இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/முகவுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

முகவுரை

“இஸ்லாமும், சமய நல்லிணக்கம்” என்ற இந்த அரிய ஏட்டினை என்னிடம் தந்து, இதற்கு ஒரு முகவுரை வழங்குமாறு அருமை நண்பர் மணவை முஸ்தபா அவர்கள் கூறினார். முன்னுரையிலிருந்து இறுதிவரை படித்தேன். ஒரு சிறிய 228 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் இவ்வளவு அதிகமான விவரங்களை, அவரால் சொல்லப்பட்டிருப்பது மிகவும் பாராட்டிற்குரியது. ஏனெனில் இந்த அளவு விவரங்களை வைத்துக் கொண்டு சிலர் இரண்டு மூன்று புத்தகங்களை எழுதி முடித்துவிடுவர். சமூக நலனையும் நாட்டு நலனையும் காக்கும் நோக்குக் கொண்டவர் என்பதால் பொருள் நாடும் எண்ணத்தை விட்டு, நலன் நாடும் பணியில் இந்த நூலை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது என் கருத்து.

இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாமியர் இஸ்லாமியருக்கே எழுதிக் கொண்டிருப்பது, பேசிக் கொண்டிருப்பது தமிழக முஸ்லிம்களின் நிலை. முஸ்லிம்கள் கூடும் மசூதிகளாகட்டும் மாநாடுகளாகட்டும் இவைகள் இதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் தமிழில் வெளியிடப்படும், இஸ்லாமிய சமய நூல்களை வாங்கிப் பாருங்கள், இது நன்கு விளங்கும். அவைகளில் காணப்படும் நடையும் சொற்களும் இன்னும் அதிகமாகவே நான் மேற் சொன்ன கருத்தைத் தெளிவுபடுத்தும். ஆனால் மணவையார் அவர்கள் இந்த நூலில் தன் கருத்துகளை முஸ்லிம்களும் மற்றவர்களும் படிக்க வேண்டும்; தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு இனிய எளிய தமிழில் அரபு வார்த்தைகளைக் குறைத்து (தவிர்த்து) எழுதியுள்ளார். இவர் தொடர்ந்து இந்தத் திருப்பணியில் இயங்க வேண்டும்.

திருக்குர்ஆனின் வசனங்கள், நடைமுறை இவைகளைப் பின்பற்றி இஸ்லாமிய மன்னர்கள் இந்தியா உட்பட மற்ற நாடுகளில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத் தெளிவாகக் கூறி, இஸ்லாத்தையும் மன்னர்களையும் பற்றித் தவறான கருத்துகளைச் சுட்டிக் காட்டியுள்ளது பாராட்டுதற்குரியது. 94-ம் பக்கத்தில், நான்காவது கலீபாவான அலி (ரலி) அவர்களின் ஆட்சியின்போது பைசாந்தியப் பகுதியில் வாழ்ந்த கிருத்தவ மக்களைத் தூண்டிய இரண்டாம் கான்ஸ்டாண்டின் வேண்டுகோளை உதறித்தள்ளி, அந்தக் கிறிஸ்தவ மக்கள், “உங்களுக்கு வேண்டுமானால் அவர்கள் சமய விரோதிகளாகப் படலாம். ஆனால் நாங்கள் ஒரு கிறித்துவ ஆட்சியில் பெற முடியாத முழுமையான மதச் சுதந்திரத்தோடு வாழ்கிறோம்” என்று கூறிய வரிகளும் 196-ம் பக்கத்தில் விவேகாநந்தரின் ‘எதிர்கால இந்தியா’ எனும் நூலிலிருந்து எடுத்துக்காட்டியுள்ள ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முஸ்லிம் ஆட்சி சுதந்திரம் அளித்தது; அதன் காரணமாகத்தான் நம் மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிம்களானார்கள், கத்தியும் நெருப்பும் கொண்டே இம்மத மாற்றம் அனைத்தும் நடந்தது என நினைப்பது பைத்தியக்காரத்தனம்” என்ற வரிகளும், மேற் சொன்ன கருத்தினை விளக்குகின்றன.

நபிகள் பெருமானாரின் வாழ்ந்து காட்டிய முறைகள், திருக்குர்ஆன் கூறும் கருத்துகள், மாற்று மதத்தையும் மதத்தாரையும் இஸ்லாத்தின் பக்கம் வர வற்புறுத்தக் கூடாது என்ற ஆணித்தரமான கருத்துகளையும் பக்கம் 53-லிருந்து 94-வரை பல எடுத்துக்காட்டுகள் மூலம காண முடிகிறது.

அதோடு சமயநல்லிணக்கத்திற்கு ஆசிரியர் பக்கம் 204-ல் கூறும் “சாதாரணமாக இரு சமயங்களைச் சார்ந்தவர்களிடையே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் அதை இரு தனிப்பட்ட மனிதர்களிடையே ஏற்பட்ட தகராறாக மட்டுமே கருதி செயல்பட வேண்டுமேயல்லாது, இரு மதத்தவர்களுக்கு மிடையேயான மதச்சண்டையாகக் கருதும் போக்கு அறவே ஒழிய வேண்டும்” என்ற அறிவுரை மிகவும் வரவேற்கத்தக்கது.

ஆசிரியர் மணவை முஸ்தபா அவர்கள் சிறந்த தமிழறிஞர்; தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், தமிழ்க் கூரியரின் ஆசிரியராக 1967-லிருந்து பணியாற்றிக் கொண்டு, எழுதியும் மொழிபெயர்த்தும் வெளியிட்டநூல்கள் 36. அஃதோடு தென் மொழிகள் புத்தகப் பொறுப்புக் கழகத்தின் (Southern Languages Book Trust) சார்பில் 120 புத்தகங்களின் பதிப்பாசிரியராவார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ ‘திரு.வி.க விருது’, ‘தமிழ்த்தூதுவர்’, ‘வளர் தமிழ்ச் செல்வர் பட்டம்’, ‘அறிவியல் தமிழ்ச் சிற்பி’ ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

இறுதியாக இந்த, ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ என்ற நூலை வெளியிட்டதன் மூலம் தமிழுக்கும், இஸ்லாத்திற்கும் அரிய சேவை செய்துள்ளார். இந்த நூலை ஒவ்வொரு தமிழ் முஸ்லிமும் கட்டாயம் வாங்கிப் படிப்பதோடு, தனது மற்றைய தமிழ்ச் சகோதரனுக்கும் வாங்கி வழங்க வேண்டும்.

20-4-1996
சென்னை-104
சி.மு.அப்துல் வகாப், எம்.ஏ. பி.எல்;
நீதிபதி
சென்னை உயர்நீதி மன்றம்