இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வம்சத்தைச் சேர்ந்த ஐரீனி எனும் அரசி அரசு அதிகாரத்தை ஏற்றவுடன் கிருஸ்தவக் கோயில்களில் மீண்டும் சிலை வணக்க முறையைக் கொண்டு வந்தார். கி.பி.833இல் கான்ஸ்டாண்டிநோபிளின் டியூவேல்ஸ் மன்னர் சர்ச்சுகளில் சிலை வடிவிலோ படவடிவிலோ வணக்கமுறை அறவே இருக்கக் கூடாதென கடுமையாகக் கட்டளை பிறப்பித்தார். இவருக்குப்பின் விக்கிரக வணக்க நம்பிக்கையாளரான இவர் மனைவி கி.பி 841 பிப்ரவரி 18 ஆம் நாள் சிலை வணக்க முறையை எதிர்ப்போர் மத விரோதிகளாவர் என அறிவித்து சிலை வணக்கமுறையை மீண்டும் கொண்டு வந்தார். சிலை வணக்கமுறையை எதிர்த்த, ஆதரித்த அரசர்களும் அரசிகளும் ஒவ்வொரு முறையும் கிருஸ்தவ பாதிரியார்களின் சபையைக் கூட்டியே முடிவெடுத்துச் செயல்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இவ்வாறு மாறி மாறி ஏற்பட்டு வந்த சிலை வணக்கம் பிரச்சினை மக்களின் வாழ்வை வெகுவாக அலைக் கழித்ததை வரலாறு பதிவு செய்துள்ளது.

சிலை வணக்க மாதா கோயில் இடிப்பு

பைஸாந்தியப் பகுதியை முஸ்லிம்கள் கைப்பற்று வதற்கு முன்னதாக அப்பகுதியை பேரரசர் லியோ இஸாரியன் என்பவர் ஆண்டு வந்தார். இவர் கிருஸ்தவ சமயத்தைச் சார்ந்தவராயினும் அதில் சிலை வணக்க முறையை ஏற்காத கிருஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர். மாதா கோயில்களில் சிலை வணக்கம் செய்யும் கிருஸ்தவர்களைக் கடுமையாகத் தண்டித்தும் வந்தார். தன் கட்டளைக்கு இணங்காது, ஏதாவது மாதா கோயிலில் சிலை வணக்கம் நடைபெற்றால் அம்மாதா கோயிலையே இடித்து விடுவார். இதற்காக நாடெங்கும் தன் படையை அனுப்பி கிருஸ்தவர் களின் வழிபாட்டு முறையைக் கடுமையாகக் கண்காணித்து வரச் செய்தார். அதோடு, சிலை வணக்க மாதா கோயில் களை இடித்துத் தரை மட்டமாக்கி வந்தது பேரரசன் லியோ இஸுரியன் சிலைவணக்க எதிர்ப்புக் கிருஸ்தவப் படை. இப்படை நாடெங்கும் தன் கைவரிசையைக் காட்டி இறுதியாக மெளன்ட் சினாய் பகுதியை அடைந்தது.

அங்கே ஒரு கிறிஸ்தவ மடாலயம் இருந்தது. அங்கே இருந்த கிருஸ்தவர்கள் சிலை வணக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அம்மடாலயத்தில் தங்கி இருந்த கிருஸ்தவத் துறவிகள் தங்கள் விருப்பம் போல் சமயச் சடங்குகளைச் செய்து, சிலை வணக்கமாக ஏசுவையும் மாதாவையும் மற்ற தெய்வங்களையும் வழிபட்டு வந்தார்கள்.

ஆனால், அந்த மெளன்ட் சினாய் பகுதி அப்போது உமையா கலீஃபாக்களின் ஆட்சிப் பகுதியாக அமைந்திருந்தது. முஸ்லிம்களின் ஆட்சிப் பகுதியின் எல்லையில் சிலை வணக்கத்தலமாக அமைந்திருந்த அம்மாதாகோயில் மடாலயத்தை பேரரசர் லியோ இஸுரியனின் படைகள் தாக்கி அழிக்க முயன்றபோது, முஸ்லிம் படை வீரர்கள் அவர்களை அடித்து விரட்டி, மாதாகோயிலைக் காத்தனர். அது மட்டுமல்லாது, இஸ்லாமிய ஆட்சியின் எல்லைப் பகுதிக்குள் மாதா கோயில் மடாலயம் அமைந்திருப்பதால் பைஸாந்தியப் போர் வீரர்களால் அம்மடாலயத்திற்கு ஏதேனும் ஊறுபாடு நேரலாம் என்று அஞ்சிய முஸ்லிம் ஆட்சியினர் அம்மடாலயத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளித்துக் காத்தனர். இதன் மூலம் அக்கிருஸ்தவ மடாலயம் அழிவினின்றும் முழுமையாகக் காப்பாற்றப்பட்டதோடு, அஃது என்றும் போல் அமைதியாகச் செயல்பட அரண் போலமைந்து பாதுகாப்பளித்தனர் என்பது வரலாறு தரும் அரிய செய்தியாகும்.

இச்சம்பவத்தின் மூலம் நாம் இஸ்லாமிய நெறி, சமுதாயப் போக்குபற்றிய ஒரு மகத்தான உண்மையைத் தெளிவாக அறிந்துணர முடிகிறது. பைஸாந்தியப் பேரரசர்கள் தங்கள் சமயப் பிரிவை அடிக்கடி மாற்றிக் கொண்டார்கள். எண்ணிய போதெல்லாம் தன் மேனி வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் ‘பச்சோந்தி’யைப் போல் மாறிவரும் சூழலுக்கேற்ப தம் சமயப் பிரிவை ஏற்றுப் பேணுவதுபோல் தன் குடிமக்கள் அனைவரும் ஏற்று நடக்கவேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதும் மறுப்பவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதும் அவர்தம் போக்காக அமைந்து வந்தது. இதனால், மக்கள் தங்கள் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப சமயச் சார்புடையவர்களாக இருப்பதைவிட பைஸாந்தியப் பேரரசர்களின் போக்குக்கேற்ப செயல்படுவதையே தலையாய நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு மாறுபட்ட கிருஸ்தவர் தன் கை, கால், காது, மூக்கு என அவயவங்களை இழக்க வேண்டும். சில சமயம் உயிரையும் இழக்க வேண்டும்.

அதே சமயத்தில் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் மாற்றுச் சமயத்தைச் சார்ந்த பிற சமயத்தவர்கள் முழுச் சுதந்திரத்தோடு, தங்கள் சமயத்தைப் பின்பற்ற, வழிபாடு செய்ய, சமயச் சடங்குகளை நிறைவேற்ற முழுமையாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மதச்சம்பிரதாயங்களில் நம்பிக்கைகளில் தலையிடவோ அவற்றைப் பற்றி விமர்சிக்கவோ திருமறையாகிய திருக்குர்ஆனும் பெருமானார் வாழ்வையும் வாக்கையும் விளக்கும் ‘ஹதீஸ்’களும் அனுமதிக்காததால் கிருஸ்தவர்களும் பிற சமயத்தவர்களும் முழுச் சுதந்திர உணர்வோடும் சுமுகமான சமுதாயச் சூழலோடும் தத்தமது சமய நெறிகளைப் பேணி நடக்க முடிந்தது.

மாதா கோயில் சிலை காத்த முஸ்லிம்கள்

இஸ்லாமிய நெறிப்படி இறைவனுக்கு இணை வைப்பதை அறவே ஏற்காததோடு, அதைப் பெரிதும் வெறுப்பவர்கள் முஸ்லிம்கள். சிலை வணக்கத்தைக் கடுகளவும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டார்கள். ஆயினும் பிற சமயத்தவர் நம்பிக்கையை மதிப்பவர்கள். அதற்கு ஊறுபாடாக ஒருபோதும் இருக்கக் கூடாது என்பதே திருமறையாம் திருக்குர்ஆன் உணர்த்தும் உணர்வாகும்.

‘அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகின்றார்களோ அவற்றைப் பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்.’ (6:108) எனப் பணிக்கிறது இஸ்லாம்.

இதன் மூலம் பிறசமயத்தவர்களின் வணக்கத் தலங்கள், அவர்கள் போற்றும் வேதங்கள், அவர்கள் மேற் கொண்டொழுகும் சமயச் சடங்குகள் ஆகிய அனைத்தையும் மதிக்க வேண்டும் என இஸ்லாம் உணர்த்துகிறது.

இதற்கேற்ற எத்தனையோ எடுத்துக் காட்டுகள் அண்ணலார் வாழ்க்கையிலும் அவர்தம் வாழ்வையும் வாக்கையும் வழுவாது பின்பற்றிய கலீஃபாக்களின் வரலாற்று நெடுகிலும் காண முடிகிறது.

பைஸாந்தியப் பேரரசன் லியோ இஸுரியனைவிட தீவிரமாக சிலை வணக்க முறையை ஏற்காதவர்கள் மட்டுமல்ல. கடுமையாக எதிர்ப்பவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் நினைத்திருந்தால், இஸ்லாம் மார்க்கம் அனுமதித்திருந்தால் இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்தி சிலை வணக்கத்தலமான அம்மடாலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கியிருக்கலாம். ஆனால் இத்தகு செயலை, வழிமுறையை இஸ்லாம் ஏற்காத காரணத்தால் முஸ்லிம்கள் அந்த இழி செயலில் ஈடுபடவில்லை. சிலை வணக்கத்தார் எப்போதாவது தாங்களாக உணர்ந்து, தெளிந்து, மனம் மாறி சிலை வணக்க முறையைக் கைவிடும் வரை இஸ்லாம் பொறுமையாக இருப்பதோடு அவர்களின் சிலை வணக்க வழிபாட்டு முறையை எதிர்த்து, அவர்கள் நம்பிக்கையை ஊறுபடுத்தும் முறையில் தீங்காகப் பேசவும் மாட்டார்கள் என்ற திருமறை வழிமுறையைக் கடைப்பிடித்ததன் மூலம் அம்மடாலயம் அழிவினின்றும் முழுமையாகக் காப்பாற்றப்பட்டது.

முஸ்லிம்களின் பெருத்தன்மையான போக்கும் மாற்றுச் சமயத்தவரை மதிக்கும் தகைமையும் அம்மடாலயத் துறவிகளின் மனதில் மாபெரும் மதிப்பை ஏற்படுத்தியது. தங்களின் நன்றியுணர்வை வெளிப்படுத்தக் கருதிய மடாலயக் கிருத்துவத் துறவிகள் தங்கள் மடாலய வளாகத்திலேயே ஒரு மசூதி கட்டிக்கொள்ள அனுமதித்தார்கள் என்றால் பிற சமயத்தவர்களை முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மதித்து நடந்தார்கள் என்பதற்கு இச்சம்பவம் இணையற்ற எடுத்துக்காட்டாக வரலாற்றில் மணம் பரப்பிக் கொண்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு என்ன தீர்வோ
அதுவே மாற்றுச் சமயத்தவர்கட்கும்

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மறைவெய்திய பின், அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாகத் தலைமைப் பொறுப்பேற்றார்கள். சின்னாட்களுக்குப் பின் நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து ஆளுநர் ஒருவர் கலீஃபாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் வேற்றுச் சமயத்தைச் சார்ந்த சில வெளிநாட்டு வணிகர்கள் வியாபாரத்தின் பொருட்டு நம் நாட்டிற்குள் வணிகம் செய்ய வர விரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து எவ்வகையில் ’சுங்கத் தீர்வை’ வசூலிப்பது என்பதற்கு வழி கூறுமாறு வேண்டியிருந்தார். அதற்கு, “அவர்கள் நாட்டிற்குள் நுழையும் முஸ்லிம் வியாபாரிகளிடமிருந்து என்ன சுங்கத்தீர்வை வசூலிக்கிறார்களோ அதே தீர்வைதான். நாட்டிற்குள் நுழையும் பிற நாட்டு, பிற சமய வணிகர்களிடமிருந்தும் வசூலிக்கப்பட வேண்டும்” எனப் பதில் அளித்தார் கலீஃபா.

இதே முறையில்தான் பாரசீகத்திலிருந்து வருபவர்களிடமிருந்தும் சீனாவிலிருந்து வரும் வணிகர்களிடமிருந்தும் சுங்கத்தீர்வை வசூலிக்கப்பட்டது.

ஏதாவது ஒரு நாட்டிற்குள் நுழையும் முஸ்லிம் வணிகர்களிடமிருந்து அந்நாட்டினர் சுங்கத் தீர்வை வசூலிக்க வில்லையெனில், அந்நாட்டவர் இஸ்லாமிய நாட்டினுள் வணிகத்திற்காக நுழையும்போது அவர்களிடமிருந்து சுங்கத் தீர்வை எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை.

இவ்வாறு பிற சமயத்தைச் சார்ந்த வெளிநாட்டு வணிகர்களுக்கென தனி சுங்கத் தீர்வை எதையும் வசூலிப்பது இஸ்லாமிய அரசின் நோக்கமாக இருக்கவில்லை. அது மட்டுமன்று, எந்த வேற்றுநாட்டிலாவது பெண்கள் பயன்படுத்தும் பொருட்களின்மீது சுங்கத் தீர்வை வசூலிக்கப் படாத நிலையில், அப்பெண்களின் பொருட்களுக்கு முஸ்லிம்களின் இஸ்லாமிய நாட்டில் சுங்கத் தீர்வை வசூலிக்கப்படுவதில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.

இதற்காகப் பெண் தொடர்பான எல்லா விஷயங்களுமே இஸ்லாமிய ஆட்சியினரால் அப்படியே பின்பற்றப் பட்டன என்பதில்லை. சான்றாக, எகிப்து நாட்டை முஸ்லிம்கள் வெற்றி கொள்வதற்குமுன் நைல் நதிப் பெருக்கெடுக்கவில்லையென்றால் ஒரு அழகிய பெண்ணை, நன்கு அலங்கரித்து நைல் நதியில் தள்ளி மூழ்கடிப்பார்கள். பெண்ணைப் பரிசாகப் பெற்ற நைல் நதிக் கடவுள் மகிழ்ந்து பொங்கியெழும் என்பது அவர்தம் நம்பிக்கையாக இருந்தது.

முஸ்லிம்கள் எகிப்தை வெற்றி கொண்ட பின்னர் நைல் நதி வற்றிக் கொண்டே வந்தது. பழங்கால நம்பிக்கையில் மூழ்கியிருந்த எகிப்திய பெரியவர்கள் சிலர் எகிப்தின் இஸ்லாமிய ஆளுநரான அமீர் இப்னு அல்-அஸ் என்பவரிடம் தங்கள் வழக்கப்படி, தங்கள் மத அனுஷ்டானப்படி அலங்கரிக்கப்பட்ட அழகிய பெண்ணை நைல் நதிக் கடவுளுக்குப் பரிசளிப்பதன் மூலம் மீண்டும் நைல் நதியில் வெள்ளப் பெருக்கெடுக்க வழி செய்யுமாறு வேண்டி கடிதம் எழுதினார். இதற்கு ஆளுநர், நைல் நதி முகவரிகளோடு கூடிய கடிதமொன்றை அவர்கட்கு அனுப்பினார்; அதில் ‘நைல் நதியே! உன் விருப்பப்படி பெருக்கெடுத்தால், நாங்கள் உன்னை வேண்டத் தேவையில்லை; அவ்வாறின்றி இறைவன் உன்னைப் பொங்கியெழச் செய்வதாயின், அவ்வாறே நிகழ நான் இறைவனை இறைஞ்சுகிறேன்’ என இறைவனை வேண்டி கடிதம் எழுதியிருந்ததோடு முன்பு அழகிய பெண்ணை மூழ்கடித்தது போல் நைல் நதியில் அக்கடிதத்தை மூழ்கடித்தார்கள். இறைவனது பேரருளால் நைல் நதி பொங்கியெழுந்தோடியது. அன்று முதல் பெண்ணை நதியில் மூழ்கடிக்கும் மூட நம்பிக்கையும் மறைந்தொழிந்தது.

இவ்வாறு பழைய பழக்க வழக்கங்களில் ஏற்புடையவற்றை ஏற்றும் ஏற்கத் தகாதவற்றை நீக்கியும் செயல் பட்டனர் இஸ்லாமிய ஆட்சியினர்.

பெண்ணின் நலன் காத்த மற்றொரு சம்பவம்

பெண்ணின் பெருமைக்கும் சிறப்புக்கும் எதிரான பழக்க வழக்கங்கள் எங்கிருந்தாலும் அவற்றை அடியோடு ஒழித்துக் கட்டப்பட்டன என்பதற்கு எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்ட முடியுமெனினும் அவற்றில் ஒன்றை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தம் என எண்ணுகிறேன்.

உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த கால கட்டத்தில் முஸ்லிம்கள் இந்திய மண்ணில் ஆட்சி அமைத்தனர். அப்பகுதியில் வாழ்ந்த இந்துக்களிடையே கணவன் இறந்து விட்டால், அவனுடன் அவன் மனைவி யையும் சேர்த்து எரியூட்டும் ‘பெண் உடன்கட்டை ஏறும்’ கொடிய பழக்கம் இருந்து வந்தது. மனைவிக்கு முன்னதாகக் கணவன் இறந்து விட்டால், அவனை எரியூட்டும் சிதையில் அவனது விதவை மனைவி பாய்ந்து கணவனோடு அவளும் எரிந்து இறக்க வேண்டும். மனைவி தானாகத் தீயுட் புக மறுத்தாலும் அவள் கட்டாயமாக உடன் கட்டையேறி கணவனோடு சேர்த்துக் கொல்லப்பட்டு விடுவாள். கணவன் உயிரோடிருக்க மனைவி இறந்து விட்டால், அவன் மனைவியோடு உடன்கட்டை ஏற வேண்டியதில்லை. இரு மனம் ஒன்றிணையும் புனித மிகு திருமணம் இத்தகைய ‘உடன்கட்டை ஏறும்’ கொடிய பழக்கத்தால் கொச்சைப்படுத்தப்பட்டு வந்தது.

இக்கொடிய பழக்கத்தை அறிந்த இஸ்லாமிய ஆட்சியினர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இக் கொடிய பழக்கத்தை உடனடியாக நிறுத்தி பெண்ணினத்தைக் காத்தனர். ஹிந்துக்களின் நம்பிக்கையின் வாய்ப்பட்ட செயல் என்பதற்காகவும் சமய சகிப்புணர்வோடு முஸ்லிம்கள் வாளாயிருந்து வேடிக்கை பார்க்கவில்லை. நன்மையின் பாற்பட்ட செயல்களின்பால் தங்கள் சமய சகிப்புணர்வைக் காட்டி அந்நற்செயல் மேலும் பரிமளிக்கச் செய்தனர். சமயச் சகிப்புத் தன்மையின் பேரால் முஸ்லிம்கள் தீமைக்குத் துணை போகவில்லை என்பதுதான் வரலாறு புகட்டுகின்ற உண்மை.

முஸ்லிம்கள் எந்த நாட்டிற்குச் சென்றார்களோ அந்த நாட்டில் வழங்கும் சமயக் கொள்கைகளில் அநாவசியமாகத் தலையிடுவதே இல்லை. “அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு உங்கள் மார்க்கம் உங்களுக்கு” என்ற திருமறை வாக்கிற்கொப்ப சமய சகிப்புத் தன்மையோடு நடந்து மாற்றுச் சமயத்தவர்களை மதிப்பர்; மகிழ்வுறுத்துவர்.

அதே சமயம் அச்சமயங்களின் மூலக் கொள்கைக்கு மாறுபாடாகவும் வேறுபாடாகவும், தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப எதையாவது புகுத்தி, சமய ஒழுங்குக்கு, அறவழிப் போக்குக்கு ஊறுபாடாக அமையும் எதையும் நீக்கி, அச்சமயத்தின் மூலக் கொள்கையைக் காக்கவும் அதன்மூலம் சமூக நலத்தைப் பாதுகாக்கவும் முஸ்லிம்கள் தயங்கியதில்லை.

மத இடைச் செருகல் நீக்கிய கலீஃபா

பாரசீகத்தை கலீஃபா உமர் (ரலி) அவர்கள் வெற்றி கொண்டபோது அந்நாட்டில் ஒருவகை திருமண முறை இருந்தது. ஜொராஸ்டிர சமயத்தைச் சேர்ந்த ஒருவர் தன் நெருங்கிய உறவினரைத் திருமணம் செய்து கொள்ளலாம். அவர் தங்கையாகவோ தன் மகளாகவோ, தன் தாயாராகவோகூட இருக்கலாம். அறுவறுக்கத்தக்க இத்திருமண வழக்கம் சமய அடிப்படையில் புனிதமாகக் கூடக் கருதப்பட்டது. கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இத்திருமணப் பழக்கத்தை உடனடியாக ஒழிக்கும்படி கட்டளையிட்டார். காரணம் இத்திருமணமுறை ஜொராஸ்டிர சமயத்தின் மூலக்கொள்கை அல்ல; பாரசீக மன்னன் ஒருவன் தன் தங்கையை மணந்து கொள்ள விரும்பி, தன் விருப்பத்தை ஜொராஸ்டிர சமயக் கொள்கையாக ஆக்கி விட்டான். கலீஃபா உமர் (ரலி) அவர்களின் நடவடிக்கை மூலம் இடைக்காலத்தில் இடைச் செறுகலாக ஜொராஸ்டிர சமயத்தில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட கொள்கை நீக்கப்பட்டதன் மூலம் ஜொராஸ்டிர சமயம் தன் தனித்துவத்தைக் காத்துக் கொள்ள முடிந்தது. மற்றபடி முஸ்லிம் ஆட்சியினர் எக்காரணம் கொண்டும் பிற சமய அடித்தளக் கொள்கைகளை மாற்றவோ திருத்தவோ நீக்கவோ முயன்றார்களில்லை.

இஸ்லாத்தை முதன்முதல் ஆதரித்த கிருஸ்தவ மன்னர்

இறை அறிவிப்புக்குப்பின் இஸ்லாமிய நெறியைத் தன்னைச் சுற்றிலும் நெருக்கமாக இருந்தவர்களிடையே ரகசியமாக எடுத்துக்கூறி இஸ்லாமிய மார்க்கத்தின்பால் ஈர்த்து வந்ததை அறிந்த குறைஷிகள் அதை எதிர்க்கத் தலைப் பட்டனர். பெருமானாரின் நெருங்கிய உறவினரும் மாபெரும் வீரர்களான ஹம்ஸா (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் குறைஷிகளின் குரூர எதிர்ப்புணர்வு நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மீது மட்டுமல்லாமல் இஸ்லாத்தை ஏற்றவர்கள் மீதும் திரும்பியது. இதனால் எண்ணற்ற துன்பங்களை விளைவிக்கலாயினர், பொறுக்க முடியாத நிலையில் இஸ்லாமிய மார்க்க நெறியை ஏற்ற முஸ்லிம்கள் பக்கத்து நாடுகள் பலவற்றுக்கும் சென்றார்கள். இதன்மூலம் குறைஷிகளிடமிருந்து பாதுகாப்புத் தேடுவதோடு இறைநெறியாகிய இஸ்லாத்தை அப்பகுதி மக்களிடம் எடுத்துக்கூறி விளக்குவதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. இத்தகைய இஸ்லாமியப் பிரச்சாரம் மக்கள் முதல் மன்னர் வரை நடைபெற்றது.

மக்காவிலிருந்து அவ்வாறு பாதுகாப்புத் தேடி அபிசீனியா நாடு வந்த முஸ்லிம்கள் இஸ்லாம் பற்றிய செய்திகளை - இறைமொழிகளை ஈஸா (அலை) அவர்களைப் பற்றியும் மர்யம் பற்றியும் திருமறை கூறும் இறை மொழிகளைக் கேட்ட கிருஸ்தவரான அபிசீனிய அரசர் இஸ்லாத்தைப் பெரிதும் மதிக்கத் தலைப்பட்டதோடு முஸ்லிம்களை ஆதரித்துப் பாதுகாக்கலானார். இவ்வாறு இஸ்லாத்தை ஆதரித்த முதல் கிருஸ்தவ மன்னர் என்ற பெருமையைப் பெற்றவர் அபிசீனிய மன்னரே என்பது வரலாறு தரும் செய்தியாகும்.

மாதா கோயில் மண்டபம் கட்டிய கலீஃபா

1978ஆம் ஆண்டு அக்டோபர் பதினைந்தாம் நாளன்று ரோம் நகரில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்தேன். உலகத் கத்தோலிக்கத் தலைமை போப் இருக்கும் வாட்டிகன் நகரம் அங்குதான் உள்ளது. லண்டனிலிருந்து ரோம் வந்த என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த அருட்தந்தை ஆண்டனி வாட்டிகனைச் சேர்ந்த பாதிரியார். ரோம் விமான தளத்திலிருந்து நகரை நோக்கிக் காரில் சென்று கொண்டிருக்கும்போது பழங்கால மாதா கோயில் ஒன்றைக் காட்டினார். மிகப் பெரும் தூண்களோடு கூடிய மாபெரும் மண்டபத்தைக் கொண்ட மாதா கோயில் அது. சட்டென்று என்னை நோக்கி “இம் மாபெரும் மாதா கோயில் மண்டபத்தைக் கட்டியது யார் தெரியுமா?” எனக் கேட்டவர், என் பதிலுக்குக் காத்திராமல் தொடர்ந்து, “அது உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்” என்றும் அழுத்தந்திருத்தமாகக் கூறி நிறுத்தினார். என் குடும்பத்தவர் கட்டியிருந்தால் கட்டாயம் எனக்குத் தெரிந்திருக்க நியாயமுண்டு. ஆனால் என் குடும்பத்திலிருந்து ரோமில் காலடி எடுத்துவைக்கும் முதல் நபரே நான்தான். எனவே, தெரியாது என்பதைப் புலப்படுத்த பக்கவாட்டில் தலையை ஆட்டினேன்.

“நீங்கள் ஒரு முஸ்லிம் என்ற முறையில் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய வரலாற்றுச் சிறப்புள்ள செய்தி அது” என்று பூடகமாகக் கூறி என் முகத்தை நோக்கி மர்மப் புன்னகை பூத்தார்.