என் சுயசரிதை/கிழ வயது

விக்கிமூலம் இலிருந்து

கிழ வயது

ஹிந்துக்களாகிய நம்முள் ஒருவனுக்கு சஷ்டிபூர்த்தி ஆனவுடன் அதாவது 60 ஆண்டு முடிந்தவுடன் கிழவன் என எண்ணப்படுகிறான். பைபிள் என்னும் கிறிஸ்தவ சிறந்த மத நூலில் ஒருவனுக்கு கிழ வயது. 70 ஆண்டில் ஆரம்பிக்கிறது என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

என் வரைக்கும் என்னுடைய 75-வது ஆண்டில்தான் நான் கிழவனாக என்னை மதிக்கலானேன். அதற்கு முக்கிய காரணம் அதுவரையில் என் கண்பார்வை நன்றாய் இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக குறையலானதுதான். முதலில் இதை நான் அதிகமாக கவனிக்கவில்லை. ஒருநாள் சினிமா சென்சாராக நான் ஒரு படத்தைப் பரர்க்கவேண்டி வந்தபோது கொஞ்சம் கஷ்டப்பட்டேன். உடனே நான் ஒரு கண் வைத்தியரிடம் காட்டியபோது அவர் “இதொன்றுமில்லை, சினிமா படங்களை நீ பல வருடங்களாக சென்சாராக வேலை பார்த்ததினால் உனது கண் அதிர்ச்சி அடைந்து பலஹீனப்பட்டிருக்கின்றது” என்று சொல்லி ஒரு மூக்குக் கண்ணாடியை உபயோகிக்கும்படி சொன்னார். சாதாரணமாக 40-ஆம் ஆண்டில் கண்கள் பலஹீனப்பட்டு ‘சாலேஸ்வரம்’ என்னும் கண் நோய் வருவது வழக்கம். சாலேஸ்வரம் என்னும் பதமே ‘சாலீஸ்’ என்னும் ஹிந்துஸ்தானி பதத்திலிருந்து வந்ததாம். சாலீஸ் என்றால் 40 என்று அர்த்தம். எனக்கு இந்த சாலேஸ்வரம் வரவே இல்லை. அப்படியிருக்க எனது 75-வது வயதில் இக் கஷ்டம் ஆரம்பித்தபோது பல வைத்தியர்களுக்கு காண்பித்து வினவினேன். அவர்களுள் சில ஆங்கில வைத்தியர்கள் (Allopathic) உன் கண் பார்வை மட்டமாகி வருவதற்குக் காரணம் சிறுவயது முதல் சிறு எழுத்துக்களில் அச்சிடப்பட்ட புஸ்தகங்களை எந்நேரமும் படித்துக் கொண்டிருந்தபடியால்தான் என்று கூறினர். மற்றும் சிலர் ‘நீ சினிமா சென்சாராக இருந்து படங்களை அடிக்கடி பார்க்க வேண்டியபடியால் இந் நோய் வந்திருக்கவேண்டும்’ என்றார்கள். ஒரு ஆயுற்வேத வைத்தியருக்கு என் கண்களை காட்டி வினவியபோது அவர் என்னை “நீ வாரத்திற்கு இருமுறை அப்யங்கான ஸ்நானம் (எண்ணெய் தேய்த்து குளித்தல்) செய்து வருகிறாயா"? என்று கேட்டார். அவருக்கு உரைத்த உண்மையை இங்கு எழுதுகிறேன் “1926-ஆம் ஆண்டில் என் மனைவி தேக வியோகமானாள். உடனே வந்த தீபாவளிமுதல் நான் அப்யங்க ஸ்நானத்தை விட்டுவிட்டேன்” என்று கூற, அவர் “அதனால் தான் மூளை சூட்டினால் உன் கண் கெட்டு போயிருக்கிறது என்று கூறினார்” அதன் பிறகு கண் வைத்தியர்களிடம் பன்முறை காட்டிய போது “இது கேடராக்ட் (Cataract) என்னும் வியாதி இது முற்றினால் ஒழிய ஆபரேஷன் (Operation) செய்யக்கூடாது” என்று கூறிக்கொண்டு வந்தனர். கடைசியாக கண் ஆஸ்பத்திரியில் மிகப் பிரபல வைத்தியரிடம் காட்டி கேட்டபோது அவர் கூறிய பதிலை அப்படியே எழுதுகிறேன். “மிஸ்டர் சம்பந்தம், உன் கண் பார்வை முற்றிலும் போய் நீ அந்தனாக போகமாட்டாய். கவலைப் படவேண்டாம்” என்று சொன்னாரேயொழிய ஆபரேஷன் செய்யக்கூடும் என்று சொல்லவேயில்லை. உனக்கோ வயதாகி விட்டது இனி ஆபரேஷன் செய்வதில் பிரயோசனமில்லை என்று சொல்வதற்கு பதிலாக மேற்கண்டபடி சொன்னார் என்று தான் அர்த்தம் செய்துகொண்டேன். இதைக் கேட்டவுடன் நான் தமிழுக்கும் தமிழ் நாடகங்களுக்கும் எப்படி பணி செய்வது என்று மிகவும் வருத்தப்பட்டேன் என்றே கூறவேண்டும்.

இச்சமயம் ஏதோ என் மனதில் விரக்தி தோன்றினவனாய் சந்யாசம் மேற்கொள்ளத் தீர்மானித்தேன். அதற்காக என் உயிர் நண்பரும் குருவுமான. வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடன் கலந்து பேச அவர் “அப்படியே செய்யலாம், உண்மையில் சந்யாசம் என்பது பெண்ணாசை, பொன் ஆசை, மண் ஆசை மூன்றையும் விட்டு வாழ்வதாகும் மேல் வேஷங்களில் ஒன்றுமில்லை” என்று சொல்லி முதற்படியாக ‘குடசர சந்யாசம்’ என்பதை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். அதற்குரிய நிபந்தனைகளையும் எனக்குப் போதித்தார். அவர் கட்டளைப்படி என் சொத்துக்களை எல்லாம் என் குமாரனான வரதராஜனிடம் ஒப்புவித்துவிட்டு வீட்டின் மேல்மாடி அறையில் வசிக்க ஆரம்பித்தேன். இது நடந்தது 1950-ஆம் வருஷம் பிப்ரவரி முதல் தேதியாகும். மேற்சொன்ன மூன்று பற்றுகளையும் நான் வழித்தபோதிலும் தமிழ் பாஷையிலுள்ள அதிலும் தமிழ் நாடகத்திலுள்ள பற்றை மாத்திரம் விட என்னால் முடியவில்லை. இதைப்பற்றி யோசித்து இது உலக பற்றை சார்ந்ததல்ல. தமிழ் பாஷைக்கு தமிழனாய் பிறந்த நான் செய்யவேண்டிய கடமையாகும் என்று என் மனதைத் தேற்றிக்கொண்டேன். திருநாவுக்கரசு சுவாமிகள் “என் கடன் பணி செய்து கிடப்ப தாகும்” என்று கூறியிருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே தமிழில் நான் எழுதுவதை நிறுத்தலாகாது என்று தீர்மானித்தேன். ஆயினும் கண் பார்வையில்லாத நான் இதை எப்படி செய்வது? என்று முன் சொன்னபடி பெருங் கலக்கமுற்றேன். தினம் நான் இரவில் தூங்கப் போகுமுன் தான் வணங்கும் தெய்வங்களைத் துதித்துவிட்டு தூங்குவது என்வழக்கம். அப்படி செய்யும் போது “இதற்கு நீங்கள் தான் ஒருவழிகாட்ட வேண்டும்” என்று கேட்டுவந்தேன். சிலதாள் கழித்து ஒரு நாள் காலை நான் விழித்தவுடன் என் புத்தியில் ஹோமர் (Homer) என்றும் கிரேக்க ஆசிரியர் பிறவிக் குருடர் எப்படி பெருங் காவியங்களை எழுதினார் ? மில்டன் (Milton) என்னும் பெயர் பெற்ற ஆங்கில நூலாசிரியர் தன் கண் பார்வை முற்றிலும் இழந்தபின் ‘Paradise lost’ என்னும் கிரந்தத்தை எப்படி எழுதினார்? அந்தகக் கவி வீரராகவ முதலியார் ராமாயண கீர்த்தனையை எப்படி எழுதினார்? அவர்கள் செய்தபடி நாம் என் செய்யலாகாது? என்னும் எண்ணம் உதிக்க, உடனே எனக்கு வழிகாட்டியத் தெய்வங்களை துதித்துவிட்டு அவர்கள் செய்தவாறே நாமும் செய்வோம் என்று தீர்மானித்தேன். அன்றைத் தினம் போஜனத்திற்கு மேல் என் பேத்திகளுள் ஒருத்தியை அழைத்து நான் எழுதவேண்டுமென்று உத்தேசித்திருந்த ஒரு சிறு கட்டுரையை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி அவளை எழுதிவரச் சொன்னேன். இப்படி செய்வது ஆரம்பத்தில் எனக்கு மிகவும் கஷ்டமாய்த்தான் இருந்தது. ஆயினும் பத்துப் பதினைந்து நாட்கள் கழித்தவுடன் சகஜமாய்போய் சுல்பமாகிவிட்டது. அதுமுதல் இதுவரைக்கும் நான் எழுதி அச்சிட்டு வந்த நாடகங்கள், கதைகள் முதலியனவெல்லாம். இவ்வாறு தான் வெளியிடப்பட்டன. அச்சிட வேண்டிய புஸ்தகங்களின் ப்ரூப்கள் (Proof) வந்தால் அவளை படிக்கச் சொல்லி திருத்திக்கொண்டு வந்தேன். ஆயினும் இப்படி செய்வதில் பல எழுத்துப் பிழைகள் திருத்தப்படாமல் புஸ்தகங்களில் இருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை. என் கண் பார்வை மிகவும் குறைந்துபோய் என் பேரன் பேத்திகளுக்குச் சொல்லி அச்சிட்ட புஸ்தகங்கள்:- இல்லறமும் துறவறமும் (1952) சபாபதி முதலியாரும் பேசும் படமும் (1954) நான் குற்றவாளி (1954) நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும் (1955) தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை 2 பாகங்கள் (1957) பலவகைப் பூங்கொத்து {1958).

"https://ta.wikisource.org/w/index.php?title=என்_சுயசரிதை/கிழ_வயது&oldid=1112751" இலிருந்து மீள்விக்கப்பட்டது