இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/அணிந்துரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


அணிந்துரை

‘இஸ்லாம் மதத்தைப் பற்றி பலர் நினைப்பது, அம்மதம் மற்ற மதங்களை உண்மையானவை என்று ஏற்றுக் கொள்வதில்லை; மற்ற மதங்களுக்கு இஸ்லாம் எதிரி; மற்ற மதத்தினரை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றவதே இஸ்லாமியரின் அடிப்படைக் கொள்கை; அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வன்முறைகளையும் பயன்படுத்தத் தயங்குவதில்லை’. இம்மாதிரியான கருத்துகளெல்லாம் இஸ்லாமிய மதத்தின் உண்மைத்தத்துவங்களை உணராதவர்கள் சில காலங்களிலே, சில இடங்களிலே நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு இக் கருத்துகள் உருவாகியிருக்கின்றன என்பது திரு மணவை முஸ்தபா அவர்கள் இயற்றியுள்ள “இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்” என்ற நூலினுள் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் கருத்துகள். அதற்கு குர்ஆனிலிருந்து தக்க ஆதாரங்களை எடுத்து விளக்கியிருக்கிறார். முஹம்மது நபிகளார் தனது சிஷ்யர்களுக்கும் தன்னைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் விளக்கியுள்ள புத்திமதிகளையும் சான்றாக இந்நூலில் விரிவாகக் காட்டியுள்ளார்.

உண்மையான முஸ்லிம் யார் என்பதை நபிகள் நாயகம் விளக்கியுள்ளதை இங்கு எடுத்துக்காட்டுவது சாலவும் சிறந்ததாகும். இந்நூலின் 12-13 பக்கங்களில் நூலாசிரியர் இதை எடுத்துக் கூறியிருக்கிறார்:

“முஸ்லிம் ஒருவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களை மட்டும் இறைதூதராக, இஸ்லாமிய மார்க்க வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு விட்டால் மட்டும் அவர் ஒரு முழுமையான முஸ்லிம் ஆகிவிட முடியாது. அவ்வாறு கருதுவதும் இஸ்லாமிய மரபு அன்று.

காரணம், ஒருவர் ஒரு முழுமையான முஸ்லிம் ஆக வேண்டுமெனில் அவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களோடு, அவர்கட்கு முன்னதாக மனித குலத்தை இறைவழியில் வழிநடத்த, வல்ல அல்லாஹ்வால், முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் (அலை) முதற்கொண்டு அனுப்பப்பட்ட மூஸா (அலை), ஈஸா (அலை) உட்பட ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களையும் அவர்கட்கு இறைவனால் அருளப்பட்ட அனைத்து வேதங்களையும் ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர் முழுமையான முஸ்லிமாக ஆக முடியும் என்பதுதான் அண்ணலார் வாக்கும் இஸ்லாம் உணர்த்தும் கோட்பாடுமாகும்.”

இஸ்லாம் மார்க்கத்தில் கட்டாயத்திற்கு இடமே இல்லை என்பதை விளக்க பல நிகழ்ச்சிகளை நூலாசிரியர் சித்தரித்துக் காண்பித்துள்ளார். திருக்குர்ஆன் “உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் மதம்” எனக் கூறுகிறது. “இஸ்லாத்தில் நிர்ப்பந்தமே இல்லை” என்பது திருக்குர்ஆனில் கண்டுள்ள தத்துவம். “நபியே! நீர் கூறும் (முற்றிலும் உண்மையான இவ்வேதமானது உம் இறைவனால் அருளப் பெற்றது. விரும்பியவர் இதை விசுவாசிக்கலாம். விரும்பாதவர் இதை நிராகரித்து விடலாம்.” இதுவும் திருக்குர்ஆனில் கண்டுள்ளது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. இஃது பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்த அடிகளாரும் இதே அடிப்படையில் இஸ்லாத்தை பற்றிய கருத்துகளை கூறியுள்ளார். இஸ்லாமும் இந்து மதமும் இணைந்து வாழ்வது அவசியம் என்பது விவேகானந்தரின் கருத்து.

சமய நல்லிணக்கம் இந்தியாவிற்கு மட்டுமல்ல பல உலக சமுதாயங்களுக்கும் மிகவும் தேவையானது. இக்கொள்கையை பரப்புவதற்கு திரு மணவை முஸ்தாவின் நூல் பெரிதும் பயன்படும் எனக் கருதுகிறேன்.

தக்க தருணத்தில் இந்நூல் வெளிவருகிறது. இதைச் சமைத்துக் கொடுத்த திரு மணவை முஸ்தபா அவர்களுக்கு நமது பாராட்டுதலையும் நன்றியையும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

18-4-1996
சென்னை - 85
சி.சுப்பிரமணியம்
(முன்னாள் மத்திய நிதியமைச்சர்,
மகாராஷ்டிர மாநில முன்னாள் ஆளுநர்)