மாயத்தை வென்ற மாணவன்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
தமிழாலயம்
137,ஜானிஜான்கான் தெரு,
சென்னை-600014
Title of the book | - | MAYATHAI VENRA MANAVAN |
Author | - | Nara Nachiappan |
Language | - | Tamil |
Edition | - | Second |
Date of Publication | - | February, 1991 |
Copy right holder | - | Author |
Paper used | - | 11.6 kg White Printing |
Size of the book | - | Crown Octavo |
Printing type used | - | 14 point |
Number of pages | - | 64 |
Number of copies | - | 1200 |
Printers | - | Novel Art Printers, Madras-600 014 |
Binding | - | Paper Back |
Price | - | Rs. 3 (Rupees Three) |
Subject | - | A fairy tale |
Publishers | - | Thamizhalayam |
137, Jani Jan Khan Road | ||
Madras- 600 014. |
தன்னுறுதியும் விடா முயற்சியும் மன ஊக்கமும் கொண்டு செய்யப்படும் எச்செயலும் வெற்றி பெறும்; தன் முயற்சி உள்ளவனுக்குத் தெய்வம் தானகவே வந்து உதவி செய்யும்; கடமையே கருத்தாகக் கொண்டவனுக்குப் பொன்னும் பொருளும் புவியும் வசமாகும் என்பன போன்ற உயர்ந்த கருத் துக்களை விளக்குகிறது இக்கதை.
‘மாயத்தை வென்ற மாணவன்’ ஒர் அற்புதமான சிறுவர் இலக்கியம்.
பல ஆண்டுகளாகவே சிறுவர் இலக்கியப் படைப்பில் ஈடுபட்டு இனிய நூல்களை அளித்து வரும் திரு. நாசா நாச்சியப்பன் அவர்களின் இவ்வினிய கதையை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
-தமிழாலயம்
இக் கதை முற்றிலும் கற்பனையே. இதில் குறிப்பிடப்பெறும், இடங்கள், மனிதர்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றுபடாமல் கற்பனையே. எனவே, இதில் குறிப்பிடுவது போன்ற நிகழ்ச்சிகள் ஏதேனும் நடந்தன என்றோ நடக்கின்றன என்றோ நடக்கும் என்றோ யாரும் சொன்னால், அதை நம்பிவிடாதீர்கள்.
அதிர்ச்சி தரும் குரல்
டாண் என்று கோயில் மணி அடித்தது.
உச்சிக் கால பூசை நடக்கத் தொடங்கி விட்டது.
மணிஅடித்த சமயம் அரண்மனையிலிருந்து ஒர் இரதம் புறப்பட்டது. அந்த இரதத்திலே மாமன்னர் சோமசுந்தர மாராயர் அமர்ந்திருந்தார். மாமன்னருக்குப் பக்கத்திலே அந்நாட்டின் அரசி மீன்விழி மாதேவி அமர்ந்திருந்தார்.
அவர்கள் இருவருக்கும் நடுவிலே அவர்களின் அருமைச் செல்வியும் அந்நாட்டின் இளவரசியும் அழகரசியுமான செந்தாமரை உட்கார்ந்திருந்தாள். அரசரும் அரசியும் இளவரசியும் இரண்டு குதிரைகள் பூட்டிய அந்த இரதத்திலே ஏறிக் கோயிலுக்குப் புறப்பட்டார்கள்.
ஒவ்வொருநாளும் அவர்கள் உச்சிக்கால பூசைக்குத் தவருமல் செல்வார்கள். ஆண்டவனிடத்திலே அவர்களுக்கு அவ்வளவு பக்தி.
எந்த வேலை கிடந்தாலும் அந்த நேரத்திலே அதை மறந்துவிடுவார் அரசர். கோவிலுக்குப் போய் வந்துதான் மறுவேலை பார்ப்பார்.
அரச குடும்பம் கோவிலுக்கு வந்த உடனே தீபாராதனை நடந்தது. ஆண்டவன் சிவலிங்க உருவமாய் வீற்றிருந்தார். அவர் நெற்றியிலே பூசியிருந்த திருநீற்றுப் பட்டைகள் வெள்ளித் தகட்டால் ஆகியிருந்தன. தீப ஒளியில் அவை ஒளி வீசித் திகழ்ந்தன. அரசர் பயபக்தியோடு ஆண்டவனை வழிபட்டார். அரசியும் "அரகரமகாதேவா!"என்றுகூறி இறை வனை வணங்கினாள். இளவரசியும் தேவாரம் பாடித் தெய்வநாதனைத் தொழுதாள்.
பூசை முடிந்தது.
குருக்கள் எல்லோருக்கும் திருநீறு வழங்கினார்.திருநீறு பெற்றுக் கொண்டு எல்லோரும் வெளியில் வந்தார்கள்.
அரசரும் அரசியும் இளவரசியும் இரதத் திலே ஏறிக்கொண்டார்கள்.
இரதம் புறப்பட்டது.
அரண்மனை நோக்கிப் பறந்தது. குதிரைகளைச் சாரதி வேகமாகச் செலுத்தினான்
கோயிலிலிருந்து இரதம் சிறிது தூரம்தான் போயிருக்கும். இடியோசை போன்ற ஒருகுரல் ஒலித்தது. அந்தக் குரல் “நிறுத்து," என்று சாரதியை நோக்கிச் சத்தமிட்டது.
குரலைக் கேட்ட அதிர்ச்சியிலே சாரதியின் உடல் வெடவெடவென்று நடுங்கியது.அவன் கையில் இருந்த குதிரை வார் நழுவிக் கீழே விழுந்தது. குதிரைகள் அரண்டு மிரண்டு அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டன.
அரசரும் அரசியும் இளவரசியும் என்ன நேர்ந்தது என்று தெரியாமல் திகைத்துப் பதைத்து விழித்துக் கொண்டிருந்தார்கள்.
“சாரதி, என்ன சத்தம்?" என்று அரசர் கூவினார்.
சாரதி பதில் பேசவில்லை, பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த அவனால் பதில் சொல்ல வாயைத் திறக்கமுடியவில்லை.இடிமுழக்கம் போன்ற சிரிப்பு
பளிச்சென்று ஒரு மின்னல் மின்னியது. கட்டியிருந்த வாரை அறுத்துக் கொண்டு குதிரைகள் வேறு வேறு பக்கங்களில் பாய்ந்தோடின.சாரதி மயக்கம் போட்டுக் கீழே விழுங்தான். திடீரென்று ஏற்பட்ட வெளிச்சத்தில் கண்கூசியது.அரசியும் இளவரசியும் கண்களை மூடிக் கொண்டார்கள்.
மர்மன்னர் சோமசுந்தர மாராயரின் கண்களும் அந்த மின்னல் வெளிச்சத்தில் கூச்சமடைந்தன. இருந்தாலும் அவர் உடனே விழித்துக்கொண்டார். ஐம்பத்தாறு தேசங்களையும் தன் தோள்வலியாலும் நெஞ்சுறுதியாலும் வென்று வாகை சூடிய அவருக்கு அந்த நேரத்திலும் அச்சம் உண்டாகவில்லை.
விழித்தகண் விழித்தபடியே எதிரே நடப்பது என்ன என்று அறிய அவர் முயன்று கொண்டிருந்தார்.
எதிரில் சிறிது தூரத்திலே ஒரு புலிபாய்ந்து வந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு அது மன்னரை நோக்கிப் பாய்ந்து வருவது போல் இருந்தது.மன்னர் கண்ணிமைக்காமல் சிறிதும் மனங்கலங்காமல் அதை உற்று நோக்கினார்.
அந்தப் புலியின் முதுகிலே ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். அவன் கையிலே ஒருகோல் வைத்திருந்தான். அந்தக் கோலிலிருந்துதான் மின்னல் ஒளி பாய்ந்து வந்துகொண்டிருந்தது.
அரசர் எதிரில் வந்ததும் புலி நின்றது. புலியின் முதுகில் இருந்த அந்த மனிதன் பேசத் தொடங்கினான்
அவன் முகம் பார்ப்பதற்கு ஒரே அவலட்சணமாயிருந்தது. குழிவிழுந்த கண்களின் பார்வை மிகக் கொடூரமாயிருந்தது. அவன் மூக்கும் மீசையும் அவன் உருவத்தை மேலும் விகாரமாகத்தான் எடுத்துக் காட்டின.
அவன் வாயிலிருந்து இரண்டு பற்கள் வெளியில் நீட்டிக் கொண்டிருந்தன.
அவனையும் அவன் தோற்றத்தையும் அவன்தன்னை நோக்கிய பார்வையையும் கண்ட மன்னர் அவன் நன்மைக்காக வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்
தன் எதிரில் வந்து, தலைவணங்காமல் புலியின் முதுகில் அமர்ந்தபடி தன்னைக் கொடூரமாய் நோக்கிய அந்த மனிதனைப் பார்த்து, மாமன்னர் சோமசுந்தர மாராயர் பேசத் தொடங்கினர்.
"தீய உருவமும் தீய பார்வையும் தீய செயலும் கொண்ட மனிதனே, நீ யார்? எதற்காக என்னைத் தேடிவந்திருக்கிறய்? என்ன வேண்டும்? சொல்!" என்று கேட்டார் மாமன்னர்.
"ஐம்பத்தாறு தேசங்களையும் வென்று ஆட்சி நடத்துகின்றோம் என்ற ஆணவங்
கொண்ட அரசனே, கேள்! நீயும் உன் செங்கோலும் எனக்கு முன் ஒரு தூசிக்கு நிகர்.இப்போது நான் உன்னை ஏன் தேடி வந்திருக்கிறேன் என்றுதானே கேட்கிறாய். அதற்கு உடனே விடை சொல்லுகிறேன். உன் மகள் இளவரசி செந்தாமரையை எனக்கு கொடுத்துவிடு. அவளைக் கொண்டு செல்லத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்!" என்றான் அந்த மனிதன்.
“ஏ கொடிய மனிதனே, தானம் கேட்பதற்கும் ஓர் எல்லையுண்டு" என்றார் மாராயர்.
“அரசனே, நான் உன் மகளைத் தானமாகக் கேட்கவில்லை. உன் மகளை என்னிடம் கொடு என்று கட்டளையிடுகிறேன். என் கட்டளையை மீறி நடக்க உன்னால் முடியாது. உன் ஐம்பத் தாறு தேசத்துப் படை பட்டாளங்கள் எல்லாம் சேர்ந்து வந்தாலும் என் சுண்டு விரல் நகத்தைக் கூட அசைக்க முடியாது." என்று பயங்கரமாகக் கூறினான் அந்த மனிதன்.
"ஏ, பைத்தியக்காரனே, வழியைவிட்டு விலகி நில். இல்லாவிட்டால் என் கோபத்திற்கு ஆளாவாய்!" என்றார் மாமன்னர்.
"அரசனே, உன் கோபம் எனக்கு ஒரு துரும்பு! கடைசி முறையாகக் கட்டளையிடுகிறேன். உன் மகளை என்னிடம் கொடுத்து விடு!" என்றான் புலியேறி வந்த அந்தப் பொல்லாத மனிதன்.
“கொடுக்க முடியாது!" என்று கோபாவேசமாகக் கூவினார் அரசர்.
"முடியாதென்றா சொன்னாய்? என்னை இன்னார் என்று நீ இன்னும் அறிந்து கொள்ளவில்லை. ஹா ஹா...ஹா...ஹா..." என்று இடி போலச் சிரித்தான் அந்த மனிதன்.அந்த மனிதன் ஏதோ சொல்லப் போகிறான் என்பதை மன்னர் அறிந்து கொண்டார். அவன் சொல்வதைக் கேட்க அவர் ஆயத்தமாய் இருந்தார்,
"மண்டலங்களை யெல்லாம் கட்டியாளுகிறோம் என்ற மமதை கொண்ட மன்னனே, கேள். முதலில் நான் யார் என்பதைச் சொல்கிறேன். அதன் பிறகு உன் மகளை நான் தேடி வந்த காரணத்தைச் சொல்கிறேன்.
"வடநாட்டில் உச்சயினி என்ற பெயரிலே ஒரு பட்டணம் உண்டு. அந்த பட்டணத்து மன்னனைத் தோற்கடித்து நீ கப்பம் வாங்கிவருகிறாய். ஆதலால் அந்தப் பட்டணத்தைப்பற்றி உனக்கு நன்றகத் தெரியும். ஆனால் அதற்குப் பக்கத்திலே யிருக்கும் பாலைவனத்தைப் பற்றி நீ யறிய மாடடாய்.
"அந்தப் பாலைவனத்தின் மத்தியிலே ஒரு சுடலையுண்டு. அந்தச் சுடலையிலே பேய்கள் பட்டப்பகலிலே நடனமாடும். அவற்றை யெல்லாம் அடக்கிவைத்திருக்கும் ஒரே மனிதன் யார் தெரியுமா?
"நான்தான்!
"நான் ஒரு மந்திரவாதி. என் மந்திர தந்திர வித்தையினால் பேய்களை அடக்கிவைத்திருக்கிறேன். மாயமந்திரங்களால் இந்த உலகிலே நான் இணையற்ற ஆட்சி நடத்தி வருகிறேன்.
"மந்திரவாதி உருத்திர கோபன் என்றால் சிரித்துக்கொண்டிருந்த பிள்ளையும் அழத்தொடங்கிவிடும். வாழைப்பழத்தை உரித்துக் கொண்டிருந்த பிள்ளையும் அதை நழுவவிட்டுவிடும். அழுத பிள்ளையும் வாய்மூடும், அடங்காத பிள்ளையும் அடங்கும். வடநாட்டிலே எந்தப் பட்டணத்திலே நான் நுழைந்தாலும் அந்தப் பட்டணத்து வீதியெல்லாம் சுடுகாடு போலாகிவிடும். ஒரு நாய் கூட வீதியிலே நடந்து செல்லாது. என் பெயர் கேட்டால் அத்தனை பயம்.
"நான் எப்போதும் இந்தப் புலிவாகனத்திலே தான் ஏறி வருவேன்.
“இத்தனை வல்லமை யிருந்தும் எனக்கு நிம்மதியில்லை.
"மனிதர்கள் எல்லாரும் என்னைக் கண்டு மருளுகிறார்கள். பேய்கள் எல்லாம் எனக்கு அடங்கி நடக்கின்றன. ஆனால், தேவதைகள் மட்டும் என்னைக் கண்டால் அஞ்சுவதில்லை. அவற்றையும் அடக்கி ஆளவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டுவிட்டது. இதற்காக நான் அரக்கர்களின் மூல நாயகியான மூளியம்மனை நோக்கித் தவமிருந்தேன். அவள் தனக்கொரு பலி கேட்கிறாள். பேரழகு பொருந்திய ஒரு பெண்ணைத் தனக்குப் பலியிட்டால், அந்த வல்லமையை எனக்கு வரமாகக் கொடுப்பதாக மூளியம்மன் கூறினாள்.
"உலகத்திலேயே பேரழகு பொருந்திய பெண் யாரென்று நான் ஆருடம் பார்த்தேன். உன் மகள் இளவரசி செந்தாமரைதான் என்று தெரிந்து கொண்டேன். உடனே இங்கு புறப்பட்டுவந்தேன். என் ஆசைக் கனவுகள் நிறைவேற உன் மகளை மூளியம்மனுக்குப் பலியிட வேண்டும்.
"உன்மகளைக் கொண்டு செல்வதற்காகவே நான் ஓடோடி வந்தேன். ஆகவே மறுக்காமல் உன் மகளைக் கொடுத்துவிடு" என்றான் மந்திர வாதியான அந்த மனிதன்.
"அடே மந்திரவாதி உன்னைப் பார்த்த உடனேயே உனக்கு எதுவும் கொடுப்பதில்லை என்று நான் முடிவு கட்டிவிட்டேன். உன் விளக்கத்தைக் கேட்டபிறகு அந்த எண்ணமே எனக்கு உறுதிப்படுகின்றது. உனக்கு என் மகளைத் தரமுடியாது. நீ தெரிந்ததைப் பார்த்துக் கொள்" என்று உறுதியான குரலில் கூறினார் மாமன்னர்.
இதைக் கேட்ட மந்திரவாதி பற்களை நறநறவென்று கடித்தான்.
"ஏ, அரசனே! நீ மண்டலங்களை ஆளுகின்ற மன்னர்களையெல்லாம் கட்டியாளுகின்ற மாமன்னாய் இருக்கலாம். ஆனால், நான் மந்திரங்களையும் பேய்களையும் பூதங்களையும் கட்டியாளுகின்ற மந்திரவாதி என்பதை மறந்து விடாதே. என் ஆற்றலை யறிந்தால் நீ இவ்வளவு மமதையாகப் பேசமாட்டாய். சரியாக இன்னும் ஒரு மாதத்தில் உன்னைக் காணத்திரும்பி வருகிறேன். அதற்குள் நீ உன் மனத்தை மாற்றிக் கொண்டு எனக்கு இளவரசியைக் கொடுத்துவிட்டால் சரி. இல்லாவிட்டால் என் மந்திர சக்தியால் உனக்கு என்னென்ன கெடுதல் செய்யவேண்டுமோ அவ்வளவும் செய்வேன். அதுவரையில் உன் அழகிய மகள் தூங்கிக்கொண்டே யிருக்கட்டும்" என்று கூறினான்.
அந்த மந்திரவாதி தன் கையில் மின்னிக் கொண்டிருந்த கோலை உயர்த்தி இளவரசியின் தலையில் ஓர் அடி அடித்தான். அவ்வளவு தான் பயத்தால் கண்ணை மூடிக் கொண்டிருந்த இளவரசி சோர்ந்து கீழே விழுந்தாள். அல்லிக்கொடி துவண்டு கிடப்பது போல் அவள் இரதத்தின் கீழ்த் தட்டில் தன்னினைவு அற்றுக்கிடந்தாள்.
மாமன்னர் சோமசுந்தர மாராயர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நிமிர்ந்து பார்த்தபோது மந்திரவாதியைக் காணவில்லை. அவன் மறைந்து போய்விட்டான். -2-
கோயில் குருக்களின் ஆலோசனை
மந்திரவாதி அந்த இடத்தை விட்டு அகன்ற பின் மீன்விழி மாதேவியார் கண்விழித்தார். கவலையோடு மாமன்னர் அமர்ந்திருப்பதையும் இளவரசி செந்தாமரை இரதத்தின் கீழ்த் தட்டில் விழுந்துகிடப்பதையும் கண்டு அவர் பதறிப் போனர். நடந்தவற்றை அரசர் கூறக் கேட்ட போது அரசியாரின் கலக்கம் மேலும் அதிக மாயிற்று.
"அரசே, இம்மாதிரியான இக்கட்டான சமயங்களில் ஆண்டவனின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? இப்பொழுதே நாம் மீண்டும் கோயிலுக்குத் திரும்புவோம், இறைவன் நம்மைக் காப்பாற்றுவார்" என்று கூறினார் மீன்விழி மாதேவியார்.
அதுவே சிறந்தவழி என்று மாமன்னரும் உணர்ந்தார்.
மயங்கிக்கிடந்த சாரதியைத் தட்டி எழுப்பினர். அவன் எழுந்திருக்கவில்லை. முகத்தில் சிறிது தண்ணீர் தெளித்தார். கண்களைக் கசக்கிக் கொண்டே அவன் எழுந்திருந்தான். மந்திரவாதி இருக்கிறானா என்று சுற்று முற்றும் நோக்கினான். இல்லை என்று தெரிந்தபின் எழுந்து நின்றான்.
"குதிரைகள் பக்கத்தில் எங்காவது நிற்கும். விரைவில் அவற்றைப் பிடித்துக் கொண்டுவா!" என்று மாமன்னர் கட்டளையிட்டார்.
சாரதி விரைந்து சென்றான். சிறிது நேரத்தில் இரு குதிரைகளையும் கண்டுபிடித்து நடத்திக்கொண்டு வந்தான். இரண்டையும் இரதத்தில் பூட்டினான். அரசர் கட்டளையின்படி மீண்டும் திருக்கோயிலுக்குச் செலுத்தினான்.
கோயில் வாயிலில் குருக்கள் நின்று கொண்டிருந்தார்.
வழக்கத்துக்கு மாறுபாடாக மாமன்னர் கோயிலுக்குத் திரும்பி வந்ததைக் கண்டு அவர் வியப்படைந்தார்.
மாமன்னரும் அரசமாதேவியும் இரதத்தை விட்டுக் கீழே இறங்கி வந்தார்கள். பக்கத்தில் இருந்த சில மனிதர்களின் உதவியோடு சாரதி இளவரசியைத் தூக்கிக் கொண்டுவந்தான். அவளைக் கோயிலினுள் கொண்டு சென்று இறைவன் முன்னிலையில் கிடத்தினார்கள்.
மாமன்னர் குருக்களிடம் நடந்த செய்திகளைக் கூறினார். மந்திரவாதியின் தீமைக்கு இலக்காகாமல் தன் மகளைக் காப்பாற்ற வழி சொல்லவேண்டும் என்று கேட்டார்.
அந்தக் கோயில் குருக்கள் மிகுந்த பெயரும் புகழும் உடையவர். அவர் திருநீறு கொடுத்தால் தீராத நோயும் தீரும்; ஆறாத புண்ணும் ஆறும். அவர் தண்ணீர் மந்திரித்துக் கொடுத்தால் காணுமற்போன பொருளும்கைக்கு வந்து சேரும். போகாமற் பிடித்திருக்கும் பேயும் போனேன் போனேன் என்று கதறிக் கொண்டு ஓடிப்போகும். அப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்த குருக்களிடம் அரசர் ஆலோசனை கேட்டார்.
அரசர் கூறிய செய்திகளை யெல்லாம் குருக்கள் கேட்டார். பிறகு அரசரையும் அரசியாரையும் எதிரில் அமரச் சொன்னர். தானும் ஓர் ஆசனப் பலகையில் அமர்ந்தார். உள்ளங்கையில் திருநீற்றை எடுத்து வைத்துக்கொண்டு வாய்க்குள் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார். இறைவனைத் தொழுதுவிட்டு மந்திரித்த அந்தத் திருநீற்றை எதிரில் துவண்டு கிடந்த இளவரசி செந்தாமரையின் நெற்றியில் பூசினார்.
இளவரசி அசையவில்லை.
குருக்கள் வியப்படைந்தார். அன்றுவரை அவர் மந்திரித்த திருநீறு வீணாகியதில்லை. இன்று அந்தத் திருநீற்றைப் பூசியும் எவ்விதமான பலனும் இல்லை என்பதைக் கண்ட போது அவர் திகைப்படைந்தார்.
மீண்டும் அவர் தம் ஆசனப் பலகையில் அமர்ந்தார். தம் உள்ளங்கையில் திருநீற்றை அள்ளி வைத்துக்கொண்டார். அதில் வெற்றிலைக் காம்பால் வட்டமாக ஒரு சக்கரம் வரைந்தார். அந்தச் சக்கரத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார். பயபக்தியோடு மாமன்னரும்
சிறிது நேரத்குற்குப் பின் குருக்கள் பேசத் தொடங்கினார்.
"மன்னர்பிரானே, இந்த மந்திரவாதி மிகப் பொல்லாதவன். அவன் ஆற்றல் மிகமிகப் பெரியது. அதனால் தான் முதலில் மந்திரித்த திருநீறு வேலை செய்யவில்லை.
"வடநாட்டிலே உச்சயினிப் பட்டணம் என்று ஒரு பட்டணம் இருக்கிறது. அதற்குப் பக்கத்திலே ஒரு பாலைவனம் இருக்கிறது. அந்தப் பாலைவனத்திலே நெருப்புப் பொறிகள் பறக்கும். அந்த நெருப்புப் பொறிகளைப் பந்தாடி விளையாடிக் கொண்டு பேய்க் கூட்டங்கள் திரியும். அந்தப் பேய்க் கூட்டங்களையெல்லாம் அடக்கி வைத்திருக்கிறான் இந்த மந்திரவாதி. அதனால் இவன்மிக வல்லமையோடிருக்கிறான்.
"பாலைவனத்தின்பக்கத்திலே ஒரு கல்மலையிருக்கிறது. அந்தமலையின் அடிவாரத்தில் ஒரு பெரிய குகையிருக்கிறது. அந்தக் குகையில் தான் உருத்திரகோபன் என்ற இந்த மந்திரவாதி இருக்கிறான். "அவன் மேலும் வல்லமை பெறுவதற்காக அரக்கர்களின் மூல நாயகியான மூளியம்மனை நோக்கித் தவமிருக்கிறான். மூளியம்மனுக்குப் பலிகொடுக்கவே தங்கள் மகளைக் கேட்க வந்திருக்கிறான்.
“மன்னர்பிரானே, நீங்கள் மனமொப்பி உங்கள் மகளைக் கொடுத்தால்தான் மூளியம்மன் அந்தப்பலியை ஏற்றுக்கொள்வாள். நீங்கள் கொடுக்க மறுத்துவிட்டால் அவன் உங்கள் மகளைத் தூக்கிக் கொண்டு போக முடியாது. ஆகவேதான் அவன் அப்பொழுதே உங்கள் மகளைத் தூக்கிக் கொண்டு போகவில்லை.
"ஆனால், உங்கள்மகளைப் பெறுவதற்காக அவன் உங்களுக்குப் பல கேடுகளைச் செய்வான். அவன் செய்யும் கேடுகளுக்குப் பயந்து நீங்கள் உங்கள் மகளைக் கொடுத்துவிட்டாலும் அதனால் நன்மை வரப்போவதில்லை. மூளியம்மனின் வரத்தால் பெரும் வல்லமையடையும் உருத்திர கோபன் தேவதைகளையும் அடக்கியாள முற்படுவான். தேவதைகளை அடக்கும் வல்லமை பெற்றுவிட்டால், அவன் உலத்தில் தன் விருப்பப்படி யெல்லாம் தீமை செய்யத் தொடங்கிவிடுவான். அதனால் உலகத்திற்குப் பெருங் கேடே யுண்டாகும்" என்றார் குருக்கள்.
"குருக்களையா, இந்தக் கேட்டையெல்லாம் தவிர்ப்பதற்கு வழி என்ன? என் மகள் இந்தக் கொடிய தூக்கத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு பணம் செலவானாலும் சரி. நல்லவழியைச் சொல்லுங்கள்" என்றான் அரசன்.
"அரசர்க்கரசே, இந்த மந்திரவாதியை வெல்லக் கூடிய ஆற்றல் வேறு எந்த மந்திரவாதிக்கும் இல்லை. அவனைக் கொல்வதற்கு என்னாலும் முடியாது; என்னைப்போன்ற எவராலும் முடியாது. மந்திரவாதியைக் கொன்றால் தான் இளவரசியை எழுப்பமுடியும். அவனைக் கொல்வதற்கு ஓர் இளைஞன்வேண்டும். அந்த இளைஞன், அஞ்சாத நெஞ்சம் படைத்தவனாகவும், மாய மந்திரங்களைக் கண்டு மனங் கலங்காதவனாகவும், தெய்வ நம்பிக்கை யுடைய வனாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஓர் இளைஞன் தான் மந்திரவாதியைக் கொல்ல முடியும்" என்றார் குருக்கள்.
"குருக்களையா, அப்படிப்பட்ட ஓர் இளைஞனைக் கொண்டு வாருங்கள். அவன் அந்த மந்திரவாதியைக் கொன்று என் மகளை உறக்கத்தினின்று எழுப்பி விட்டால், எவ்வளவு பணம் வேண்டுமானலும் கொடுக்கிறேன்" என்றார் மாமன்னர்.
"வேந்தர் பிரானே, வெறும் பொருளுக்காக யாரும் உயிருக்குத் துணிந்து வர மாட்டார்கள். மேலும் அப்படிப்பட்ட வீர இளைஞன் எங்கிருக்கிறான் என்று யாராலும் கண்டுபிடிகக முடியாது. உங்கள் அரசில் பாதியை-அதாவது இருபத்தெட்டுத் தேசங்களை அந்த இளஞனுக்குக் கொடுத்துவிடுவதாக உறுதியளிக்க வேண்டும். ஐம்பத்தாறு தேசங்களிலும் உள்ள நாடு நகரம் பட்டி தொட்டிகளிலெல்லாம் முரசறைந்து இந்தச் செய்தியைத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகுதான் எங்கிருந்தாவது ஓர் இளைஞன் கிளம்பிவருவான்" என்றார் குருக்கள்.
கோயில் குருக்கள் சொன்ன ஏற்பாடு மாமன்னருக்குப் பிடிக்கவில்லை. அவர் தன் மகளை எழுப்ப எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கத் துணிந்திருந்தார். ஆனால், எத்தனையோ போர்கள் செய்து, வீரர்களைப் பலி கொடுத்துத் தன் ஆட்சிக்கு உட்படுத்திய பேரரசில் பாதியைக் கொடுக்க அவர் மனம் ஒப்பவில்லை.
மன்னர் பிரான் மனத்தில் தோன்றிய எண்ணங்களைக் குருக்கள் அறிந்து கொண்டார்.
"அரசர் பிரானே, நீங்கள் நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மகளை இக் கொடிய நெடுந் தூக்கத்திலிருந்து எழுப்புவதற்கு இருபத்தெட்டுத் தேசங்களைப் பரிசு கொடுப்பதைத் தவிர வேறு வழி எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் ஒரு முடிவுக்கு வரும் வரை, இளவரசியை அரண்மனையில் ஓர் அறையில் படுக்க வைத்திருங்கள். அந்த அரண்மனையில் இளவரசியிடம் அன்புள்ள ஒரு பெண்மணியைக் காவல் இருக்கும்படி செய்யுங்கள். பிறகு மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறினார் குருக்கள்.
குருக்களிடம் விடை பெற்றுக்கொண்டு அரசர் பிரான் தம் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்.
இளவரசி செந்தாமரையை ஓர் அழகிய அறையில் படுக்க வைத்தார்கள். பட்டு மெத்தை விரித்த கட்டில் ஒன்றிலே துவண்டு கிடக்கும் பூங்கொடி போல இளவரசி கிடந்தாள். இமை மூடி அவள் தூங்கும்போது. கண் திறக்காத அழகிய பளிங்குச் சிலையொன்று சாய்ந்து கிடப்பது போலிருந்தது. அந்த அறையில், அரச பக்தியும், இளவரசியிடம் மிகுந்த அன்பும் கொண்ட தாதி ஒருத்தி காவலாக அமர்த்தப்பட்டாள். அவள் அல்லும் பகலும் அந்த அறையை விட்டு அகலாது காத்துக் கொண்டிருந்தாள்.
மாமன்னரும் அரசமாதேவியாரும் நாள் தோறும் இளவரசியை வந்து பார்த்துப் பார்த்துச் சென்றார்கள். நாளுக்கு நாள் இளவரசியின் உடல் இளைத்துக் கொண்டு வந்தது. இளைக்க இளைக்க அவள் உடலில் புது அழகுபொலிந்துதோன்றியது. ஒவ்வொரு நாளும் அவள் முகத்தைப் பார்க்கும் போது அது முன்னைக் காட்டிலும் அழகுடன் விளங்கியது.
இப்படி ஒரு வாரம் கழிந்தது. மாமன்னர் சோமசுந்தர மாராயரால் தன் மகள் நிலையைக் கண்டு பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. இருபத்தெட்டுத் தேசங்களைக் கொடுத்தாலும் இப்படிப்பட்ட அழகான இளவரசியைக் காப்பாற்றுவதற்கு ஈடாகாது என்று எண்ணினர். தம் மகளைக் காப்பாற்ற எதை வேண்டுமானுலும் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். கோயிலுக்குச் சென்றபோது குருக்களிடம் தம் முடிவைக் கூறினார்.
குருக்கள் அரசர் பிரானைப் பாராட்டினர். "உடனே இச் செய்தியை ஐம்பத்தாறு தேசங்களிலும் உள்ள ஏழு லட்சம் ஊர்களிலும் முரசறைய ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறினர்.
அவ்வாறே மாமன்னர் நாடெங்கும் முரசறையச் செய்தார்.
மணிவண்ணனின் எண்ணம்
புள்ளம்பாடி என்பது ஒரு சின்னஞ் சிறிய ஊர். அந்த ஊரிலே மொத்தம் நூறு வீடுகள் கூட இருக்காது. அந்த வீடுகளிலே ஐந்தாறு வீடுகள்தான் ஒட்டு வீடுகள். மற்றவை யெல்லாம் ஒலைக் குடிசைகள். அவற்றிலே தென்னங் கீற்ருேலைக் குடிசைகளும் இருந்தன, பனையோலைக் குடிசைகளும் இருந்தன. அந்தக் குடிசைகளில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஏழைகள் என்று சொல்லியா தெரிய வேண்டும்.
பெரும்பாலும் அந்த ஊரில் இருந்த மக்கள் உழவுத் தொழிலே செய்து பிழைத்து வந்தார்கள். அவர்களுடைய பிள்ளைகள் படிப்பதற் காக ஒரு சிறு திண்ணைப் பள்ளிக் கூடம் இருந்தது.
அதைப் பிடியரிசிப் பள்ளிக்கூடம் என்றும் சொல்லுவார்கள். அந்தத் திண்ணைப் பள்ளிக் கூடத்து ஆசிரியரும் ஒர் ஏழை. அவருக்கு, படிப்புச் சொல்லிக் கொடுப்பதற்காக ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு நாளும் ஒருபிடி அரிசி கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும். சில பணக்காரப் பிள்ளைகள் அரிசியோடு காய்கறியும் கொண்டுவந்து கொடுப்பார்கள். இந்த வரும்படியை வைத்துக் கொண்டு அந்த ஆசிரியர் தம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
அந்த ஊரிலே ஒரு சிறு கோயில் இருந்தது. அது பிள்ளையார் கோயில். அந்த ஊர் மக்கள் அந்தப் பிள்ளையாரைத்தான் கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தார்கள். ஊர்க் கூட்டமும் அங்கேதான்-கோயில் வாசலில் தான் நடக்கும்.
பள்ளிக் கூடத்துப்பிள்ளைகள் நாள்தோறும் அந்தக் கோயிலுக்கு வந்து பிள்ளையாரை வணங்கி விட்டுத்தான்பாடம் படிக்கப்போவர்.
ஒருநாள் பிள்ளையார் கோயில் வாசலிலே முரசடிக்கும் ஓசை கேட்டது. என்றுமில்லாத அதிசயமாய் அன்றுமுரசுச்சத்தம் கேட்டவுடன், ஊரில்உள்ளவர்கள் எல்லோரும் வந்து கோயில் வாசலிலே கூடிவிட்டார்கள். ஆண்கள், பெண்கள் சிறியவர் பெரியவர் எல்லோரும் கூடி விட்டார்கள், அவர்களைப் பார்த்து அந்த முரசறைபவன் கூறினன்:
"ஐம்பத்தாறு தேசங்களையும் அரசாளும் மன்னதி மன்னர், மாவீரர் வெற்றிக் கொடி வேந்தர், அறநெறி பிறழாது ஆட்சி செய்யும் அன்பரசர், மாமன்னர் சோமசுந்தர மாராயர் விடும் அறிக்கை இது. மாமன்னருடைய மகள் அழகுச் செல்வி செந்தாமரையை மந்திரவாதி யொருவன் நெடுந் தூக்கத்தில் கிடக்கும்படி செய்து விட்டான். புலிவாகனமேறி வரும் அந் தப்பொல்லாத மந்திரவாதியின் பெயர் உருத் திரகோபன். அவன் உச்சயினிப் பட்டணத்துக் கருகே யுள்ள பாலைவனத்தின் ஓரத்தே யுள்ள மலைக்குகை யொன்றிலே இருக்கிருன். அவனைக் கொன்று இளவரசியைத் துயிலெழச் செய்யும் வீர இளைஞனுக்கு மாமன்னர் தம் பேரரசில் சரிபாதியைப் பரிசாகத் தருவார்.இந்த வீரச் செயலைச் செய்ய முன் வரும் இளைஞர்கள் எந்த நேரத்திலும் மாமன்னரைப் பேட்டி காணலாம். மாமன்னர் சோமசுந்தர மாராயர் ஆணையிது...டொம்டொம்....மாமன்னர் சோம சுந்தர மாராயர் ஆணையிது டொம்...டொம்... டொம்...
இப்படி மூன்று முறை மாமன்னர் அறிக் கையை வாசித்து முரசு கொட்டி விட்டு அந்த ஆள் அடுத்த ஊரை நோக்கிச் சென்று விட்டான்.
அன்றெல்லாம் ஊர் முழுவதும் இதே பேச்சாய் இருந்தது.
மாமன்னருக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கேட்டுச் சிலர் வருந்தினர்கள்.மந்திரவாதியின் வல்லமையைக் கேட்டுச் சிலர் அஞ்சினர்கள். யாரால் ஆகும் இந்தச் செயல் என்று சிலர் பேசினர்கள்.நாலைந்துநாட்கள் ஊரெங்கும்இதே பேச்சாய் இருந்தது. பிறகு சிறுகச் சிறுக இந்தப் பேச்சுக் குறைந்து விட்டது. ஒவ்வொருவரும் தத்தம் வேலையைக் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள்.
திண்ணைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர் ஒருநாள் தனியாக உட்கார்ந்திருந்தார். பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு புள்ளம்பாடியிலிருந்து பெரும்பாலோர் போய் விட்டார்கள். பள்ளிப் பிள்ளைகளுக்கும் அன்று விடுமுறை விட்டு விட்டார் ஆசிரியர். அவருக்குத் தலை வலியாக இருந்ததால் திருவிழாவுக்குப் போகவில்லை பள்ளிக் கூடத்துத் திண்ணையின் மேலேயே சோம்பலாகச் சாய்ந்துகொண்டிருந்தார்.
"ஐயா வணக்கம்!" என்ற குரல் கேட்டுத்திண்ணைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர் வாசல் பக்கம் திரும்பிப் பார்த்தார்.
அவரிடம் பத்தாவது வகுப்புப் பாடம் படிக்கும் மணிவண்ணன் நின்று கொண்டிருந்தான்
"மணிவண்ணா, வா. நீ திருவிழாவுக்குப் போகவில்லையா?" என்று கேட்டார் ஆசிரியர்.
"போகவில்லை" என்றான் மணிவண்ணன்.
“என்ன! ஏதேனும் செய்யுள்படிக்க வேண்டும் என்று வந்தாயா?" என்று கேட்டார் ஆசிரியர்.
செய்யுள் பாடம் மற்ற பிள்ளைகளுக்கு வேப்பங்காய் மணிவண்ணனே அதை மிகவும் விரும்பிப் படித்து வந்தான். அதனால்தான் ஆசிரியர் அப்படிக் கேட்டார்.
"அதற்கில்லை ஐயா, தங்களிடம் ஓர் யோசனை கேட்க வந்தேன்" என்று மணிவண்ணன் கூறினான்.
ஆசிரியருக்கு வியப்பாய் இருந்தது. மணிவண்ணன் தன்னிடம் அப்படி என்ன யோசனை கேட்கப் போகிறான் என்று வியப்புடன் அவனை உற்று நோக்கினர்."ஐயா, மாமன்னர் மகளை உறங்க வைத்த மந்திரவாதியைக் கொன்று இளவரசியை எழுப்ப நான் முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்" என்றான் மணிவண்ணன்.
ஆசிரியர் திடுக்கிட்டுப் போனார். சாய்ந்து படுத்திருந்தவர் சடாரென்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தார்.
ஆசிரியர் மணிவண்ணனைக் கவனித்து நோக்கினார். நல்ல அழகு! இளம் பருவம்! அச்சமற்ற பார்வை! அதற்குத் தகுந்த உடம்பு! படிப்பிலும் அவன் சோடையில்லை. இந்தப் பிள்ளை முயற்சி செய்தால் எந்தச் செயலும் வெற்றியாய்த்தான் முடியும் என்ற எண்ணம் அவர் உள்ளத்திலே எழுந்தது.
இருந்தாலும் அந்த மந்திரவாதியைப் பற்றி நினைக்கும் போது, மணிவண்ணனால் அவனை வெல்ல முடியும் என்று நினைக்க முடியவில்லை.
“மணிவண்ணா, அரசராக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதா? வேண்டாம் அப்பா!" என்றார் ஆசிரியர்.
"ஐயா, அரசனாக வேண்டுமென்று நான் இந்த முயற்சியில் இறங்கவில்லை. மாமன்னருக்கு முடிந்தால் உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இம் முயற்சியில் இறங்க நினைக்கிறேன். அரசருக்குச்செய்யும் தொண்டு, நாட்டுத் தொண்டுக்கு நிகர் என்று நீங்கள் பாடம் நடத்தினர்களே!" என்றான் மணிவண்ணன்
அவன் அறிவோடு பேசியதைக் கேட்கக் கேட்க ஆசிரியருக்கு அவன் மீது நம்பிக்கை உண்டாகியது. "மணிவண்ணா, உன் எண்ணம் நல்ல எண்ணம்தான்! நீ இம் முயற்சியில் இறங்குவது புகழைத் தரும்! உனக்கு இதில் விடாப் பிடியான நோக்கம் இருந்தால் புறப்படு! நீ வெற்றி பெற வேண்டுமென்று நான் நாள் தோறும் பிள்ளையாரை வேண்டித் தொழுது வருவேன்!" என்று கூறி அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.
ஆசிரியரின் ஆசீர்வாதம் கிடைத்தமகிழ்ச்சியோடு மணிவண்ணன் அங்கிருந்து புறப்பட்டான். பெற்றோர்களின் தடையை மீறி அவன் தலைநகர் நோக்கிப் பயணம் புறப்பட்டு விட்டான்.
புள்ளம்பாடியிலிருந்து தலைநகரம் நூறு கல் தொலைவு இருந்தது. வழியில் குன்றுகளும் காடுகளும் மாறி மாறி இருந்தன. சாலைகளில் மாட்டு வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. மணிவண்ணன் ஏழைப்பையன்தான். ஆகவே கால் நடையாகவே பயணம் புறப்பட்டான்.
வழியில் தென்படுவோரை யெல்லாம் விசாரித்துக் கொண்டு அவன் வண்டிப் பாதைகள் வழியாகவும், ஒற்றையடிப் பாதைகள் வழியாகவும் நடந்து சென்றுகொண்டிருந்தான்.
மாமன்னரும் மணிவண்ணனும்
மாமன்னர் சோமசுந்தரமாராயர்தம் எதிரே வந்து நின்ற இளைஞனை உற்றுநோக்கினார்.
அரண்மனை மணிமண்டபத்திலே தங்கச் சிங்காதனத்திலே அவர் வீற்றிருந்தார். அமைச்சர்கள் பத்துப்பேர் அவரைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தார்கள். மெய்க்காவலர் இருவரும், சிப்பாய்கள் அறுவரும் உடன் இருந்தனர். இவர்களுக்கு நடுவிலே அரசரின் முகத்துக்கு எதிராக மணிவண்ணன் நின்று கொண்டிருந்தான். அவனைத்தான் மாராயர் உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.
மணிவண்ணனின் இயற்கை அழகு அரசர் மனத்திலே அன்பு சுரக்கச் செய்தது.
அவனுடைய இளம்பருவத்துக்களை அவரைக் கவர்ந்துவிட்டது. அவன் கண்களில் மிளிர்ந்த அச்சமற்ற பார்வை மாமன்னருக்கு ஒரு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது.
இருந்தாலும் சின்னஞ்சிறு பிள்ளையான இந்த இளைஞன்.உலகம் அஞ்சும்படியான அந்த மந்திரவாதியை எப்படி எதிர்த்துக் கொல்ல முடியும் என்று எண்ணிப்பார்த்தபோது அவருக்குச் சிறிதுகூட நம்பிக்கை தோன்றவில்லை.
அவர் மண்டலமெங்கும் முரசு அடித்த பிறகும் எந்த இளைஞனும் முன்வரவில்லை. ஐம்பத்தாறு தேசங்களிலுமே துணிச்சலுள்ள ஓர் இளைஞன் இல்லையா என்று அரசர் எண்ணி வெட்கப்படத் தொடங்கியபோதுதான் மணிவண்ணன் அங்கு வந்து சேர்ந்தான்.
அரசர் மணிவண்ணனை நோக்கிக் கேட்டார்."இளைஞனே, நீஎவ்வாறு மந்திரவாதியைக் கொல்லப் போகிறாய்?"
மணிவண்ணன் உடனடியாக அரசருக்குச் சொன்ன பதில் இதுதான்! "மாமன்னர் அவர்களே,மந்திரவாதி எப்படிப்பட்டவன், எங்குள்ளவன், எவ்வளவு வலிவுடையவன் என்றெல்லாம் இதுவரை நான் தெரிந்துகொள்ளவில்லை. இனிமேல்தான் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். ஆகவே இப்போது எவ்விதமான திட்டமும் இல்லை.
“மன்னர் பிரானே, நான் ஓர் ஏழை மாணவன். அன்றாட உணவுக்கே உழைத்துப் பிழைக்கும் தாய் தந்தையரை உடையவன். ஆகவே, அவர்களைப் பிரிந்து வந்த நான் சாப்பாட்டிற்கு வழியற்று நிற்கிறேன். எனக்கு வேண்டிய உணவை நான் உழைத்துப் பெற முடியும். ஆனால், என் நேரம் முழுவதையும் மந்திரவாதியைத் தேடும் வேலையில் செலவிட வேண்டியிருப்பதால், உணவுக்காக உழைக்க இனி எனக்கு நேரங்கிடைக்காது. ஆகவே, உணவு பெறுவதற்குரிய பொருளுதவி மட்டும் அவ்வப்போது எனக்குச் செய்து வந்தால், கூடிய விரைவில் நான் இம்மந்திரவாதியைக் கொன்று இளவரசியைத் துயில் எழுப்பி விடுகிறேன்"
மணிவண்ணனுடைய பேச்சில் உண்மையிருப்பதை உணர்ந்தார் மாமன்னர் சோம சுந்தர மாராயர்.
"வீர இளைஞனே, உன் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். மந்திரவாதியைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட நீ முன்வந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.ஆனால் மந்திரவாதிக்குப் பதில் சொல்ல அவன் எனக்கு ஒரு மாதம் தவணை கொடுத்திருக்கிருன். இப்போது பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் பதினைந்து நாட்களில் உன் முயற்சி வெற்றி பெறாட்டால் இளவரசிக்கு மந்திரவாதி ஏதாவது தீங்கு செய்வான். இந்த அரசுக்கும் ஏதேனும் கேடுவரக்கூடும். ஆகவே இரண்டு வாரத்திற்குள் உன் வேலை முடியவேண்டும் என்பதை நினைவு வைத்துக் கொள்.
"உனக்குப் பணம் தேவைப்படும்போது ஐம்பத்தாறு தேசத்திலும் உள்ள எந்த நகரத்துப் பொருளாதிபதியிடமிருந்து வேண்டு மானாலும் நீ வேண்டிய தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கிறேன். எல்லாப் பொருளாதிபதகளுக்கும் இன்றே கட்டளையறிக்கை பிறப்பிதது அனுப்பி விடுகிறேன்" என்றார் மாராயர்.
அரசரின் அன்பான பேச்சும் ஆதரவான செயலும் மணிவண்ணனுக்கு மேலும் ஊக்க மூட்டுவனவாய் இருந்தன.
அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மணி வண்ணனைத் தனித்தனியே அழைத்து ஊக்கமுட்டும் சொற்களைக் கூறினர்.
பெரியவர்களின் அன்பான சொற்கள் தாமே இளைஞர்களுக்குப் பலப்பல நேரங்களில் வெற்றிப் பாதையில் செல்லும் துணிச்சலை உண்டாக்கியிருக்கின்றன. மணிவண்ணனின் வெற்றிக்கும் அவையே காரணமாயின என்று தான் கூறவேண்டும்.
மாராயரிடம் விடைபெற்றுக் கொண்டுபுறப்பட்ட மணிவண்ணன் கோட்டை வாயிலை நோக்கி நடந்தான். உச்சயினிப் பட்டணத்தை அடைந்து மந்திரவாதியைப் பற்றித் தகவல் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் அப்போது அவனுடைய திட்டமாக இருந்தது.
கோட்டை வாயிலை அடைந்தபோது அவனை நோக்கி ஒரு காவல் வீரன் வந்தான். அவன் ஒரு பஞ்சகல்யாணிக் குதிரையை நடத்திக் கொண்டு வந்தான்.
"வீர இளைஞனே, நீ ஏறிச் செல்வதற்காக இந்தக் குதிரையைக்க கொடுக்கும்படி மாமன்னர் கட்டளையிட்டிருக்கிறார். இதைப் பெற்றுக் கொண்டு உன் பயணத்தைத் தொடங்கு. உன் முயற்சி வெற்றி பெறுவதாக!" என்று கூறிக் குதிரையைக் கொடுத்துச் சென்றான் அவன்.
மாமன்னரிடம் தான் கேட்காமலே அவர் குதிரை கொடுத்தனுப்பியதை எண்ணி மணிவண்ணன் மகிழ்ச்சியடைந்தான். தாவி ஏறி அதன் முதுகில் அமர்ந்தான். அந்த அழகிய பஞ்ச கல்யாணிக் குதிரை பாய்ந்து சென்றது.
ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் அந்தக் குதிரை இரவும் பகலும் ஒடிக்கொண்டேயிருந்தது. தானும் குதிரையும் உணவுண்ணுவதற்கு ஆங்காங்கே தங்கிய நேரம்தவிர மீதி நேரமெல்லாம் மணிவண்ணன் பயணம் செய்து கொண்டே யிருந்தான். இரவும் பகலும் இடைவிடாது சென்று கொண்டேயிருந்தும் ஏழு நாட்களான பின்னும் உச்சயினிப் பட்டணம் வந்து சேரவில்லை. போகப்போக இன்னும் போக வேண்டும் என்ற நிலையிலேயே இருந்தது.
ஏழாவது நாள் நண்பகல். வெய்யில் கொளுத்துகின்ற நேரம். வழியில் ஒரு முனிவர் தென்பட்டார்.
மணிவண்ணன் குதிரையை நிறுத்தினான் மெல்லக்கீழேஇறங்கினான்.முனிவரின் அருகில் சென்று இருகைகூப்பி அவரை வணங்கினான்.
உச்சயினிப் பட்டணத்திற்கு வழி எது என்று கேட்டான்.
அந்த முனிவர் வாய்திறந்து பதில் எதுவும் சொல்லாமல் கிழக்கில் செல்லும் பாதையைக் காட்டினார்.
வடக்கேயிருக்கும் பட்டணத்திற்குக் கிழக்கே செல்லும் பாதையைக் காட்டுகிறாரே என்று மணிவண்ணன் முதலில் கலங்கினான். அதே பாதை மீண்டும் வளைந்து வடக்கு நோக்கிச் செல்லக்கூடும் என்று தன்மனத்தைத் தேற்றிக் கொண்டான்.
முனிவரை மீண்டும் வணங்கிக் குதிரையின் மீதுபாய்ந்தேறினான்.கிழக்கு நோக்கிச்செல்லும் சாலையில் திரும்பினான். அந்தச் சாலை கிழக்கு நோக்கி ஒரே நேராக நெடுந்துாரம் சென்று கொண்டிருந்தது. கடைசியில் ஓரிடத்தில் தெற்கு நோக்கித் திரும்பியது.
மணிவண்ணன் மனத்தில் ஐயம் பிறந்தது. வடக்கு நோக்கிச் செல்லவேண்டிய நான் தெற்கு நோக்கிச்சென்றால்காலமும் பொழுதும் வீணாகி விடுமே. வழிகாட்டிய அந்த முனிவர் பைத்தியக்காரரா? அல்லது வாய் பேசாதது போலவே காதும் கேட்காதவரா? ஒருவேளை அந்த முனிவர் மந்திரவாதியின் ஆளாக இருக்குமோ? தான் புறப்பட்டு வருவதை அந்த மந்திரவாதி அறிந்து கொண்டிருப்பான். தன்னை வரவிடாமல் தடுப்பதற்காக இந்த முனிவரை அனுப்பியிருக்கக்கூடும் என எண்ணிய மணி வண்ணனுக்குக் கோபம் பிறந்தது. தெற்கு நோக்கித் திரும்பாமல் அவன் வந்தவழியே மேற்கு நோக்கித் திரும்பினான். முனிவரைக் கண்ட இடத்திற்குச் சென்று வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் தொடர்ந்து செல்வதென்று முடிவு கட்டினனான்.
அவன் தன் குதிரையை மேற்கு நோக்கித் திருப்பியபோது, எதிரில் அந்த முனிவர் தன் முன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவருடைய வலது கை தெற்கு நோக்கிச் செல்லும் பாதையைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது.
வாய் பேசாமல் தென் திசையைச் சுட்டிக் கட்டும் அந்த முனிவரைக் கண்டவுடன் மணி வண்ணனுக்குக் கோபம் கோபமாக வந்தது. மந்திரவாதியின் ஆளான அந்த முனிவர் தன்னை வழி மறிக்க வந்த மாயாவாதி என்றே முதலில் எண்ணினான். ஆனால் உற்று நோக்கியபோது, அந்த முனவரின முகத்தில்கருணைஒளி பரவிக் கிடப்பதைக் கண்டான். கண்களில் அருள் வெள்ளம் ததும்பி நிற்பது தெரிந்தது.
அவர் மீது அவனுக்கு என்றுமில்லாத நம்பிக்கை ஏற்பட்டது. தனக்கு நன்மை தருவதற்காகவே அவர் அந்த இடத்திலே வந்து தோன்றியிருக்கிறார் என்று எண்ணினான்.
குறைவில்லாத நம்பிக்கையோடு, நன்மையே உண்டாகும் என்ற முழு நினைப்போடு அவன் தென்திசையில் மீண்டும் திரும்பித் தன் குதிரையைச் செலுத்திக் கொண்டு சென்றான். அவன் திரும்பிய உடனேயே அந்த முனிவர் மறைந்து விட்டார். ஆனால் மணிவண்ணன் தன் இலட்சியமே எண்ணமாகப் பின்னால் திரும்பிப்பார்க்காமல் சென்றுகொண்டிருந்தான்.
வனதேவதையின் வாழ்த்து
சாலையின் இருபுறத்திலும் அடர்ந்த காடு இருண்டு கிடந்தது. பார்க்குமிடமெல்லாம் மரஞ்செடி கொடிகளும் காட்டுப் பறவைகளும் விலங்குகளுமே தென்பட்டன. அவ்வப்போது காட்டுக்குள்ளிருந்து யானையின் பிளிறலும் சிங்கத்தின் முழக்கமும் புலியின் உறுமலும் கேட்டன. ஒரு சமயம் கூட்டமாகச் சேர்ந்து நரிகள் ஊளையிடும் ஓசை கேட்கும்; மற்றொரு சமயம் எதற்கோ அஞ்சிக் கலைமான் கூட்டம் கலைந்தோடும் ஒலி கேட்கும்; வேறொரு சமயம் புலியின் வாயில் அகப்பட்டு உயிர் விடும் காட்டெருதின் ஈனக்குரல் காதில் வந்துவிழும்.
ஏழு நாளாக இரவும் பகலும் ஓடி ஓடி அலுத்து நடந்து கொண்டிருந்த குதிரை திடீரென்று துள்ளிப் பாய்ந்தது. திடுக்கிட்டுவிழித்த மணிவண்ணன் எதிரில் சிறிது தூரத்தில் ஓர் அழகிய மண்டபம் இருப்பதைக் கண்டான். காட்டுப் பச்சை நிறத்தின் இடையே வெள்ளை வெளேரென்று தோன்றிய அந்தமணிமண்டபம் மிகமிக அழகாக இருந்தது.
நெருங்கிச் செல்லச் செல்ல பளிங்குக் கல்லால் கட்டப் பெற்றிருந்த அந்த மணிமண்டபம் மேன்மேலும் அழகு பெருகிக் காணப்பட்டது
மண்டபத்தின் அருகில் சென்றவுடன் குதிரையைவிட்டு இறங்கினான் மணிவண்ணன் மண்டபத்தில் யாரிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக அவன் திரும்பியபோது எதிரில் இருந்த குளத்தை நோக்கிச் சென்றது குதிரை. அந்தக் குளம் சலவைப் படிக்கற்கள் அமைத்துக்கட்டப் பெற்றிருந்தது. குதிரை அந்தப் படிக்கற்களில் கால் வைத்தவுடன் வழுக்கித் தடுமாறி அந்தக் குளத்திற்குள் விழுந்து விட்டது. தடாலென்று குதிரை விழுந்த ஓசை கேட்டு மணிவண்ணன் ஓடிவந்தான். குளத்திற்குள் இறங்கித் தண்ணிருக்குள் நீந்திச் சென்று குதிரையைப் பிடித்து இழுத்து வந்தான். அதைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து மேலெல்லாம் தேய்த்துத் துடைத்து விட்டான். பிறகு அதைப் புல்மேய விட்டுவிட்டு மீண்டும் மணிமண்டபத்தை நோக்கி நடந்தான்.
மண்டபத்தின் முன்வாயிலில் பச்சைப் படிக்கல்லால் ஆன திண்ணையின் மீது சோகமே உருவாக ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தாள். அவள் முகம்தான் துயரத்தின் அடையாளங்களைக் காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அவள் இருந்த இடத்தில் ஓர் ஒளி வட்டம் சுழன்று கொண்டிருந்தது,
மணிவண்ணன் மிகுந்த மரியாதையோடு அவள் அருகில் சென்று நின்றான். 'அம்மா!' என்று அழைத்தான்.
உடனே அந்தப் பெண்மணியின் முகத்தில் தெரிந்த துயரச் சாயல்மறைந்து விட்டது. புன்சிரிப்பும் எக்களிப்பும் நிறைந்த முகத்தோடு அவள், “மகனே! உன்னைத் தான் நான் நெடு நாளாக எதிர்பார்த்துக் கிடந்தேன். கடைசியில் வந்துவிட்டாய்! வா, என் கண்மணியே! வா!” என்று அழைத்தாள். அன்போடு அவன் கையைப் பிடித்து அவள் தடவிக் கொடுத்தாள். அவன் தலையைக் கோதிவிட்டாள்.அந்தப் பெண்மணி யார் என்று அவனுக்குத் தெரியாது. அவள் எதற்காகத் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் என்றும் தெரியவில்லை.
"அம்மா என் பெயர் மணிவண்ணன். உச்சயினிப் பட்டணத்தில் இருக்கும் மந்திரவாதியைத் தேடிக்கொண்டு புறப்பட்டேன்." என்று மணிவண்ணன் தன்னைப்பற்றி அறிமுகப் படுத்திக் கொள்ளத் தொடங்கின்னான்.
"எல்லாம் தெரியுமடா மகனே, எல்லாம் தெரியும். உன் கையால்தான் அந்த மந்திரவாதி சாகவேண்டும் என்று விதி இருக்கிறது. இருந்தாலும் அவனிடம் நீ எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதற்குரிய வழிகளை நான் சொல்லுகிறேன். முதலில் நீ இந்தப் பழத்தைச் சாப்பிட்டு உன் பசியைத் தீர்த்துக்கொள்" என்றாள் அந்தப் பெண்மணி.
அவள் கையில் ஒரு மாம்பழம் இருந்தது அதைத் தின்ற உடனே மணிவண்ணனுடைய பசி மாத்திரமல்லாமல் உடல்சோர்வும் அகன்று விட்டது. அவள் ஒரு மந்திரக்காரியாக இருக்குமோ என்று எண்ணின மணிவன்ண்ணன்."மகனே, மணிவண்ணா, நீ நினைப்பது போல் நான் ஒரு மந்திரக்காரியல்ல. நான் ஒரு வன தேவதை. இந்தக் கானகம் முழுவதும் என் ஆளுகைக்குட்பட்டது. மாமன்னர் சோம சுந்தர மாராயருடைய குலதேவதையும் நான்தான். அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற நான் ஒருத்தி இருக்கிறேன் என்பதையே மறந்து அந்த மந்திரவாதி மாராயருக்குத் துன்பம் செய்யத் தொடங்கிவிட்டான்.
"இளவரசி செந்தாமரையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு. இருந்தாலும் துணிச்சல் உள்ள ஒர் இளைஞனுடைய துணையில்லாமல் என்னுல் என் கடமையை நிறை வேற்றமுடியாது. இத்தனை நாளாக நான் இன்னும் ஒரு துணிச்சல் உள்ள இளைஞன் அகப்படவில்லையா என்று கவலைப் பட்டுக் கொண்டேயிருந்தேன். இன்று உன்னைக் கண்டவுடன்தான் என் மனம் அமைதி அடைந்தது.
"மகனே, நான் உனக்கு இப்போது மூன்று பொருள்கள் தருகின்றேன். அந்த மூன்றும் மந்திரவாதியைக் கொல்லத் துணை செய்யும்.
"இதோ இந்தச் சேணத்தை உன் குதிரை முதுகில் பூட்டு. அந்தச் சேணம்பூண்ட குதிரை இறக்கை இல்லாமலே பறக்கும். நீ நினைத்த இடத்திலே உன்னைக் கொண்டு போய் இறக்கும். சந்திர லோகமானாலும் அதற்கப்பால் உள்ள கந்தருவ லோகமானாலும் அது போய்ச் சேரும். இதை உன் குதிரைக்குப் பூட்டி அந்த மந்திரவாதியின் இருப்பிடத்திற்குப் பறந்து செல்.
"இதோ இந்தப் பொன் முடியை உன் தலையிலே அணிந்துகொள். இதை யணிந்து கொண்டவன் வேறு யாருடைய கண்ணுக்கும் தெரியமாட்டான். இந்திரனானாலும் சந்திரனானாலும் அவனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. இதையணிந்து கொண்டு அந்த மந்திரவாதியின் கண்ணுக்குத் தெரியாமல் அவனை அணுகிச் செல்லலாம்.
"இதோ இந்த வைரவாளை இடையிலே அணிந்து கொள். இதைச் சுழற்றி வீசினால் எதிர்ப்பட்டு நிற்கும் எதிரியின் தலை கழன்று விடும். இவ்வாளால் குத்தப்பட்ட நெஞ்சில் குருதி கொப்புளிக்கும். எப்பேர்ப்பட்ட வல்லமையுடையவனும் இவ்வாளால் தாக்கப்பட்டால் உயிரிழந்து போவான்.
"மகனே இந்த மூன்று பொருள்களையும் உனக்குத் தருகிறேன. இவற்றைப் பயன்படுத்தி அந்த மந்திரவாதியைக் கொன்றுவிடு. அதன் பின் என்னிடம் திரும்பி வா. இளவரசியைத் துயில் எழுப்பும் முறையைச் சொல்லுகிறேன். போ. புறப்படு. வெற்றியுடன் திரும்பி வா" என்று வாழ்த்துக் கூறி அனுப்பினாள் அந்த வனதேவதை.
மாணவன் மணிவண்ணன் ஒருமுறை கேட்டபாடத்தை ஒன்பது ஆண்டுகளானாலும் மறக்கமாட்டான் என்பது பிடியரிசிப் பள்ளிக் கூடத்து ஆசிரியருக்குத் தெரிந்த உண்மை. அந்த உண்மை வனதேவதைக்குத் தெரியாமலா இருக்கும். அவள் சொலலிய ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டு மனத்தில் பதித்துக்கொண்டான் மணிவண்ணன்.
வனதேவதை கொடுத்த சேணத்தைக் கொண்டுபோய்க் குதிரையின் முதுகில் பூட்டினான். அவள் கொடுதத பொன்முடியைத் தலையிலே அணிந்து கொண்டான். வைரவாளை இடையிலே கட்டிக்கொண்டான். தாவி ஏறிக் குதிரையின் மேல் உட்கார்ந்தான். வனதேவதையின் பளிங்குக் குளத்திற்குள் விழுந்து குளித்ததாலும், அங்குள்ள வளமான புற்களைக் கடித்துத் தின்று அசை போட்டதாலும் குதிரை புதுத் தெம்போடிருந்தது. மணிவண்ணன் முதுகில் ஏறி உட்கார்ந்தவுடன் அது துள்ளிப் பாய்ந்து ஓடியது. ஓட ஓட அது தன்னையறியாமலே காற்றில் பறக்கத் தொடங்கியது. மேக மண்டலங்களுக்கு இடையே புகுந்து பாய்ந்து உச்சயினிப் பட்டணத்தை அடைந்தது.
உச்சயினிப் பட்டணத்தின் அருகில் இருந்த பாலைவனத்திலே குதிரையை இறக்கினான் மணிவண்ணன். அந்தப் பாலைவனத்தின் ஓர் ஓரத்திலே இருந்த சுடுகாட்டை நோக்கிக் குதிரையை நடத்திக் கொண்டு சென்றான் மணிவண்ணன். அந்தச் சுடுகாட்டின் மத்தியிலே பறக்கும் நெருப்புப் பொறிகளைப் பந்தடித்து விளையாடிக் கொண்டிருந்த பேய்களைக் கண்டான் மணிவண்ணன்.
வேறு யாருமாக இருந்தால் பேய்களைக் கண்டவுடனேயே கதி கலங்கிப் போயிருப்பார்கள். மணிவண்ணன் சிறிதும் அஞ்சாமல் அவற்றின் ஊடேயே நடந்து சென்றான்.
தேவதை கொடுத்த பொன் முடியை அவன் அணிந்திருந்ததால் அந்தப் பேய்களில் ஒன்று கூட அவனைக் காணமுடியவில்லை.அவைகளைக் கடந்துசென்ற மணிவண்ணன் சுடுகாட்டை ஒட்டியிருந்த ஒரு கல் மலையை நோக்கிச் சென்றான். போகும் வழியெல்லாம் ஒரே முள் காடாக இருந்தது. ஆகவே குதிரை அந்த இடத்திலே பறந்து சென்றது.
அந்த மலையின் அடிவாரத்திலே ஒரு குகை இருந்தது. குகை வாசலில் ஒரு பெரிய புலி நின்று கொண்டிருந்தது. அந்தப் புலிதான் மந்திரவாதி ஏறிவரும் புலி. மந்திரவாதி வெளியில் செல்லும்போது அவனைச் சுமந்து செல்லும். அவன் குகையில் தங்கியிருக்கும் போது வாசலில் காவல் இருக்கும்.
அந்தப் புலியைக் கண்டவுடனே மணிவண்ணனின் பஞ்சகல்யாணிக் குதிரை மிரண்டது. அது பயப்படுவதைக் கண்ட
மணிவண்ணன் உருவத்தை அந்தப் புலியால் பார்க்க முடியவில்லை. ஆனால் அது மோப்பத்தினுல் மனித வாசம் அடிப்பதைக்கண்டு கொண்டது. உடனே பேரோலமிட்டு உறுமியது.
அந்தப் பயங்கரமான புலியின் உருவத்தை நேரில் கண்டு, அதன் உறுமல் ஒலத்தையும் காதால் கேட்டவர்கள் அந்தப் பயத்தின் அதிர்ச்சியிலேயே உயிரை விட்டிருப்பார்கள். மணிவண்ணன் சிறிதுகூட மனங்கலங்கவில்லை. மந்திரவாதியைக் கொன்று இளவரசியைத் துயில் எழுப்ப வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் அவன் நெஞ்சில் நிறைந்திருந்தது. வேறு எவ்விதமான நினைப்புகளுக்கோ உணர்ச்சிகளுக்கோ அவன் உள்ளத்தில் இடம் சிறிது கூட இல்லை. அவன் சிறிதும் அச்சங் கொள்ளாமல் உருவிய வாளுடன் குகையை நெருங்கினன்.
அவன் நெருங்க நெருங்கப் புலியின் உறுமல் ஒலம் அதிகமாகியது. குகையின் உள்ளேயிருந்த மந்திரவாதி ஏதோ கெடுதல் வருகிறதென்று தெரிந்து கொண்டான்.
புலி உறுமுகிற காரணம் எனை என்று தெரிந்து கொள்வதற்காக அவன் குகை வாசலுக்கு வந்தான். ஆனல் அவன் குகை வாசலுக்கு வந்து சேர்ந்தபோது புலி உடல் பிளந்து இறந்து கிடந்த காட்சியைத்தான் கண்டான்.
அந்தப் புலியை இழந்தபோதே அவன் தன் பாதி உயிரை இழந்தது போலானன். தனக்கு நிகரான எதிரி எவனுமே உலகத்தில் இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்த அந்த மந்திரவாதியின் மனம் அப்போதுதான் கலங்கத் தொடங்கியது. யாரோ தன்னைக் காட்டிலும் மாயம் தெரிந்தவன், யாரோ தன்னைக் காட்டிலும் வலிமை மிக்கவன், யாரோ தன்னைக் காட்டிலும் அறிவு மிக்கவன் தன்னைக் கொல்லவென்றே புறப்பட்டு வந்திருக்கிறான் என்று புரிந்துகொண்டான் மந்திரவாதி.
அந்த நினைப்பே அவன் உடலை வெடவெட வென்று நடுங்க வைத்தது.
வந்திருப்பவன் யார் என்று தெரிந்து கொள்ள எண்ணினன். மணிவண்ணனே அவன் கண்ணுக்குத் தெரியாமல் அவன் எதிரிலேயே நின்று கொண்டிருந்தான். மந்திரவாதி யாரைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆரூடம் கற்றிருந்தான். ஆரூடம் கணித்துப் பார்த்தால், உலகில் உள்ள எந்த மனிதனைப் பற்றியும் முழுவிபரமும் அறிந்து கொள்ளக் கூடிய சக்தி அவனுக்கு இருந்தது. ஆரூடத்தின் மூலம் யாருடைய உருவத்தையும் அவன் பார்த்துவிட முடியும். ஆனல், ஓம குண்டத்தின் எதிரே உள்ள வட்டப் பலகையில ஏறியிருந்து அரை மணி நேரம் ஆரூடம் கணித்துப் பார்த்த பிறகு தான், மந்திரவாதி இன்னொருவனைப் பற்றிய விபரம் அறிந்துகொள்ள முடியும்.
அதற்கெல்லாம் அப்போது நேரமில்லை.
மணிவண்ணன் அவன் குகைக்குள் ளேயே நுழைந்து விட்டான். மந்திரவாதியையும் கண்டுவிட்டான்.
"அடே, மமதை பிடித்த மந்திரவாதியே உன் வாழ்வுக்கு அந்திப்பொழுது வந்துவிட்டது. இதோ இன்னும் சற்றுநேரத்தில் உன் தலை உருளப் போகிறது. ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் சொல்" என்று ஆண்மை மிகுந்த குரலில் பேசினன் மணிவண்ணன்.
மந்திரவாதி பார்த்தான். எதிரி அருகில் நிற்கிறான். கண்ணுக்குப் புலப்படாமல் நிற்கிறான். ஆருடம் கணித்துப் பார்த்தால்தான், கண்ணுக்குத் தெரியாதவனின் உருவத்தையும் கண்டுகொள்ள முடியும். அதற்கு அப்போது நேரமில்லை. செய்யக்கூடிய தெல்லாம் தப்பி ஓடுவதுதான். ஒடித் தப்பிவிட்டால் எதிரி திரும்பிய பிறகு குகைக்கு வரலாம் என்று எண்ணினான்.
மந்திரவாதி தப்பி ஓட முயலும்போது அவன் கண்ணுக்கு எதிரே ஒரு வாள் தோன்றி அவன் வழியை மறித்தது. வாளின் நிலையைக் கண்டு மந்திரவாதி மணிவண்ணன் நிற்கும் இடத்தை எளிதாக அறிந்து கொண்டான். திரும்பித் தாக்க முயன்றான். அவன் கையில் எவ்விதமான ஆயுதமும் இல்லை. எப்போதும் இருக்கும் பெருஞ்சக்தி வாய்ந்த மந்திரக் கோலும் அப்போது அவன் கையில் இல்லை; துன்பம் வந்தால் சேர்ந்து வரும்; அதைத் தவிர்க்க வழியில்லாத போதுதான் அதிகமாக வரும்.
மந்திரவாதி தன் கையினலேயே கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போராடவேண்டியிருந்தது. அவன் ஓங்கிக் குத்திய ஒவ்வொரு முறையும் அவன் கைகள் குகைச் சுவர்ப் பாறைகளையே தாக்கிக் காயப்பட்டன.
கடைசியில் மணிவண்ணனுடைய வாள் அவன் உயிரைக் குடித்தது. ஐம்பத்தாறு தேசங்களையும் அடக்கியாளும் மாமன்னரையே ஆட்டிப் படைத்த பெருஞ் சக்தி வாய்ந்த அந்த மந்திரவாதி, ஒரு சாதாரண மாணவன் கையால் உயிரிழந்தான்.
மந்திரவாதியின் தலையைத் துண்டித்த மணிவண்ணன் அதைத் தனியே ஒரு துண்டில் சுற்றி மூடிக் கட்டி எடுத்துக் கொண்டான். குகையில் பாறாங்கற்களை உருட்டி வந்து வைத்துக் கெட்டித்து அதை அடைத்தான். பிறகுதன் பஞ்சகல்யாணி இருந்த இடத்திற்கு வந்தான். குதிரையை அவிழ்த்து அதன் முதுகில் ஏறி உட்கார்ந்தவுடன் அது நேராகக் காற்றில் பறந்து மேகங்களை ஊடுருவிக் கடந்து, வன தேவதையின் மணிமண்டபத்தில் வந்திறங்கியது.
மணிமண்டபம் முன்பிருந்ததைவிட அழகாக விளங்கியது. அதைச் சுற்றிலும் காட்டு மலர்களால் ஆன தோரணங்களும் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. ஆண் தெய்வங்களும் பெண்தெய்வங்களும் மாளிகைக்குள்ளும் புறமும் போவதும் வருவதுமாக இருந்தனர்.
வாசலில் மணிவண்ணன் இறங்கியவுடன், அந்த மணிமண்டபத்து வனதேவதை ஓடி வந்தாள். அவனை அன்போடு வரவேற்றாள்.
"வா மகனே வா, உன் வெற்றியைக் கொண்டாட வானுலகிலிருந்து தெய்வங்களெல்லாம் வந்து சேர்ந்திருக்கின்றனர்” என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றாள்.
உள்ளே ஒரு கூடத்தில் மின்னும் பொன்னிழைகளால் நெய்யப்பட்ட பந்திச் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பந்திச் சமுக் காளத்தின் எதிரிலேயே பெரிய பெரிய வாழை இலைகள் விரித்து வைக்கப்பட்டிருந்தன. அவ்விலைகளிலே பலவகையான இனிய உணவு வகைகள் பரிமாறப்பட்டிருந்தன. வெள்ளித் தொன்னைகளிலே சூப்பும் ரசமும் பாயாசமும் பானகமும் வைக்கப்பட்டிருந்தன. தேவர்களும் தேவதைகளும் வரிசை வரிசையாக இருந்து விருந்துண்டு கொண்டிருந்தார்கள். ஒரு பந்தியிலே இரண்டு இலைகள் ஆளில்லாமல் இருந்தன. அவற்றிலே ஒன்றில் மணிவண்ணனை உட்காரவைத்து மற்றொன்றின் முன் அந்த வனதேவதை உட்கார்ந்து கொண்டாள்.
நன்றாக விருந்துண்டபின், தேவர்களும் தேவதைகளும் மணிவண்ணனைச் சூழ்ந்து நின்று அவன் செய்த வீரச் செயலைப் பாராட்டினார்கள். அவனுக்கு வாழ்த்துக் கூறினர்கள்.
மணிவண்ணன் வன தேவதையை வணங்கி."அம்மா, என்னை விரைவில் அனுப்பி வையுங்கள். போய் இளவரசியைத் துயில் எழுப்ப வேண்டும். அதற்குரிய வழியையும் சொல்லியருளுங்கள்" என்று பணிவோடு கேட்டான்.
"மகனே! இதோ நொடியில் அனுப்பி வைக்கிறேன். எதிரில் இருக்கும் திருக்குளத்தில் ஒரு செம்பு நீர் எடுத்துக் கொண்டு போ. என்னை நினைத்துக் கொண்டு இந்நீரை இளவரசியின் மீது தெளி. உடனே அவள் துயில் நீங்கி விழித்தெழுவாள் என்று கூறினாள் அந்த அன்புமிக்க வனதேவதை.
மணிவண்ணன் அந்தப் பளிங்குக் குளத்தின் நீரை ஒரு சிறிய செம்பில் மொண்டு எடுத்துக் கொண்டான். பின் தன் பஞ்சகல்யாணிக் குதிரையின்மீது ஏறி மாமன்னர் சோமசுந்தரமாராயரின் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான்,
மேக மண்டலங்களின் ஊடே பாய்ந்து பறந்து வரும் குதிரையை, அது வந்திறங்கும் முன்னாலேயே மாமன்னர் கவனித்துவிட்டார். மந்திரவாதிதான் மீண்டும் வருகிறானே என்று மனங்கலங்கிய மாமன்னர், இறங்கியவன் மாணவன் மணிவண்ணன் என்பதை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.
தான் கட்டி எடுத்துக்கொண்டு வந்த மந்திரவாதியின் தலையை மாமன்னர் முன் அவிழ்த்து வைத்தான் மணிவண்ணன்.
துண்டமாக இருந்த அந்தத் தலையைக் கண்ட பிறகுதான் மாமன்னரின் கவலைகள் மறைந்தன. "மணிவண்ணா,மந்திரவாதி இறந்துவிட்டான். என் மகள் செந்தாமரை இன்னும் எழுந்திருக்கவில்லையே என்று கேட்டார் அவர்.
"மாமன்னர் அவர்களே, இப்போதே அவளை எழுந்திருக்கச் செய்கிறேன்" என்று கூறி இளவரசி செந்தாமரை துயில்கொண்டிருக்கும் அறையை நோக்கி நடந்தான் மணிவண்ணன். அரசரும் பின்தொடர்ந்தார். அரசியும் ஓடி வந்தாள். அமைச்சர்களும், அதிகாரிகளும் அரண்மனையில் உள்ள அத்தனை வேலையாட்களும் இளவரசியின் அறைமுன்னே கூடிவிட்டார்கள்.
மணிவண்ணன் புள்ளம்பாடிப் பிள்ளையாரை வணங்கினான். தனக்கு உதவி செய்த வன தேவதையை வணங்கினான். கொண்டு வந்த தண்ணிர்ச் செம்பைத் திறந்து தன் கையால் இளவரசியின் உடல் முழுவதும் அந்நீர் பரவிப் படும்படி தெளித்தான்.
இளவரசி செந்தாமரை கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்திருந்தாள். தன்முன் அழகே உருவான ஓர் இளைஞன் நிற்பதைக் கண்டவுடன் வெட்கப்பட்டுத் தலை குனிந்தாள். தன் தாய்தந்தையரைக் கண்டதும் ஓடிப்போய் அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.
அதன்பின் எல்லோரும் அரசவைக்குச்சென்றார்கள். இதற்குள் ஊர் எங்கும் செய்திபரவிவிட்டது. கோயில் குருக்கள் அரண்மனைக்கு ஒடோடியும் வந்தார். மணிவண்ணனை மனதாரப் பாராட்டி வாழ்த்துக் கூறினார்.
மாமன்னர் சோமசுந்தரமாராயர் பேசினார்:
"குருக்களையா! முதலில் இருபத்தெட்டு நாடுகளைப் பரிசளிப்பதற்கே நான் தங்களிடம் மறுத்தேன். சில நாட்கள் சென்ற பிறகுதான் தங்கள் ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டேன். இப்பொழுதோ ஐம்பத்தாறு தேசங்களையுமே மணிவண்ணனிடம் ஒப்படைக்க முடிவு செய்துவிட்டேன். அது மட்டுமல்ல, இளவரசி செந்தாமரையையும் இவனுக்கே திருமணம் புரிந்து வைக்க எண்ணுகிறேன். மணிவண்ணன் செந்தாமரையை மணந்து முடிசூடி இந்த மாநிலத்தை யாளட்டும். நான் ஒய்வு பெற்று அமைதி நாடிக் காலங்கழிக்கப் போகிறேன்" என்றார்.
மாமன்னரின் இந்த முடிவு எல்லோரையும் மகிழ்ச்சியடையச் செய்தது. மணிவண்ணனின் தாய்தந்தையரும் ஆசிரியரும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டனர்.
திருமணத்திற்கும் முடிசூட்டுவிழாவிற்கும் ஆன ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்பட்டன.
எல்லாம் சிறப்பாக நிறைவேறின.
நாச்சியப்பன் பாடல்கள் I | ரூ. 15.00 | |
நாச்சியப்பன் பாடல்கள் II | ரூ. 15.00 | |
தியாகச்சுடர் | ரூ. 4.00 | |
அமுதும் தேனும் பாலும் | ரூ. 7.50 | |
நாரா நாச்சியப்பன் எழுதிய சிறுவர் நூல்கள் | ||
பஞ்ச தந்திரக் கதைகள் | ரூ. 10.00 | |
அசோகர் கதைகள் | ரூ. 2.00 | |
இறைவர் திருமகன் | ரூ. 4.00 | |
ஏழாவது வாசல் | ரூ. 3.50 | |
இறக்கை மனிதர்கள் | ரூ. 3.00 | |
காக்கைப் பள்ளிக்கூடம் | ரூ. 1.25 | |
சிறுவர் பாட்டு | ரூ. 3.00 | |
மாயத்தை வென்ற மாணவன் | ரூ. 3.00 | |
தாவிப் பாயும் தங்கக் குதிரை | ரூ. 2.50 | |
வெள்ளைக் காகம் (செல்வி வைலா) | ரூ. 2.00 |
முற்றும்