தஞ்சைச் சிறுகதைகள்/தவிப்பு

விக்கிமூலம் இலிருந்து
ஆர். வெங்கட்ராமன்

திருத்துறைப்பூண்டியில் பிறந்த ஆர். வெங்கட்ராமன் விடுதலைப்போரில் பங்கு கொண்ட கலைஞன்.

275 சிறுகதைகள் எழுதி தனக்கென்று ஒரு இடத்தை இலக்கியத்தில் பிடித்துக்கொண்டவர். இவர் கதைகள் நடப்பியல் நெறியோடு கிராமிய மனம் கமழும். பாத்திரர்கள் மனதில் நீங்காது நிற்பர். ஆழமான கருத்துக்களை அழுத்தமான வார்த்தைகளால் கலைமணம் கமழ வார்ப்பதில் வல்லவர். தஞ்சை மாவட்ட மண்ணும் மக்களுமே அவரின் கதைகளுக்கு அடித்தளம். பழக்கவழக்கங்கள் காட்சிகள் அனைத்தையுமே படம்பிடித்து விடுவார். முதன் முதல் தஞ்சை மாவட்ட கிராம வாழ்வியலை இந்த மண்ணின் மனம் கமழ எழுதியவர் எம். முத்து.

'ஆர்.வியின் தாக்கம் தி. ஜானகிராமனிடம் அதிகம உண்டு' என்று மது.ச. விமலானாந்தம் குறிப்பிடுகிறார்.

‘அணையாவிளக்கு' 'திரைக்குப்பின்' இந்த இரண்டு நாவல்களும் குறிப்பிடத்தக்கவை. நாவல்களில் இயல்பான உரையாடல்களையும் நெஞ்சம் நிறையும் கதையம்சத்தையும் காணலாம். புரட்சிகரமான கருத்துக்களையும், சிருங்கார ரசத்தையும் அளவோடு அமைத்து நாவல் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அதில் கணிசமான வெற்றியும் கண்டவர்.

குழந்தைகளுக்கான கதைகளை எழுதி அதில் அரிய சாதனைகளைப் படைத்திருக்கும் ஆர்.வி, ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய குழந்தைகள் பத்திரிகையான 'கண்ணன்' இதழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.

தவிப்பு

"லீவு கிடைத்ததும் வருகிறேன்.”

கடிதத்தில் இந்த ஒரு வாக்கியந்தான் மீண்டும் மீண்டும் அவள் மனத்தில் சுழன்று கொண்டிருந்தது. 'இவருக்கு லீவு எப்போது கிடைக்குமாம்? எப்போது வருவாராம்?' என்ற பதிலும் கூடவே சுற்றி வந்தது.

நட்ட நடு நிசியில் ருக்மிணி இவ்விதம் அரற்றிக் கொண்டே திரும்பித் திரும்பிப் படுத்துப் புரண்டாள். மெத்தை வெப்பமாய்த் தகித்தது. 'குளிர்ந்த காற்றுக்கு யாரிடம் இப்படிக் கோபம்? துக்கமும் வந்து தொலைக்க மாட்டேன் என்கிறதே!' என்று அவள் மனமும் புழுங்கியது.

திறந்த வெளிப்பக்கம் இருந்த ஜன்னல், படிக்கட்டுப் பக்கம் இருந்த ஜன்னல் எல்லாம் நன்றாகத் திறந்துதான் கிடந்தன. 'பின்னே என்ன கேடு?'

பக்கத்தில் ஒரு பர்லாங்கு தூரத்தில் “கூ” என்று கீச்சுக் குரலில் கூவியது ரயில். “அம்மாடி! பன்னிரண்டரை மணி வண்டியா? சீ, கடிதம் எழுதிப்போட்டுட்டார் வெக்கமிலாமே! வந்தால் இதிலே தானே வரணும்? வரப்படாதோ? வந்திருந்தால் எப்படி இருக்கும்! கருகருன்னு இரண்டு வரி எனக்கும் எழுதத் தெரியாதோ?”

கீழே தெருவில் சலங்கை கட்டிய மாட்டு வண்டிகள் ஜல்ஜல்லென்று ஓடின. வண்டிக்கு யாராவது போகிறார்களோ அல்லது இறங்கித்தான் வருகிறார்களோ ருக்மிணிக்கு அந்தச் சலங்கைகளின் சத்தம் கட்டோடு பிடிக்கவில்லை.

“காதில் வந்து கதறுவதைப் போல என்ன வண்டி வேண்டிக் கிடக்கிறது?” என்று கூறிக்கொண்டே அவள் ஜன்னலருகில் எழுந்து வந்து நின்றாள். தேய்ந்த நிலா மங்கிக் கொண்டிருந்தது.

தெருவில் வண்டி வருகிறதா, போகிறதா என்று தெளிவாகத் தெரியவில்லை. அவளுக்கு அது எப்படிப் போனால் என்ன?

“லீவு கிடைத்தப்புறந்தானே வரப்போறாராம், பெரிய இவர் மாதிரி!” என்று ஆத்திரத்துடன் முணுமுணுத்துக் கொண்டே திரும்பிவந்து தலையணையை மாற்றி வைத்துக் கொண்டாள். மெத்தையையும் கவிழ்த்துப் போட்டுக் கொண்டாள். குளிர்ச்சி வேண்டுமே !

ஜில்லென்று குளிர்ந்த தண்ணீர் சாப்பிட்டால் தேவலைபோல் இருந்தது. சாய்ந்து படுத்த பிறகுதான் இந்த நினைப்பு. எழுந்திருக்கச் சோம்பல். ‘என்னாலே எழுந்திருக்க முடியாது; அது கிடக்கட்டும்' என்று நினைத்தாள். அப்படி நினைக்க நினைக்க நாக்கு உக்கிரமாய் வறட்ட ஆரம்பித்தது.

“சே!” என்று கடைசியாக அலுத்துக்கொண்டே எழுந்தாள். விளக்கைப் போட்டாள். மேஜைமேல் கூஜாவில் தண்ணிர் கொண்டு வந்து வைத்துக் கொள்ளாவிட்டால் அவளுக்குத் தூக்கமே வராது. வழக்கப்படி அங்கேதான் அது இருந்தது. ‘ணங்' என்று தம்ளரை எடுத்து, மடக்கு, மடக்கு என்று இரண்டு வாயாகத் தண்ணிரைக் குடித்துவிட்டுக் கட்டிலுக்கு அருகில் வந்து விட்டாள். கூஜாவை மூடவில்லை; விளக்கை அணைக்கவில்லை. “அட ராமா!” என்று சொல்லிக்கொண்டே திரும்பினாள்.

‘ணங்’

அறைக்கு வெளியிலே திறந்த மாடியில் காற்றுக்காகப் படுத்திருந்த தங்கம்மாள் இந்தச் சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்டாள். “ருக்கு, தூங்கவில்லையா இன்னும் நீ? பாதி ராத்திரியிலே இப்படி ஏதுக்குத் தண்ணீரைக் கொட்டிக் கொட்டிக் குடிக்கிறே?” என்றாள் அங்கிருந்தபடியே. கொஞ்ச தூரத்தில் ருக்குவின் தம்பி ரங்கன் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான்.ருக்கு பதிலே சொல்லவில்லை தங்கம்மாள் கவலையுடன் எழுந்து அறைக்குள் வந்தாள்.

“ருக்கு!”

“ம்ம்..”

“பன்னிரண்டரை ஆறது..... என்ன இன்னும்?”

“தாகமாய் இருந்தது; தண்ணீர் குடிச்சேன்.”

“தூக்கம் வரல்லியா? கீழே போகனுமா?”

“ஒண்ணும் வேண்டாம்.”

“பின்னே விளக்கை அணைச்சுட்டுப் படுத்துக்கப்படாதோ?”

“எல்லாம் படுத்துக்கறேன். போ, நீ அனைச்சுட்டுப் போ.

“தூங்கு, காலா காலத்துலே, உடம்பு என்னத்துக்காகும்? நன்றாய்ப் போர்த்திக்கோ.”

“ஏன் அம்மா தொன தொணக்கிறே?”

“ஊஹூம்; தூங்குங்கறேன்.”

“சரிங்கறேன்; தூங்கப் பண்ணிட்டுத்தான் போகப்போறியா?”

“வண்டி போயிடுத்தோ?”

“எல்லாம் போயிடுத்து.”

“எப்போ?”

“சரியாய்ப் போச்சு; எல்லாம் இப்பதான்!”

தங்கம்மாள் தன் படுக்கைக்குச் சென்றாள்.

தூங்குகிறவளைப் போல ருக்கு கண்களை மூடிக் கொண்டிருந்தாள்.

“ஜல்.....ஜல்......”

ஒரு சபலம்.

“இதுதான் ஜனங்கள் இறங்கி வருகிற வண்டி. முதல்லே போகிற வண்டி போலிருக்கு. எழுந்திருப்போமா, வேண்டாமா?”

“லீவு கிடைத்ததும் வருகிறேன்.”

‘லீவு கிடைக்காமலே இருக்கட்டும்; இவர் வராமலே இருக்கலாம். எப்பவுமே இப்படித்தானே? பெண்டாட்டி, பிள்ளை இருக்கிறவா லீவு கொடுக்காமலா இருப்பா? வேணும்னால் எல்லாம் வரலாம். இருக்கட்டுமே!’

ருக்குவுக்கு இப்போது தலையணை மீது ஆத்திரம் வந்தது. கால் மாட்டில் ஒன்றை எடுத்துத் தூக்கி எறிந்தாள். கடிகாரத்தில் மணி ‘டங்’ என்று ஒரு தடவை அடித்துவிட்டு நின்றது.

“மணி ஒண்ணா, பன்னிரண்டரையா?”

ஸ்டேஷனில் “கூ” என்று மறுபடியும் ரெயில் கூவியது. ஷட்டில், பார்ஸல் பாஸ்ட் பாஸஞ்சர்.

“லீவு கிடைத்ததும் வருகிறேன்.”

ருக்கு ஒரு தடவை புரண்டு படுத்தாள். மூடின கண்கள் திறக்க முடியாமல் இருந்தன.

ருக்கு தூக்கத்தில் ஆழ்ந்து போனாள்.

ஆனால் தங்கம்மாள் தூங்கவே இல்லை. காரணம் இல்லாத விசாரம் அவள் மனசைக் கலக்கிக் கொண்டே இருந்தது. 'மணி பன்னிரண்டரை; ருக்கு தூங்கவேயில்லை. அநேகமாய் வந்ததிலேயிருந்து தினமும் இப்படித்தான். ஏன்? வானத்திலே நட்சத்திரம் ஒன்று, ஒன்றும் தெரியாது என்பதைப் போல் மினுக்கியது. ‘சனியன்; இலை அசங்கல்லியே இப்படியா புழுங்கும்?’

காற்று வராததற்குக் கவலைப்படுவதா? ருக்குவுக்காகக் கவலைப்படுவதா?

திடீரென்று ரங்கனை வந்து அழைத்துப் போகும்படி வேணுவிடமிருந்து கடிதம் வந்தது. மறுநாளே ருக்குவை. - அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான் ரங்கள். தங்கம்மாளுக்கு மனசுக்குள் விசாரந்தான்... “வா அம்மா குழந்தை ” என்றபடியே ருக்குவின் முகத்தை ஆராய்ந்து பார்த்தாள். முக காந்தி வாடவில்லை; பசுமை வெளுக்கவில்லை. 'போயும் நாளாச் சோல்லியோ? ஆசையாய் இருந்திருக்கும்; பார்க்கணும் போல; வந்திருக்காள்” என்று தன்னையே தேற்றிக் கொண்டாள். மூன்று பிள்ளைகளுக்கு நடுவில் ஒரு பெண். ருக்குவின் தந்தை அந்த ஆசையில் மேம்போக்காக இருந்துவிட்டார். "ஏன், அவன் வரவில்லையா?” என்று ஒரு வார்த்தை மரியாதைக்குக் கேட்பது போலக் கேட்டார்.

“லீவு கிடைக்கல்லே அப்பா” என்றாள் ருக்கு. அந்தக் குரலில் வேற்றுமை ஒன்றும் புலப்படவில்லை. சாதாரணமாய்த்தான் சொன்னாள். ஆனாலும்

சிலுசிலு என்று சிறுகாற்று ஒன்று வீசி விட்டுப் போயிற்று.

ஆனாலும்-? ஒரு சிறு சந்தேகம். "ஏண்டா ரங்கா , மாப்பிள்ளை எப்படிடா இருக்கார்? ஏதாவது-” என்று ரங்கனைத் தனியாக வந்து கேட்டாள்.

"மாப்பிள்ளைக்கு என்ன?” என்றான் ரங்கன், கொஞ்சம் இரைந்தே. மேலே ஓடவில்லை தங்கம்மாளுக்கு. 'ஏதாவது இவர்களுக்குள் சண்டையா என்று கேட்கவேண்டும். இவனிடம் போய் எப்படிக் கேட்பது?'

"அதுக்கில்லையடா, ஏதாவது சொன்னாரான்னு...”

"ஓஹோ..... எவ்வளவோ சொன்னார். ரேஷன் கஷ்டம், ஆபீஸ் வேலை, இண்டியன் யூனியன்......

“உன்னை வந்து கேட்கிறேனே, என்னைச் சொல்லு!" என்று திரும்ப வேண்டியதாயிற்று.

ருக்கு தினமும் காபி சாப்பிட்டாள். பத்திரிகை ஒன்றை வைத்துக்கொண்டு அப்பாவுக்கு எதிர்த்தாற்போல உட்கார்ந்து ஏதோ சிறிது மல்லுக்கு நின்றாள். தலைவாரிப் பின்னிக் கொண்டாள். ஆர அமர, மொர மொரக்கக் குளித்தாள்; சாப்பிட்டாள். கலகலவென்று பேசினாள்; சிரித்தாள். குத்துவிளக்கைத் துலாம்பரமாகத் துடைத்து ஏற்றிக் கும்பிட்டாள்; பாடினாள். கும்மாளமாகத்தான் இருந்தாள். ஆனால்-

வேணுவிடமிருந்து எப்போதாவது கடிதம் வரும். தங்கம்மாளுக்குப் பரபரப்பாய் இருக்கும். ருக்குவின் முகத்தில் மாறுதலே ஏற்படாது.

"என்னடி?"

"எல்லாம் சௌக்கியந்தான்.”

“அதென்ன, அப்படி அசுவாரசியமாய்ச் சொல்றே?” ருக்குலின் தந்தை வரும்படி வருகிற வக்கீல். ஆனால் பெண்ணுக்குப் பீஸ் இல்லாமல் வக்காலத்து வாங்கிக் கொள்வார்.

"இதெல்லாம் உனக்கென்னடி? சுவாரசியத்தையும் அசுவாரசியத்தையும் ரொம்பக் கண்டவள் மாதிரி! விசேஷம் இருந்தால் சொல்லமாட்டாளா?”

இந்த அடக்குமுறை தங்கம்மாளுக்குப் பழக்கம். அதற்கு அடி பணிந்துவிடுவதும் அவள் வழக்கம். "எப்படியானும் போங்கோ!” என்று கூறிவிட்டுப் போய் விடுவாள்.

பெண், பிறந்த வீட்டுக்கு வந்ததில் தங்கம்மாளை விடச் சந்தோஷப்பட்டவர் யாரும் இல்லை. ஆசையாக, அருமையாக வந்திருக்கும் பெண்ணுக்கு ஆசார உபசாரம் செய்தாள். ஒரு வேலை செய்ய விடுவதில்லை. ருக்கு வேடிக்கையும் விளையாட்டுமாய்ப் பேசும் போதெல்லாம், அப்படி ஓண்ணும் இதுக்கு அகமுடையானிடம் மனஸ்தாபப்பட்டுக் கொள்ளத் தெரியாது. வெறுமேதான் வீண் கவலை என்று மனசுக்குள் எண்ணமிடுவாள். அந்த எண்ணமே அவளுக்கு எவ்வளவோ ஆறுதலைக் கொடுக்கும். "உனக்கு டொமெட்டோ ரஸமே பிடிக்காதேடி?” என்பாள் பெண்ணைப் பார்த்து.

"அதை ஏன் கேட்கிறே? அவருக்கு டொமெட்டோ ரஸம் இல்லாவிட்டால் சாப்பிட்ட மாதிரியே இருக்காது. இப்போ எனக்கும் அப்படித்தான் பழக்கமாயிடுத்து” என்பாள் ருக்கு.

பேச்சு நெருங்கும். ஒருநாள் நெருங்கியே விட்டது. "அப்படிப்பட்டவனை விட்டுவிட்டுத் திடீர்னு வந்துட்டயே?”

அசம்பாவிதமாக எப்படியோ கேட்டுவிட்டாள் தங்கம்மாள்.

"ஏன் வந்தே என்கிறாயா?”

"ஊஹும். அவனையும் அழைச்சுண்டு ஒரு பத்து நாளைக்கு வந்து இருந்துட்டுப் போகப்படாதோ?”

பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். ருக்கு மௌனம் சாதித்துவிட்டாள். "அதுதான் லீவு கிடைக்கல்லேன்னியே” என்று தங்கம்மாளே ஒரு முடிவு கட்டினாள்.

எவ்வளவோ சந்தர்ப்பங்கள்; எத்தனையோ பேச்சுக்கள். தங்கம்மாள் மனக் கவலைக்குப் பரிகாரமாக ஒன்றுமே நேரவில்லை. எதிர்வீட்டுக் குழந்தைகளைத் தங்கம்மாள் அழைத்துக் கொண்டு வருவாள். "குழந்தையிலே இப்படித்தான் துருதுருன்னு இருந்தே நீ” என்பாள், ஒரு குழந்தையைக் குறிப்பிட்டு, அவள் எதற்கு இப்படிப் பேச ஆரம்பிக்கிறாள் என்பது தெரியும், ருக்குவுக்கு. பேசாமல் சிரித்துக் கொண்டே மாடிக்கு எழுந்து போய் விடுவாள்.

தனியாக இருக்கும்போது, இது என்ன அசட்டுக் கவலை என்று தங்கம்மாளுக்கே ஒவ்வொரு சமயம் தோன்றும். மூன்பெல்லாம் எவ்வளவு ஆனந்தமாய், பத்து வயசு இளமைத் தெம்புடன் இருப்பாளோ அந்த மாதிரி ஆகிவிடுவாள். ஆனால் ஏதாவது ஒன்று வந்து சேரும். கவலைப் பின்னல். மீண்டும் துவங்கிவிடும். 'ஏதானும் இல்லாமல் இருக்காது. வந்து இவ்வளவு நாள் ஆகிறதே இல்லாவிட்டால் இவளும் இப்படி இருக்கமாட்டாள். அவனும் இப்படி இருக்கமாட்டான்' என்று சங்கடம் உண்டாகும். அந்த 'இப்படி' என்றால் என்ன என்பது அவளுக்கே தெரியாது. ருக்குவின் தந்தையோ ஒரு கவலை இல்லாத ஆத்மா. இது அவளுக்கு மட்டும் உண்டான ஒரு தனிப்பிரச்சனை. இதில் எப்படியோ வேறு யாருக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விட்டது.

'டண், டண்'-மணி இரண்டு. தங்கம்மாள் கண் விழித்துப் பார்த்தாள். நிலா வெளிச்சம் அடியோடு மறைந்து இருள் சூழ்ந்திருந்தது. 'ஙொய்' , என்று எங்கேயோ கரிச்சான் ஒன்று கத்திக் கொண்டேயிருந்தது. தங்கம்மாள் கண்களை மூடிக்கொண்டாள். தூக்கம் எங்கே? குருட்டு யோசனைதான்; கவலைதான்.

விளையாட்டுப் போல ருக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. 'கைச் செலவுக்கு இருக்கட்டும்' என்று ஒரு வரியுடன் ஐம்பது ரூபாய் மணியார்டர் ருக்குவின் பெயருக்கு வந்திருந்தது.

"பணம் எதுக்கு? கேட்டிருந்தயா?" என்றாள் தங்கம்மாள்.

"அவர் குணமே இப்படித்தான்” என்றாள் ருக்கு.

"வறதாக போறதாக ஒண்ணும் எழுதல்லியா?”

ருக்கு விழித்துப் பார்த்தாள், சொந்த அம்மாவா இப்படிப் பேசுகிறாள் என்ற பாவணை. உடனே புறப்பட்டு வந்து சேர் என்று எழுதியிருந்தால் தங்கம்மாள் அவனை ஊருக்கு அனுப்பிவிடச் சம்மதிப்பாளா, என்ன? ஆனால், அன்பாக, ஆசையாக ஒரு வார்த்தை! அது எவ்வளவு விச்ராந்தியாக இருக்கும் மனசுக்கு! விட்டேற்றியாய் இப்படி யாராது பெண்டாட்டிக்கு எழுதுவதுண்டோ?

போதும் போததற்கு அன்று சாயங்காலமே ஊரிலிருந்து கடைசி வீட்டு விசாலம் வந்திருந்தாள். அடுத்த தெருவில்தான் அவளும் கணவனுடன் இருந்து வருகிறாள். "ஏண்டி அம்மா, இவ அகத்துக்காரரைப் பார்த்தியோ?”. என்று தங்கம்மாளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“பார்க்காமல் என்ன? அந்த வழியாகத்தானே நாங்க பீச்கக்குத் தினமும் போகணும்! இவர் கூடக் கேட்டார்; 'ஊருக்கு அனுப்பிச்சுட்டு நிம்மதியாய் இருக்கேன்'னு சொன்னாராம். என்ன நிம்மதி, சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டுண்டு?” என்றாள் விசாலம்.

தங்கம்மாளுக்கு அதற்கு மேல் எதுவும் கேட்கப் பிடிக்கவில்லை, கேட்கவேண்டும் என்று துடிப்புத்தான். ஆனால் ருக்குவிடம் பயந்து கொண்டு பேசாமல் இருந்துவிட்டாள். ருக்குவுக்குத் தெரியும். நிம்மதி எந்த விதத்தில் என்று. அவளோ அதைக் கேட்டுக் கொண்டு மௌனமாய், அமைதியாய், சிறிது அடக்கமாய்க் கூட உட்கார்ந்து கொண்டிருந்தாள், தங்கம்மாளுக்குப் பேச என்ன வாய் இருக்கிறது?

நாள் ஓடுவதே தெரியாமல் ருக்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. தங்கம்மாளின் மன அவஸ்தை கட்டுக்கு அடங்காமல் போய்க் கொஞ்சம் பழகிக் கூடப் போய்விட்டது. அவள் தன் கணவரைப் பார்த்து, அந்தப் பெண்ணுக்கு நல்ல தூக்கமே இல்லை. நீங்களும் பேசாமல் இருக்கேளே?” என்றாள்.

வக்கீலுக்கு இதெல்லாம் அற்ப விவகாரங்கள். விசாரணை ஒத்திப்போடச் சமாதானம் சொல்வது அவருக்குத் தண்ணீர் பட்ட பாடு. "வந்து நாளாச்சோ இல்லையோ; சிறிசுகள் அப்படித்தான்.” "இப்பொன்னா நாளாச்சு; வந்ததிலேருந்து அப்படித்தான் இருக்கா”

"வந்த புதிசு அப்போ. தனியாக வந்ததும் அப்படித்தான் இருக்கும்.”

எல்லாம் தெரிஞ்சதுபோலத்தான்!' என்று எண்ணிக்கொண்டே தங்கம்மாள் போய்விட்டாள். தன்னைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டாமல் இருப்பது அவளுக்கு மிகுந்த கவலையாய் இருந்தது.

திடீரென்று நாலைந்து நாள் முன்னதாக ருக்கு அவளிடம் வந்து, "அம்மா, அவர் வரப்போறார் போலிருக்கு” என்றாள்.

“யாரு, உன் அகமுடையானா?" “ஆமாம்.” "அழைச்சிண்டு போறதுக்கா?” "ஆமாம். திருப்திதானே ?” திருப்தி என்ற வார்த்தையை அழுத்தமாகக் கூறினாள்.

தங்கம்மாள் முகம் பேயறைந்தது போல ஆயிற்று. "என்னடியம்மா திருப்தி எனக்கு, உன்னை ஊருக்கு விரட்டறதிலே? நீ இங்கே இருக்கிறது எங்களுக்கெல்லாம் கொள்ளைத் திருப்திதான். ஆனால் பூவும் மணமுமா, புருஷனோடே இருக்காங்கிறதைக் கேட்டா அதைவிடத் திருப்தி இல்லையா?” என்றாள், மென்று விழுங்கிக் கொண்டே.

ஆனால், அன்று காலையில் வேணுவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. “லீவு கிடைத்ததும் வருகிறேன்.”

"இது என்ன, உன் அகமுடையானுக்கு, மொட்டைத்தாத்தாதன் குட்டையிலே விழுந்தான் என்கிறாப்போல அடியும் இல்லாமே முடிவும் இல்லாமே இரண்டு வரி! அழைச்சிண்டு வந்த ரங்கனுக்கு மட்டும் கொண்டுவிடத் தெரியாதா?” என்றாள். மீண்டும் அவளை அந்தக் கடிதம் பழைய கவலைக்குள் ஆழ்த்திவிட்டது.

அறையினுள், 'ணங்...' என்று ஓசை கேட்டது. "ருக்கு!" "ம்".

"என்ன வேணும்!” "தாகமாய் இருந்தது.” ருக்மிணி வழக்கம் போலக் கலகலப்பாகத்தான் நடந்து கொண்டாள். அவள் மனத்தில் தங்கம்மாள் கூறிய வார்த்தைகள் உறுத்திக் கொண்டே இருந்தன. வேணுமீது தான் அவளுக்குக் கோபம் கோபமாய் வந்தது. பதிலே போடாமல் இருந்தாள். தினம் பத்தரை மணி ஆகும் போதெல்லாம் தபால்காரன் வரும் திசையை நோக்கி அவள் கண்கள் மட்டும் வட்டமிடத் தவறுவதேயில்லை.

"தபால் இல்லையே? என்று ஏதோ வேண்டாத தோரணையில் கேட்பாள்.

"இல்லேம்மா" என்று ஏதோ ஆறுதலாகச் சொல்வது போன்ற பாவத்தில் தபால்காரன் பதிலளிப்பான்.

"அவர் ஏன் போடப் போகிறார்?” என்று அவள் தனக்குள் கூறிக் கொள்வாள்.

பத்து நாட்கள் சென்றன. திடீரென்று வேணுவிடமிருந்து கடிதம் வந்தது. "லீவு கிடைக்கவில்லை. உடனே ரங்கனை அழைத்துக் கொண்டு வந்து சேரவேண்டும்.”

ருக்கு கடிதத்தை அசுவாரசியமாய் மடித்துப் போட்டாள். தங்கம்மாளுக்குத் திருப்தி பிறந்தது. "அவன்தான் வரச் சொல்லி எழுதியிருக்கான் போலிருக்கே. ஏன் வருத்தப்படறே?” என்று கேட்டாள்.

"ரங்கன் என்ன வச்ச ஆளா, அழைச்சிண்டு வறதுக்கும் கொண்டு போய் விடறதுக்கும்?" என்றாள் ருக்கு ஆத்திரத்துடன். பெண்ணின் இந்தக் கோபம் தங்கம்மாளுக்கும் அர்த்தமாகவே இல்லை.

பல மாதங்களுக்குப் பிறகு தன் பெண் பிரியமாய் இரண்டு மாதம் தன்னிடம் வந்திருக்கிறாளே என்ற ஆசையே சப்பிட்டுவிட்டது தங்கம்மாளுக்கு.

“பதில் போட வேண்டாமா?” "ஒண்ணும் வேண்டாம்.” மேலும் ஒரு வாரம் சென்றது. தந்தி வந்தது; "இரண்டு நாளில் எதிர்பார்க்கிறேன்." தங்கம்மாளுக்குத்தான் தவிப்பாய் இருந்தது. கிணற்றில் கல் போட்டது போல இருந்தாள் ருக்கு.

"தந்தி அடிச்சிருக்கானே” என்றாள் தங்கம்மாள். கிளம்பு என்று பெண்ணைப் பார்த்துத் தைரியமாய் அவளால். சொல்ல முடியவில்லை. எப்படிச் சொல்வது?

"உடம்பு சரியாய் இல்லை. சரியாய் ஆனதும் உடனே வருகிறேன்.” என்று ருக்கு யாருக்கும் தெரியாமல் பதில் எழுதிப் போட்டாள். அப்பாவிடம், “இன்னும் பத்து நாள் போகட்டுமே, என்ன அவசரம்?” என்று வலியச் சென்று கூறினாள். "ஆமாம், ஆமாம்; போகட்டும்” என்றார் அவரும்.

"நல்ல அப்பா, நல்ல பொண்ணு! நெஞ்சழுத்தத்தில் ஒன்றுக்கொன்று சளையில்லை” என்று தோன்றிற்று தாய்க்கு, ஊருக்குப் போகவேண்டும் என்ற பிரஸ்தாபத்தையே காணவில்லை.

"என்னமோ ஏதோ, பகவானே! என் மனசு குளிர எல்லாம் நடக்கணும். உன் உடல் குளிரப் பாலாபிஷேகம் பண்ணுகிறேன்” என்று அந்தர்யாமியைக் குறித்து வேண்டிக் கொண்டாள்.

ருக்கு மேலுக்குப் பிகுவாய் இருந்தாள். அவள் நடவடிக்கையில் ஒரு தளர்ச்சி இருந்தது. சிடு சிடு என்று விரைவில் சீற்றங்கொள்ள ஆரம்பித்தாள். தாயின் உபசாரமே அவளுக்குக் கசந்தது. வேண்டா வெறுப்பாக அவள் தாயிடம் தலை பின்னிக் கொள்ள உட்காருவாள். என்ன அம்மா தலையைப் போட்டு வெட்டறே?” என்று உடனே சிணுங்குவாள்.

காற்று அடிக்கவில்லை என்று கோபம் வந்தது. பேய்க் காற்றாக வீசினாலும் கோபம் வந்தது. தாகமாய் இருந்தால் கோபம். தூக்கம் வராவிட்டால் கோபம். சலங்கை ஒலியுடன் வண்டிகள் ஓடினால் சலிப்பு. வண்டிச் சப்தமே கேட்காவிட்டால் ஒரே ஏக்கம்.

“எதிர்பார்க்கிறாராம்; எதிர் பார்க்கட்டுமே!” பல தடவை இப்படித் தனக்குள் அவள் கூறிக் கொண்டாள். தானும் இரண்டே வரியில் பதில் எழுதிப் போட்டு விட்டதில் அவளுக்கு உள்ளுறத் திருப்தி. ஆனால் உடம்பு தனக்கு எப்போது சரியாகும்? அது எப்போது முதல் சரியாய் இல்லாமல் போக ஆரம்பித்தது?

'வந்ததிலேயிருந்தா?'

நிலா அன்று பால்போலக் காய்ந்து கொண்டிருந்தது. வேண்டிய அளவு காற்றும் வீசிக் கொண்டிருந்தது. ஆனாலும் ருக்குவுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. வந்ததிலேயிருந்து உடம்பு சரியாய் இல்லை என்று சொல்வது பிசகு; மனசு சரியாய் இல்லை என்பது தான் சரி என்று எண்ணமிட்டாள் அவள்.

வேணு மிகவும் அழுத்தக்காரன் என்பது பிரசித்தம். ஆனால் அவள் மட்டும்? தக்காளிப் பழ ரசம் பழக்கமானதைப் போலத்தான் அந்த அழுத்தம் அவனிடம் கற்றுப் பாடமானது தான்.ஏதோ வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத மனஸ்தாபம். "யார் வீம்புதான் செல்லுகிறது, பார்ப்போமே!' என்று நிச்சயம் தான் தோற்றுவிட்டதாக ருக்கு உணர்ந்தாள். பெண்களாகப் பிறந்தாலே தோல்விதான்.

தொலைவிலே, தெருவிலே முனிசிபாலிடி ஆட்சியை எதிர்த்து ஒரு சொறிநாய் ஊளையிட்டது. அதைக்கேட்டு மற்றொன்று 'வாள் வாள்' என்று குலைத்தது. அரை மணி நேரமாய்ச் சத்தம். அடங்கவே இல்லை. ருக்கு நிலவையே கவனித்தபடி படுத்துக் கொண்டிருந்தாள். தூக்கம் வந்தால்தானே, இந்தச் சத்தத்தில் கலைந்து போவதற்கு?

"ருக்கு!" என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தாள் தங்கம்மாள்.

“உம்” என்றாள் ருக்கு. "இந்தச் சத்தத்திலே முழிச்சுண்டயா?” "தூக்கமே வரல்லேம்மா; ஊருக்குப் போனாத்தான் இனிமே" என்றாள் ருக்கு வாயை விட்டு. தங்கம்மாள் மனசு கரைந்து ஓடிவிட்டது. "அசடே! நாளைக்கே போகலாம்; தூங்கு” என்றாள். 'ஜல் ஜல்' என்று தெருவில் வண்டிகளின் சப்தம்.

"பன்னிரண்டரை மணி வண்டி வந்து விட்டது போலிருக்கு. தாகமாய் இருந்தால் தண்ணீரைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கு” என்றாள் தங்கம்மாள்.

வழக்கம்போல ருக்கு தண்ணீர் எடுக்கும் பாவனையில் வண்டிகளைப் பார்க்க ஜன்னலருகில் வந்து நின்றாள். கீழே வாசற்படியைத் தாண்டாமல் ஒரு வண்டி வந்து நின்றது.

"அம்மா, இங்கே வாயேன்! வாசல்லே வண்டி வந்து நிக்கறது. அவர்தான் போலிருக்கு. ஆமாம், அவர்தான்! போ ஜல்தியாய்!” என்று விரட்டினாள். தடதடவென்று விளக்குகளைப் போட்டாள். 'லீவு கிடைத்து விட்டது போலிருக்கு' என்று கண்ணாடியின் முன் வளைய வந்து நின்றாள்.

கூச்சமும் குறுகுறுப்பும் முந்த அவள் மாடிப்படியை விட்டுக் கதவு ஓரமாய் வந்து தயங்கி நின்றாள்.