தஞ்சைச் சிறுகதைகள்/பட்டாளக்காரன்
தி.ச. ராஜூ
தஞ்சை மாவட்டம் தில்லை ஸ்தானத்தில் பிறந்த தி.சா.ராஜூ பட்டாளக்காரர், சிறந்த இலக்கியவாதி. அவரைப்பற்றி அவருக்குள்ளே தீவிர கொள்கையும், நம்பிக்கையும் கொண்டவர். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளிக்காரன் என்ற சிறுகதை நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையான சொந்தக்கதையே அவரைப்பற்றி வாசக உலகம் புரிந்துகொள்ள போதுமானதாக அமையும் என்று அதையே இங்கே முன் வைக்கிறேன்.
‘தீவிரமான நாட்டுப்பற்றும் இலக்கியப் புலமையும் உடைய பதிப்பாசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சிறுகதை இலக்கியம் பற்றி அவருடன் உரையாடும்போது, “தமிழில் நல்ல சிறுகதைகள் வெளிவந்து கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் எந்த எழுத்தாளரும் ஒரு குறிப்பிட்ட துறையின் சிறப்பான முன்னேற்றம் காட்டக் காணோம். உதாரணமாக வேட்டைக்கதைகள் சிலவற்றைத் தொகுத்து வெளியிடலாம் என்று எண்ணினேன். வெளியிடுவதற்குத் தகுதியுள்ள பத்துச் சிறுகதைகள் கூட எனக்குக் கிடைக்கவில்லை.’ என்று அங்கலாய்த்தார்.
அவருடைய குறையீடு நியாயமானது என்று கூறத்தேவையில்லை. அறிஞர் வ.ரா. அவர்கள் கூறியது போல் ‘திரும்ப சகதி நிறைந்த சுவடு விழுந்த பாதையில் தான் நமது கற்பனை வண்டி சென்று கொண்டிருக்கிறது’ என்பது மறுக்க முடியாத உண்மை.
“அந்த உரையாடல் என்னை இந்தத் துறையில் செயல்புரிய ஊக்கியது. சென்ற இருபது ஆண்டுகளுக்கு மேல் இராணுவத்தில் செம்மையுற பணிபுரிந்த செயல் கர்வம், படையினரின் சஞ்சிகையில் அவர்களுக்காகவே உரக்கச்சிந்திக்கும் வகையில் வரைந்த கடிதம் கட்டுரைகள், வெளியிட்ட ஓரிரு நூல்கள் ஆகியவை. தமிழில் படைத்துறையினரைப் பற்றியும் சில கதைகள் எழுதும் துணிவைத் தந்தன.”
பட்டாளக்காரன்
நாற்புறமும் சிறிய கைப்பிடிச்சுவர். அதனுள் பத்து சிறிய வீடுகள். வீடுகளுக்குப் பின் பக்கத்தில் சிறிய தோட்டங்கள். முன்புறம் விசாலமான இடைவெளி, அதிலே அடர்த்தியான மரங்கள். மரநிழல் இல்லாத இடங்களில் தரையில் பசும்புல். வெயில் கள்ளென்று அடித்தபோதிலும் ஊடே குளிர்காற்று விசிற்று. முற்பகல் பதினொரு மணி இருக்கும்.
“மூங்...ஃபல்லிஈஈஈ...”
ஒலி, மத்திய தைவதத்தில் தொடங்கி உச்ச நிஷாதத்தில் முடிவடைந்தது. அந்தத் தொனி சுவர்களில் மோதி நெடு நேரம் எதிரொலித்தது. எதிரொலி முடியும் முன்பு மறுபடியும் அந்த ஓசை புறப்பட்டது.
“அம்மை... பட்டாளக்காரன் வன்னு!”
“அது யாரடி பட்டாளக்காரன்?”
“அதான் அம்மே கப்பலண்டி விக்கன்னனவன். அம்மே, எனிக்கிக் கப்பலண்டி வேடிச்சுத் தரணம்.”
“தராம் மகளே தராம்; கரையண்டா, விளிக்கண்ணே ஆயாளை!”
பேசியவர்கள் ராபர்ட் சூரியனின் மனைவியும் அவர்களுடைய நாலு வயது மகள் டெய்ஸியும். சூரியனுக்குச் சொந்தஊர் கொட்டாரக்காரை. அவருடைய மனைவி மரியாள் நெய்யாற்றங்கரையைச் சேர்ந்தவர். அவளுடைய தாய்மொழி தமிழே. ஆனாலும் பழக்கத்தின் காரணமாக வீட்டில் மலையாளத்திலேயே பேசினார்கள்.
சத்தத்தைக் கேட்டு நானும் வெளியே சென்றேன். கூடவே என் மகள் ரோஸியும் தம்பி ஜேம்ஸைக் கீழே விட்டுவிட்டு என்னுடன் வந்தாள். வந்தவன் வேர்க்கடலை விற்பவன். இராணுவத்தார்களின் பச்சைச் சட்டையும், காக்கிக் கால்சட்டையும் அணிந்திருந்தான். வயது முதிர்ந்தவனாகக் காணப்பட்டான். தலையில் ஒரு முடிகூட இல்லாமல் வழுக்கை இட்டிருந்தது. ஆனால் உடலில் ஒரு பளபளப்பு. விரிந்த பெரிய நெஞ்சு, நீண்ட கைகள், முழங்கால்களை நெருங்கின. தன் வயசுக் காலத்தில் அவன் நல்ல புயபலமுடையவனாக இருதிருக்க வேண்டும். குழந்தை ரோஸி என் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய குறிப்பறிந்து கடலைக்காரனை என் வீட்டிற்கும் அழைத்தேன். அண்மையில் வந்தபோது அவனுடைய முதுமை இன்னும் தெளிவாக விளங்கிற்று. அவனுடைய கண் இமை ரோமங்களும், புருவங்களும் கூட நரைத்திருந்தன. என்றாலும் நடையிலே நடுக்கமில்லை. கண் பார்வை தீர்க்கமாக இருந்தது. குழந்தைக்கு வேர்க்கடலை வாங்கிக் கொடுத்துவிட்டு உள்ளே வந்தேன்.
பிறகு தினமும் இதே வழக்கமாகப் போய்விட்டது. அவனுடைய இசை பொருந்திய ஒலியைக் கேட்காவிட்டால் என்னவோபோல் இருந்தது. அவனுடைய பெயர் அந்தோணி என்று தெரிந்துகொண்டேன். நான் தவறாமல் அவன் எங்கள் விடுதியில் நிலக்கடலையும், பட்டாணியும் விற்க வந்தான். தினமும் குழந்தைகள் அவனுக்குக் கப்பம் கட்டி வந்தன. அவனுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கின.
அன்று அவன் ஏனோ வரவில்லை. குழந்தை ரோஸி வீட்டு வாசலில் நெடுநேரம் அவனுக்காகக் காத்திருந்தாள். பிறகு உள்ளே வந்து, “அம்மா, இன்று அந்தோணித் தாத்தாவைக் காணோம்!” என்றாள். அவளுடைய குரலில் ஆதூரம் தொணித்தது. இந்தச் சில நாட்களில் குழந்தை அவனுடன் நெருங்கிப் பழகிவிட்டாள்.
“உடம்பு சரியில்லையோ என்னவோ! இல்லாவிட்டால் வராமல் இருக்கமாட்டானே! நான் அசிரத்தையாகப் பதிலிறுத்தேன். அது அவளுக்குத் திருப்தி அளிக்கவில்லை. தம்பி ஜேம்ஸை மடியில் வைத்துக் கொண்டு வாசல் வராந்தாவிலேயே உட்கார்ந்திருந்தாள். பகலுணவிற்காக என் கணவர் வந்தபோதும் அவள் உள்ளே வரவில்லை. அவர் உணவருந்தித் திரும்பிய பிறகு சற்று அசதியுடன் கண்ணயர்ந்தேன். ஏதோ சத்தம் கேட்டது. எழுந்துபார்த்த போது குழந்தைகள் ஜேம்ஸ், ரோஸி இருவரையும் காணவில்லை. திடுக்கிட்டவாறு விடுதியின் முன்புறம், பின்புறம் எங்கும் தேடினேன். சுற்றுச்சுவர் அருகில் ஆலமரத்தடியில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது.
குழந்த ஜேம்ஸ் ஒரு மிட்டாயைச் சுவைத்துக் கொண்டிருந்தான். ரோஸி ஒரு பொம்மையை அணைத்தவாறு அந்தோணித் தாத்தாவின் மடியில் படுத்திருந்தாள். தாத்தா அவளுக்கு ஏதோ கதை சொன்னார். ரோஸி அதைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் பரபரத்தவாறு எழுந்திருக்க முயன்றார் அந்தோணி.
“இதெல்லாம் என்ன தாத்தா?”- சற்றுக் கோபத்துடனேயே வினவினேன் நான்.
“ஒண்ணுமில்லையம்மா. இன்னிக்கு முதல் தேதி. ‘பிஞ்சின்’ வாங்கினேன். குழந்தைகளுக்கு வேர்க்கடலைகூட நான் கொண்டுவரவில்லை.
அந்தோணி எழுந்து நின்றான். அவன் இடுப்பில் ஓர் அரைக் கால்சட்டை, முழங்கால் வரை மேஜோடு; காலில் பழைய பூட்ஸுகள்; மேலே அரைப் பழசான இராணுவச் சட்டை, மார்பின் இடது பக்கத்தில் பல வண்ண விருதுகளும், பதக்கங்களும் தொங்கின. நிமிர்ந்து நின்றால் ஆறடிக்குக் குறையாத உயரம். அந்த இராணுவ உடையில் அந்தோணியின் தோற்றம் பொலிவுடன் விளங்கியது.
என்னை அறியாமல் எனக்கு அந்தோணியிடம் மரியாதை தோன்றியது. என் கணவரும் படை வீரரே. ஒருவேளை தொழில் முறையினால் ஏற்பட்ட தோழமையோ? “வீட்டுக்கு வா தாத்தா” என்று அழைத்தேன். தாத்தாவும், குழந்தைகளும் வராந்தாவில் உட்கார்ந்தார்கள்.
“இதெல்லாம் என்ன தாத்தா?” ரோஸி அந்தோணியின் மார்பின் தொங்கிய பதக்கங்களைக் காட்டி வினவினாள்.
“இதுவா, இது ஆப்ரிகன் ஸ்டார் அடுத்தது மிடில் ஈஸ்ட், மூன்றாவது ஊண்ட் ட்ரைப்.”
ரோஸிக்கு ஒன்றும் புரியவில்லை. “ஸ்டார் என்றால் என்ன?”
“அதாவது அந்த ஊர்களிலெல்லாம் போய் நாங்கள் சண்டை போட்டிருக்கிறோம்னு அர்த்தம். அந்த நீலவர்ணக் கோடு கைக்குண்டினால் நான் விரல் இழந்ததற்கான வெகுமானம்.”
“நீ பேசறது ஒண்ணுமே புரியலையே தாத்தா.”
“ரொம்ப வருஷத்துக்கு முன்னாலே நான் பட்டாளத்திலே இருந்தேன். அப்போ எதிரிங்க எங்க மறை குழியிலே ஒரு கைக்குண்டை எறிஞ்சானுங்க. அது வெடிச்சிருந்தால் அங்கே இருந்த இருபது பேரும் செத்துப் போயிருப்போம். சட்டுனு அந்தக் குண்டைப் பொறுக்கி எதிரிங்க இருந்த பக்கமே எறிஞ்சேன். அதுக்குள்ளே குண்டு வெடிச்சிட்டுது. என்றாலும் நாங்கள் தப்பிவிட்டோம். ஆனால் என் இடது கையில் இரண்டு விரல்கள் போய்விட்டன.”
தாத்தாவின் இடது கையைப் பார்த்தேன். கடைசி இரண்டு விரல்களின் இடம் மொண்ணையாக இருந்தது.
அந்தோணிக்கு ஒரு கோப்பை தேனீர் தயாரித்துக் கொடுத்தேன். “உனக்குக் குழந்தை குட்டிகள் யாரும் இல்லையா?”
“ஒரு மகன் இருந்தான். அவன் இரண்டாவது யுத்தத்திலே காலமாயிட்டான். அவன் குழந்தைகளும், மருமகளும் என்னோடு பஸ்தியிலே இருந்தார்கள். ஏதோ காரியமாய் நான் வெளியூர் போயிருந்தேன். அது ராஜாக்கர் கலவர சமயம். எங்க வீடுகளுக்கெல்லாம், நெருப்பு வெச்சிட்டாங்க. வீட்டில் வெள்ளிப் பணமாக இரண்டாயிரம் கல்தார் ரூபாய் வெச்சிருந்தேன். அவ்வளவும் மண்ணோடு போச்சு.”
“கல்தார் பணம் என்றால் என்ன?”
“அப்போதெல்லாம், அதாவது வெள்ளைக்காரன் நாளிலே இந்த ஊரில் ரெண்டு தினுசுக் காசு இருந்தது. நைஜாம் பணத்துக்கு ஹாலின்னு பேரு. வெள்ளைக்காரன் காசைக் கல்தார் இன்னு சொல்வோம். இப்போ நீங்க இருக்கிற வீடுகளிலெல்லாம் துரைமார்கள் இருந்தாங்க. அப்போதிலிருந்து நான் இங்கேதான் இருக்கேன். அவுங்க இந்த வேர்க்கடலையை மங்கி நட்ஸுன்னு சொல்லிப் பிரியமாய்த் தின்னுவாங்க.”
“தாத்தா உனக்கு ரொம்ப வயசாயிருக்குமே?”
“ஆமாம்மா, நீங்களே பாருங்களேன்.” அந்தோணி தன் சட்டைப் பையிலிருந்து இளஞ்சிவப்பு வர்ணப் பென்ஷன் கார்டை வெளியில் எடுத்துக் காட்டினான். அதில், ஜோஸப் அந்தோணி, முனையனூர், திருச்சி ஜில்லா, பிரிட்டிஷ், இந்தியா” என்று எழுதியிருந்தது. அந்தோணியின் பிறந்த தேதி ஆகஸ்ட் ஏழு, 1872.
“உனக்கு என்ன பென்ஷன் கிடைக்கும்?”
“மாசம் பதினஞ்சு ரூபாய்.”
“அது எப்படி உனக்குப் போதும்?”
“அதனால் தான் அம்மா, இப்படி வேர்க்கடலை வித்துப் பொழைக்கிறேன். கர்த்தர் படி அளக்கிறார். ஒரு கர்னல் துரை வீட்டு அவுட் ஹவுஸிலே படுக்கிறேன்.” அந்தோணி வானத்தை நோக்கிக் கையை உயர்த்திக் காட்டினான்.
“முஷீராபாதில் வயதானவர்களுக்கான விடுதி இருக்கிறதல்லவா, அங்கே போய்த் தங்கலாமே!”
“கர்த்தர் உடலில் வலுவைக் கொடுத்திருக்கிறார். உடம்பிலே தெம்பு இருக்கும் வரையில் பிறர் ஆதரவில் இருக்கக்கூடாது; அது பிசகம்மா. இந்த ஊருக்கு நாற்பது வருஷத்துக்கு முந்தி வந்தேன். இங்கேயே தங்கிவிட்டேன்.” அந்தோணி பழைய நினைவுகளில் மூழ்கி உரை செய்தான். “அதோ, மெளலா அலிக்குப் பக்கத்திலே மெஸ் இருக்குதே, அங்கே சர்ச்சில் துரை கூடத் தங்கி இருந்தாராம்மா. நான் அவருக்கு ஆர்டர்லியாக இருந்திருக்கிறேன்.”
“நிசமாகவா தாத்தா?”
“உண்மை அம்மா. இப்போது கூட ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் அவரிடமிருந்து கார்டு வரும்.”
ஆங்கிலேயர்களின் பெருந்தன்மையை எண்ணி வியந்தேன். அந்தோணி புறப்படத் தொடங்கியதும் ஓர் எட்டணா நாணயத்தை எடுத்து அவனிடம் கொடுக்க வந்தேன்.
“தேவையில்லை அம்மா. தற்போதைக்குக் கர்த்தர் தருகிறார். உங்கள் பிரியம் ஒன்றே போதும்.”
தாத்தா சென்ற திசையை நோக்கியவாறு நெடுநேரம் நின்றேன். படையினர் உடுப்பணிந்திருந்த தாத்தாவின் நடையிலே கூட ஒரு கம்பீரம் இருந்தது.
மறுநாள் ரோஸியின் அப்பா ஒரு மரியாதை அணி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. அவருடைய கால் பட்டிகளிலும், இடுப்புப் பட்டையிலும் பசுமண் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தேன். எவ்வளவு நிறையத் தடவினாலும் வெயிலில் உலர வைத்ததும் எல்லாம் உதிர்ந்துவிட்டது. கையில் சிறிய தூக்குக் கூடையுடன் அந்தோணி அங்கு வந்தார். நான் மேற்கண்ட வேலையைச் சரியாகச் செய்ய முடியாமல் திகைப்பது கண்டு அவர் எனக்குத் துணைபுரிய முன்வந்தார். “அம்மா, சோறு வடித்த கஞ்சி இருக்குதா? ஆறியதாயிருந்தால் நல்லது.”
தாத்தாவிடம் கஞ்சியைக் கொண்டு வந்து தந்தேன்.
பச்சை மண்ணைத் தூளாக்கிக் கஞ்சியுடன் கலந்து பசையாக்கினார். தாத்தா, பட்டிகளையும், பட்டையையும் தண்ணிரில் ஊற வைத்துக் கழுவினார். அவை பாதி உலரும்போது அவற்றின் மேல் கஞ்சிப் பசையை ஒரே சீராகத் தடவினார். பசை உலர்ந்ததும் பட்டிகள் புதியவை போலப் பளபளத்தன. வேலை செய்யும் தாத்தாவின் கை லாகவத்தைக் கண்டு வியந்தேன்.
“தாத்தாவுக்கு எல்லா வேலையும் வரும் போலிருக்கிறது!”
“பட்டாளக்காரனுக்குத் தெரியாத வேலையே இருக்கக்கூடாது. எந்த வேலையை எடுத்தாலும் அதைச் சுத்தமாய்ச் செய்யணும். மனசைச் செலுத்தணும்.” தாத்தாவின் கண்கள் பெருமித உணர்ச்சியில் பளபளத்தன.
“தாத்தா, பிற்பகலில் உனக்கு வேலை ஏதும் இல்லையல்லவா? தினமும் வந்து எங்களுடைய பூட்ஸ், பட்டை ஆகியவற்றைச் சுத்தம் செய்து கொடேன். மாதம் ஏதாவது கொடுத்துவிடுகிறேன்.” எப்படியாவது அந்தோணிக்கு உதவி செய்யவேண்டும் என்று எண்ணினேன்.
“செய்கிறேன் அம்மா. எல்லா வேலையிலும் எனக்குப் பழக்கமுண்டு. மாண்ட்கோமரியின் உடைகளுக்கு இஸ்திரி போட்டிருக்கிறேன். வைஸ்ராய்வேலுக்குக்கூட நான் பாடமன்னாக இருந்ததுண்டு. அப்போது அவர் சாதாரண மேஜராக இருந்தார்....மூங்ஃபல்லிஈஈ...” தாத்தா வேர்க்கடலை விற்பனையைத் தொடங்கினார்.
மறுநாளிலிருந்து தாத்தா தினமும் பிற்பகலில் எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவரின் பொருள்களைச் சுத்தம் செய்து கொடுத்தார். நாளடைவில் அவருடைய சிபாரிசின் பேரில் அந்த விடுதியில் இருந்த அனைவர் வீடுகளிலிருந்தும் அந்தோணிக்கு வேலை கிடைத்தது. மாதம் பத்து ரூபாய் வருமானத்திற்குக் குறைவில்லே.
ஆலமரத்தடியில் அந்தோணித் தாத்தா குழந்தைகளினிடையில் உட்கார்ந்திருக்கிறார். அவர்களுக்குத் தாத்தா ஒரு விளையாட்டுச் சாதனம்.
“தாத்தா இந்த வயதில் எப்படி இவ்வளவு பலசாலியாக இருக்கிறாய்?” ஆரோக்கியம் என்ற பெண் வினவினாள். அவள் திருமல் கிரி கான்வெண்ட் பள்ளி மாணவி.
தாத்தா தனது சட்டையினுள்ளிருந்து முண்டாவை வெளிப்படுத்திக் காட்டினார். “பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது. வெயிலிலும் காற்றிலும் இந்த உடலை நன்றாக அலையவிடணும். குழந்தைகளிடம் அன்பாயிருக்கணும். கர்த்தரை விசுவாசிக்கணும். அதுதான் வழி” தாத்தா தெளிவுடன் கூறினார். தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் கண்கள் பனித்தன. தூய வாழ்வு முறையைப் பற்றிய பெருநூலொன்றைப் படித்த நிறைவு என் உள்ளத்தில் ஏற்பட்டது.
சின்னக் குழந்தைகளுக்கு மிருகங்களைப் போல வாயினால் ஓசை செய்து வேடிக்கை காட்டினார் தாத்தா. பாடல்கள் பாடினார். அவர்களுக்கேற்ற சிறுகதைகள் சொன்னார். தான்சென்று வந்த பல்வேறு நாட்டுச் சிறுவர் சிறுமியர்களது நடைமுறைகள் குறித்து விவரங்கள் கூறினார். நாளடைவில் அந்தோணித் தாத்தா எங்கள் விடுதியின் இன்றியமையாத உறுப்பினர் ஆகிவிட்டார்.
மழை ஓய்ந்து அடுத்த பருவம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரக்கொன்றை மரங்களில் இருந்த இரத்த வர்ண மலர்கள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. மரங்கள் இலைகள் இன்றி நின்றன. குளித்துவிட்டுச் சிரிந்து நிற்கும் சிறுவனைப் போல் தோற்றமளிக்கும் மெளலா அலிக்குன்றை வெண்திரை சூழ்ந்தது. காலையிலும், மாலையிலும் குளிர்காற்று வீசத் தொடங்கிற்று. கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதற்கான முன்னறிவிப்புக்கள் இவை!
தெலுங்கானா பிரதேசத்தின் சிறப்பான இயல்பு. அங்கே உள்ள பல சமய, மொழி இனங்களின் அபூர்வமான கலவையாகும். வெளியிலிருந்து புதிதாகப் பார்ப்பவர்களுக்குத்தான் அது தெளிவாகப் புலப்படும். இந்திய நாட்டின் பொதுவான பண்பாடு இங்கே திகழ்ந்தது. பருவகால மாறுதல்கள் கூட, இங்கே ஆடம்பரம் இன்றி வரும், போகும்-இங்கு வாழ் மக்களின் இயல்புபோல.
கிறிஸ்துமஸ் இந்த ஊரின் சிறப்பான பண்டிகை. இங்கே முன்பு நிறைய வெள்ளைக்காரர்கள் தங்கியிருந்தனர். அவர்களுடைய சமயப் பணியினால் சுற்றிலும் நிறைய மாதா கோயில்கள். பல எளிய மக்கள் கிறிஸ்துவ தர்மத்தைத் தழுவியவர்கள்.
பண்டிகையை முன்னிட்டு அடுத்த வீட்டு ராபர்ட் சூரியனின் தம்பி தம் துணைவி, குழந்தைகளுடன் வந்திருந்தார். டெல்லியில் உயர்ந்த பதவி வகித்து வந்த அவர் குழந்தைகளுக்கு நிறையப் பரிசுப் பொருள்கள் வாங்கி வந்திருந்தார். குழந்தை டெய்ஸி அன்று தன் சட்டையில் ஓர் அழகிய ஊசிப் பதக்கத்தை அணிந்திருந்தாள். அதைக் கையில் எடுத்துப் பார்த்தேன். பொன் விளிம்புடைய எனாமல் தகட்டில் இயேசுநாதரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் மேல் இருந்த குவி கண்ணாடியினால் உருவம் பன்மடங்காகித் தெரிந்தது. அழகான வேலைப்பாடுள்ள பொருள்.
அப்போது அந்தோணித் தாத்தா எங்கள் வீட்டில் பூட்ஸுகளைத் துடைத்துக் கொண்டிருந்தார். அவர் டெய்ஸியை நோக்கி, “இதைத் தாத்தாவுக்குத் தரலாமோ?” என்று வேடிக்கையாகக் கேட்டார்.
“ஊஹீம். கொச்சம்மைக்கித் தேஷ்யம் வரும்; அது என் கொச்சம்மை கிறிஸ்மஸ்ஸுக்குத் தன்னதாணு!” பதக்கத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டாள் டெய்ஸி.
நான்கு நாட்கள் சென்றன. அன்று தேதி டிசம்பர் இருபத்துநான்கு. மறுநாளைத் திருநாளுக்காகப் பனியாரங்கள் செய்வதில் ஈடுபட்டிருந்தேன். திராட்சை கேக், ஆரஞ்சு ரொட்டி, கோகோ சாக்லட் எல்லாம் செய்தேன். இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் காகிதத்தில், மடித்து வைத்தேன். ரோஸியை அழைத்துத் தாத்தாவைக் கூப்பிடும்படி கூறினேன். சூரியன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த தாத்தா தம் கை வேலையை விட்டு எங்கள் வீட்டிற்கு வந்து நான் தந்த தின்பண்டங்களைப் பெற்றுக்கொண்டு திரும்பினார். மறுபடியும் வேலையில் ஆழ்ந்துவிட்டேன். ஒருமணி நேரம் சென்றிருக்கும். அடுத்த வீட்டில் யாரோ இரைந்து பேசுவது கேட்டது. என் கணவர் அங்கே சென்று திரும்பினார். “என்ன விசேஷம்?” என்று கேட்டேன்.
“ஏதோ தங்க புருச்சாம். அதை டெய்ஸியின் தங்கையுடைய சட்டையில் குத்தியிருக்கிறார்கள். அதைக் காணோம் என்று தேடுகிறார்கள்.”
“அடாடா. அது மிக நன்றாக இருந்ததே!” என்று அங்கலாய்த்தவாறு நானும் அங்குச் சென்றேன்.
சூரியன் கடுங்கோபத்துடன் குதித்துக் கொண்டிருந்தார். திருநாளும் அதுவுமாக விலை உயர்ந்த பரிசுப்பொருள் காணாமற் போனது அவருக்கு வருத்தம் தந்தது. “டெய்ஸி எங்கே?” என்று அவள் தாயாரைக் கேட்டேன்.
“தன் கொச்சப்பனோடு அம்பலத்துப் போயி, இப்பளே போயி என்றாள் மரியாள். எனக்கு இப்போதெல்லாம் மலையாளம் புரிந்தது. சூரியனின் வீட்டு வாசலில் கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் காணாமற்போன பொருளைத் தேடத் தொடங்கினோம். அந்தோணித் தாத்தா கடைசி வீட்டில் வேலை செய்து விட்டு வெளிவாசல் வழியாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். சூரியனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை; “ஏய், இவடே வா” என்று அந்தோணியை விளித்தார்.
“இந்தக் குழந்தைக்கு இட்டிருந்த பொன் புரூச்சைப் பார்தாயா?”
“இல்லை சார் நாலு நாள் முன்னால் டெய்ஸி ஒரு பதக்கம் போட்டிருந்ததைப் பார்த்தேன். ரொம்ப அழகாக இருந்ததுங்களே அது.”
“இந்தா, இந்தக் கதை எல்லாம் வேண்டாம்; உள்ளதைச் சொல்லு.”
சூரியனின் முகபாவத்திலிருந்த குரூரத்தைக் கண்டு தாத்தா ஒரு கணம் திகைத்தார். “நான் எதையும் பார்க்கவில்லை ஸார்” -அமைதியாகப் பதிலளித்தார்.
“எங்கே, நின்னொட சஞ்சியை ஞான் காணட்டும்!”
அந்தோணியின் உடல் குன்றியது. அது ஒரு சிறிய கித்தான் பை. சூரியன் அதனுள்ளிருந்து ஒவ்வொரு பொருளாக வெளியில் எடுத்தார். ஒரு கந்தைத் துணி, நான் கொடுத்த தின்பண்டங்கள், இரண்டு பாலிஸ்டப்பா, பித்தளைவிளக்கி டின், இரு பிரஷ்;. பிறகு...அது என்ன?...பளபளவென்று அதே தங்கப்பதக்கம், டெஸ்ஸியினுடையது. அந்தோணி அவமானத்தினால் செயலற்று நின்றார்.
“கள்ள நாயே!” சூரியன் அந்தப் பையை வீசி எறிந்தார். அந்தோணியை அடிக்கப் போனார். தாத்தா விலகிக் கொண்டார். - “சார் நிசம்மாச் சொல்லுறேன். இது என் பையில் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது; கர்த்தர் சாட்சியாகத் தெரியாது.” தாத்தா சிலுவைக் குறி செய்து கொண்டார். அவருடைய கண்களில் நீர் நிறைந்தது.
சூரியனின் கோபம் கட்டுக்கடங்காமல் பொங்கிற்று. அவர் தாத்தாவின் தோள்களைப் பிடித்து உலுக்கினார். “சார், மிஸ்டர் சூரியன், தாத்தாவை விட்டு விடுங்கள். வயதான கிழவர்; உங்கள் பொருள்தான் கிடைத்துவிட்டதே!” என் கணவர் சூரியனைத் தடுத்து விலக்கினார்.
“எல்லாம் உங்களோட வார்த்தைகேட்டு வந்ததாணு. கண்டநாயெல்லாம் குவார்ட்டர்ஸில் வருன்னு. போனடா கள்ளா; இனி இந்தப் பக்கம் வாரம்பாடில்லா!” சூரியன் உறுமினார்.
தாத்தா என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். திரும்பி நடந்தார். அவருடைய பையும் நான் கொடுத்த பனியாரங்களும் தரையில் கிடந்தன. நாங்கள் வீட்டிற்குள் சென்றோம்.
...அந்தோணி மெல்ல நடந்தார். அவமானத்தின் கமை அவரைத் தள்ளாடச் செய்தது. தொடர்ந்து நடக்க முடியாமல் தெருப்பாலத்து மதகின்மேல் உட்கார்ந்தார். இதுநாள் வரை அவர் கண்ட நல்வாழ்வின் அனுபவங்கள் யாவும் அவர் கண் முன்பு நின்றன. அவருடைய உள்ளத்து நரம்புகளில் எதோ ஒரு ஆட்டம் கொடுத்துவிட்டது. அமைதியுடன் மதகுச் சரிவில் சாய்ந்தார். வாய் கோணிக் கோணி இழுத்தது.
மாதா கோயிலிலிருந்து டெய்ஸி தனது சிற்றப்பாவுடன் திரும்பியதைப் பார்த்தேன். சற்ற நேரத்திற்கெல்லாம் சூரியன் வீட்டிலிருந்து உரத்த பேச்சுக்குரல் கேட்டது. நானும் என் கணவரும் அடுத்த வீட்டு வாசலில் போய் நின்றோம். டெய்ஸி பேசிக்கொண்டிருந்தாள்.
“தாத்தா கள்ளனல்ல, ஞானாணு ஆ. ப்ரூச்சை அவனடெ சஞ்சியில் இட்டு. தாத்தா இப்போள் எவடே போயி!”
என்னுடைய நெஞ்சில் சில்லிப்புப் பாய்ந்தது அவமான உணர்ச்சி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
பண்டிகைக்காக நாங்கள் தாத்தாவுக்கு வாங்கியிருந்த புதுத் துணிகள் அவருக்கு ஈமக் கோடி ஆயின. கல்லறைக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் எங்களுடைய தபால்பெட்டி நிறைந்து கிடப்பதைக் கண்டோம். அவற்றில் ஒன்று என் மேல்பார்வையிட்டு அந்தோணிக்கு வந்திருந்தது. அது ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதம். இங்கிலாந்து தேச முத்திரை பொறித்திருந்த அந்த உறையினுள் ஒரு வாழ்த்துச் செய்தி இருந்தது. அதன் முகப்பு வாசகம் என் உள்ளத்தை உருக்கியது.
“யாருக்காக நீ முள் முடி தரித்து வசைகள் எய்தினாயோ...”
அதை அனுப்பியவருடைய பெயரைக் கவனித்தேன். “வின்ஸ்டன் சர்ச்சில்” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது.
பட்டாளக்காரன் பொய் சொல்லுவதில்லை!