக்குமான ஹதீஸ்களும் அதிகமதிகம் வலியுறுத்துகின்றன. இதற்கான பயிற்சிக்களமாக உருவானதே இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் துறையான ‘சூஃபியிஸம்’. தன் மன இச்சைகளுக்கு அடிமையாகாமல் அதனை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதுதான் ‘ஜிஹாது’.

தவறான செயல்களைச் செய்வோரைத் திருத்தி அவர்களை நேரான செயல்களின்பால் திருப்புகின்ற செயலும் ‘ஜிஹாது தான்.

தான் முயன்று தேடிய செல்வத்தை இறைவழியில் செலவு செய்வதும் ‘ஜிஹாது’ ஆகும்.

எனவே, ‘ஜிஹாது’ என்ற சொல்லை ‘முஸ்லிமல்லாதவர்கள் மீது நடத்தும் புனிதப் போர்’ எனத் தவறான பொருள் விளக்கம் தந்து இஸ்லாமிய நெறி மீது மாசு கற்பிக்க முயல்வது முற்றிலும் தவறான போக்காகும். இதை உண்மைக்குப் புறம்பான ஒருவகை விஷமப் பிரச்சாரம் என்றே கூறலாம்.

பிற சமயத்தவர்மீது ‘ஜிஸ்யா’ வரி ஏன்?

‘ஜிஹாது’ போன்றே இஸ்லாமியரல்லாதவர்களால் மிகத் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு அல்லது தவறான முறையில் பொருள்தரும் வகையில் விளக்கப்பட்டு வரும் இஸ்லாமியச் சட்டச் சொல் ‘ஜிஸ்யா’ என்பதாகும்.

முஸ்லிம்களிடம் எவ்வித வரியும் வாங்காத நிலையில் ‘முஸ்லிம் அல்லாதவர்’ என்ற ஒரே காரணத்துக்காகத் தண்டத் தீர்வை போன்று வசூலிக்கப்பட்ட வரி என்ற மனப் பிரமையே ஆங்கில எழுத்தாளர்களாலும் இஸ்லாமிய விரோதப் போக்குள்ளவர்களாலும் இதுவரை ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளது.

அவர்கள் கருதுவதுபோல் ‘ஜிஸ்யா’ என்பது முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து கட்டாயமாக வசூலிக்கும் தண்டத் தீர்வையோ அல்லது அபராதத் தொகையோ அன்று. பின், ஏன் இந்தத் தனி வரி?

இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்களால் கொடுக்கப்பட்டு வந்த சிறு வரியே இது. இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாத பிற சமயக் குடிமக்கள் போர்ப் படைகளில் சேருவதினின்றும் விலக்குப் பெறும் பொருட்டும், சமுதாய வாழ்வில் தம் உயிர் உடைமைகளுக்கு முழுப் பாதுகாப்புப் பெறும் பொருட்டும் அரசுக்கு இச்சிறு வரியைச் செலுத்தி வந்தனர்.

மன்னரின் ஆட்சியின்கீழ் வாழும் அனைத்து இன, சமய மக்களும் இராணுவத்திலும் பிற சமுதாயப் பணியிலும் தேவைப்படும்போது இணைந்து நின்று சேவையாற்ற வேண்டியது ‘குடிமக்கள்’ என்ற முறையில் அனைவரின் இன்றியமையாக் கடமையாகும் என்பது எல்லோரும் ஒப்ப முடிந்த உண்மையாகும்.

ஆனால், இஸ்லாமிய ஆட்சியில் போர்ப்படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது கட்டாய விதியாகும். ஆனால், இவ்விதி முஸ்லிமல்லாதவர்கட்குக் கட்டாயமில்லை. விரும்புபவர் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றாலாம். விரும்பாதவர் ‘ஜிஸ்யா’ எனும் மிகச் சிறு தொகையை வரியாகச் செலுத்தியிருந்தால் அவர்கள் முழு அளவில் விலக்குப் பெறலாம். இவ்வாறு வசூலிக்கப்படும் ‘ஜிஸ்யா’ வரி முழுக்க சமுதாய நலப் பணிக்காக மட்டுமே செலவிடப்படுமேயன்றி அரசு நிர்வாகக் காரியங்களுக்கோ அறவே செலவிடப்படுவதில்லை. சுருங்கச் சொன்னால் முஸ்லிம் அல்லாதவர்களின் ஒட்டுமொத்தச் சமுதாய நலனுக்கும் பாதுகாப்புக்குமென வசூலிக்கப்பட்ட தொகையே ‘ஜிஸ்யா’. இந்த ஜிஸ்யா வரியின் பெரும் பகுதி ஹிந்துக் கோயில்களின் பராமரிப்புக்கும் புனருத்தாரணத்துக் கும் பயன்படுத்தப்ப்ட்டு வந்ததாகப் பல வரலாற்றுக் குறிப்புகள் காணக் கிடக்கின்றன.

அதுமட்டுமல்ல, முஸ்லிம்களிடமிருந்து இரண்டரை சதவீதம் ‘ஜக்காத்’ எனும் ஏழை வரியை அரசு கட்டாயமாக வசூலித்து வந்தது. ஒவ்வொரு முஸ்லிமும் நிறைவேற்ற வேண்டிய ஐம்பெரும் கட்டாயக் கடமைகளில் இஃதொன்றாகும். நாட்டு மக்களில் ஜக்காத்துக்குரியவர்கள் அனைவருக்கும் சமநிலையில் இத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். நாட்டு மக்களில் முஸ்லிம்களிடமிருந்து மட்டுமே ‘ஜக்காத்’ தொகை வசூலிக்க முடியும். பிற சமயத்தவர்களாகிய பிற குடிமக்களிடமிருந்து ‘ஜக்காத்’ தொகை வசூலிக்க முடியாதாகையால், அதற்குப் பகரமாக ஜக்காத் அளவுக்கு 2 1/2 சதவிதம் இல்லாவிடினும் ஒரு சிறுதொகையை தான் வரியாக முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து அரசு வசூலித்தது. ஜக்காத் தொகையைவிட ‘ஜிஸ்யா’ தொகை மிகச் சிறியதாகும். ‘ஜக்காத்’, ‘ஜிஸ்யா’ இரு தொகைகளும் சமுதாய மக்களின் நலப்பணிகளுக்கு மட்டுமே செலவிடப்பட்டன. மிகக் குறைவான ‘ஜிஸ்யா’ தொகையை அரசுக்குத் தந்து நிறைய பயன்களை அரசிடமிருந்து திரும்பப் பெறும் வாய்ப்பு இதனால் முஸ்லிம் அல்லாதாருக்கு வாய்த்தது. இதைத் தெளிவாக நன்குணர்ந்த பிற சமய மக்கள் மிகுந்த விருப்போடு மனமுவந்து ‘ஜிஸ்யா’ சிறு வரியை அரசுக்கு அளித்து வந்தனர் என்பது வரலாற்று உண்மை.

அதிலும்கூட, பெண்கள், வயது முதிர்ந்தோர், சிறுவர்கள், துறவிகள், பார்ப்பனர்கள், பாதிரிகள், தம் சமயப் பணியில் ஈடுபட்டிருப்போர், பார்வையிழந்தோர், உடல் ஊனமுற்றவர்கள், தீராப் பிணியால் பீடிக்கப்பட்டோர் ஆகியோரிடமிருந்து ‘ஜிஸ்யா’ வரி வசூலிக்கக் கூடாது என்பது விதியாகும்.

இந்த வரியை முஸ்லிம் மன்னர்கள் வசூலித்தது போன்று பதினான்காம் நூற்றாண்டில் யூத சமயக் குடி மக்களிடமிருந்து அன்றைய ஹிந்து மன்னர்கள் வசூலித்ததாக வரலாறு கூறுகிறது.

இஸ்லாமியர் ஆட்சியில் முஸ்லிமல்லாத குடிமக்கள் எக்காரணம் கொண்டும் அநீதிக்கு ஆளாகி விடக்கூடாது. அவ்வாறு நேரின் ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் கொடுந் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. இதைப் பற்றி அண்ணலார் அவர்கள் மிகக் கடுமையாகக் கருத்துரைத்திருக்கிறார்கள்.

“எவரேனும் முஸ்லிம் அல்லாத குடிமக்களைக் கொடுமைப்படுத்தினால், இறுதித் தீர்ப்பு நாளின்போது அக் கொடியவர்களுக்கு எதிராகக் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் சார்பில் நான் வாதாடுவேன்.” என்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

உண்மை இவ்வாறு இருக்க, இதற்கு மாறுபட்ட கருத்தையும் உணர்வையும் வரலாற்றாசிரியர்களான ஆங்கிலேயர்கள் வேண்டுமென்றே திரித்துக் கூறி, முஸ்லிம்களுக்கும் பிற சமயத்தினருக்குமிடையே வேறுபாட்டுணர்வும் அதன் மூலம் ஒற்றுமையின்மையும் என்றென்றைக்குமாக நீடிக்கச் செய்யும் சதிச் செயலேயன்றி வேறில்லை என்பதை அறிவுலகம் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது.