இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மனிதர்களுக்கிடையே எந்த வித வேறுபாட்டுணர்வையும் வெளிப்படுத்தி, அவர்களை வருத்துவதை இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை. மற்றவர்களிடையே அன்பையும் பாசத்தையும் பொழிந்து, இணக்கத்தோடு வாழ வழி வகுக்கிறது. இத்தகு செயற்பாடும் அண்டை வீட்டாரிடமிருந்தே தொடங்கப்பட வேண்டுமென இஸ்லாம் விதிக்கிறது.

அண்டை வீட்டிலிருந்து அகில உலக அமைதி

சமுதாயத்தின் அடிப்படை அலகாக அமைவது குடும்பம். சாந்தியையும் சமாதானத்தையும் உயிர் மூச்சாகக் கொண்ட இஸ்லாம் உலக அமைதிக்கான பணி அண்டை வீடுகளிடையே உருவாகி நிலைபெறும் உறவைச் சார்ந்தே அமைய முடியும் என்ற கருத்தை அழுத்தமாக உணர்த்துகிறது.

அண்டை வீட்டினரிடையே உறுதிப்படும் உறவின் உன்னதம் சங்கிலிக் கோர்வையாக வீடு, தெரு. ஊர், நாடு உலகம் என விரிந்து சிறக்கிறது. அஃது ஒருமைப்பாட்டின் இணைப்புப் பாலமாகவும் அமைகிறது. எனவேதான், அடுத்தடுத்துள்ள அண்டை வீட்டாரின் கடமைகளைப் பற்றி இஸ்லாம் பெரிதும் அறிவுறுத்துகிறது. அண்டை வீட்டார் கைக்கொண்டொழுகத்தக்க கடமைகளைப் பற்றிப் பெருமானார் பெரிதும் பேசியுள்ளார்.

அண்டை வீட்டார் உறவினர்களாகவோ உறவினர் அல்லாத முஸ்லிம்களாகவோ அல்லது முஸ்லிம் அல்லாத பிற சமயத்தவர்களாகவோ இருக்கலாம். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இன, மத, மொழி வேறுபாடு அறவே இல்லாது அவர்களிடம் நேசமும் பாசமும் காட்டிப் பழக வேண்டும். அன்பும் பண்பும் கொண்டு ஒருங்கிணைந்து, ஒத்துவாழ எல்லாவகையிலும் முயல வேண்டும்.

‘ஒரு முஸ்லிமின் சமுதாய நல உணர்வு அவனது அண்டை வீட்டாரிடமிருந்து தொடங்கப்பட வேண்டும்’. என இஸ்லாம் விதிக்கிறது.

இதற்கு அடித்தளமான உணர்வையும் சிந்தனையையும் ஊட்டும் வகையில் திருமறை,

“பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள் (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினருக்கும், அண்டை வீட்டினரான அந்நியருக்கும் (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உங்கள் ஆதிக்கத்திலிருப்போருக்கும் (அன்புடன் நன்றி செய்யுங்கள்) எவன் கர்வங்கொண்டு, பெருமையாக நடக்கின்றானோ அவனை, நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.” (திருக்குர்ஆன் 4:36) என்பது திருமறை தரும் வாக்கமுதாகும்.

சமுதாயத்தின் உதவியையும் ஒத்துழைப்பையும் பெறத் தக்கவர்களில் அண்டை வீட்டாரே எல்லா வகையிலும் முன்னுரிமை பெறத்தக்கவர்களாக அமைகின்றனர். இதையே பெருமானார் (சல்) அவர்கள்,

“தனது அண்டை வீட்டாருக்கு நல்லவராயிருப்பவரே இறைவன் திருமுன் அனைவரினும் மேலானவராவார்” என்றும்,

“தன் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்பவர்தான் உண்மையான நம்பிக்கையாளராவார்” என்றும்,

“நீங்கள் நன்மை செய்பவர் என்று அண்டை வீட்டுக்காரர் கூறினால் நீங்கள் நல்லவர்” எனக் கருதப்படுவீர்கள். அல்லாமல் நீங்கள் தீமையே செய்பவர் என்று அண்டை வீட்டுக்காரர் கூறினால் நீங்கள் தீயவராகவே கருதப்படுவீர்” என்றெல்லாம் கூறுவதன் மூலம் ஒருவர் தன் அண்டை வீட்டாருடன் எவ்வாறெல்லாம் சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

எது அண்டை வீடு?

ஒருவரது வீட்டையொட்டியோ அல்லது அருகாகவோ அமைந்துள்ள வீடா? அல்லது அவன் வீட்டிற்கு நான்கு அல்லது எட்டுத் திக்கிலும் அடுத்தடுத்து அமைந்துள்ள வீடுகளா?

இக்கேள்விக்கு விடை கூறவந்த இஸ்லாம் ‘ஒருவனது வீட்டின் அனைத்துத் திக்கிலும் அமைந்துள்ள நாற்பது வீடுகள் அண்டை வீடுகளாகக் கருதப்படும்’ எனத் தெளிவுபடக் கூறுகிறது.

தான் வாழும் வீட்டைச் சுற்றி மட்டுமல்ல, தன் பணியிடத்திலோ அல்லது பயணத்திலோ இருக்கும்போது தன் அருகிருப்போரும் அண்டையராகவே கருதப்படுவர். இவர்கள் அனைவருடனும் ஒரு முஸ்லிம் அன்புடனும் பரிவுடனும் நடந்துகொள்ள வேண்டும். அவர்கட்கு உதவியோ ஒத்துழைப்போ தேவைப்படும்போது, அவர்கள் கேட்காமலே, நாமாகவே முன் சென்று உதவ வேண்டும். அவர்கள் அந்நியராக இருந்தாலும், அந்நியச் சமயங்களைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்தம் உணர்வுகளை, நம்பிக்கைகளை நாம் பெரிதும் மதித்து நடக்க வேண்டும். அவர்களது கொள்கைகளும் கோட்பாடுகளும் இஸ்லாமிய நெறி முறைகளுக்கு வேறுபட்டும் மாறுபட்டும் இருந்தாலும் அண்டை அயலார் என்ற முறையில் அவர்களின் உணர்ச்சிகளோ நம்பிக்கைகளோ ஊறுபட்டுவிடாமல், உள்ளம் புண்பட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்திக் கூறுகிறது.

அதுமட்டுமல்ல, நம் அண்டை அயலாருக்கு ஏதேனும் தீங்கு, வெளியிலிருந்து மற்றவர்களால் ஏற்படுகிறது என்றால் இனம், உறவு, மதம் எதுவும் பார்க்காமல் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் முழுப் பொறுப்பு அண்டை வீட்டுக்காரர் என்ற முறையில் ஒரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமையாகிறது.

“எவருடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாது காப்புப் பெற முடியவில்லையோ, அவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்” என்பது நபிகள் நாயகம் (சல்) அவர்களின் அமுத மொழியாகும்.

இவ்வாறு யாராக இருந்தாலும் எவ்வகையான வாழ்க்கை நெறியை, சமயக் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் அவர்களை சமுதாயத்தின் இன்றியமையா அங்கமாகக் கருதி, அவர்கள் உணர்வுகளையும் சமய நெறிகளையும் கொள்கைக் கோட்பாடுகளையும் வெறுத்தொதுக்காது, உதாசீனப்படுத்தாது, அவர்கள் அளவில் மதிக்கும் உன்னதமான சகிப்புணர்வு வெளிப்பாட்டின்மூலம் சமுதாய ஒருங்கிணைவை உருவாக்க இஸ்லாம் வழிகாட்டுகிறது.

அண்டை வீட்டாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண் டும் என்பதற்கு அண்ணலாரின் வாழ்வும் வாக்கும் வழிகாட்டியாயமைந்துள்ளன.

மதீனாவில் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் வாழ்ந்து வந்தபோது அவரது அண்டை வீட்டுக்காரராக இருந்த மாற்றுச் சமயத்தவரான யூதர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

பெருமானாரின் வீட்டில் ஏதாவது சிறப்புணவு தயாரிக்கப்பட்டால், அதன் ஒரு பகுதியை அவருக்கு அளிக்காமல் அண்ணலார் சாப்பிட்டது இல்லை என்ற தகவல் ஹதீஸில் காணப்படுகிறது.

“அண்டை வீட்டார் பசித்திருக்க ஒரு முஸ்லிம் வயிறாற உணவு உண்ணக் கூடாது. அவ்வாறு உண்பவன் உண்மை யான இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியாது” என்பது அண்ணலாரின் புகழ் பெற்ற பொன்மொழியாகும்.

அண்டை வீட்டார்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி அன்பளிப்புகள் வழங்கிக் கொள்ள வேண்டும். பரிமாறிக் கொள்ளும் அன்பளிப்புப் பொருட்கள் அற்பமானவையாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்பைப் பெருக்கிக் கொள்ள, பாசத்தைப் பகிர்ந்து கொள்ள, அதன் மூலம் சாந்தியும் சமாதானமும் உருவாக வாய்ப்பாயமைகிறது. எனவேதான்,

“அண்டை வீட்டார் அளிக்கும் எப்பொருளையும் அற்பமாகக் கருதக் கூடாது”

என அறிவுரை கூறியுள்ளார் அண்ணலெம் பெருமானார் (சல்) அவர்கள்.

சாதாரணமாக அண்டை, அயலார்க்கு எதையேனும் அன்பளிப்பாகத் தர விரும்பினால், அப்பொருள் சிறந்ததாக இருக்க வேண்டும் என எண்ணுவது இயல்பு. அதிலும் இவ்வுணர்வு பெண்களுக்குச் சற்று அதிகமாகவே உண்டு என்பது உளவியல் தரும் உண்மை. எனவேதான் குறிப்பாகப் பெண்களை நோக்கி,

“பெண்களே ஓர் அண்டை வீட்டார் அன்பளிப்பாக ஒரு பொருளை தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்தால் அதனை அற்பமானதாக கருதக் கூடாது; அது ஒரு ஆட்டின் குழம்பானாலும் சரியே”. எனக் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

எவ்வளவு அற்பமான பொருளாயினும், அதனை முகம் சுழிக்காது, விமர்சிக்காது அன்போடு பெற்று மகிழ வேண்டும். கொடுக்கப்படும் பொருளைவிட, கொடுக்க விழைந்த உள்ளத்து உணர்வையே பெரிதாகக் கருத வேண்டும். அதன்மூலம் அண்டை வீட்டாரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது அண்ணலாரின் அறிவுரையாகும்.

அண்டை வீட்டாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு உணவு சமைக்க முற்படும் போதே மனதில் உருக்கொள்ள வேண்டும் என்கிறார் பெருமானார் (சல்) அவர்கள்.

“வீட்டில் கறி சமைக்கும்போது அண்டை வீட்டாரைக் கருத்தில் கொண்டு குழம்பை (நீர் ஊற்றி) பெருக்கிக் கொள்வீர்களாக” என்பது நபிமொழியாகும்.

ஒரு சமயம் நபித் தோழர் ஒருவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களை நோக்கி,

“வீட்டின் இரு பக்கத்திலும் இரு வீட்டார் அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால், நம் தேவை போக மீந்திருப்பது மிகக்குறைவான சிறுபொருளே. இந்த அன்பளிப்பை ஒருவருக்கு மட்டுமே கொடுக்கவியலும். இந்நிலையில் அதை யாருக்கு அளிப்பது?” என்று ஒரு வினாத்தொடுத்தார். அதற்கு விடையளிக்க முனைந்த பெருமானார் அவர்கள்,

அவ்விரு அண்டை வீட்டாருள் உனக்கு மிக அருகாக வாசலை உடையவருக்கு அந்த அன்பளிப்பை வழங்குவீராக எனக் கூறித் தெளிவுபடுத்தினார் மனிதப் புனிதர் மாநபி அவர்கள்.

ஒரு சமயம் நாயகத் திருமேனியிடம் ஒரு சஹாபி,

‘ஒரு பெண் நோன்பு நோற்பதன் மூலமும் தொழுகை, தான தர்மங்களால் பலரும் பாராட்டும் நிலைபெற்றிருந்தும் தன் நாவினால் தன் அண்டை வீட்டார்களைத் துன்புறுத்துகிறாள்...’ எனக் கூறிய மாத்திரத்தில்,

‘இதன் காரணமாக அவள் நரகத்திலிருப்பாள் எனப் பதிலளித்தார் அண்ணலார் அவர்கள், மேலும் நாயகத் திருமேனி அவர்கள்,

“இறுதித் தீர்ப்பு நாளில் அனைத்துக்கும் முதலாக (விசாரணைக்கு) வரும் இரு மனிதர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு இரு அண்டை வீட்டார் பற்றியதாகும்.”

எனக் கூறியதன் மூலம் அண்டை வீட்டாரின் உறவின் தன்மை எத்தகு வலிமையானது என்பதை உணர்த்துகிறார் அண்ணலார் அவர்கள்.

இரு அண்டை வீட்டார்களில் ஒருவர் மற்றவர்க்கு ஏதேனும் தீங்கிழைத்திருக்கலாம்: அவையே மறுமை நாளின் இறுதித் தீர்ப்புக்கான விசாரணையின்போது மிகப் பெரும் குற்றமாகக் கருதப்பட்டு, விசாரணையில் முந்துரிமை பெறும் என்பது நாயகத் திருமேனியின் உட்கிடக்கையாகும்.

இவ்வாறு மக்களின் உரிமைகள் தொடர்பான அனைத்து அம்சங்களிலும் சிறப்பான முதலிடம் அண்டை வீட்டுக்காரர்களின் உரிமைக்கே என்பதை இஃது தெளிவாக்குகிறது.

இதை வலியுறுத்தும் வகையில் இத்தகைய நிலை ஏற்படா வகையில் அண்டை வீட்டார் எவ்வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பெருமானார் (சல்) அவர்கள் கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்துகிறார்.

அண்டை வீட்டார் உம்மிடம் ஆதரவு வேண்டினால் அவரை ஆதரிப்பீராக! உதவிகோரினால் உதவி புரிவீராக! அவருக்குத் தேவை ஏற்பட்டால் உபகாரம் செய்வீராக! அவர் நோயுற்றிருந்தால் சென்று விசாரிப்பீராக! இன்னும் அவர் மரணமடைந்தால் அவர் ஜனாஸாவின் பின் செல்வீராக! அவருக்கு நன்மை ஏற்பட்டால் மனமாற வாழ்த்துவீராக! அவருக்குத் துன்பம் ஏதும் ஏற்பட்டால், அவரைத் தேற்றுவீராக! அவர் வீட்டுக் காற்றைத் தடுக்கும் முறையில் (உயரமான) கட்டடம் எழுப்பாதிருப்பீராக! நீர் ஒரு பழம் வாங்கும்போது அவருக்கும் (ஒரு துண்டு) அளிப்பீராக! நீர் (அவ்வாறு) செய்ய இயலாவிட்டால் உமது வீட்டிற்கு இரகசியமாகக் கொண்டு செல்வீராக! மேலும், அவருடைய குழந்தைகள் பெருமூச்சு விடும்படி உமது குழந்தைகள் அந்தப் பழத்துடன் வெளியேறாதிருக்கச் செய்வீராக!”

என்றெல்லாம் பெருமானார் அவர்கள் கூறுவதன் மூலம் ஒரு முஸ்லிம் தன் அண்டை, அயலார் மனம் எவ்வகையான பாதிப்புக்கும் ஆளாகாதவாறு கண்ணும் கருத்துமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

இவ்வாறு அண்டை வீட்டாரிடம் அழுத்தம் கொள்ளும் அன்புப் பிணைப்பு தெரு அளவில், பின்னர் ஊர் அளவில், அடுத்து நாட்டு அளவில் வளர்ந்தோங்கி உலக அளவில் நிலைபெறும் இத்தகு இனிய சூழ்நிலை அரசோச்சும்போது அற்பக் காரணங்களுக்காக உருவெடுக்கும் இனக் கலவரமோ சமயச் சண்டையோ, வகுப்பு மோதலோ அல்லது நாடுகளுக்கிடையே போரோ தலைதூக்க வாய்ப்பே இல்லாது போவதோடு மனித வாழ்க்கை இன்பப் பூங்காவாகவும் மாறி விடுமே!

முஸ்லிம் ஆனவன் முஸ்லிம் ஆகாத பெற்றோரிடமும்
உற்றாரிடமும் நடக்க வேண்டிய முறை யாது?

ஒரு முஸ்லிம் அண்டை அயலாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனப் பணிக்கிறதோ அதேபோன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் பிற சமயத்தைச் சார்ந்த தன் பெற்றோரிடமும் உற்றார் உறவினரிடமும் எம்முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெளிவாக வழிவகைகளைக் கூறுகிறது.

பிற சமயத்தைச் சார்ந்த ஒருவர், இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகளின்பால் ஈர்க்கப்பட்டவராக, அதன் இறைநெறி உணர்ந்து தெளிந்தவராக ‘கலிமா’ சொல்லி தீன் நெறியாகிய இஸ்லாமிய நெறியில் தன்னை முழுமையாக இணைத்து முஸ்லிம் ஆகிவிடுகிறார். அவரது வாழ்க்கைப் போக்கும் இறைவழிபாட்டு முறைகளும் முந்தைய சமயப் போக்கினின்றும் முற்றிலும் மாறுபட்டதாக அமைகிறது. இஸ்லாமிய நெறிமுறைகளை முற்றாகப் பேணி வாழ முனைகிறார்.

ஆனால், இவரைத் தொடர்ந்து இவருடைய பெற்றோரோ உற்றார் உறவினர்களோ யாரும் இஸ்லாம் ஆகவில்லை. அவர்கள் அனைவரும் தங்கள் மதச் சம்பிரதாயப்படியே வாழ்கிறார்கள். இந்நிலையில் இஸ்லாத்தில் இணைந்து முஸ்லிமாகியவர் பிற சமயத்தைச் சார்ந்த பெற்றோர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் தன் அன்பை, பாசத்தை, தன் இரத்தபந்த உறவை, உணர்வை எவ்வாறு பேணிக் காப்பது?

இதற்கு இஸ்லாமியத் திருமறையாகிய திருக்குர் ஆன் எல்லோரும் ஒருமுகமாக ஏற்றுப் போற்றத்தக்க வழிமுறையை அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறது?

புதிதாக இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம் ஆனவர் பிற மதத்தைச் சார்ந்துள்ள தன் பெற்றோர், உற்றார் உறவினரிடம் எவ்விதப் பாகுபாடும் வேற்றுமை உணர்வும் அறவே காட்டக் கூடாது. எப்போதும்போல் அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் பணிக்கிறது.

“உன் பெற்றோர் இறைவனுக்கு இணை வைத்து வணங்குவதை வலியுறுத்தினால் அதை நீ ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதே என்றாலும் உன் பெற்றோரிடம் நீ என்றும்போல் இனிமையுடன் ஒன்றிணைந்து நடந்து கொள்வாயாக.”

எனக் கூறுவதன்மூலம் முஸ்லிம் ஆன ஒருவன் முஸ்லிம் ஆகாத பிற சமயம் பேணும் தன் பெற்றோரிடம் எவ்வாறு சிறப்பான முறையில் நடந்து கொள்ள வழி காட்டுகிறதோ அதே முறையில் முஸ்லிம் அல்லாத உற்றார் உறவினர்களிடமும் அன்போடு இதமாக நடந்து கொள்ள வேண்டும் எனப் பணிக்கிறது. தான் இணைந்ததுபோல் தன் பெற்றோரோ மற்ற இனப் பந்துக்களோ இணையவில்லையே எனக் கருதி அவர்களிடம் தார தம்மியமோ பாகுபாடோ காட்டி நடப்பதைக் கடும் குற்றமாக இஸ்லாம் கருதுகிறது.

பிற மத உணர்வை ஊனப்படுத்த
உரிமை இல்லை

பிற சமயச் சார்புள்ளவர்கள் குடும்பத்தவர்களாக இருந்தாலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அல்லது மாற்றாராயினும் அவர்களது சமய உணர்வை வெளிப்படுத்த அவர்கட்கு முழு உரிமை உண்டு. அவர்களது உணர்வும் கருத்தும் நமக்குப் பிடிக்காவிட்டாலும் அவர் சமய உணர்வுகளை மதிக்க வேண்டுமே தவிர எதிர்க்கக் கூடாது. சமயப் பொறையை ஒவ்வொருவரும் அணிகலனாகப் பூண்டிருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் வேணவா.

ஒருவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் அவரது சமய நம்பிக்கைகளை, சட்டதிட்டங்களை, சடங்கு சம்பிரதாயங்களை எக்காரணம் கொண்டும் இழிவுபடுத்தவோ, குறைகூறவோ, குறைத்து மதிப்பிட்டுரைக்கவோ ஒரு முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை என இஸ்லாம் எடுத்தியம்புகிறது. இதற்குத் திருக்குர்ஆனில் மட்டுமல்ல, இறுதித் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்க்கையிலும் எத்தனையோ சான்றுகளைக் காணமுடிகிறது. அவற்றில் ஒரு நிகழ்ச்சி மேற்கூறிய கருத்துக்கு அரண் செய்வதாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகத்தின் நம்பிக்கைக்குரிய நற்றோழராக விளங்கியவர் அபூபக்ர் (ரலி) அவர்கள். அண்ணலாரின் வலக்கரமாக ஆரம்பம் முதல் இறுதிவரை திகழ்ந்தவர்.

ஒரு சமயம் அவர் கடைவீதிக்குச் சென்று, தனக்கு வேண்டிய சில சாமான்களை ஒரு யூதன் கடையில் வாங்க முற்பட்டார். கடைக்கார யூதர் தான் கூறிய விலையை உறுதிப்படுத்த யூதர்கள் வழக்கமாகக் கூறும் “உலகிலுள்ள அனைவரையும் விட மூஸா (அலை) அவர்களை சிறப்புடையவராக்கிய இறைவன் மீது ஆணையாக” என்ற வாக்கியத்தைக் கூறி, தான் சொன்ன விலையை அறுதியிட்டு உறுதிப்படுத்தும் வகையில் கூறினார். இவ்வாசகத்தைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்களின் முகம் சினத்தால் சிவந்து விட்டது.

“உலகிலுள்ளவர்களிலெல்லாம் உயர்ந்த மூஸா” எனப் புகழ்கிறாயே, அப்படியானால் அனைத்து நபிமார்களுக்கும் தலைவராக விளங்கும் அண்ணல் நபி (சல்) அவர்களுக்கும் மேலானவரா மூஸா (அலை) எனக் கேட்டதோடு யூதரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தும் விட்டார். அடிவாங்கிய யூதர் நபிகள் நாயகத்திடம் நீதி கேட்டு வந்து நின்றார். நபிகள் நாதர் தக்க முறையில் நீதி வழங்குவார் என்பது அவரது திட நம்பிக்கை.

கன்னத்தில் அறைவாங்கிய யூதரின் வாதத்தைக் கேட்ட பெருமானார், தன் அன்புக்குரிய அணுக்கத் தோழரான அபூபக்ர் அவர்களை வழக்கு மன்றத்துக்கு அழைத்து, ‘ஏன் அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தீர்கள்?’ என அபூபக்ரை நோக்கிக் கேட்டார் அண்ணலார் அவர்கள்.

‘இறுதித் திருத்தூதர் ஏந்தல் நபியைவிட மூஸா (அலை) அவர்களை உயர்த்திக் கூறியதைக் கேட்கப் பொறுக்காமல் கோபத்தில் அறைந்ததாகக் கூறினார். இதைக் கேட்ட அண்ணலார் அவர்களின் முகம் கடும் சினத்தால் சிவந்து விட்டது. இருப்பினும் பொறுமையோடு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி ‘மூஸாவை விட என்னைச் சிறப்பாக்காதீர். அவ்வாறு ஆக்குவது தவறு’ எனக் கூறித் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கிலிருந்தும் தீர்ப்பிலிருந்தும் பல உண்மைகள் நமக்குத் தெளிவாகிறது. மாற்றுச் சமயத்தவரான யூதர் ‘அனைவரிலும் உயர்ந்தவர் மூஸா (அலை) அவர்கள்’ எனத் தன் யூதச் சமயச் சார்பான, யூதர்களின் கொள்கையை வெளிப்படுத்த யூதருக்குப் பூரண உரிமை உண்டு என்பதை பெருமானார் ஏற்றார். அதோடு அக்கொள்கை வழிப்பட்ட கருத்தைப் புலப்படுத்துவதைத் தடுக்க அல்லது தலையிட யாருக்கும் உரிமையில்லை என்பதைப் பெருமானார் உறுதிப்படுத்தினார். தன் அணுக்கத் தோழரான அபூபக்ர் அவர்கள் மீது கடுங்கோபம் கொண்டதன் மூலம் பிற சமய நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டுமே தவிர, அவர்கள் மீது நம் நம்பிக்கைகளைத் திணிக்க முற்படக் கூடாது என்பதை அண்ணலெம் பெருமானார் அவர்கள் அழகுற உணர்த்திக் காட்டினார்.

அதுமட்டுமல்ல வழக்கு என்று வந்துவிட்டால் நீதியின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதை எல்லா வகையிலும் மெய்ப்பிக்கும் வகையில் இச்சம்பவம் மூலம், ஒவ்வொரு சமயத்தினரும் தத்தமது சமயக் கொள்கை களைப் பகிரங்கமாக வெளிப்படுத்த பூரண உரிமை உண்டு என்பதை உலகுக்குணர்த்திக் காட்டினார்கள் பெருமானார் (சல்) அவர்கள்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றோர் சிறப்பம்சம் நபிமார்களுக்கிடையே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற தார தம்மியமில்லை. அனைவரும் சமமானவர்களே என்பதை உணர்த்தவே அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி பெருமானார் அவர்கள் ‘மூஸா (அலை) அவர்களைவிட என்னை சிறப்பாக்காதீர்கள்’ என்று கூறினார்கள்.

மதச் சுதந்திரம் அடிப்படை உரிமை

ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமைகளுள் ஒன்று தன் விருப்பம்போல் தான் விரும்பி ஏற்றுள்ள சமயத்தைப் பின்பற்றியொழுகும் உரிமையாகும். ஒரு சமயத்தைப் பின்பற்றி, அதன் சட்டதிட்டங்களின்படி வாழும் ஒருவரை எக்காரணம் கொண்டும் அவ்வாறு ஒழுகுவதினின்றும் தடுப்பதோ அல்லது நேர்முகமாகவோ அன்றி மறைமுகமாகவோ கட்டாயப்படுத்த முற்படுவதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது.

“மார்க்க விஷயத்தில் எவ்விதக் கட்டாயமும் இல்லை”

என்ற திருமறை வாக்கிற்கிணங்க ஒரு முஸ்லிம் மாற்றுச் சமயத்தாரை எந்த வழிமுறையைப் பின்பற்றியும் மத மாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளது. அதேபோன்று மாற்றுச் சமயத்தாரும் ஒரு முஸ்லிமிடம் எத்தகு கட்டாயத்தையோ அல்லது கட்டாயச் சூழல் உருவாக்கத்தையோ இஸ்லாம் உறுதியுடன் எதிர்க்கிறது.

இதை பெருமானார் நபித்துவம் பெற்ற பின், மக்கத்தில் வாழ்ந்த பதின்மூன்று ஆண்டு காலத்தில் அவரும் அவரது தோழர்களும் மாற்று மதத்தைச் சேர்ந்த சிலை வணக்கக் குறைஷிகளால் பட்ட பெருந்துன்பங்கள் மூலம் நன்கு உணர்ந்திருந்தார்கள். அக்கால கட்டம் முழுவதும் நபிகள் நாயகமும் நபித் தோழர்களும் தாங்கள் விரும்பி ஏற்றுப் பின்பற்றி வந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பேணும் உரிமையை நிலைநாட்ட மேற்கொண்ட போராட்ட வாழ்க்கையாகவே அமைந்திருந்தது. தாங்கள் எந்த மார்க்க உரிமைக்காகப் போராடினார்களோ அதே போன்ற மதச் சுதந்திரம் மாற்றுச் சமயத்தார்க்கும் உண்டு என்பதை மிக நன்றாக உணர்ந்திருந்தார்கள். எனவே, ஒவ்வொரு சமயத் தாருக்கும் தத்தமது சமயத்தைப் பேண, பின்பற்றி வாழ, முழு உரிமை உண்டு; அஃது அவர்களின் ஜீவதார உரிமை என உலகுமுன் உரத்த குரலில் இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

மக்காவில் சிலை வணக்கச் சமயத்தைச் சேர்ந்த குறைஷி களால் பெருமானாரும் அவரது தோழர்களும் பெருந்துன்பத் திற்காளான சமயத்தில்தான்,

“உங்கள் மார்க்கம் உங்களுக்கு; அவர்கள்
 மதம் அவர்கட்கு”

என்ற புகழ்பெற்ற இறை வசனம் வேதமொழியாக வெளிப்பட்டு மத உரிமையை நிலை நாட்டியது.

தலைப்பாகையை தூது அனுப்பிய பெருமானார்

பெருமானாருக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரிகளாக விளங்கிய மக்கா குறைஷிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஸப்வான் இப்னு உமையா என்பவராவார்.

மக்கா வெற்றிக்குப் பின்னர் பலரும் இஸ்லாத்தை ஏற்றனர். ஆனால் இவர் இஸ்லாத்தை ஏற்காதிருந்தார். ஆரம்ப காலம் முதலே பெருமானாருக்கும் முஸ்லிம்களுக்கும் அளவிலா துன்பங்களையும் தொல்லைகளையும் கொடுத்து வந்ததோடு இரு சாராருக்குமிடையே நடைபெற்ற போர்களில் முஸ்லிம்களில் பலரைக் கொன்றவரும் கூட. இதனால் மக்கா வெற்றிக்குப் பின்னர் பெருமானாரும் பிற முஸ்லிம்களும் தன்னைக் கடுமையாகத் தண்டிக்கலாம் எனக் கருதி மக்காவைவிட்டு வெளியேறி குன்றுப் பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்தார்.

இதையறிந்த நாயகத் தோழர்களில் ஒருவரான ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் பயத்தால் ஒடி ஒளிந்துள்ள ஸப்வானை மன்னிக்கும்படி வேண்ட, பெருமானாரும் பெருமனதோடு மன்னித்தார். மலைக் குன்றுகளில் உமர் (ரலி) ஸப்வானைத் தேடிக் கண்டுபிடித்து இதைக் கூறியபோது அவர் இதை நம்பவில்லை. காரணம், முஸ்லிம்களுக்குகெதிராகப் பெரும் கொடுமைக்காரனாகயிருந்த தன்னை அண்ணலார் மன்னிக்கவே மாட்டார் என்பது அவர் எண்ணமாக இருந்தது. இதையறிந்த பெருமானார் உமர் (ரலி) மூலம் தன் தலைப்பாகையை கொடுத்தனுப்பினார். தலைப் பாகையைக் கண்ட பின்னரும் ஸப்வான் நம்பிக்கை கொள்ளாது போகவே உமர் (ரலி) அவரை வற்புறுத்தி பெருமானாரிடம் அழைத்துச் சென்றார். ஸப்வானை நேரில் கண்ட பெருமானார், ஸப்வான் அதுவரை செய்த குற்றங்கள் அனைத்தையும் மன்னித்து விட்டதாகக் கூறினார்.

விரும்பும்போது இஸ்லாத்தை ஏற்கலாம்

இதைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்த ஸப்வான் தான் இஸ்லாத்தை ஏற்க இரண்டு மாத கெடு கேட்டார். தாங்கள் விரும்பும் காலத்தை எடுத்துக் கொள்ளலாம். அதுவரை பழைய சிலை வணக்கச் சமயத்திலேயே இருந்து கொள்ளலாம் எனக் கூறினார். அப்போது முதல் ஸப்வான் அண்ணலாருடனேயே இருக்கத் தொடங்கினர். ஆயினும் தன் சமயக் கொள்கை, கோட்பாடுகளைப் பின்பற்றியே வந்தார். அப்போது, ஹுனைன் என்ற பகுதியில் சண்டை நடந்தது. ஸப்வான் அண்ணலாருடன் போர்க்களம் சென்ற போதிலும் ஸப்வான் போரிடாமல் நடுநிலை வகித்தார். இறுதியில் பெருமானாருக்குப் பெரு வெற்றி கிடைத்தது. வெற்றி பெற்ற பொருட்களை, போரிடாது நடுநிலை வகித்த ஸப்வான் ஆசையோடு வெறித்துப் பார்ப்பதைக் கண்ணுற்ற பெருமானார். ஸப்வான் இப்பொருட்களின் மீது உங்கட்கு விருப்பமிருந்தால் வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என மகிழ்வோடு கூறினார்.

முஸ்லிம்களுக்கு காலமெல்லாம் மாளாத துன்பங்களைத் தந்துவந்த தன்னை மன்னிப்புக்குப் பிறகும் இஸ்லாத்தில் இணைய கடுகளவும் வற்புறுத்தாது, பழைய சிலை வணக்கச் சமயத்திலேயே இருக்க அனுமதித்த பெருமானார், அன்னிய சமயத்தவனான, முஸ்லிம்களோடு சேர்ந்து போரிடாத நிலையிலும் போரில் கிடைத்த வெற்றிப் பொருள்களை விரும்பும் அளவு எடுத்துக் கொள்ள அனுமதித்த அண்ணலாரின் தயாளம், கருணை ஸப்வானை வெட்கித் தலைகுனியச் செய்துவிட்டது. அண்ணலாரின் சமயப் பொறை, ஸப்வானை இஸ்லாத்தில் இணையச் செய்தது.

இறுதிவரை இஸ்லாத்துக்கு விரோதியாக இருந்த ஸப்வானை மக்கா வெற்றிக்குப் பிறகு கடுமையாகத் தண்டித்திருக்க முடியும். கட்டாயப்படுத்தி அல்லது அத்தகு சூழலை ஏற்படுத்தி இஸ்லாத்தில் இணையத் தூண்டியிருக்கலாம். ஆனால், எதையுமே செய்யாது மன்னித்த பெருமானார், முந்தைய சமயத்திலேயே ஸப்வானைத் தொடர அனுமதித்ததோடு, போர்க்களத்தில் பரிசும் அளிக்க முன் வந்தார் பெருமானார்.

இறை வாக்கையும் பெருமானார் பெருவாழ்வையும் வாழ்க்கையின் இரு கண்களாகக் கொண்டு பேணிவரும் முஸ்லிம்கள் வாளால் இஸ்லாத்தைப் பரப்பினர் எனக் கூறுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பான புரட்டு வாதமாகும்.

இறைவன் நாடியிருந்தால் ஒரு விநாடியில் அத்துணை மனிதர்களின் மனத்துள்ளும் இஸ்லாமிய உணர்வைப் பாய்ச்சி உலகிலுள்ளோர் அனைவரையும் முஸ்லிம்களாக்கியிருக்க முடியுமே, ஏன் அவ்வாறு நிகழவில்லை. தன்னால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் தன்னைப் பற்றியும் தாங்களாகவே சுய உணர்வோடு சிந்தித்து தெளிந்து இஸ்லாத்தின்பால் இணைவதையே இறைவன் பெரிதும் விரும்புகிறான். இதே கருத்தைத்தான் தன் நபியை நோக்கிக் கூறுவது போல் திருமறையில்,

“(நபியே!) உம் இறைவன் விரும்பியிருந்தால், பூமியில் உள்ள அனைவருமே ஒன்றுபட்டு நம்பிக்கையாளர்களாகியிருப்பார்கள. (எனவே) மனிதர்கள் (யாவருமே) நம்பிக்கையாளர்களாகி விட வேண்டுமென்று அவர்களை நீர் நிர்ப்பந்திக்க முடியுமா” (திருக்குர்ஆன் 10:99)

இதே போன்ற மற்றொரு இறைவசனமும் திருமறையில் காணப்படுகிறது.

“நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துகள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்” (திருக்குர்ஆன் 26:4)

அவ்வாறு செய்யாததற்கு அடிப்படைக் காரணம் இறை நெறியாகிய இஸ்லாத்தை ஒவ்வொருவரும் அறிந்து உணர்ந்து, தெளிந்து அதன்பால் இணைய வேண்டும் என்பதேயாகும்.

முதன்முதல் இறைச் செய்தி பெற்ற பெருமானார், அச்செய்தியை வெளியிட்டபோது வெகுண்டெழுந்த குறைஷிகள் பெருமானாருக்கும் அவரைப் பின்பற்றிய நபித் தோழர்களுக்கும் சொல்லொணாத் துயரங்களைக் கொடுத்தனர். அவற்றையெல்லாம் பொறுமையாக ஏற்றுச் சகித்துக் கொண்ட அண்ணலார் குறைஷிகளை எதிர்த்து ஒரு விரலைக் கூட உயர்த்தவில்லை. அவர்கள் விரும்பி யிருந்தால் எதிர்த் தாக்குதல் நடத்தி தங்கள் இஸ்லாமிய நெறியை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயன்றிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. தாயிப் நகரில் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னதற்காகக் கல்லடிபட்டுத் திரும்பிய பெருமானார் தற்காப்புக்காகக் கூட எதிரிகளோடு போராடவில்லை. ஏன்? இறை நெறியாகிய இஸ்லாத்தை மாற்றுச் சமய மக்களிடையே எடுத்துக்கூறி விளக்குவது மட்டுமே நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு அல்லாஹ் விடுத்துள்ள கட்டளை. இதையே திருமறை,

“நபியே இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும் அவர்கள் (உம்மைப்) புறக்கணித்து விட்டால், (அதைப் பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்) அவர்களைப் பாதுகாப்போராக நாம் உம்மை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம்முடைய தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உம்மீது கடமையல்ல.”

(திருக்குர்ஆன் 42:48)

மனிதர்களுக்கும் தூதருக்குமுள்ள கடமையைப் பற்றி, “அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடவுங்கள் (அவனுடைய) தூதருக்கும் வழிப்பட்டு நடவுங்கள்; நீங்கள் புறக்கணித்தால் (அது உங்களுக்குத்தான் நட்டம்) - ஏனென்றால் நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம், அவர் (தன்னுடைய தூதைப்) பகிரங்கமாக எடுத்துரைப்பதுதான்”.

(திருக்குர்ஆன் 64; 12)

இந்த இறைமொழிகளின் அடிப்படையில் ஆராய்கையில் பெருமானார் காலத்திலும் சரி, பின்னரும் சரி இஸ்லாத்தை ஏற்பதோ அல்லது ஏற்காதிருப்பதோ மக்களே சுயேட்சையாக முடிவெடுக்க வேண்டுமே தவிர, எவ்வித நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்துவது இறைக் கட்டளைக்கு நேர்மாறான செயலாகும். இதை நன்கு உணர்ந்திருந்த முஸ்லிம்கள் தாங்கள் நாடாளும் பெருமன்னர்களாக அரசோச்சியபோதுகூட, மாற்றுச் சமயத்தவர்மீது எவ்வித நிர்ப்பந்தத்தையும் திணிக்காததோடு தாங்கள் விரும்பும் மதத்தை, விரும்பிய முறையில் பேணி வழிபட, மக்களுக்கு பரிபூரண உரிமை உண்டு என்பதை நிலைநிறுத்தி வந்தனர் என்பதுதான் வரலாறு.

ஹுதைபியா ஒப்பந்தமும்
பிற சமயத்தாரோடு சமாதானமும்

சாந்தியையும் சமாதானத்தையும் உயிர்மூச்சாகக் கொண்ட இஸ்லாம் வெவ்வேறு சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதன்மூலம் சமரச உணர்வு பொங்க வாழமுடியும் என்பதை உலகுக்குக் காட்டும் உன்னதச் செயலாக ‘ஹுதைபியா ஒப்பந்த’ நிகழ்ச்சி வரலாற்றில் அரிய உதாரணமாக இடம் பெற்றுள்ளது.

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு தொடங்கியபோது, மதீனாவில் வாழ்ந்த 1400 முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தலைமையில் மக்காவிலுள்ள காபாவை நோக்கி ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள்.

ஆயுதம் ஏதுமின்றி நிராயுதபாணிகளாக இஹ்ராம் வெள்ளுடை தரித்துப் புறப்பட்டவர்கள் மக்காவுக்கு அருகில் தங்கியிருந்தார்கள். இவர்கள் மக்கா வருவதையறிந்த சிலை வணக்கச் சமயத்தவரான மக்கா குறைஷிகள் காலீத் இப்னு வலீத் எனும் முரட்டு வீரரின் தலைமையில் பெரும் படையை அனுப்பினர். இதை ஞான உணர்வால் உய்த்துணர்ந்த பெருமானார் போரைத் தவிர்க்கும் பொருட்டு தன் தோழர்களோடு வேறு வழியாகச் சென்று மக்கா நகருக்கு அருகேயுள்ள ஹுதைபியா எனுமிடத்தில் தங்கியிருந்தனர். இவர்களை எக்காரணம் கொண்டும் மக்கா நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த மக்கா குறைஷிகள் பலமான பாதுகாப்பு வளையத்தை நகரைச் சுற்றி அமைத்தனர். அத்துடன் நிலைமையை, வருகையின் நோக்கத்தை அறிந்துவர சுகைல் என்பவரை அண்ணலாரிடம் அனுப்பி வைத்தனர். சுகைல் இஸ்லாத்தில் இணையாவிட்டாலும் பெருமானாரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தவர். எனவே, நபியோடு பேச்சு நடத்த அனுப்பியதற்கிணங்க அவர் அண்ணலாரை அணுகியபோது பெருமானார், தாங்கள் போரிட வரவில்லை என்றும் மக்காவிலுள்ள காபா இறையில்லம் சென்று ‘ஹஜ்’ கடமையாற்றவே வந்திருப்பதாகவும், தேவை என்று கருதினால் இதற்காக அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தான் தயாராயிருப்பதையும் ஹஜ் கடமையை நிறைவேற்ற உறுதியாயிருப்பதையும் பெருமானார் சுகைல் மூலம் சொல்லியனுப்பினார்.

எதிரி மதக்காரர்களான தாங்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்த போதிலும் முன்னர் குறைஷிகளின் பெரும் படை சிறு தொகையினரான முஸ்லிம்களிடம் தோல்வி கண்டு வந்ததை நினைவுகூர்ந்து ஒப்பந்தம் செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தனர். ஒப்பந்தம் செய்து கொள்ள உர்வா என்பவரை குறைஷிகளின் சார்பில் அனுப்பி வைத்தனர்.

ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகள் இரு சாராருக்கு மிடையே நடைபெற்றன. மாற்றுச் சமயத்தவரிடம் எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு விட்டு கொடுத்து சமரச ஒப்பந்தம் காண விழைந்தார் அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள். இறுதியில் ஒப்பந்தமும் எழுதப்பட்டது. ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் மாற்றுச் சமயத்தவர்களான மக்கா குறைஷிகளுக்குச் சாதகமாகவும் முஸ்லிம்களுக்குப் பாதகமாகவுமே எழுதப்பட்டிருந்தன. அவையாவன:

(1) இம்முறை முஸ்லிம்கள் ஹஜ் புனிதப் பயணக் கடமை களை மக்காவினுள் நுழைந்து நிறைவேற்றிக் கொள்ளாமல் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும்.

(2) அடுத்த ஆண்டில் அவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை நிறைவேற்ற மக்காவினுள் வரலாம். ஆனால், மூன்று நாட்களுக்கு மேல் மக்காவில் தங்கியிருக்கக் கூடாது.

(3) தற்போது மக்காவாசிகளுள் முஸ்லிம்கள் எவரும் காணப்படின், அவரை மதீனாவுக்கு அழைத்துச் செல்லக் கூடாது; மதீனாவிலிருந்து வந்திருப்பவருள் எவராவது இஸ்லாத்தைக் கைவிட்டால், தாராளமாக இப்போதே மக்காவுக்குள் வரலாம்.

(4) மக்காவாசி யாராவது மதம் மாறி இஸ்லாத்தை ஏற்று மதீனாவுக்குப் புகலிடம் தேடி ஓடி வந்தால், முஸ்லிம்கள் அவருக்குத் தஞ்சமோ பாதுகாப்போ அளிக்காமல் அவரை குறைஷிகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஆனால், மதீனாவாசி எவராவது மதம் மாறி மக்காவுக்குள் வந்து விட்டால், அவரைக் குறைஷிகள் அடைக்கலமாக ஏற்றுக் கொள்வர். முஸ்லிம்கள் அவர் மீது உரிமை பாராட்டித் திரும்பக் கேட்கக் கூடாது.

(5) அரேபிய நாட்டிலுள்ள இம் மக்கள் இவ்விரு கட்சியினரில் எவருடனும் நேச உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஒப்பந்தத்தை இரு தரப்பு உடன்படிக்கை என்பதைவிட ஒரு சார்பு ஒப்பந்தம் என்று கூறுவதே பொருத்தமாகும். அண்ணலாரையும் அபூபக்ரையும் தவிர, மற்ற முஸ்லிம்கள் அனைவருக்கும் இவ்வொப்பந்தம் உடன்பாடாக இல்லையென்றாலும் நபிகள் நாதரின் சமாதான உணர்வுக்கிணங்க, அனைவரும் ஒப்புதலளித்து மதீனா திரும்பினர். அப்போது வல்ல அல்லாஹ் வஹீ மூலம்,

“(நபியே! ஹுதைபியா சமாதான ஒப்பந்தத்தின் மூலம் நிச்சயமாக நாம் உமக்கு (மிகப் பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம்” (திருக்குர்ஆன் 48:1) என்று அறிவித்தான்.

இந்த ஒப்பந்தம் மூலம் தாங்கள் படுதோல்வியடைந்து திரும்புவதாகக் கருதி மனம் புழுங்கிய முஸ்லிம்களுக்கு இறைவனின் ‘வெற்றி’ அறிவிப்பு வியப்பைத் தந்தபோதிலும் முஸ்லிம்களின் மாபெரும் வெற்றிக்கு அவ்வொப்பந்தமே ராஜபாட்டையாக அமைந்தது. 1,400 ஹஜ் பயணிகளாக வந்த முஸ்லிம்களை மக்காவினுள் நுழைய விடவில்லை. ஆனால், அடுத்த ஆண்டே 10,000 முஸ்லிம்களுக்கு மக்கா நகரம் தானாக கதவு திறந்து விட்டு வரவேற்றது என்பது வரலாறு.

சமய நல்லிணக்கத்துக்கான பல படிப்பினைகளை ஹுதைபியா ஒப்பந்தம் உலகுக்குணர்த்திக் கொண்டுள்ளது.

அதுவரை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத பிற சமயத்தவர்களும் கீரியும் பாம்புமாக இருந்த நிலையை மாற்றி, ஒரிடத்தில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர் களும் கூடியமர்ந்து பேச பெரும் வாய்ப்பேற்படுத்தித் தந்தது. ஒருவர் உணர்வை மற்றவர் அறியவும் அதை மதிக்கவுமான மன நிலை உருவாகியது. அதுவரை ஒருவரையொருவர் சந்திக்க அறவே விரும்பாத நிலை மாறி, இரு சாராரும் மனம் விட்டுப் பேசவும் தங்கள் சமயக் கருத்துகளைப் பறிமாறிக் கொள்ளவும் வாய்ப்பளித்தது. அமைதிக் காலமான அவ்வோராண்டு காலம் முழுவதும் தங்குதடையின்றி மார்க்கப் பிரச்சாரம் நடைபெறவும் முஸ்லிம்களின் நல்லொழுக்கப் பண்பாடுகளின்பால் ஈர்க்கப்பட்ட பிற சமயத்தினர் இஸ்லாத்தின்பால் வந்து இணையவும் வாய்ப்பாயமைந்தது.

ஹுதைபியா உடன்படிக்கை சமய நல்லிணக்கத்துக் காகவும் சமரச உணர்வையூட்டவும் சாந்தியையும் சமா தானத்தையும் நிலைநாட்டவும் எந்த அளவு வேறுபட்ட சமயத்தவர்கள் ஒத்திணங்கிப் போக வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஹுதைபியா ஒப்பந்தம் அமைந்துள்ளதெனலாம். சண்டையில் முடியாததை சமாதானத்தில் சாதிக்கவியலும் என்பதற்குப் பெருமானாரின் செயற்பாடுகள் வழிகாட்டும் ஒளி விளக்காகும்.

ஹுதைபியா ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மற்றொரு நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்கா குறைஷிகளின் சார்பில் தூதுவராகப் பெருமானாரிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தியவர் சுகைல் என்பவராவார். அவர் சிலை வணக்க மதத்திலேயே மிகவும் பிடிப்புள்ளவராக இருந்தார். ஆனால், அவருடைய மகன் அபூஜந்தல் என்பவர் இஸ்லாமியக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு, முஸ்லிமாகி, இஸ்லாமிய முறையிலான வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளலானார். அவர் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகியதை விரும்பாத மக்கா குறைஷிகள் அவரை எவ்வளவோ வற்புறுத்தி, அடித்து உதைத்துச் சித்திரவதை செய்து இஸ்லாத்தைவிட்டு விலகும் படி கோரினர். அபூஜந்தல் உறுதியாக மறுத்து, இஸ்லாத்தைப் பேணலானார். இதை விரும்பாத மக்கா குறைஷிகள் அவரை சங்கிலியால் கட்டி ஒரு வீட்டில் சிறை வைத்தனர். அவர் எப்படியோ தப்பித்து, ஹுதைபியா வந்துள்ள பெருமானாரோடும் முஸ்லிம்களோடும் இணைந்து கொள்ள ஹுதைபியா வந்து சேர்ந்தார். அதற்குச் சற்றுமுன்தான் ஒப்பந்தத்தில் பெருமானார் கையொப்பமிட்டிருந்தார். உடலெல்லாம் கடுமையான காயங்களோடு பசியாலும் பட்டினியாலும் வாடி வதங்கிப் போயிருந்த அபூஜந்தலை பெருமானாரும் பிற முஸ்லிம்களும் கண்டு பெரிதும் மனம் வருந்தினாலும் ஒப்பந்தத்தின் மூன்றாவது விதிப்படி ‘தற்போது மக்காவாசிகளுள் முஸ்லிம்கள் எவரும் காணப்படின் அவரை மதீனாவுக்கு அழைத்துச் செல்லக் கூடாது’ என்பதற்கிணங்க, பெருந்துன்பத்திற்காளாகி யிருந்த அபூஜந்தலை தங்களோடு அழைத்துச் செல்ல பெருமானார் விரும்பாது, அவருக்கு ஆறுதல் கூறி மக்கா குறைஷிகளிடமே ஒப்படைத்தார். எந்த நிலையிலும் ‘ஒரு முஸ்லிம் கொடுத்தவாக்கைக் காப்பாற்ற எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்கக் கூடாது’ என்ற நபியுணர்வு செயல் வடிவு பெற புதிய சம்பவம் ஒரு களமாக அமைந்தது. அத்துடன் உயிர்ச் சேதத்தையும் பொருட் சேதத்தையும் தவிர்க்கவும், எவ்வளவு வேறுபாடும் மாறுபாடும் உள்ள சமயத்தவர்களாயினும் அவர்களிடையே ஒருங்கிணைவையும் சமாதானத்தையும் பேண எத்தகு தியாகத்தையும் செய்யத் தயங்கக் கூடாது என்பதற்கு இஃதோர் சாட்சியாயுள்ளது.

சிலை வணக்க பனிகுளாஆ-இன மக்களை
பாதுகாக்கவே மக்கா படையெடுப்பு

ஏகத்துவத்தை ஏற்ற இறை நம்பிக்கையாளனான முஸ்லிம், கொடுத்த வாக்கை முழுமையாகக் காப்பாற்ற பெரிதும் கடமைப்பட்டுள்ளான் என்பதைக் கண்டோம்.

சிலை வணக்கக் குறைஷிகள் பெருமானரோடு ஹுதைபியா உடன்படிக்கை செய்து வீண் சண்டை சச்சரவு, உயிர் இழப்புகளைத் தவிர்த்துக் கொண்டார்கள் அல்லவா. அதே போன்று சிலை வணக்கச் சமயத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினரான பனிகுளாஆ வகுப்பினர் அண்ணலாரோடு நல்லுறவு கொண்டிருந்தார்கள். பெருமானாரும் அவர்தம் தோழர்களும் மாற்றுச் சமயத்தவர் எனக் கருதாது பனிகுளாஆ வகுப்பினரோடு நட்புக் கொண்டிருந்தனர்.

பெருமானாருக்கோ, பெருமானாரோடு உறவு கொண்டுள்ள பிறருக்கோ எந்த ஊறும் செய்யக்கூடாது என்ற ஹுதைபியா உடன்படிக்கைக்கு எதிராக மக்கா குறைஷிகள், தங்களைப் போன்றே சிலை வணக்க சமயத்தவர்களான பனிகுளாஆ வகுப்பினரைக் கடுமையாகத் தாக்கி, பொருட் சேதத்தையும் உயிர்ச் சேதத்தையும் உண்டு பண்ணினார்கள். அண்ணலாரோடு நல்லுறவு கொண்டிருந்த பனிகுளாஆ வகுப்பினர் பெருமானாரிடம் முறையிட்டனர். இஸ்லாத்துக்குப் புறம்பான சிலை வணக்கத்தவர்களை மற்றொரு சிலை வணக்கப் பிரிவினரான குறைஷிகள்தானே தாக்கினர் என எண்ணாமல் பனிகுளாஆ-மக்களைக் காக்கவேண்டிய பெரும் பொறுப்பு முஸ்லிம்களாகிய தங்களுக்கு உண்டு எனக் கருதிய அண்ணலார் இக்கொடிய தாக்குதலுக்குச் சரியான சமாதானம் கூறும்படி குறைஷிகளுக்குத் தாக்கீது அனுப்பினார். ஆனால் குறைஷிகள் இதற்குத் தக்க சமாதானம் ஏதும் கூற முன்வரவில்லை. இதனால் மன வருத்தம் அடைந்த பெருமானார். தங்கள் நண்பர்களாகவுள்ள சிலைவணக்கச் சமயத்தவர்களான பனிகுளாஆ மக்களுக்கு பாதுகாப்பும் உதவியும் செய்ய முன்வந்தார். இனியும் அவர்கட்கு குறைஷிகளால் தீங்கு ஏற்படா வண்ணம் தடுக்கும் முகத்தான் மக்கா குறைஷிகளின் மீது படை யெடுத்தார் அண்ணலார். மக்காமீது நடத்திய படையெடுப்பு அல்ல. அஃது சிலை வணக்கப் பிரிவினரான பனிகுளாஆ வகுப்பினரின் நிரந்தரப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு என்றே கூறலாம். இவ்வாறு அண்ணலார் அவர்கள் முஸ்லிம்கள் நலம்மீது கொண்டிருந்த அதே அளவு அக்கறையும் கவலையும் முஸ்லிமல்லாத மாற்றுச் சமயத்தவர் நலனிலும் கொண்டிருந்தார் என்பதே உண்மை.

சமநீதி வழங்குவதில் இஸ்லாத்தின் முன்மாதிரி

சமநீதி வழங்குவதில் ஆள்பவர்-ஆளப்பவோர், இஸ்லாமியர்-பிற சமயத்தினர் என்ற வேறுபாட்டுணர்வுக் கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் அனைவரையும் சமமாகப் பாவித்து நீதி வழங்குவதில் இஸ்லாம் புதிய நடைமுறையை சமநீதிச் சாதனையை முதன் முதலாக உலகில் நிலை நாட்டியது எனலாம்.

நான்காவது கலீஃபாவாக அலி(ரலி) ஆட்சி நடத்தி வந்த சமயம், கலீஃபாவின் இரும்புக் கவசம் காணாமற் போய் விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பிறகு தான் தெரிய வந்தது அந்தக் கவசம் கூஃபா நகரைச் சேர்ந்த ஒரு கிருஸ்தவரிடம் இருப்பது.