உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சைச் சிறுகதைகள்/பட்டுவின் கல்யாணம்

விக்கிமூலம் இலிருந்து



கா. சி. வேங்கடமணி


1920 ஆம் ஆண்டுகளில் ஒரு பெயர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அந்தப் பெயர் கா.சி. வேங்கடரமணி. தஞ்சை மாவட்டம் பூம்புகாரில் பிறந்தவர். கிராமத் தொண்டும் உழவுத்தொழிலும் முக்கியமென்று வற்புறுத்த எழுதிய நாவல்கள் ‘முருகன் ஓர் உழவன்’ ‘தேசபக்தன் கந்தன்’. முதலில் இந்த நாவல்களை அவர் ஆங்கிலத்தில் தான் எழுதினார். ஆங்கிலத்தில் எழுதினாலும் நாவலில் வலம்வந்த மாந்தர்கள் தஞ்சையில் வாழ்ந்த விவசாயிகள். ‘முருகன் ஓர் உழவன்’ நாவலை கி. சாவித்திரிஅம்மாள் தமிழில் மொழிபெயர்த்தார்.

ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டு இருந்த கா.சி. வேங்கடரமணி தமிழிலும் எழுதத் தொடங்கினார். முதலில் சிறுகதை எழுதும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ‘தேசபக்தன் கந்தன்’ என்ற நாவலை அவரே தமிழிலும் எழுதினார். இவர் எழுதிய நாவல்களில் தேசியமும் தேசியஇயக்கமும் பின்னிப்பிணைந்து நின்றன. இவர் தான் முதல் முதலில் தேசிய இயக்க நாவல் எழுதியதாக க.நா. க. குறிப்பிடுகிறார். இந்திய இலக்கியத்தில் பிரதானமாகப் பேசப்பட்ட எழுத்தாளர்களான முல்க்ராஜ் ஆனந்த், ஆர்.கே. நாராயன் போன்றவர்கள் இவருக்குப் பின்னர் எழுதத் தொடங்கினவர்களே.

‘வ.வே.சு ஐயரும், மாதவய்யாவும் எழுதிய காலத்திலேயே ‘தமிழ் உலகு’ என்ற பத் திரிகையில் நாவலாசிரியராகப் பாராட்டப்பெற்ற கா.சி. வேங்கடரமணி சிறுகதைகளையும் எழுதி புகழ்பெற்றதாக சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.

இந்த கா.சி. வேங்கடரமணி சிறுகதையில் பெரியதாக ஒன்றும் சாதித்து விடவில்லை என்று சொல்லுபவர்கள் கூட இவர் எழுதிய முருகன், கந்தன் இரண்டு நாவல்களும் கலை, உருவப் பிரக்ஞையுடன் எழுதப்பட்டுள்ளன என்று ஒரு முகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

பட்டுவின் கல்யாணம்

ஸி. சுப்பிரமணிய சாஸ்திரியார் சால்ட் இலாகாவில் 6-ஆவது கிரேட் ஸ்ப் இன்ஸ்பெக்டர். வறண்ட கடப்பை கர்நூல் ஜில்லாக்களின் மலேரியா ஜ்வரம் நிறைந்த மலைப் பிரதேசங்களில் ஈச்சந்தோப்பின் நடுவிலே ஐந்து வருஷ காலம் அரும்பாடு பட்டுவிட்டு, இப்பொழுதுதான் ஒரு சட்டக் கமிஷனர் துரையின் தயவினால் ஆரணி வட்டத்தைச் சேர்ந்த தங்கமான சாலவேடு ரேஞ்சுக்கு மாற்றலாகி வந்திருக்கிறார்.

சாலவேடு ரேஞ்சி, கலால் இலாகாவில் எவரும் விரும்பத்தக்க இனிய இடம். அந்த ரேஞ்சு ஸப் இன்ஸ்பெக்டரென்றால் ஒரு குட்டிக் குபேரனென்றே எவரும் சொல்வர். அங்கே அந்த இலாகா உத்தியோகஸ்தரின் மேல் வரும்படிக்கு அளவே இல்லை. அவரவர் கை நீளமும் துணிவுந்தான் அளவு. பனங்காடென்றால் அங்கேதான் பார்க்க வேண்டும். பல மைல் விஸ்தீரணத்துக்கு லட்சக்கணக்கான பனைமரங்கள் மேகக் கூட்டங்கள் போல வானத்தை மறைத்துக்கொண்டு வரிசை வரிசையாக விளங்கும்.

வறண்ட வடவார்க்காட்டு வனாந்தரத்துக்குப் பனையே செல்வப் புதல்வி. அங்கே அது சர்க்காருக்கு மரமொன்றுக்கு ரூபா 3 வீதம் கொடுக்கிறது. ஏழை ஸால்ட் ஸப் இன்ஸ்பெக்டருக்கும் அது மரமொன்றுக்கு ஓரணா வீதம் பிச்சை கொடுக்கிறது. ஆனால் அந்த ஒரனாவில் பல பேருக்குப் பங்கு உண்டு. கொப்பரைத் தேங்காய்க்குட் புகுந்த கட்டெறும்பு போலக் கள்ளுக்கடை முதலாளிகளை அரிக்கும் கலால் இலாகாச்சேவகர் நால்வர் அந்த ஓரணாவில் காற்பங்கு வீதத்திற்குப் பிறந்தவர்.

சிறந்த வைதிக பரம்பரையில் பிறந்த நம் சாஸ்திரியார், ‘உப்பு இலாகா’ என்று மறை பெயர் பூண்ட கள்ளிலாகாவுக்கு வந்து சேர்ந்ததே காலத்தின் கோலம் தான். அவர் பிரயத்தனம் அதிகமில்லை. அவருடைய வம்சத்தின் பெருமையைப் பார்க்கின் அவர் வேதாந்த சிரோமணியாக வேண்டியவர். ஆனால், சென்ற ஐம்பது வருஷ காலமாக ஆங்கில மதுவை அருந்தி அதில் ஈடுபடாத அந்தண ஈயே பெரும்பாலும் இல்லையல்லவா? இவரும் அந்த ஈக்களில் ஒருவர் தாமே?

கலால் இலாகாவில் மேலதிகாரியின் உபத்திரவம் அதிகந்தான். ஆயினும் பனைமரங்களின் பரம காருண்யத்தால் கிடைக்கும் மேல் வரும்படியைக் கொண்டு சாஸ்திரியாரும் அவர் தர்ம பத்தினி சுந்திரியம்மாளும் இதுவரையில் சுகமாகவே காலங் கழித்து வந்தனர். இப்போது நல்ல இடத்திற்கு மாற்றப்பட்டிருந்த படியால் அவர்கள் பாடு கொண்டாட்டமாகவே இருந்தது.

2

“கையிலிருக்கும் சிறிய மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் சாமர்த்தியம் ஒரு நாளும் உங்களுக்கு வரப் போவதில்லை. வேதாந்தம் பேசியென்ன? சுலோகங்களை அடுக்கடுக்காய்ச் சொல்லி என்ன? யாருக்குப் பிரயோசனம்? காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா?” என்று சாஸ்திரியாரின் தர்மபத்தினி சுந்தரியம்மாள் கேட்டாள்.

“ஆமாம் சுந்தரி, வாஸ்தவந்தான். வாய்ப் பேச்சுக்கு என்ன ? காசா பணமா? வாய் கொண்ட மட்டும் பேசினால் போகிறது. செய்து பார்த்தாலல்லவோ தெரியும் கஷ்டம்? என் வேலையை ஒரு நாள் செய்து பாரேன்.”

“என்ன, இந்த முத்திரை போடும் பெரிய வேலையையா? அல்லது கள்ளு காலன் கணக்கையா? அபார வேலை தான்!” என்று சுந்தரி ஒரு பாணம் போட்டாள்.

‘ஏதடா இது, எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டோமே’ என்றெண்ணிச் சாஸ்திரியார் சிரித்துக்கொண்டு நீலகண்ட தீவு தரவர்களுடைய நீதி சுலோகங்களுள் அச்சந்தர்ப்பத்திற்கேற்ற தொன்றைத் தம் இனிய குரலில் சொல்ல ஆரம்பித்தார்.

“ஏன், நல்ல சாரீரத்தோடு பாட்டுப் பாடிவிட்டால் உண்மையை மறைத்து விட முடியுமோ? ஐந்து வருஷ காலம் அந்தப் பாழாய்ப் போன கடப்பை ஜில்லாவில் போய் மடிவானேன்? கேட்ட சமயத்தில் ஏ.வி.யின் (அஸிஸ்டென்ட் கமிஷனர்) காம்ப் கிளார்க்குக்கு இரண்டு டின் நெய் அனுப்பியிருந்தால்?-நம் கையை விட்டா கொடுக்கப் போகிறோம்? கையைக் காட்டிவிட்டால் எந்தக் கிராமணியாவது கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போகிறான்.”

“ஆமாம் சுந்தரி, ஆட்டுக்கறி, புலால் சமைக்க, சோமயாகம் செய்த கிருஷ்ண தீஷிதர் பிள்ளை சுப்பிரமணிய சாஸ்திரி நெய் சப்ளை செய்ய வேண்டியதுதான்; நியாயந்தான்!”

‘பரிகாசம் பேசி என்ன லாபம்? காலத்துக்கு ஏற்றவாறு போக வேண்டியதன்றோ நம் கடமை? இல்லாவிட்டால் நமக்கு எப்பொழுதும் ஏக்கந்தான் கதி. கடப்பையில் இந்த ஐந்து வருவடிமாகப்பட்டது போதாதா? பட்டுவின் கல்யாணத்தை உத்தேசித்தாவது நீங்கள் மேல் அதிகாரிகளிடம் கொஞ்சம் நயந்து போக வேண்டாமா?”

“கந்தரி, பட்டு கல்யாணத்துக்கு என்ன அவசரம்? எப்பொழுது பார்த்தாலும் அதே நினைவாயிருக்கிறாயே. இன்னும் அவளுக்கு மழலை கூட மாறவில்லை. அதற்கு உள்ளேயா கல்யாணம்? இன்னும் மூன்று வருஷம் போகலாம். பாழாய்ப் போன நம் தேசத்தில் தான் இந்த வீண் அவசரம். எவ்வளவோ அழகாக அமைதியாக நடக்க வேண்டிய காரியங்களை, புத்தியில்லாமல் நம்மவர்கள் பேய்க் கோலமாக்கி விடுகிறார்கள் நாமாவது-”

“இதென்ன கூத்து இது? குலத்தைக் கெடுக்கும் வேதாந்தம்! உங்களுக்குக் கண் இல்லையா? குழந்தை வளர்ந்து தழைந்து நிற்கிறாளே! இந்த ஆனிக்குப் பன்னிரண்டாகிறதே. நாம் இந்தச் சாலவேடு காட்டில் இல்லாமல் வேறு எங்கேயாவதிருந்தால் இத்தனை நாள் ஊரெல்லாம் கூக்குரலிட்டிருக்குமே? போன வருஷம் நாம் கடப்பையில் இருக்கும் போதே பட்டுவைக் கன்னிகாதானம் செய்து கொடுத்திருக்க வேண்டியது. இனிமேல் கொஞ்சம் கூட ஒத்தி வைக்க முடியாது. குழந்தையின் வாழ்நாள் வீணாகிவிடும்; வீண் அபக்கியாதிக்கும் இடம்.”

“நீ அவசரப்படுவதனால் தான் அப்படி வீணாய் விடுமோவென்று பயப்படுகிறேன், சுந்தரி” என்று சாஸ்திரியார் வறண்ட குரலில் கவலையுடன் விடை அளித்தார். குழந்தை பட்டுவின் விவாக விஷயத்தில் சாஸ்திரியாரின் விருப்பம் வேறாயிருந்தது. பட்டு சுயம்வரம் செய்துகொள்ள வேண்டுமென்பது அவர் கருத்து. ஆனால் அதை வெளிப்படையாய்ச் சுந்தரியிடம் சொல்லி வெல்ல முடியுமா? ஆகையால் உபாயமாய்ச் சுற்றிச் சுழற்றிப் பேசலானார்.

“ஆமாம், சுந்தரி. இந்த வருஷம் பண்ணியாக வேண்டுமென்றால் பணம் எங்கே இருக்கிறது? பணமுங் கிடையாது; லீவும் கிடையாது.”

“பணம் ஏன் கிடைக்காது? ஊரில் உங்கள் அண்ணா அட்டகாசம் பண்ணிக் கொண்டு பத்து வருஷமாக உங்கள் பாகத்தையும் வாயில் போட்டு ஏப்பமிட்டுக் கொண்டு இருக்கிறாரே? ஊர் நிலத்தைப் பந்தகம் வைத்தோ, விற்றோ குழந்தை கல்யாணத்தை நன்றாய் நடத்துகிறது, பத்து வருஷமாக நமது பாகத்திலிருந்து நமக்கு ஒரு மூட்டை அரிசியுண்டா? பாத்திரந் தேய்க்க ஒரு குத்துப் புளியுண்டா? தர்ப்பணத்துக்கு ஒரு மூட்டை எள்ளுண்டா? அண்ணா பாடும் மன்னிபாடும் கொண்டாட்டம்.” “சரி, சரி. பெண் பிள்ளைகள் பேச்சுக்கு அளவுண்டோ? நமது பாகத்தை என்ன செய்வது? விற்க முடியுமா? சுட முடியுமா? அண்ணா கலைத்து விடுவாரே! ஊர் நாட்டாண்மை அவரல்லவோ? ஊரில் அவர் இட்டதுதானே சட்டம்?”

“அது போகட்டும். இப்பொழுதுதானே பனைமரம் சாற்றுக் குத்தகைக் காலம்? 5000 மரம் முத்திரை போட்டால் ரூ. 1000 வருமென்றும், சாலவேடு ரேஞ்சு கிடைத்து மூன்று வருஷகாலம் அங்கே இருந்து விட்டால் குபேரனாய் விடலாமென்றும் வாயப்பந்தல் போட்டீர்களே. அப்படி சாலவேடு ரேஞ்சு கிடைத்தால் திருப்பதி வேங்கடாசலபதிக்குக் கூட அபிஷேகம் பண்ணி வைப்பதாக வேண்டிக் கொண்டீர்களே? எல்லாம் மறந்து போய் விட்டதோ?”

“ஆமாம், பின்னால் வரப்போகும் மேல் வரும்படியை நம்பி யார் கடன் கொடுப்பார்கள்? விஷயம் புரியாமலே நீ சொன்னதையே சொல்லுகிறாயே, கந்தரி!”

“இந்தக் கதையெல்லாம் எனக்குத் தெரியாது. எப்படியாவது பட்டுவின் கல்யாணம் இந்த ஆனிக்குள்ளேயே நடந்தாக வேண்டும். உங்கள் பகவத்கீதையையும் ராமாயண பாராயணத்தையும் மூன்று மாசத்துக்குக் கட்டி வைத்துவிட்டுச் சோம்பலையும் விட்டு நமது ஜில்லாப் பக்கம் போய் அலைந்து திரிந்து வரனைப் பாருங்கள். பனந்தோப்பைச் சுற்றுவதில் உள்ள பாதி ஜாக்கிரதையுடன் வரன் தேடி முயற்சியும் செய்தால் விவாகம் நிச்சயம் முடிந்துவிடும். பி.ஏ. படிக்கும் பையனாகப் பார்த்துக் கையில் ரூ. 1000 கொடுத்து மேலே பி.எல்., படிக்கவும் நாம் ஏற்றுக் கொண்டால் மாதமாதம் மணியார்டர் தடையின்றிப் பண்ணிவிடலாம்.”

“ஆமாம் சுந்தரி, நீ போடும் ‘பிளான்’ நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் அதற்குக்கூடக் கையில் குறைந்தது ரூ.2000 வேண்டுமே? எங்கே போகிறது? பனைமரம் முத்திரை போடுவது அடுத்த மாதம் ஆரம்பித்தாலும் ஆடியில் தானே முடியும்? அப்பொழுது பணமும் சில்லறை சில்லறையாகத் தான் வரும். மொத்தமாக முன் பணம் கிடைக்காதே. அதற்குள் கல்யாணக் கோர்ட்டுச் சாத்தியாய் விடும். கள்ளுக் காலத்துக்கும் கல்யாண காலத்துக்கும் ஒத்துக் கொள்ளாது போல் இருக்கிறதே, என்ன செய்வது?”

சுந்தரி சற்று யோசித்து, “அப்படியானால் நம்ப துரசுவைத் தஞ்சாவூர்ப் பக்கங்களில் ஜாதகம் வாங்கி அனுப்பும்படி ஏற்பாடு செய்யலாமே?”

“நம்ம துரசு உன் தம்பி துரைசாமியா? அவன் எதற்கு லாயக்கு? அவனிடம் பணத்தைக் கொடுத்தால் காபிக் கிளப்பிலும், நாடகக் கொட்டகையிலும், தாசி வீட்டிலும் செலவழித்து விட்டுப் பொய்க் கணக்குச் சொல்லி, ஏதாவது புரட்டு ஜாதகத்தில் நாலு வாங்கி அனுப்பி விடுவான். போதும், ஆதியில் நாம் அவனோடு பட்டபாடு!”

“நீங்கள் பேசுவது நன்றாயிருக்கிறதே. உங்கள் மனம் போல் விட்டால் என்னையுந்தான் வேண்டாமென்பீர்கள். தனியாய் இந்தக் குடிகார ஜவான்களோடு பனங்காட்டில் திரிந்து கொண்டிருந்தால் போதும் உங்களுக்கு! ஆனால் ஈசுவரன் பெண்ணையும், பிள்ளையையும் கண் முடித்தனமாய்க் கொடுத்திருக்கிறானே; அதற்கென்ன செய்கிறது? துரசு வேண்டாமென்றால் நானே புறப்படுகிறேன், ஜாதகம் வாங்க. நீங்கள் ஒழிந்தபோது வரலாம்.”

“அதைப் பற்றி யோசிப்போம் கந்தரி. படபடத்தால் காரியம் ஆகுமா?” என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் மறுபடியும் ஏதோ ஒரு சுலோகத்தை மெதுவாய்ச் சொல்லலானார்.

இந்தச் சம்பாஷனை இடைகழித் திண்ணையில் நடந்து வந்தது. சுந்தரி சூடான காபியை ஆற்றுவது போல பாவணை பண்ணிக் கொண்டிருந்தவள் காபியிருந்த லோடாவைக் கொஞ்சங்கோபத்துடன் தன் கணவர் பக்கம் தள்ளினாள். பாவம்! லோடா சாய்ந்து காபியுங் கொட்டியது. லோடாவும் கொஞ்சம் உருண்டது. காபி, இடைகழித் திண்ணை யிலிருந்து குற்றால மலைச்சாரலிலின்று விழும் அருவி போலக் கீழே விழுந்தது.

பட்டு, கையில் ஒரு புஸ்தகத்துடன் வாசிப்பது போலப் பாவனை பண்ணிக் கொண்டு முற்றத்தில் உட்கார்ந்து இவர்கள் சம்பாஷணையைக் கவனித்து வந்தாள். சாஸ்திரியார் சற்று நிமிர்ந்து முற்றத்தை நோக்கினார். பட்டுவின் உருவம் அவர் கண்ணிற்பட்டது. தம் சாயல் தப்பின்றி அமைந்து அழகுடன் விளங்கும் குழந்தை பட்டுவைப் பார்த்துப் பெருமூச்செறிந்து, எப்படியேனும் இவ்வருஷம் விவாகத்தை நடத்த வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டார்.


3

தங்கமான சாலவேடு ரேஞ்சில் பனைமரம் முத்திரை போடுங் காலத்தில் சாஸ்திரியாருக்கு வரும்படி சரியாய்க் கிடைக்கவில்லை. ஏனெனில், சாஸ்திரியார், பெண்ணின் விவாகத்துக்காக லீவில் போகப் போகிறாரென்று ஸால்ட் சேவகர்கள் எப்படியோ தெரிந்து கொண்டு கள்ளுக் கடைக்காரர்களுக்கு பகிரங்கப்படுத்திவிட்டார்கள். இது வெளிப்படவே மாமூலான பணங்கள் கிளம்பவில்லை. சாஸ்திரியார் எவ்வளவோ சிரமப்பட்டும் ரூ. 500 தான் சேர்ந்தது. அது ரயில் செலவுக்குக் கூடப் போதாதே என்றெண்ணி மறுபடியும் ஒரு நாள் சுந்தரியிடம் மெதுவாய்ச் சொல்லிப் பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை. பெண்ணைப் பெற்ற தாயின் கவலையைப் பனங்காட்டு நரி போலத் தினந்தோறும் பனந்தோப்புகளில் சஞ்சரிக்கும் சாஸ்திரியார் அறிவாரா?

சுந்தரி, தன் ஆபரணங்களெல்லாவற்றையும் அடகு வைத்தேனும் எப்படியாவது எங்கேயாவது பணம் வாங்கிக் கட்டாயம் கல்யாணத்தை முடித்தே தீர வேண்டுமென்று சாதித்தாள். மனைவி இப்படித் தியாகம் செய்யத் தயாரா இருக்கும்போது எந்தக் கணவன்தான் கம்மா இருக்க முடியும்? ஆகையால் சாஸ்திரியார் துணிந்து ஒரு நாள் சாலவேட்டைவிட்டு, வரன் தேடும் பொருட்டுப் புறப்பட்டுவிட்டார். அதற்குக் கொஞ்ச நாள் முன்னே துரசுவும் தனக்கு அனுப்பியிருந்த ரூ. 50-க்காக 4 ஜாதகங்கள் வாங்கி அவருக்கு அனுப்பியிருந்தான். அந்த ஜாதகங்களையும் சாஸ்திரியார் ஜாக்கிரதையாகக் கையில் எடுத்துக்கொண்டார். சுந்தரியுடனும், பட்டுவுடனும் தம் சேர்ந்த ஊராகிய ஆலங்காட்டுக்கு ஒருநாள் காலையில் வந்து சேர்ந்தார்.

சுந்தரி இதற்கு முன் ஆலங்காட்டுக்கு வந்து வருஷம் பன்னிரண்டாகின்றன. அவள் மாமனார் காலஞ்சென்ற போது வந்து எட்டிப் பார்த்தவள். அவளுக்குத் தன் ஓரகத்தியின் நினைவே நினைவு. அவ்வோரகத்தியோ மலடி. அவளுக்குச் சுந்தரியின் பேரைக் கேட்டாலே போதும்; நெய்யைக் கண்ட நெருப்புப் போலத்தான். நேரே கண்டு விட்டாற் கேட்க வேண்டுமா? அத்தகையவளிடம், தன் பெண்ணின் கல்யாணத்தை உத்தேசித்து எப்படியேனும் பொறுத்துப் போவோமென்று எண்ணியே வந்தாள் சுந்தரி. நல்ல வரன் கிடைத்துக் கல்யாணமும் சரிவர நடந்தேற வேண்டுமேயென்ற திகிலுடன் தன் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டாள்.


4

வைகாசி, ஆனி மாதங்கள் சாஸ்திரியாருக்கு மிகவும் கஷ்டம்; அலைச்சல். துரசுவும் அவரை ஊரூராய் அழைத்துப் போனான். சாஸ்திரியார் தமது ஜில்லாவைப் பார்த்தே வருஷம் பதினைந்தாகி விட்டன. நாட்டு வழக்கம் ஒன்றும் தெரியவில்லை. எங்கெங்கே பாட்டுக் கச்சேரி, சதிர்க் கச்சேரி, புதுத் தாசிகள் உண்டோ அங்கங்கே வரன் பார்ப்பதற்காகச் சாஸ்திரியாரை அழைத்துச் சென்றான் துரசு; அவரும் பாவம்! அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆளாகி அவன் கூடவே சென்றார். கள்ளுக் காசெல்லாம் காபிக் கடைகளிலும், நாடக மேடைகளிலும் தொலைந்தது. ஒழிந்த வேலையில் ஜாதகங்களைப் பொறுக்கிச் சோதிடன் இடம் காட்டிப்பார்த்தார்கள். ஜாதகம் பொருந்துவது இல்லை. விஷயம் இவ்வாறாகக் குழந்தை பட்டுவுக்குப் புருஷனே பிறக்கவில்லையோவென்று கூடச் சாஸ்திரியாருக்குத் தோன்றியது. சாஸ்திரியார் கையிலிருந்த ரூபாய் 500-ல் பெரும்பாலும் செலவழிந்து விட்டது. திரும்பிச் சாலவேடு போகச் செலவுக்கு ரூபா 50-தான் பாக்கி. ஆனி மாதம் தேதி 22 ஆகிவிட்டது. வரன் ஒன்றும் நிச்சயமாகவில்லை. “வரன் தேட ஒரு வருஷ வரும்படியைச் செலவிட்டாலும் முடியாது போலிருக்கிறதே. என்னடா இது! விவாகமென்னும் இன்பமயமான உயர்ந்த சடங்கு, இவ்வளவு கஷ்டம் உடையதாய்க் கேவலமாகி விட்டதே. சர்க்கார் உத்தியோகஸ்தனின் பெண்ணுக்குக் கல்யாண மென்றால் சாத்தியமில்லாத விஷயம்போல் இருக்கிறது” என்று சாஸ்திரியார் கவலையில் ஆழ்ந்தார்.

5

சாஸ்திரியார் துயரத்துடனும், கவலையுடனும் ஆனி 25 ஆலங்காட்டுக்குத் திரும்பி வந்தார். குழந்தை பட்டு, வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தகப்பனாரைக் கவலையுடன் கடைக்கண்ணால் பார்த்தாள். அப்பார்வை அவர் இதயத்தில் காய்ச்சிய வேல்போல் பாய்ந்தது.

சாஸ்திரியின் தமையனார் உள்ளிருந்து வெளியே வந்து தம்பியை வரவேற்று, அவர் கையில் நீண்ட உறையிட்ட ஒரு சர்க்கார்த் தபாலைக் கொடுத்து விட்டுக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு பேசலானார். “சுப்பு, என் மேல் கோபித்துக் கொள்ளாதே. நான் தயாராய் இருக்கிறேன். 5000 கீத்து, 100 சவுக்குக்கால் கொட்டகைப் பந்தலுக்குத் தயாராயிருக்கின்றன. மேளகாரன், சமையற்காரர்களுக்கு அச்சாரம் கொடுத்துவிட்டேன். பூதலூர்ப் பையன்தானே நிச்சயம் செய்திருக்கிறாய்? நல்ல இடம் தான். ஆனால் நம் அந்தஸ்துக்கு மிகவும் மேற்பட்டது. 31 முகூர்த்தந்தானே?”

தமையனாருக்குத் தம்பியிடம் அபிமானம் அதிகம் ! தம்பியின் முகத்தைப் பார்த்தவுடனேயே சமாசாரம் தெரிந்து கொண்டுவிட்டார். சர்க்கார்க் கடிதத்தையும் இரகசியமாய்ப் பிரித்துப் பார்த்து விஷயந் தெரிந்து கொண்டிருந்தார்.

சர்க்கார்க் கடிதம் பின்வருமாறு: -

‘சுப்பிரமணிய சாஸ்திரி, ஆறாவது கிரேட்டு சப் இன்ஸ்பெக்டர், சாலவேட்டிலிருந்து மூலக்காடு ரேஞ்சுக்கு மாற்றல், லீவு முடிந்ததும் அங்கே போய் வேலை ஒப்புக் கொள்க.”