உள்ளடக்கத்துக்குச் செல்

ரோஜா இதழ்கள்/பகுதி 12

விக்கிமூலம் இலிருந்து

12

கர எல்லையைக் கடந்து, சாலையின் இரு புறங்களிலும் பசுமை பாய்விரிக்கும் வயல்களை எல்லாம் காட்டிக் கொண்டு பஸ் ஓடுகிறது. மைத்ரேயி ஞானத்தின் அருகாமையில் தான் உட்கார்ந்திருக்கிறாள். அவளிடம் எத்தனையோ கேள்விகள் கேட்க உள்ளம் துடித்தாலும் கேட்க நா எழாமல் அமர்ந்திருக்கிறாள். ஒவ்வோர் கணத்தில் தான் காண்பது கனவல்லவே, நனவுதானே என்ற ஐயத்தைப் போக்கிக் கொள்பவளாகத் தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறாள். நனவுதான். அந்த மாலை மிக இனிமையாக இருக்கிறது. ஞானம்மா, அவளுக்கு ஞானத்தாய் போல் திகழும் ஒரு அம்மையுடன் அவள் புதிய வாழ்வுக்குப் போகிறாள். அவள் பிறந்ததிலிருந்து அறிந்திராத ஒர் ஒட்டுறவுடன், ஆவுள் வாழப் போகிறாள். மதுரத்துடன் அவள் வாழ்வின் திருப்பம் ஒன்றில் திரும்பியபோது வறுமையும் சிறுமையும் உடன் வந்தன. இந்தத் துணையில் அன்புடன் வறுமையும் சிறுமையுமில்லாத நம்பிக்கையே ஒளியாக இருக்கிறது. அவள் முழுசாக மீண்டு வருகிறாள். அவளுக்கே வியப்பாக இருக்கிறது. டாக்டர் மித்ரா, லோகா, ராஜா, எல்லோரும் ஞானம் அவளைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு உதவியிருக்கின்றனர். ஞானத்துடன் அவள் இன்னும் நெருங்கிப் பழகவில்லை. பள்ளி இறுதிப் பரீட்சையை முடிக்கும்வரை அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மூன்று மாசங்கள் இந்த நன்னாளுக்காகக் காத்திருந்தாலும் ஒரு நாள்கூட அவளுடைய இருப்பிடத்தை மைத்ரேயி சென்று பார்த்திருக்கவில்லை. ஞானத்துடன் முழுசாக ஒரு நாள்கூட அவள் தனியாக இருந்து பழகியிருக்கவில்லை. அருகாமைக்கு நெருங்குமுன்னரே அவள்மீது இவ்வளவு பற்றுதல் எப்படித் தோன்றியது? ஒரு கால் இதுதான் ஒரு இன.... முள் குத்தினாற் போலிருக்கிறது. சட்டென்று ஞானம்மா அவளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்கிறாள். அந்தச் சரிப்பில் ஒரு கவடும் இல்லை.

“இன்னும் கொஞ்ச தூரம்தான்.”

“நீங்கள் இப்படித் தினமும் பஸ்ஸில் வருவீர்களா?”
“எதற்கு ? காலனியில் எல்லாம் கிடைக்குமே : சனிக் கிழமை மட்டுமே வருவேன்.”

“என்ன ப்ராஜக்ட் அது? என்னமோ ‘ஹெல்த்’னு சொன்னார்களே ?”

“அதாவது, கிராமங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, சுகாதாரம், சுத்தம் இவற்றுடன் நோய்வராமல் தடுத்துக் கொள்ள நம் கிராமங்களுக்கேற்ற எளிய முறைகளில் பயிற்சியும் அளித்து, அதே முறைகளில் ஆராய்ச்சியும் செய்வதான திட்டம். இந்தத் திட்டத்துக்கு ஒரு அமெரிக்கக் கருணை வள்ளலின் நிதி இருக்கிறது.”

பஸ் ஒரு குன்றைச் சுற்றினாற்போல் கொலுவைத்தாற் போல் காணப்பெறும் சிமிட்டித் தகட்டுக் கூரை இல்லங்களும் பூஞ்செடிகளும் குட்டை மரங்களுமாயமைந்த குடியிருப்பின் முன் சாலையில் நிற்கிறது. “ஓரியன்டேஷன் சென்டர்...!”

மைத்ரேயி ஞானம்மாவுடன் இறங்குகிறாள். கையில் அவளுக்கென்று புதிதாக ஞானம்மா வாங்கிக் கொடுத்த சிறு பெட்டியில் அவளுடைய புதிய துணிகள் இருக்கின்றன. இரண்டொரு புத்தகங்களைக் காகிதத்தில் சுற்றிக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். புத்தகங்கள் பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் அவள் பரிசாகப் பெற்றவை. ஒன்று தாகூரின் கீதாஞ்சலித் தொகுப்பு, இரண்டு நேருவின் கடிதங்கள். உலக வரலாற்றின் பகுதிகள் அவளுடைய உடமைகள்.

ஒரு சிறு பூஞ்சாரல் அடித்து மண்ணைக் குளிரச் செய்திருக்கிறது. வரிசை வரிசையாக விளக்குகள் பூக்கின்றன. எல்லாம் மிக மிக இனிமையாக இருக்கிறது. வரிசையை விட்டுச் சற்று ஒதுங்கினாற்போல் முல்லை படர்ந்த பந்தல் முகப்புடன் கூடிய ஓர் சிறு வீட்டின் சுற்று வேலிக்கதவைத் திறந்து கொண்டு ஞானம் மைத்ரேயியை, ‘வா’ என்று அழைக்கிறாள். வராந்தாவின் கீழே வரிசை கட்டினாற்போல் ஜுனியாப் பூக்கள் வண்ணங்களைக் கொட்டிச் சிரிக்கின்றன. நடுவில் ஒரு ரோஜாப் புதர். தெருவிளக்கின் வெளிச்சத்தில் வாயிலில் பதிக்கப்பெற்ற பெயர்ப் பலகை பளிச்சென்று தெரிகிறது. “மிஸ் ஆர்.எச்.ஞானம், எம். ஏ. எம். லிட், பிஎச்.டி. ஆக்ஷன் கம் ரிஸர்ச் ஸ்கீம்..” என்று அதைப் படித்துப் பார்த்தறிகிறாள் மைத்ரேயி,

முன்னறையில் நாற்காலிகளும், நடு மேசையும் பிரம்பு உருப்படிகள் தாம். ஒரு கண்ணாடி அலமாரியில் புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன. தென்னை மரமும், உப்பங்கழியும் படகுமாக ஒரு நீர் வண்ண ஒவியம் சுவரில் இருக்கிறது. முன்னறையின் இருபக்கங்களிலும் இரண்டு அறைகள் இருக்கின்றன. முன்னறையை அடுத்து நடுவில் சாப்பிடும் கூடம். ஒருபுறம் சமையலறை, இன்னொருபுறம் குளியலறைப் பகுதி இருக்கிறது. சாப்பிடும் அறையில் ஒரு சிறிய மடக்கு மேசை நாற்காலியும் சமையலறையில் இரண்டொரு தட்டு முட்டுச் சாமான்களும் ஒரு காற்றழுத்த ஸ்டவ்வும் இருக்கின்றன.

“எவ்வளவு அழகான வீடு, ஸிஸ்டர்! சமையல் யார் செய்வாங்க ஸிஸ்டர்?” என்று கேட்கிறாள் மைத்ரேயி கண்கள் ஒளிர.

“யார் சாப்பிடுகிறார்களோ, அவர்களே சமைப்பார்கள்!” என்று சிரிக்கிறாள் ஞானம்.
“நீங்களேவா, சமைப்பீர்கள் ?”
"ஏன், அது அவ்வளவு ஆச்சரியமானதா?"என்று கேட்டு விட்டு ஞானம் குளியலறைக்குச் சென்று கை கால் முகம் கழுவிக் கொண்டு, அடுப்பைப் பற்றவைக்கத் தொடங்குகிறாள். “நீங்க இனிமே இதெல்லாம் செய்யக்கூடாது. நான்தான் செய்வேன்.” என்று மைத்ரேயி அவளை அச்செயலிலிருந்து விடுவிக்க முயல்கிறாள்.

ஞானம் மறுப்பதற்கில்லை. வாயிலில் மணி ஒலிக்கிறது. ஞானம் வெளியே வருகிறாள்.

“வாருங்கள், வாருங்கள் உட்காருங்கள், ஒரு நிமிஷம், இதோ வருகிறேன்” என்று அவர்களை வரவேற்கையில் மைத்ரேயி கதவின்பின் நின்று வந்தவர்களைப் பார்க்கிறாள். வடக்கு மாநிலத்துக்குரியவர்களாகத் தோன்றும் தம்பதி. உள்ளே திரும்பி ஞானம், பால், சர்க்கரை, தேயிலையைக் காட்டுகிறாள். “நாலு கப் டீ போடணும். போடுறியா...”

“ஆகட்டும், ஆகட்டும் நீங்கள் போங்கள்!”

ஞானம் திரும்பி வந்த பின்னரும், அந்தத் தம்பதி உட்காரவில்லை.

“உட்காருங்கள், உட்காரம்மா சுமித்ரா...?”

“இல்லே பஹன்ஜி, நீங்கள் வந்து சொல்லிக்கொண்டு போகவே காத்திருந்தோம்.சாமானெல்லாம் ஸ்டேஷனுக்குப் போயாச்சு...”

“நீங்கள் காலையிலேயே சொல்லிக்கொண்டு சாமான் எடுத்துக் கொண்டு போனதால் அப்படியே போயிருப்பீர்களென்று நினைத்தேன்.”

“அதெப்படிப் போவோம்? உங்களிடம் கடைசியாக வந்து சொல்லிக் கொள்ளாமல்? உங்களை மறக்கவே மாட்டோம் பஹன்ஜி? நீங்கள் ஒரு மாசம் லீவெடுத்துக்கொண்டு வந்து எங்கள் வீட்டில் தங்கவேணும்.”

ஞானம் சிரிக்கிறாள். “கண்டிப்பாக. இவர் இங்கே படித்ததை எல்லாம் சரியாகச் செய்கிறரா, கிராம சேவையில் எவ்வளவு பெரிய வெற்றியடைகிறார் என்று பார்க்க வருவேன்...”

“ஐயையோ?” அந்த இளைஞன் பலமாகச் சிரிக்கிறான்.

“ஏதோ நாற்பதுநாள் வேலைப்பளு இல்லாமல் சந்தோஷமாக வயல்கள் சூழ்ந்த கிராமங்களுக்கு ஜீப்பில் சென்று சுற்றினோம். சொற்பொழிவுகளைக் கேட்டதற்குப் பிறகு இளநீர் அருந்தினோம். பிறகு மாலையிலும் பேசினோம். ஆடிப்பாடிக் களித்து விருந்துகள் உண்டோம். இதற்கெல்லாம் பிரயாணப்படி தவிர, பயிற்சிக்கான படியும் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் உதவி மறக்கவே முடியாது. உங்களிடம் சொல்வதற்கென்ன? எங்களுக்குத் திருமணமாகி இரண்டு வருஷங்களானபின் இப்போதுதான் முதலாக இவளை அழைத்துக்கொண்டு இங்கு வந்திருக்கிறேன். இடம் கிடைக்கும், ஹாஸ்டலுக்கு வெளியே இருக்கலாம் என்று யாரோ சொன்னதை நம்பி இவளையும் கூட்டி வந்துவிட்டு, நான் திண்டாடியபோது, நீங்கள் எங்கள் வீட்டிலேயே இருக்கலாம் என்று கூப்பிட்டு, எங்கள் சொந்த வீடாக நினைக்கச் சொன்னதை எப்படி மறப்பது?...”

மைத்ரேயி தேநீர்க் கிண்ணங்களைப் பூத்தட்டில் வைத்துக் கொண்டு வருகிறாள். ஞானம் நடுமேசையில் அதை வாங்கி வைக்கிறாள்.

“இவர் டாக்டர் ஜோஷி, இது சுமித்ரா ஜோஷி. இது மைத்ரேயி... என்னுடைய குட்டி சோதரி!” என்று ஆங்கிலத் தில் அறிமுகம் செய்து வைக்கிறாள்.

‘நமஸ்தே!” என்று மைத்ரேயிக்குக் கைகுவிக்கும் சுமித்ரா, “படிக்கிறாளா?” என்று வினவுகிறாள்.

“ஆமாம். ஹாஸ்டலில் இருந்தாள். பரீட்சை எழுதியான பின் இப்போதுதான் கூட்டி வந்தேன்.”

“நான் பார்த்தேன். ரூம் காலியானதும் இன்னும் நம்மைப் போல் யாரேனும் இடம் பிடிக்க வந்துவிட்டார் களென்று நினைத்தேன், பஹன்ஜி!” என்று ஜோஷி சிரிக்கிறார்.

“உட்கார் மைத்ரேயி...” என்று கூறிவிட்டு ஞானம் இரண்டு கிண்ணங்களை ஜோஷி தம்பதியிடம் கொடுத்து விட்டு, அவளிடம் ஒரு கிண்ணத்தைக் கொடுக்கிறாள். தேநீரருந்திவிட்டு அவர்கள் விடைபெற்றுச் செல்வதைப் பார்த்துக் கொண்டே மைத்ரேயி நிற்கிறாள். சரளமாகப் பழகுபவளாக இருந்தாலும், ஞானம் எங்கோ கோபுரத்திலும் தான் மூன்றாம்படியிலும் நிற்பதாகத் தோன்றுகிறது. டாக்டர். இங்கே டாக்டர்கள். இவளும் டாக்டர் மி த்ராவைப்போல் ஏதேனும் அறியத்தான் கூட்டி வந்திருப்பாளோ என்று அச்சம் அறியாமையின் கிளர்ச்சியாய்ப் படருகிறது. அவளுடைய சரளபாவம் மடிந்து, அவளை ஒதுங்கி நிற்கச் செய்கிறது. அவள் தேநீரைத் தொடவில்லை. ஞானம் அவ்வளவு படிப்புப் படித்தவள். அவளை எத்தனை பத்திரங்களிலோ கையெழுத்துப் போட்டு எதற்காகச் சுவீகரித்துக் கொள்ளவேண்டும்? அறியாமையின் விளைவுகளாகவே அவளுடைய ஒவ்வொரு திருப்பமும் பலன் கொடுத்திருக்கின்றன. அப்படி இதுவும் என்ன மர்மமோ? அவர்களை வாயில் வரையிலும் சென்று வழியனுப்பிவிட்டு வரும் ஞானம், தேநீரைப் பருகாமல் இருண்ட முகத்துடன் மைத்ரேயி நிற்பதைக் கூர்ந்து கவனிக்கிறாள்.

“ஏன், என்ன விஷயம் மைத்ரேயி? ஏன் வருத்தமாய் இருக்கே?”

“இல்லே...நீங்கள், இவ்வளவு பெரியவர், என்னை எதற்காக சகோதரின்னு சொல்லி ஒட்டிக் கொள்ள வேணும்னு நினைச்சேன்.”

“ஒ...? அது அவ்வளவு பெரிய வருத்தமான விஷயமா? நான் ஏன் கூட்டிக்கொண்டு வந்தேன்?...” என்று அவள் கையைப் பற்றித் தன் நெஞ்சில் வைத்துக்கொள்கிறாள் ஞானம்.

“என்னைப் போல் நீ, உன்னைப் போல் நான நீ ஒரு அநாதை, நான் ஒரு அநாதை. போதாதா? எனக்கு உன்னை அந்த ஹோமில் வந்து பார்த்துத்தான் தெரியும் என்று நீ நினைத்திருப்பாய், இல்லே?”

மைத்ரேயியின் விழிகள் அகலுகின்றன.
“பின்னே ?” “சாவடிக்குப்பத்தின் ஹைஸ்கூலுக்குப்பின் உள்ள பனங்காட்டின் நடுவே ஒரு வீட்டில் நீ குடித்தனம் செய்ய வந்த நாளிலிருந்தே உன்னைக் கவனித்திருக்கிறேன். அந்த வழியாகக் கீழங்குப்பம், மேலச்சேரி கிராமங்களுக்கு நான் இந்த டாக்டர்களுடன் போயிருக்கிறேன்; அதெல்லாம் ரிஸர்ச் ஸ்கீமில் வருகிறது.”

“அங்கெல்லாம் நீங்கள் போவீர்களா? மேலச்சேரி பக்கத்தில் தானே ? அங்கேயிருந்து லட்சுமி வருவாள். அந்த கிராமங்களுக்கு நீங்க போயிருக்கிறீர்களா? அங்கே போய் என்ன செய்வீர்கள் ?”

“என்ன செய்வோம், செய்தோம் எல்லாம் ஒண்ணுமே யாருக்கும் இன்னமும் புரியவில்லை. எனக்கு அவர்களுடைய அறியாமையைப் போக்கி மனத்தளவில் மேல்மட்டத்துக்குக் கொண்டு வருவதற்கான பொறுப்பு. காந்திய இந்திய தத்துவ இயல், உளவியல் கிராம மறுமலர்ச்சித் திட்டங்களைப் பற்றிய அறிவு எல்லாம் படித்துப் படித்து வறண்டுபோனபின் இதற்குத் தான் லாயக்கென்று நானும் வந்தேன். அவர்களும் சுளையாய் எட்டு நூறு சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் நீ கேட்டாற்போல என்ன பண்ணினர்களென்று கேட்டால் ஒரு பலனும் தெரியவில்லை.”

“ஏன் ?”

‘ஏன் என்றால்? சற்றுமுன் ஜோஷி சொல்லிவிட்டுப் போனான். அந்தக் காலத்தில் நம் கிராமப்புறங்களில் எங்கோ வயல் வெளிகளுக்குச் சென்று காலைக் கடன்களை முடித்தார்கள். காந்திஜியின் முறை அப்படி நாட்டுப்புறங்கள் விரிந்து கிடந்த காலத்துக்குப் பொருந்தும். இன்று நேருஜியின் புண்ணியத்தில் கிராமங்கள் நகரத்துப் பெருக்கத்துக்கு இரைபோட தன் சொத்து சுகங்களை எல்லாம் வழங்கிவிட்டு, கூன், குருடு, கிழம், பழம், ஏழை எளியதென்று மிஞ்சியிருக்கின்றன. அவர்களுக்கும் நகரத்துச் சுகங்களைக் கொடுக்க, திட்டங்களைப் போட்டு பட்டி தொட்டிகளிலெல்லாம் சாலைகளும் அலுமினியப் பூச்சுக் கம்பங்களும் கம்பிகளும் கொண்டு வந்துவிட்டார்கள். பிறகு என்ன இருக்கிறது ? வீட்டுக்கு வீடு ஏக்கர் ஏக்கராவா நிலம் இருக்கிறது? அப்படி இருந்தாலும் அப்படி நடந்துபோக யாருக்குப் பொறுமை இருக்கிறது? ஏக்கர் ஏக்ராவா நிலம் வைத்துக் கொண்டிருப்பவன் பணத்தைப் பெருக்கித் தன் சுகத்தைப் பெருக்கிக் கொள்கிறானே ஒழிய, கிராம நலத்தைப் பற்றியோ கிராம மக்களைப் பற்றியோ கவலைப்படுகிறானா? எனவே ஜனப் பெருக்கமும் இட நெருக்கமும் தாவித் தாவி நகரத்தைப் பெருக்கிக்கொண்டு செல்லும் இந்த நாட்களில் இந்த முறையில் கிராமத்துக்கு வெளிச்சம் போடுவதில் ஒரு பயனும் இல்லை. தேவைகளை அதிகரித்துக் கொள்ளாதே. கதர் உடுத்துங்கள், சர்க்கா சுற்றுங்கள்; கிராம மக்கள் நகரை நம்பியிருக்கக் கூடாது’ என்று நான் போய் எந்த கிராமத்தி லேனும் சொல்லிப் பிழைக்க முடியுமா ?”

“அப்படிச் சரிவராமல் போய் திட்டம் தோல்வி என்று ஏன் மூடவில்லை ?”

ஞானம் கலகலவென்று சிரிக்கிறாள். “மிகச் சரியான கேள்வி, நீ அடி மடியிலேயே கை போடுவாய்போல இருக்கு...!”

“ஏன் ஸிஸ்டர் ? தோல்வின்னு தெரிஞ்ச பின்னும் ஏன் மூடக்கூடாது ?”

“அசடு இழுத்து மூடிவிட்டால் இந்த வீடுகளைக் கட்டுவதற்காக வரும் கான்ட்ராக்ட்காரன் போன்றவர்கள் பிழைப்பது எப்படி ? ஒட்டல்காரன், பால்காரன், முட்டைக் காரன் இவர்கள் எல்லாரும் பணக்காரர்களாவது எப்படி? யார்யாரெல்லாமோ சம்பந்தம் இல்லாதவர்கள் பிழைக்கும் போது, இந்தியா முழுதுமுள்ள பகுதிகளிலுள்ள டாக்டர்கள், மற்றும் சுகாதாரப் பணிசெய்பவர்கள் என்ற பெயர்களில் இந்த ஊரை வந்து பார்த்துவிட்டுப் படியும் சம்பளமும் வாங்கிக் கொண்டு போகக் கூடாதா? இந்தத் திட்டத்தின் பெயரில் பிழைக்கும் அதிகாரிகள் வெளிநாட்டுக்குப் போகும் சந்தர்ப்பங்களை வேறு இழக்க வேண்டிவரும். நானும் கூடத்தான் அலுவலகத்திற்குச் சென்று ஏதோ நான்கு தாளில் கையெrமக்கப் போட்டு அரட்டை பேசிவிட்டு, இரண்டு தலைவேதனைப் பிரசங்கங்களை ஒவ்வொரு குழுவுக்கும் கொடுக்கிறேன்; சம்பளம் வாங்குகிறேன். இப்போது, ஒவ்வொரு சமயம், இந்தியாவே யாரோ சிருஷ்டித்து கனவுலகில் மிதப்பது போல் எனக்குப்படுகிறது.”

பள்ளியில் ஐந்தாண்டுத் திட்டங்களைப் பற்றிய கட்டுரை எழுதி அதன் பயன்களை வானளாவ விவரித்த மைத்ரேயிக்கு இந்த நேர்மாறான கருத்தை ஒப்புக்கொள்வதற்குத் துணிவில்லை. “அப்படியானால் கிராமங்களுக்குச் சாலை வேண்டாமா? மின்சாரம் வேண்டாமா ? ஐந்தாண்டுத் திட்டங்கள் நல்ல திட்டங்களல்லவா ?”

“அப்படிச் சொல்லவில்லை. ஆனால் நகரத்தைப்போல் கிராமத்தை ஆக்குவது சரியாக இல்லை. கிராமங்கள் இந் நாட்டின் உயிர் நாடிகள்; இந்நாட்டின் தனித்தன்மையை அங்கேதான் காணமுடியும். கிராமத்தில் குளத்தைக் குப்பையைக் கொட்டித் தூர்த்து, அங்கு ஒரு வானொலிக் கம்பத்தை நட்டு, இரண்டு துருக்க சாமந்திச் செடியைப் பயிராக்கிவிட்டு, நேரு பூங்கா, காந்திபூங்கா, அல்லது அந்த ஊர்ப் பெரிய மனிதன் பேரில் பூங்கா என்றால் நன்றாக இருக்கிறதா? பக்கத்துக்குப் பக்கம் டீக்கடை, சினிமா, சற்றும் நான மில்லாமல் பொது இடங்களை அசுத்தமாக்குதல் எல்லாம் நகர நாகரிகத்தின் சின்னங்கள். யாரோ ஒரு தமிழ் எழுத் தாளர் இந்த முன்னேற்றத்தைப்பற்றி இப்படி ஒப்பிட்டிருந்தார். கைம்பெண்ணொருத்தி, தலைசீவி, மெல்லிய ரவிக்கை உட்கச்சுத் தெரிய அணிந்து, பாவாடை புடவை உடுத்தி, கொண்டையிட்டுக்கொண்டு வாத்தியாரம்மா வேலைக்குப் போனாற்போல் என்று எழுதியிருந்தார். நான் வெகுநேரம் ரசித்துச் சிரித்தேன்...”

மைத்ரேயி பேச்சற்று நிற்கிறாள்.

“இந்தத் திட்டம் செயல்முறைக்குச் சரியில்லை; ஒத்து வராது என்று எழுதிவிடலாம். ஆனால் பொறுப்பேற்றிருப்பவர்கள், தனி பங்களா, கார், கொழுத்த சம்பளம் இதெல்லாம் அநுபவிக்க இன்னொரு திட்டத்தை உருவாக்க வேண்டும். எனக்கு மென்மையான தோல். இப்போது உணர்ச்சி மரத்து விட்டது. இது உலகம்...”

மைத்ரேயி அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்; ஒரு பள்ளி இறுதிப் பரீட்சை அவள் கொடுத்திருக்கிறாள். இவள் படித்த படிப்பு எத்தனை? எவ்வளவு புத்தகங்கள் படித்து நோட்ஸ் எழுதியிருப்பாள்? நீயும் நானும் ஒன்று என்று சொன்னாளே?

“உங்களுக்கு அக்கா தங்கை அண்ணன் தம்பி என்று ஒரு வருமே இல்லையா ஸிஸ்டர்?”

“ஏன் இல்லாமல்? ஒரு தம்பி சிகாகோ யுனிவர் சிட்டியில் இருக்கிறான். பெரிய அக்கா டில்லியில் இருக்கிறாள். அம்மா வெகுநாட்களுக்கு முன்பே போய்விட்டாள். அப்பா போய் இரண்டு வருஷங்களே ஆகின்றன. எங்களு டைய வீடு மயிலாப்பூரில் இருந்தது.”

“இப்போது அதை வாடகைக்கு விட்டிருக்கிறீர்களா எலிஸ்டர் ?”

“வாடகையா? அப்போதே விற்றுவிட்டோம். ஓர் அலை போல் கஷ்ட நஷ்டங்கள். நான் கல்யாணம் செய்துகொண்டு குடும்பத்தில் இருக்கவேண்டும் என்பது அப்பாவுக்கு ஆசை. ஏன் ? என் தாயார் நான் அந்தக் காலத்தில் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அரசியல் கட்சியில் சேர்ந்ததனாலேயே உயிரைவிட்டாள். அவளால் அந்த அதிர்ச்சியையே தாங்கமுடியவில்லை.”

ஞானத்தின் தொண்டை கரகரக்கிறது.
“நீங்கள்.அரசியலில் இருந்தீர்களா..?”
“வெறுமே இருந்தேன் மட்டுமில்லை. அரசியலுக்காகவே வாழ்க்கை என்று சோஷியலிஸ்ட் கட்சியில் முழுநேரத் தொண்டு வேலை செய்தேன். என்னுடைய கல்லூரி நாட்களில் நான் ஆவேசம் வாய்ந்த பேச்சாளி என்று சொல்வார்கள். அதனால் தான் நான் அந்தக் காலத்திலும் நேரு, காந்தி காங்கிரஸில் மனசில்லாமல் புரட்சிக்கட்சியிலேயே இருந்தேன். தற்காலம் நகரில் இருக்கும் மிகப் பெரிய {hwe|களும்,|தொழிலதிபர்}} அரசியல் பதவிகளில் வீற்றிருப்பவர்களில் பலரும் அந்த நாட்களில் என்னுடைய வகுப்புத் தோழர்களாக, கட்சிக் கூட்டாளிகளாக இருந்திருக்கின்றனர். பாரத நாடு சுதந்திரம் பெற்றதும் பதவி லாபங்களைக் கருதி கதர்ச்சட்டை போட்ட பலரை நான் அறிவேன். சுதந்திரம் பெற்றபின், அதற்கு முன் பேசிய நியாயம், நேர்மை, துணிவு என்ற கோட்பாடுகளை மட்டும் தங்களிடம் வைத்துக் கொண்டவர் யாரும் இன்று வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கவில்லை. இன்றைய அரசியலில் அத்தகையோருக்கு இடமே இல்லை.”

“நீங்கள் ஏன் அரசியலில் இருந்து விலகி விட்டீர்கள், எலிஸ்டர் ?”

“விலகினேனா நான் ? என்னைப் போன்றவர்களுக்கு அங்கே இடமில்லை என்று விலக்கிவிட்டது. நம்முடைய பொருள் நமக்குக் கிடைக்குமுன் நம் எண்ணங்கள் நியாயமாக, உண்மையாக இருந்தன. அது நம்மிடையே வந்த பிறகு ஒற்றுமை நல்லெண்ணம் முதலியவற்றை உறிஞ்சிக்கொண்டு, வேறு எதையோ நம் ஆவல்கள் பற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த விளைவுகளைப் பார்க்கும்போது, நம் மக்கள் மட்டும் இந்த ஆட்சிமுறைக்குத் தகுதி பெறவில்லை என்பதில்லை. தலைவர்கள் என்று கருதப்படுகிறவர்களும் தகுதி பெறவில்லை. எல்லோரும் பதவியும் செல்வாக்கும் வேண்டிக் கட்சி மாறிய பின்னரும், அதே காரணங்களுக்காகக் கட்சி பிளவு பெற்றுப் பிரிந்த பின்னரும் நான் தனியாக நின்றேன். அரசியல் பதவி இல்லையேல், கட்சியமைப்பில் மட்டும் நின்று மக்கள் சமுதாயத்துக்கு ஒரு சிறப்பையும் செய்து விட முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. அதனால் நான் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிர்த்துச் சென்ற தேர்தலில் போட்டி இட்டேன்; என் எதிரி யார் தெரியுமா ?”

“யாரோ ?”

“ராஜா...முன்னாள் ஜமீன். பணபலம், ஆள்பலம், அதிகார தோரணை எல்லாமே எனக்கு எதிரியாகக் கச்சை கட்டிக் கொண்டிருந்தன. மின்மினி உயிர்ப் பூச்சிதான். ஆனால் குழல் விளக்கினொளியில் அது எம்மாத்திரம்? நான் தோற்றுப்போனேன். அந்தத் தோல்வி என்னை நேரடியாகப் பாதித்தாகச் சொல்ல முடியாது. ஆனால் அப்பாவுக்கு அதுவே யமனாயிற்று. என்னுடன் பிறந்த தமக்கை நான் வெற்றி பெற்றிருந்தால் ஓடி வந்திருப்பார். தோல்வியடைந்ததும், ஆளுங்கட்சியை எதிர்த்து நின்ற முட்டாள்தனத்தைச் சொல்லிச் சிரித்தாளாம். நான் ஏதோ தீண்டத்தகாத பாவத்தைச் செய்துவிட்டாற் போல் ஒதுங்கியிருக்கிறார்கள். அப்பாவின் மறைவுக்கு வந்து பார்த்து விட்டு அடுத்த விமானத்தில் கிளம்பிவிட்டாள். செகரட்டேரியட்டில் பெரிய பதவி வகிக்கும் ஐ.ஸி.எஸ். வர்க்கமான அவள் கணவர் வரவேயில்லை. தம்பி அப்போது வெளிநாட்டில் இருந்தான். வீட்டின் மீது கடன் வாங்கி அப்பா என் தேர்தலுக்குச் செலவழிக்கக் கொடுத்தார். கடன்காரர்கள் நெருக்கினார்கள். இறுதி நாட்களில் தான் வாழ்ந்த இடத்தைவிட்டு வெளியேறி உயிரை விடும் கொடுமையை என்னாலேயே அப்போது தாங்கி இருக்க முடியாது, நல்ல காலமாக இறைவன் அந்த நிழலிலேயே அவர் உயிரைப் பறித்துக் கொண்டான். வீட்டை விற்கத் தம்பி உடன்பட்டான். விற்றுவிட்டு அவனோடு ஆறேழு மாசங்கள் ஊர் ஊராகச் சுற்றினேன். பிறகு இந்த வேலை கிடைத்தது. அவன் மறுபடியும் சிகாகோ போனான். நான் இங்கே வந்து ஒன்றரை வருஷமாகிறது.”

வெறும் கல்வி மட்டும் இருந்தால் போதும் என்று மைத்ரேயி நினைத்தாள்!

“நீங்கள் தவறாக நினைக்காமலிருந்தால்...நான் ஒண்ணு கேட்கட்டுமா, ஸிஸ்டர் ?”

“என்ன வேணும்? கேள்.”
“நீயும் நானும் ஒண்ணுன்னு சொன்னீர்கள். நான் எங்கே, நீங்கள் எங்கே! உங்களை அரசியல் ஒதுக்கிவிட்ட தாகச் சொன்னீர்கள். என்னை வாழ்க்கையே ஒதுக்கிவிட்டது. சூடு தெரியாமல் அவசரத்தோடு ருசிக்கப் போய் நாவையே சுவை தெரியாதவண்ணம் கெடுத்துக்கொண்ட கதை என்னுடையது. பெண் தனித்து நின்று நல்மதிப்பைப் பெற்று வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நீங்கள் எப்படி என்னைப் போலாவீர்கள்!”

ஞானம் சற்றே திடுக்கிட்டாற்போல் மைத்ரேயியின் கையைப்பற்றி மெல்ல அழுத்துகிறாள். சில விநாடிகள் அவளுக்குப் பேச்சே எழவில்லை.

‘நீ என்ன கேட்கிறாயென்று எனக்குப் புரிகிறது. பெண்ணே நான் தனித்து நிற்கிறேன் என்றால் அப்படி இயற்கையாகவே நின்றுவிடவில்லை. நான் ஒன்று சொல்லுகிறேன், கேட்டுக்கொள், இந்த உலகில் எனக்குத் தெரிந்தவரை எந்த நாட்டிலும் ஒரு பெண்ணை போகத்துக்குரியவள் என்ற வரையை மறந்து அவளுடைய அறிவுக்காக, குணநலன்களுக்காக, திறமைக்காகச் சந்தர்ப்பங்களை கொடுத்து மதிப்பதாகத் தெரியவில்லை. அவளும் முன்னுக்கு வரட்டும் என்று பெண்ணின் பெருமையைப் பற்றிப் பேசுபவர்கள்கூட, ‘ஏதோ, பாவம் அவளும் வந்துவிட்டுப் போகட்டும்’ என்று தரும இரக்கப்பரிவோடு சொன்னாலும் தங்களுக்குப் போட்டியாக வந்துவிடக்கூடாது என்று முன்னெச்சரிக்கை செய்து கொள்கிறார்கள். நான் கல்லூரியில் படித்த காலத்திலும் அரசியலில் புகுந்த காலத்திலும் என்னை விரும்பி அதாவது மணம் புரிந்துகொள்வதாகச் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் சிலர் இருந்தார்கள். ஒரு இளைஞனை நானும் அந்த நாட்களில் விரும்பியிருந்தேன். ஆனால் என் மனசு தன் கருத்தை அவன் பால் சொல்லவிடுமுன் அவனுக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்றறிந்தேன். என் பேச்சையும் அறிவுத் திறனையும் அவன் புகழ்ந்து போற்றியதெல்லாம் இந்த உடலுக்காகத்தான் என்ற உண்மை எனக்கு மிகவும் பயங்கரமானதாக, வெறுக்கத்தக்கதாகத் தோன்றியது. பெயர் கூற விரும்பவில்லை. இப்போது அவன் ஒரு கண்ணியமான பதவியில் இருக்கிறான். அவன் அற நெறிச் சொற்பொழிவுகளாற்றுவதாகக் கொட்டை எழுத்துப் போஸ்டர் ஒன்று அன்று தெரிவித்தது. இந்தச் சமுதாயத்தை எவ்வளாவு எளிதாக வேஷம் போட்டு ஏமாற்றிப் பெரிய ஆளாக வளர முடிகிறது என்று பார்த்தாயா?”

பெண்ணுக்குப் பொறுப்பு அதிகம்; கட்டுப்பாடுகளும் அதிகம் என்றால், ஆணுக்கு மட்டும் பொறுப்பு கொஞ்சமா? தன்னுள் எழும் விலங்கியல் உணர்வுகளுக்காகத்தான் ஒரு ஒரு ஆண் பெண்ணை மதிக்கிறான். அந்த உணர்வு தனக்கு ஒரு பொறுப்பு கடனைச் சுமத்தும் வகையில் விளைவு தரும் பாது, எத்தகைய அறிவாளியும் முதிர்ந்த பண்பாடு உடையவனும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். இது இன்றைய நிகழ்ச்சி மட்டுமில்லை. பண்டைய காலப் புராண முனிவர்களிலிருந்து தொடர்ந்து வரும் வரலாறுதான் இல்லையா?

“எனக்கு அந்த இல்லத்துப் பெண்களிடத்தில் இந்தக் காணத்தினாலேயே அநுதாபமும் பரிவும்பெருகுகின்றன. மீது அநுதாபமும் அன்பும் பிறந்ததற்கும் அதுதான் காணம். அந்தத் தனி ஒட்டுக் குடிசையில், வெறும் துணி யால் மறைக்கப்பட்ட ஜன்னலுக்குப் பின் நின்றோ, நன்றாகச் சாத்தியிராத கதவிடுக்கு வழியாகவோ பார்த்துக்கொண்டு நீ நிற்பாய் . விரல் வழியே ஒளிரும் விளக்கின் பிழம்புபோல் உன் முகம் என் நினைவை விட்டகலவில்லை. நீ மாடு மேய்க்கும் சிறுமியுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தாய்; எங்களைக் கண்டதும் உள்ளே சரக்கென்று தலையை இழுத்துக் கொண்டாய். உன் தோற்றமே நீ இயல்பாக இல்லை என்று காட்டிக் கொடுத்தது. அன்று அந்த ஒட்டல்காரரிடம் நான் எதோ சாதாரணமாக விசாரிப்பதுபோல் கேட்டேன்...”

மைத்ரேயிக்கு இதழ்கள் துடிக்கின்றன. “சினிமாவில் பாட்டெழுதறேன்னு சொல்லும் ஒரு தி.மு.க. பையனை நம்பி வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கு போலிருக்கு. பார்த்தால் நல்ல இடத்துப் பொண்ணுபோல இருக்கு...”

“அவ்வளவுதான் சொன்னாரா, ஸிஸ்டர் ?” “அவர் வேறென்ன பேசினாரென்பதை எல்லாம் அப்ப நான் குறிப்பாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ராத்திரி இங்கே தனியாக நான் படுக்கையில் தூக்கம் பிடிக்காமல் விழிக்கும் போது, கதவை ஒருக்களித்துக் கொண்டு, குத்து விளக்குச் சுடர் போல நீ நின்றது மனசில் தோன்றும். அடுத்த வாரம் அங்கே சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. முன்பு நான் பார்த்திருந்த ஆடு மேய்க்கும் சிறுமி அங்கே நின்றாள். உன்னைப் பற்றி விசாரித்தேன், “அந்த அக்காவா? காரில் ஊருக்குப் போயிட்டாங்க..” என்று சொன்னா. உடனே ஒரு மாசத்துக்குள் உன்னை அந்த விடுதியில் பார்க்கத் தூக்கி வாரிப் போட்டது.”

மைத்ரேயி நெஞ்சத்து நெகிழ்வுக்குத் தடைபோட இயலாமல் கீழே கோலமிடுகிறாள். நீர் முத்துக்கள் சிந்துகின்றன.

“எனக்குக் கண்ணீர் விடுபவர்களைக் கண்டால் பிடிக்காது. கண்ணிர் விடுவதனால் பெண் கையாலாகாதவள் என்ற தகுதியை உறுதியாக்கிக் கொள்கிறாள். கண்ணீரை வைத்து ‘ஜோக்'குகள் வெளியிடும் பத்திரிகையை நான் கிழித்துக்கூட எறிந்திருக்கிறேன்.”

மைத்ரேயி பரபரப்பாக கண்களை ஒத்திக் கொள்கிறாள். சிவந்த முகம் மழையில் நனைந்த மலர்போல் ஒளிர, புன்னகை செய்கிறாள்.

“என்னிடம் வந்த பிறகு நீ கண்ணீர் விடுவதை நிறுத்தி, மறந்து போய்விட வேண்டும். உன்னைப்போல் எத்தனையோ பெண்கள் அழுபவர்களாக இருக்கும். என் தம்பி, கல்கத்தாவில் ஒரு காபரே ஓட்டலுக்குப் போய்விட்டு வந்து சொன்னான். அந்தப் பெண் விழித்துப் பார்த்துக்கொண்டு ஒவ்வொரு துணியாக உரிந்து வீசும்போது கூட்டத்திலிருக்கும் பேய்களைப் பார்த்து ஒரு பெண்ணுடம்புக்குக் கழுகுகள் போல் வந்து உட்கார்ந்திருக்கும் பதர்களே, பாருங்கள்! பாருங்கள்! என்று வெறுப்புடனும் ஆக்ரோஷத்துடனும் கூறினாற் போலிருந்ததாம். அவள் ஆடிய ஆட்டம், கூட்டுக் குள்ளே சிக்கிய பாம்பு, கூண்டை ஓங்கி ஓங்கி அறைந்து கொத்துவதைப் போலிருந்ததாம். அங்கே உட்கார்ந்தி கனமுதனவான்கள். கலை இலக்கிய உலகின் பிரமுகர்கள் அக்கா!’ என்றான். எனக்கு அந்தக் காட்சியைக் கண்முன் கண்டாற்போல் நெஞ்சு கொதித்தது. இந்த ஊரிலும் கூட அத்தகைய இரவுக் காட்சிப் படங்களைக் கொட்ட கைக்கு வரவழைத்து வெளியில் பெரிய பெரிய விளம்பரங்கள் வைத்திருந்தார்கள். நான் பத்துப் பெண்களைக் கூட்டிச் சென்று மறியல் செய்தேன். பெண்ணின் தன்மானத்தைக் காலடியில் வைத்துத் தேய்க்கும் அந்தப் பெரிய விளம்பரங்களில் ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று எழுதி ஒட்டினோம். எங்களைப் போலீஸ் வந்து அப்புறப்படுத்திவிட்டு கனதனவான்களை, பெரிய மனிதர்களை, பிஞ்சுகுஞ்சுகளை, பெண்டிரை, எல்லாரையும் உள்ளே படம் பார்க்க அனுமதித்தது. ‘அடல்ட்ஸ் ஒன்லி’ கதைகளாக வெளியிடும் குடும்ப, வாஸ்ய, இலக்கியப் பத்திரிகை ஆசிரியர் அடல்ட்ஸ் ஒன்லி’ எழுத்தாளரைவிட்டு நாட்டுப்புறத்துப் பெண்கள் ரவிக்கை போடுகிறார்களா, கோயில் சிலைகளை அச்சடித்த காகிதத் தால் மூடப்போகட்டுமே சகோதரியார் ! ஆபாசம் அவர் கண்களில் இருக்கிறது. இரகசியங்களை மூடி மறைக்காமல் வெளியிடுவது உண்மையான கலை என்று நீண்ட கட்டுரைத் தொடர் எழுதச் சொன்னார். இங்கே என்னைப் பிராஜக்ட் ஆபீசர் கூப்பிட்டு விசாரணை செய்வது போல் விவரம் கேட்டார். எனக்கு ஒவ்வொரு சமயமும் கண்ணீர் வருவது போல் இருக்கும்; விழுங்கிக்கொண்டு சிரிப்பேன். அந்தச் சிரிப்பும் காபரே ஆட்டக்காரியின் சிரிப்பைப் போன்றது தான்...”

“அக்கா, சமூக சேவை செய்யும் நர்மதா, மிஸஸ் சிவநேசன் இவர்களை எல்லாம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?”

“அவர்களுக்காக வருத்தப்படுகிறேன். பணம். பணத்துக்காக இன்று எதையும் யாரும் கறைபடுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. அவர்களுக்கு சமூக சேவை என்ற பெயரில் இப்படி எல்லாம் வருவதும் போவதும் உல்லாசம் கொண்டாடுவதும் தான் வாழ்க்கை. மிஸஸ் சிவநேசன், நர்மதா இருவருமே நன்றாகக் குடிப்பார்கள். மேல்நாட்டு நாகரிகப் பொழுதுபோக்கு விடுதிகளில் அவர்கள் உறுப்பினர்கள். நாட்டுத் தலைவர்கள், அயல் நாட்டுப் பிரமுகர்கள் போன்ற வர்கள் வரும்போது இவர்கள் முன்னே நின்று சாய இதழ்களை குவித்தும் விரித்தும் ஆங்கிலத்தில் அப்போதைய ஃபாஷனில் பேசி மிழற்றி இந்தியக் கலாசாரம் பண்பாடு என்று நெற்றியில் குங்குமம் தீற்றுவார்கள். துரைசானிக்குப் புடைவை சுற்றிவிட்டுப் படம் எடுத்துக் கொள்வார்கள். கைகுவிப்பதும் திலகமிடுவதும் போலி மரியாதைப் பண்புக்குச் சிகரங்கள்...”

‘லோகாவைத்தான் அந்தக் குழுவில் பொறுத்துக் கொள்ளலாம். தான் எங்கே நிற்கிறோம் என்ற அறிவும் உணர்வும் அவளுக்கு உண்டு. அதனால் பிறர் தகுதியை அறிந்து அடக்கமாகச் செயல்படுவாள். உன்னை நான் இங்கே விடுவித்து அழைத்து வருவதற்கு அவள்தான் காரணம். அவளாக அந்த எண்ணத்தை வெளியிட்டிராதுபோனால் எனக்குக் கேட்கத் தெரிந்திருக்காது. அவள் அங்கே இருக்க வேண்டியவளல்ல. ராஜா அவளை முழு நேரக் கட்சிப் பிரசார வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அவளுக்குப் படிக்க ஆர்வம் இருக்கிறது. உங்களைப் போல் உள்ளவர்கள் அவளை ‘அடாப்ட்’ செய்து கொண்டால் நன்றாக இருக்கும்...ஒரு நல்ல பெண்ணை நல்லபடியாக உருவாக்கியதாக ஆத்மதிருப்தி உண்டாகும் என்றாள். நான் லபக்கென்று கொண்டா பத்திரத்தை என்று பிடித்துக் கொண்டேன். எனக்கே நினைத்துப் பார்த்தால் விசித்திரமாயிருக்கிறது. நீ யாரோ, நான் யாரோ, ஏதோ காற்றில் சிதறிவந்த நீர்த்துளிகள் ஒன்றுபட்டாற்போல்...”

“நான்தான் நீர்த்துளி. நீங்கள் ஆழ்ந்த தடாகம். நான் தடாகத்தில் ஒன்றுபட வந்தேன்...” என்று உளம் விம்ம மொழிகிறாள் மைத்ரேயி.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_12&oldid=1115352" இலிருந்து மீள்விக்கப்பட்டது