உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சைச் சிறுகதைகள்/வைக்கப்போரும் கடாவடிக்கு வாக்கப்பட்டவளும்

விக்கிமூலம் இலிருந்து

சோலை சுந்தரபெருமாள்

“கு.ப.ரா. பிச்சமூர்த்தி, எம். வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், மெளனி, க.நா.சு ஆகியோரைப் போல இவரும் தஞ்சை மாவட்டத்துக்காரர்தாம். (திருவாரூர், அம்மையப்பன், காவனூர்க்காரர்) எனினும் மேற்கண்ட ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களிலிருந்து இவர் மாறுபடுகிறார். கதைக்கருவைத் தேர்ந்தெடுப்பதிலும், தமிழ்நடையிலும் இவர் வித்தியாசப்படுகிறார். முக்கியமானது இவரது தமிழ்நடை. பாத்திரங்களின் உரையாடலில் மட்டுமின்றி படைப்பாளியின் நடையிலும் பேச்சுத்தமிழ்! இத்தகைய போக்கை ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களிடம் காண முடியவில்லை...” ‘ஓராண்காணி சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் தி.க.சி.’

1953 இல் பிறந்து சோலை சுந்தரபெருமாள் இன்றுவரை பிறந்த கிராமத்திலேயே வாழ்க்கை...

‘தரமான சிறுகதை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். கிராமத்து விவசாயிகளைப் போலவே ரொம்பவும் எளிமையானவர். தனக்கென்று தனியான இலக்கியக் கொள்கை நிலை உடையவர், உறுதியானவர், நல்ல இலக்கியவாதி... மொழி, சோலை சுந்தரபெருமாளுக்கு ஒரு பெருஞ்செல்வம். கீழத்தஞ்சை வட்டார வழக்கு மொழி, கதைக்கு ஆழத்தையும், அகலத்தையும் தருகின்றன. (மாலைக்கதிர் - சிறுகதை விமர்சனத்தில் எழுத்தாளர் பொன்னீலன்)

“வாழ்வின் உயரங்களை எட்ட வேறு வழி இல்லாது உழைப்பை மட்டுமே நம்பி உயிர் வாழும் எளிய மக்களின் கதை இது. இயல்புணர்ச்சியும் மிகையற்ற எளிய நடையுமே இவரின் பலம்... என உறங்க மறந்த கும்பகர்ணன் நாவலை கவிஞர் பாலா இப்படி மதிப்பிடுவதை ஏற்றுக்கொள்ளலாம்...” எண்பதுகளில் சிறந்த தமிழ் நாவல்கள் தி.க.சி. (சுபமங்களா)

“சோலை சுந்தரபெருமாளின் படைப்புகளில் யாருடைய பாதிப்பும் இல்லை. இவர் எதையும் படித்துவிட்டு அதைப் போல எழுத முயலவில்லை. எல்லாமே அவரது அனுபவ எல்லைக்குட்பட்ட ஆழ்ந்த உணர்வின் சுய வெளிப்பாடுகள். இத் ‘தனித்தன்மையே’ இவரது எழுத்துக்குப் பெருமை தரப் போதுமானது. (‘மண் உருவங்கள்’ சிறுகதைத் தொகுதி மதிப்பீட்டில் எழில் முதல்வன்)

வைக்கப்போரும் கடாவடிக்கு
வாக்கப்பட்டவளும்...

பாக்கியத்துக்கு முழிப்பு வந்து ரொம்ப நேரமாயிட்டு. புரண்டு புரண்டு படுத்தாள். குளிரும் ஜாஸ்தி. எரவாணம் வழியாய் ‘சல் சல்'ன்னு பனி வாடை வீட்டுக்குள் எம்பி குதித்தது. வெளியே பட்டப் பகல் போல நிலா. நாளான்னிக்கு மாசி மகம். அதுக்கான வீரியம் இல்லாம்யா போவுதுன்னு நினைத்துக் கொண்டாள். தலைக்கு மேல் கூரையிலிருக்கும் ஓட்டைகளின் வழியாக நுழைந்த நிலாச் சக்கரங்கள் மெல்ல இறங்கி அவள் மேலும், அவளை ஒட்டிப்படுத்துத் தூங்கும் மவள் மீதும் புள்ளி புள்ளியாய்... கால்மாட்டில் பஞ்சாரத்தில் கவித்திருந்த கன்னிச் சேவல் மூக்கை தரையில் தீட்டி றெக்கையைப் படபடத்துக் கொண்டு கூவி ஓய்ந்தது.

அவளால் எழுந்திருக்க முடியவில்லை. உடம்பு ரணமாய் வலித்தது. நேத்தைக்கு விடி கருக்கலில் எழுந்துருச்சிப் போனவள். பொழுதுக்கும் அடிச்ச வெயில் அவள் தலையில். அப்பாடின்னு ஒரு நாழி உக்காரத்தான் நேரமேது? வைக்கல்ல நின்னு வேலப் பாக்கிறதுன்னா சும்மா லேசுபட்ட வேலையா? கை, கால்ல, வைக்கல்ல இருக்கும் ‘சொணை’ ஏறி சுருக் சுருக் என்ற குத்தலோடு அரிப்பு வேறு. எது செஞ்சா என்ன? வெள்ளாமக்கார வங்க விட்டுத் தள்ளிடவா முடியும்? அதிலேயே கெடந்துவெந்து தான் தணியனும்.

‘சோந்து போயிட்டியா பாக்கியம்? இன்னும் கொஞ்சம் வைக்கத்தான் மீதம் கெடக்கு. ஒரே தறியா தெரச்சிப் போட்டுட்டு போயிடுவோம்.

முத்தண்ணன், பாக்கியத்திடம் நைசா பேசிக்கொண்டே வேலை வாங்கினான். இன்னிக்கு நேத்தா இப்புடி? என்னிக்கு அவள் புருஷன், டீ கடைக்காரர் வூட்டுப் பொண்ண இழுத்துக்கிட்டு ஓடிப் போனானோ அன்னியிலிருந்து தாம் பெத்தப் பொண்ணுக்கிட்ட எப்புடி அன்னியோன்னியமா இருந்து பாதுகாப்பா இருப்பானோ அப்புடித்தானே.

ஒருத்தரப் போல வேலத் தலைப்புக்குப் போய் நெழுப்பிக்கிட்டு நிக்கிறவளா பாக்கியம்? முத்தண்ணன் வரைக்கும், அவள் சோம்பிக்கிட்டு நின்னு ஒரு நாளும் பாத்ததே இல்லையே. ஒழைச்சு சம்பாத்தியம் பண்ணுறதே போதும் எத்தி வாங்கிட்டுப் போற காசா ஒட்டப் போவுது? எப்பயும் படு சுறுசுறுப்பா நின்னு கை வேலயப் பாத்து முடிச்சுட்டு மறு வேலப் பாத்து தான் பழக்கப்பட்டவள். அவளுக்கு ஈடா நின்னு வேலை செய்ய ஆம்பளையே தடுமாறிப் போயிடுவானுங்க.

ஆஞ்சி, ஓஞ்சி வந்து எப்பப் படுத்தாலும் தூக்கம் எங்க எங்கன்னு தான் நிக்கும். அப்புடி அடிச்சுப் போட்டது போல தூங்கும் அவள் ரெண்டு நாளா ராத்திரியில தூக்கம் வராம பொரண்டுப் படுக்க வேண்டிருக்கு. மனசு என்னமோ எதை எதையோ நெனச்சு அல்லாடிக்கிட்டு இருக்கு. என்னா இது? இத்தினி வருசம் கழிச்சு? தாம் அன்னியப்பட்டு போயிட்டமோங்கிறதுபோல ஒரு நெனப்பு மனசப் போட்டு அரிச்சுக்கிட்டு இருக்கு. பத்துநாளா இந்தப்பாடு தான்.

செட்டியார் பண்ணையில வைக்கப்போர் அடிச்சாவது, ஒரே களத்தில நின்னு வேலப் பாக்கிறாப்பல தோதா வாச்சுருக்கு. ஆளுகளயும் நெறயா வச்சுக்கிட்டு செய்யுற வேலயாயும் இல்ல. அவருகிட்ட இருக்கிற நாலு ஜோடி மாடுகளை வச்சுக்கிட்டுத்தான் கடாவடி கட்டணும். கூலிக்கு மாடு அமத்திக்கிட்டு போர் அடிக்கிறதா இருந்தா ஜோடிக்கு எட்டு மரக்கா நெல் வள்ளிசா போவும். அடுத்து அடுத்து இப்ப என்னதான் வேல இருக்கு? உளுந்து பயிறு தானே. மெல்ல நகர்த்துட்டும். நாம கிட்டக்க நின்னு வேலப் பாத்தா கைக்கு ஒண்னும் வந்து சேராது. குத்தவைக்கே கொடுத்துட்டா வந்த வரைக்கும் ஆதாயமா இருக்கும்ங்கிற நெனப்பு தான் செட்டியாருக்கு.

‘முத்தா! நருக்கா நாலு ஆளு வச்சுக்கிட்டு நருவுசா வேலயப் பாரு. மொத்தத்துக்கும் நாலு மூட்ட நெல்லு அளந்துடு. அன்னைய அன்னைய வைக்கல தெரச்சு வண்டி ஏத்தி விட்டடுனும். போனவருஷம் போலவே வைக்கப்போர தண்ணி எறங்கிடாம பக்குவமா போட்டு தலைகூட்டிப்புடுனும். உனக்கு ஒண்ணும் கொறஞ்சிப் போயிடாதுன்னு சொன்னதும் ஒப்புக் கொண்டான். பத்து வருஷமா இப்படித்தான் செய்யிறது. அதில் அவனுக்கு கூலிக்கு மேலத் தேறிப் போயிடும். கம்முன்னு ஒப்புக் கொண்டான்.

அடவா நின்னு வேலப் பாக்கவும் செளரியமா இருக்கும். அடுத்த எடத்துக்குப் போயி நிக்கவேணாம். இப்புடி, பல யோசனையோடத்தான் தன்னோட மவன், மருமவளோட பாக்கியத்தையும் சேத்துக்கிட்டு, வேத்தாளு சேக்காம வேலய ஆரம்பிச்சு வச்சு இன்னிக்கு மூணாம் நாளு.

பெரும்பகுதியா வயல் களம் பொழங்கினவங்கல்லாம் அடங்கியாச்சு. எக்கண்டத்திலயும் ஒரு காக்கா குருவிகூட இல்ல. அந்தியில வைக்கத் தெரச்சு வண்டியில ஏத்தியுட்டு களம் பொழங்கி கூலியப் பங்குப் போட்டுக்கிட்டு பொறப்படும்போது, ‘ஆளுக்கு ரெண்டு கையா வைக்கல் இழுத்துப் போட்டு அடக்கிப்போட்டுப் போன விடியக் கருக்கல்ல வந்ததும் கடாவடிய கட்ட வாகா இருக்கும். புடிங்க...’

வீட்டுக்குப் போவ இருக்கும்போது முத்தண்ணன் சொன்னதும் அவன் மவனும், மருமவளும் அலுத்துக் கொண்டார்கள். பாக்கியம் முகம் சுழிக்காமல் ஒரு கடாவடி வைக்கலை இழுத்துப் போட்டு அடக்கினதும் வேர்த்து விறு விறுத்தது. சல்ல யாய் அரிப்பு வேற. ஓடிப்போய் தாமரைக்குளத்தில் விழுந்து அப்புடியே உடம்ப நீவிவிட்டு மிதந்து, பொழுதுக்கும் சாந்து போயி இருக்கும் சூட்ட தணிக்க வைக்கணும் கிற அவசரம். சொணை கரைஞ்சிப் போற வரைக்கும் அப்புடியே வெது வெதுப்பான தண்ணில கெடந்து எழுந்திருச்சுப் போவனுங்கிறது போல ஒரு உணர்வு புரடியைப் புடித்துத் தள்ளியது.

‘தங்கச்சி! விடிய கருக்கல்ல வந்துடு இப்ப அடக்கிப் போட்டத புடுச்சுட்டு, உருமத்துக்குள்ள ரெண்டு கடாவடி அடக்கனும். அஞ்சுமா வைக்க அடம்பா வேற இருக்கு. உச்சி சாஞ்சதும், பீராஞ்சிப் போட்டுட்டு பிரியவுட்டா வெயில் சாஞ்சதும் தெரச்சுப் போட்டு வண்டி யேத்திவுட்டுட்டு வெரசா வூட்டுக்குப் போவலாம். இல்லாட்டா இன்னிக்கும் அகாலமா ஆயிடும். வண்டிக்காரனுங்க கால்ல வெண்ணிர ஊத்திக்கிட்டு வந்து நிப்பானுங்க களம் பொழங்கிவிட்டு வரும்போது முத்தண்ணன் சொன்னது அவள் மனதில்... இன்னும் செத்த நாழிக்கெல்லாம் ‘பாம் பாம்’ன்னு அடிச்சிக்கிட்டு பால்காரர் வந்து நின்னுடுவார். அதுக்குள்ள எழுந்திருச்சி கொட்டுலைச் சுத்தம் பண்ணி கறவப் பசுக்கு தண்ணித் தவிடு வைச்சு பாலக் கறந்து கொடுக்கனுமேங்கிற அவசரத்தில் எழுந்து உக்காந்தாள். மனசு பரபரப்பாய் இருக்கும் அளவுக்கு ஒடம்பு அவளுக்கு ஈடு கொடுக்கவில்லை.

இந்த வீட்டுல அடியெடுத்து வச்ச நாள்லருந்து ஒரு நாளாச்சும் அப்பாடின்னு படுத்திருப்பாளா? சதாகாலமும் சுறுசுறுன்னு... கை புள்ளக் காரியா இருக்கிறப்ப, புருஷன், அம்போன்னு வுட்டுப்புட்டு போயிட்டானேன்னு சுருண்டுக்கிட்டா படுத்தாள்? ஊரு உலகம் மூக்கு மேல கை வச்சிக்கிட்டு பாக்கிறது. போல தான் பெத்தப் பொண்ண முன்னுக்கு கொண்டாந்து வாழ வச்சிக் காட்டனுங்கிற வைராக்கியத்தில தானே இன்னிக்கு வரைக்கும் இந்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள். இப்ப வந்து மனசும் ஓடம்பும் ஒட்டாம அலைக்கழிச்சா அவள் தான் என்ன செய்ய முடியும்?

'...பட்ட இம்சை எல்லாம் எட்டாச்சு. இன்னும் ஏன் கெடந்து லோலுபடனும்?' மவளை எழுப்பி வேலையப் பாக்கச் சொல்லலாங்கிற எண்ணத்தோட, "தங்கம்! தங்கம்!"ன்னு குரல் கொடுத்தவள் சட்டுன்னு நிறுத்திக் கொண்டாள் பாக்கியம்.

இந்தப் பொண்ண வாழ வைக்கத்தானே பத்து வருஷமா இந்தப் பாடுபட்டுக்கிட்டு இருக்கிறோம். எல்லாம் கஷ்டமும் நம்மத் தலையோடயே போவட்டும். ஊரைப் போல பொண்ணப் பெத்தவன் கிட்டக்க இருந்தா நல்லது. கெட்டது செய்யப் போறான்? வயித்தக்கட்டி வாயக்கட்டி வாங்கி வைச்சிருந்த நன்னி புண்ணியயும் சுருக்கு பையில வைச்சிருந்த பணத்தையும் ராத்திரியோட ராத்திரியா தூக்கிட்டு ஓடிப்போன, மனுசனா திரும்ப வந்து நல்லது கெட்டது செய்யப் போறான்?

பாழும் கெணத்தில் தள்ளி விட்டுட்ட பெத்த ஆயாவும், அப்பனும் போய் சேந்தாச்சி. இப்ப என்னா நடக்குதுன்னா கண்ண முழுச்சி முழுச்சிப் பாக்கிறாங்க? ஆயி, அப்பன் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது பாக்கியத்துக்கு.

ஆயி, அப்பன் இல்ல. மாமன் வீட்டுல வளர்ந்த புள்ள. சம்பாதிச்சதெல்லாம் கண்டபடி செலவு பண்ணிப்புட்டு இப்ப வெறும் ஆளா நிக்குது. இருந்தாலும், நாம் அந்தத் தம்பிக்கே பாக்கியத்த கட்டிவச்சா அவ அங்க போயி எட்டு சித்திரம் பண்ணிப்புடுவா. ஏங்கதாங்கலுக்கு நாமும் கையில கெடைக்கிறத செஞ்சா பெரிசா வாழ்ந்துடுங்க. பாக்கியத்தோட ஆயா, அப்பன்காரன் கிட்ட சொல்லி தான், வேலுசாமிக்கு பாக்கியத்த கட்டிவச்சதுங்க.

அப்பயெல்லாம் வேலுசாமியும், பாக்யம் கிழிச்சக் கோட்டத் தாண்டாமத்தான் இருந்தான். தான் குடும்பம் உண்டுண்ணும் தான் வேல உண்டுண்ணும், சம்பாத்தியத்தில்' ஏதோ டீக்கும், பீடிக்கும் எடுத்துக்கிட்டு மீதியெல்லாத்தியும் கொண்டாந்து பொண்டாட்டிக் கையிலக் கொடுத்திட்டு ஒரு வம்பு தும்புக்கு போவாம இருந்தவன் தான்.

ஈட்டுக்கும், பாட்டுக்கும் போக மீதப்பட்டத் சிறுவ சிறுவ சேத்து வச்சு வீடாக்கி, ஆடு மாடாக்கி, நன்னி. புன்னியாக்கி.... சந்தோஷமாத்தான், ஏப்பர் பொண்டாட்டிய உட்டு ஒரு நாழி பிரிஞ்சி இருக்கமாட்டான். அந்த மகசூல்ல நெல்ல வித்து பணத்தக் கொண்டாந்து கொடுத்தவன், "இந்தா பாரு! வர்ற போகத்துக்கு ரெண்டு ‘மா' குறு நெலத்த வாரத்துக்குப் புடுச்சுப் புடுவோம்." புருஷன் சொன்னப்ப அப்புடியே நெகிழ்ந்துதான் கிடந்தாள் பாக்கியம்.

இதுபோல ஒரு புருஷன் கிடைப்பானாங்கிற சந்தோசத்தில அவனைப் பிரிஞ்சி ஒரு ராத்திரிக்கூட... அவன் மட்டும் என்னவாம்? வௌக்கு வச்சுட்டா போதும் சதா காலமும் அவ முந்தாணையப் புடுச்சுக்கிட்டு, அவன் பிடிக்குள் அவள் அன்னியோன்னியப் பட்டுதான் கிடந்தாள்.

தங்கம் பொறந்து கொஞ்ச நாள்ளேயே புருசனுக்கும் டீக்கடைக்கார வீட்டுப் பொண்ணுக்கும் தொடர்பு ஆயிட்டுன்னு அரச புரசலா பாக்கியத்துக் காதில் விழுந்தது. ஒரேயடியா அழுது ரெண்டு நாள் பட்டினி கிடந்த அவளை அவள் புருஷன் கண்டுகொள்ளவே செய்யாமல் ஒண்ணுமே நடக்காதது போலவே அலட்டிக்காம அலட்சியப் படுத்திவிட்டு இருந்தான்.

"நீ பச்சபுள்ளக்காரி. இப்புடி கொலப் பட்டினியா கெடந்தா புள்ளைக்குத்தான் என்னா ஆவும்? ருசி கண்ட ஆம்பளங்க அப்புடி இப்புடின்னுதான் நிக்குங்க. பொம்பளங்க உட்டுதான் புடிக்கனும். புள்ளப் பெத்த ஓடம்பு, வீணா போட்டு அலட்டிக்காத."

பாக்கியத்தைப் பெத்தவள் கேள்விப்பட்டு ஓடியாந்து மவள் பக்கத்திலேயே இருந்து ஆறுதல் சொல்லிக்கொண்டு தான் இருந்தாள். தாயா, புள்ளையா இருந்தாலும் வாயிம், வயிறும் வேறத்தானே? எத்தன நாளு பொண்ணு வூட்டுல வந்து உக்காந்துக்க முடியும்? வேற யாரு எவரு இருக்கான்னு இருந்தாலும், சோறு கெடச்ச எடம் சொர்க்கம்ன்னு உக்காந்துட்டா பாருன்னு தானே ஊரு உலகம் சொல்லும்ன்னு நெனச்சா?

"தங்கச்சி! உன்னோட தலையில அப்புடி எழுதிருந்திருக்கு.... கைய ஊணி கரணம் போட்டு பொண்ண ஆளாக்கிப்புடு. என் கையில கெடக்கிறத உனக்கு செய்யாம நாங்க யாருக்கு செய்யப் போறோம்?" சொல்லிப்புட்டுப் போன மறு வருஷமே மவனைப் பத்தியக் கவலையில் இருந்தே தெக்கப் போயி சேந்தாச்சு.

இந்த ஊருலேயே இருந்த பொண்ணப் படிக்க வச்சி பெரிய வாழ்க்கையா அமைச்சுக் கொடுக்கணும்ங்கிற, வைராக்கியத்திலேயே மனச் ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு நல்ல பக்கத் துணையா முத்தண்ணன்.

இத்தனை வருஷமா எந்த நெனப்பும் இல்லாமல் தான் இருந்தாள். தனக்கும் ஒரு புருஷன் இருந்தான், அவனோட மூணு வருஷம் வாழ்ந்து முந்தானை விரிச்சிருக்கோம்ங்கிற உணர்வே இல்லாமத்தான்... சதா காலமும் மவளே மனசில இருக்கிறப்ப மவ தங்கம் ஆளாயி நின்னுட்டா.

பூந்த, எடத்தில தான் ஒண்ணுமில்லாம போயிட்டு. 'பொறந்த எடத்திலாவது ஒரு மனுஷன் இருக்கிறானா? என்ற கவலை பாக்கியத்தைக் கொத்தி திங்காம் இல்லை.

'தங்கச்சி! உன்கூடப் பொறந்தப் பொறப்பா என்னை நெனைச்சுக்க. என்னோட பொண்ணு புள்ளைங்க உன்னை வேத்துக் கலப்பாவா நெனக்குது? சடங்க வையி சபையில் நான் பொண்ணுக்கு மாமனா உக்கார்றேன்' னு சொன்னதோட உட்டுப்புடாமத்தான் சீர் செனத்தி அத்தனையும் செஞ்சிக் காட்டுனான் முத்தண்ணன்.

பாக்கியம் மவளை எழுப்பினதும், புரண்டு படுத்து உடம்பை நெளித்துக் கொண்ட தங்கம், "என்னம்மா" என்று கேட்டுக் கொண்டே கண்ணை கசக்கியபடி எழுந்து உக்காந்தாள்.

"ஒண்ணுமில்லம்மா, நீ படுத்துக்க. இன்னும் செத்த நாழி தூங்கி எழுந்திரி. அப்பதான் கலகலப்பா இருக்கும். ராத்திரி கூட ரொம்ப நேரம் படிச்சிட்டுத் தானே படுத்தே. என்னமோ மனசுல நெனச்சுட்டு எழுப்பிட்டேன். நான் விடிய கருக்கல்ல போயி வேலயப் பாத்தாதான். வெயில்ல நிக்காம ஓதுங்கிக்கலாம். சிவராத்திரியே இன்னும் வர்ல. அதுக்குள்ள வெயில் தலையப் பொளக்குது" என்று மழுப்பியது போலச் சொன்னாலும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டுதான் எழுந்தாள் பாக்கியம். உடம்பு எடம் கொடுக்க மாட்டேன் என்றது. அதுக்காவ எழுந்திரிக்காம் இருக்க முடியுதா?

நிலா மேக்கால சாஞ்சியிருந்தது. பனியும் ரொம்ப தான், இப்பயெல்லாம் தங்கம் அம்மாவுக்கு அதிகம் தொந்தரவு தராமல் தானே வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அதனால் பாக்கியம் சுத்துப்பட்ட வேலைகளை மட்டும் பாத்து மாட்டைக் கறந்து பால்காரருக்குக் கொடுத்துவிட்டு தூக்கு வாளியில் பழைய சோத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள். அவள் மவள் தங்கம், பள்ளிக்கூடம் போய் வந்த நேரம் போவ ஆக்கவும், இறக்கவும் வந்தபின் அவளுக்கு வேலை கொறவுதான். இல்லாட்டா, எல்லா வேலையும் பாக்கியமே இழுத்துப் போட்டுக் கொண்டு சிரமப்பட வேண்டி வரும்.

பாக்கியம், அம்பட்டன் முக்கால் களத்துக்குப் போம் போது நிலா மறைஞ்சி, மானம் வெளுக்க ஆரம்பிச்சிருந்தது. பனிச்சாரல் இன்னும் குறைந்தபாடில்லை. கடாவடியில் வாங்கி விட்டிருந்த வக்க பரவலாய் நனைஞ்சிருந்திச்சி. முத்தண்ணனும் அவன் மவனும் ஒரு நாழிக்கு முன்னமேயே போய் இருக்க வேண்டும்.

முத்தண்ணன், கடாவடியில் மாடுகளை நிப்பாட்டி புணைதலில் ஈடுபட்டிருந்தான். அவன் மவன், சுள்ளாப்பாய் இருந்த ஒரு இளங்காளை வயலில் இறங்கி ஓடியதை மறித்துக் கொண்டார ரொம்ப பாடுபட வேண்டியிருந்தது. காளை மீது இருந்த கோபத்தைப் போக்கிக் கொள்ளுவது போல் கையிலிருந்து புளியான் விளாரால் நாலு சொடுக்கு சொடுக்கினான். அந்தக் காளையை கடாவடியில நிப்பாட்டி, "அப்பா! இது உள்ளான்ல வைச்சுப் பொணையல் போடுங்க. அப்ப தான் அது திமிரு அடங்கும்." சொல்லியபடி தலைக் கயித்தை அவிழ்த்துப் பிடித்துக் கொண்டான்.

தூக்கு வாளியை பங்கீடாய் ஒரு இடத்தில் வைத்து பக்குவப்படுத்திவிட்டு, கோக்காலியை எடுத்துக் கொண்டு வைக்கல் மேம்புடியாய் புரட்ட ஆரம்பித்தாள் பாக்கியம்.

"பாக்யம்! நீ கடாவடிய ஓட்டு, வைக்க மசிய அவன் எடுத்துப் போடட்டும். நான் நல்லா அலக்கிப் போடுறேன். நேத்து ரொம்ப நெல்லு வீணா வயல்ல போயி சேந்துட்டு. செட்டியாருக்கும் போவாம நாமலும் திங்காம விரையமா போவாமப் பாத்து அள்ளிப் போடுறேன். அங்கயே பிரியப்போட்டு தெரச்சி வண்டியில ஏத்தி விட்டுடலாம்."

சொல்லிக்கொண்டே கடாவடி பொணையலை இழுத்துப் பிடித்து உள்ளான் மாட்டை கடாவடிக்கு மையமா ஓட்டிவிட்டு தலை கயித்தை அவளிடம் கொடுத்து, "கொடியான அதட்டி ஓட்டு" என்று சொல்லிப்புட்டு வைக்கப்போர் ஓரமாய் வெத்தலைப் பாக்கு பொட்டலத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு உக்காந்தான். முத்தண்ணன் வெத்தலைப் பாக்கோடு புகையிலையும் போட்டு வாயில் அடக்கிக் கொண்டால் போதும், ரெண்டு கடாவடி முடியிர வரைக்கும். சளைக்காமல் நிப்பான்.

இன்னிக்குப் பாக்கியத்தை கடாவடியை ஓட்டச் சொன்னதுக்குக் கூட காரணம். இருந்தது. கொஞ்சம் அவளுக்கும் வேலை லெங்கிசாய் இருக்கட்டுமேன்னுதான். நேத்திக்கு அவனே கடாவடியை ஓட்டினான். பாக்கியம் நேத்தைக்கு பொழுதுக்கும் கோக்காலியைப் பிடித்து வைக்கலை அலக்கிப்போட ரொம்ப தான் சிரமப்பட வேண்டியிருந்தது.

கடாவடி ஓட்டுரது அப்புடி ஒன்னும் லெங்குக இல்ல தான் பொணையல்ல. உள்ள எட்டு காளை மாடும் எப்ப சாணிப் போடுதுன்னு பாத்துக்கிட்டு இருந்து சாணி வைக்கல்ல விழுந்திடாம வைக்கல்ல புடிச்சு வாங்கிப் போடணும். உள்ளான் காளைக்கு கால்ல வைக்க சுத்தி கீழ விழுந்திடாம பாத்து கால்ல சிக்குர வைக்கல பிரிச்சுப் போட்டு கொடியான அதட்டி ஓட்டணும். அப்பதான் கடாவடி சீரா போவும். இடுப்பு முட்டும் உள்ள வைக்கல்ல ஓச்ச ஒழிவு இல்லாம சுத்தி வர்ரதுக்குள்ள தாவு தீந்து தான் போயிடும்.

மூணாவது கடாவடியை எறக்கிவிடும்போது சூரியன் உச்சிக்கு வந்துட்டு. பொட்டத் தெடல் அனலாய் தகித்தது. 'ஆவட்ட சோவட்ட' விட்டுப் போய் தான் ஆலமரத்துக் களத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே. உடையார் பண்ணை களம் பொழங்கியது. கிட்டத்தட்ட அது அவர்களுக்கு சொந்தம் போலத்தான். அவர்கள் களம் வச்சிட்டா வேத்தாளுங்க களம் பொழங்க முடியாது. அந்தக் களத்துக்காரவங்களுக்கு சங்கடமில்லாம வேணும்ன்னா ஓரமா ஒதுங்கிக்கலாம்.

முத்தண்ணன் மவன், கடாவடியில் இருந்து அவுத்துவிட்ட காளைகளை ஓட்டிப் போய் களத்தில் இறக்கி தண்ணிக் காட்டி நீச்சலடிக்கக் கொண்டு போக விரட்டிக் கொண்டு போனான். கொஞ்சம் பனிப் பதத்தோட பிரிவுடன்னு தெரச்சிப் போட்ட வைக்கல தூக்கிக்கிட்டுப் போயி ஆலமரத்துக் களத்தில் ஒரு ஓரமாய் போட்டு பிரி திரிக்க பூப் போல உதறி விட்டான் முத்தண்ணன்.

பாக்கியம், நெல்லைப் பட்டறைப் போட்டு அது மேல சாணிப் பால் 'குறி' போட கரைச்சு வைச்சுருக்கும் குடத்தை எடுத்துக் கொண்டு போனாள். திருவாசல் குளத்தில் தண்ணி கொண்டு வந்து முத்தண்ணன் பிரிதிரிக்க உதறி விட்டு இருக்கும் வைக்க மீது தெளித்துவிட்டாள். அந்த வைக்கல நல்லா பிசரிவிட்ட முத்தண்ணன் கொஞ்சம் 'தாள்' வைக்கலை எடுத்துத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டான். புடி அளவுக்கு வைக்கலை எடுத்து இடுக்கிக்கொண்டு, குச்சியை அதில் வைத்து பாக்கியத்திடம் கொடுத்தான். 'பிரி'விடுவதில் அவள் புருஷன் வேலுசாமி கெட்டிக்காரன் அவன் நினைவு வந்து அவளைப் பாடாய் படுத்தியதால் பிரியை முறுக்குவதில் கவனம் இல்லாமல் இருந்தாள்.

"தங்கச்சி! பிரிய இழுத்து முறுக்கு, தொய்வா உடாத" அவளை உஷார் படுத்தினான். பனங்கரையில் உள்ள பனை மரத்தில் மாட்டிருக்கும் பானையில் உள்ள கள்ளைக் குடிக்க காக்கைகள் அலைமோதுவதைப் பாத்துக் கொண்டிருந்தபோது அவனோட பேரன் ஓடி வருவதைப் பார்த்தான் முத்தண்ணன்.

"எலே! ஏலே... மொல்ல வாடா. என்னடா இப்புடி தலை தெறிக்க ஓடியார?"

"தாத்தா ஓவ்.... தங்கம் அக்காவோட அப்பா வந்துருக்காங்க. அம்மாதான் சொன்னுச்சு. அவங்க வூட்டுத் திண்ணையில உக்காந்திருக்காங்க. அவங்கதான் அத்தைய கூப்பிட்டுக்கிட்டு வரச் சொன்னாங்க."

களத்து மேட்டுக்கு வராமல் வரப்பு தலைமாட்டிலேயே நின்னபடியே கத்திக் கொண்டு ஓடி வந்தான். ஆலமரத்துக் களத்தில் களம் பொழங்கியவர்கள் எல்லார் கவனத்திலும் அவன் சொன்னது நின்றது.

"என்னாடா சொல்ற?"

"ஆமாம் தாத்தா... வெள்ள வேட்டி, சட்டைப் போட்டுக்கிட்டு வந்து உக்காந்துருக்கிறத நானும் பாத்தேன். என்னக் கூப்பிட்டு, "ஒப்பன் பேரு என்ன? டான்னு கேட்டாங்க தாத்தா ..."

பாக்கியத்துக்கு மின்சாரம் தாக்கியது போல இருந்தது. 'பாவி மனுசா பொண்டாட்டி பொண்ணு நெனப்பு இருந்தா ஒருத்திய இழுத்துக்கிட்டுப் போயிருப்பியா? பாவி மவனே. ஒனக்கு என்ன கூப்பிட ஏதுடா உருமை?'

அவள் வாய் திறக்கவில்லை. கை பாட்டுக்கு பிரிக் குச்சியை முறுக்கிக் கொண்டிருந்தது.

கேடும் பொளவையும் கேட்காம வந்து போனப் பயலுக்கு இப்ப பொண்டாட்டி நெனப்பு வந்திருக்கு. அப்பன் பேரு தெரியாம நின்னப் பயலுக்கு இந்தப் பொண்ணக் கட்டி வைக்க தானும் தொணை போயிட்டோமேங்கிற நெனப்பு முத்தண்ணனை ஊசி குத்தலாய் குத்தியது.

"ஏப்பா! வேலுசாமி வந்துருக்கானாம்டா. இப்ப தான் பொண்டாட்டி நெனப்பு வந்துருக்கு. டீக்கடைக் காரவூட்டுக் குட்டியத் தள்ளிக்கிட்டுப் போனான்ல்ல! அந்தச் சேப்பு தோலுக்காரி இப்ப அவனுக்கா வடிச்சுக் கொட்டுறா? ம்... அவ அவன அம்போன்னு விட்டுப்புட்டு ஒரு பாத்திரக்காரனத் தள்ளிக்கிட்டுப் போயிட்டாளாம். அய்யா அதான் பொண்டாட்டிய தேடிகிட்டு வந்திருக்கான். ஒரு நாழி பொடவத் துணியப் பாக்காம இருப்பானா?..."

உடையார் களத்தில் வேலை செய்யும் ஆட்கள் சததம் போட்டே நையாண்டியாய் பேசிக் கொண்டது எல்லார் காதிலும் நல்லாவே விழுந்தது.

முத்தண்ணன் கொஞ்ச நாழி யோசனையில் இருந்துவிட்டு, 'எலே! நீ போய் வந்திருக்கிற அந்த ஆளுகிட்ட சொல்லிப்புட்டேன்னு சொல்லிப்புட்டுப் போடா.'

"என்னா தாத்தா? என்னா தாத்தா... அத்தைய வரச் சொல்லு தாத்தா..." நிமுண்டிக்கிட்டே நின்ற பேரனை அதட்டி அனுப்பி வைத்தான் முத்தண்ணன்.

பாக்கியம் வாய் திறந்து பேசவில்லை. ரொம்பவும் ஜாக்கியாத்தான். இருந்தது. முத்தண்ணன் கைகட்டைவிரல் பாட்டுக்கு வைக்கோலை அளவாய் பிரித்துவிட உள்ளங்கை மேட்டால் பிரியைத் தள்ளி அழுத்தமாகத் திரித்துவிட அவள் ஏற்றிவிடும் முறுக்கால் பிரி கதண்டு போல் நீண்டு கொண்டிருந்தது.

"அந்தி.... சந்தின்னு பாக்காமா கூட எப்பயும் ஓடம்பு ஒடம்புன்னு தெனவு எடுத்து நின்னு தீத்துக்க பாடா படுத்திய மனுசன் இப்ப மட்டும் எதுக்கு வந்து கூப்பிட்டு அனுப்புவான்?"

பிறத்தியார். அவளோடு அவன். அன்னியோன்யமாக இருந்த நேரத்தை சுட்டிக் காட்டுவது போல் பேசிய சொல் அவன் மனசில் வேதனையைக் கிளம்பிவிட்டிருந்தாலும், அது உம்மதானே என்பது போல அவன் முகம் இறுகிக் கிடந்தது.

அவள் மனசுக்குள் எவ்வளவோ "எவ்வளவோ"... நெருப்பும், தண்ணியும் இல்லாமல் வெந்து கொண்டிருந்தன.

'சதக்'ன்னு அவள் கையில் குருவியின் எச்சம் விழுந்தது. முகத்தை சுழித்துக் கொண்டாள். வைக்கலை எடுத்து அதை வழித்து எறிந்தாள்.

"பிரி கூட போதும். குருவி எச்சம் வுட்ட எடத்த தண்ணிவுட்டு கழுவிபுடு இல்ல, அந்த எடம் பருவம் கட்டி வெந்து போயிடும்."

முத்தண்ணன் எச்சரித்ததும் மண் தோண்டியில் இருந்த தண்ணிய எடுத்துக் கழுவி கொண்டாள்.

'அது புருஷன் டீக் கடைக்காரக் குட்டியோட ஓடிப்போன அன்னிக்கு இந்த ஊரு வாயில பூந்து பொறப்பட்டு பேச வச்சுட்டுப் போனான். இத்தினி வருஷம் லோலுப்பட்டு சிரிப்பா சிரிச்சு இப்பதான் நிம்மதியா இரண்டு பருக்க திங்குது. இப்ப திரும்பவும் வந்து தொசம் கட்டி அடிக்கிறானே. பாவம் அதுதான் என்னாப் பண்ணும்?'

பாக்கியம் பட்ட இம்சையும் அல்லாட்டமும் முத்தண்ணனுக்கு மட்டும் தானே தெரியும். ஆடி வந்தா பிரிஞ்சி போயி ஆடு அடிச்சா கூடிக்கிற சனங்களுக்கு அடுத்தவங்க மனசு எப்படித் தெரியப் போவுது முத்தண்ணன் நெஞ்சுக்குள் வேதனை.

கடாவடி மாடுகளை பண்ணைக்குக் கொண்டு போய் மறித்துவிட்டு வந்த மவனை, முத்தண்ணன் கூப்பிட்டு, “இந்தப் பிரிகளைக் கட்டிக்க. நாம ரெண்டு பேரும் போய் வைக்கத் தெரப்போம். தங்கச்சி நீ போய் களத்தக் கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணு".

வைக்கப் பிரிகளை கட்டிக் கொண்டு புறப்படும் போது, வெயிலின் வெக்கை தணிந்து போயிருந்தது. காத்தும் சிலுசிலுன்னு ஓடியது.

நேத்துக்கு வைக்கல தெரக்கிறதுக்குள்ள வந்த வண்டிக்காரங்க இன்னிக்கு தெரச்சு போட்டும் வரவில்லை. களத்தில் கணிசமான அளவுக்கு நெல் கிடந்தது. ஒழைச்சப் பாட்டுக்கு வீண் போயிடாம கூலி கெடைச்சிடுங்கிற தெம்பு. சந்தோஷமாய் நெல்லை அளந்து கொண்டிருந்தான்.

ஏதோ அரிசி கருக்கா கெடைக்காதாங்கிற நெனப்புல கருக்கா மூட்டையை அள்ளிப் போட்டு தூத்திக் கொண்டிருந்தாள் பாக்கியம்.

"அம்மா... அம்மா! அப்பா வந்திருக்கு வந்து பாரேன்..." மூச்சு இறைக்க ஓடிவந்த தங்கத்தின் மொகத்தில் எவ்வளவு சந்தோஷம்-? அவன் அப்பா மூஞ்சை மனசில் வரிச்சுக்கறதுக்குள்ள ஓடிப்போனவனை அம்மாவோடு சேத்து எடுத்திருந்த போட்டாவைத் தானே அப்பா என்று பார்த்தவளுக்கு இவ்வளவு சந்தோஷமா...

"ஏய்! ராதிகா... தங்கத்தோட அப்பா ஒருத்தி இழுத்துக்கிட்டுப் போயிட்டாராம்டீ. பாவம்டீ அவ, அவ அம்மா தான் அவளுக்கு எல்லாம் செய்யனுமாம்” சிநேகிதிகள் சொல்லும் போது-

'இந்தப் பொண்ணு பாவம். அப்பன் மூஞ்சக் கூட சரியா பாக்குல. கிளி போல இருக்கிற பொண்டாட்டியயும், பொண்ணையும் உட்டுப்புட்டா ஒரு மனுசன் ஓடுவான். அப்புடி என்னாத்த அவகிட்டக் கண்டான்...' அக்கம் பக்கத்தில் உள்ளவங்க அவள் மீது பரிதாபப்படும் போது-

'உன்னோட அப்பா என்ன வேலப் பாக்கிறார்?'ன்னு வாத்தியார்மார்கள் கேட்கும் போது-

பாக்கியத்து மவ தங்கம் எப்படியெல்லாம் தடுமாறிப் போய் அழுதிருக்கிறாள். இனிமே யாரு கேக்க முடியும்? கேட்டா என் அப்பா இந்தா இருக்காங்கன்னு ரெத்தம் தெறிக்கிறது போல சொல்லலாம்ங்கிற பூரிப்பு, சந்தோஷம் குதூகலிப்பாய் தங்கத்தின் முகத்தில்.

மவளைப் பார்த்த க்ஷணத்திலேயே உணர்ந்து கொள்ளத் தெரியாதவளா பாக்கியம்? ஒவ்வொரு தடவையும் மவ வந்து 'அம்மா இப்படி கேட்கிறாங்கம்மா'ன்னு சொல்லும் போது, 'ஏம்மா அப்பா இப்புடி செஞ்சிட்டுப் போனாரு?' எத்தனை தடவை அம்மாவைக் கேட்டு அழுதிருப்பாள்?

மவளை எப்புடி சமாளிக்கப் போறோமோ என்கிற கவலையை நெஞ்சுக்குள்ளேயே போட்டு அடக்கிக் கொண்டு, "ஏண்டி இப்புடி ஓடியாரே?” என்று கேட்ட அம்மாவின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாமல், "அம்மா...அம்மா...அப்பா வந்திருக்கு, போட்டாவ்ல எப்புடி இருக்கு? இப்ப ரொம்ப எழைச்சுப் போயிருக்கும்மா... நீ எனக்கு வச்சிட்டு வந்த பாலைக் காய்ச்சிக் கொடுத்திட்டு வந்திருக்கேம்மா... ஒண்ணக் கூப்புடத்தான் ஓடியாரேன்.”

பாக்கியம் மவ மனசில் தேக்கி வைச்சிருக்கும் ஆசையை எப்புடி அணைபோடப் போறோம்ங்கிற யோசனையில்... 'ஓப்பன நீ இப்ப தானே பாத்திருக்க? நான் மூணு வருஷம் முந்தாணை விருச்சி வாழ்ந்தவடி'ன்னு சொல்ல நினைத்தாள்.

"தங்கச்சி! நீ கூலியத் தூக்கிக்கிட்டுப் போ. நானும் தம்பியும் கிட்டக்கயிருந்து தெரய வண்டியில ஏத்திவுட்டுட்டு வர்றோம்." பாக்கியம் புருஷனைப் பத்தி ஏதாச்சும் கேட்டுப்புடுவாளோங்கிற நெனப்புலதான் தந்திரமாய் அவளை அனுப்பிவிட அப்புடிச் சொல்லி அனுப்பினான் முத்தண்ணன். இந்த நிலையில் பாக்கியத்தால் எதிர்த்துப் பேச வழி வகையில்லை. பொழுது நல்லாவே எறங்கிக் கொண்டிருந்தது. பொழுதுக்கும் வேர்த்த வேர்வையில் சுருக் சுருக்குன்னு குத்திக் கொண்டிருந்த 'சொணை' அப்போது தான் அடங்கியிருந்தது. குளுகுளுப்பான காத்து வேற... இந்த சுகத்தை அவளால் அனுபவிக்க முடியவில்லை.

கூலி நெல்லு மூட்டையைத் தூக்கிக் கொண்டாள். இத்தனைய நாளை விட இன்னிக்கு கூலியும் மூணு மரக்கா அதிகம். ஒரே கனம். சாம்பான் குறிச்சு வயலில் குறுக்கே இறங்கி நடக்கும் வரை' "ஏம்மா! ஒண்ணும் பேச மாட்டேங்கிற? பேசும்மா பேசு” என்ற நச்சரிப்பாய் தங்கம்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சே பசேலேன்னு பாசிப் பயிறும், உளுந்தும் தழைத்துக் கிடந்தன. தை மொதல்ல வெதச்சதுக்கு தோதா மாசி மொதல்ல கணுக்கா மழை. அதில பயிறு மதமதன்னு வளர்ந்து அடம்பா சங்கு வச்சு நின்றது. முந்தா நாளிலிருந்து தென்னக் காத்து வீச ஆரம்பிச்சதும் பூக்க ஆரம்பித்த பூக்கள் இளம் மஞ்சள் நிறமாய், கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரிந்தன. தலைக்கு மேலே ஜிவ் ஜிவ் என்று பறக்கும் மடையான்கள் எழுப்பும் ஒலி சன்னமாய் அவள் காதில் விழுந்தது எதுவும் அவளுக்கு சுகப்பட வில்லை.

சாம்பான் குறிச்சு வயலை ரெண்டாய் வகிந்து போட்டது போல கிடக்கும் ஒற்றையடிப் பாதை தலைப்பில் பாக்கியத்தோட புருஷன் வேலுசாமி....

"அம்மா! அதா பாரு. அப்பாவே எதிரக்க வருது பாரும்மா" - தங்கம் பயிர்ச்செடிகளை மிதித்துக் கொண்டு தன் அம்மாவைத் தாண்டி அப்பாவை எதிர்நோக்கி ஓட முயன்றாள். அவனும் கிட்டக்கவே, பத்து தப்படியில்...

"இப்பதான் ஒப்பன கண்டிருக்கியாடி. சரிதான் போடி...” பரபரவென்று மவள் தங்கத்தின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போனாள். பாக்கியத்தின் மனகக்கு ஒரேயடியாய் தகித்தது.

அவனை அறியாமலேயே ஒத்தையடிப் பாதையிலிருந்து விலகி பாக்கியத்திற்கு வழி விடுவது போல ஒதுங்கி நின்று கொண்டவன், அவள் போகும் திக்கையே... மதாலித்து நிற்கும் பயிர்கள் தென்னலுக்கு வணங்கிக் கொடுத்து அலை அலையாய்...