உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சைச் சிறுகதைகள்/கோபுரவிளக்கு

விக்கிமூலம் இலிருந்து

தி. ஜானகிராமன்


ஞ்சை மாவட்டம் தேவங்குடியில் பிறந்த தி. ஜானகிராமன் ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு, ஆசிரியப்பயிற்சி, வடமொழி அறிவு, சிறந்த இசைஞானம், இத்தனையும் பொருந்தியவர். தமிழ் எழுத்துலகில் நாவல், சிறுகதை இரண்டு துறையிலும் சாதனை படைத்திருக்கிறார்.

"கு.ப.ரா வின் அடிச்சுவட்டில் வந்த நான்கு பேரில் இவருடைய சிறுகதைப்பாணி மற்றவர்களை விட மிகவும் தெளிவாகக் காணப்படுகிறது. இவருடைய கதைகளில் பல, வடிவ முழுமை பெற்றிருக்கின்றன. வடிவத்தை மீறிய சில கதைகள் உள்ளடக்கத்தின் சிறப்பினாலும் கதை சொல்லும் நடையினாலும் வாசகர்களைக் கவருகின்றன. வாழ்வில் தம்மையறியாமல் அசட்டுத்தனம் செய்யும் மனிதர்களை அனுதாபத்தோடு பார்த்தும், அத்தகையவர்களைப் பயன்படுத்தும் சாமர்த்தியசாலிகளைப் பரிகாசம் செய்து குறைகளை எடுத்துக்காட்டியும் கதை மாந்தர்களைப் படைப்பதில் ஜானகிராமன் சிறந்த வெற்றி பெற்றிருக்கிறார். ஆண், பெண் உறவைப் பொறுத்தமட்டில் இவருடைய கதைகளில் கு.ப.ரா. வின் பாதிப்பு அதிகமாகக் காண முடிகிறது. இவருடைய கதைகளில் காணும் மற்றொரு சிறப்பு, பாத்திரங்களின் உரையாடலின் நடுவே புகுந்தும் சிறு மௌன இடைவெளிகளின் மூலம் வெறும் சொற்களால் முடியாத ஆழமான -- அனுபவத்தை வெளிப்படுத்துவதாகும். இவர் கதைகளில் நமக்குப் பழக்கமான பாத்திர அச்சுகள், மனித இயல்பை, நமக்குத் தெரிந்த முறையில் வெளியிடுவதைக் காணலாம்” என்று சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.

"ஜானகிராமனை நாவலாசிரியராக - மதிப்பதைவிடச் சிறுகதை ஆசிரியராகக் கருதுவதுதான் விமரிசகனான எனக்கு சரியென்று தோன்றுகிறது...” என்று க.நா.சு அபிப்பிராயப்படுவது ஒருபக்கப் பார்வை என்று அவரின் ஒட்டுமொத்த படைப்புகளை படிக்கிறபோது தெரியவரும்.

கோபுரவிளக்கு


திடீரென்று கண்ணைக் கட்டிவிட்டாற்போல் இருந்தது; அவ்வளவு இருட்டு, கிழக்குத் தெருவின் வெளிச்சத்தில் நடந்து வந்ததால் அந்த திடீர் இருட்டு குகை இருட்டாக காலைத் தட்டிற்று. சந்நிதித் தெரு முழுதும் நிலவொளி பரப்பும் கோவில் கோபுரத்தின் மெர்க்குரி விளக்கு அவிந்து கிடந்தது. நட்சத்திரங்களின் பின்னணியில் கோபுரம் கறுத்து உயர்ந்து நின்றது. கோயிலுக்குள் நீண்டு ஒளிரும் விளக்கு வரிசையில் லிங்கத்தைச் சுற்றிய ஒளிவட்டமும் காணவில்லை. கோவில் பூட்டித்தான் கிடக்கவேண்டும். ஏதாவது நாயை மிதித்துவிடப் போகிறோமே என்ற கவலையில் தட்டித் தடவி வீட்டு வாசலை அடைந்தேன்.

"பூஜை இல்லேன்னா கதவை அடைச்சுக்கட்டும். இந்த விளக்கைக் கூடவா அணைச்சுடணும்?" என்று எதிர் வீட்டு பந்தலிலிருந்து குரல் கேட்டது.

"பஞ்சாயத்தும் கேட்பாரில்லாத நாட்டாமயாப் போயிடுத்து. இருக்கிறது ஒரு விளக்கு தெருவுக்கு, அதுவும் ப்யூசாயிடுத்து.. ஒரு வாரமாச்சு, நாதியைக் காணோம்”- என்று நாட்டு வைத்தியரின் குரல் கீழண்டை வீட்டு வாசலிலிருந்து புலம்பிற்று.

"கோயிலில் விளக்கு எரிஞ்சுண்டிருக்கும். இந்த பஞ்சாயத்து. பல்பு எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்னு மினுங்கிண்டிருக்கும், மத்தியானத்திலே சந்திரன் இருக்கிற மாதிரி. இன்னிக்கு சூரியனே அவிஞ்சு போயிட்டான். மானேஜர் இதை அணைச்சிருக்க வாண்டாம். யாராவது வந்து சொல்லட்டும்னு இருக்கார் போலிருக்கு...”

அந்த 'யாராவது'க்கு அவரைத் தவிர யாராவது என்றுதான் அர்த்தம்! இந்த அற்ப விஷயத்திற்காக மானேஜரை போய்ப் பார்க்கும் கௌரவத்தை அவர் தலையில் போட்டுக் கொள்ளமாட்டார். நாட்டு வைத்தியர் அவரைவிட பெரிய மனிதர். நாட்டுவைத்தியம் அவருக்கு பொழுதுபோக்கு. 'நான் இருக்கிறேன், சுனச்சேபன். எனக்கு இதைவிட என்ன வேலை? பார்த்தால் போகிறது.'

இரண்டாம் கால பூஜை. மேளமும் சங்கும் தாரையுமாக அமர்க்களப்படுகிற அந்த வேளையில். இன்று இந்த நிசப்தம் நிலவுகிறது. யாருக்கு சீட்டு கிழிந்துவிட்டதோ?

கதவைத் தட்டினேன். கௌரி வந்து திறந்தாள்.

"ஏன் கோவில் பூட்டிக் கிடக்கு?"

"எல்லாம் விசேஷம்தான்" என்று கதவைத் தாழிட்டாள் அவள்.

"என்ன ...?"

"தெற்கு வீதியிலே யாரோ செத்துப் போயிட்டாளாம்.”

"யாராம்?"

"எல்லாம் உங்க கதாநாயகிதான்."

"என் கதாநாயகியா? அப்படி ஒருத்தரும் இருக்கக்கூடியதாக தெரியலியே!"

"செத்துப்போன அப்புறம்தானே இந்த மாதிரி மனுஷா எல்லாம்-- உங்களுக்கு கதாநாயகி ஆகிற வழக்கமாகச்சேன்னு சொன்னேன்..."

"எந்த மாதிரி மனுஷா?"

"தருமு மாதிரி."

"தருமு யாரு?"

"துர்க்கை அம்மன்கிட்ட வரம் கேட்பாள்னு சொன்னேளே, அந்த ஜில்தான்..."

"ஆ...அவளா!"

"என்ன மூச்சை போட்டுட்டேள்?"

மூர்ச்சை போடக் கூடிய செய்திதான்... தர்மூவா செத்துப் பேய் விட்டாள்? முந்தாநாள் கூட கோவிலிலே பார்த்தேன். என்னைக் கண்டதும், நாணத்திலும் பயத்திலும் விறுவிறுவென்று நடையைக் கட்டிவிட்டாள்! இன்னும் கண் முன்னே இருக்கிறது.

"முந்தாநாள் ராத்திரி கூட கோவிலிலே பார்த்தேனே!".

"பார்த்தா என்ன? நாலு மணிக்கு பார்த்தாவாளை நாலே கால் மணிக்கு பார்க்க முடியவில்லை; மாரடைச்சு பொத்துனு விழுந்து பிராணன் போய் விடுகிறது."

"என்ன உடம்பாம்?"

"என்ன உடம்பு இருக்கும் இதுகளுக்கு? பாம்புக்காரனுக்கு பாம்புதான் எமன், புலியை வச்சு ஆட்றவனை புலி தான் விழுங்கும்."

நான் சமைந்து போய் உட்கார்ந்தேன். தருமுவின் மெல்லிய உருவம் நிழலாடிக் கொண்டிருந்தது.

முந்தாநாள், இரண்டாங்கால பூஜை முடிந்ததும் கோவிலுக்குப் போயிருந்தபோது, அவள் நிகு நிகு என்று தீட்டித் தேய்த்த கத்தி மாதிரி நடந்து போய்க் கொண்டிருந்தாள். கோயிலில் ஒரு பிராணி இல்லை. நுழையும்போதே வெளிப் பிரகாரம் வெறிச்சென்று கிடந்தது. நந்திக்கருகில் அர்த்த ஜாமத்துக்காக காத்துக் கொண்டிருந்த இரண்டு ஆச்சிகள், தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். இரண்டு பேருக்கும் முண்டனம் செய்து முக்காடிட்ட சிரசுகள். பழுத்துப் போன வெள்ளைப் புடவை. நெற்றியில் விபூதி. பல்லும் பனங்காயுமாக மூஞ்சிகள். தோலில் சுருக்கம், பட்டினியும், பசியுமாக காயக் கிலேசம் செய்கிறார்களோ என்னமோ, இரண்டுபேரும்! இல்லாவிட்டால் ஐம்பது வயசுக்குள், இத்தனை அசதியும் சோர்வும் வருவானேன்? மனிதப் பிறவி எடுத்து சுகத்தில் எள்ளளவு கூட காணாத ஜன்மங்கள் இரண்டும், மங்கைப் பருவத்திற்கு முன்னாலேயே குறைபட்டு போனவர்களாம். பரஸ்பர அனுதாபத்தினால் ஒரு சிநேகம். இரண்டு பேரும் சேர்ந்து தான் வருவார்கள்; போவார்கள்- விருப்பு வெறுப்பு இல்லாத மரக்கட்டைகள்; உணர்ச்சி மாய்ந்துபோன மரப் பின் உருவாக, சாவை எதிர்நோக்கிக் கொண்டிருந்த கிழங்கள்.

அவர்களைக் கடந்து போனதும், தர்மு உள்ளே சிவ சன்னதியில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

"உன்னைவிட இந்த இரண்டும் எவ்வளவோ கொடுத்து வைத்தவை. முக்காடிட்டுக் கொள்கிற பாக்யமாவது இவர்களுக்கு இருக்கிறது. நீ வெறும் சுமங்கலிக்கட்டை" என்று தர்முவை நினைத்து என் நெஞ்சு குரல் கொடுத்தது.

நான் உள்ளே போனதும் சட்டென்று திரும்பி என்னைப் பார்த்து விட்டாள் அவள். உடனே வேதனையையும், வெட்கத்தையும் ஒரு புன்சிரிப்பில் புதைத்துக் கொண்டு 'விர்'ரென்று அந்த இடத்தை விட்டுப் பறந்து விட்டாள். கட்டுக்கூந்தல் அவளுடைய பிடரியில் புரண்டு கொண்டிருந்தது. முன் தலை பக்கவாட்டில், ஒன்றோடும் சேராமல், பறங்கிக் கொடியின் பற்றுச் சுருளைப்போல இரண்டு சுருள்கள் அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஆடி அதிர்ந்து கொண்டே வந்தன. அவளை கறுப்பு என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அட்டைக்கரி அல்ல. மெல்லிய உயரமான தேகம். கையில் நாலைந்து ஜோடி இருக்கும். மஞ்சளும் நீலமும் கலந்த ரப்பர் வளையல்கள். கழுத்தில் முலாம் தோய்ந்த சங்கிலி. அதுவும் முலாம் தேய்ந்து பல்லை இளித்தது. ஒரு பூப்போட்ட வாயில் புடவை. பளபளவென்று தங்க நிறத்தில் கைக்கு வழுவழுக்கும் செயற்கைபட்டு ரவிக்கை. நிகு நிகுவென்ற ஒரு புது மெருகு அந்த உடல் முழுதும் ஊடுருவி ஒளிர்ந்தது.

என்னைக் கண்டுவிட்டு அவள் வெட்கி ஓடியதற்குக் காரணம், இது. இரண்டு மாதத்துக்கு முன் இரண்டாங்கால பூஜைக்குப் பிறகு கோவிலுக்குப் போன போது நடந்தது. பிரகாரத்தை வலம் வருவதற்காகச் சென்றேன். துர்க்கை அம்மனுக்கு முன்னால் நின்று இந்த தர்மு வேண்டிக் கொண்டிருந்தாள். அழும் குரலில். நான் வந்ததை கவனிக்காத அளவுக்கு அவ்வளவு சோகம் அவள் மனத்தையும் புலன்களையும் மறைத்திருக்கத்தான் வேண்டும்.

"ஈச்வரி! இரண்டு நாளாக வயிறு காயறது. இன்னிக்காவது கண்ணைத் திறந்து பார்க்கணும். தாராள மனசுள்ளவனா... ஒருத்தனைக் கொண்டு விட்டுத் தொலைச்சா என்னவாம்...?"

கேட்டுக்கொண்டே போனேன். இரண்டு விநாடி கழித்து சட்டென்று என்னைப் பார்த்தவள், மருண்டு நின்றாள். என்ன செய்ய? வேண்டுமென்று ஒற்றுக் கேட்கவில்லையே!

"ஈச்வரி, என் தங்கையை காப்பாற்றிப்டு, தாராள மனசுள்ளவனா ஒருத்தனை பார்த்து அவளுக்கு முடிச்சூடு, தாயே" என்று தயங்கித் தயங்கி வேண்டுகோள் முடிந்தது.

உண்மையான முடிவாக இருந்தால் குரலில் இவ்வளவு அசடு தட்டுவானேன்? பயந்துகொண்டு அவசர அவசரமாக அவள் தான் ஓடுவானேன்?

அவள் போனதும், துர்க்கை அம்மனைப் பார்த்துக் கொண்டே நின்றேன். கல்லில் வடிந்த அந்தப் புன்முறுவலுக்கு என்ன பொருள்?

'மகிஷாசுரனை மர்த்தனம் - செய்கிற எனக்கு இந்த உத்தியோகம் கூடவா? இந்த பிரார்த்தனையைக் கொடுத்து விடலாமா...? கடைசியில் தங்கை கிங்களை என்று சொன்னது உன்னை ஏமாற்றத்தான், என்னை ஏமாற்ற இல்லை... ஆனால், நீ கூட ஏமாறவில்லை?'

என் உள்ளம் கிளர்ந்து புகைந்தது, கோபம் வந்தது. யார்மேல் என்றுதான் தெரிய வில்லை. கொஞ்சம் தொண்டையைக் கூட அடைத்தது. வெளியிலே இந்த வேண்டுகோளை நினைத்து யாரும் எதுவும் பதைபதைப்பதாக காணவில்லை. துர்க்கைக்கு முன் மினுங்கின விளக்கு சாந்தமர்க அசையாமல் மினுங்கிற்று. தட்சிணாமூர்த்தி மௌனமாக உட்கார்ந்திருந்தார்! கோயில் மானேஜர் நிமிராமல் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். மானேஜர் தலைக்குமேல் தொங்கின கூண்டிற்குள்ளே கிளி கண்ணை மூடி தவத்தில் இருந்தது.

வீட்டுக்கு வந்ததும், கௌரியிடம் சொன்னேன்.

"தெய்வம் நல்ல புத்தி கொடுக்கும், ஞானம் கொடுக்கும், விவேகம் கொடுக்கும். இப்ப இதுவும் கொடுக்கும்னு தெரியறது-” என்று என் படபடப்பைக் கிண்டல் செய்தாள் கௌரி.

"ஏன், கொடுக்கப்படாதா?”

"கொடுக்கனும்னுதான் சொல்றேன். எந்த காரியத்துக்கும் தெய்வபலம் வேணும். திருடனுக்குக் கூட ஒரு தெய்வம் உண்டு. அந்த மாதிரி, தேவடியாளுக்கு ஒரு தெய்வம் வேண்டாமா! நல்ல ஆளா கொண்டு வந்து விடுன்னா விடத்தானே வேணும் அது?"

"அந்தப் பொண்ணு அழுதுண்டே வேண்டிண்டுது. கொஞ்சம் மனசுக்குள்ளேயே வேண்டிக்கப்படாதா? தன்னை அறியாமல் கஷ்டம் பொறுக்காமல் புலம்பியிருக்கு. என் காதிலே விழுந்து, உன் காதிலேயும் விழுந்து சிரிப்பா சிரிக்கணும்னு இருக்கு! வேறென்ன?"

“நீங்க வர்றதை பார்த்துட்டுதான் அப்படிக் கொஞ்சம் உரக்க வேண்டிட்டாளோ என்னமோ?

"அப்படி இருந்திருந்தா உன்னளவு சமாசாரம் எட்டி விடுமா என்ன?"

"பேஷ் அவ்வளவு கெட்டிக்காரரா நீங்க? வாஸ்தவம் தான். உங்களுக்கு தாராள மனசுதான். கையிலேதான் காசு இருக்கிறதில்லை. அதனாலேதான் அனுதாபம் இங்கே வந்து அருள் பிரவாகமாக ஓடறது!"

"போருமே! நீ பேசறது வேண்டியிருக்கலெ. இங்கிதம் தெரியாம என்ன பேச்சு இது?”

"யார் அந்தப் பொண்ணு?"

"யாரோ தெரியலெ. கறுப்பா உசரமா சுருட்டை மயிரா இருக்கு. முகம் கலையா இருக்கு...

"கறுப்பா உசரமாவா? "ஆமாம்"

"பல்லு கோணலா இருக்குமோ?" "அதென்னமோ பல்லை பார்க்கலை நான்.

"யாரு அது? வேடிக்கையா இருக்கே!”

"வாசலோடு கூட அடிக்கடி போகும்.”

மறுநாளைக்கு அந்தப் பெண் வாசலோடு போனாள். கூட அவள் தாய் போய்க் கொண்டிருந்தாள். அவசர அவசரமாக கௌரியைக் கூப்பிட்டேன். அவள் வருவதற்குள் ஜன்னல் கோணத்தை விட்டு அவர்கள் போய்விட்டார்கள். வாசலுக்கு ஓடிப்போய்ப் பார்க்கச் சொன்னேன்.

கௌரி ஒரு நிமிடம் கழித்து வந்தாள்.

"இதுவா? இது கிரிசை கெட்டதுன்னா!. இதுக்குத்தானா இத்தனை புலம்பினேள்?”

"யாரது? உனக்குத் தெரியுமோ?"

"தெரியறது என்ன? குளம், சந்தி, கடைத்தெரு, எங்கே பார்த்தாலும் நிக்றதே. காலமே கிடையாது. மத்தியானம் கிடையாது. ராத்திரி கிடையாது. எடுப்பட்ட குடும்பம்!"

"அதுதான் தெரியறதே அவா யாருன்னு கேக்கறேன்.”

"யாருன்னா? முருங்கைக்காயின்னா முருங்கைக்காய் தான். எந்த ஊரு.? எந்தக் கொல்லை- இதெல்லாமா கேக்கணும்?"

"இது முருங்கைக்காயா?

"முருங்கைக்காய் தான். வேணும்னா நீங்க போய் விசாரிச்சு தெரிஞ்சுக்குங்களேன். இந்த வம்பு தும்பெல்லாம் எழுதி உங்களுக்கு காசாப் பண்ணனும். அதுதான் சீனு மாமா இருக்காரே, அக்கப்போர் ஆபீசர். அவரைக் கேட்டாச் சொல்றார்.”

நாலைந்து நாள் கழித்து சீனு ஐயரின் கடையில் உக்கார்ந்திருந்தபோது, தாயும் பெண்ணும் ஒருவர் பின் ஒருவராய்ப் போவதைக் காட்டிக் கேட்டேன்; "இது யார் சார்?"

"தெற்கு வீதியிலே இருக்கா. ஒரு தினுசு!"

"அப்படீன்னா ?”

"நான் நேரே பார்க்லை சார். சொல்லிக்கிறா.

"என்ன சொல்லிக்கிறா?"

"ஒண்ணுன்னா பத்து சொல்லும் ஊரு. நானும் சரியா விசாரிக்காம சொல்லமாட்டேன்.”

"நீங்க இன்னும் ஒண்ணுமே சொல்லலியே!”

"என்னத்தைச் சொல்றதாம். எல்லாம் அதுதான். வேறே. என்ன?"

"எது?"

"மந்திரச் சாமா மந்திரச் சாமான்னு ஒருத்தன் இருந்தான். பஞ்சாங்கக்காரன். பொல்லாதவன். ஆனால், மகா உபகாரி. ரொம்ப நீக்குப் போக்குத் தெரிஞ்சவன். நன்னா பேசுவான். எட்டுக் கண்ணும் விட்டெறிஞ்சுது. மில்லுச் செட்டியாருக்கெல்லாம் அவன் சொன்னா வேதவாக்கு. அவன் பொண்ணுதான் இது.

"அவன் பொண்டாட்டிதான் இந்த 'விடோ'. அவன் ஜோசியம் சொன்னான்னா ரிஷிவாக்கு மாதிரிதான். இன்ன வருஷம், இன்னமாசம், இன்ன தேதி - இத்தனையாவது மணிக்கு இன்னது நடக்கும்னு பிரம்மதண்டத்தை தலையில வச்சாப்போலச் சொல்லுவான். அப்படியே ஒரு விநாடி பிசகாமல் நடக்கும். இந்தக் காவேரி மேற்கு முகமாப் போனாலும் போகும். அவன் சொல்றது பிசகாது. பாம்புகடி, தேள் கடிக்கு மந்திரிப்பான். ஆகாசத்துக்கும், பூமிக்கும் குதிச்சிண்டு வருவான். 'தேள் கடிச்சுதா? என்னது? உன்னையா தேள் கடிச்சுது?' என்பான் சாமா சிரிச்சுண்டே. 'சரியாப் போயிடுத்தே. எங்கே கொட்டித்துன்னே தெரியலியேன்னு' திரும்பிப் போயிடுவான் வந்தவன். சாமா பிசாசு கூட ஓட்டுவான். நடத்தைதான் கொஞ்சம் போராது. பூர்வீகமா ஒண்ணரை வேலி சர்வமானிய சொத்து இருந்தது. எல்லாத்தையும் தொலைச்சான். நாற்பது வயசுக்கப்புறம் திடீர்னு பாரிச வாயு வந்து ஒரு பக்கம் பூரா சுவாதீனமில்லாம போயிட்டுது. ஏழு வருஷம் படுத்த படுக்கையாகக் கிடந்தான். சாப்பாட்டுக்கு வழி இல்லே. பாங்கியிலே நானூறு, ஐநூறு போட்டிருந்தான். இதோ போறதே இந்த பொண்ணு கல்யாணத்துக்கு செலவழிஞ்சு போச்சு. என்ன செய்யறது? சாப்பிட்டாகணுமே! அவன் பொண்டாட்டி அவன் இருக்கிறபோதே இப்படி ஆரம்பிச்சுட்டா. இந்தப் பொண்ணோடு ஆம்படையானுக்கு கல்யாணமாகி நாலு மாசம் கழிச்சுத்தான் இதெல்லாம் தெரிஞ்சுது. அழைச்சு வச்சுண்டிருந்தான் மதுரையிலே. சமாசாரம் தெரிஞ்ச உடனே அடிச்சு விரட்டிப்புட்டான். தாயார் அப்படி இருந்தா பொண்ணு என்ன செய்யும்? அப்ப எல்லாம் இந்தப் பொண்ணு யோக்கியமாத்தான். இருந்தது. அது வாழாவெட்டியா வந்து சேர்ந்ததும் அம்மாக்காரி இப்படி பழக்கிப்பிட்டா. ஏழெட்டு குழந்தைகள்! வீட்டோட இந்த விடோவுக்கு ஒரு அம்மா கிழவி வேறெ. இருக்கா. என்ன செய்யறது? கிளப்பிலே இந்த ரெண்டும் அரைக்கிறது. என்னத்தை கிடைக்கப் போறது? ஒரு நாள் முழுக்க அரைச்சா எட்டணா கிடைக்கிறதே கஷ்டம். பத்துப் பேர் இருக்கிற குடும்பம். ஒரு ரூபாயிலே தினமும் ஒடுமோ? இப்படித்தான் பிழைக்கவேணும். என்னவோ யார் கண்டா? நேரிலே பார்த்ததில்லே. சொல்லக் கேள்வி. நானும் நிச்சயமா தெரியாட்டா சொல்லமாட்டேன் என்று மறுபடியும் அதே முத்தாய்ப்பு வைத்து முடித்தார் சீனு மாமா.

"என்ன கஷ்டம்!”

"கஷ்டம்தான். ஆனா நகையும் நட்டும் வீடும் நிலமும் வச்சுண்டு சிலபேர் ஊர் சிரிக்கறதுக்கு இதுவொண்ணும் கெட்டு போயிடலே, பெரியாத்து சமாசாரம், தெரியுமோ இல்லியோ?” என்று தமக்குப் பிடிக்காத யாரைப்பற்றியோ தொடங்கிவிட்டார் சீனு.

"அப்படி எல்லாம் திமிர் பிடிச்சு போக்கிரித்தனம் பண்றா. அதுக்கு கேட்பாரில்லை. பணம் எல்லாத்துக்கும் பிராயச்சித்தம் பண்ணிப்பிடும். இந்த மாதிரி நாதன் இல்லாம, சோத்துக்கும் இல்லாம, எடுபட்டுடுத்தோ, அவ்வளவு தான். கட்டுப்பாடு காயிதா எல்லாம் அமர்க்களப்படறது. சாமா இருந்தபோது, ஜோஸ்யம் ஜோஸ்யம்னு- வாசல் திண்ணையிலே, திருச்சிராப்பள்ளி எங்கே, மதுரை எங்கே-கடலூர் எங்கேன்னு பெரிய பெரிய புள்ளிகள் எல்லாம் வந்து காத்துண்டிருக்கும். காரும் குதிரை வண்டியுமா வாசல்லே அதும்பாட்டுக்கு அவுத்துப்போட்டுக் கிடக்கும். வியாபாரிகள், மிராசுதாரர்கள்!-ஒண்ணும் அப்பைசப்பையா இராது. அவன் அப்படி இருந்ததுக்கு கடைசியிலே சொல்லிமாளாது-- அவ்வளவு. கஷ்டத்தையும் அனுபவிச்சுப்புட்டான். போராதுன்னு. இதுகள் வேறே இப்படி சிரிக்கிறதுகள். ஊரிலே ஒருத்தரும் போக்குவரத்து கிடையாது. அந்த வீடு மாத்திரம் இருக்கு. அதுவும் இடிஞ்சும் கிடிஞ்சும் யாரு தலைலே விழலாம்னு காத்திண்டிருக்கு. சாமா இருக்கிறபோது அக்கிரகாரத்திலே இருக்கிறவர்களுக்கு தோசைக்கு இட்லிக்கு அரைச்சுக் கொடுப்பா. ஒரு கல்யாணம் ஒரு விசேஷம்னா இட்லி வார்க்கிறது, அப்பளம் இட்டுக் கொடுக்கிறது இப்படி எதாவது காரியம் செஞ்சு கொடுப்பா. ஆனா ஒரு தினுகங்கிற சேதி தெரிஞ்சுதோ இல்லியோ? எல்லாம் நின்னு போச்சு. ஒரு வீட்டிலேயும் குத்துச் செங்கல் ஏற விடலே. கடைத்தெருவிலே ஹோட்டல்லெ வேலை செய்யறதுகள்...”

எதிர்பார்க்கவில்லை. அவர் மனத்தையே கரைக்கிறதானால் உண்மைதான் கரைக்க முடியும்.

அவர் சொன்னது உண்மைதான். கெளரி சொன்னதும் உண்மைதான். எதிர்பாராத இடங்களிலெல்லாம் அந்த பெண்ணைப் பார்த்து மனம் துணுக்குற்றது. இரவு ஒன்பது மணிக்கு நடமாட்டம் இல்லாத தெருவில் போய்க்கொண்டிருப்பாள். போலீஸ் கான்ஸ்டபிளோடு ஸ்டேஷன் வாசலில் பேசிக் கொண்டிருப்பாள். வெற்றிலைக்காரனோடு ஹாஸ்யத்தில் ஈடுபட்டிருப்பாள். இரவில் தேர்முட்டியின் கருநிழலில் நின்று கொண்டிருப்பாள். வாடகை கார் ஷெட்டின் முன்னால் நின்று சிரித்து பேசிக் கொண்டிருப்பாள்.

கெளரியிடம் சொன்னேன்.

“கெளரவம் என்ன? மதிப்பு என்ன இதிலே? பொம்மனாட்டி ஜென்மம். எத்தனை நாளைக்குத் தேடிண்டு வருவா? முதல்லே அப்படித்தான் இருந்திருக்கும். இப்போ இவளே தேடிண்டு போற காலம் வந்துடுத்து. இல்லாட்டா இப்படி சந்தி சந்தியா நிப்பானேன்? இனிமேல் ஒரே வேகமாத்தான் போகும். வியாதி, ஆஸ்பத்திரி, பிச்சை, சத்திரத்து சாப்பாடு-எதைத் தடுக்க முடியும்? துர்க்கை அம்மன் கிட்டவே வந்து பிழைப்புக்கு மன்றாடற காலம் வந்துவிட்டது.

“கேக்கறதுதான் கேட்டாளே பணம் வேணும்-கஷ்டம் விடியனும்னு அழப்படாதோ? நல்ல ஆளை பிடிச்சுத் தரணும்னு தானா கேக்கணும்.”

“அவ வேலை செஞ்சு பிழைக்கிறவ. ஒரு வேலையும் செய்யாமல் திடீர்னு பணம் வந்து குதிக்கும்னு நம்பற இனம் இல்லே. ஏதாவது கொடுத்தாத்தான் இந்த உலகத்துக்கிட்ட இருந்து ஏதாவது கறந்து சாப்பாட்டுக்கு வழி பண்ணிக்க முடியும்னு நினைக்கிறவ. தெரிஞ்சுதா?”

“என்ன தெரிஞ்சுதா? இது ஒரு வேலையா?” கெளரியின் சாமார்த்தியத்தைக் கண்டு எனக்கு வியப்பாக இருந்தது. வீட்டில் இருந்துகொண்டே அவள் எப்படி செய்திக்களஞ்சியமாக அபிப்பிராயக் களஞ்சியமாக விளங்குகிறாள்?

“இனிமே ஒரே வேகமாகத்தான் போகும்...” ஆனால், இவ்வளவு வேகமாகப் போய் எல்லாம் அடங்கிவிடும் என்று நான் நினைக்கவில்லை.

சாப்பிட்டானதும் கேட்டேன்; “என்ன உடம்பாம் அதுக்கு?”

“அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறேள்! மூணு மாசம் குளிக்காம இருந்ததாம்...”

பளிச்சென்று எனக்கு முந்தாநாள் இரவு அவளை கோவிலில் பார்த்தது நினைவிற்கு வந்தது. தோலிலும் உடலிலும் ஊடுருவி கண்ணைக் கவர்ந்த அந்த மெருகு நினைவுக்கு வந்தது.

அக்கப்போர் சீனுவிடம் இவ்வளவு தயவை நான் அரைச் சாப்பாட்டுக்கு, பருவம் கடந்து ஆறு வருஷத்திற்கு அப்புறம் வரக்கூடிய மெருகல்ல அது. தாய்மையின் ஒளி; வயிற்றில் வளர்ந்த சிசுவின் ஒளி; செவ்வட்டையின் ஒளி மாதிரி அது என்னை இப்போது பதற அடித்தது.

“அவ அம்மாக்காரி இருக்காளே - டாக்டர்கிட்டே போய் கேட்டாளாம். அம்பது ரூவா பணம் கேட்டானாம் அந்தத் தடியன். கடைசியிலே-வாசக்கதவு, கொல்லைக்கதவு எல்லாம் சாத்திபிட்டு-இவளே அந்தப் பொண்ணு வாயிலே-வைக்கல், துணி எல்லாத்தையும் வச்சு திணிச்சு வைத்தியம் பண்ணினாளாம். அப்படியே அலறவும் முடியாம, உசும்பவும் முடியாம எல்லாமே அடங்கிப் போச்சாம். அப்படீன்னு நம்ம பூக்காரி சொல்றா. ஆனா குருக்கள் பொண்டாட்டி சொன்னாளாம்; அந்த அம்மாக்காரி கண்ணாடியைப் பொடி பண்ணி தண்ணியிலெ கலந்து அந்த பெண்ணைக் குடிக்கச் சொன்னாளாம், அது குடிச்சுப்பிட்டு வயித்து வலியிலே-அய்யோன்னு ஊரே குலை நடுங்க கத்தி தீத்துப்பிடுத்தாம். அப்பறம் தான் துணியை வாயிலே வச்சு அடச்சு அழுகையை அடக்கினாளாம். அது உயிரையே அடக்கிப்பிடுத்து.”

கேட்கும்போது வயிற்றைப் புரட்டிற்று எனக்கு.

கெளரி குழந்தை மாதிரி விசித்து விசித்து அழ ஆரம்பித்து விட்டாள். என்னையும் அது தளரச் செய்துவிட்டது.

“அந்தப் பொண்ணு ஊத்தின எண்ணெய்க்காவது மனம் இரங்கப்படாதா அந்த சாமி. இவ்வளவு பெரிய கோவிலை கட்டிண்டு உக்கார்ந்திருக்கே! துர்க்கைக்கு முன்னாடி நின்னுண்டு அழுதுன்னேளே, பொம்மனாட்டி கண்ணாலே ஜலம் விட்டா உருப்படுமா அந்தத் தெய்வம்? அவ யாராயிருந்தா என்ன? மனக உருகிக் கண்ணாலே ஜலம் விட்டுதே அது” என்று கெளரி குமையத் துவங்கி விட்டாள்.

கோவிலை ஒட்டினாற் போல இருந்தது மானேஜர் வீடு. சென்று கதவை தட்டினேன்.

“யாரு?”

“நான் தான் சார்.”

கதவைத் திறந்து கொண்டு வந்தார் அவர். வாசல் விளக்கு பளிச்சென்று எரிந்தது.

“ஓ....சாரா, வாங்க, வாங்க, எங்கே இப்படி அபூர்வமா?”

“கோவில்லே பூஜை இல்லைன்னு கேள்விப்பட்டேன்...”

“ஆமா சார் ஒரு சாவு.... தெற்குத் தெருவுலே.”

“அதுதான் கேள்விப்பட்டேன். அது விஷயமாத்தான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“என்ன?”

“கோபுரத்து விளக்கு இல்லாமல் தெருவே இருண்டு கிடக்கு. ஊரிலே திருட்டு பயமா இருக்கு. அதுதான்...”

“ஒரு நாள் இப்படித்தான் இருக்கட்டுமேன்னு நினைக்சேன்.”

இது என்ன அர்த்தமில்லாத பதில்! திகைப்பாக இருந்தது எனக்கு. பேசாமல் உட்கார்ந்திருந்தேன். ஒன்று, இரண்டு நிமிடங்களாயின. இருவரும் பேசவில்லை.

“என்ன இப்படி பதில் சொன்னானேன்னு நினைக்கிறீங்களா? எனக்கு என்னமோ இந்த சாவுக்கு துக்கம் கொண்டாடனும் போல் இருக்கு. செத்துப்போனது யாருன்னு தெரியுமில்ல உங்களுக்கு?”

“தெரியும். ரொம்பக் கண்ராவி.”

“நீங்க கூட பார்த்திருப்பீங்களே. கோவிலுக்கு வருமே அந்தப் பொண்ணுதான். சிரிச்சிப் போன குடும்பம்தான்; ஒப்புத்துக்கிறேன். ஆனால், செத்துப் போனதுக்கு அப்புறம் தூக்கறதுக்கு ஒரு ஆள் கூட இல்லைன்னா இது என்ன மனுஷன் குடி இருக்கிற தெருவா? காக்கா கூட ஒரு காக்கா செத்துப்போச்சுன்னா கூட்டம் கூட்டமாக அலறி தீத்துப்பிடும்கள். மத்தியானம் மூணு மணிக்கு போன உசிரு. ஒரு பய எட்டிப் பாக்கலை, வீட்டிலேயே இருக்கிறது அத்தனையும் பொம்பளை. எல்லாம் சின்னஞ் சிறுசு. அப்படி என்ன இப்ப குடி மூழ்கிப் போச்சு? அவங்க கெட்டுப் போயிட்டாங்க. நாதன் இல்லாம கெட்டுப்போன குடும்பம். பசிக்கு பலியான குடும்பம். என்ன அக்கிரமம் சார்? இந்த மாதிரி மிருகங்களைப் பார்த்ததில்லைங்க நான். நானும் நாலு ஊரிலே இருந்திருக்கேன்-”

மானேஜரின் உதடு துடித்தது. கரகரவென்று கண்ணில் நீர் பெருகிற்று. பேசமுடியாமல் நின்றார். சற்று கழித்து கண்ணைத் துடைத்துக்கொண்டு ஒரு பெருமூச்சில் துக்கத்தை இறக்கிக் கொண்டார்.

“இன்னிக்குக் கடவுள் வெளிச்சம் கேட்பானா? கேட்க மாட்டான். ஊருக்கு மட்டும் என்ன வெளிச்சம்? எத்தனை வெளிச்சம் போட்டால் என்ன, நம்ம இருட்டு கலையப் போறதில்லை. இப்படித்தான் தவிக்கட்டுமே, ஒரு நாளைக்கு...”

ஆத்திரம் அவர் முகத்தில் ஜொலித்தது. “கோயிலுக்கு பூஜை செய்தாகணும். இன்னும் பொணத்தை தூக்கின பாடில்லை. யாரு தூக்குவாங்க? ஊரு கட்டுப்பாடாம்; ஊர் தலையிலே இடிவிழ!”

நான் பேசமுடியாமல் உட்கார்ந்திருந்தேன். ஆத்திரம் தனிந்ததும் அவர் சொன்னார். “பத்து மணிவரையில் பார்க்கப் போறேன். அப்புறம் நாதியில்லேன்னா, நாயனக்காரர் ரெண்டு ஆளை கொண்டாறேன்னிருக்காரு. நாலு பேருமா தூக்கிக் கொண்டு போயிடலாம்னு இருக்கிறோம். வேறே என்ன செய்யறது? கோயிலைத் திறந்தாகணும்.”

“நான் வாணா வரேன்?”

“நீங்களா? என்னத்துக்காக? பேசாம நல்ல புள்ளையா இருங்க. இது ரொம்ப ஆபத்தான சமாச்சாரம். தனியாளோட போடற சண்டையில்லே...”

“மோசமா போச்சு! பிழைக்க இடமா இல்லை வேறே?” என்று இழுத்தேன். எனக்கு பயமாகத்தான் இருந்தது.

“இதபாருங்க, எனக்காகச் சொல்ல வேணாம். நான் ஒண்ணும் உங்களைப் பற்றி தப்பா நெனைச்சுக்க மாட்டேன். நிசம்மா தைரியம் இருந்துதுன்னா வாங்க இல்லே... எனக்காக...”

“பரவாயில்லைங்க”

“என்னமோ உங்க இஷ்டம், ஆனா தெருவுக்கு மட்டும் விளக்கு கிடையாது. நாளை ராத்திரி வரையிலும் நிச்சயமாகக் கிடைாது. அந்த துர்க்கை அம்மனுக்கும் அந்த பொண்ணுக்கும் அவ்வளவு ராசி. விளக்கு கிடையாது இப்பவே சொல்லிப்பிட்டேன்-”

“சரி”

விளக்கை அணைத்து வாசல் கதவைச் சாத்திக் கொள்ளச் சொல்லிவிட்டுச் துண்டைபோட்டுக் கொண்டு கிளம்பினார் அவர். இருட்டில் தட்டித் தட்டி கிழக்கு வீதி வெளிச்சத்திற்கு வந்தோம்.