உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சைச் சிறுகதைகள்/மாயமான்

விக்கிமூலம் இலிருந்து

ந. பிச்சமூர்த்தி

கும்பகோணத்தில் பிறந்த ந. பிச்சமூர்த்தி நீண்ட காலம் பிறந்த மண்ணில் இருந்து கொண்டே இலக்கிய தோழர்களுடன் சேர்ந்து சிறுகதை இலக்கியத்திற்கு புதுப்பொலிவை தந்தவர்.

அவர் எழுதிய கதைகளில் வடிவமும் உத்தியும் காலப்போக்குக்கு ஏற்றவாறு மாற்றமடைந்து அவரைச் சிறுகதை எழுத்தாளரின் முன்னணியில் வைத்துக் காண்பிக்கிறது. பல வகையான கருப்பொருள்களைக் கொண்ட அவரது கதைகளில் காணப்படும் ஓர் அடிப்படையான தத்துவநோக்கு அக்கதைகளுக்கு ஆழம் கொடுக்கிறது. அதனால் தான் க.நா.சு. “பிச்சைமூர்த்தியின் கதைகள் வேதாந்த தத்துவம் உடையது” என்று கூறி உள்ளார்.

“நடையிலும், உத்தியிலும் அவசியமற்ற போலிப் புதுமைகளின்றி எந்த விஷயத்தையும் அவர் பொலிவோடு சொல்லும் திறமை பெற்றிருந்தார். மனிதவாழ்வின் நியதியில் அசையாத நம்பிக்கை எப்போதும் கைகொடுக்கும் ஒரு நிதானப்போக்கு இரண்டும் சேர்ந்து பிச்சமூர்த்தியின் சில கதைகள் அமர இலக்கியங்களாகிவிட்டன" என்று சிட்டி-சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.

“எனக்கு எப்போதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்க ரீதியான அறிவுக்கு இரண்டாவது இடந்தான் தருவேன். ஆகையால், எப்போதுமே ஒரு திட்டம் போட்டு, குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதியது இல்லை ...” தனது கதைகள் எழுதப்படுதலை குறிப்பிட்டுள்ளார். இந்த பார்வையோடு பார்க்கும்போது பிச்சமூர்த்தியும் கு.ப.ராவும் இவ்வகையில் மனித மனத்தின் ஆழத்தை அளந்துப்பார்த்தவர்கள் என்று உணர முடிகிறது.

கவிதை நடையால் நம்மைக் கட்டிப்போடும் பாங்கு இவரின் தனித்துவம். ‘சிறுகதை இலக்கணத்தைப் பயில இலக்கியமாக விளங்குவன பிச்சமூர்த்தியின் கதைகள்’ என்று சொன்னால் மிகை இல்லை.

நேற்றுத் தபாலில் ஒரு பளுவான கவர் வந்து சேர்ந்தது. அவ்வளவு கனமான கவர் அதுவரையில் எனக்கு வந்ததில்லை. என்றாலும் அதை உடனே பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற அவசரம் உண்டாகவில்லை. எலி தப்பி ஓட முடியாதென்று நிச்சயமாகப் பூனைக்குத் தெரியும் பொழுது தானே பூனை வேட்டையின் முன் விளையாடிப் பார்க்கிறது! அதைப்போல உறையை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தேன். விலாசத்தை யார் எழுதி இருக்கலாம் என்று எண்ணி எண்ணிப் பார்த்தேன். ஒன்றும் விளங்கவில்லை.

விளையாட்டு வினையாயிற்று. உறையைக் கிழித்தேன். மணி மணியான எழுத்தில் எனக்கென்று ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதுவும் முன் பின் அறியாதவருடைய கையெழுத்தாக இருந்தது. அதைத் தவிர, கச்சிதமாக மடித்துவைத்த சில தாள்கள் இருந்தன. கடிதத்தைப் படித்தேன்; வெகு ரசமாக இருந்தது. அதை முழுவதும் வெளியிடத் தேவை இல்லை. சில வரிகளையாவது வெளியிடத்தான் வேண்டும்.

“தன்னை அறியப் பல வழிகள் உண்டு. எழுத்தும் ஒரு வழி. இந்த உண்மையை நமது முன்னோர்கள் அதிகமாக வற்புறுத்தியதாகத் தெரியவில்லை. அவர்களுடைய கவனமெல்லாம் கர்மம், பக்தி, ஞானம் முதலிய மார்க்கங்களைப் பற்றியே சென்றது. மார்க்கத்தில் செய்கைக்குத்தானே முதன்மை. எழுத்தென்னும் வழியில் சொல்லே செய்கை. இந்த அடிப்படைகளுக்கு மாறாகச் சொல்லைக் கையாள்வது குற்றம்?

அதனால்தான் பணத்திற்கோ வற்புறுத்தலுக்கோ தயாதாட்சிண்ணியத்திற்கோ எழுத்தை ஆளாக்கக்கூடாது. கொடாப்புப் போட்டுப் பழுக்கவைத்த பழத்தின் ருசி எப்படி இருக்கும்! எவ்வளவு சிக்கிரத்தில் பழம் கெட்டுவிடும்! தன்னை அறியவும், தன்மையை விளக்கவும் பிறந்தது எழுத்து. அவ்வெழுத்தில் தான் அழியாமை தங்கும்.”

“எனவே எழுத்தை அகவாழ்வின் பாலம் எனலாம். மெய்யறிவின் ஏணி எனலாம். இந்தக் குணங்களுக்காகத் தான் எழுத்தின்மீது நமக்கு மோகம் உண்டாகிறது.”

“சோம்பேறிகளுக்காகப் பைத்தியங்கள் கற்பனை செய்வதற்குப் பெயர் கலை என்று யாராவது நையாண்டி செய்தால் கூட நாம் வருந்தவேண்டியதில்லை. ஏனென்றால் பெருத்த பைத்தியக்காரத்தனத்தின் விளைவுதானே இந்தச் சோம்பேறி உலகம்!”

“இத்துடன் ‘மாயமானை’ அனுப்பியிருக்கிறேன். உங்களைச் சுற்றிப் பல வேடர்கள் திரிகிறார்கள்-இலக்கிய வேடர்கள். வேடர்கள் என்ற சொல் வேடதாரிகள் என்ற பொருளுடன் தொனிக்காதென்பது எனக்குத் தெரியும். தொனித்தால் நல்லது! அவர்களில் யாருக்காவது ‘மாயமானை’ இலக்காக்கி விடுங்கள். அச்செய்கைக்கு நன்றி! இல்லாவிட்டாலும் நன்றி! ஒரு சோம்பேறியாவது இந்தப் பைத்தியத்தைப் படித்துத் தன் இயலை அறிந்து கொண்டிருப்பான் அல்லவா?”

இவைகளைப் போன்ற பிற விசித்திரமான கருத்துக்கள் அடங்கிய அந்தக் கடிதத்தைப் படித்தேன்! இரண்டு, மூன்று முறை படித்தேன். யானைக்கு அங்குசம் போல் என் அறிவுக்குக் கடிதம் அமைந்தது. பின்னர் ‘மாயமானை’ எடுத்தேன். ஆனால் அதைப் பற்றி நான் சொல்வானேன் ? நீங்களே பார்த்துக்கொள்ளலாம்:

மாயமான்

பாழ்/வெறும்பாழ்/ இவ்வளவு பொட்டலாக என் மனம் இருந்ததே இல்லை. ஒன்றிலும் ஊக்கமில்லை; உணர்வில்லை. காலையில் எழுவதும், வெந்ததும் வேகாததுமாக எதையோ சாப்பிடுவதும், ஆபீசுக்கு ஓடுவதும், திரும்புவதும், தூங்குவதும் வாழ்வின் கொடுமையைப் பகல் தாங்குவது போதாதென்று கனவில் காண்பதும்-இதுவா வாழ்வு? இதற்கா பிறந்தோம்? வருஷம் முழுவதும் இதே கதையானால் மனத்தில் அமைதி நிலைக்குமா? தொழிலில் இன்பம் தெரியுமா? உயிரில் ஊக்கம் இருக்குமா? அந்த மாதிரியான சோர்வும், சலிப்பும் நிறைந்த நிலையில் இருந்தேன். இதற்கு மாற்று? இன்பத்தின் ஊற்றுக்கண் எனக்கு அகப்பட்டால் அல்லவா? அமைதியின் அடித்தளம் அண்டினால் அல்லவா?

யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எந்தவிதமான வேதனை உண்டானாலும் ஒரு தெய்வத்தைத்தான் சரணடைவது வழக்கம். அந்தத் தெய்வத்தைச் சரணடைந்தால் இந்தச் சலிப்பும், அயர்வும் மாறலாம் என நினைத்து ஒருவாரம் ரஜா எடுத்துக்கொண்டேன். செய்கிற தொழிலைச் செய்து கொண்டிருப்பது மட்டும் நமது அலுப்பிற்குக் காரணமாகாது. ஒரே இடத்தில் இருந்துகொண்டு போன தெரு வழியே போய்க்கொண்டு, பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு நாளைக் கடத்தவேண்டிய தலை விதி ஏற்பட்டிருப்பது மற்றொரு முக்கியக் காரணம்.

ஆகையால் சென்னைக்குக் கிளம்பினேன். நான் இருக்கும் ஊரைவிட்டு ரெயிலேறினால் செங்கற்பட்டில் இறங்கி ஏறாமல் சென்னைக்குச் செல்ல முடியாது. நான் ஜங்க்ஷனை அடைந்தபொழுது சென்னை செல்லும் ரெயில் வரவில்லை. விசாரித்ததில், வர மூன்று மணி தாமதமாகும் என்று தெரிந்தது.

என்ன செய்வது? உத்தியோகம் பார்த்துப் பழக்கம் ஆகிவிட்டதால் கீழே உட்கார மனம் வரவில்லை. அங்கே கிடந்த ஒரு பெட்டியில் மேல் உட்கார்ந்தேன். என்னுடன் பொழுதும் உட்கார்ந்துவிட்டது. உட்கார்ந்தால்தான் என்ன ? சும்மா இருக்கக்கூடாதா? பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தது. காற்றுப்பட்டால் காற்றாடி சும்மா இருக்குமா? மனத்திலுள்ள காற்றாடியின் மீது பெருமூச்சுப் படப்பட அது சுழன்று கொண்டே இருந்தது. என்ன என்னவோ எண்ணங்கள் எழுந்தன.

பகலுக்குப் பின் இரவும், விழிப்புக்குப் பின் தூக்கமும் வெறும் பெளதிக உலகத்து நிகழ்ச்சிகளா? அல்லது ஒவியனைப் போல் சித்திரம் ஒன்று எழுதி வேறொரு மறை பொருளைச் சுட்டிக்காட்டும் தந்திரமா? பகலென்னும் உருவெடுத்துக் காண இயற்கை முயல்கிறதா? தொழிலில் கிட்டாத அமைதி ரஜாவில் கிட்டிவிடுமா? கர்மத்தில் காணாத இன்பம் பக்தியில் காணுமா? ஸ்தல யாத்திரையின் மர்மம் இதுதானா? அயர்வும், சலிப்பும் சிருஷ்டி வேதனையா அல்லது சீரழிவின் தொடக்கமா?....

இந்த மாதிரியான பல எண்ணங்கள் எழுந்து கொண்டே இருந்தன. பக்தி, ஸ்தலயாத்திரை என்ற விஷயம் நினைவுக்கு வந்தவுடன் கவனம் பிளாட்பாரத்துக்குத் திரும்பிவிட்டது. அங்கே ஏராளமான யாத்திரிகர்கள். அவர்களுடைய மூட்டைகளையும், முடிச்சுகளையும் பார்த்தபொழுது எனக்கு ஒரு பைத்தியக்கார விருத்தி தோன்றிற்று. தங்களிடமுள்ள எல்லாவித அழுக்குகளையும் மூட்டை கட்டிக்கொண்டு, வெளுப்பதற்காக என்று புண்ணிய ஸ்தலங்களைத் தேடிச் செல்கிறார்களோ என்று நினைத்தேன். அவ்வளவு அழுக்கு! எண்ணெய்ப் பிசுக்கு ! நாற்றம்!

யாத்திரிகர்களில் சில ஸ்திரீகள் ஒய்யாரமாகச் சுருட்டைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொருவர் பொட்டுக்கடலையும் பொரியுமாகக் கலந்து இடது கையால் வாயில் அறைந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் எல்லாருமே என்னைப்போலத்தான்! நான் ஒரு பித்தில் கிளம்பியிருக்கிறேன்; ஏறக்குறைய அதே மாதிரிப் பித்தில் தான் அவர்களும் கிளம்பியிருக்கிறார்கள். இந்தப் பித்தே தெரிந்தும் தெரியாமலும் ஒவ்வொரு மனிதனையும் பிடித்துக்கொண்டு வாழ்வைப் பாழாக்குகிறது. இந்தப் பித்தைத் தெளிய வைக்கும் மருந்தின் விஷயத்திலாவது தெளிவு இருக்கக்கூடாதா? இந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது எனக்குப் பின்புறத்தில் பேச்சுக்குரல் கேட்டது. ஆணும், பெண்ணும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் திரும்பிப் பார்க்கவில்லை. பேச்சைமட்டும் கவனித்தேன். ஜன விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தையும், இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சின் விஷயத்திற்கும் பேசிய குரல்களுக்கும் சற்றும் பொருத்தமில்லை. இந்த வியப்பில் திரும்பி ஜன்னல் வழியாகப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இரண்டாம் வகுப்புச் பிரயாணிகள்! கணவனும், மனைவியும் என்று மனம் பதிவு செய்துவிட்டது. குழந்தைகள் கிடையாதென்றும் மனம் பதிவு செய்து விட்டது. எந்த ஆதாரங்களைக் கொண்டு இந்த மாதிரி பதிவு செய்தாய்? என்று கேட்டால் மனம் நிச்சயமாக விழிக்கும். பதிவுதான் ஆகிவிட்டதே, கம்மா இருக்கலாகாதா? சத்திரத்தில் சோறில்லை என்றால் இலை பொத்தல் என்ற பழமொழியை நினைத்துக்கொண்டது. அந்தப் பழமொழியைப் போட்டு நாய் எலியைக் குதறுவதுபோல் குதறத் தொடங்கிவிட்டது.

இந்த மாதிரியான பிளாட்பாரக் காட்சிகளை மனம் பதிவு செய்து கொண்டிருந்த போதிலும் சலிப்பு மட்டும் அடங்கவில்லை. பத்தடி தள்ளிப் பிளாட்பாரத்தில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக்கடை தென்பட்டது. என் கை தானாகச் சட்டைப் பைக்குள்... கனவைப்போல மற்றொரு யோசனை தோன்றிற்று. ‘சலிப்பையும் அயர்வையும் போக்கப் பிரயாணத்தைத் தொடங்கினோம். பிரயாணமோ தடைப்பட்டு விட்டது. ஏதேனும் நல்ல புஸ்தகமாகக் கிடைத்தால் பொழுதையும் ஒட்டிவிடலாம் என்று நினைத்தேன். ஒரு ருஷியக் கதைப் புத்தகத்தை இரண்டு ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு அதே பெட்டிமேல் வந்து உட்கார்ந்தேன். மொத்தம் மூன்றே கதைகள்; 205 பக்கம். ‘பாலைவனத்தில் பிரயாணம் செய்கிறவர்கள் தோல் பைகளில் தண்ணீரை எடுத்துச் செல்வார்களே; அந்த மாதிரி இந்த ஒரு புத்தகம் ரெயில் பிரயாணம் முடியுமட்டும் போதுமானது, என்று நினைத்துப் படிக்கத் தொடங்கினேன்.

சுமார் இரண்டு மணி நேரந்தான் கழிந்திருக்கும். புத்தகத்தின் கடைசி ஏடு வந்துவிட்டது. ரஸமான புத்தகம். புத்தகம் முடிந்ததும் கூட்டுக்குத் திரும்பும் குருவிபோல் பழைய சூனியம் வந்தடைந்தது.

கண்ணை முடினேன். ஒரு சல்லடையும் அதன்மீது ஒரு புஸ்தகம் உருகி நீராகக் கொட்டுவது போன்ற சித்திரமும் தெரிந்தன. எதற்காகப் பணத்தை வீணாக்கிப் புத்தகம் வாங்கினாய்? சல்லடையில் ஐலம் நிற்குமா? என்ன இன்பம் மிஞ்சிற்று? என்று அந்தச் சித்திரம் குத்திக் காட்டுவதுபோல் இருந்தது.

அப்பொழுது “யாரையா பெட்டிமேலே? அதென்ன நாற்காலியா?” என்று ஒரு குரல் அதட்டவே, திரும்பிப் பார்த்தேன். ரெயில்வேச் சிப்பந்தி! அதிகாரத்தின் முன் அகப்பேய்ச் சித்தர்கூட என்ன செய்யமுடியும்? அவன் அதட்டலைக் கேட்ட என் தத்துவ விசாரமெல்லாம் நண்டுபோல் வளைக்குள் பதுங்கிவிட்டது. அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் பொழுதும் அந்தச் சுமையும் என்னைவிட்டு நகரவில்லை.

இப்படியே நரக வேதனையாக அரைமணி கழிந்தது. அதற்குப் பிறகு சொர்க்கவாசல் திறந்தது. ரெயில் ஆரவாரத்துடன் எதிரில் வந்து நின்றது. வெகு ஆறுதலடைந்து அதில் ஏறினேன்.

சென்னை சேரும் வரையில் அதிகச் சங்கடம் இல்லை. ஸ்டேஷனைவிட்டு என் நண்பன் வீட்டுக்குச் சென்றேன். ஆபீஸ் தவளை என்று நண்பன் என்னைப் பரிகாசம் செய்வதுண்டு. ஆகையால் என்னைப் பார்த்தவுடன் எதிர்பாராத மழையை வரவேற்பதுபோல், உத்ஸாகம் பொங்க “வா ரிசியசிருங்கா!” என்று வரவேற்றான்.

பிறகு சிறிதுநேரம் குடும்ப சுகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். காலை உணவு ஆயிற்று. பொழுது அப்பொழுதும் சுமையாக உட்கார்ந்திருந்தது. ஆபீஸ் இல்லை. வேறு வேலையும் இல்லை. என்ன செய்வது?

நண்பனை அழைத்துக்கொண்டு வெளியே புறப்பட்டேன். ஒரு திட்டமும் இல்லை, ஒரு குறிப்பும் இல்லை. சுற்றினோம், சுற்றினோம், அப்படிச் சுற்றினோம்! பகல் பன்னிரண்டு மணிக்குக் கூடக் கடற்கரையில் இருந்தோம். திரும்பி வரும்பொழுது அதுவரையில் சும்மா வந்த நண்பன் கால் கண்டைச்சதையைப் பிசைந்துகொண்டே கேட்டான்:

"ஏழு மைலாவது கடந்திருப்போமே; எதற்காக?”

“சும்மாத்தான்.”

நண்பன் நல்ல மதியூகி.

“சும்மாத்தான்பா? அதாவது வாழ்வில் பிடிப்பு விட்டுப்போய் அயர்வு தோன்றிவிட்டதென்று பொருள், மாயமான் சிக்கவில்லை என்ற வருத்தம். வண்டு, தேனைத் தேடுவதுபோல் பித்துப் பிடித்து அலைகிறாய். மோட்டார் வண்டியும், தார்போட்ட விதியும், சிமிட்டி மாடியும், வீடில்லா அநாதையும், டிராம் வண்டியும், ஒண்டுக் குடித்தனங்களும், ஆலைகளும், தரித்திரமும் நிறைந்த நகரம் புஷ்பமா என்ன உனக்குத் தேன் அளிப்பதற்கு? நீ டாக்டரைக் கலந்து ஆலோசிக்கவேண்டும்” என்றான்.

எனக்கு ஒரு குலுக்குக் குலுக்கிற்று; இந்த அயர்வென்னும் வியாதியைக் கண்டுபிடித்து விட்டானே என்று.

பிறகு வீடுவந்து சேர்ந்தோம். சாப்பாடு முடிந்ததும் எனக்குத் தூக்கம் வந்துவிட்டது. தூங்காவிட்டால் மனத் திகிரியிலிருந்து என்ன என்ன விதக் கருத்துக்கள் உருவெடுத்திருக்குமோ?

இரண்டரை மணிக்கு எழுந்தேன். அப்போதுகூடப் பொழுதென்னும் வெளவால் எனக்குள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. “நல்ல சினிமாவாக ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டேன். ஒரு படத்தின் பெயரைச் சொல்லிவிட்டு, “முதல் ஆட்டத்துக்குப் போகலாம்” என்றான்.

“மூன்றுமணி ஆட்டம் இல்லையா?”

“உண்டு; என்ன அவசரம், வெயில் வேளையில் ?”

“சும்மாத்தான்.”

அதற்கு மேல் நண்பன் தர்க்கம் செய்யவில்லை. ஆட்டத்துக்குக் கிளம்பினோம். ஆட்டம் அரை மணிக்குமேல் ரஸிக்கவில்லை. எழுந்து போய்விடலாமா என்று கூடத் தோன்றிற்று. ஆனால் டிக்கெட்டுக்குப் பணம் நான் கொடுக்கவில்லை என்ற நினைப்பு அதற்கு ஒரு தடை செய்தது. சும்மா உட்கார்ந்திருந்தேன். பெரிய மாம்பழத்தை அணில் கொறிப்பதுபோல் மனத்தைப் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தது. ஆட்டம் முடிந்து வீடு திரும்பினோம்.

இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு தனியாகக் கடற்கரைக்குச் சென்றேன். நிலவின் ஒளியில், அலையின் ஏற்றத்தாழ்வில் ஒரு சுடர் தெரிந்தது. வீடு திரும்பி வந்து படுத்துக்கொண்டேன். படுத்ததும் சிந்தனை ஒடிற்று.

"கஸ்தூரி மான் என்கிறார்களே, அது உண்மையா? கஸ்தூரி வாசனையைத் தேடிக் காடு முழுவதும் மான் அலைகிறது என்பதும் உண்மையா? அந்த மாய மானைப் போலத் தான் மனமா? தனக்குள் இருக்கும் நிலையான ஊற்றை அறியாது அதைத் தேடிப் பிரயாணத்தையும், ஸ்தல யாத்திரையையும், புஸ்தகப் படிப்பையும், சினிமா பார்ப்பதையும் மேற்கொள்வது சரியா?”

இதே சந்தேகத்துடன் மறுநாள் காலையில் எழுந்தேன். ரஜாவை ரத்து செய்துவிட்டு ஊருக்குத் திரும்பவேண்டும் என்ற ஒரே எண்ணம் மேவி நின்றது. நண்பனிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினேன்.

ஊருக்கு வந்த மூன்றாம் நாள் நண்பனிடமிருந்து கடிதம் வந்தது. நான் புதுப் புஸ்தகம் ஒன்றை மறந்து வைத்துவிட்டுத் திரும்பியதாக எழுதியிருந்தான்.

புஸ்தகத்தை ஞாபகம் இல்லாமல்தான் வைத்துவிட்டுத் திரும்பியிருந்தான். ஆனால் இப்பொழுது அந்த மாதிரி தோன்றவில்லை. பிரயாணத்தில் இன்பம் தெரியவில்லை, சினிமாவில் தெரியவில்லை. புஸ்தகத்திலும் தெரியவில்லை; இவைகளால் என்ன பயன்? என்று எனக்குள் இருக்கும் எதுவோ ஒன்று கருதி அந்த அறிவின் அறிகுறியாகப் புஸ்தகத்தை வேண்டுமென்றே மறந்துவிட்டு வந்ததாகத் தோன்றிற்று.

இந்தத் தெளிவான ஞானம் வந்ததும் நண்பனுக்குக் கடிதம் எழுதினேன். “மான் கஸ்தூரியைத் தேடி இனிமேல் அலையாது. இனிமேல் புஸ்தகம், சினிமா ஒன்றும் தேவையில்லை. டாக்டரும் தேவையில்லை. இந்த முடிவின் விளைவாகத்தான் புஸ்தகத்தை விட்டு வந்தேன். இனிமேல் செய்யும் தொழிலில் இன்பம் காணப்போகிறேன்.” என்று பதில் எழுதினேன். சரிதானே?

இப்பொழுது மாயமானின் குளம்போசை நெஞ்சிலே கேட்கிறது.