ரோஜா இதழ்கள்/பகுதி 22

விக்கிமூலம் இலிருந்து

22

வாயிலில் கார்வந்து நிற்கும் ஒசை மிக மென்மையாக இருந்தும் ஞானத்துக்கு விழிப்பு வந்துவிடுகிறது. கதவை அறையும் ஒசையில் அவள் எழுந்து உட்கார்ந்து விளக்கைப் போடுகிறாள். மைத்ரேயி அங்கே இரவு தங்க வந்து ஒரு மாசத்துக்கு மேலாகிவிட்டது. ஒருகால் அருகில் எங்கேனும் பொதுக் கூட்டத்துக்கு வந்து பேசிவிட்டு இரவைக் கழிக்க அங்கு வருகிறாளோ என்றெண்ணுகிறாள்.

அதற்குள் வாயில் சுற்றுச் சுவர்க்கதவு ஒசைப்படுகிறது. அக்கா? அக்கா ?”

பரபரப்புடன் ஞானம் வாயில் விளக்கைப் போட்டு விட்டுக் கதவைத் திறக்கிறாள்!

அவள் வெளியே வரும்போது மைத்ரேயியின் பின்னே ஒல்லியாக உயரமாக நிற்கும் உருவத்தின் மீது ஞானத்தின் விழிகள் நிலைக்கின்றன.

“ஹலோ... நான்தாம்மா, சிவப்பிரகாசம்!”

“அட...? நான் யாரோன்னு பார்த்தேனே ? வா, வா... உள்ளே வா. நீ என்னமோ பென்ஸில்வேனியாவிலோ, ஃப்ளோரிடாவிலோ இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அங்கேயே கல்யாணம் பண்ணிண்டு தங்கிவிட்டதாகக்கூட யாரோ சொன்னாங்க...?”

“ஐயையோ?...” என்று சிரித்துக்கொண்டே உள்ளே வந்து அவன் உட்காருகிறான். மைத்ரேயி திகைத்தாற்போல் பின் வந்து ஞானத்தின் பின்னே நிற்கிறாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா. அம்மா ரொம்பக் காயலாவா வாவான்னு எழுதிட்டே இருந்தாங்க, வந்தேன். அவங்க போயி ரெண்டு மாசம் ஆகிறது. திரும்ப இந்த மாசக்கட்சில சிகாகோ போயிடறேன்...”

“இந்த நாட்டின்மேல் அவ்வளவு வெறுப்பு ஏன் ?”

“மாமாகூட இங்கே ஏதானும் வேலையில் இருக்கலாம்ன்னாரு அவர் சிபாரிசில் வேலை கிடைக்கும். அப்புறம் எல்லாரும் அவங்களுக்குத்தான் காலம்ன்னு காய் வாங்க. ஏன் அந்த வம்பெல்லாம்?” என்று குறிப்பாக மைத்ரேயியைப் பார்த்து குறுநகை செய்கிறான்.

“என்னை ஏன் வம்புக்கிழுப்பதுபோல் பார்க்கிறீர்கள்? இங்கே சர்வகலாசாலை ஆராய்ச்சிக் கூடங்கள் எல்லாமும் எப்படி எப்படியோதான் ஆட்களைப் பொறுக்குகிறதென்று அப்பட்டமாகச் சொல்லுங்களேன்?....” என்று மைத்ரேயி சாடுகிறாள்.

அவன் சிரிக்கிறான். “நான் உங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலே. இவங்க உங்க ஸிஸ்டர்னு இங்கே கால்வைக்கும் வரையிலும் தெரியாது. எனக்கு ரொம்ப ஆச்சரியமாயிருக்கு...நீங்க அரசியல்லேந்து அப்போதே விலகிட்டதா நினைச்சேன் ?”

“நான் இப்போதும் விலகி நின்னுதான் வேடிக்கை பார்க்கிறேன். பிழைப்புக்கு நான் வாங்கின ‘டிகிரி’ களெல்லாம் வழி செஞ்சிட்டிருக்கு...”

“ஓ..நான் நீங்களும் இவங்க கட்சியிலே சேர்ந்திருப் பீங்கன்னு நினைச்சு ஒரு நிமிஷம் அசந்து போனேன்.”

ஞானம் புன்னகை செய்கிறாள்.

“நான், நீதான் இவ கட்சியில் சேர்ந்து தம்பியாயிட்டியோன்னு எண்ணினேன்.”

“ஓ, நான் இவங்களை எப்படிக் கொண்டுவிட நேர்ந்ததுன்னு கேட்கிறீங்களா ?...அதை அவங்களே சொல்வாங்க. உங்களைப் பார்த்ததில் ரொம்பச் சந்தோஷம். நான் பிறகு பகலில் ஒருநாள் வரேன், நாடு விடும்முன்ன. இப்ப வரட்டுமா ?”

ஞானம் எழுந்து அவனை வழியனுப்புகிறாள்.

கார் கிளம்பிச் சென்றதும் பல நிமிடங்களுக்கு அமைதி நிலவுகிறது.

மைத்ரேயிக்கு ஞானத்தை நேருக்கு நேர் பார்க்கக் கூச்சமாக இருக்கிறது. ஞானமும் ஏதோ ரசிக்கக் கூடாதது நடந்திருப்பதாக ஊகிக்கிறாள். அதை அவளாகத்தான் சொல்ல வேண்டும் என்று மெளனமாக இருக்கிறாள்.

அவளாக எதுவும் பேசவில்லை. மளமளவென்று கண்களில் நீர் பெருகுகிறது.

“எதற்கு இப்போது அழுகிறாய்? அழுகிறவர்களைக் கண்டால் எனக்குக் கட்டோடு பிடிக்காது. இப்போது எதற்கு அழவேண்டும்? விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையைப் போட்டுக் கொண்டு படுத்துக்கொள். காலையில் பார்த்துக் கொள்ளலாம்

ஞானம் சரேலென்று தன்னறைக்குள் சென்று விளக்கை அணைக்கிறாள்.

மைத்ரேயி, கண்களில் நீருடன் அந்த முன்னறையிலேயே சிலைபோல நிற்கிறாள். அதே நாற்காலிகள், புத்தகங்கள், ஒற்றைக்கொத்து மலருடன் பூக்குவளை, கொழுகொழு வென்று சிரிக்கும் குழந்தையுடன் புதுவருடக் காலண்டர்...

ஒழுங்கீனமே ஒன்றிலும் கிடையாது என்று அந்த அறை மந்திரிக்கிறது. அவள் தன் பிறப்பை , தன் தவறுகளை, தன் வீழ்ச்சியை நினைக்கிறாள். அறியாமையால் கட்டறுத்துக் கொண்டு அன்று தனராஜுவை நம்பிப் போனாள். இன்று ஒட்டுப் போட்ட தையலைப் பிய்த்தெறிந்தாற்போல் அறிந்து தெரிந்து தன்னந்தனியே இடறிவிழப் போனாள். முதல் தடவை இடறி விழுந்தபோது குழந்தை என்று பிறர் அநுதாபத்தையேனும் பெற வாய்ப்பிருந்தது. இப்போது யாரும் அநுதாபம் காட்ட மாட்டார்கள். அவள் மீண்டு வந்தாலும் சீனிவாசன் ஒருநாள் அவள் எதிர்க் கட்சிக்காரன் வீட்டில் அடைபட்டுக் கிடந்ததாகத்தான் நம்புவான். அழகிய மணவாளன் போன்றவர்களும் அப்படியே நம்புவார்கள். அவள் இடறி விழுந்ததுமன்றி சேறும்ஒட்டக் காயமும் பட்டுக் கொண்டிருக்கிறாள். சீனிவாசன் தோற்றுப் போனால் தேர்தல் அக்கிரமங்கள் என்று இந்த விஷயத்தை வழக்கு மன்றத்துக்கு இழுக்கத் தயங்கமாட்டான். வெற்றி பெற்றாலும் விட்டுவிடமாட்டான். தானே தன்னைச் சுற்றி நெருக்கமான வலைகளைப் பின்னிக் கொண்டுவிட்டான். யாரோ முன்பின் தெரியாதவன் காரில் ஏறு என்றால் ஏறலாமா?

இந்தக் குறுகிய காலத்துள் சீனிவாசனைப் பற்றி அவள் நன்றாக அறிந்துகொண்டிருக்கிறாள். நேராகப் பேசும்போது இனிமை சொட்டப் பேசுகிறான். சத்தியம் தெய்வம் என்று கூறுகிறான். ஆனால், வாக்காளர் பட்டியலில், இறந்தவர், வீடு மாறிப் போனவர்களுக்கெல்லாம் ஆட்கள் தயாரித்தி ருக்கிறான். குடிசைகளிலெல்லாம் வேங்கடாசலபதி படத்தையும் பணத்தையும் கொண்டுபோய்ப் படத்தைக் காட்டி நட்சத்திரத்துக்கு வாக்களிக்க வேண்டுமாய்ச் சத்தியம் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்திருக்கிறான். மைத்ரேயி சிரித்துக் கொண்டே அவனிடம் கேட்டாள். “சத்தியம், தர்மம் என்று சொல்லிக்கொண்டு இப்படிச் செய்யலாமா?” என்று அவள் கேட்டதற்கு அவன், “இது நான் மட்டுமா செய்கிறேன்? காங்கிரஸ் வழி வைத்தது தான். ஆளும் கட்சி என்று தன் அதிகாரத்தை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்கிறார்கள்? முள்ளுக்கு முள். அவர்கள் செய்யும் குற்றங்கள் அனந்தம். இது தனிப்பட்டவனின் சிறு புள்ளி. பெரியவர் சொன்னாற்போல் ஆளுங்கட்சியினர் ஏன் முன்பே பதவி துறந்து மந்திரிசபையைக் கலைத்து கவர்னர் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவில்லை?” என்று மடக்கினான்.

அவனையும் அவளையும் இணைத்து யாரோ எதிர்க் கட்சிக்காரன் ஒரு புற்றீசல் பத்திரிகைத்தாளில் அச்சிட்டு அந்தத் துணுக்கை வெட்டி அவள் பார்வைக்கும் அனுப்பி வைத்திருந்தான். அப்போது அதுவும்கூட வெறும் எறும்புக் கடியாகத்தானிருந்தது. உண்மையிலேயே மாசு ஒட்டமுடியாது என்று அவள் அவற்றை எல்லாம் பொருட்படுத்தவில்லை. இப்போது மாசு ஒட்டிக்கொள்ளாமல் மீள்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பதைப் புரிந்துகொண்டு விட்டாள்.

நெஞ்சு ஊமைக்காயமாய் நோகிறது. ஞானம் முகத்தில் அறையவில்லை. உள்ளத்தைப் பின்னும் நோகச் செய்திருக்கிறாள்.

அவளுக்கு யார்...யார் இருக்கிறார்கள்?

கீழே விழுந்து மூக்கை உடைத்துக்கொண்ட குழந்தை அலறிக் கொண்டு தாயிடம்தானே செல்லும் ?

அவளுக்கு யார் தாய் ? அவள் உறங்கமாட்டாள் என்று அந்தத் தாய்க்குத் தெரியும்.

புழுதியில் விழுந்த மலராக வாடிக்கொண்டிருந்த அவளைப் போற்றிக் காக்கக் கொண்டுவந்த அன்னை அவள்.

ஒருநாள ஒரு பொழுது அவளைப் பட்டினி போட்டிருக்கவில்லை அவள். அவள் காசு கேட்கக் கூசுவாளென்று அாறியாமலேயே கைப்பையில் எப்போதும் பணம் போட்டு வைக்கும் அன்னை அவள்.

அவள் நல்ல துணி உடுத்தவேண்டும் என்று அவளுக்குத் தெரியாமலேயே புடவை வாங்கிக்கொண்டு வந்து வைத்திருக்கிறாள்.

அவள் ஒரு புத்தகம் இரவல் வாங்க வேண்டியிருக்கவில்லை.

அவள் ஒரு சிறு தேவைக்காகவோ, பெரிய தேவைக்காகவோ ஒரு கணமும் கவலைப்பட்டதில்லை.

அந்த உதவிகளை அவள் உதவியாகச் செய்யவில்லை.

அவளுக்கு உடல்நலக் குறைவென்றால் உடனே மருத்துவரை அழைத்துவந்து பேணியிருக்கிறாள். அவள் கூந்தலைச் சீவிப் பின்னல் போட்டிருக்கிறாள்; அவள் சேலையை மடித்து வைத்திருக்கிறாள்.

இன்னும் ஒரே வீட்டில் வாழும்போது ஏற்படக்கூடிய நெருக்கங்களை விழைந்து ஏற்று மகிழ்ந்து மகிழ்ச்சியை அளித்திருக்கிறாள்.

அந்தத் தாயை, இடையில் அவள் மீது போலியாக உறவும் உரிமையும் கொண்டாடிய அத்திம்பேரும், ஏன் அக்காவும்கூட இகழ்ந்து பேசினார்கள். அவள் வாய்மூடி இருக்க வேண்டியிருந்தது. அந்த அம்மைக்கு அவளுடைய இந்த அரசியல் ஈடுபாடு துவக்க முதலே பிடிக்கவில்லை என்பதை மைத்ரேயி உணர்ந்திருக்கிறாள்.

ஆனால் உணர்ந்தும் அவள் தன்னை ஈர்த்த பக்கம் ஓடத்தயங்கவில்லை. உண்மையில் அவள் பண நோக்கத்துக்காகத்தான் மேடை ஏறினாளா? அது ஒரு வெறி, வெளிச்சத்துக்கு ஆசைப்பட்ட வெறி, போஸ்டர்களில் கொட்டை எழுத்துக்களில் தன் பெயரைப் பார்க்கும் வெறி ஆயிரமாயிரமாய் மக்கள் தன்னைப் பார்த்துத் தன் பேச்சைக் கேட்கிறார் கள் என்று கண்டவெறி.

மைத்ரேயி...!

அந்த வெறியில் அவள் முன்னே நிகழ்ந்தது, பின்னே நிகழப்போவது எல்லாவற்றையுமே மறந்துவிட்டாள்.

கள்ளைக் குடித்தவன் தள்ளாடி வீழ்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

படுக்கையில் படுத்தவள் தலையணையில் முகத்தை அழுத்திக் கொண்டு கண்ணீரைப் பெருக்குகிறாள்.

பிறகு அவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

மறுபடி கண்விழித்துப் பார்க்கையில் காலையும் மதியமும் நழுவி மாலை நேரம் என்று புரிகிறது.

ஒரே அசதி, தொண்டை உமிழ்நீர் முழுங்க இயலாமல் இரணமாயிருக்கிறது. தலை பாராங் கல்லை வைத்தாற் போலிருக்கிறது. என்றாலும் எழுந்து வருகிறாள். ஞானம் முன்னறையிலமர்ந்து ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

“அட...? மணி அஞ்சாயிடுத்தா? இத்தனை நேரம் தூங்கிட்டேனே ? என்னை எழுப்பக்கூடாதா அக்கா?”

ஞானம் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமலே, “பாயிலரில் வெந்நீர் இருக்கிறது. புதுப்பால் வாங்கி வைத்திருக்கிறேன். காபி டிகாக்ஷனும் இருக்கிறது” என்று அடுக்குகிறாள்.

வெந்நீரில் முகம் கழுவிக்கொள்ளும் போதும் அந்தப் பாராமுகமான பேச்சுக்கள் நெஞ்சுப் புண்ணைக் கிளறி விடுகின்றன.

வெந்நீரின் இதத்தில் கண்ணிர் மீண்டும் மீண்டும் பெருகுகிறது. பல்துலக்கி முகம் கழுவித் துடைத்துக் கொள்கிறாள். வேறொரு சேலையை எடுத்து மாற்றிக் கொண்டு, கைப்பையில் இருந்து தலைநோவுக்கான மாத்திரையுடன் சமையல் கட்டுக்கு வருகையில் ஞானம் ஆவி பறக்கும் காபியைக் கிணத்தில் வைத்துவிட்டுப் போயிருக்கிறாள்.

காபிக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு “அக்கா !அக்கா!” என்றழைத்த வண்ணம் வருகிறாள். அவளைக் காணவில்லை தோட்டத்திலும் இல்லை.

வாயிற்படியில் அவள் நீர்தளும்ப நிற்கையில் ஞானம் தொலைவில் புள்ளிபோல் செல்வது தெரிகிறது.

எங்கே போகிறாள் ? காலனியைவிட்டு வெளியே மைதானத்தில்...

ஜானகி குரல் கொடுத்துக்கொண்டே வருகிறாள். “என்ன மைத்ரேயி, இப்படி இளைச்சுக் கறுத்துப் போயிட்டே? எந்த மட்டும் இருக்கு எலக்ஷனெல்லாம்? உன்னைப் பார்த்து ஒரு மாசமாறது.”

புன்னகையை வரவழைத்துக்கொள்கிறாள். “ஆமாம், அக்கா எங்கே போகிறார் ?....”

“தெரியாதே? உன்னிடம் சொல்லயா?”

“ இல்லே, நான் இப்பத்தான் தூங்கி எழுந்தேன். என்னமோ சொல்லிவிட்டுப் போனாப்போல இருந்தது, கேட்டேன்...”

ரொம்ப இளைச்சுப் போயிட்டே, ஒரு மாசத்தில். உடம்பைப் பார்த்துக்கொள். நீயே நிற்பதாக இருந்தாலும் சரி, போனால் போகிறதென்று சொல்லலாம். நீ ஏன் நிற்க மாட்டேன்னுட்டே? உன்னைத்தானே நிற்கவைக்கிற தாக சொன்னாப்பல இருக்கு ?”

“எனக்கு வயசு பத்தாது. அது அவங்களுக்குத் தெரி யாது... ஒரே தலைவலி, நான் போய் ஒரு மாத்திரை சாப்பிட்டுவிட்டுத் திரும்பப் படுத்துக்கொள்ளப் போகிறேன்...”

உள்ளே வந்தவள் கோப்பையிலுள்ள காப்பியையும் மாத்திரையையும் பார்த்துக்கொண்டே பிரமை பிடித்தாற் பல உட்கார்ந்திருக்கிறாள். பிறகுதான் சாப்பிடுவதற்கென்ற நினைவு வருகிறது.

மணி ஆறு, ஏழு, எட்டும் அடித்த பின்னரே ஞானம் வீடு திரும்புகிறாள். காலனிக்கு வெளியே கடைவீதிக்கு சில நாட்களில் அவள் செல்வதுண்டு. வரும்போது பையில் ஏதேனும் பழங்களோ, சாமானோ வாங்கி வருவாள். இன்று வீட்டை விட்டுப் போகவேண்டும், அவளுடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றே அவள் வெளியே சென்றிருப்பதாகத் தோன்றுகிறது.

“கோயிலுக்குப் போயிருந்தீர்களா, அக்கா ?”

ஞானம் கோயிலுக்கு என்று செல்வதில்லை என்பதை மைத்ரேயி அறிவாள்.

“தினமும் இப்படித்தான் மைதானத்தைத் தாண்டிக் கொஞ்சம் நடந்துட்டு வரேன்...”

பேச்சைத் துவங்கும்போதே மேலே பேச வேண்டாம் என்ற முற்றுப்புள்ளி வைத்தாற்போலிருக்கிறது.

மைத்ரேயிக்கு அன்றிரவு உணவு இறங்கவில்லை.

மறுநாள் காலையில் அவள் எழுந்து வழக்கம்போல் காபி போட்டு, சமையல் செய்கிறாள். ஞானம் தேவைக்கு மேல் பேசவில்லை. தனிமையில் சிறு குழந்தையைப் போல மைத்ரேயிக்கு அழுகையாக வருகிறது. இரண்டு நாட்களுக்கு மேல் இருவருக்கும் இடையே தொங்கும் திரையை அவளால் அறுத்தெறியாமல் இருக்க முடியவில்லை. அன்றிரவு ஞானம் படுக்கையில் படித்துக் கொண்டு விளக்கணைக்கவில்லை. மைத்ரேயி காலடியில் நிற்கிறாள்.

“என்ன சமாசாரம் ?”

கனிவும் கசிவும் எங்கே ஒளிந்து கொண்டிருக்கின்றன?

“நீங்கள் என்னை இப்படி நடத்தாதீர்கள் அக்கா...?”

சொல் முடியுமுன் பிரளயமாக அழுகை வருகிறது.

“எதுக்கு இப்ப அழறே நீ?”

அந்த அதட்டல் சாதாரணமாக இல்லை. மைத்ரேயி சட்டென்று கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

“நான்...நீங்க சொன்ன பேச்சுக்களை எல்லாம் லட்சியம் பண்ணாதது தப்பு. என்னை மன்னிச்சிடுங்கக்கா, முந்தா நா கூட்டத்திலே என்ன நடந்ததுன்னு உங்களுக்கு எப்படித் தெரிவிப்பேன்னு புரியல...”

கீழுதட்டைக் கடித்துக்கொள்கிறாள்.

“எனக்கு எல்லாம் புரிஞ்சிருக்கு. எவனோ காரில் கடத்திண்டு போயிருக்கிறான். இதெல்லாம் சகஜம். தெரிஞ்சிண்டு செய்தபின் அழுகை என்ன அழுகை?..”

குப்பென்று செவிகளை அடைத்தாற்போலிருக்கிறது.

அதற்குள் எப்படித் தெரிந்தது? சிவப்பிரகாசம் ஒரு பேச்சுக்கூடப் பேசவில்லையே ?

“சிவப்பிரகாசம் சொன்னாரா அக்கா?”

“சிவப்பிரகாசம் இல்ல. சீனிவாசன் ஃபோன்ல கூப்பிட்டுக் கேட்டான். அதுவும் ஆஃபீஸ் போனில். எங்கும் போகல, யாரும் கடத்தலே. நீ இங்கேதான் வந்திருக்கேன்னு roll மறைச்சேன்....”

“நீங்கள் அப்போதே என்னை அப்படியெல்லாம் போக வேண்டாமென்று கடுமையாகத் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாதா?”

“நான் எதற்காக நிறுத்தவேண்டும்? நீ பச்சைக் குழந்தையா? சாடையாக என் விருப்பத்தை வெளியிட்டேன். நீ கேட்கவில்லை. உன் இஷ்டப்படி போனாய்.”

“என்னை மன்னிச்சுக்குங்கக்கா, எனக்கு என் பெற்ற அம்மாவைத் தெரியாது. நீங்கள்தான் அப்படி ஒரு பரிவையும் பாசத்தையும் காட்டியிருக்கிறீர்கள். என்னை அடித்துக் கடுமையாகப் பேச உங்களுக்கு உரிமை இருக்கிறது. இந்த இரண்டு நாளாக என்னை முகம் பாராமல் தண்டனை கொடுப்பதை ஏற்க முடியவில்லை.”

“இதோ பார் மைத்ரேயி, இந்த நடிப்பெல்லாம் இங்கே தேவையில்லை. சாக்கடையில் முழுகிக் குளிக்கும் அரசியலென்று நீ தெரியாமல் போகலே. இத்தனை நாளில் ஒருநாள் இரவுத் தங்க நீ வரவில்லை. அக்கா, அத்திம்பேர் இரத்த பாசம் பெரிசென்று ஒடினாய். இப்போது எதிர்க் கட்சிக்காரன் வீட்டில் ஒரிரவு அடைபட்டுக் கிடந்த பிறகு

இங்கே ஏன் வரணும்? நீ இப்போது கண்முழிக்கத் தெரியாத நாய்க்குட்டி இல்லை. நான் தெளிவாகச் சொல்கிறேன். இங்கே கண்ட கட்சி ஆட்களும் வருவதும் ஆபீசுக்கு டெலிஃபோன் செய்வதும் எனக்கு நல்லதல்ல. இனி நீ உன் அக்கா அத்திம்பேருடனேயே இருந்து கொள்ளலாம். நான் என்ன சொல்வேனோ என்று தயங்கவும் வேண்டாம். உன் மேல் உரிமை கொண்டாட எனக்கு ஏது உரிமை ?”

“அக்கா.அக்கா? நீங்க இப்படித் தள்ளிவிடுவேள்னு நான் நினைக்கலே அக்கா ?...”

நெஞ்சம் வெடிக்கத் துயரம் பீரிடுகிறது. அழுத்திக் கொள்கிறாள்.

“நான் தள்ளவில்லை. உனக்கு நான் ஒட்டாமலிருப்பது சங்கடமாக இருக்கும். மேலும் இரத்த பாசம் பெரிசு என்பதை நீயே நிரூபிச்சுட்டே. நீ அங்கேதானிருக்க வேணும்னு நான் அன்னிக்கே முடிவு பண்ணியாச்சு.”

“என் மனசை நீங்கள் புண்பண்ண வேண்டுமென்று நினைச்சா, நான் வேறு என்ன செய்யலாம்? நீங்கள் என் மீது உரிமை இல்லை என்று நினைச்சாலும் நான் இருப்பதாகத்தான் இன்னமும் நம்புகிறேன். வெறும் இரத்தம் உரிமை கொண்டாடுவதை நீங்கள் பெரிதாக மதிக்கலாம். ஆனால் அது உண்மையான கஷ்டம் வந்தபோது கைவிட்டு விட்டது. நீங்கள் எனக்கு வாழ்வு கொடுத்தீர்கள்; இன்று இப்படிப் பேச, உங்களை அன்று பெரிதாகக் கருதாமல் சீனிவாசனுடன் போக, எனக்கு வந்த துணிவும் தைரியமும் தன்னம்பிக்கையும் நீங்கள் கொடுத்தவை. நான் சாகும் வரையிலும் நெஞ்சில் இந்த ஆதாரத்தை நினைத்துக் கொண்டே இருப்பேன். உங்களுடைய மனசுக்குக் கஷ்டம் இருக்கலாம். நான் அதையும் ஏற்றுப் பொறுப்பேன். ஆனால் உங்களுக்கு என்னால் ஒரு சங்கடம் வருவதை நான் கொஞ்சமும் அநுமதிக்க மாட்டேன். நான் நாளையே இந்த இடத்தை விட்டுப் போய்விடுவேன்.”

அந்த அறையில் கடைசியாக வந்து படுப்பதாகத் தோன்றுகிறது.

கல்லூரி வாழ்வை நினைப்பூட்டும் புத்தகங்கள். தூசி படிந்திருக்கின்றன. பரீட்சை எழுதுவதையும் பட்டம் பெறுவதையும் ஒரு காலத்தில் பெரிய இலட்சியமாகக் கருதி இருந்தாள் அந்த இலட்சியம் நெருங்கி வருமுன், அதைப் பொருட்படுத்தாமல் வேறோர் கவர்ச்சிக்கு அடிமையானாள்.

இாவு முழுவதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. அலையடித்து அலையடித்துக் கரையில் ஒதுங்கினாற்போல் ஒா் முடிவுக்கு வருகிறாள்.

அந்த வீட்டில் அவளுடைய உடமைகள் என்று அவள் வரும்போது ஒன்றுமே கொண்டு வரவில்லை.

இப்போது அவளுடையதாக அவளுடைய பட்டப் படிப்பின் அத்தாட்சி இருக்கிறது.

முக்கியமான காகிதங்களைத் தவிர, அவள் உடுத்த சேலைகள் இரண்டை மட்டிலும் அவள் சிறு பெட்டிக்குள் வைத்துக் கொள்கிறாள். கைப்பையில் அவள் தானே பேசிச் சம்பாதித்த பொருள், சில நூறுகள் இருக்கின்றன. அதைப் பத்திரமாக எண்ணிப் பார்த்துக் கொள்கிறாள்.

விடியற்காலையில் வழக்கம்போல் பால் வாங்கிக் காப்பி போடுகிறாள்.

ஞானம் படுக்கையிலிருந்து எழுந்து வரவில்லை.

மைத்ரேயி கதவருகில் வந்து, “நான் போயிட்டு வரேன்.” என்று அவள்முன் விழுந்து பணிகிறாள்.

ஞானம் திடுக்குற்றாற்போல் திரும்பிப் பார்ககுமுன் மைத்ரேயி அந்த நிழலைவிட்டு வெளியேறுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_22&oldid=1115412" இலிருந்து மீள்விக்கப்பட்டது