தஞ்சைச் சிறுகதைகள்/மஞ்சி விரட்டுப் பூரணி

விக்கிமூலம் இலிருந்து

பூவை. எஸ். ஆறுமுகம்

1927 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் பூவைமாநகரில் பிறந்து பூவைக்கு ‘பைரவி’ என்ற பெயரும் உண்டு.

தஞ்சை மருதநிலத்தை மக்கள் வாழ்க்கையோடு பின்னி யதார்த்தமான படைப்புகளைத் தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

அடக்கமானவர். கடல் முத்து, அமிர்தம், பூவையின் கதைகள், வேனில் விழா, அந்திமந்தாரை, இனிய கதைகள், திருமதி சிற்றம்பலம், தாய் வீட்டுச் சீர், அரண்மனைக் கோழி முட்டை சுட்டும் விழிச் சுடர்’ போன்ற சிறுகதைத் தொகுப்புகளைத் தந்தவர் பூவை.எஸ். ஆறுமுகம்.

‘உமா’ இதழில் பொறுப்பாசிரியராக நீண்ட காலம் இருந்து பணியாற்றினார். இன்னும் இதழ்களில் பணியாற்ற உற்சாகமுடையவராக இருப்பது அவருக்கு எழுத்தின் மீது இருக்கும் அளவற்ற உற்சாகத்தைக் காட்டுகிறது.

இருபதுக்கு மேற்பட்ட நாவல்கள் படைத்தவரின் ‘தங்கசம்பா’ மிகவும் குறிப்பிடத்தக்க நாவல், ‘பூவையின் கதைகள்’ சிறுகதைத் தொகுதி பல பரிசுகளைப் பெற்று சாதனையை தக்க வைத்துக்கொண்டது.

மஞ்சி விரட்டுப் பூரணி

ர் மூக்கின் மேல் விரலை வைத்தது!

செம்பவளம் தீர்ப்பு வழங்கிவிட்டாள்.

“வாழ்க்கை என்கிறது ஒரு வெளையாட்டுக் கணக்காகும். பல்லாங்குழி, தாயம்னு ஆடறதில்லையா? அப்படித்தான். கெலிக்கவும் கெலிக்கலாம்; தோற்பு ஏற்பட்டாலும் ஏற்படலாம்; இப்படியான ரெண்டு மனநிலைகளையும் சரிசமதையாகப் பாவிக்கிற வீர உணர்ச்சி என்னோட இந்தப் பாளத்த மனசுக்கு இப்பதான் கூடவந்திருக்கு கைகூடியும் வந்திருக்கு. மஞ்சி விரட்டு பந்தயக் கெடுவிலே தான் நான் புதுசாய்ப் பொறக்கவேணும் என்கிறது ராக்காச்சி ஆத்தாளோட தீர்ப்புப் போலே-நான் என்னோட பவித்திரமான ஆசைக்கு ஒரு நல்ல பேரை உண்டாக்கிக் காட்டிப்புட வேணும்னு கனாக்கண்டு, அந்தக் கனாவுக்கு ஒரேயொரு அன்பான வடிவமாக அமைஞ்சிட்ட என்னோட நேச மச்சானை - அதான், எங்க மாங்குடி மச்சானை இந்தப் பொங்கல் கடுத்தத்திலே கண்ணாலம் கட்டிக்கிட்டு அந்த ஆம்பளைச் சிங்கத்துக்கே முந்தானை விரிச்சுப் போடணும்னு தான் ரோசனைப் பண்ணியிருந்தேன். ஆனாக்கா, எம்புட்டு மனசான மனசைத் சோதிக்கிறதுக்குன்னு என்னென்னமோ தகவல்கள் ஏற்பட்டுப் பூடுச்சி. எல்லாத் தீவினைங்களும் எதாலே வந்ததின்னு ஒங்களுக்கெல்லாம் புட்டு வச்சாப்பிலே தெரியவும் தெரியும்; அசலான பூலோக ரம்பையாட்டம் நான் இந்தப் பூவத்தக்கூடி மண்ணிலே ஓடி ஆடினதாலே எம்மேலே யார் யாரெல்லாமோ எப்படி எப்படியெல்லாமோ ஆசை வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. பாழாய்ப்போன இந்தச் சோதிப்பிலிருந்து விடுதலை அடையறத்துக் கோசரமே தான். நானே எனக்கின்னு ஒரு சோதிப்பை ஏற்படுத்திக்கிடவும் துணிஞ்சேனாக்கும்.”

சிலந்திப் பூச்சி தான் அகப்பட்டுகறத்துக்கின்னே வலை பின்னிக்கிட்ட கதைதான்! பொல்லாத பாச்சல் காளை அப்படின்னு திக்கெட்டும் பேரெடுத்திட்ட எம்புட்டு ஆலத்தம்பாடி பூரணி செவளைக் காளையை இது மட்டுக்கும் கண்ணாலம் கட்டிக்கிடாத எந்த இளவட்டம் இந்த மஞ்சி விரட்டிலே லாந்திபுடுச்சி. அது கழுத்திலே சாயம் கரைச்சலேஞ்சிலே முடிஞ்சிருக்கக்கூடிய ரூபா ஆயிரத்தையும் அவிழ்த்துக்கிடுதோ, அந்த இளஞ்சிங்கத்துக்கு நான் வாழ்க்கைப்படத் தயார்னு பதினாறு நாட்டிலேயும் தண்டோரா போடச் செஞ்சேன். இம்மாங்கொத்த விஷப் பரிட்சையிலே என்னைத் தூண்டித் துருவி இறங்கவச்சதே என்னோட நேச மச்சான் முத்துலிங்கமேதான்! எனக்கு மனசொப்பிப் புடிச்சிப்பூட்ட இந்த மாங்குடிக்காரவுகளை என்னோட மனசுப்படி நான் கண்ணாலம் கட்டியிருக்கலாம். ஆனா விதி விளையாட நானும் ரோசத்தோட வெளயாட வாய்ச்சிச்சு. ஆனா எந்தக் காளையை மடக்கிப் பிடிச்சுக் கெலிச்சு, மஞ்சி விரட்டு மம்முதன் அப்படிங்கிற கியாதியைத் தட்டிக்கிடுறத்தோட, வீரத்தின் பேராலே ஒரு நல்ல பேரை உண்டாக்கி அதன் மூலம் உன்னையும் தட்டிக்கிடச் சொம்பனம் கண்டாளோ இந்த நேச மச்சானை, அந்தக்காளை - ஆமா என்னோட சொந்தக்காளை மண்ணைக் கவ்வச் செஞ்சிடுச்சி! ஆனபடியினாலே, நான் வச்ச ஆணைக்கு நானே தலைவணங்கிக் காட்டவும் துணிஞ்சி, விதி படிச்ச தீர்ப்புப்படிக்கு நான் முக்குடி முரடன் முத்தையனையே கைப் பிடிக்கவும் துணிஞ்சிட்டேன். என் விதி என்னோட! ஆகச்சே எனக்குக் குறுக்கு மறிக்க இனிம எந்த விதிக்குமே திராணி இருக்காதாக்கும்! ஆமா, இந்தச் செம்பவளம் சொன்னால் சொன்னதுதான்.

தோழிகள் விம்முகின்றனர்.

விடலைகள் சிலையாகின்றனர்.

“எலே! பவளப் பெண்ணே!”

செம்பவளம் ஏறிட்டுத் திரும்பினாள்.

ஓ! முத்துலிங்கம் மன்மதன்.

சிரிக்க வேண்டியவள், அழுகிறாள்.

பாவம் முத்துலிங்கம். செம்பவளத்தின் முரட்டுக் காளையில் மூர்த்தண்யமான தாக்குதலுக்கு இலக்கான ஆண்பிள்ளைச் சிங்கம் அதோ. ரத்தம் சொட்டச் சொட்டக் கிடக்கிறான்; புழுதியோடு புழுதியாகக் கிடக்கிறான். அவன் கண்களினின்றும் உதிரம் மட்டுந்தானா சிந்திச் சிதறிக் கொட்டுகின்றது?

அவன் அவளைக் கண்களால் பார்க்கவில்லை; நெஞ்சால் பார்த்தான். நல்ல ரத்தம் ஓடும் பாதத்திலே நெருஞ்சி முள் தைத்துவிட்டால், குருதி பூம்புனல் வெள்ளமாகப் பாய்ந்தோடுவது உண்டு. அந்தப் பாங்கில் அவனது இதழ்களிலிருந்து சொற்கள் பாய்ந்தோட வெள்ளப் பாய்ச்சலாகப் பாய்ந்தோடத் துடித்தன. ஆனால், உதிரக் கண்ணீர்தான் வெள்ளத்தின் சுழிப்போடு பீறிட்டது, வீரிட்டது. “பவளப்பெண்ணே!” விழித்தான். கன்னி கழியாப் பதுமை. அசல் பதுமையாகவே உருக்கொண்டாள்.

பவளம். நீ தருமத்துக்கும், சத்தியத்துக்கும் கட்டுப்பட்ட நல்ல பாம்பு! அந்த துப்பு எனக்குத் தெரவுசாயத் தெரியும்; அதொட்டிதான் உம்புட்டு மாடு பாய்ஞ்சி உசிருக்கு ஆபத்தாகிக் கெடந்த என்னை ஏறெடுத்தும் பார்க்காம இருந்த அலங்கோலத்தைக் கூட நான் பொருட்படுத்தலே! உங்கிட்ட கெலிச்சிருச்சு! ஆனா. உம்புட்டு செவலைக்கு அந்த முரடன் முத்தையனைத்தான் புடிச்சிருக்கும்போல; அதனாலேதான் அது அந்த ஆள்கிட்ட தோத்து போட்டு. ஒன்னை, என்னொட ஒப்படைச்சிடப் போவுது. பவளம், எந்தவிதியை நான் இது பரிந்தம் நம்பாமல் இருந்தேனோ அந்த விதியை நான் நம்பித் தீரவேண்டிய கட்டத்திலே நான் நின்னுக்கின்னு இருக்கேன். ஒன்னைக் கொண்டுக்கிறதுக்கு இந்தப் பாவிக்குப் பொசிப்பு இல்லை. முத்தையன் அண்ணாச்சி கொடுத்து வச்ச புள்ளியேதான்! அட்டியே கெடையாது! நீங்க ரெண்டுபேரும் நல்லா இருக்கனும்; இதான் எம்பூட்டுக் கடைசியான, அந்தரங்க சுத்தியான ஆசையாக்கும்!”

“மச்சானே!...”

“ஊம்!”

“ஒங்களுக்கு ரொம்ப ரொம்பச் சுத்தமான மனசுங்க! இந்தப்பெரிய மனசு நம்ப ஊர் நாட்டிலே யாருக்குமே வராதுங்க. சத்தியத்தை நாம வாழ வச்சாதான், சத்தியம் நம்பளையும் வாழ வைக்கும். அதே சத்தியத்தை நம்பியேதான், நீங்களும், நானும் உசிருக்கு உசிராய் பழகினோம். ஒரே உசிராகவும் பழகினோம். எல்லை தாண்டாமலும் பழகினோம். அந்த பரிசுத்தமான நேசத்தை நீங்களும் மறக்க ஏலாது. நானும் மறக்க வாய்க்காது. இந்த கதை காரணத்தை என்னோட புது மச்சான்காரவுகளும் தெரிஞ்சு வச்சிருக்காமல் இருக்கமாட்டாங்க. நம்மோட துல்லியமான அந்த நேசத்தை சாமி கையெடுத்துக் கும்பிட்ட சத்தியம் எப்பவும் இந்த சென்மத்திலே மட்டுமில்லை. இனி ஏழேழு சென்மத்திலேயும் வாழ்த்திக்கிட்டே இருக்கும். வாழ வச்சிக்கிட்டும் இருக்குமுங்க, அந்தாலே பாருங்க எம்புட்டு புது மச்சானுக்கு. எம்புட்டு வீராதி வீரத்தனமான பூரணிக் காளையையே அடக்கி மடக்கிப் போட்ட சூராதி சூரரான எம்புட்டு புதுசான மச்சானுக்கு இன்னமும் கூட எங்கிட்டே நெருங்கவே வல்லமை வரலே. அவுக அங்கிட்டே நிக்கட்டும்; அவுகளை அப்பாலே நானே கையைப் புடிச்சிக் கூப்பிட்டுகிடுவேன். அதுக்குள்ளார, எனக்கின்னு உண்டான ஒரு தவக்கடமை இருக்குதுங்க! ம், நீங்க மெதுவா எந்திருங்க; ம், நான் சொல்றேன்; பைய... பைய... எழுந்திருச்சி என் கழுத்தை கட்டிப் பிடிச்சுக்கிட்டு எம்புட்டு பொட்டி வண்டியிலே வச்சு அறந்தாங்கி சர்க்கார் ஆஸ்பத்திரிக்கு அழைச்சிகினு போகப் போறேன்; நீங்க நல்லபடியாய் பிழைச்சு, என்னையும் என் மச்சானையும் சத்தியமான மனசோட வாழ்த்தவேனும் என்கிறது என்னோட ஆசையாக்கும்!”

முத்துலிங்கம் உருகுகிறான்!

செம்பவளம் அவனை நெருங்குகின்றாள்!

அந்தி சிரிக்கின்றதே?

“பவளம், உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு என்னைத் தீண்டிபுடாதே!”

“மச்சானே!”

“உம்புட்டு மச்சானான அந்த பழைய முத்துலிங்கம் மாண்டு மடிஞ்சிட்டான். நான் புது முத்துலிங்கம். நீ தீண்ட வேண்டியது முத்தையா அண்ணாச்சியைத்தான். காலத்தோட சேர்ந்து ஊரும் கெட்டுக்கிடக்கிற நேரம் இது. நீயும் முத்தையனும் ஆயிரங்காலத்துப் பயிராய் வாழவேண்டியவங்க. அந்த தருமத்துக்குக் குறுக்கால என்னை இழுக்காதே. நான் வரவும் ஒப்பமாட்டேன். பவளம்! நீ எட்டி நில்லு. அதோ ஒன் புது மச்சான் வந்துகிட்டு இருக்குது பவளம்!”

செம்பவளத்தின் நிழலில் ஒண்டினான் முத்தையன். தலையை உயர்த்தி மதுரை வீரன் மீசையை முருக்கி விட்டான். கட்டபொம்மன் கண்களை திரட்டி உருட்டி, நாளாப் பக்கத்திலும் சுழலவிட்டான். இருந்திருந்தாற் போல, ஓர் அதிர்வேட்டுச் சிரிப்பையும் முழக்கினான்;! “எலே புள்ள பவளம், தம்பி முத்துலிங்கம் தங்கக் கம்பி! நான் உன்னைக் கண்டு பயப்பட்டேன். ஆனா நம்ப முத்துலிங்கம் தம்பி ஊர் உலகத்தைக் கண்டு பயப்படுது. ஒட்டிவாடி குட்டி நீயும் நானும் சேர்ந்து நம்ப முத்துலிங்கத்தை கைத்துக்கலாய்த் தூக்கி, ஒம்புட்டு வண்டியிலே வச்சு, ஆஸ்பத்திரிக்கு அழைச்சுபோய், நல்ல வைத்தியமாய் பண்ணி வைப்போம். ம்...வா, புள்ளே, வா” என்று கெஞ்சினான்.

செம்பவளத்தின் ஸ்பரிசம் முத்துலிங்கத்தின் மேனியைத் தீண்டியதுதான் தாமதம்! -

மறு இமைப்பிலே!

“ஐயையோ! பவளப்பெண்ணே!”

அலறியவன் முத்துலிங்கம்.

அப்போது.

செம்பவளம் மாத்திரம் சிலையாகவில்லை.

முரடன் முத்தையனும் சிலையாகிவிட்டான். சிலை பேசவும் தொடங்கிவிட்டது. “செம்பவளப் பெண்ணே! நடப்பு லோகத்துக்கு தக்கனை நானு சத்தியத்துக்குப்பயப்படாத முரடனாகவே வளர்ந்துபுட்டேன். ஆனதாலே எனக்கு ஏத்த பொஞ்சாதியாக நீ ஒருநாளும் இருக்க இயலாதாக்கும்! நான் வந்த தடத்திலே திரும்பிடறேன். மஞ்சிவிரட்டிலே எனக்கு கெலிப்பு என்னோட முரட்டுத் தனத்துக்குக் கிடைச்சிட்ட கெலிப்பாகவே இருந்துபுடட்டும்! ஆனா. அதே மஞ்சு விரட்டுல தோத்து போயிட்ட என் தம்பி முத்துலிங்கத்துக்கு என்னோட கெலிப்பை வெற்றியை தாரை வார்த்துக் கொடுத்துப்புடறேன். பாரத சண்டையிலே கர்ணமாராசரு யார்கிட்டேயா தருமத்தையோ எதையோ தாரவார்த்துக் கொடுக்கலையா, அது கணக்கிலே!

“அப்பாலே, தம்பி முத்துலிங்கம் மஞ்சுவிரட்டுப் பந்தயத்திலே கெலிச்சவனாக ஆயிடும். இல்லையா? ஓ... இந்த ஒரு நல்ல நினைப்பு இந்த முரடன் மனசிலே தோனுறதுக்குக் கூட, நீங்க ரெண்டுபேரும் மதிச்சுக்கிட்டு இருக்கிற அந்த தருமமான சத்தியமேதான் காரணமா இருக்குமோ? பவளம், ஒம் புண்ணியத்தாலே நானும் கூட ஒரு மனுஷனாக ஆகிப்பூட்டேன் போலத்தான் தோணுது! பலே பலே பவளம். நீ உம் மச்சானை உன் ஆசைப்படி புள்ளையாட்டாம் நெஞ்சிலே சாச்சிகிட்டு உன்னோட வண்டிக்கு ஓடியா. எந் தம்பியைப் பாத்தியா, பவளம்? எந்தம்பி எம்பேச்சுக்கு கட்டுப்பட்டு, என்னமாய் பெட்டிப் பாம்பாய் அடங்கிக் கிடக்கிறான் பாத்தியா செம்பளம்? ம்... உம்... அம்புட்டுதான்...! பூலோக ரம்பைக்குத் தெரியாத இனிநோக்காடு கூடுதலாகாதர்க்கும்! உம் அணைப்பு ஒன்னே போதும். அவனை மறுபிறப்பு எடுக்கச் செய்யுறதுக்கு. என் தம்பி கொடுத்து வைத்தவன் அதான் ஒன்னை எடுத்துகிட்டான். ஓங்க ரெண்டு போரோட சுத்தமான சொப்பனம் பலிச்சிருச்சு! ம். மெதுவா நட, நான் ஓடிப்போய் வண்டியைக் கட்டுறேன்! நான் கண்ட பாரத சண்டை பயாஸ்கோப்பிலே. கண்ண பரமாத் தேரை ஓட்டின சங்கதியை நான் எப்பவும் மறந்திட இயலாதாக்கும்!...”

முத்தையனின் இடப்புறக் கண்ணின் முனையிலிருந்து கண்ணீர் வெளிச்சத்திலே மின்னி பளிச்சிட்டு சிந்தி சிதறுகிறது!

செம்பவளம் விம்மியபடி கையெடுத்துக் கும்பிடுகிறாள்!

ஈட்டி முனை கொம்புகளில் காவிப்பூச்சு மின்ன, தலைநிமிர்ந்து நின்ற அந்த ஆலத்தாம்பாடிப் பூரணிச் செவலைக்கும் இப்போதுதான் போன உயிர் திரும்பியிருக்க வேண்டும்!...