தஞ்சைச் சிறுகதைகள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

தஞ்சைச் சிறுகதைகள்
 

சோலை சுந்தரபெருமாள்

 

காவ்யா

தஞ்சைச் சிறுகதைகள்

(தோற்றமும் வளர்ச்சியும் ஒர் ஆய்வு -

சேவைசுந்தரபெருமாள்)

முதற்பதிப்பு டிசம்பர் 1999
தொகுப்புரிமை: சோலைசுந்தர பெருமாள்
காவனூர்
அம்மையப்பன் 613 701.
திருவாரூர்.
தமிழ்நாடு.
ஒளி அச்சுக்கோர்வை: ராஜா ஜெராக்ஸ் &
ஆப்செட் டிசைனர்ஸ்,
வெளிவை, நாகை.
அச்சாக்கம்: ‘மா’ பிரிண்டர்ஸ்,
பெங்களுர்.
வெளியீடு: லெஷ்மி சுந்தரம்
காவ்யா
16, 17வது 'இ' கிராஸ்

இந்திரா நகர், 2வது ஸ்டேஜ்.
பெங்களுர்-38.

பக்கங்கள் 352
விலை 150/-

அணிந்துரை

மிழ்நாட்டின் இசை, நாட்டியம், சிற்பக்கலை, ஆன்மீகம் முதலிய பல துறை வளத்துக்கும், வளர்ச்சிக்கும் தஞ்சை அரும்பெரும் பங்காற்றியுள்ளது. இது வரலாறும் வாழ்க்கையும் காட்டும் உண்மை.

இசை மூலம் பக்தி வளர்த்த அருட்ச்செல்வர்கள் துதித்துப் போற்றியப் பெரியகோயில்கள் பலவும் சிற்பக்கலையின் செல்வச் சிறப்புகளோடு தஞ்சை மண்ணில் அழகு செய்கின்றன. இசைக்கலை வளர்த்த மேதைகள் பலரும், நாட்டியக் கலைக்கு பெருமை சேர்த்து தங்களுக்குப் புகழ் தேடிக்கொண்ட நடனமணிகளும், அவர்களைப் பயிற்றுவித்த நாட்டிய ஆசிரியர்களும் பெரும்பாலும் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. அதேபோலத் தமிழ் இலக்கியத்துக்கு வளமும், வனப்பும், புதுமையும், பெருமையும் தேடித்தந்த பேனா மன்னர்கள் பலப்பலர் தஞ்சையைச் சேர்ந்தவர்களாவர்.

திரு. சோலை சுந்தரபெருமாள் எடுத்துக்காட்டியிருப்பது போல, தமிழின் முதலாவது நாவல் என்ற சிறப்பைப் பெற்றுள்ள ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதிய வேதநாயகம் பிள்ளையும், தமிழின் முதலாவது துப்பறியும் நாவல் எனும் பெருமைக்குரிய ‘தானவன்’ ஆசிரியர் நடேச சாஸ்திரியாரும், முதலாவது தேசீய சீர்திருத்த நாவல் என்று கருதப்பட வேண்டிய ‘முருகன் ஓர் உழவன்’ படைத்த கா.சீ. வேங்கடரமணியும் தஞ்சை மண்ணின் மைந்தர்களேயாவர். அதைப்போல சிறுகதைக்குக் கலைத் தன்மையும் இலக்கிய கனமும் சேர்த்த படைப்பாளிகள் மிகப்பலர் தஞ்சையின் புதல்வர்களே.

தஞ்சையின் இன்றையப் புகழ்பெற்ற படைப்பாளர்களில் ஒருவரான சோலை சுந்தரபெருமாள் தஞ்சை மண்ணி இலக்கியச் செல்வர்கள்-முக்கியமாக சிறுகதை பிரம்மாக்கள் பற்றி பெருமை கொண்டு, அவர்களைப் பற்றிய தகுந்த அறிமுக உரையோடு அவர்களது விசேஷமான சிறுகதை ஒன்றையும் தொகுத்து வழங்க முற்பட்டது இயல்பாக அவருக்குள்ள மண்ணின் பற்றுதலையும் பெருமையையும் புலப்படுத்துகிறது.

சோலை சுந்தரபெருமாள் மண்ணின் மனம் பரப்பும்-தஞ்சை மண்ணின் மக்களது வாழ்க்கை முறைகளையும், இயல்புகளையும், பேச்சுவழக்குகளையும், பழக்கங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் முதலியவற்றையும் பதிவு செய்யும் தன்மையில் அருமையான பல நாவல்களையும், குறுநாவல்களையும், சிறுகதைகளையும் படைத்துப் பெயர் பெற்றிருக்கிறார். அவர் தனது முன்னோடிகள் மற்றும் சமகாலத்தவர்களான தஞ்சை சிறுகதைப் படைப்பாளர்களது எழுத்துக்களைப் படித்து ரசித்ததோடு அமையாது, அவ்வெழுத்தாளர்கள் பற்றியும் அவர்களது சிறுகதைகள் குறித்தும் வாசகர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற அவாவுடன் “தஞ்சை சிறுகதைகள்” எனும் இந்த அருமையானத் தொகுப்பைத் தயாரித்திருக்கிறார்.

இத்தகைய ஒரு தொகுப்பைத் தயாரிப்பது சிரமமானக் காரியமாகும். படைப்பாளர்கள் பற்றிய விவரங்கள் சேகரிப்பது கஷ்டமான செயல். அதைவிடச் சிரமமானது அவர்களது படைப்புக்களைத் தேடிக் கண்டுபிடிப்பது. இச்சிரமமான பணிகளில் சோலை சுந்தரபெருமாள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பொறுமையோடும், விடாமுயற்சியோடும் அரிதில் முயன்று தகவல்களையும் நல்ல கதைகளையும் தேடிச் சேகரம் செய்துள்ளார். இது பாராட்டுதலுக்குரிய ஒரு சாதனைதான். எழுத்தாளர்கள் பற்றி முக்கியமானவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களைத் தொகுத்துத் தருவதுடன் அவர் தனது எண்ணங்களையும் எழுதியிருக்கிறார். அவருடைய நேர்மையும் நியாயமுமானப் பார்வை அவ்வித அபிப்பிராயங்களில் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம்.

இத்தொகுப்பு தஞ்சையைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புத் திறமையையும், அவர்களது படைப்புக்களின் தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. அதே வேளையில், பொதுவானத் தமிழ் சிறுகதையின் வளத்தையும், வனப்பையும் பன்முகத் தன்மையும் ஓரளவுக்கு எடுத்துக்காட்டும் தொகுப்பாகவும் இருக்கிறது. இதை இலக்கிய ரசிகர்கள் வரவேற்பாளர்கள் என்று எண்ணுகிறேன்.

தமிழ் இலக்கியத்தின் வளத்துக்காக பலவகைகளிலும் பணிபுரிந்து வரும் இனிய நண்பர் சோலை சுந்தரபெருமாள் மேலும் முன்னேறிச் சிறப்புறுவதற்கு அவரது ஆர்வமும், ஆற்றலும், உழைப்பும் துணைபுரியட்டும்.

வாழ்த்துக்கள்...

பதிப்புரை

பொதுவாக தஞ்சைப் பகுதியில் இசை, நாட்டியக் கலைகளும், நெல்லைச் சீமையில் இலக்கியக்கலையும் தம் சிகரங்களைத் தொட்டிருக்கின்றன என்று சொல்வர். ஆனால் தஞ்சை சிறுகதைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது காவிரிக்கரையில் கதைகளுக்கும் பஞ்சமில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்த நினைப்பை நிஜமாக்கியவர் சோலை சுந்தரபெருமாள். அவரது இந்த முதல் முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இது எனக்கும் நெல்லைக் கதைகளைத் தொகுக்க வேண்டும் என்ற ஆசையைத் தந்துள்ளது. எனக்கு மட்டுமென்ன எவருக்கும் தம் மண் சார்ந்தோர் கதைகளைத் தொகுக்கத் தான் தூண்டும். அவ்வகையில் சோலை சுந்தரபெருமாள் செய்த காரியம் பெரிய காரியம்.

இவரை முதலில் இவரது கதைகள் மூலமே அறிவேன். இன்றுவரை நேரிலும் பார்த்ததில்லை. இவர் திடீரென்று ஒருநாள் “இதுபோல் தஞ்சைப் பகுதி சிறுகதைகளைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். காவ்யா இதனை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். உங்கள் பதில் என்ன?” என்று கடிதம் எழுதினார். நான் யோசிக்கவே இல்லை. உடனே சம்மதித்துவிட்டேன். இதுபோன்ற எண்ணம் ஏற்கனவே எனக்குள் தோன்றியதுண்டு. முயற்சியில் இறங்காமல் இருந்தேன். இதை ஒருவர் செய்து முடிக்கிறார் என்றதும் எனக்குள் பரவசம். இன்று நூலாக உங்கள் கைகளில்....

இம்முயற்சியில் பல விஷயங்கள் பராட்டுவதற்குரியவை. ஒன்று, இத்தனை எழுத்தாளர்களையும் இனம் கண்டுகொண்டது. இரண்டு, ஒவ்வொருத்தர் கதைகளிலும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தது. மூன்று, இதற்காக அவர்களை அணுகி அனுமதி பெற்றது. நான்கு, ஒவ்வொரு எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்திய விதம், ஐந்து, இவரது வெளியீட்டுக்கான விடாமுயற்சி. இத்தொகுப்பில் குறிப்பிடத்தக்க அம்சங்களுள் ஒன்று, பல தலைமுறை எழுத்தாளர்களையும் நேர்த்தியாக நிரல் படுத்தியதுதான். அதோடு பல குணம் சார்ந்த எழுத்தாளர்களை உள்ளடக்கியதும். எழுத்து வியாபாரிகளை கவனமாக விலக்கியிருக்கிறார். மெளனி, கலைஞர், தி.ஜா, க.நா.சு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம் . மொத்தத்தில் எல்லாவற்றிலும் காவிரியின் ஈரம், வண்டலின் வாசம். தஞ்சைக்கே உரிய கோவிலும், கோவில் சார்ந்த குளங்களும் எல்லாக்கதைகளிலும் பரவி பரிணமித்துள்ளன.

காவிரி கர்நாடகத்தில் இருந்துதான் தஞ்சைக்குப் பாய்ந்து கொண்டிருக்கிறது. காவ்யாவோ தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்குப் பாய்கிறது. காவிரிக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. காவ்யாவிற்கோ தடைகள் இல்லை. தமிழும், தமிழ் சார்ந்த வாழ்க்கையும்தான் இதன் இலட்சியம். இத்தொகுப்பிற்கு இசைவு தந்த எழுத்தாளர்களுக்கும், அணிந்துரை அளித்த திரு.வல்லிக்கண்ணன் அவர்களுக்கும், அச்சிட்டுதவிய ‘மா’ அச்சகத்தாருக்கும் காவ்யாவின் நன்றிகள்.

அன்புடன்
காவ்யா சண்முகசுந்தரம்.

முன்னுரை

ங்ககாலம் தொடங்கி இன்றைய நவீன இலக்கியக் காலநெடுகிலும் தமிழுக்கு அரும்பணியாற்றிய அற்புதமான கலை இலக்கியவாதிகளை ஈன்றுள்ளது ‘தஞ்சை[1] வண்டல்மண்’ என்று சொன்னால் மிகையில்லை.

இந்திய மொழிகளில் முதன் முதலாக எழுதப்பட்ட நாவல் வங்காளியில்தான். 1865 இல் பங்கிம்சந்திரர் எழுதிய ‘துர்கேச நந்தினி’ என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் 1879 இல் தமிழில் வெளிவந்தது மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம். இந்த நாவல்தான் முதன் முதலில் தமிழுக்குப் பெருமை தேடித்தந்தது. அன்று தொடங்கியது நவீன இலக்கியம் - நாவல். இதன் அடுத்தக் கட்டப் பரிணாம வளர்ச்சியில் முகிழ்த்தது சிறுகதை.

தஞ்சையை வளப்படுத்திய காவிரி நதி அதன் நீள அகல ஆழத்தைப் போலவே அந்த மண்ணில் தோன்றிய நவீன இலக்கியவாதிகள் பல்வேறு கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்திருக்கிறார்கள். அதை நாம் கவனமாக நினைவில் கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லுவதே எனது தலையாய நோக்கமானது.

தமிழில் முதல் நாவல் என்று போற்றப்படும் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ முதலாக மாதவய்யாவின் ‘பத்மாவதி சரித்திரம்’ ஈறாக ஆறு நாவல்கள் வெளிவந்திருப்பது நன்கு தெரிந்தும், கும்பகோணம் இஞ்சிக்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய நாவலான ‘தீனதயாளு’ 1900 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்துள்ள முதல் நாவல் என்று அவராலேயே கூறப்படுகிறது.

அவர் நிலைப்பாட்டை கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை தெரிகிறது. அதாவது அவரே மேலைநாட்டினர் எழுதிவந்த துப்பறியும் தொனியில் 1894 இல் ‘தானவன்’ என்ற நாவலை வெளியிட்டுள்ளார். இவர் வழியிலேயே வந்த மாயூரம் எஸ்.ஏ. ராமஸ்வாமி ஐயர் மர்மங்கள். மாறுவேடங்கள். எதிர்பாராத சந்திப்புகள் முதலிய அம்சங்களுடன் நடப்பியல் சூழ்நிலையோடு கிட்டத்தட்ட 12 நாவல்கள் எழுதியுள்ளார். இவற்றில் ‘நீலகண்டன்’ குறிப்பிடத்தக்கது. இதே நாவலில் தான் மாயூரம் கடைவீதி மற்றும் அதன் கற்றுப்புறங்களைச் சார்ந்த மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி எழுதிக்காட்டியுள்ளார்.

அதே காலத்தில் சமகால சமுதாயத்தின் ஊழல்களையே முக்கியக் கருப்பொருளாக வைத்து எழுதியவர்களில் முதன்மையானவர் நாகை கோபாலகிருஷ்ணன்பிள்ளை ஆவார். இவர் எழுதிய 'தனபாலன்' குறிப்பிடத்தக்க நாவலாகும். அப்போதே அந்த நாவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதனால் அதனை அடுத்து வெளிவந்த ‘அலைகடல் அரசி’ என்னும் நாவலில் தன் நோக்கத்தையும் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்.

அந்தச் சூழலில் தமிழ் நாவல்களில் கொச்சை மொழியும் அனாவசியமாக சமஸ்கிருத சொற்களைத் தேவையற்ற இடங்களில் பயன்படுத்துவதும் முறையல்ல என்று குரல் கொடுத்த மறைமலையடிகள் ஓர் ஆங்கில நாவலைத் தழுவி ‘குமுதவல்லி’யைச் செந்தமிழ் நடையிலேயே எழுதியுள்ளார். இந்தத் தழுவல் நாவல், இலக்கியத்திற்குப் பெரியதாகப் பங்களிப்புச் செய்யவில்லை என்று கூறுபவர்கள் கூட அவரின் ‘கோகிலாம்பாள் கடிதங்கள்’ நவீனத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இன்று பெரிய அளவில் பேசப்பட்டு வரும் தலித் பெண்ணிய இலக்கியக் கொள்கையில் அடங்கிவிடும் நாவலை 1936 லேயே தஞ்சை மாவட்டம் - மயிலாடுதுறை - மூவலூர் ராமாமிர்தம்மாள் ‘தாசிகளின் மோசவலை’ என்ற பெயரில் எழுதியுள்ளார். இந்த நாவல்தான் தமிழ் நவீன இலக்கியத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் தோன்றிய ஒரு பெண் எழுதிய முதல் பெண்ணிய தலித்திய நாவலாகக் கொள்ளலாம்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில், தற்போது வாழ்நிலையில் தஞ்சை மக்களின் வாழ்க்கை முறைகளை நாவலில் பதிவு செய்து வருபவர்களின் குறிப்பிடத்தக்கவர்கள் - எம். வி. வெங்கட்ராம், இந்திரா பார்த்தசாரதி, ‘செம்மலர்’ கே. முத்தையா, சா. சந்தசாமி, தஞ்சை பிரகாஷ், சி.எம். முத்து, சோலை சுந்தரபெருமாள், பாவைசந்திரன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். 

1920 ஆம் ஆண்டு தொடங்கி ஆங்கில் நாவல்களைத் தழுவி எழுதிவந்த வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஒரு புதிய முயற்சிக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். அவர் எழுதிய நாவல்கள் தழுவலாக இருந்தாலும், தமிழ்நாட்டு இடப்பெயர், மக்கள் பெயர்களை வைத்து, ‘தமிழில்’ சுய படைப்புகள் போல எழுதப்பட்டுள்ளன. இதனால் பரந்துபட்ட வாசக உலகத்தை அவரால் கைப்பற்ற முடிந்தது. நாற்பத்தேழு தடிமனான நூல்களை அவர் எழுதிக் குவித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ‘கண்டமேனிக்குக் கதை எழுதும் எழுத்தாளர்களை உற்பத்தி செய்தது இந்த வடுவூரார் தான்” என்று க.நா.சு. குறிப்பிடுகிறார்.

இவரைப் பின்பற்றி எழுதிக்குவித்து இன்று ஒரு வாசக வட்டத்தைக் கைப்பற்றி வைத் திருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் - சாண்டில்யன், மணியன், பி.சி. கணேசன், பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர்.... உத்தமசோழன்.

தமிழ்மொழியில் நாவல் பிறந்தது, ஆங்கிலம் நாவல் தோன்றி நூற்றாண்டுகள் கழித்துதான், தமிழ்நாவல் தோன்றி 50 ஆண்டுகள் கழித்தே சிறுகதை ஒரு தனியான இலக்கிய வடிவம் என்ற உணர்வுடன் அங்கீகரிக்கப்பட்டது என்று சிட்டி சிவபாதசுந்தரம் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம். வ.வே.சு ஐயரும், மாதவய்யாவும் மறைந்த பின்னர் மணிக்கொடி மூலம் பெயர் பெற்ற புதுமைப்பித்தன் முதலியோரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்த இடைப்பட்டப் பத்தாண்டு காலத்தில் சிறுகதை பற்றி குறிப்பிடும் படியாக எதுவும் வெளியானதாகச் சொல்வதற்கில்லை என்று குறிப்பிடுபவர்களை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. இது ஆராயப்பட வேண்டியக் கூற்று என்று ‘தமிழில் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்’ கட்டுரையாளர்கள் கூறியிருப்பது நியாயமாகப்படுகிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த கா.சி. வேங்கடரமணி வேளாண்மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களை பின்னணியாகக் கொண்ட ‘முருகன் ஓர் உழவன்' என்ற நாவலை எழுதி வெளியிட்ட பின் அவர் செய்த சோதனை முயற்சியான சிறுகதை வடிவத்தையே நாம் தமிழில் சிறுகதை வடிவத் தொடக்க காலமாகக் கொள்ளலாம். அதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

“மாயூரம் புத்தமங்கலத்தில் பிறந்த ‘கல்கி’ரா. கிருஷ்ணமூர்த்தி, நவசக்தி, விமோசனம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் மூலம் சிறுகதை இயக்கத்திற்கு ஊக்கமளித்தார். அவரைத் தவிரவும் அந்தக் காலக்கட்டத்தைச் சார்ந்த இரு முக்கியமான எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் கவனிக்கவேண்டும். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த நாரணதுரைக்கண்னன். அடுத்தவர் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை தி.ஜ. ரங்கநாதன்..” என்று குறிப்பிடும் ‘சிறுகதைத் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரையாளர்களின் கூற்றை’ இங்கே கவனமாக நோக்கவேண்டும். இலக்கியத்திற்கு முன்னோடிகள் என்று குறிப்பிடப்படும் சிலரில் குறிப்பிடத்தக்கவர்கள் தஞ்சையில் முகிழ்த்த இலக்கியவாதிகளாகவே இருக்கிறார்கள்.

இந்த முன்னோடிகளின் வழித்தடத்தை ஒட்டி சிறுகதை வடிவத்திற்கு பலம் சேர்த்த, சேர்த்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் பட்டாளமே ஒன்று உண்டு. இவர்களையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களின் வாழ்க்கைக் குறிப்போடு அவர்கள் சிறுகதை இலக்கியத்திற்கு அளித்துள்ள பங்களிப்பைப் பதிவு செய்யும் போது அவர்களின் சிறுகதை ஒன்றையும் தொகுத்திருக்கிறேன்.

சிறுகதை, கதைவெளிப்பாட்டின் உள்வட்டத்திலும் அதன் புறநோக்கிலும் படைப்பு தொடர்பான நிகழ்வுகள், மைய இயக்கங்கள் யாருக்கேயேனும் அல்லது தனது குழுவினரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், பணத்திற்ககாகவும், பகட்டிற்காககவும் ஆசைப்படாமல் கலைவெளிப்பாட்டை முதன்மைப்படுத்திய இலக்கியவாதிகளின் சிறுகதைகளை மட்டுமே தேர்வு செய்யவேண்டும் என்ற இலக்கில்...

இவ்விலக்கின் எதிர்முகமாய் எழுதிக்குவித்தவர்கள் கூட அவர்களை அறியாமலேயே சிறந்தச் சிறுகதைகளைப் படைத்திருக்கக்கூடும். அத்தியூத்தாற்போல வெளிப்பட்டிருக்கும் அந்தச் சிறுகதைகளைக் காட்டிலும், தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் ஓரிரண்டு கலைவடிவம் குறைவுபட்டிருக்கும்போது அந்தக் கதைகளையும் சேர்த்திருக்கலாமே என்று சொன்ன என் இலக்கிய நண்பர்கள் கூற்றை விடுத்துவிட்டேன்.

தஞ்சையில் முகிழ்த்த இலக்கியவாதிகளின் பங்களிப்பைக் கண்டு என்னால் பிரமித்துப்போக முடியவில்லை. காலங்காலமாய் தஞ்சை தமிழகத்தின் நெற்களஞ்சியமாய் போற்றப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் காவிரி நதியின் வளமூட்டத்தாலும், மருத நிலத்தாலும் மட்டுமே இந்தப் பெருமை கிட்டிவிட்டதாக நான் நம்பவில்லை.

மருதநிலத்தையே தங்கள் ‘வாழ்க்கை’யாகக் கொண்ட வேளாண் மக்கள், முதன்மையானவர்கள். அவர்களின் பண்பாட்டுக்கூறுகளை படைப்பிலக்கியம் உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தவில்லை. அப்படியே செய்திருந்தாலும் சேற்றில் வாழும் மனிதர்கள் ஒரு ஓரமாகவே நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

நில உடைமையையே மட்டும் உரிமை கொண்ட மேட்டுக்குடி மக்களின் பண்பாட்டுத்தளங்கள் அவர்கள் பேசிய மொழியிலேயே பதிவாகி இருக்கின்றன. கிட்டத்தட்ட இதுதான் தமிழ் என்ற நிலைப்பாடும் நிறுவப்பட்டு வருகிறது.

சமீப காலமாய்ப் பெரும்பான்மை வேளாண் மக்களின் வாழ்க்கைப் பண்பாட்டுக் கூறுகள் அவர்கள் பேச்சுமொழியிலேயே கலைவடிவம் பெற்றுவருகின்றன. அதுபோல அபூர்வமாய் வரும் வெளிப்பாடுகளைக் கண்டு மகிழாமல் இருக்க முடியவில்லை.

ஒட்டுமொத்தமாய் சொல்லும்போது எனது இலக்கிலிருந்து இம்மிகூட பிசகாமல் படிப்பறிவின் துணைகொண்டு; எனது இலக்கியப் பிதாமகர்களான திருவாளர்கள் வல்லிக்கண்ணன், தி.க.சிவசங்கரன் ஆகியவர்களின் வழிகாட்டலோடும், என் இலக்கிய வாழ்விற்குத் திருப்புமுனையாக நின்ற பொன்னிலன், பாவைச் சந்திரன், திருப்பூர் கிருஷ்ணன் போன்றவர்களின் உற்சாகமூட்டலோடும் இத்தொகுப்பைச் செய்திருக்கிறேன். இதைத் தவிரவும் இருபத்தோராம் நூற்றாண்டில் அடிஎடுத்து வைத்துக் கொண்டிருக்கும் இளைய படைப்பாளிகளின் பட்டாளமே ஒன்று உண்டு. அந்த நம்பிக்கைக்குரியவர்களின் பங்களிப்பையும் கவனமாகப் பதிவு செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன்.

இத்தொகுப்புக்கு வேண்டிய செய்திகளையும், சிறுகதைத் தொகுப்புகளையும் தேடிச் செல்லும்போது எனக்கு ஆக்கபூர்வமான வழிக்காட்டியாக இருந்த நண்பர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்....

அன்புடன்
(சோலைகந்தரபெருமாள்)












வண்டலுக்கும்
அதன் படைப்பாளிகளுக்கும்

பொருளடக்கம்
கதாசிரியர் கதை பக்கம்
கா.சி. வேங்கடரமணி பட்டுவின் கல்யாணம் 16
கல்கி ஜீவரசம் 24
வ. ரா வண்ணார வீரம்மாள் 36
தி. ஜ. ரங்கராஜன் பெட்டிவண்டி 54
ந. பிச்சமூர்த்தி மாயமான் 68
கு. ப. ராஜகோபாலன் விடியுமா? 76
மெளனி குடும்பத்தேர் 84
க. நா. சுப்ரமணியன் ஆடரங்கு 92
ஆர். வெங்கட்ராமன் தவிப்பு 99
தி. ஜானகிராமன் கோபுரவிளக்கு 110
ஆணை ஸு. குஞ்சிதபாதம் தேவகியின் திருமணம் 122
ஜெகசிற்பியன் நரிக்குறத்தி 136
சுப்ரமணிய ராஜு இருட்டில் நின்ற... 150
கரிச்சான் குஞ்சு இரத்தசுவை 156
எம். வி. வெங்கட்ராம் பூமத்திரரேகை 163
மு. கருணாநிதி வாழமுடியாதவர்கள் 174
எழில் முதல்வன் அவள்நெஞ்சம் 182
பூவை. எஸ். ஆறுமுகம் மஞ்சுவிரட்டுபூரணி 191
தி. ச. ராஜூ பட்டாளக்காரன் 197
ந. முத்துசாமி யார் துணை 207
சா. கந்தசாமி ஆறுமுகசாமியின் ஆடுகள் 214
பாலகுமாரன் நெருடலை மீறி நின்று 227
இந்திராபார்த்தசாரதி நாசகாரக்கும்பல் 234
கனிவண்ணன் பேயாண்டித்தேவரும் ஒரு கோப்பை தேநீரும் 249
ம. ராசேந்திரன் நிஜங்கள் 256
தஞ்சைப்ரகாஷ் பற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் 265
சோலை கந்தரபெருமாள் வைக்கப்போரும் கடாவடிக்கு வாக்கப்பட்டவளும் 281
சி. எம். முத்து நாடகவாத்தியார் தங்கசாமி 294
சாருநிவேதிதா சைக்கிள் 311
உத்தமசோழன் முதல்கல் 317
ந. விச்வநாதன் குளம் 326
உஞ்சைராசன் ஆத்திரம் 334
யூமா வாஸுகி விபத்து 343

  1. தஞ்சை என்று இங்கே குறிக்கப்பெறுவது 1950 வரை இருந்த தஞ்சை மாவட்டத்தைக் குறிக்கப்படுவதாகும். பின்னர் தஞ்சை மாவட்டத்தின் மேலப்பகுதியில் கொஞ்சம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இணைக்கப்பட்டுவிட்டது. மீதமிருந்த தஞ்சை மாவட்டம் தற்போது தஞ்சாவூர் மாவட்டமாகவும், திருவாரூர் மாவட்டமாகவும், நாகப்பட்டினம் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikisource.org/w/index.php?title=தஞ்சைச்_சிறுகதைகள்&oldid=1548003" இலிருந்து மீள்விக்கப்பட்டது