தஞ்சைச் சிறுகதைகள்/ஆத்திரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
உஞ்சைராசன்


துக்கூர் மண்ணில் பிறப்பெடுத்தவர். தமிழில் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் வளர்ச்சி திசை நோக்கி சென்று கொண்டிருக்கிற இப்போதைய நிலையில், உஞ்சைராசன் பங்களிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டு.

இவரது சிறுகதைகள் அவர் பிறந்த மண்ணையும், மக்களையும் களமாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கும் யதார்த்தப் படைப்புகள்-ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனையை முன் நிறுத்தி போராட வேண்டியதை முன்மொழிகின்றன.

‘... போராடும் ஒரு சமுதாயத்தில் அவனுடைய மொழிதான் சிறப்பான அடையாளத்தைக் காட்டும். இவரது கதைமொழி தலித்தினுடைய சிறுகதைத் தொகுதியில் கட்டியம் கூறும் இன்குலாப்பின் சொல்லாடல் மிகையானதே உஞ்சைராசனின் கதையை வாசப்பில். மரபுவழிப்பட்ட மொழியைத்தான் புணைந்துள்ளார் என்பதை நன்கு உணரமுடிகிறது.

இத்தொகுப்பில் உள்ள கதைகளில் தலித்துக்களின் அடிமனதைத் தொட்டு காட்டும் - மொழியில் வீச்சம் இல்லாவிட்டாலும் படைப்பாளி அந்தத் திசையை நோக்கிய எடுத்து வைத்துள்ள அடியை மறுக்க இயலாது.

‘இந்தியா டுடே’ நூல் விமர்சபகுதியில் ராஜ்கௌதமன், ஆசிரியரின் இயக்கப் பணியின் அனுபவத்தால் இக்கதைகள் வரையறுக்கப்பட்ட ஒற்றைப் பரிமாணம் பெற்றுள்ளது... கட்சி இயக்கம் என்ற தளத்தில் கதைகளை வரிசைப்படுத்துகிறபோது பிறப்பு முதற்கொண்டே தீண்டாமையால் தண்டிக்கப்படும் தலித்துக்களில் மனோநிலையில் உருவாகின்ற பகடித்தனமான எதிர்ப்புக் குணமும் நடவடிக்கைகளும் கவனிக்கப்படாமல் போகின்றன. தலித்துக்களைவிட தலித்துக்களைப் பற்றி எழுதுகிற

இயக்கவாதிகள் மிகவும் ஒழுக்கவியலாளராக ஆகிவிடுவது ஆபத்தான போக்காகும்’ என்று எகிறு தொகுதிக்கு எழுதியிருக்கும் குறிப்பு கவனத்துக்குள்ளாகிறது.
ஆத்திரம்


மேற்கு வானில் செம்மஞ்சள் பரவிக் கிடந்தது. கதிர் அடக்கிய சூரியனைக் காணவில்லை. வடக்கு நோக்கி காக்கைகளும், மைனாக்களும் கத்திக் கொண்டு பறந்தன. குளத்துக் கரையில் வழக்கமாய் மேயும் ஆடு, மாடுகள் ஆத்து வாய்க்கால் வழியே சென்று விட்டிருந்தன. மயான அமைதியைக் கலைத்தபடி ஆரவாரமாய் மீசைக்காரர் கள்ளரின் பிண ஊர்வலம் நெருங்கியது.

செவந்தானும் பொன்னுச்சாமியும் பூவரசங்கட்டைகளை பக்குவமாக அடுக்கி, தலைப்பக்கமும் கால் பக்கமும் கட்டைகள் சரிந்து விடாமல் பக்கத்துக்கு இரண்டு அச்சுகளை அடித்து வைத்தனர். கை எட்டும் அளவில் விராட்டிகளை கொட்டி வைத்தனர். ‘கண்ணு’ புடிச்ச வைக்கோல் அருகில் கிடந்தது. பிணத்தை மூடி மண் வைத்துப் பூச மோட்டார் கிணத்தில் தண்ணீர் எடுத்து வந்து மண்ணைக் குழைத்து வைத்திருந்தனர். அரிவாள், கோடரி, மண்வெட்டி இவற்றுடன் பட்டைப் பூண் போட்ட வைரம் பாய்ந்த மூங்கில் தடியும் கிடந்தது.

மூங்கில் தடி இல்லாமல் செவந்தான் எங்கும் : கிளம்புவதில்லை. வயதான காலத்தில் கைத்தடி வேண்டும் என்றாலும்... செவந்தான். தடியூன்றி நடப்பதில்லை . எந்நேரமும் கம்கட்டில் வைத்திருப்பார். படுக்கிற நேரத்தில் தடியை எங்கும் சாத்தி வைக்காமல் தன் படுக்கையிலேயே போட்டுப் படுப்பார்.

செவத்தான்... உள் வல்சலான ஆள். நாலு முழ வேட்டியை முழங்காலுக்குக் கீழே இறங்கி விட்டுக் கட்டியிருப்பார். மடியில் நாலைந்து அறைகளைக் கொண்ட மடிச்சிலப் பையை நீண்ட கயிற்றைப் போட்டுச் சுழற்றிக் கட்டி வைத்திருப்பார். பையில் ஏதும் இருக்கிறதோ இல்லையோ மடி மட்டும் எப்போதும் கனமாகவே இருக்கும். ஏலத்தில் எடுத்த பச்சைத் துப்பட்டியை தலையில் முண்டாக கட்டியிருப்பார். எத்போதாவது தான் முண்டாசை அவிழ்ப்பார்.

அவிழ்த்தார் என்றால் தோளில் போட மாட்டார். ஊர்லெ பெரிய மனிதர்களைப் பார்த்து விட்டால் முண்டாசுப் துப்பட்டியை கம்கட்டில் வைத்துக் கொள்வார்.

ஊரில் யாரு செத்தாலுஞ் சரி பிணத்தை செவந்தான் தான் சுடவேண்டும். சுடுகாட்டில் செவந்தானின் செல்வாக்கே தனி. கிட்டதட்ட எண்பது வயதாகிறது செவந்தானுக்கு. இன்னமும் தடியூன்றாமல் நடக்கிறாரென்றால் அந்த காலத்தில் குடிச்ச கேப்பக் கூழும், உப்புக் கண்டம் போட்ட மாட்டுக் கறியுந்தான் என்று பெருமையாகச் சொல்வார். சுடு கூழுக்கும் மாட்டுக் கறி குழம்புக்கும் அப்படி இருக்கும். அப்பவெல்லாம் அரைக்கருவாய்க்கு பொடைக்கஞ்சட்டி நெறைய கிடைக்கும். இப்பதான் எல்லாருஞ் சாப்புடப் போய் நமக்கு கெடைக்காமப் போச்சு...” என்று சலித்துக் கொள்வார். அதே மாதிரி நண்டு, நத்தை எல்லாம் நொறுங்கச் சாப்பிட்டவர். உலுவை மீன் இவருக்கு ரொம்பப் பிரியம். அப்படியெல்லாம் சாப்பிட்டதாலெ தான் இளந்தாரிகளுடன் நின்று வேலை செய்கிறார். அதுமாதிரி பொட்டிக் கணக்கிலே கள்ளும் குடிப்பார். இப்பல்லாம் எரிசாராயந்தான்.

“நெய்வேலிக்காரன்ங்க முன்னே மாதிரி இல்ல நெறைபுடிச்சி அடிக்கிறான்ங்கய்யா...” என்று பெருமைப்படும் அளவுக்கு தப்பு அடித்தனர். இளைஞர்கள் அடிக்குத் தகுந்தபடி ஆடினர். ஆடியவர்கள் அத்தனை பேரும் நல்ல தண்ணியில் இருந்தனர். சின்னப் பசங்களெல்லாம் பாடையில் கிடந்த மாலைகளை அறுத்து பந்துகளாகச் சுருட்டி பாடைக்கு மேலே வீசி மகிழ்ந்தனர். சின்னான் மகன் ரெங்கசாமி வானவெடியை சர்வசாதாரணமாக கொளுத்தி வீசிக் கொண்டு வந்தான்.

பிணப்பாடை நெருங்க நெருங்க செவந்தான் பரபரத்தார் மரம், விராட்டி, உடைந்த ஓடு, சீனி, குங்கிலியம், சீயக்காய்த்தூள் இவைகளை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டார். பொன்னுசாமியிடம் அரிவாளை எடுத்துத் தயாராக வைத்துக் கொள்ளச் சொன்னார், பாடையை கீழே வைத்து பிணத்தை வெளியில் எடுத்தவுடன் பாடையை மூன்று கொத்து கொத்தி தூக்கிப் போட்டு விடு என்று அறிவுறுத்தினார். ரெங்கசாமி வேகமாக முன்னே ஓடி வந்து ஒரே ஒரு வானத்தை மட்டும் தயாரா வைத்திருந்தான். சுடுகாட்டுக்குள் பாடை வந்துவிட்டது. ரெங்கசாமி ஒற்றை வெடியை கொளுத்தி வீசுவதற்கும் பாடையை கீழே வைப்பதற்கும் சரியாக இருந்தது.

“சாமியலே... இத்தோட ஒங்க வேலை முடிஞ்சிருச்சி. இனிமே பொணம் எங்களுது. சொந்த பந்தமெல்லாம் முடிஞ்சு போச்சு. வெலவுங்க.... இருட்டறதுக்கு மின்னாடி... எங்க வேலையப் பாக்கணும்...” செவந்தானின் குரல் உயர்ந்தது.

பொன்னுசாமி, ரெங்கசாமி இவர்களெல்லாம் செவந்தான் சொன்னபடி கேட்டனர். செவந்தான் பிணம் கூட முன்னாயத்த வேலையைச் செய்தார். தயாராயிருந்த விறகு அடுக்கில் பிணத்தைத் தூக்கி வைத்தார்கள். விராட்டியை வைத்து அடுக்கி மார்புப் பகுதியில் விராட்டியுடன் உடைந்த ஓடுகளையும் வைத்து அடுக்கினார். பின்னிக் கிடந்த வைக்கோலை விராட்டி மேல் பரப்பி குழைத்த மண்ணை வைத்துப் பூசினார். நீளவாக்கில் விரலால் நான்கைந்து துளைகளைப் போட்டு அவற்றில் சீனி, குங்கிலியம், சீயக்காய்... என உள்ளே கொட்டினார். கொள்ளி வைக்கத் தயார் செய்துவிட்டு, ம். அடுத்த காரியத்தைப் பாருங்க... என்றார்.

உறவு முறைக்காரர்கள் வாய்க்கரிசி போட்டு முடித்தனர். மூட்டி வைத்திருந்த நெருப்புச் சட்டியிலிருந்து சிறு சந்தனக் குச்சியை எடுத்து கொள்ளிக்காரர் கொள்ளி வைத்த கையோடு எல்லோரும் கலைந்து சென்றனர். உடனே, சுற்றி வைத்திருந்த வைக்கோல் பிரியை பற்ற வைத்து சுற்றிலும் நெருப்பு வைத்தார் செவந்தான் எரிய ஆரம்பித்தது.

சுடுகாட்டிலிருந்த மேட்டில் எல்லோரும் கூடினர். வண்ணார் விரித்த மாத்தில் முக்கியமான ஒரு சிலர் உட்கார்ந்தனர். கருமாதி வைக்க தேதி குறித்த பின்னர் காலையிலிருந்து வேலை செய்த ஆட்களுக்கு கூலி கொடுத்தனர். தப்புக்காரர்கள், வண்ணார், பாடை கட்டியவர்கள், கேதம் சொல்லிப் போனவர்கள், மரம் வெட்டியவர்கள், விராட்டி வாங்கப் போனவர்கள் வெடிவிட்டவர் என்று எல்லோரையும் அழைத்த ஆளுக்கு கொஞ்சம் காசு கொடுத்தனர். அதைப்போலவே "பொணஞ் சுடுறது யார்டா”, என்ற அழைப்புக்கு.

தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து கம்கட்டில் வைத்தபடி... “சாமி... நான்தாங்க... கூட பொன்னுச்சாமியையும், ரெங்கசாமியும் நிக்கிறான்ங்க. பாத்துக் குடுங்க சாமியோவ்” என்று கும்பிட்டபடி சொன்னார் செவந்தான்.

“என்னத்தெடா பாத்துக் குடுக்கிறது. சின்னக் கள்ளுச்சியெ எரிச்சியலெ அரை கொறையா.. அப்படியில்லாமெ இருக்கணும் இம்புட்டு வேணுங்க சாமின்னு கேளுடா. செவந்தான் மிச்சம் புடிக்கவா கேக்கிறே எல்லாம் தண்ணிக்கித் தானெடா”. மரத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர் சொன்னர்.

“என்ன சாமி. ஓங்களுக்கு தெரியாதா, தண்ணிய கிளாசி - அஞ்சி ரூவா விக்கிதுங்க. அதுவும் மொட்டப் பச்சத் தண்ணி-- நாங்க மூணுபேரு...... வழக்கமா குடுக்கறதெ விட கூட. பாத்துக்குடுங்க மீசைக்காரக் கள்ளனுக்கு காசே வாங்காம எரிக்கணும்... நாங்க அப்பிடிக் கூட்டாளிக...” செவந்தான் பணிவாகக் கேட்டார்.

“சரி, இந்தா ஓம் பொல்லாப்பு வேண்டாம். பத்து ரூவா கூடவே வச்சுக்க. நல்லா எரிச்சுப் புடனும். அவரு மருமகன் பொல்லாத ஆளுடா. அப்புறம் அடிச்சிப்புட்டாரு வைச்சிப்புட்டாருன்னு சொல்லிக்கிட்டு வரப்புடாது ஆமா.” பணங்கொடுத்த வடக்கு வீட்டுக்காரர் எச்சரித்தார்.

நிலா உயர்ந்து விட்டது. மாரியண்ணே வீட்டு பொட்டை நாய் ஊளையிட்டது. கரும்புக் கொல்லையில் கிடக்கும் காட்டுப் போக்கான் கத்தும் சத்தம் கேட்டது. வள்ளி மக அறை வீட்டுக்குள்ளே அழுவுறது அக்கம் பக்கத்தாரின் தூக்கத்தைக் கெடுத்தது. மினுக்கட்டான் பூச்சியாட்டம் தெருவிளக்கு கீழே நாலைந்து பையன்கள் படக்கதை பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

கருவாட்டுக் கொழம்பு. முழிச்சிருந்து பேத்தி சோறு போட்டாள்.

காலையில் செட்டியார் கடையில் நாலைந்து இட்லியெப் புட்டுப் போட்டது. பகல் முழுக்க வெறும் வயித்திலேயே தண்ணியெக் குடிச்சது சரியாகவே இல்லை. இப்ப வேறு குடித்திருந்தார். எனினும் ஒரு குண்டாச் சோறு உள்ளே போனதும் போதை ஏறி இறங்கியது. மடிச்சிலைப் பையை அவிழ்த்து வெத்திலை போட்டுக் கொண்டார். தடியை எடுத்துக்கொண்டு பொன்னுச்சாமி. வீட்டுக்குப் போனார் செவந்தான்.

“பொன்னுசாமி... ஏ... பொன்னுசாமி... அடஙொங்காள ஒலியாண்டா... கள்ளென்ங்க காலையிலே கட்டி வச்சி அடிக்க வாடா... காசெ வாங்கி தண்ணியெக் குடிச்சுப்புட்டு தூங்குறெ... ஏலெய்... எந்திரிடா- ஏய் வனிதா-அடியேய்-வனிதா-” செவந்தான் சத்தமிட்டார்.

“என்னப்புச்சி- இப்பத்தானே படுத்தாக தண்ணியெ வாங்கி குடுத்திட்டியா” வெளியில் வந்த வனிதா சொன்னாள்.

“ஆமா... ஓம் புருஷனுக்கு வாங்கிக் குடுத்தாக... இதையுங் கண்டமான்னு குடிக்கிறாண்டி... சரி சரி - கெளப்பிவிடு சுடுகாட்டுக்குப் போகணும்.

“சுடுகாட்டுக்கா... என்னப்புச்சி நீ. வெல்லனா வேலைக்கிப் போவணும் அப்புச்சி.”

“போகலாமுடி... யாத்தா இன்னேரம் எரிஞ்சிரிக்கும் ஒப்புக்குப் போய் பாத்தெட்டு வர்றதுக்தானே... இந்தா... கரிச்சாங் கத்தறத்துக்குள்ளே வந்திடுவோம்.... எழுப்பு விடுத்தா... இனி ரெங்கசாமியெ வேறெ கௌப்பனும்”

வனிதா - உள்ளே சென்று எழுப்பினாள்.

தென்னங்காற்ற நன்கு வீசியது. தலைப்பக்கம் நெருப்பு பிடிக்கவேயில்லை. சுற்றிவர விராட்டி எரிந்து. கட்டையில் லேசாகப் பற்றி இருந்தது. நெருப்புச் சத்தம் மட்டுமே அங்கு நிலவியது. தூரத்தில் இருக்கும் ஆலமரத்தில் ஓர் ஆந்தை கத்தும் சத்தம் கேட்டது.

செவந்தான் மேலே போத்திக் கிடந்த துப்பட்டியை எடுத்து தலையில் உருமா கட்டினார். நான்கு முழு வேட்டியை கோமணமாக்கிக் கட்டிக் கொண்டார். ரெங்கசாமி வைத்திருந்த சாராயப் பாட்டிலை வாங்கிக் கொஞ்சம் அன்னாத்தி கொண்டார். பொன்னு.சாமியிடம் ஒரு வாட்டி வெத்திலை எடுக்கச் சொல்லிவிட்டு - நீண்ட குச்சியை எடுத்து நீளவாக்கில் நாலு இடத்தில் துளையிட்டார். பொட்டலத்திலிருந்த சீனியை அள்ளிக் கொட்டினார். தலைமாட்டுப் பக்கம் காற்று அணைவுக்காக பாடையை இழுத்து வைத்தார். சுற்றிலும் கலகல வென எரிய ஆரம்பித்தது.

பாம்பு தவளையைப் பிடித்திருக்க வேண்டும். தவளை கத்தி அடங்கியது. பதினொன்னரை மணி கார் போகும் சத்தம் கேட்டது.

“இன்னும் கொஞ்ச நேரத்திலே தலைப்பக்கம் பத்திக்கிட்டுரும். அப்புறம் போனமுன்னா வெள்ளி முளைச்சி வரலாம்”. என்றார் செவந்தன்.

“ஓனக்கு வேலை இல்லேய்யா. வேலை மயிரத்துப் போய் மருவுடியும் வர்றியோ வந்தது வந்தாச்சி... இன்னங்கொஞ்சம் சீனி இருந்தாப் போடு- டையரு கியரு கிடந்தா எடுத்துப் போட்டு எரிச்சுப்புட்டு ஒரேயடியாய் போறதுக்கு. காலையிலே ஒருக்கா வர்றியோ.” ரெங்கசாமி சொன்னான்.

“அப்பன்னா ... ஓண்ணுசெய்... இருக்கிற தண்ணிய இவென்ங்கிட்டே குடுத்துட்டு நீ ஓடிப்போய் இன்னரெண்டு கிளாசு வாங்கியா... தண்ணி குடிச்சாத்தான் கிட்டே நின்னு வேலை செய்ய முடியும்...” செவந்தான் மடிப்பையிலிருந்து பத்து ரூபாயெக் குடுத்து ஓடச் சொன்னார்.

“வாட்டசாட்டமா உருவம்டா. சதை புடிப்பு இருக்கு. சட்டுனு எரிஞ்சிடும்.. இப்ப சாக வேண்டிய ஆளில்லைடா இவரு. வந்த மருமக படுத்துன பாடு. மனமொடைஞ்சு இப்புடிப் போயிட்டாரு. ஆனாக்காக் காசு எலக்க மாட்டாருடா.. அம்புட்டுச் சொத்தும் மாட்டுத்தரகு, ஆட்டுத்தரகு பாத்து சம்பாதிச்சது தானே.. இவுரு பையன் அப்படி கெட்டி இல்லேப்பா தண்ணி கடுமையாப் போடுறாராம்.” செவந்தாள். வைக்கோல்' பரப்பில் சாய்ந்தபடி கூறினார்.

“ஒரு நா... நானும் நம்ம மூக்கன் இல்லே அவெனும்.... சினிமாவுக்குப் போயிட்டு வந்தோம்.. ரெண்டாவது ஆட்டமுல்ல பாத்திட்டு வர்றோம். ஒட்டு வீட்டுக்கார வீட்டு பாலத்துக்கிட்டே வரயிலே யார்ராதுன்னு அதட்டுனாரு யார்டா இந்த நேரத்திலேன்னு- நின்னோம். தண்ணி போட்டிருந்திருப்பாரு போலிருக்கு. கிட்டே வந்து என்னடா இன்னேரத்திலே யார்டா நீள்னாரு. நான் முத்தன் மகன் பொன்னுச்சாமின்னேன். அவென் யார்டான்னாரு ஒத்தவீட்டு மூக்கன். நொண்டிக்கிழவன் மகன் கள்ளவீட்டு அய்யா ன்னு சொன்னேன். எங்கெடா போயிட்டு வாறியன்னாரு. சினிமாவுக்குன்னு சொன்னேன். சரி என்னோட கொஞ்சம் வாங்கடா. கொளத்து வய வரைக்கும் போயிட்டு வருவோம்ன்னாரு... எனக்கு என்னடா நல்லா மாட்டிக்கிட்டமே... இபோகாட்டி மனசிலே வச்சிக்கிட்டு அடிப்பாரேன்னு மொட்டையா- எதுக்கு வயலுக்கு மம்பட்டி எடுத்துக்கிட்டு வாங்கன்னு சொன்னேன். நின்னுங்கடா. வர்றேன்னு போனாரு. போயி கொஞ்ச நேரத்திலே- பொரப் போட்டாரு ச்செய்- இது வம்புலெ வந்து முடியப் போவுதுன்னு ஒரே தட்டு, ஓடி வந்திட்டோம் அன்னக்கி மைக்கா நாளுதாய்யா. இவருக்கும் மொத்திக் கள்ளன் மகனுக்கும் சண்டெவக்காலொக்க வயதான ஆளா இருந்தாலும் இவரெ ஒன்னும் பண்ண முடியலைய்யா..." பொன்னுச்சாமி சொன்னான்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு... ஊறி வந்த வெத்திலை எச்சியை காரித் துப்பினார் செவந்தான்.

கால்மாட்டில் எரிந்து கொண்டிருந்த விறகு ஒன்று சரிந்து விழுந்தது. சுற்றிலும் திபுதிபுவென எரிய ஆரம்பித்தது. காற்று கொஞ்சம் தணிந்து விசியது. சாராயம் வாங்கப் போனவனின் பாட்டுக் குரல் தூரத்தில் கேட்டது. செவந்தானுக்கு பொன்னுச்சாமி கூறியவுடன் பழைய நினைவு வந்தது. புகையிலையை உள்ளங்கையில் வைத்து கசக்கி கடைவாயில் அடக்கிக் கொண்டார். கணன்று வந்த காரை எச்சியை துப்பிவிட்டு கணைத்துக் கொண்டார். போதை தணிந்திருந்தது. மீண்டும் கணைத்துக் கொண்டு-

"நீ...இதெச் சொல்றே- நான் ஒரு தரம் இவருகிட்டே மாட்டிக்கிட்டேன்டா... மாட்டிக்கிட்டேன்னா... ஒன்னுமில்லே... அப்ப கள்ளுக்கடை இருந்த நேரம்... நானும்... எம் மச்சான்... அதான் எஞ்சம்மந்தியும் கள்ளுக் குடிக்கப் போனோம். எனக்கும் எம் மச்சானுக்கும் சின்ன தவசல். சரியாப் பேசிக்கிறதில்லே. ஒரு நாப் பொங்கலுக்கு வருசெ கொண்டுக்கிட்டு வந்திட்டாரு. எம்மருமவ அஞ்சி ரூவாக் காசெக் குடுத்து போயித்து வாங்கன்னுச்சி. சரின்னு அந்தாளெ அழைச்சிக்கிட்டு போனேன். அங்கே ஒரே கூட்டம் பொங்கச் சமயமா- கூட்டம். ஒரு மங்கு வாங்கி ஆளுக்கு பாதி குடிச்சோம். அப்பதான் இவரு வந்தாரு. மொதல்லேயே குடிச்சிருந்திருக்காரு. “டேய் செவந்தான் எனகொரு. கொவளை வாங்கியாடான்னாரு.” 'நமக்கென்ன சொன்னதெக் கேப்போம்'ன்னு வாங்கிக் கொடுத்தேன்.

குடிச்சிட்டு பேசிக்கிட்டு இருந்தாரு. அப்பறம் எங்கிட்டே இருந்த காசெ எடுத்து இன்னுங்... கொஞ்சம் வாங்கி, நாங் குடிக்கலெ... எம்மச்சானுக்கே குடுத்து குடிக்கச் சொன்னேன். கள்ளுக்கடைக்காரரு...”

செவந்தான் மீசைக்கார்ருக்கிட்டேயிருக்கிற கொவளையெ எடுறான்னாரு. நான் போயி எடுத்தேன். ஒடனே இவரு "செவந்தான் ஒஞ் சம்மந்தி பசையான ஆளாமுல்லடா, எனக்கு கள்ளு வாங்கித் தரச் சொல்லுன்னாரு..." நாஞ் சொன்னேன், அந்தாளுக்கு இது பழக்கமில்லே கள்ளவீடு. மல்லுக்கட்டி அழைச்சாந்தேன்னேன். "சரிடா... வாங்கச் சொல்லுடா”ன்னாரு... நல்லா மாட்டிக்கிட்டோம். எப்படியும் கலட்டிக்கிட்டு போயிடனுமுன்னு நெனச்சிக்கிட்டு...."எம் மச்சானெ நீ மொல்லப் போயென்னு சொன்னேன். அவரு ஒரு பத்தடி நடந்திருப்பாரு இவரு என்ன பண்ணுனாரு. உக்காந்து இருந்தவரு எந்திருச்சி டேய் இந்த ஊரான் அடேய் செவந்தான் சம்மந்தி- என்னடா... ஒரு கள்ளன் கேக்கிறேன் மரியாதெ இல்லாமப் போறேன்னுட்டு வேகமாய் போனாரு. போன வாக்கிலே இடுப்புலே ஒரு ஒதை விட்டாருய்யா. எனக்கு குடிச்ச கள்ளெல்லாம் எங்கே போச்சினே தெரியலே... ஒப்புரானே... சம்மந்தியெ ஓதைச்சிப்புட்டாரேன்னு- என்ன கள்ளவீடு-- நீங்க குடிக்காத கள்ளா. இதுக்குப் போயி - விருந்தாடி வந்த மனுசனெ ஒதைக்கிறியன்னு கேட்டேம்பாரு அட தாயலி இந்த மீசைக்காரன்கிட்டேயே எதுத்துப் பேசிறியாடான்னு இழுத்து அறைஞ்சார்டா. காது கூவுது... நல்லதுக்கு காலமில்லேன்னு. நெனச்சிக்கிட்டு... சரி...வா... மச்சான் தப்பா நெனக்காதேன்னு சொல்லி கூப்புட்டேன். அங்கென ஆளுக நெறையா நிக்கி- அடுத்த ஊருக்காரனுக்கு கொடுக்கிற மரியாதையா இது. எங்க ஊரா இருக்கணும்ன்னு சொல்லிவிட்டு திரும்புனாரு. எஞ்சம்மந்தி என்னடா, டெ. மனனேன்னு மறுபடியும் எட்டி ஒதைச்சிப்புட்டாருய்யா எம் மச்சான் எதுக்க ஆரம்பிக்க ஒடனேல்லா எல்லாரும் வந்து என்னெக்கிட்டே ஒம் மச்சானெக் கூட்டிகிட்டுப் போடான்னு சொல்றாக, அன்னையிலிருந்து இந்தாளு மேலே கொஞ்சங்கூட எனக்கு- சொல்லி முடிப்பதற்குள் ரெங்கசாமி சாராயத்தைக் கொண்டு வந்து விட்டான். பழைய கசப்பான அவமானகரமான நினைவுகளை அசைபோட்ட செவந்தான். வாங்கி வந்த அவ்வளவு சாராயத்தையும் எடுத்து. ஒரே மூச்சாகக் குடித்தார்.. விருட்டென. போதை ஏறியது.

சுற்றிலும் நன்கு பற்றி எரிந்த விறகு கட்டைகள் பொதபொதவெனச் சரிந்தன. கட்டைகளுடன் சேர்ந்து பாதி வெந்த நிலையிலிருந்த மீசைக்காரரும் சரிந்து விழுந்தார்.

பழைய நினைவுகளில் சுழன்று போதையேறிய செவந்தானுக்கு இப்படி பிணம் சரிந்து விழுவதும் தூக்கி வைத்து எரிப்பதும் புதிதல்ல இருக்கிறதெக் கொண்டு எரிக்கணும். சட்டுனு சொல்லு நாறுது என்று கேட்டான்.

போதை ஏற ஏற- கள்ளுக்கடையும் தன் சம்மந்தி அடிவாங்கி அவமானப்பட்டது... ஏன்ய்யா ... இப்புடி மானங்கெட்டு பொளைக்கிறியன்னு மச்சான் திட்டியதுமே நினைவை அரித்தது.

மரத்தைக் குடுத்து தூக்கி வைச்சி எரிச்சுப்புடுவோம்ன்னு ரெங்கசாமி கேட்டான். செவத்தான் எழுந்தார். தலையில் உருமாலை சுற்றினார். “தூக்கி வச்சியா எரிக்கணும். எங்கடா கோடாலின்னு போய் கோடலியை எடுத்தார்.

சரிந்து கிடந்தார் மீசைக்காரர். ஓங்கி காலை வெட்டினார். இந்தக் காலுதானே எம்மச்சானெ ஒதைச்சது... ஓங்கி கையை வெட்டினார் இந்தக் கைதானே என் கன்னத்திலே அறைஞ்சது. பழைய நினைவும் இப்போது குடித்த சாராயமும் செவந்தானுக்குள் அடங்கிக் கிடந்த மூர்க்கத்தனத்தை உசுப்பி விட்டன. வெட்டி வெட்டி எடுத்து நெருப்பின் மேல் போட்டார். எரிந்தும் எரியாமலும் கிடந்த முண்டத்தை தாறுமாறாகக் கொத்த அள்ளி நெருப்பில் போட்டார். பாடைக் கம்புகளையும் பிய்த்து எடுத்து நெருப்பிலேற்றி மீந்து கிடந்த சீனியையும், சீயக்காயையும் அள்ளிக் கொட்டினார். மீசைக்காரர் எரிந்த விறகுகளுடன் கருகிக் கொண்டிருந்தார். தணல் உயர்ந்து படபடத்து எரிந்தது. செவந்தானுக்கு ஆத்திரம் தணிந்தது. இந்த ஆத்திரமும், கோவமும் எப்படி வந்ததென்றே தெரியவில்லையே என்று தன்னையே வியந்து நின்றார் செவந்தான்.