தஞ்சைச் சிறுகதைகள்/குளம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
நா. விச்வநாதன்

ஞ்சை மாவட்டம் காவிரிக்கரை ஓரத்தில் உள்ள அரசூரில் 1948 இல் பிறந்த விஸ்வநாதன் தொடக்கக் காலத்தில் நவீன கவிதை மூலம் பரவலாய் அறியப்பட்டவர். அண்மைக்காலத்தில் சிறுகதைத்துறையிலும் தன் முத்திரையை பதித்துக் கொண்டிருப்பவர்.

தனது படைப்பு எந்த இதழிலும் வரலாம். தன் குறிப்புமொழியில் தன் முகத்தோடு மட்டுமே தன் படைப்புகள் வடிவம் கொள்ளும் என்பதை நிலைநாட்டிக் கொண்டிருப்பவர்.

வாழ்வின் மென்மையான உணர்வுகளை படைப்பாக்குவதில் தேர்ச்சிப் பெற்றவர்.

இரண்டு கவிதைத் தொகுதி நூல் வடிவம் கொண்டுள்ளன.

அவரது சிறுகதைகளைப் படிக்கும் போது அவர் எதிர்காலத்தில் சாதிப்பார் என்பதை உணரமுடிகிறது. 
குளம்


ருக்குள் நுழைந்தபோது அவனுக்குத் தென்பட்ட முதல் மாறுதல் அந்தக் குளத்தில்தான். கௌதமன் குளம் என்று அதற்குப் பெயர் அகலிகையைக் கல்லாகுமாறு சபித்துவிட்டு அந்த சாபத்தினால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக்கொள்ள இப்படியொரு குளத்தை உண்டாக்கிய முனிவன் இதில் மூழ்கிக் கரையேறியதாகக் கதை கூடச் சொல்வார்கள். தண்ணீரே இருக்காது. மழைகாலத்தில் கூட சேறும், சகதியுமாய் சுற்றிலும் கோரைப்புற்கள் மண்டிக்கிடக்க அசிங்கமாய்க் காட்சியளிக்கும் தூரத்தில் வரும்போதே காற்று வாக்கில் அங்கிருந்த ஒருவித துர்க்கந்தம் வீசும்.

இப்போது அந்தக் குளம் வெகு சுத்தமாக இருந்தது. தண்ணீர்ப் பளிங்காய்த் ததும்பி வழிந்தது. நான்கு பக்கமும் படித்துறை வேறு குளத்தைச் சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டு வெகு நேர்த்தியாய் பராமரிக்கப்பட்டிருந்தது. ‘குடிதண்ணீர் குளம் அசுத்தம் செய்யாதீர்’ என்ற மிரட்டலான அறிவிப்புப் பலகை வேறு.

இவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. இந்தப் பதினைந்து வருஷத்தில் ஊர் வெகுவாக மாறிப்போய் இருக்கும் என்பதற்கு முதல் குறியாக இதைக் கொண்டான். இத்தனை காலமாய் மனம் முழுவதும் நசநசத்துக் கொண்டிருந்த கசப்பிற்காக சற்று நாணம் கூட ஏற்பட்டது.

பிறந்த மண்ணை தான் வெறுக்க முடியுமோ? வெறுப்பதற்கு எத்தனை சாக்குகளைக் கற்பித்துக் கொண்டாலும் அதெல்லாமும் நிஜமாக இருக்கமுடியுமோ? கையைக் குத்தியதற்காக இதழ்களைப் பிய்த்துப்போடும் ஆவேசம் - ஆவேசமென்ன மூர்க்கம் - மூர்க்கமென்ன அநாகரிகம்.

அந்த அக்ரகாரத்திலேயே அவன் தான் அழகாக இருப்பான். அழகென்றால் கண், மூக்கு, காது முகமென்று - அளவாக - இருக்கவேண்டிய அளவிற்குச் சற்றும் கூடாமலும், குறையாமலும் - சுருள் சுருளான முடியும் பரந்த மார்பும் என்றெல்லாம் இருக்கும் அழகல்ல. அது ஒரு மாதிரி. பார்த்தவர்கள் மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டுகிற வருணிப்புகளுக்குள் அடைக்க முடியாத ஒருவகையானது. அவன் முதல் முதல் அங்கு கிராப் வைத்துக் கொண்டான். மீசை வைத்துக் கொண்டான், ரயில்வே ஸ்டேஷன் சாயபு ஓட்டலில் கோழிப் பிரியாணி சாப்பிட்டான்.

எப்படியாவது கெட்டுத் தொலையட்டும் என்று மற்றவர்களால் வெறுமே இவனை ஒதுக்கிவிட முடியவில்லை. இவனை ஒதுக்க ஓதுக்க அவர்களே பாதிக்கப்பட்டார்கள். அவன் தனியனானான். எல்லோரும் நன்றாய் பெரிய வியூகம் வகுத்துக்கொண்டு இவன்மேல் படையெடுத்தார்கள்.

இதோ தெரியும் இந்த ஆலமரத்தடியில்தான் சாமாவையர் அவனைக் கட்டி வைத்து அடித்தது. பாவம் சாமாவையரை குற்றம் சொல்லமுடியாது. எத்தனை வருஷங்களாக அந்த நெருப்பு உள்ளுக்குள்ளேயே கணன்று கொண்டிருந்திருக்கும். இயலாமை-பெண்டாட்டியைக் கண்டிக்கத் தக்க ஆரோக்கியமான துணிவை அவருக்குத் தரவில்லை.

ஏதோ ஒரு பொழுதில் ஏதோ ஒரு சாக்கில், ஒருநாள் இவனை வளைத்துவிட்டார். பிள்ளையார் கோவில் மேடையில் ஊர் நியாயஸ்தர்கள் முன்னிலையில் மொத்து மொத்து என்று மொத்தினார்.

“திருட்டு படவா... எங்காத்துப் பிள்ளையாட்டமா வந்து போயிண்டிருந்தியேடா. மேஜையிலே வச்சிருந்த வைரமோதிரத்தை நீதானேடா எடுத்தே. நீதானேடா எடுத்தே... மூவாயிரம் ரூவாடா... உழைச்சு சம்பாரிச்ச சொத்துடா பாவி” என்று ஆக்ரோஷமாகக் கத்தினார். ஆவேசம் வந்தவர்போல் இவனை கிழித்துப் போட்டார்.

இவனுக்கும் தெரியும், ஊருக்கும் தெரியும், சாமாவையருக்கும் தெரியும். ரொம்ப சாமர்த்தியமாக அந்த விஷயத்தைக் கையாண்டார்கள். ஒரு கலாச்சார மரபை மீறியவனுக்கு தண்டனை ஏற்றி வீழ்த்தி விடத் துடித்து வைரமோதிரம் வைரமோதிரம் என்று ஊரே முனுமுனுத்தது.

செடிமறைவிலும், சாக்கடை ஓரத்திலும், இருண்ட கோயில் பிரகாரத்திலும் ஏகாந்தமான தோப்புகளிலும் ஏன் அன்று நாறிக்கொண்டிருந்த கௌதமன் குளத்து மேட்டிலும் கூட ஒவ்வொரு தடவையும் வியர்வையைத் துடைத்துவிட்டுக் கொண்டும் இவனுடைய , தலைமயிரைப் பிய்த்து விடுபவளைப் போல அளைந்துகொண்டும் துடிப்போடு சொல்லுவாள் கல்யாணி. செற்களல்ல அவை. அவளுக்கும், அவனுக்கும் கூட அந்த கணத்தில் அவைதாம் சாத்தியங்கள்.

“ரங்கு இந்த சாமாவையரை இரண்டாந்தாரமா கட்டிண்டு பதினைந்து வருஷமாச்சுடா. இப்படியொரு சுகத்தை, இப்படியொரு திருப்தியை, இப்படியொரு அற்புதத்தை இப்ப தாண்டா அனுபவிக்கிறேன்.”

பஞ்சுமாதிரி அந்த உடம்பை இப்படியும், அப்படியுமாய் சூறைக் காற்றாய்ப் புரட்டி புரட்டி முகம் கைகள், கால்கள் என்ற பேதாபேதங்களின்றி.... பேதங்களை மறந்த இவனின் புயல் தனம் அவளுக்கு வேண்டியிருந்தது.

எழுதத் தெரியாத சின்னக்குழந்தையாய்ப் பாவித்துக் கொண்டு ஸ்லேட்டில் மனம் போன போக்கில் குறுக்கும் நெடுக்கிலுமான கோடுகள் தரும் சுகம் அவளுக்கு வேண்டியிருந்தது.

இதழ்களைப் பிச்சுப் பிச்சுப் போட்டு முகரும் மூர்க்கம் மட்டுமல்ல... சில வேளைகளில் ‘கல்யாணி அவசரமா வெளியூர் போறேன்’ என்றவாறே கன்னத்தை லேசாய் நிமிண்டி விட்டுப் போகும் அந்த மென்மை - அந்த லயம் கூட அவனுக்குப் பிடித்திருந்தது.

கல்யாணி மட்டுமல்ல, ஜெயா, சரோஜா, கோமளவல்லி உள்ளூர் எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்திச்சி ராஜம்மா வயலட் என்று ஒரு நீளமான பட்டியலே - இவனைத் தன்னுள். - தங்கள் கனவிலாவது. பிரவேசிக்க வைத்து விட வேண்டுமென்று காத்திருந்தனர். அதனால்தான் ஆண்கள் பயந்தார்கள். சீட்டு தம் வீட்டிலும் விழுந்துவிடுமோ என்ற பரபரப்பில் அவனை அவசர அவசரமாக, பிள்ளையார் கோயில் மேடைக்குத் தள்ளிக்கொண்டு வந்து நியாயம் பேசி... இந்தக் கைதானே, இந்தக் காலதானே; இந்தக் கண் தானே, இந்த உடம்புதானே... என்று அடியடியென்று அடித்துப் பிய்த்துப்போட்டார்கள்.

அன்றைக்கு மறுநாள் இவன் கல்யாணியோடு ஓடிப்போனான். உலகம் தன் வீட்டு கொல்லைப்புறமளவிற்கும் சின்னதாகத் தோன்றியது. கொஞ்ச நாட்கள் தாம், சாமாவையரைப் போல இவனையும் உணர்ந்தவளே போல இன்னொரு ரங்குவைச் சினேகித்துக் கொண்டு ஒரு ராத்திரி வேளையில ஓடிப்போனாள் அவள்.

‘யாரு... ரங்கஸ்வாமியாடா. அது, 'இப்பத்தான் வரியா? என்று வில் வண்டியிலிருந்து ஒரு குடுமித் தலை எட்டிப் பார்த்தது. “எலே என்னடாலே இப்படியாயிட்டே, இளைச்சுப்போய்.. கறுத்து...தலையெல்லாம் வெளுத்துப்போய் என்ன டா ...

கண்முழி இருக்கற எடத் தெரியலே. உனக்கு சேதி தெரியுமோ... சாமாவையன் செத்துப் போயிட்டான். தலைத்திவசம் கூட ஆயிட்டுது.

“யாரது? வெறும் வார்த்தைகளை விடுத்து நெஞ்சில் ஆயிரம் அர்த்தங்களாய் விகசித்துப் பரவும் அம்புகளாய் மாற்றும் இந்தத் தஞ்சாவூர்த்தனம். ஓ...ஜோஸ்யர் மாமா.”

“எங்கேடா இருக்கே. என்ன பண்ணிட்டிருக்கே, இப்போ ஊருக்கு நான்தான் பஞ்சாயத்து போர்டு பிரசிடென்ட். நான் வந்துதான் ஊரையே தலைகீழா மாத்தினேன். மழை பேஞ்சா இந்தப் பாதையிலே நடக்கமுடியுமா முந்தி. இப்ப பாரு தாரு போட்டாச்சு. சிவன் கோயில் பாழடைஞ்சு கிடைந்ததே இப்ப பாரேன் எப்படியிருக்குன்னு. போனவருஷம்தான் கும்பாயிஷேகம் ஆச்சு. முந்தியெல்லாம் செம்பு ஜெலத்துக்காக யப்பாடி யம்மாடின்னு மூணு மைலும், நாலு மைலும் வேர்க்க விருவிருக்க நடப்போமே. இப்போ பாத்தியா கௌதமன் கொளத்தை... ஏகமாக செலவு பண்ணி தூர் எடுத்து பளிங்கு மாதிர ஜலம்... குடிக்க மட்டும் தான்னு ஊர்லே ஸ்ட்ராங்கா சட்டம் போட்டு காவலும் போட்டு... எலே... நாம் பாட்டுக்கு பேசிண்டே இருக்கேன். நீ மரமாட்டமா நிக்கறே... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. நம்ம மனுஷனாச்சேங்கர விஸ்வாசத்திலே உன்னை நிறுத்திப் பேசறேன் பாரு என்னை ஜோட்டாலே அடிக்கனும்... எலே ஓட்றா வண்டியை. மகாராஜா பிரவேசம் பண்ணியிருக்கார். ஊருக்கு இனிமே பிரளயமோ, பூகம்பமோ”

அடிமனதில் கசப்பு தட்டுவதை உணர்ந்தான். சந்திக்கும், எதிர்படும் எட்டிப்போகும் கேள்விப்படும் ஒவ்வொரு மனுஷனும் கிழக்கட்டைகளும் கூட பதினைந்து வருஷத்திய நினைவை மாறாமல் வைத்திருந்து துவேஷத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தார்போல்-

யாரு ரங்கஸ்வாமியா?

யாரு ரங்கஸ்வாமியா வந்திருக்கான்? சரிதான் ரங்கஸ்வாமி வந்துட்டானோன்னோ?” “ரங்கு நாள் முழுக்க இப்படியே இருந்துடுவோம்டா... எந்திருக்காதேடா... எந்திருக்காதேடா... மாமாகூட ஆத்திலே இல்லேடா.”

உறைபனியின் தன்மையும், ஜன்னல் வழியாகப் பிரவேசிக்கும் காலை வீச்சுக்களின் இதமான சூடும் உடம்புகளில் சங்கமிக்கும் போது எத்தனை சுகம்? இந்த சுகத்திற்காகத் தொலைத்த விஷயங்களைக் கணக்குப் பார்க்கும் நேரமா இப்போ ....

‘அப்படியே போங்கடி. உள்ளே.... வாசல்லே என்ன அவுத்துப் போட்டுண்ணா ஆடறா. வாசல்லே வாசல்லே வந்து நின்னுண்டு... காலை முறிச்சுப் போட்டா சரியாப் போயிடும்’ என்று மனைவி, மகள்களை, தங்கைகளை, அக்காக்களை உள்ளே அவசர அவசரமாக விரட்டிவிட்டு நடுவாசலுக்கு வந்து கரிசனமாய் விசாரிக்கும் இவனுடைய காயத்தை மேலும் மேலும் கிளறியது.

“ரங்கஸ்வாமியா...கல்யாணி கூட உன்னை வுட்டுட்டு ஓடிப்போயிட்டாளாமேடா... கேள்விப்பட்டேன் நெஜந்தானா-

சந்தோஷப்படும் முறை இப்போது அவளுடையது. இவனது காயத்தை கிளறிவிட்டு குஷிப்பட அவர்களிடம் கைவசம் அம்புகள் நிறைய இருந்தன.

நா வறண்டது. வயிற்றில் லேசாக நெருப்பு புகைந்தது. விடுவிடுவென்று நடந்தான்: வேதபாடசாலை வெராண்டாவில் ஏழெட்டு இளம் பையன்கள், சின்னக் குடுமியும் அழுக்கு வேஷ்டியுமாக உட்கார்ந்து தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார்கள்.

பூதம் ஜதிஷ்யே புவனம் வதிஷ்யே தேஜோ வதிஷ்யே தபோ வதிஷ்யே பிரம்ம வதிஷ்யே... ஓம் சாந்தி சாந்தி சாந்தி- உச்சந்தலை வழுக்கையைத் தடவிக்கொண்டே எந்திரமாய்ச் சொல்லிக் கொண்டிருந்த ராமச்சந்திரசர்மா தெருவோடு போகும் இவனைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாக எழுந்து வந்தார்.

“ஏண்டாப்பா... நீ வந்திருக்கேன்னு கேள்விப்பட்டேன். ஏன் இப்படி...கறுத்து இளைச்சு மார்க்கூடெல்லாம் பின்னிப் போய் என்னமோ வியாதிஸ்தன் மாதிரி... போயிட்டே. அந்தக் கல்யாணி முண்டை கூட இன்னொருத்தனோட ஓடிப்போயிட்டாளாமே நிரந்தரமான சந்தோஷம்னு ஒண்ணு இருக்காடா இந்த பூமியிலே. அதைப் புரிந்துக்காமா தாம் தூம்னு குதிச்சா இப்படித்தான்...”

அவரை உற்றுப் பார்த்தான்.. அதே பழைய ராமச்சந்திரசர்மா தான். பழுப்புக் காவி வேஷ்டியும் அசட்டுச் சிரிப்பும், வெற்றிலைக் காவியேறின பற்களும், திறந்து மூடும் போது எச்சில் நூல்கள் இரண்டு உதடுகளையும் இணைத்து வேடிக்கை காட்டும் அசிங்கமும் - இந்தப் பிரதேசத்தில் வழியாகத்தான் வேதங்கள் வெளியே வருகின்றன என்ற விஷயமே. இவனுக்குச் சங்கடத்தை தந்தது.

யாரோ ஒரு கருணையுள்ள மொட்டைப் பாப்பாத்தி எழுதிவைத்த சொத்தில் இன்னும் நடந்து கொண்டிருந்த வேதபாடசாலை அது. சோற்றுக்கு அல்லாடும் ஏழை பிராமணக் குடும்பத்துப் பையன்கள். அங்கே எல்லாரும் புனித பழைய சோற்றைத் தின்றுவிட்டு சூனா வயிறு தட்டிப்போய் குழிவிழுந்த கண்களும், முன் துருத்திய நெஞ்சுமாய் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். பள்ளிக்கூடம் போகும் இதர பையன்களின் கிராப் தலைகளை ஏக்கத்தோடு பார்ப்பார்கள். அந்தக் கண்களில் சினிமாக் கனவுகள் மண்டிக்கிடக்கும்.

இவன் கூட இரண்டு வருஷங்கள் அங்கே வேதம் படித்தான். அப்போதும் இதே ராமச்சந்திர சர்மாதான் வாத்தியார். படு கண்டிப்பு. பையன்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து மடிவேஷ்டி கட்டிக்கொண்டு விபூதியை அப்பிக்கொண்டு உள்ளே வரும்போதே பின்புறம் கைவைத்து கௌபீன முடிச்சைத் தொட்டுப் பார்ப்பார். கௌபீனம் கட்டிக் கொண்டிராத பையன்களுக்கு அன்று சரியான உதை. சோறு போடமாட்டார். இந்தப் பழக்கமே பின்னால் பையன்களை மிரள வைத்திருக்கிறது. சில பையன்கள் பாதியில் இதன் காரணமாகவே ஓடிப்போகிறதும் உண்டு. பெண்டாட்டி இல்லாத அந்த மனுஷனின் வக்கிரம் இப்போது கூட இந்த வயசிலும்கூட அவர் கண்களில் குறுகுறுப்பது நன்றாகத் தெரிந்தது.

பையன்கள் இவனை ஆச்சரியத்தோடு பார்க்க ஆரம்பித்தார்கள். இவனுக்கு வருத்தமாக இருந்தது. இங்கு வருவதை விட்டுவிட்டு வேறெங்காவது நாலு தமிழ் நாலு இங்கிலீஷ் எழுத்துக்களைப் படித்துவிட்டு எங்காவது குமாஸ்தாவாகவோ, ப்யூனாகவோ போய் அடிபட்டு அல்லாடிக் கொண்டிருக்கக் கூடாதா என்று நினைத்தான். சோற்றுக்காக எட்டு வருஷம் வேதம் படித்துவிட்டு பிரகஸ்பதியாக வந்து உலகத்து அழுக்கையெல்லாம் எரிக்கவா போகிறான்கள். அமாவாசை தர்ப்பணத்துக்காக ஓடி ஓடி நாலனாவுக்கும், எட்டணாவுக்குமாய்ச் சந்தி சிரித்து பரங்கித் துண்டமும் நாலு வாழைக்காய் கால்படி அரிசி என்று ஆயிரம் இளிவரல்களை சந்தித்து மூட்டைகட்டி கல்யாணத்திற்கு நிற்கும் நான்கு பெண்களைப் பார்த்து பெருமூச்செறிந்து எதற்காகவோ காரணமின்றியோ மனைவியை சபித்து கூனிக்குறுகி ஆஸ்த்மாவின் சுருண்டு போகும் வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறதடா பசங்களா என்று சத்தம் போட வேண்டும் போலிருந்தது.

இவன் நடந்தான். சிவன் கோயில் வழியாகத் தாண்டி தெற்குப்புறம் வந்தபோது- அதற்குள் எத்தனை பேரைச் சந்தித்து விட்டான். இதெல்லாம் பழிவாங்கவா?

கோயில் குருக்கள் வழிமறித்தார். “ரங்கஸ்வாமி சார்...” என்று நக்கல் தொனிக்கக் கூப்பிட்டார். “ஏன் சார்... கல்யாணி இப்ப உன்னோட இல்லையாமே அதான் இப்படி தேஞ்சு போயிட்டேள்- எப்டி . இருப்பேள் ராஜாவாட்டமா? சாகும்போது சாமாவையர் சபிச்சுண்டேதான் செத்தான். பிராம்மணன் சாபம் சும்மா விடுமான்னா?”

வைத்தினாதக் குருக்கள் உருவத்தில் பிரம்மாண்டமானவர். மற்ற குருக்கள் மாதிரி நைவேத்யச் சோற்றை மட்டும் நம்பி இருப்பவரில்லை. கொஞ்சம் நிலபுலங்கள் மாடுகன்று என்று ஏகமாக வைத்துக் கொண்டிருந்தார். ஊரில் எதற்கெடுத்தாலும் முன்னால் வந்து தாம் தூம் என்று குதிப்பார். கல்யாணிகூடச் சொல்லுவாள். “இது பொல்லாத கிழம் ரங்கு. சன்னதியிலே விபூதி கொடுக்கிற சாக்கிலே ரகசியமாக் கையைக் கிள்ளும். மாமி ஊருக்குப் போயிருக்கா. ஆத்துப்பக்கம் வந்துட்டுப் போயேண்டி...” என்பாராம்.

காலம் மனுஷ உருவங்களில் செய்த மாற்றத்தைத் தவிர, வேறில்லை இங்கே. தெஞ்சின் காயம் அகலமானதுதான் மிச்சம். இனிமேலும் இங்கே அன்னியமாய் நின்று கொண்டிருப்பது அர்த்தமாற்றதாகப்பட்டது. விடுவிடுவென்று நடந்தான். ராகவன் பிள்ளை டீக்கடை தென்பட்டது. டீக்கடைக்காரன் இவனை அடையாளம் கண்டுகொண்டு சிரித்தான்.

“என்ன ஐயரே, எப்ப வந்தே. தளதளனு இருப்பியே... ஆளே உருமாறிப் போயிட்டே...”

“ம்...” என்று தலையை ஆட்டினான்.

“அந்த பாப்பாத்தி ஒன்ன வுட்டுட்டு ஓடிடுச்சாமே... கவலைய விடு சாமி. வளியா வந்த கழுதைங்களே தாண்டிப் போவுது. இந்த ரகம் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்கும். என்னைப் பாரேன். இந்த அம்மினிக் கழுதை எனக்கு அஞ்சாவதோ ஆறாவதோ...”

“ராகவன் பிள்ளை! குளிச்சா தேவலாம் போலிருக்கு. “கௌதமன் கொளத்திலே இப்பல்லாம் கால்வைக்க முடியாது தெரியுமா?, சாமி. குடிதண்ணிக்காவ மட்டும்தான். அம்மினி, ஐயருக்கு ஒரு பக்கெட் தண்ணி கொண்டா.”

குளித்த பிறகும் உடம்பு எரிச்சல் அடங்கவில்லை. டீக்கடையைவிட்டு ரயிலடிப் பக்கமாக நடக்க ஆரம்பித்தான். இன்னும் யாராவது விசாரித்துவிடப் போகிறார்களோ என்று பயந்தான். வயிற்றை லேசாக புரட்ட ஆரம்பித்தது? இன்னும் இரண்டொருவர் இவனை உற்றுப் பார்த்துவிட்டு கேள்விக்குறிகளோடு தாண்டிப் போனார்கள். வேகவேகமாக நடக்க ஆரம்பித்தான்.

திடீரென்று வயிற்றின் சங்கடம் அதிகமானது. பலவிதமான ஓசைகள் வயிற்றுக்குள்ளிருந்து கிளம்பின. சற்று நேரத்திற்கு முன் குடித்த டீயின் வேலையோ இது. மனதின் சங்கடமும், வயிற்றின் சங்கடமும் ஒரே சேர வதைக்க இவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கிடுகிடுவென்று வரப்போரமாகப் போய் வேஷ்டியை வழித்துக் கொண்டு உட்கார்ந்தான்.

வயிற்றின் சங்கடம். இறங்கியபிறகு எழுந்து சற்றுமுற்றும் பார்த்தான். யாரும் தென்படவில்லை. வேஷ்டியை ஒதுக்கிக் கொண்டு குளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.