பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மதிப்புரை


சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் அகராதி மிகச் சிறந்த தமிழ்த்தொண்டு ஆகும். ஆனால் அதனைப் பதிப்பிக்கத் தொடங்கியபோது, சங்கநூல்கள் அத்தனையும் வெளியாகவில்லை; வெளியான நூல்களின் பொருள்களும் முழுவதும் விளங்கவில்லை. எனவே சங்கநூல்களைத் தெளிவாக அறிவதற்கு அந்தத் தலைசிறந்த அகராதி உதவுவது அருமையாகிவிட்டது. அதனோடு அந்த அகராதி, அடிப்படைச் சொற்களை மட்டுமே தருகிறது. ஒவ்வொரு சொல்லும் பலபல வடிவங்களில் சங்க நூல்களில் வரக்காண்கிறோம். அவற்றை யெல்லாம் தொகுத்துத்தருகின்ற அகராதி இலக்கண ஆராய்ச்சிக்கும், தமிழ்மொழி வரலாற்றின் ஆராய்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

இத்தகைய அகராதியைப் பல நிலையங்கள் தொகுத்து வருகின்றன. அவ்வாறு தொகுத்துவரும் தொண்டே அத்தகைய புதுவகை அகராதியின் இன்றியமையாமையை விளக்கும். சென்னைத் துரைத் தனத்தைச் சேர்ந்த தமிழ்வளர்ச்சி ஆராய்ச்சிக்கழகமும், இந்த இன்றியமையாமையை உணர்ந்து வரலாற்றுக்கொள்கைப்படி ஒரு புதிய தமிழ் அகராதியை அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளது. சீன நெருக்கடியின் காரணமாக இப்போது அது உருவாவதற்கில்லை.

அண்ணாமலைப்பல்கலைக்கழகம் இத்தகையதொண்டில் அண்மையில் ஈடுபட்டு வருகிறது. தமிழில் சிறந்த இலக்கிய நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் வரும் எல்லாச் சொல் வடிவங்களையும் அகராதி வகையில் முறைப்படுத்திப் பொருளெழுதி அது ஆராய்ந்துவருகிறது. இத்தகைய ஆழ்ந்தநிலை ஆராய்ச்சி, தமிழ்மொழியின் வரலாற்றினை எழுதுவதற்குப் பெரிதும் உதவுவதை அது கண்டுவருகிறது.

நம் பல்கலைக்கழக விரிவுரையாளரும், ஆதீன மகாவித்துவானுமான ச. தண்டபாணிதேசிகர் அவர்கள் ஏழாண்டுகளாகச் சங்க இலக்கியங்களில் வருகின்ற சொல்வடிவங்களையும், அவைகளுக்குப் பழைய உரையாசிரியர் கொண்ட உரைமாற்றங்களையும், தேவையான இடங்களுக்கு இலக்கணக்குறிப்புக்களையும், பாடல் எண்ணும் வரி எண்ணும் சுட்டித் தொகுத்து வந்தார்கள்.