உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சைச் சிறுகதைகள்/விபத்து

விக்கிமூலம் இலிருந்து

யூமா வாஸுகி


ஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மண்ணுக்குச் சொந்தக்காரர் ஓவியர் மாரிமுத்து.

மாரிமுத்து என்ற பெயரில் ஓவியங்கள் வரைந்து வந்த ஒருவரே யூமாவாஸுகி என்ற பெயரில் கவிதைகளும், கதைகளும் எழுதுகிறார். இவரது கவிதைகள், ஓவியங்கள், சிறுகதைகள் எல்லாமே சோகத்தை அடிநாத இழையாகவும் அதை வெளிப்படுத்தும் மொழியாக அறுவெறுப்பு மிக்க கோரப்படம் பிடித்தலையும் கொண்டிருக்கின்றன.

...நல்ல கோடுகளை உருவாக்க வல்ல ஒரு ஓவியன் சோகத்தையே தனது மொழியாகக் கொண்டிருக்கிறான். சொற்படிமங்களை வெளிப்படுத்தும் தன்மையுடைய இவர் படிமங்கள் அறுவெறுப்புரும் கோரங்களாக வெளிப்படுகின்றன. இவற்றை இவர் நியாயப்படுத்தவும் செய்கிறார். இதன் மூலம் எவ்வித இலக்கும் அற்ற லும்பன் பண்பாட்டு தன்மையுடையவராக இருக்கிறார். நமது சூழலின் பண்பாட்டு தன்மையுடையவராக இருக்கிறார். நமது சூழலின் சோகம். இங்குள்ள பண்பாட்டு நிகழ்வுகள் குறித்த அக்கறையோடு தேடும் சொரணையற்று வெறும் அற்ப நிகழ்வுகளில் தன்னை இனம் காணும் இவரின் லும்பன் வாழ்வை விமரிசனம் செய்யும் அதே வேளையில் இந்த லும்பன்களிடம் உள்ள திறமைகள் குறித்தும் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை . இப்படிப்பட்டவர்களின் 'நான்' களின் பிரக்ஞை பூர்வமாக உருக் கொள்வதில் சமூகத்தின் பங்கு பற்றி நாம் தீர விசாரித்துக் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்... இந்த மாரிமுத்துவைப் பற்றி கவிதாசரணில் வீ. அரசு குறிப்பிட்டுள்ளார்.

"...யூமாவாஸுகியின் சொல்லோவியங்கள் வெறியும், அமைதியும் கொண்டவை. குரூரம் அன்பும் பாராட்டுபவை. பல சமயங்களில் அவர் அறிமுகப்படுத்திக்காட்டும் அவர் வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத வகையில் நியாயத்தையும், நேர்மையையும் வலியுறுத்துபவை. ஒரு வேளை மீட்சிக்கான வேட்கைகளாக இருக்குமோ? இருந்தால் நல்லது. இந்த வேட்கை இன்னும் தேவையானது...” இலக்கு இதழில் தன் அபிப்பிராயத்தை வைக்கிறார், இன்குலாப்.

இவர் அதிகமாக எழுதாவிட்டாலும் சிறுகதை: - வெளிப்பாட்டின் கூர்மையும், தெளிவும் பொதிந்திருப்பது அவரது படைப்புகளின் தனிச்சிறப்பு.

விபத்து


றுபடியும் அதைப் போல் ஒன்று நடந்திருக்க வேண்டும். இத்தனை ஜனம் ஒரே இடத்தில் திரண்டிருப்பதற்கு வேறு காரணமெதுவும் தோன்றவில்லை. சாலையோரத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு சற்றுநேரம் கும்பலையே பார்த்துக் கொண்டிருந்தான். வெகுவான எண்ணச் சிடுக்குகளிலிருந்து ஓய்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தது மனது. அந்த திருப்தியானது சகஜபாவனையில் உறங்கும் மூர்க்க உணர்வுகளுக்கிடையில் எந்த நிமிடத்திலும் நிகழ இருக்கும் நுட்பத் தாக்குதல்களுக்கும் - அவற்றில் முதிர்வில் அவனிடம் ஏற்படுத்தப் போகும் புறக் கொந்தளிப்புகளுக்கும் ஆயத்தம் பூண்டிருந்தது.

முன்னம் வாய்ந்த அனுபவம் வேறுவிதம். அது லாரியேறிய பெண். சதை மசிந்து வெளெரென்று துருத்திய நெஞ்செலும்புகள். ரத்தத்தில் ஊறிக் கொண்டிருந்த இளமையின் கோரக்கலவை. ரத்தம் புறக்கணித்துத் தெளிவாயிருந்த ஒரு பக்க முகத்தில் நவீன மோஸ்தர் காதுத் தொங்கள் கன்னத்தில் ஸ்னேகமாய் பதிந்து வெயிலுக்கு ஒளிர்ந்தது. இறந்த பின்னும் விட்டுவிடாத பையிலிருந்து விலகிக் கிடந்த வண்ணக்குடையின் கைப்பிடி மண்ணில் ஓடிந்திருந்தது. ஒரு போலீஸ்காரன் சாவதானமாக மூக்கைச் சிந்தியபடி “நகரு நகரு...எஸ்.ஐ. வரப்போறாரு" என்று லட்டியைத் தரையில் தட்டி மிடுக்குக் காட்டும் வரையில் வண்டலாய்த் தேங்கி நின்று யதார்த்தத்தின் உஷ்ணத்தால் ஆவியாகிப் போய் இப்போது இனம் புரியாத மணத்தை மட்டுமே தக்க வைத்துக் கொண்டிருக்கிற கடந்த காலத்தில் ஒரு விசாலமான பகுதியில்; அல்லது ஏதாவது ஒரு பருவத்தின் சொற்ப தினங்களில்... அல்லது உயர்வான அர்த்தத்துடன் எதிர்வந்து மோதி ஸ்தம்பிக்க வைத்து திரும்பிப் பார்ப்பதற்குள். தன் எல்லா அடையாளங்களையும் சுருட்டிக் கொண்டு மறைந்து விடுகிற அனேக உன்னத நிமிடங்களொன்றில் - அவனது வார்த்தைகளோ, உடலோ, மௌனமான செயல் துணுக்கோ, அவளோடு தொடர்பு கொண்டிருந்திருக்குமென கருதினான். குறைந்தபட்சம் ரயில் நிலையப் பாலத்தின் உயரமான படிக்கட்டுகளில் அவன் புகைத்தபடி நிதானமாக நடக்கும்போது பின்னிருந்து அவனை உந்தித் தள்ளி நாகரீக வார்த்தையில் எரிச்சலைத் துப்பி விட்டு முன்னேறும் மனிதர்களில் அவளும் ஒருத்தியாயிருந்திருக்கலாம். பிற்பாடு அவள் புதைக்கப்பட்ட மயானமறிந்து அவளுக்குப் பிரியமான எதையாவது சமர்ப்பித்துவர விருப்பமெழுந்தது. படம் வரையும்போது வெகுநாட்களாக தூரிகையைத் துடைப்பதற்காக உபயோகப்படுத்திய துண்டில் அற்புதமான நிறச்சேர்க்கையில் ஒரு ஓவியம் சம்பவித்து அவனது கவனத்திற்காகக் காத்திருந்ததை சில தினங்கள் முன்புதான் கண்டுபிடித்திருந்தான். அதைப் போர்த்துவதும்கூட சிறந்ததாக அமையும். ஒரு கனவை அவிழ்த்துப் பரத்தியது அந்த இரவு.

கண்ணுக்கெட்டியவரை மரங்களேயில்லாத வெளியில் ஏக்கப்பிரவாகமான அழுகுரல் மிதக்கிறது. பாதங்களில் கீழே கரிய நிலத்தில் வெடிப்புகளில் நாறும் நிணம். வெயிலைத் தடவியுணர்ந்து ஊடுருவ முடிந்தது. ஒரு கைக் குழந்தையைத் தோளில் தாங்கி அவன் நடந்து கொண்டிருக்கிறான். குழந்தையில் தலை வழவழப்பாய் ரோஜா நிறத்தில் மின்னுகிறது. சற்றும் எதிர்பாராமல் நில வெடிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி பெரும் பள்ளங்களாகின்றன. பள்ளத் திரவத்திலிருந்து தோன்றி மேல் வந்து அலைகின்ற குழிழ்கள் ஒவ்வொன்றாய் வெடிக்கும் போது ஜனிக்கும் அழுகுரல். பேராசையான அவலக்குரல்களின் தாபம் எங்கும் நிறைகிறது. பிரிந்து கொண்டிருக்கும் நிலத்தட்டுக்களின் மீது தாவிச் செல்கையில் அதிர்வு தாங்க மாட்டாத குழந்தையிடமிருந்து மெல்லக் கசிகிறது. அழுகை. வெளி நிசப்தமானது. ஒரே குரல். அது குழந்தையிடமிருந்து வந்தது. குழந்தையின் கண்ணீர்ச் சொட்டு திட உருவில் தரை தொட்டவுடன் எழுந்த புகை தூண் போலாகி - குழந்தையின் தலையும் நிலவெடிப்புகளைப் போல விரிசல் காட்டுகிறது. குழந்தையின் அழுகுரல் ஓலமாய் வலுப்பதற்கேற்ப தலைவெடிப்புகள் ரத்த விளிம்புகளுடன் - அதிகரிக்கின்றன. மிரளும் அவனின் கலவரமான தேற்றுதல் வார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல் கதறுகிறது குழந்தை .. அவனில் மரண பயம் கவிந்தது. அவனுக்கே விளங்காத பிதற்றலாய் குழந்தையிடம் மன்றாடி முடியாமல், நிர்தாட்சண்யக் கண்களுடன் இமைக்காமல் வெறித்தழும். குழந்தையின் தலையில் முழுச் சக்தியுடன் குட்டுகிறான். குட்டு விழுந்த இடம் சில்லுபோல் நொறுங்கி ஓட்டை விழுவும்--அந்த ஒழுங்கற்ற .சதுரத்திற்குள் வெண்குழைவு அடர்ந்து கொதிக்கிறது. அது மேலேறி.. வழியும்போது புலரும் ஒரு குருவியின் அலகு. தன் சிறகு வீச்சில் சப்தத்தில் மீது அமைதியைச் சரித்து மூடி குருவி பறக்கத் தொடங்கியது இப்போது குழந்தையில்லை. அழுகுரல் இல்லை. நிலமும், வெயிலும் அவனுமில்லை. தூரத்தில் புள்ளியாகி மறைந்து கொண்டிருந்தது குருவி.

இரண்டு தினங்கள் வேறெதையும் நினைக்க விடாமல் பதிந்து விடாமல் வலுவான நகக்குறியாய்ப் பதிந்து ஹிம்ஸித்தது கனவு. அறைத் தனிமை அவனை நெருங்கவிடாமல் துரத்த ஊர் வெளிப்புறங்களில் சுற்றிக் கொண்டிருந்தான். கனவின் வர்ணனையும் அதன் கீழே சில விளக்கச் சித்திரங்களும் குறிப்புத் புத்தகத்தின் சில பக்கங்களை நிரப்பின.

கூட்டத்தில் கலந்து குனிந்து பார்த்தான். ஒருக்களித்த விகாரச் சயனமாயிருந்தது. வலதுகை தலைக்குமேல் உயர்ந்து அசாதாரண வளைவுடன் புழுதியில் பதிந்திருந்தது. வாயிலிருந்து தரையை இணைத்த ஒழுக்கு நின்று போய் வாய் கோடியிலும், கன்னத்திலும் உறைந்திருந்தது ரத்தம். இனங்காணும் வாய்ப்புகளைத் துறந்து சக்கரவேகத்தில் பிசையப்பட்டிருந்தது. முகம். தலையென்று அவதானிக்கக் கூடிய பாகத்தின் ரோமப்பிளவின் கீழிருந்து நாவின் நுனி போல மூளை எட்டிப் பார்த்திருந்தது. ஒரு கால் மடிந்தும், இன்னொன்று திக்குகள் காட்டும் விரைத்த விரல்களுடனும் நீண்டிருந்தது. ஆழச் சிராய்ப்பில் தசையுரிந்து முழங்கை எலும் வெளித் தெரிந்தது. தார்ச்சாலையில் - விளிம்புகளில் ஈக்களுடன், ஒரு அபகரித்தலின் தீவிரத்தை விளக்க முற்படும் - ரத்தப்பெருக்கில் ஊறிக்கிடந்தது பிணம். மேலும் நிற்க முடியாமல் கூட்டத்திலிருந்து விலகி நடந்தான்.

சைக்கிளை அந்த இடத்திலேயே விட்டு வந்ததை இப்போதுதான் அறைச் சூழல் உணர்த்துகிறது. மறுபடியும் அவ்வளவு தூரம் சென்று சைக்கிளைத் தேடுவதற்கு இசைவற்றிருந்தது உடற்களைப்பு. அகாலத்திலும் விட்டு வந்த இடத்திலேயே சைக்கிள் நின்று கொண்டிருப்பதால் யோசிப்பதற்கு ஒரு முகாந்திரமுமில்லை. அது பூட்டப்படாதிருந்தது.

தீய்ந்த முனைகளுடனான சிகரெட் துண்டுகளும், கிழிபட்ட காகிதத் துணுக்குகளும், வண்ணங்கள் காய்ந்த தூரிகைகளும் விரவி அறையை வயப்படுத்தியிருந்தன... புழுதியின் மீதும் பழைய காலண்டர் தாளின் மீதும் படுக்கை விரித்திருந்தான்: படுக்கையெனில் அழுக்குப் பிடித்த போர்வையொன்று தரையில் சுருண்டு கிடப்பது. உத்தரக்கட்டைகளின் ஏதோ ஒரு இடுக்கில் எலி செத்துக் கிடக்கும். துர்நாற்றம் அழுத்தமாக பரவியிருந்தது. சிகரெட் -துர்நாற்றம் அழுத்தமாகப் பரவியிருந்தது. சிகரெட்-கொசுவர்த்திச் சுருள் புகை மூட்டத்தினூடேயும் அவனைத் தீண்டிவிடும் வல்லமையாயிருந்தது. நாற்றம். இருந்தது எல்லாமும் அரைகுறையாக வாசிக்கப்பட்ட இரவல் புத்தகங்கள், நல்ல புத்தகத்தை உடமைக்காரனிடத்தில் திரும்ப ஒப்படைக்கையில் அத்தியந்தமாய் உடலோடு ஒட்டியிருந்த தனி வஸ்துவொன்றை பிய்த்துக் கொடுப்பதான சோகம் நெருடும். புத்தக அடுக்கின் இடையிலிருந்து குறிப்புத் தாள்களையெடுத்து புரட்டத் தொடங்கினான். வெறிபிடித்த கொசுக்கள் அவனைச் சுற்றிவந்து அவ்வப்போது சருமத்திற்குள்ளாக மூக்கைச் செலுத்தியமர்ந்து சில நொடிகள் தியானித்தன. கடந்த வாரம் செல்வரெங்கனோடு நடந்த உரையாடலை எழுதியிருந்ததில், அவனுடைய விஷயமாக இன்னும் கொஞ்சம் சேர்க்க வேண்டியிருந்தது. எழுத முற்படும்போது தற்போதைய உபயோகத்திற்கு சிகரெட் இல்லாதது ஆயாசமேற்படுத்தியது. நசுங்கி சிதறிக் கிடந்தவற்றில் பெரிதாகச் தேர்ந்த ஒரு சிகரெட் துண்டைப் பற்ற வைத்து பேனாவின் முனையால் புள்ளி வைத்தபடியிருந்தான். வராண்டாவில் உதிர்ந்து கிடந்த இலைச்சருகுகளுக்கு அறையைச் சுட்டியது காற்று. யாரோ தடதடத்து ஓடுவது போல அஸ்பெஸ்டாஸ் கூரை மீது மரக்கிளைகள் உராய்கின்ற சப்தம். எழுந்து கதவைச் சாத்திவிட்டு வந்து உட்கார்ந்தான். அடித்தல், திருத்தலாய் தாளில் குழறிக்கிறுக்கியது பேனா, எங்கோ ஒளிபுகாத வானத்தில் பாறையில் உடலைக் கிடத்தியிருக்கும் மலைப்பாம்பின் வயிற்றுக்கோடுகள் துண்டு துண்டாய் தன் மார்பின் ரோமங்களுக்கிடையில் பதியும் பிரமையிடல் கிலி தட்டியது.. நிமிர்த்த மற்ற அச்சத்தில் எழுத முடியாமல் விளக்கை அணைத்து சில்லிட்ட தரையில் படுத்துக் கொண்டான். உற்சாகத்திற்கல்ல இருட்டு. திடீரென்று பக்கத்தில் துழாவி காகிதமும், பேனாவுமெடுத்து மறைப்பு நீங்கித் தொட்டு விட்ட ஒரு வாசகத்தை தோராயமாகக் கணித்து எழுத்துக்களில் நிறுத்தினான்.

ஏகப் பராக்கிரமமாய் வீசிய காற்றுக்குப் பிறகு ஆர்ப்பாட்ட இரைச்சலுடன் வந்தாடியது மழை. கூரையில் நீர்ச்சரங்களாக மோதி அவனைத் திடுக்கிட வைத்து எங்கும் தன் கர்வத் திரை விரித்தது. அவன் உடைகளைக் களைந்து வராண்டாவிற்கு வந்த போது, வெளியேறும் மார்க்கமின்றி அவனுள்ளே பரிதவித்துக் கொண்டிருந்த முறையீடுகளும் இன்னபிறவும் வாசகங்களாக விடுபட்டன. நீரடித்த கண்களின் உறுத்தலை விருப்பத்துடன் சகித்து வளர்கின்ற வாக்கியங்களுடன் படுத்துக் கிடந்தான். அவற்றையெல்லாம் இடிமூழ்கி அங்கீகரித்தது வானம். கவிழ்ந்து படுத்து தரையைத் தழுவி ஓடுகின்ற நீர்மேல் முத்தம் வைத்தான் உதடுகள் இயல்பாயில்லை. கரிப்புச் சுவையொத்த எதுவோ ஒட்டிக் கொண்டிருந்தது. முகத்தை கையால் வழித்து விடுகையில் விரல்களுக்கிடையில் குமட்டும் மணத்துடன் பிசுபிசுத்தது இளஞ்சூடான புதிய ரத்தம். திகைப்பில் சிறைப்பட்ட நாவு அவனின் வீறிடலை. ஒரு முனகல் விளிப்பாகவே பிரசவித்தது. பதைத்து எழுந்தான். அடிவைக்கும் இடமெல்லாம் பாய்ந்து கொழகொழப்பாய் வழுக்கியது. சிரிப்பில் விரியும் கொடூர உதடுகளுக்கிடையில், தோன்றி மறையும் பல் வரிசையாய் ஒளியெறிந்த மின்னலில் வெளியெங்கும் கருஞ்சிவப்புப் படலம் கண்டு குலைபதறி அறைக்குள் விழுந்தான். திறந்த கதவுகள் வழியே இலைச் சருகுகளையும், போர்வையையும் நனைத்து உள்ளேயும் ரத்தம் நுழைந்திருந்தது. பாதி மயக்க நிலையில் அவனுக்குள்ளேயே ஒண்டிக்கொண்டு அறை மூலையில் புகைப்படமாய்ச் சமைந்தான். வெகுநேரம் அமர்ந்து வியர்த்து அந்த நிலையிலேயே உறங்கிப் போனான். உறக்கத்திற்கு முன்பாக வினாடியிலும் வெளியே சந்நதங் கொண்டல்றும் ரத்தப்பொழிவை கிரகிக்க முடிந்தது.

தன் மீது கொஞ்சம். உற்சாகத்தைப் பிழிந்து கொள்ள மேற்கொண்ட செயல்களில் தோற்று, வாடிய மனதின் மேய்ப்புத் தரையாக எதையாவது பற்றிவிட்டு இலக்கற்று அலைந்து கொண்டிருந்தான்.. வெயிலேறிய பொழுதில் அவனுக்குப் பக்கமாக வந்து நின்று மனிதர்களைக் கழித்த பஸ்ஸில் ஆலோசனையுடன் ஏறி நின்று பார்த்தான். உட்கார்வதற்கு இடமெதுவும் காலியாயில்லை. அவனது இருக்கையைக் கைப்பற்றி விரோதி யாராக இருக்குமென்று முகங்களை கூர்ந்து கவனிக்கையில் பஸ் கிளம்பியது. பஸ் புறப்பட்ட பிறகும் எங்கு செல்வதென்ற தீர்மானம் சிந்திக்காமலிருந்தது. நகரத்திற்கும் அப்பால் எந்த கிராமத்திலாவது இறங்கிக் கொள்வதென்று உத்தேசமாய்க் குறித்து வைத்தான். ஜனநெரிசல் மிகுந்த அவன் கொஞ்சம் கால் மாற்றி வைக்கவும் இடமில்லாமலிருந்தது. மனிதர்கள் எந்த சங்கோஜமுமில்லாமல் சாய்ந்தும் தள்ளிக் கொண்டும் மேல்கம்பியைப் பிடித்த கரத்தின் முட்டியால் அவன் தலையில் இடிக்கவும் செய்தனர்: அவனும் கம்பியைப் பிடித்துக் கொண்டிராவிடில் தடுமாறி, பக்கத்து இருக்கைப் பெண்ணின் மடியிலிருந்த குழந்தை மீது விழுந்திருப்பான். அந்தக் குழந்தை உறங்குவதும் கண்களைத் திறந்து பார்ப்பதுமாயிருந்தது. அவனைச் சொடுக்கி வீழ்த்தியது அதன் குறுநகை வாத்ஸல்யம் மிகுந்த இணக்கமான. பாவத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தாடையில் விழித்திருந்த எச்சிலில் லேசாக விஷச்செம்மையேறிக் கொண்டிருப்பதாய் ஊகித்ததும் பட்டென்று முகத்தைத் திருப்பின் கொண்டான். ஒரு ஐந்து தன் முரட்டுச் செதில்களைக் கொண்டு மண்டைக்குள்ளாக கீறி வரைவதிலேற்பட்ட வலியை எதிர்கொள்ள இயலாமல் அடிக்கொருதரம் அவன் தலை குலுங்கியது.

தலையைத் தடவி விட்டுக் கொண்டே சகபயணிகளை வேடிக்கை பார்த்தவாறிருந்தான். கண்டக்டர் நெரிசலில் புகுந்து பிரயத்தனப்பட்டு வெளிவருகையில் விபத்தில் இறந்தவனின் ஒரு அம்சம் அவர்மீது சுவாசமிடுவதை எச்சரிக்கையாக கவனித்தான். இந்த பஸ் எதுவரையில் செல்லுமென்று விசாரித்து கடைசி நிறுத்தத்திற்கு டிக்கெட் வாங்கினான். கம்பியைப் பிடித்திருந்த கையில் இறகு வருடுவது போலிருந்த கிளர்ச்சியனுபவத்திற்கு கூசியது உடல். அந்த சுகம் அறுந்துவிடாத ஜக்கிரதையோடு தலையுயர்த்திப் பார்த்தான். உள்ளங்கையிலிருந்து ஒழுகி முழங்கை வரையிலான நெளிக்கோடுகளின் முடிவில் சொட்டுகளாய் ரத்தம் துளிர்த்திருந்தது. நெஞ்சையடைத்து திணறியது சுவாசம். கையை உதறி அழுத்தமாய் சட்டையில் துடைத்துக் கொண்டான். பிசுபிசுப்பு அகன்றபாடில்லை. மீண்டும் மீண்டும் பரபரப்பாய் கையைத் தேய்த்து அதை முற்றுமாய்க் களைத்துவிட முனைந்தான். அவன் கையில் டிக்கெட்டைத் திணித்துவிட்டு விநோதமாய் உற்றுப்பார்த்த கண்டக்டர், அப்பால் நகர்ந்தபோது-அவர், நசித்துப் போன மனித மூளையின் ஒரு துண்டை உதிரக்கறைகளுடன் தன்கையில் திணித்ததை நம்பத் திராணியற்று அங்குமிங்குமாய் நடுக்கத்துடன் தேடினான். அந்தப் பஸ்லிருந்து உடனடியாக தப்பிச் செல்வதாயிருந்தது அவனது முயற்சி பெருத்த அசைவுடன் பஸ் நின்றது.

துணை நூல்கள்

தமிழ்ச் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் பெ.கோ. சுந்தரராஜன்(சிட்டி)
கோ. சிவபாதசுந்தரம்
தமிழ் நாவல் நூற்றாண்டு
வரலாறும் வளர்ச்சியும்

இலக்கிய சிந்தனையாளர்கள் க.நா. சுப்ரமணியம்
தமிழ் எழுத்தாளர் யார்? எவர்? தமிழ் எழுத்தாளர்சங்கம்
தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் மது ச. விமலானந்தம்
அமுதக் கதம்பம் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டாளர், தொகுப்பாளர்
பெயர்கிடைக்கவில்லை.
கதைகோவை அல்லயன்ஸ் வெளியீடு
சுபமங்களா, புதியபார்வை விமர்சனங்கள்-குறிப்புகள்
கவிதாசரண், இந்தியா டுடே.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதை சொல்லிகளின்
அனைத்து தொகுப்புகளும்.
ஆய்வுக்காக

அனைத்து படைப்பாளிகளின் நூல்களை நான் தேடிச் செல்லும் போதெல்லாம் ஆக்கப்பூர்வமாக உதவிபுரிந்தவர்கள் என் அன்புக்கு உரியவர்கள் –

திருவாளர்கள்

எம்.வி. வெங்கட்ராம்
சௌ. இராதாகிருஷ்ணன்
இரா. காமராசு
அ.ப. பாலையன்
தஞ்சை ப்ரகாஷ்
தேணுகா
பொதியவெற்பன்
மதுக்கூர் ராமலிங்கம்
ந. சுந்தரபுத்தன்
நாகை மாலி
சௌ. ராமலிங்கம்
அரசியன்பன்
மானா பாஸ்கரன்
தெ. வெற்றிச்செல்வன்
சத்தியசந்தன்