தஞ்சைச் சிறுகதைகள்/பூமத்திய ரேகை

விக்கிமூலம் இலிருந்து



எம். வி. வெங்கட்ராம்

ணிக்கொடியில் கடைசிக் கொழுந்து என்று செல்லமாக அழைக்கப்படுபவர் எம்.வி. வெங்கட்ராம் கும்பகோணத்தில் பிறந்தவர். கு.ப.ரா. ந. பிச்சமூர்த்தி இவர்களின் ஊக்கத்தில் எழுதத் தொடங்கியவர். மணிக்கொடி அவருக்கு ஊக்கமளித்தது. இவர் எழுதிய கதைகளில் குறிப்பிடத்தக்கவை சிட்டுக்குருவி ‘தத்துப்பிள்ளை’ ‘சித்தக்கடல்’ பொதுவாய் இவர் கதைகளில் நுட்பமான உணர்வு நிலைகள் அதிகமாகக் காணப்படும்.

நாவல் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளார். ‘வேள்வித்தீ’ என்ற நாவல் செளராஸ்டிர இனத்தின் சமுதாயச் சித்தரிப்பு, வாழ்வியல் வளர்ப்பு. மற்றொரு சிறப்பான நாவல் ‘நித்திய கன்னி’ மனதில் எழும் பழம் நினைவுகளும், அதனால் விளையும் சிக்கல்களும் நிறைந்த சித்தரிப்பே. சமீபமாய் பேசப்பட்ட நாவலான காதுகள் இந்திய அரசின் சாகித்திய அகாடமியின் விருதினைப் பெற்றது. முன் கூறப்பட்டுள்ள இரண்டு நாவல்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கற்பனையின் கனவுக் கோட்டையே. வாழ்க்கைக்கும், படைப்புக்கும் தொடர்பே இல்லாத நாவல் என்று தான் சொல்லவேண்டும்.

“எம்.வி.வி அவர்களின் சிறுகதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. சுதந்திரமானவை. ‘ப்ரி பர்சனாலிட்டி’ உள்ளவை. மொத்தத்தில் தனித்துவம் வாய்ந்தவை. ஆனால் பல்வகையான பன்முக வார்ப்பு கொண்டவை.” - க.நா.சு 

பூமத்திய ரேகை

ரு சிலரே ஆயினும், அறிவாளிகளே நிறைந்த அந்தக் கூட்டத்தில் அவன் மிகவும் அழகாகத்தான் பேசிவிட்டான். கவிதா வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு வந்த உவமைகள் சபையினரின் பிரமை பூண்ட கரகோஷத்துக்குக் காரணமாயின. அவைகளிலும் அவனுக்கே வியப்பு அளித்த உவமை ஒன்று. அதைப் பற்றி அவன் முன்னதாக நினைக்கவில்லை; மேலும் மேலும் விரியும் அவனுடைய பிரசங்கத்தில் அது தானாகவே முளைத்தது.

அவன் பேசினான்;

‘பூகோளம் படித்த நீங்கள் அறிவீர்கள். பூமத்திய ரேகையைப் பற்றி, பூமிக்கு இடையில் உள்ளதாகக் கூறப்படும் அந்த கோடு வெறுங் கற்பனை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் விஷயம் அறியாத ஒருவன் அந்த ரேகை உண்மையாகவே உள்ளது என்று நம்பி அது காலப்போக்கில் விரிந்து கொண்டே போகும் என்று எண்ணினால்? அப்படியே விரித்து, பூகோளம் முழுவதையும் அந்தக் கோடு ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றும் அவன் கற்பனை செய்தால்...? இவ்வாறெல்லாம் எவனும் நினைக்கவும் மாட்டான், நம்பவும்மாட்டன்.

ஆனால் இன்றைய மனித ஜாதியின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. மனிதனுள் பூமத்திய ரேகை “நான்” என்னும் உணர்ச்சி, பூகோள ஞானத்துக்கு அந்தக் கற்பனைக்கோடு எவ்வளவு அவசியமோ, மனித முன்னேற்றத்துக்கு அமைதியான வாழ்க்கைக்கு அந்த உணர்ச்சி அவ்வளவு அவசியந்தான். ஆனால் துர்ப்பாக்கியவசமாக மனிதன் இந்த ரேகைக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கற்பித்துவிட்டான். “நான்” என்னும் அகங்காரம்தான் உயர்வு தரும் என்று நம்பி ஏமாறுகிறான். நம் சமுதாயத்தில் ஆத்மீக வீழ்ச்சிக்கு மூல காரணம் இதுதான்.”

அத்துடன் அவனுடைய பிரசங்கம் முடிவுற்றது. நீண்ட கரகோஷம் செய்தார்கள். அவனுடைய சொற்பொழிவில் மயங்கிய சிலர் அவனை அணுகிப் பாராட்டினர். பிறகு அவன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினான். பூமாலையையும், செண்டையும் எடுத்து வரும் சுமைதாங்கிச் சிறுவன் ஒருவன் பின்னால் வந்தான்.

அவனுடைய கால்கள் பூமி மீது பாவவில்லை என்றே கூறவேண்டும். பேனா பிடித்தவனுக்கு வாய் ஊமை என்பதைப் பொய்ப்பித்துவிட்டோம். என்கிற மகிழ்ச்சி மிகவும் அழகான மொழியில் உயர்ந்த ஓர் உண்மையை வெகு லாகவமாக வெளியிட்டுவிட்டோம் என்கிற பெருமிதம் கூட.

“பூ மத்திய ரேகை” என்று மனத்துக்குள் முணு முணுத்தான். “நான் என்னும் உணர்ச்சி” அது ஓரளவு தேவைதான். ஆனால் “நான்” தான் நித்யம் என்பது தான் சமுதாயத்துக்குச் சாபம்.

வீட்டு வாயிலில் கால்கள் நின்றபோதுதான் அவனுக்குத் தன் நினைவு வந்தது. தாழிடாமல் சாத்திருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். வீட்டு முன் கூட்டில் வெளிச்சம் இல்லாததால் அவன் விளக்கைப் போட்டான்.

“ராஜம்”

பதில் வரவில்லை. பிறகுதான் பூமத்திய ரேகையிலிருந்து அவன் வீட்டுக்கு வந்தான். பூமாலை கழுத்தில் விழுந்த விஷயம் ராஜத்துக்கு மகிழ்ச்சி அளிக்குமோ என்னும் எண்ணம் ஓர் அற்ப வினாடி அவனுள் எழுந்தது. அவன்தான் அப்படி நினைக்கும் வழக்கம் இல்லையே என்ற மறுநினைவு முதல் நினைவை விழுங்கியது.

“ராஜம்!” என்று மீண்டும் அழைத்துக் கொண்டே இரண்டாவது கட்டுக்குச் சென்றான். அங்கு இருந்த இருட்டை விலக்கினான்.

ராஜம் அங்கே இருந்தாள்; கிடந்தாள்; ஆடை அலங்கோலமாய்த் தலையைக் கவிழ்த்துக் கொண்டு.

“உடம்புக்கு என்ன ராஜம்?” என்று பதறி அங்கவஸ்திரத்தை அங்கேயே எறிந்துவிட்டு அவன் அருகில் வந்து உட்கார்ந்தான். என்னவோ?’ என்ற பயம் அவனுக்கு உண்டாகிவிட்டது.

“ஒன்றுமில்லை” என்றாள். அவள்.

“ஸார்!” என்றது சிறுவனின் குரல். வெளியே சென்று மாலையை வாங்கிக் கொண்டு, கதவைத் தாழிட்டான். மாலை மேஜையின் மீது விழுந்தது. அதை ராஜத்திடம் காட்டி, அதனால் தனக்குண்டான பெருமையைக் கூறவேண்டும் என்ற அவன் நினைப்பு கரைந்துவிட்டது. மனைவியின் பக்கம் அவன் சென்றான்.

“ராஜம்! ஜூரம் கிரம்...”

“ஒன்றும் இல்லை” என்ற பதில்தான். தலையை, உடம்பைத் தொட்டுப் பார்த்தான். சாதாரணமாகவே இருந்தது. கொஞ்சம் ஆறுதல் உண்டாயிற்று.

“நான் சாப்பிட...”

“நான் சமைக்கவில்லை” என்றாள். மிகவும் மெதுவாய்...

“ஏன்?”

“இல்லை”

“முன்பே சொல்லியிருந்தால் அந்தப் பையனையாவது ஹோட்டலுக்கு அனுப்பி ஏதாவது வாங்கிக் கொண்டு வந்திருக்கலாமே?”

அவள் பேசவில்லை.

“சரி, நான் போய் இரண்டு பேருக்கும் ஏதாவது வாங்கி வருகிறேன்” என்று அவன் கிளம்பினான்.

ஹோட்டலுக்குப் போகும் போதும், திரும்பும்போதும் கூட அவனுக்கு அந்தக் கரகோஷம்தான் ஞாபகம். வீட்டைவிட அவனுக்குப் பூமத்தியரேகை இதமாக இருந்தது. அறிவாளிகள் அநாவசியமாய்க் கை தட்டுவார்களா? தங்களையும், நாகரிகத்தையும் மறந்து அவர்கள் செய்தால் அது அவனுக்கு விசேஷ கெளரவம் அல்லவா?

ஆம்; ஆனால் அவனுக்குக் கிடைத்த இந்தப் பெருமையை, பெருமையின் மகிழ்ச்சியை அவளும் தன்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். ஆனால் என்றுமே அவள் அப்படி இருந்ததில்லையே. இன்று மாத்திரம் எதிர்பார்ப்பது தவறு என்ற நினைவு ஒரு பெருமூச்சை அவனிடமிருந்து பறித்தது.

இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டதால், ஹோட்டலில் சாப்பாடு கிடைக்கவில்லை. மாலை டிபனில் மீந்திருந்ததைக் கட்டிக் கொண்டு அவன் வீட்டுக்குத் திரும்பினான்.

“ராஜம்! எழுந்திரு சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம்.”

“நீங்கள் சாப்பிடுங்கள்.”

“சாப்பாடு கிடைக்கவில்லை; டியன்தான்.” என்று கூறிச் சாப்பிட்டு முடித்தான் விரைவாய்.

“நீயும் சாப்பிட்டால் தூங்கலாமே?”

“நீங்கள் போய்த் தூங்குங்கள், கொஞ்சநேரம் ஆகட்டும், பார்க்கிறேன்.”

இம்மாதிரிச் சந்தர்ப்பங்களில் அவளுடன் அதிகம் பேசக்கூடாது. முன்கட்டுக்குச் சென்று படுக்கையை விரித்து உடலைச் சாய்த்தான்.

மனம் நிலைகொள்ளவில்லை. பூமத்திய ரேகைக்குப் பாய்ந்தது; பின் தன் பெருமைக்கு நகர்ந்தது. அங்கிருந்து தன் குடும்ப வாழ்க்கையின் அசாந்தியில் அமுக்கியது.

வழக்கமாய்ச் சொல்வதுண்டு. பெண் ஒரு புதிர் என்று. அதை அவன் ஏற்பதில்லை. ஆணும் ஒரு புதிர்தான் என்பதுஅஅவன் கருத்து. ஆனால் ராஜம் என்னவோ அவனுக்கு ஒரு புதிராகவே இருந்தாள். அவனை மணந்த நாள் முதல், அதாவது அவளுடைய திவ்யமான செளந்தரியம் அவன் வாழ்க்கையின் சுகதுக்கங்களைப் பங்கிட்டுக் கொள்ளும் என்பதாய் அக்னி சாட்சி சொன்ன நாள் முதல் இன்று வரையில் மூன்று வருஷங்கள். கழிந்துவிட்டன. அவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் கதையையும், கவிதையையும் எழுதுகிறான். நெஞ்சிலுள்ள நுணுக்கமான மர்மங்களையும் அலசுகிறான் எனப் பெரிய விமர்சகர்கள் கூடக் கூறுகின்றனர். ஆனால் அவளுடைய விசித்திரமான போக்கு அவனுக்கு அர்த்தம் ஆகவில்லை.

அவளுடைய அழகு அவனுடைய கற்பனைக்கு உரம் அளித்தது; கவிதைக்குக் கண் வைத்தது; கதைகளுக்கு மெழுகு பூசியது. ஆனால் அவனுடைய நெஞ்சுக்கு வெறுமையைத் தான் அள்ளித் தந்தது. அவள் மனப்பூர்வமாய்த் தன் வாழ்க்கையில் கலந்துகொள்ளவில்லை என்றுதான் அவனுக்குப் பட்டது.

மனப்பூர்வமாய்க் கலக்கிறாள் என்றால் அவனுக்கு ஏன் மன அமைதி கிடைக்கவில்லை? அழகு சிரித்தால் அமைதி கிடைக்கும்; அழகு அழுதால்? அழகின் மனக்குறை போதுமே வாழ்க்கையைப் பாழ்படுத்த.

அவளுக்கு அப்படி என்னதான் மனக்குறை? விருந்தாளி போன்ற மனப்பான்மையுடன் அவனுடன் அவள் பழகுவானேன்? வாழ்க்கையைக் கூட்டு வியாபாரம் எனக் கற்பனை செய்தால் அதில் முதல் போட்ட முதலாளி யார், வேலை செய்யும் கூட்டாளி யார்? அவளை வேலைக் கூட்டாளியாய் அவன் கருதவே இல்லை. ஆயினும் நஷ்டத்தில் அல்ல, லாபத்தில்தான் அவளுக்குப் பங்குதர ஆசைப்பட்டான். அதையும் அல்லவா அவள் மறுக்கிறாள்?

ஆணின் அழகுக் குறைவு, பெண்ணுக்குக் குறையாகப்படும் என்கிறார்கள்; ஆனால் அவன் அழகன், கம்பீர புருஷன் என்று பலவாய்கள் புகழ்ந்துள்ளன. அவன் குணனனும் அல்ல. அத்துடன் மிகவும் பொறுமைசாலி. தெரிந்தோ, தெரியாமலோ, அவள் செய்யும் தவறுகளையெல்லாம் அவனைப் போல் வேறு எந்தக் கன வனாலும் பொறுக்க முடியுமோ என்பது சந்தேகந்தான். அவன் அவளைச் சினந்ததே இல்லை. அன்பினால் அன்பைப் பெறலாம் என்றே நம்பினான். எதிர்பார்த்தான்; ஏமாற்றம் அடைந்தான்.

அவள் சிரிக்காதது மாத்திரம் இல்லை. முகம் கொடுத்து அவனுடன் சரியாகப் பேசாதது மாத்திரம் அல்ல. தன்னுடைய விருப்பு வெறுப்புக்களைத்தான் அவள் பூர்த்தி செய்ய முயன்று கொண்டாளே தவிர, அவனுடைய இச்சைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் தீவிரமாக இருந்தாள். சின்னஞ்சிறு காரியத்திலும் அப்படித்தான். குடும்ப வாழ்க்கைக்கு ருசி அளிக்கும் விஷயம், உணவு. அதுகூட அவன் நினைத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் தடிப் பிரம்மச்சாரியைப் போல் ஹோட்டலில்தான் வயிற்றைக் கழுவவேண்டும்.

அவன் துடித்துக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தான்.

“அவள் குழந்தை. இன்னும் பொறுப்பு உணரவில்லை; அதனால்தான் இப்படி...”

அவளுக்காக ஒரு சமாதானம் கூறிக்கொண்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் சென்று நின்று, வெளியே இரவைப் பார்த்தான்.

இரவு ஒய்யாரமாய் உறங்கியது. வானப் பொய்கையில் மிதக்கும் நிலவு ஒளிக் கொப்புளம் விட்டுக் கொண்டே நீந்தியது. ஆங்காங்கு நுரை முகில்கள்.

கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில், இந்த அழகான இரவில் கவலையோ, வேதனையோ இல்லை என்று கூற முடியுமா? ஆனால் இரவும் வானும் எல்லாவற்றையும் போர்த்துவிட்டன. ஆகையால் எங்கே பார்த்தாலும் அமைதி. ஒரே அமைதியாகத் தென்படுகிறது. அந்த அழகான அமைதியில் ஈடுபடுகிறவர்களின் மனத்துக்கும் அமைதி அளிக்கிறது.

அமைதியாக அவன் நெடுநேரம் நின்றான்; இயற்கை அமைதியைத்தான் அளிக்கிறது. ஆனால் மனிதன் தன் மன விகாரங்களினாலும், உடலின் வசதிக் குறைவினாலும், செயற்கையினாலும் இயற்கையைக் குழப்பிச் சேறாக்கிவிடுகிறான். அமைதியாகச் சிந்தித்துக் கொண்டே மனைவியை நாடிச் சென்றான், மீண்டும்.

அங்கு விளக்கு முன்போலவே எரிந்துகொண்டிருந்தது. ராஜம் அங்கேயே பழைய இடத்திலேயே முடங்கிக் கிடந்தாள். தூக்கம் வந்திருக்கும் எனத் தோன்றியது. அவன் கொண்டு வந்த டிபனும் வைத்தது வைத்தபடியே இருந்தது.

“ராஜம்!”

அவனைத் தொட்டு எழுப்பினான்.

“சாப்பிடவில்லையா நீ?”

“எனக்குப் பசி இல்லை.”

“முதலிலேயே சொல்லி இருந்தால்...”

“சொல்லவில்லை”

“விளக்கை அணைத்துவிட்டாவது தூங்கக்கூடாதா?”

“அணைக்கவில்லை.”

பரீட்சையில் இந்தக் காலத்தின் கேட்கிறார்களே, துணுக்குக் கேள்வி துணுக்கு விடை என்று அது மாதிரி கேள்வியும் பதிலும், பரீட்சைக்காரனுக்குத் திருப்தி அளிக்கலாம், வாழ்க்கையில்?

நிலை பிசகும் அமைதியுடன் சிறிது நேரம் பேசாது இருந்தாள். அவள் அவிழ்த்து வைத்திருந்த ஜரிகைப் புடவையின்மீது அப்போதுதான் அவன் கவனம் சென்றது.

அவ்விருவருக்கும் மணம் ஆன காலத்தில் வாங்கியது அது. முழு ஐரிகைப் புடவை; கட்டிக் கொண்டால் தங்கத் தகடுபோல் ஜ்வலிக்கும். ஆனால் அதை உடுக்கிறவள் பழங் காலத்துத் திடப்பெண் ணாக இருக்கவேண்டும். எருமைபோல் கனப்பதோடு உடலையும் கீறிவிடும். அதை உடுக்கவேண்டாம் என்று பல முறைகள் கூறியிருக்கிறான். அவளால் அவ்வளவு பாரம் சுமக்க முடியாது.

ஆனால் அதை உடுத்திக் கெளரவம் பெறுவதற்காக எங்கோ வெளியில் போயிருக்கிறாள். யாராவது சிநேகிதி வீட்டில் விசேஷமாக இருக்கலாம்; போன இடத்தில் அவளுடைய மனம் புண்படும்படி ஏதாவது நடந்திருக்கலாம். ஆகையால் சோர்ந்து படுத்துவிட்டால் போலும்! சோகத்திலும் சோபை அவனைக் கவர்த்தது.

“ராஜம்! நான் வெளியில் போன சமயம் நீ வெளியே போனாயா?”

“ஆமாம், ராதையின் குழந்தைக்கு நாமகரணம்!”

“இந்தப் புடவையையா கட்டிக்கொண்டு போனாய்? ஜரிகை உடம்பெல்லாம் கீறி இருக்குமே?”

“கிறினால் என்ன?”

“கீறினால் என்னவா?...உம் அங்கே என்ன நடந்தது?”

“நாமகரணம்”

“அதைக் கேட்கவில்லை. நீ இப்படி முகம் சுண்டிப் படுத்திருக்கிறாயே, உன் மனசுக்கு வருத்தம் உண்டாகும்படி...

“ஒன்றும் இல்லை.”

“என்னிடம் சொல்லக்கூடாதா?

“என்ன சொல்ல?”

“இத்தனை நாட்கள் என்னுடன் பழகியும் நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லையா ராஜம்? என்னிடம் உன் குறையைச் சொல்லக்கூடாதா?”

“எனக்குத் தூக்கம் வருகிறது.”

“என்னை இன்னும் அன்னியன் என்றுதான் நினைக்கிறாயா ராஜம்”-

அவன் பொறுமையுடன் மாத்திரம் பேசவில்லை. குழைந்து குழைந்து பேசினான், தோல்வியுற்றவன் போல்.

“நீங்கள் என்னதான் சொல்லவேண்டும் என்கிறீர்கள்?” எழுந்து உட்கார்ந்தாள்.

“நீ ஏன் ஒன்றும் சாப்பிடாமல் வருத்தமாகப் படுத்துவிட்டாய்?”

“பசிக்கவில்லை என்றேனே!”

“பொய். நீ என்னை ரொம்பவும் அவமானம் செய்கிறாய்.”

“நான் பேசினாலும் அவமானம். பேசாவிட்டாலும் அவமானம் என்கிறீர்களே!”

“பேசாதிருப்பதே அவமானம் ஆகாதா?”

“எனக்குத் தெரியாது!”

“அதைத்தான் கேட்கிறேன். நீ ஏன் என்னிடம் சரிவரப் பேசுவதில்லை? ஆயிரம் கற்பனைகளைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வருகிறேன். ஆனால் உன்னுடைய வாடிய முகம் எல்லாவற்றையும் கவிழ்த்து விடுகிறது. என்னால் பிறகு எழுத முடியவில்லை.”

“நான் தடுக்கவில்லையே?”

“அமைதி இழந்த குடும்ப வாழ்க்கை எழுதுவதற்கு முட்டுக்கட்டைதானே? திருப்தியும், சந்தோஷமும் நிறைந்த குடும்பந்தான் ராஜ்யம் நிலைக்க உதவும் என்று ஒரு பெரிய சரீர சாஸ்திரி கூறுகிறார்.”

“எனக்குப் புரியவில்லை. நீங்கள் பேசுவதெல்லாம்.”

“எத்தனை எத்தனையோ பேர் என்னை எத்தனையோ விதமாகப் புகழ்கிறார்கள். என்னைக் காண்பதையே பாக்கியம் என்று நினைக்கிறவர்களும் உண்டு. எனக்குக் கிடைக்கும் இந்தப் பெருமை உனக்கு இல்லையா?”

“உம்”

“பின் ஏன் என்னை அலட்சியம் செய்கிறாய்? நான் ஏழை என்கிற அற்பக் காரணத்துக்காகத்தானே? பனந்தான் சாகவதம் என்று நினைக்கிறாயோ?”

“எதுதான் சாகவதம் இந்த உலகில்?” “ஜரிகைப் புடவையாலும், வைர நகையாலும் உண்மையான பெருமை அடைந்துவிட முடியாது.”

“நான் ஜரிகைச் சேலை கட்டக்கூடாது. நகை அணியக் கூடாது என்கிறீர்கள். அதுதானே?”

அவனுடைய பதில் வளர்ந்தது. “நான் அதைச் சொல்ல வரவில்லை. இருக்கிறோம், இறப்பதற்கு. அதற்குள் நம்மால் உலகத்துக்குச் செய்ய முடிந்ததைச் செய்துவிட வேண்டும் என்றுதான் என் எண்ணம். அதுவும், இது ஒரு யுக சந்திக் காலம், சந்தி என்றால் பொழுது விடிவதற்கு முன்னதா அல்லது அஸ்தமிப்பதற்கு முன்னதா என்றே புரியவில்லை. மேல்நாட்டு நாகரிகமும், கீழ்நாட்டு நாகரிகமும் மல்லுக்கு நிற்கின்றன. உடல்தான் எல்லாம் என்று உவமை வற்புறுத்துகிறது ஒன்று. ஆத்மா என்பது வெறும் பொய் என்கிறது அது. ஆத்மா தான் நித்தியம், அதுவேதான் எல்லாம் என்ற அழுத்தமாய்ச் சொல்கிறது மற்றொன்று. இரண்டு வகை தெரியாமல் மோதிக் கொள்கின்றன; ஒன்றுக்கொன்று முரணானவை என்று அவைநினைக்கின்றன. ஆனால், இரண்டையும் சமமாகவும், சமாதானமாகவும் இணைக்கலாம். அப்படி இணைப்பதில்தான் மனித ஜாதிக்குக் கதிமோச்சம் என்பதைத்தான் நான் உலகுக்கு என் எழுத்துக்கள் மூலம் காட்ட விரும்புகிறேன். உலகம் நான் எழுதுவதை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் நான் உணர்வதை எழுத வேண்டியது என் கடமை.”

இரவின் முன்பகுதியில், மேடையின் மீது நின்று பிரசங்கமாகப் பொழிந்தபோது இருந்த உக்கிரம் இப்போதும் அவனை ஆட்கொண்டுவிட்டது. அவள் தன்னைக் கவனிக்கிறாளா, புரிந்து கொள்கிறாளா என்பதைக் கவனிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. “நான் எழுதுவதற்கு நீதான் ஊக்கமளிக்கவேண்டும்.”

“உங்களை எழுத வேண்டாம் என்று நான் தடைசெய்யவில்லையே?” அவள் கொட்டாவியை விட்ட வண்ணம் கூறினாள்.

“ஆனால் என்னை உன் பக்கத்தில் கூட வரவிடாமல் துரத்துகிறாயே?”

“எங்கே? எவ்வளவோ, நம்பிக்கையுடன் மன நிறைவுடன் உன் அருகில் வருகிறேன். நீதான் சந்தோஷம் இல்லாத வார்த்தையாலோ, மெளனத்தாலோ என்னைத் துரத்தியடிக்கிறாய்.”

“நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்கிறது?”

“சரி, போனது போகட்டும். இன்றையிலிருந்து நாம் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம். ராஜம்! அக்கினி சாட்சியாக நாம் செய்துகொண்ட பிரதிக்ஞையைத் தெய்வ சந்நிதானத்தில் புதுப்பித்துக் கொள்வோம்.”

மகிழ்ச்சியுடன் அவளுடைய கரங்களைப் பற்றி அவன் தூக்கினான். ஆனால் அவள் அசையவில்லை. வெகு நேரம் கழித்து அவளுடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன...

“நாளைக்கு நான் ஊருக்குப் போகிறேன். கொஞ்ச நாட்கள் இருந்து வரவேண்டும்.”

அவள் குழந்தைத்தன்மை உடையவள் என்றால் குழந்தை இப்படியா பேசும்? இருபது வயது பெண்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றும் குடும்பம் நடத்தவில்லையா? எவ்வளவோ தோழிகளுடன் பழகுகிறவள், இப்படிச் செய்தால், பேசினால்?

சில நாட்களுக்கு முன்னால்தான் நண்பர்கள் சிலர் அவனைக் காண வந்தனர். அவர்களுக்குப் காப்பி கொடுக்க விரும்பி அவர்களிடமும் சொல்லிவிட்டு, அவளிடம் தயாரிக்கும்படி சொன்னான். கொஞ்சநேரம் நண்பர்களிடம் பேசிவிட்டு உள்ளே சென்றான். காப்பி தயாராக இருக்கும் என்று, ஆனால் அவள் இருந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை.

“காப்பி போடவில்லையா?” என்று கேட்டான் திடுக்கிட்டு, நண்பர்களிடம் அவமரியாதை ஏற்படும் என்ற பயம்.

“இல்லை!”

“சொன்னேனே!”

“எனக்கு வேலை இருக்கிறது.”

“இதைவிடவா?” அவள் மெளனம் சாதித்தாள். நேரம் ஆகிவிட்டது. அவளுடன் பேசிக் கொண்டிருந்தால் வந்தவர்களை இன்னும் காக்க வைக்க நேரிடும். ஆகையால் மேலும் பேசாமல் அவர்களிடம் சென்று, “பால் முறிந்துவிட்டது. இதோ நொடியில் கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கிளப்புக்குக் கிளம்பினான்.

இன்னொருமுறை, பித்தம் மிகுந்ததால், மார்பில் ஒரே வலி. இரவு முழுதும் துாக்கம் இல்லாமல் துடித்துக் கொண்டிருந்தான். முதலில் அவன் சொன்னதன் பேரில் எதோ பற்றுப் பேட்டவள் பிறகு அவனை ஏனென்று கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

இந்த மாதிரி எத்தனை எத்தனையோ சிறு விஷயங்கள் தாம். என்றாலும் சிறு விஷயங்களின் கோவைதானே வாழ்க்கை? சிறு விஷயங்களில்தானே மனமும் பிரதிபலிக்கிறது? ஜன்னலுக்கு அருகில் நின்று மறுபடியும் எட்டிப் பார்த்தான். மூலைக்கு மூலை நகைகளைச் சிதறிவிட்டு, கோபக்கிருகத்தில் புகுந்துகொண்டு, முகம் கவிழ்ந்து அழுகின்ற கைகேயியைப் போல, நட்சத்திரங்களுக்கிடையில் உள்ள நிலவு கார் முகில் ஒன்றின் மீது உறங்கியது. அங்கு நிற்க மாட்டாமல், படுக்கையின் மீது விழுந்தான். ஆனால் மனசு நிச்சயமாகப் படுக்க மறுத்தது.

நாளுக்கு இரண்டு கணவர்கள் வீதம் விவாகமும், விவாகரத்தும் செய்து கொள்ளும் சினிமா நட்சத்திரங்களின் ஞாபகம் அவனுக்கு வந்தது. உயிரை மாய்த்தாலும் கணவன் கணவனே என்று உறுதி கொள்ளும் இந்தியப் பெண்ணையும் நினைத்தாள். இந்த இரண்டும் இல்லாது, இரண்டும் கெட்ட பெண்ணுடன் வாழ்க்கையும்...

எறும்பு உயர்ச்சிகளின் துள்ளலைத் தாள முடியவில்லை அவனால், அப்போது தான் அவன் பொறுமையை இழந்தான்.

“என்னுடன் வாழ உனக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா?” என்றான் உள் புகுந்து.

அவளுடைய மெளனம் அவனைக் குதறியது. பூமத்திய ரேகைக்குப் பக்கத்திலுள்ள சூரியனின் வெம்மை தன்னைச் சுட்டுக் கறுக்குவது போல் அவன் உணர்ந்தான்.

“உயிருடன் என்னைப் புதைக்கவா என்னை மணம் புரிந்தாய்?”

அதற்கும் அவள் பேசவில்லை. புதையுண்டு போன தன் சவத்தின் துர்க்கந்தத்தைத் தானே சுவாசிப்பது போல் அவனுக்குத் தோன்றியது. மூச்சு தவிதவித்தது

“நான் ஆணாய்ப் பிறந்ததே குற்றம்!” என்றான் ஆற்றமையுடன்.

“இல்லை. நான் பெண்ணாய்ப் பிறந்ததுதான் குற்றம்!”